Tk-37

அத்தியாயம் – 37

அந்த அறையில் முதலிரவுக்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யபட்டிருக்க அறைக்குள் நுழைந்த ஜெயாவின் பார்வை பிரபாவை தேடிட, பால்கனியின் நின்றிருந்த பிரபாவோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்..

தன் பின்னோடு கேட்ட கொலுசொலி சத்தத்தில் அவளின் கவனம் களைந்துவிட, ‘இவளிடம் உண்மையைச் சொன்னால் என்ன சொல்ல போறாளோ..’ என்ற குழப்பத்துடன் அவன் அறைக்குள் நுழைந்தான்..

அதேநேரத்தில், ‘அவளிடம் அன்பரசு என்ற பெயரில் பேசியது நான்தான் என்ற உண்மை அவளுக்கு தெரியும்..’ என்பதை  அவன் சிந்திக்க மறந்த பிரபா, “ஜெயா உன்னிடம் கொஞ்சம் பேசணும்..” என்றவன் தொடங்க விழி உயர்த்தி அவனைப் பார்த்துவிட்டு மௌனமான நின்றாள்..

அதை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட பிரபா, “நம்ம கல்யாணத்திற்கு முன்னால் ஒரு வேலை விசயமாக டெல்லி போனேன்..” அவன் நடந்த அனைத்து விஷயத்தை ஒன்றுவிடாமல் சொல்லி முடித்துவிட்டு நிமிர்ந்து அவளின் முகம் பார்த்தான் பிரபா..

“மினிக்கா கொஞ்சம் முன்னாடி வந்திருந்தால் நீங்க அவங்களோட கழுத்தில் தான் தாலி கட்டியிருப்பீங்க..” தனக்கு இந்த விஷயம் எல்லாம் தெரியும் என்று அவள் காட்டிக்கொள்ளவே இல்லை..

அவளின் பார்வை வழியாக அவளின் கோபத்தை உணர்ந்த பிரபா, “ஆமா மினி ஒரு நிமிஷம் முன்னாடி வந்திருந்திருந்த அவளோட கழுத்தில்தான் தாலி கட்டியிருப்பேன்..” என்றதும் அவளின் கோபம் அதிகமானது..

“உங்களை நம்பி மணமேடை வரை வந்த என்னோட நிலை.. ” என்றவளின் கேள்விக்கு அவனிடம் பதில் சொல்ல முடியாமல் மௌனமாக நின்றான்..

“எனக்கு பதில் சொல்லுங்க..” என்றவளின் கோபத்தை உணர்ந்தவன், “என்னால பாதிக்கப்பட்ட பொண்ணு அவள்.. அதனால்தான் அப்படி சொன்னேன்.. மணமேடை வரை வந்து பிறகு கல்யாணம் நின்று போனாலும் கூட என்னைவிட நல்ல மாப்பிள்ளை உனக்கு கிடைத்திருப்பான்..” என்றவன் வெளிப்படையாக..

இருவரின் மனதிலும் காதல் இருக்க அவர்களின் முன்னே வாழ்க்கை கேள்விக்குறியானது தான் பெரிய கொடுமை.. அவன் உண்மையாக காதலித்த பெண் முன்னாடி அவனொரு சூழ்நிலை கைதி..

“அவங்க வர ஒரு நிமிஷம் லேட் ஆச்சு இல்ல.. எனக்கு இந்த பெண்ணைப் பிடிக்கல என்று சொல்லிட்டு எழுந்து போக வேண்டியதுதானே..” என்றவளின் பார்வை அவனை துளைத்தெடுத்தது..

உயிருக்கு உயிராக விரும்பிய பெண்ணின் முன்னாடி குற்றவாளியாக நிற்கும் தன் நிலையை நினைத்தவனுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போக, ‘என்னோட விதியே இதுதான் போல..’ என்று கசந்த புன்னகையுடன் நினைத்தான்..

