Kannaadi Maaligai – 4
Kannaadi Maaligai – 4
கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 4
கீர்த்தனா அந்த புகைப்படத்தைப் பத்திரப்படுத்திக் கொண்டாள். அவளுக்குப் புகைப்படம் தேவையில்லை. அந்த உருவம் அவள் மனதில் பதிந்திருந்தது.
‘அடிக்கடி பார்த்த உருவம் தானே!’ என்ற எண்ணத்தை கீர்த்தனாவின் கண்கள் வெளிப்படுத்தியது. கண்டதும் காதல், அறியாப் பருவத்தில் காதல், அவர்களே தேர்ந்தெடுக்கும் துணை இவற்றில் நம்பிக்கை இல்லாத கீர்த்தனாவுக்குத் திருமணத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கை.
காரணம் அவள் தந்தை. சிறு வயதிலே, தாயை இழந்த கீர்த்தனா, தன் தந்தையில் அன்பில் வளர்ந்தாள். இளம் வயதில் புரியவில்லை என்றாலும், தாயை இழந்து அவர் நினைவாகவே வாழும் தந்தை கீர்த்தனாவுக்குப் போதித்த விஷயங்கள் பல.
‘அக்னி சாட்சியாக நடக்கும் திருமணத்திற்கு எத்தனை மரியாதை. அதைப் பெற்றவர்கள் அவர்கள் குழந்தைகளுக்கு முழு மனதோடு சந்தோஷமாகச் செய்ய வேண்டும். அதற்கு ஒழுக்க நெறியோடு வாழ வேண்டும்.’ என்று கீர்த்தனா உறுதியாக நம்பினாள்.
‘அப்பாவுக்கு நெருங்கிய நண்பனின் மகன். இந்த திருமணத்தில் ஏன் மாற்றம் இருக்கப் போகிறது?’ என்று கீர்த்தனாவின் அறிவு சிந்திக்க, புகைப்படத்தின் சொந்தக்காரர் கீர்த்தனாவின் கண்முன்னே தோன்ற, அவர் பெயரை எழுத ஆரம்பித்தாள் கீர்த்தனா.
‘பேனா முனையால் உன் பெயரை எழுதினால், உனக்கு வலிக்குமோ?’ என்று எங்கோ படித்து காதல் கவிதை நினைவு வர, கேலியாக புன்னகைத்துக் கொண்டாள் கீர்த்தனா.
‘திருமணத்திற்கு முன் வருவது தான் காதலா?
திருமண பந்தலில் பூப்பதும் காதல் தானே?
மனைவியை விடச் சிறந்த காதலி இருக்க முடியுமா?’
என்று கீர்த்தனாவின் மனதில் தோன்ற, அவள் அறையின் ஜன்னல் வழியாகத் தோட்டத்தில் பூத்திருக்கும் மல்லிகையைப் பார்த்தபடி, “நானே சிறந்த காதலி.” என்று கண்களில் ஆசையோடும், மனதில் காதலோடும், சிந்தையில் உரிமையோடும் அழுத்தமாக முணுமுணுத்தாள் கீர்த்தனா.
கீர்த்தனா மேலும் கனவுலகில் சஞ்சரிக்க, அவளுக்கு தனிமை கொடுத்து நாம் முகுந்தன், நிரஞ்சனாவை தேடி செல்வோம்.
கடற்கரையில், அவர்கள் காதல், ஊடல் என அனைத்தும் முடிந்து நிரஞ்சனா கிளம்ப, “நான் உன்னை உங்க வீட்டுப் பக்கத்தில் ட்ரோப் பண்றேன்.” என்று கூறிக்கொண்டே அவளோடு நடந்தான் முகுந்தன்.
நிரஞ்சனா மௌனமாகத் தலை அசைக்க, “நாம இனி அடிக்கடி சந்திக்க வேண்டாம். நான் தினமும் உன்கிட்ட பேசுறேன். சரியா?” என்று முகுந்தன் அக்கறையாக கேட்க, நிரஞ்சனா தலையசைத்தாள்.
“என்ன நிரஞ்சனா? இப்படி உம்முன்னு இருந்தா என் மனசு கஷ்டப்படாதா?” என்று முகுந்தன் சோகமாக கேட்க, “அப்படிலாம் இல்லை. நான் நல்லா தான் இருக்கேன். ஆனா, ரொம்ப பயமா இருக்கு.” என்று நிரஞ்சனா குழந்தைத் தனத்தோடு கூறினாள்.
