மனம் நிறைந்த காதலோடு, கண்களில் ஏக்கத்தை மறைத்துக் கொண்டு கணவனை வழியனுப்பிய ரம்யாவிற்கு தனிமை மட்டுமே துணையாகிப் போனது…
வெளிநாடு சென்றவுடன் தினமும் ஒருமுறை கைபேசியில் அழைத்தவன், பின்பு வேலை அதிகம் என்று இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என அழைத்தான்…
தனிமை அவளை கொத்தித் தின்றது… கணவனிடம் உரையாடும் சொற்ப நேரங்களில், அவனுடன் மகிழ்ச்சியாய் பேசி, தன் அசௌகரியத்தை மறைத்து வைத்தாள். மீண்டும்
வேலைக்கு செல்ல கிரியின் தாயார் ஒப்பவில்லை.
எந்நேரமும் மாமியாரின் பேச்சை கேட்பவளுக்கு, ஒருவித வெறுமை வந்தமர்ந்து கொண்டது. அதற்கு காரணம் மீனாட்சி அம்மாளின் நடவடிக்கையே என்றும் சொல்லலாம்,
அவர் ரம்யாவின் பெற்றோரை சற்று தள்ளியே நிறுத்தி வைத்தார். மருமகளை தாய் வீட்டிற்கும் செல்ல தடை விதித்தார்…
“அங்கே போயிட்டு வர ரொம்ப நேரமாகும். வண்டியில, அதுவும் இந்த ஊர்ல போறத நினைச்சாலே மனசு பதறுது. அதான் ரெண்டு நாளைக்கு ஒரு தடவை வந்து பார்த்துட்டு போறாங்களே அது போதும். இங்கே நான் உனக்கு என்ன குறை வச்சுட்டேன்?” என்று முடித்தார்…
தனது சம்பந்தி வீட்டினரின் அந்தஸ்து பேதம், மற்றும் மனதில் தான் என்ற அகந்தையில், யாரையும் ஒதுக்கி வைக்கும் மனோபாவமே அவரின் இந்த எண்ணத்திற்கு காரணமாகிப் போனது…
மருமகளை ஏற்றுக்கொண்ட அவரால், அவளின் பெற்றோர்களை ஏற்றுகொள்ள முடியவில்லை. அதன் பலன் ஐந்தாம் மாத முடிவில் கிராமத்திற்கு செல்லும் போது கையோடு மருமகளை அழைத்துச் சென்று விட்டார்.
‘அங்கே வேலை எல்லாம் எடுத்து செய்றதுக்கு ஆள் இல்லை, இங்கேயே நான் இருந்தா சரி வராது. சின்ன தம்பியும் படிப்பு முடிச்சுட்டு வந்துட்டான் அவனையும் பாக்கணும்.
ஊருக்கு கூட்டிட்டு போனா, இன்னும் கொஞ்சம் நல்லா சத்தான ஆகாரமா செஞ்சு குடுக்க முடியும். இங்கே செஞ்சு குடுக்கறத ஒண்ணும் எடுத்துக்க மாட்டேங்குறா, அங்கே போனா மாறிடும்.
கிராமத்து காத்து மனச லேசாக்கும், நிறைய பசிக்கவும் செய்யும். நீங்க அங்க வந்து பார்த்துட்டு போங்க” என பல கதைகளை சொல்லி சம்மந்தி வீட்டாரின் வாயையும் அடைத்து விட்டார்…
“மாசாமாசம் செக்கப்புக்கு போகணும்மா, அடிக்கடி இங்கேயும், அங்கேயும் அலைய முடியாதும்மா” என்று மறுத்த மகனையும் தன் பேச்சால் அடக்கி வைத்தார்.
“நான் ஒண்ணும் காட்டுக்கு கூட்டிட்டு போகலே பெரியதம்பி… பக்கத்துல இருக்குற திருநெல்வேலி உனக்கு ஊரா தெரியலையா?