“சரி என்னைக் கல்யாணம் பண்ணுவதற்கு முன்னாடியே உங்களுக்கு உண்மை தெரியும் இல்ல.. அப்போ நீங்க ஏன் மினிக்காவைக் கல்யாணம் பண்ணல..” என்று அவனை நோக்கி கேள்வி கணைகளை தொடுத்தாள்..

அவளிடம் இருந்து அனலாக வந்து விழுகும் கேள்விகளுக்கு அவனால் பதில் சொல்ல முடியாமல் போக, ‘மலர் ஏண்டி நீ உண்மை தெரிஞ்சி என்னை காயப்படுத்துகிறாயா..? இல்ல கயப்படுத்தியே தீரவேண்டும் என்ற முடிவுடன் கேள்வி கேட்கிறாயா..’ என்று வலியுடன் நினைத்தான்..

“ஜெயா என்னை கொஞ்சம் புரிஞ்சிக்கோ.. நான் வேண்டும் என்று எதுவும் பண்ணல.. அவள்தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று சொல்லிட்டா.. கடைசி நிமிஷம் வரை அவள் வருவாள் என்று ரொம்ப எதிர்பார்த்தேன் ஆனால் அவள் வரல..” என்றவன் சோர்வுடன் கட்டிலில் அமர்ந்தவான் தொடர்ந்து,

“நான் வில்லன் இல்லடி.. எனக்கும் மனசு இருக்கு.. அதில் குற்ற உணர்ச்சி அளவுக்கு அதிகமாக இருக்கு.. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ.. பெண்களின் குணங்கள் வேறுபடும்.. நான் சூழ்நிலை கைதிதான்..” என்றவன் முடிக்க, அவனின் நிலை உணர்ந்த ஜெயா அறையின் கதவை திறந்து வெளியே சென்றுவிட்டாள்..

அங்கிருந்து தோட்டத்திற்கு சென்ற ஜெயாவின் கோபம் கொஞ்சம் குறைந்துவிட, ‘தன்னையும் அறியாமல் கோபத்தில் அவனை கயப்படுத்தி விட்டோமோ..’ என்ற குற்ற உணர்ச்சியுடன் வானத்தைப் பார்த்தாள்..

வானில் நிலவு இல்லாமல் இருக்க வெள்ளை நிற மேகங்கள் கூட்டமாக எங்கோ சென்று கொண்டிருந்தது.. நிலா இல்லாத வானம் கூட இருளாக காணப்படவே, ‘வாழ்க்கையே இருண்டு போச்சு..’ என்று வருத்ததுடன் நினைத்தவளின் புருவங்கள் கேள்வியாக சுருங்கியது..

‘உன் முன்னாடி வாழ்க்கை பெரிய கேள்வியை உருவாக்கி வெச்சிருக்கு.. அதற்கு விடையைக் கண்டுபிடிக்க வேண்டியவள் நீ.. நான் அல்ல..’ என்ற மினியின் குரல் அவளின் மனதில் சிந்தனையைத் தூண்டியது..

‘தான் உயிராக விரும்பிய பெண்ணிடம் கூட இந்த மாதிரி விஷயங்களை மறைக்கும் ஆண்களின் நடுவே பிரபா மட்டும் தனித்து நின்றான்.. அவர் என்னிடம் உண்மையை சொல்லாமல் இருந்தால் நான் கோபம் கொள்வதில் நியாயமிருக்கு..  ஆனால் அவர் என்னிடம் இன்றுவரை உண்மையை மறைக்கவே இல்ல..’ என்றதும் அவளின் கோபம் அவளிடமிருந்து விடைபெற்று சென்றது..

அவன் தன்னைப் பார்த்த நாளிலிருந்து அவனின் செயலில் வெளிப்பட்ட காதலும், அவனின் கனிவு மிகுந்த அக்கறையும் அவளை யோசிக்க வைக்க, ‘நான் அன்பரசுதான் பிரபாகரன் என்று கண்டு பிடித்தது போலவே அவரும் என்னை கண்டுபிடித்திருப்பார் இல்ல..’ என்ற எண்ணம் அவளை மேலும் குழப்பிவிட்டது..

அன்று பூங்காவில் அவன் பேசிய வார்த்தைகள் எல்லாம் அவளின் மனதில் ஊர்வலம் போக, ‘அவன் என்னை விருப்பியது உண்மை.. அப்புறம் எப்படி இப்படியொரு விஷயம் இடையே நடக்கும்..’ என்று தீவிரமாக சிந்தித்தாள்..  

பிரபாவைச்சுற்றி பின்னப்பட்ட மாயவலையில் இப்பொழுது அவளும் சேர்ந்து சிக்கியிருப்பதை உணர்ந்த ஜெயா, ‘வாழ்க்கை இருளாக இல்ல.. புதிருக்கான விடை எங்கோ மறைந்திருக்கு..’ என்றவள் உண்மையை உணர தென்றலோ அவளை இதமாக வருடிச்சென்றது..

அவன் கடைசியாக தன்னிடம் பேசிய வார்த்தைகள் மீண்டும் அவளின் நினைவிற்கு வந்தது.. அவனின் வார்த்தைகள் அவளின் இதயத்தை இரண்டாக பிளந்தது.. தன்னுடைய கோபத்தை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு முதலில் இருந்து தெளிவாக சிந்திக்க தொடங்கினாள்..

அதன்பிறகு நிதானத்திற்கு வந்த பிரபாவிற்கு அறையில் நிலவிய அமைதி விசித்திரமாக தோன்றியது.. ‘ஜெயா எங்கே..’ என்றவான் நிமிர்ந்து பார்க்க அவள் அறையில் இல்லை என்றதும் அவனின் மனம் படபடவென்று அடித்துக்கொண்டது..

கதவுகள் திறந்து கிடப்பதை உணர்ந்து, ‘தோட்டத்திற்கு போயிருப்பாளோ..?’ என்று அவளை தேடிக்கொண்டு தோட்டத்திற்கு அவன் செல்ல இருண்ட வானத்தைப் பார்த்துகொண்டு தனித்து நின்றிருந்தாள் ஜெயா..

அவன் மெல்ல அவளின் அருகில் சென்று, “ஜெயா நான் வேண்டும் என்று எதுவும் பண்ணல..” அவளுக்கு புரிய வைக்க முயற்சிக்க, “பிரபா ப்ளீஸ் நீங்க போங்க.. என்னை கொஞ்சநேரம் தனியாக விடுங்க.. நான் கொஞ்சம் யோசிக்கணும்..” என்றவள்  மென்மையாகவே..

அவளின் பேச்சில் மாற்றத்தை உணர்ந்த பிரபாவின் மனம் வலிக்க, ‘உன்னை ரொம்பவே கயப்படுத்துகிறேன் மலர்.. நீ என் கண்முன்னால் கலங்கி நிற்பதை பார்க்க முடியல..’ என்றவனுக்கும் அவளின் நிலை புரிந்தது..

காதலால் இடமாற வேண்டிய நெஞ்சங்கள் இங்கே தனித்தனியாக இருப்பதை உணர்ந்த பிரபா, ‘என்மேல் உனக்கு கோபம் வருவது நியாயம்தான்..’ என்று நினைத்துவிட்டு அவளை அங்கே தனியே விட்டுவிட்டு விலகி நடந்தான்..

அவளின் மனதில் பல கேள்விகள் படையெடுத்து நிற்க விடையை தேடிய பாவை அவளின் சிந்தனை மறுநாள் பொழுது விடியும் பொழுது அவளின் மனமும் கொஞ்சம் தெளிந்தது..அவளின் மனம் என்னும் ஓடை மெல்ல தெளிந்துவிட விழி உயர்த்தி வானத்தைப் பார்த்தாள்..

வானம் செவ்வானமாக மாறிக்கொண்டிருக்க, ‘இன்றைய விடியல் எனக்கு நல்ல விடியலாக இருக்கும்.. என்னோட கேள்விகளுக்கு சீக்கிரமே பதில் கிடைக்கும்..’ என்ற நம்பிக்கையுடன் நிமிர்ந்து வானத்தைப் பார்க்க கிழக்கில் சூரியன் உதயமானது..