இங்கிருந்து படிச்சுட்டு வந்தவங்க தானே அங்கே பாக்குறாங்க. எல்லாம் எனக்குத் தெரியும், நீ உன்னோட வேலை என்னவோ அதப்பாரு” என்று சொல்பவரிடம் என்னவென்று சொல்லி புரிய வைப்பது…
கிராமத்து சூழ்நிலை மனதிற்கு இதம் அளித்தாலும் நிம்மதியை அளிக்கவில்லை கர்ப்பிணிப் பெண்ணிற்கு. சகல வசதிகளுடன் இருந்தாலும், கிராமத்து பழக்க வழக்கம் அவளுக்கு கை வரவில்லை.
நலம் விசாரிக்கவென வந்த உறவுக்கூட்டமும் பழைய பல்லவியாய், அவர்களின் சட்ட திட்டங்களை கூறி வெறுப்பை ஏற்றி வைக்க, மனதளவில் தளர்ந்து போனாள்.
வேலை செய்தால் பிரசவம் சுலபம் ஆகும் என்று சில இலகுவாய் செய்யும் வேலைகள் அவளை வந்து சேர்ந்தன. ஏற்கனவே மனம் முழுவதும் ஏக்கத்தை தேக்கி வைத்து, வெளியில் சிரிப்பவளுக்கு இந்த வேலைகள் கடுப்பைக் கொடுத்தது.
வேலை செய்யாதவள் என்றில்லை. கரு சுமக்கும் அவளின் உடலிலும், மனதிலும் ஏற்படும் மாற்றங்களை பகிர்ந்திட, சரி வர பேச்சுத் துணை கிடைக்காததன் காரணம் வெறுமையை அவளுக்கு பரிசாய் கொடுத்தன…
கிராமத்தில் அலைவரிசை சரியாக கிடைக்காத ரணத்தினால், கிரிதரன் வீட்டுபேசியில் தொடர்பு கொள்ள ஆரம்பிக்க, கணவனுடன் பேசும் தனிமை பேச்சும் குறைந்து போனது.அவளின் பேச்சு குழந்தையுடன் மட்டுமாய் இருக்க, தனது அறைக்குள் எந்நேரமும் அடைந்து கிடந்தாள்…
கர்ப்பகாலம் என்பது ஒரு மகிழ்ச்சிகரமான இனிய அனுபவம். அதில் மன உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கும், துன்புறுத்தல்களுக்கும் பெண்களை ஆளாக்காது கொண்டு செல்ல வேண்டியது கணவன் மற்றும் குடும்ப உறுப்பினர்களது கடமை. இதனை புரிந்து கொண்டால் கர்ப்பகாலம் ஒரு பொற்காலமே...
வளைகாப்பிற்க்கு வந்த அவளது பெற்றோர்களுடனும், தன் மருமகளை அனுப்பவில்லை அந்த அம்மையார். பிரசவத்திற்க்கு நாள் இன்னும் இருக்க இப்போதே ஏன் செல்ல வேண்டும் என்று தடுத்து விட்டார்.
கணவனின் அனுசரணையான பேச்சும், வாரத்தில் ஒரு முறை என்று மாறி விட, பல பின்னடைவுகள் அவளுக்கு.
அதன் பலன் ரத்த அழுத்தம் அதிகமாகி, முச்சுதிணறல் ஏற்பட மிகவும் சிக்கலாகிப்போனது பிள்ளைபேறு.
எட்டாம் மாதமுடிவில், கருவில் இருக்கும் பிள்ளையை வெளியே எடுக்கா விட்டால், இரு உயிர்களுக்கும் ஆபத்து என்ற நிலையில் அறுவைச் சிகிச்சை மூலம் பிள்ளையை வெளியே எடுத்தனர்…
அழகான பெண் குழந்தை, ரோஜாப்பூவை தோற்கடிக்கும் நிறத்தில் இருந்த பேத்தியை பார்த்து மனம் சமாதானம் அடையவில்லை கிரியின் தாயாருக்கு…
வழிவழியாய் ஆண்மகவை மூத்த குழந்தையாய் வரவேற்ற குடும்பம், முதல் குழந்தை பெண்ணாய் பிறந்ததில் சற்றே மனச்சுணக்கம் அவருக்கு. புது வரவை பார்க்க வந்த உறவுகளிடம் தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து விட்டார்.