“வாழ்க்கையிலும் வெளிச்சம் வருது போல..” என்று தன்னையும் மீறி புன்னகைத்த ஜெயா வீட்டிற்குள் செல்ல நினைத்து திரும்பினாள்.. அப்பொழுது அறைக்கு செல்லும் படிக்கட்டில் அமர்ந்தவண்ணம் உறங்கிப் போயிருக்க, அவனின் அருகில் சென்று உறங்கிக் கொண்டிருந்தவனின் முகத்தைப் பார்த்தாள்..

பல நாளுக்கு பிறகு விழிமூடி தூங்குவது போலவே அவனின் மனதிற்கு தோன்ற, ‘உன்னோட பாரத்தை எல்லாம் என்மேல் இறக்கி வெச்சிட்டு குழந்தை மாதிரி தூங்கற..’ என்று நினைத்துவிட்டு, “பிரபா..” என்று அழைத்தாள்..

அவளின் குரல்கேட்டு மெல்ல கண்விழித்த பிரபா, “ஸாரி ஜெயா..” என்றவன் எழுந்து விலகி நிற்க ஒன்றும் பேசாமல் அறைக்குள் சென்று மறைய, அவன் அங்கேயே அமர்ந்துவிட்டான்..

அவள் சென்று குளித்துவிட்டு சேலையை மாற்றிவிட்டு கீழ் இறங்கிச் செல்ல ஹாலில் அமர்ந்திருந்து காபி குடித்துக் கொண்டிருந்தார் கோபிநாத்..

மாடியில் இருந்து இறங்கி வந்தவளைக் கவனித்த பெரியவர்,   “வாம்மா ஜெயா.. காபி போட சொல்லவா..” என்று பாசத்துடன் கேட்டார்..

“இல்லப்பா.. நான் பூஜையை முடித்துவிட்டு வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு பூஜை அறைக்குள் சென்று மறைந்தாள்.. நேற்று மாதிரி இல்லாமல் இன்று தெளிவான சிந்தையுடன் தெய்வத்தை வழிபட்டு விட்டுவிட்டு வெளியே வந்தாள்..

அவள் நேராக சமையறைக்குள் சென்று பிரபாவிற்காக காபி போட்டு எடுத்துகொண்டு, “நீங்க காய் மட்டும் அறிந்து வைங்க அம்மா.. நான் வந்து சமையல் செய்கிறேன்..” என்று சுந்தரிம்மாவிடம் கூறினாள்..

“இல்லம்மா..” என்றவர் தயங்க, “நான் சமையல் செய்கிறேன்.. நீங்க மற்ற வேலைகளை கவனிங்க..” என்று சொல்லிவிட்டு மாடி ஏறிச்சென்ற மருமகளின் வேகத்தைக் கவனித்த கோபிநாத் மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டார்..

அதேநேரத்தில் பிரபா அறைக்குள் நுழைந்து குளித்துவிட்டு ஆபீஸ் செல்ல தயாரான பிரபா படுக்கையில் அமர்ந்தான்.. அன்று வரையில் மனதில் அழுத்திய பாரம் கொஞ்சம் குறைய, ‘இரண்டு பெண்களின் வாழ்க்கை மட்டும் கேள்வி குறியாகிவிட்டதே..’ என்ற சிந்தனையுடனே உழன்றது அவனின் மனம்..

அப்பொழுது கதவைத் திறந்து உள்ளே நுழைந்த ஜெயாவை நிமிர்ந்து பார்க்க, “ஹாய் பிரபா.. நைட் எல்லாம் தூங்காமல் சாருக்கு தூக்கம் கண்ணை கட்டுது போல..” என்று அவனைக் கிண்டலடிக்க அவளை புரியாத பார்வை பார்த்தான்..

“இந்தாங்க பிரபா காபி..” அவள் புன்னகையுடன் காபி கப்பை அவனின் கையில் கொடுத்தாள்.. காபி கப்பையும் அவளையும் மாறி மாறி பார்த்தவன், ‘காபி இவ்வளவு அக்கறையாக கொடுக்கிற.. இதில் என்ன கலந்து வெச்சிருக்காளோ..’ என்று பயத்துடன் சிந்தித்தான்..

அந்த அறையின் ஜன்னல் திரைகளை திறந்துவிட்டுவிட்டு அவனின் அருகில் வந்த ஜெயா, “காபியில் விஷம் கலந்து கொடுக்கும் அளவிற்கு கோபம் இருக்கு..” என்றவளின் குரல்கேட்க, “என்னது..” என்றவன் அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தான்..

“காபியில் என்ன ஆராய்ச்சி பண்றீங்க.. காபி கொடுத்த குடிக்க வேண்டியதுதானே..” என்றவள் இடையில் கையூன்றி அவனிடம் அவள் கேள்வி கேட்க, “ஜெயா காபியில் உப்பு கலந்து கொடுத்திருப்பாயோ..” என்றவன் சந்தேகத்துடன் கேட்டான்..

“கதை புத்தகம் அதிகமாக படிக்கும் பழக்கம் இருக்கும் போல..” என்றதும் அவனின் பார்வை அவளின் மீது நிலைக்க, “பின்ன கதையில்தான் காபியில் மிளகாய்த்தூள், உப்பு எல்லாம் கலந்து கொடுப்பாங்க..” என்றவள் தொடர்ந்து,

“நீங்க என்னை சந்தேகப்பட வேண்டாம்.. காபியில் சக்கரை மட்டும் தான் போட்டேன்.. அதுவும் இரண்டே ஸ்பூன் தான்..” என்றவள் கலகலவென்று சிரித்தவளின் மனமோ, ‘செய்யறது எல்லாம் ப்ராடுதனம்.. இதில் சந்தேகம் வேற..’ என்று மனதிற்குள் நொடித்துக் கொண்டாள்..

அவன் காபியை குடித்துவிட்டு, “என்னை பழிவாங்க என்னவோ பண்ணுவ என்று நினைத்தேன்.. காபி இவ்வளவு நல்ல காபி போட்டு கொடுப்பதுதான் உங்க ஊரில் பழிவாங்குவதா..?” என்று அவன் பல நாட்களுக்கு பின்னாடி இயல்பாக கேட்டான்..

அவளின் புன்னகை உதட்டில் உறைய, “காபியில் உப்பு போட்டு கொடுத்தால் மட்டும் என்னோட கோபம் குறைந்துவிடுமா பிரபா.. நீ செய்த காரியம் அவ்வளவு சின்ன விஷயமா..?” என்றவளின் குரலில் வருத்தமே மிஞ்சி நின்றது..

தன்னை சமாளித்து நிமிர்ந்தவள், “பிரபா உங்களோட கொஞ்சம் தெளிவாக பேசணும்..” என்றவளை தவறாக புரிந்துகொண்டு, “நான் உனக்கு விவாகரத்து தந்துவிடுகிறேன்.. நீ..” என்றவன் தொடங்கும் முன்னே அவனை முறைத்தவளின் பார்வையில் கனல் வீசியது..

“நான்.. உன்னோட நன்மைக்கு..” அவன் தயக்கத்துடன் இழுக்க, “பிரபா எனக்கு ஒரு விஷயம் புரியல.. நீங்க கொடுக்கிற விவாகரத்து எனக்கு எந்த வழியில் யூஸாகும் என்று நான் தெரிஞ்சிக்கலாமா..?” என்று கோபத்தில் பல்லைக் கடித்துக்கொண்டே கேட்டாள்..

“இந்த பணம் வைத்து நீ ரொம்ப சந்தோஷமாக இருக்கலாம்..” என்றவன் எதார்த்தமாக சொல்ல, “என்னிடம் இல்லாத பணமா..?” என்று கசந்த புன்னகையுடன் கூறியவள் தொடர்ந்து, “ஒரு பிரச்சனைக்கு விவாகரத்து மட்டுமே முடிவில்ல.. அதுதான் பிரச்சனையோட ஆரம்பம்..” என்றவளை புரியாத பார்வை பார்த்தான்..