“எங்க பரம்பரையில எப்போவும் ஆம்பள பிள்ள தான் மூத்தபிள்ளையா பொறக்கும், ஆனா இப்ப அப்படியே மாறிடுச்சு, இது தெய்வ குத்தமா? இல்ல யார் விட்ட சாபமோ தெரியலையே?” என்று அங்கலாய்த்தவரிடம்
“இதுக்கு தான் நம்ம இனம், சனம் பார்த்து பொண்ணு எடுக்கனும்னு சொல்லறது அத்தை… நீ உன் பையன் பேச்ச கேட்டு ஊர்ல இல்லாத அழகியா பார்த்து கல்யாணம் முடிச்சு வைச்சே…
நீ பழக்கத்தை மாத்தின, இப்போ பாத்தியா வழக்கம் கூட மாறி புதுசா பொம்பள பிள்ள மூத்ததா வந்திருக்கு” என ஒத்து ஓதினார் பிள்ளையை பார்க்கவென வந்திருந்த உறவுக்கார பெண்மணி…
இந்த பேச்சை கேட்டு பொங்கி விட்டார் ரம்யாவின் தாய்… “ஏன்மா இப்படி ஈவிரக்கம் இல்லாம பேசுறீங்க? நீங்க பொம்பள பிள்ளைய பெத்ததில்லையா? அந்த கடவுளா பார்த்து குடுக்குற வரம்மா இது…
இதுலேயும் குத்தம் குறை கண்டுபிடிக்கிறீங்களே… உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?” என கூறியவருடன் வாய் தகராறு ஆரம்பித்தது.
“என்னம்மா சொல்லிட்டோம் இப்போ நாங்க? எங்க வம்ச பெருமை எங்களுக்கு தான் தெரியும்… உங்களுக்கெங்கே அதெல்லாம் புரியப்போகுது?
வந்தோமா? பொண்ணை கவனிச்சோமா? புள்ளைய பார்த்தோமானு இல்லாம, எங்க வீட்டைபத்தி பேச உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
பொண்ண கட்டி குடுத்த இடம்னு கொஞ்சமாச்சும் மனசுல பயம் இருக்கா? வாய்ல வந்தத பேசுறீயே, சுத்த மரியாதை தெரியாத குடும்பம்…” என்று உறவுக்கார பெண்மணி பேச, மீனாட்சி அம்மாள் பின்பாட்டு பாடினார்…
“அப்படி நல்லா கேளு கமலம்! இவங்களுக்கு அப்படியாவது உறைக்குதானு பாக்கலாம்.பிள்ள உண்டான நாள்ல இருந்து கண்ணுல வச்சு பார்த்துக்கிட்டு இருக்கேன், எங்களுக்கு ஆதங்கம் இருக்காதா?
ஒரு வார்த்தை சொன்னேன் நான் பார்த்துக்குறேன்னு, அதையே பிடிச்சிட்டு இந்த பொண்ணும் பதுமையா எங்ககிட்டயே தங்கிருச்சு.
ஒரு நாள் கூட நாங்க பார்துக்குரோம்னு ஒரு பேச்சு இல்ல, விருந்தாளியா வந்து பொண்ணை பார்த்துட்டு போயாச்சு” என்று சீறினார்…
இது ஒருவிதமான மனோபாவம்… தம்முடைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் வரை உரிமையாய் அனைத்தையும் செய்வர். அது பொய்த்து போகும் போது எதிராளியின் மனதை புண்படுத்தி கடினமான வார்த்தைகளை பிரயோகித்து விடுவர்.
மீனாட்சி அம்மாளின் மனமும், குணமும் அப்படியே… அவர் பெண் குழந்தைக்கு எதிரி இல்லை, ஆனாலும் குடும்ப கௌரவம், பாரம்பரியம் என ஏதோ ஒன்று அவர்களை இப்படி பேச வைத்து விட்டது.
தன் வீட்டு வாரிசு என்ற உரிமையில் தான் மருமகளுக்கு செய்தது, மேலும் கிராமத்தில் முதல் குழந்தை ஆண் என்றால் தனி கௌரவம்.