“இப்பொழுது கொஞ்சம் பிராக்டிகலா யோசிப்போம்.. நீங்க தவறு செஞ்சிட்டீங்க என்று உங்களை விவாகரத்து பண்ணிட்டு நான் வேறொரு திருமணம் செய்கிறேன் என்று வைங்க அவன் நல்லவனாக இருப்பான் என்று எனக்கு தெரியுமா..?” அவள் கேட்க, அவன் மௌனமாக இருந்தான்..

“நீங்க என்னோட பியூச்சர் நினைச்சு என்னைவிட்டு விலக நினைக்கிறீங்க.. அந்த பியூச்சர் எனக்கு நரகமாகும் மாறும்.. நீங்க நேரடிய உண்மையை சொல்லிட்டீங்க.. ஆனால் மற்றவர்கள் உங்களை மாதிரி இருப்பாங்களா..?” என்றவளின் கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை..

“நான் திருமணம் செய்ய போறவன் ஒரு ஒரு சந்தேகபேரொளி என்று வைங்க.. அவன் என்னை வார்த்தையால் குத்தி கிழிப்பான்.. நீங்க தெரியாமல் நடந்தது என்று சொல்ற விஷயத்தை அவன் தெரிஞ்சே செய்துட்டு வருவான்.. அதை நான் தடுக்க முடியுமா..?” என்றவளின் சிந்தனையே வேறு மாதிரி இருந்தது..

மினி ஒரு கோணத்தில் வாழ்க்கையை பார்க்கிறாள்.. அதே போல ஜெயாவும் வாழ்க்கையை வேறு ஒரு கோணத்தில் இருந்து பார்க்கிறாள்.. இருவரின் சிந்தனையும் இருவேறு துருவங்கள்.. அதனால் இருவரின் வாழ்க்கை விதியால் பிணைக்கப்பட்டிருந்தது..

அவன் கொஞ்சம் யோசிக்க, “சில விஷயத்தை ஜீரணிப்பது கஷ்டம்தான்.. என்னை எடுத்து வளர்த்து திருமணம் செய்து வைத்திருக்கும் என்னோட அம்மா, அப்பாவின் நிம்மதியைக் கெடுக்க சொல்றீங்களா..? அது என்னால முடியாது.. இந்த விவாகரத்து யாருக்கும் எந்த நன்மையையும் தராது..” என்றவள் சிறிதுநேரம் மெளனமாக இருந்தாள்..

பிரபாவிற்கு வாழ்க்கையின் ஒரு பக்கம் தெரியும்.. ஆனால் ஜெயாவிற்கு வாழ்க்கையின் மறுபக்கம் மனப்பாடம்.. வாழ்க்கையைப் பற்றி அவள் அறியாத உண்மைகளா..? அவளின் தாய், தந்தையே அவளுக்கு எடுத்துகாட்டாக இருக்க அவர்களின் மகள் இவள் எவ்வளவு தெளிவாக இருப்பாள்..?

அவன் அவளைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருக்க, “சில விஷயங்கள் ஏற்றுகொள்ள முடியல என்றாலும் குடும்பம், சமூகம் என்று வரும் பொழுது சில முடிவுகள் எடுக்க ரொம்ப தீவிரமாக யோசிக்க வேண்டியிருக்கு..” என்றவளின் உதட்டில் கசந்த புன்னகை மலர்ந்தது..

அவன் மெளனமாக இருக்க, “பிரபா கடைசியாக ஒன்று சொல்றேன்..” என்றவளின் குரல்கேட்டு அவனின் சிந்தனை களைய நிமிர்ந்து அவளின் முகத்தைக் கேள்வியாக நோக்கினான்..

“உங்களுக்கு தெரியாமல் நடந்த விஷயம் என்ற ஒரே காரணத்திற்காக உங்களை நான் மன்னிக்கிறேன்.. இனிமேல் தெரிந்து அந்தமாதிரி செய்துவிட்டு வந்து என்னிடம் மன்னிப்பு கேட்காதீங்க.. அதை நான் மன்னிக்க மாட்டேன்..” என்றவளின் பார்வையில் அவளின் மனம் அவனுக்கு புரிந்தது..

“என்மேல் கோபமே வரலயா ஜெயா..” என்றவன் வருத்ததுடன் கேட்க, “கோபம் வராமல் இருக்குமா.. அது எல்லாமே வந்தது.. ஐ லவ் யூ என்று நீங்க என்னை சுற்றி வந்த நாள் எல்லாமே நினைவிற்கு வந்தது..

என்னோட மனசின் ஒரு ஓரத்தில உங்களோட நினைவு எல்லாம் இருந்திருக்கும் போல.. உங்கள தண்டிக்க என்னால முடியல.. இந்த நிமிசமே நீ எனக்கு வேண்டாம் என்று சொல்லிட்டு நான் போக தெரியும்.. ஆனால் போக முடியல..” என்றவள் புன்னகைக்க முயன்றாள்..

அவளின் மனநிலையை தெளிவாக உணர்ந்த பிரபா ஆறுதலுக்காக கூட அவளை நெருங்காமல் ஒரு அடி விலகி நிற்க, “கொஞ்சநாள் ஆகும் நான் மனசு மாற.. அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையாக இருங்க பிரபா..” என்றவள் தொடர்ந்து,

“உங்களை வேண்டாம் என்று சொன்ன பிறகும் இனிமேல் நீங்க மினிக்காவை மனதில் வைத்துக்கொண்டு நிம்மதி இல்லாமல் இருக்காதீங்க.. அவங்களே அதை பெருசாக எடுத்துக்கல.. அப்புறம் நீங்க எதற்காக குற்ற உணர்ச்சியில் தவிக்கிறீங்க.. தேவையே இல்ல..” என்று அவனுக்கும் அவனின் நிலையைப் புரிய வைத்த ஜெயா,

“பிரபா உங்களோட பாஸ்ட் பற்றிய கவலை எனக்கு இல்ல.. ஆனால் உங்களோட பிரசண்ட் அண்ட் பியூச்சர் இரண்டுமே நானாக இருக்கணும் என்று ஆசைபடுகிறேன்.. அந்த பாஸ்டில் நடந்த விஷயம் என்னை பியூச்சரில் பாதிக்காமல் நீங்கதான் பார்த்துக்கணும்..” அவளின் உண்மையை உணர்ந்து சொல்ல பிரபாவும் கொஞ்சம் சிந்திக்க தொடங்கினான்..

“வாழ்க்கை இன்றோடு முடியல.. இது ஒரு ஆரம்பம்தான் பிரபா.. இனிவரும் நாட்கள் நமக்கு பல புதிர்களை வெச்சிருக்கு.. அதனால் விடை கிடைக்கும் வரை கொஞ்சம் விலகியே இருப்போமே..” என்று புன்னகைத்துவிட்டு காபி கப்பை எடுத்துகொண்டு நிமிர்ந்த ஜெயா,

“நான்தான் சாப்பாடு செய்ய போறேன்.. கண்டிப்பா உப்பு, காரம் எல்லாம் சரியாக போட்டு செய்வேன்.. அதனால் பயப்படாமல் சாப்பிட வாங்க..” என்று இயல்பாக புன்னகைத்துவிட்டு அவனின் மனதில் மாற்றம் என்னும் விதையை அவன் அறியாத வண்ணம் விதைத்து சென்றாள் ஜெயா..

இனிவரும் நாட்கள் நிஜமாக மாற்றம் நிறைந்த வாழ்க்கையாக இருக்குமா..? வாழ்க்கை அவளுக்கு வைத்த பரிச்சையில் இருந்து தேர்வு பெற்று மீண்டு வருவாளா ஜெயா..? பிரபா குற்ற உணர்வில் இருந்து மீண்டு வருவானா..?