இன்று வரை அது நடைமுறையில் இருக்கும் விஷயம். அது கை நழுவிப்போனதால் அவரின் ஆதங்கமான பேச்சு குற்றச்சாட்டாய் வெளிப்பட்டது…
“ஏன் சம்மந்தியம்மா இப்படி மாத்திப் பேசுறீங்க.. நாங்க கேக்காமலா இருந்தோம்?
நீங்கதானே எல்லோருக்கும் வாய்பூட்டு போட்டு எங்க வீட்டு வாரிசு, நாங்க கவனிச்சுக்குரோம்னு சொல்லி, என் பொண்ணை இங்கே கூட்டிட்டு வந்தீங்க…
அது மட்டுமா? என் பொண்ணு விரும்பினத சாப்பிட விடாம, செய்ய விடாம, உங்க இஷ்டத்துக்கு தானே அவளை ஆட்டி வைச்சீங்க…
சந்தோசமா இருக்க வேண்டிய நேரத்துல, என் பொண்ண தவியா தவிக்க விட்டு, இப்போ பிரசவம் சிக்கலாகிருச்சு… இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?
வலி அனுபவிச்சதேல்லாம் என் பொண்ணு தான், நீங்க இல்ல…” என தன் பக்க நியாயத்தை ஆற்றாமையுடனே கூறி முடித்தார் செல்வி.
இவையனைத்தும் நடந்தது மருத்துவமனையில், பிள்ளை பிறந்து மூன்றாம் நாளில் இவ்வையான பேச்சு. உடம்பில் வலி, மனதில் அதைவிட பெரிய வலி பிள்ளை பெற்றவளுக்கு…
மருத்துவத்தின் மூலம் உடம்பின் ரணத்தை குறைக்க வழி கண்டுபிடித்தவர்கள், மனதின் ரணத்தை குறைக்க மருந்தை கண்டுபிடிக்காதது ஏனோ?
தானும், தன் மகவும் புறக்கணிக்கப்படும் விதமான பேச்சும், தன்னால், தன் அன்னை சொல்லடிபடுவதை பார்த்தும், கேட்டும் மனம் வெடித்து விட்டது ரம்யாவிற்கு…
என்னவென்று சொல்ல? எப்படி ஆறுதல் மொழி கூறி தன் அன்னையை சமாதானப்படுத்தப் போகிறோம் என்ற நினைவே அவளுக்கு கசந்தது…
பொதுவாக பிரசவ முறைகள் குடும்பத்தினர், கணவர்மார் சொல்வதனை விட கர்ப்பிணி பெண்ணின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்குதான் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
ஏனெனில் கர்ப்பகாலத்திலும் சரி, பிரசவ நேரத்திலும் சரி, பிரசவத்திற்கு பின்னரும் சரி,உடல் ரீதியாகவும், மன உளவியல் ரீதியாகவும் சரி, பாதிப்புகளுக்கு உள்ளாவது பெண்கள் தான். எனவே முடிவுகளை எடுக்கக்கூடிய அதிகாரம் கொடுக்கப்பட
வேண்டியது கர்ப்பிணி பெண்களுக்குத்தான்.
ஆனால் இங்கே அப்படியான எந்த நடைமுறையும் கையாளப் படவில்லை… தன்னை ஒரு பொம்மையாய் ஆட்டி வைக்கும் இந்த வாழ்க்கை முறையை அறவே வெறுத்தாள் ரம்யா.
உயிர் கொடுத்தவன் எங்கோ அமர்ந்திருக்க, ரத்தமும் சதையும் கொடுத்து தன்னில் உருவான இளங்குருத்தின் அழுகுரலும், பிள்ளை பெற்றவளின் காதில் நாராசமாய் ஒலித்தது.
குழந்தையின் அழுகுரலில் தன் கவனத்தை திசை திருப்பி, அதன் பசியை போக்கிட, சிசுவை ரம்யாவின் பக்கத்தில் படுக்க வைக்க, அவள் தாய் எத்தனித்த நேரத்தில்…
”வேணாம்… இந்த பிள்ள எனக்கு வேண்டாம். என் பக்கத்துல படுக்க வைக்காதம்மா, இது வந்ததிலருந்து நான் படுற கஷ்டம் கொஞ்சம் நஞ்சமில்ல.
அவங்க தானே வார்த்தைக்கு வார்த்தை, எங்க வீட்டு வாரிசுனு சொல்லிட்டு இருந்தாங்க… அவங்க கைல குடுத்துருங்க, இனிமேலாவது நான் நிம்மதியா இருக்குறேன்…
இந்த பிள்ள தங்குன நாள்ல இருந்து என்னோட சந்தோசம், பசி, தூக்கம் எல்லாமே போச்சு… எனக்கு இந்த குழந்தைய பாக்கவே பிடிக்கலே” என பித்து பிடித்தவள் போல கத்திக்கொண்டு பிள்ளையை தன்னிலிருந்து தள்ளிவிட முயன்றாள்…
“பாப்பா இப்படி எல்லாம் பேசக்கூடாதுடா” என செல்வி அரற்ற….
“இத பாத்தியா… எங்கேயாவது நடக்குமா இந்த கொடுமை? பெத்த பிள்ளைய வேணாம்னு சொல்லி தள்ளி விட்றத? புத்தி பேதலிச்சு போச்சு உன் மருமவளுக்கு” என்று தன்னால் முடிந்த வரை புது புரளி ஒன்றை கிளப்பி விட ஆயுத்தமானார் வந்திருந்த
உறவுக்கார பெண்மணி…
“ஆமா!!! எனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு… இப்போ உங்களுக்கு சந்தோசம் தானே,இது தானே நடக்கனும்னு எதிர்பாத்தீங்க.
இதுக்கு தானே என்னை எங்கேயும் அனுப்பாம ஜெயில்ல அடைச்சு போட்ட மாதிரி வீட்டுக்குள்ளேயே வச்சுருந்தீங்க.
போதுமா! சந்தோசமா உங்களுக்கு?” என்று அவளின் கத்தலை கேட்டு செவலியர் அறைக்கு வந்து அவளை கட்டுபடுத்த முயன்றனர்…
குழந்தையின் அழுகுரல், பிள்ளை பெற்றவளின் அரற்றல், பெரியவர்களின் ஓங்கிய பேச்சு எல்லாம் சேர்ந்து அந்த இடம் பெரும் ரணகளமாய் தான் காட்சியளித்தது…
பின் மகப்பேற்று இறுக்கம் (Postpartum depression) என்பது பிரசவத்திற்க்குப் பிந்தைய மனச்சோர்வு நோய் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. குழந்தை பிறத்தலுடன் தொடர்புடைய ஒருவகையான மனநிலை ளாறை இந்நோய் குறிக்கிறது.
தீவிர துயரங்கள், உடம்புக் களைப்பு, கவலை, உணர்ச்சி மேலீட்டால் அழுகை, எரிச்சல், நித்திரையின்மை அல்லது சாப்பிடும் பழக்கத்தில் ஏற்ப்படும் மாற்றங்கள் ஆகியவை இதற்கான அறிகுறிகள் ஆகும்.
குறிப்பாக குழந்தை பிறந்து ஒரு வாரம் மற்றும் ஒரு மாத கால இடைவெளியில் இந்நோயின் தொடக்க கால அறிகுறிகள் தென்படும். புதிதாய் பிறந்த குழந்தையையும் இந்நோய் பாதிக்க வாய்ப்புள்ளது.
மகப்பேற்றுக்கு பிந்தைய மனச்சோர்வுக்கு முன்பாக எதிர்கொண்ட சிக்கல்கள்,இருமுனையப் பிறழ்வு, மனச்சோர்வின் குடும்பபின்னணி, மன அழுத்தம், குழந்தை
பிறப்புச் சிக்கல்கள், ஆதரவின்மை, மருந்துப் பயன்பாட்டு பிறழ்வுகள் போன்ற சிக்கல்களும் இந்நோயின் அபாயக் காரணிகளில் அடங்குகின்றன.
ஆயிரம் பெண்களில் ஒன்று அல்லது இரண்டு பெண்கள் குழந்தைப் பேற்றுக்குப் பின்னர் இந்நோயால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.