நிரஞ்சனாவின் வழியை மறித்து, “என்னைத் தவிர, உன்னை யாரும் கல்யாணம் பண்ண முடியாது. இனி இந்த மாதிரி நீ தனியா எங்கயும் வராத. தேவை இல்லாத சந்தேகத்திற்கு வழிவகுக்கும். படி. படிச்சி முடி பார்த்துக்கலாம். இன்னும் இரண்டு வருஷம் தானே. வேகமா ஓடிரும். நீ படிச்சி முடிச்சவுடன் நானே வந்து பெண் கேட்பேன். யாராலும் என்னை தடுக்க முடியாது. ஜஸ்ட் டூ இயர்ஸ் டார்லிங்.” என்று முகுந்தன் புன்னகையோடு கண்சிமிட்ட, அந்த புன்னகை நிரஞ்சனாவின் முகத்திலும் பரவ, நிரஞ்சனா சம்மதமாகத் தலை அசைத்தாள்.
முகுந்தன் அவன் காரை, நிரஞ்சனாவின் குடியிருப்பு பகுதி நோக்கிச் செலுத்தினான். அவன் காரில் பாடல் இன்னிசையாய் ஒலித்தது. இருவருக்கும் பாடலின் மேல் அலாதி பிரியம் போலும். ரசித்துக் கேட்டுக் கொண்டே பயணித்தனர்.
நிரஞ்சனாவை அவள் வீட்டிற்குச் சற்று அருகில் இறக்கிவிட்டுவிட்டு, ‘அவள் பத்திரமாக வீட்டிற்குள் செல்கிறாளா?’ என்று உறுதி செய்து கொண்டு நிரஞ்சனாவின் நினைப்போடு வீட்டிற்குப் பயணித்தான் முகுந்தன். ‘வீட்டில் நிரஞ்சனாவின் விஷயத்தை எப்படி ஆரமிப்பது?’ என்று சிந்தனையோடு காரை ஓட்டினான் முகுந்தன்.
நிரஞ்சனா வீட்டிற்குள் நுழைய, “எங்க போயிட்டு வர?” என்று நிரஞ்சனாவின் தாய் சுந்தரியின் குரல் ஓங்கி ஒலித்தது. அவள் தந்தை நிரஞ்சனாவை பார்த்தபடி மௌனமாக அமர்ந்திருந்தார்.
“பிரெண்ட்ஸோட…” என்று நிரஞ்சனா தயக்கமாகக் கூற, “பளார்…” என்று நிரஞ்சனாவின் கன்னத்தில் சுந்தரியின் கை தடம் பதிந்தது.
“அம்மா…” என்று நிரஞ்சனா அழைக்க, சுந்தரி அவளைக் கோபமாக முறைத்தார்.
‘விஷயம் தெரிந்துவிட்டது.’ என்ற எண்ணம் நிரஞ்சனாவுக்கு சற்று அச்சத்தைக் கொடுத்தாலும், அதையும் தாண்டி ஓர் நிம்மதி உணர்வைக் கொடுத்தது.
“என்ன சொல்லி உன்னை மயக்கினான்? பார்த்தா பெரிய இடத்துப் பையன் மாதிரி இருக்கு. கார்ல வந்து இறங்குற. அயோக்கிய பையன். காலேஜ் படிக்கிற பொண்ணு கிட்ட வேலையைக் காட்ட வேண்டியது.” என்று நிரஞ்சனாவின் தாயார் சுந்தரி நிரஞ்சனாவிடம் எகிற, ‘நான் ஒரு கல்லூரி பெண்ணிடம் ஏன் மயங்கினேன். அவள் சிந்தனை என்னை ஏன் இப்படி எனக்கு ருசிக்கிறது?’ என்று காதல் எண்ணங்கள் மேலோங்க முகுந்தன் அவன் காரிலிருந்து இறங்கி வீட்டிற்குள் நுழைந்து சீட்டியடித்தபடி படியேறி அவன் அறைக்குள் சென்றான்.
“அம்மா… அயோக்கியனெல்லாம் சொல்லாதீங்க. அவர் நல்லவர். நான் அவரை விரும்பறேன்.” என்று நிரஞ்சனா அவள் வாங்கிய அறையை மறந்து திண்ணக்கமாக கூற, நிரஞ்சனாவின் தாயார் அவள் முடியைக் கொத்தாகப் பிடித்து பளார் பளார் என்று அறைந்தார். நிரஞ்சனாவின் தந்தை வாசல் கதவை அடைத்துவிட்டு, ஹாலில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
பலம் இழந்து நிரஞ்சனா தரையில் சரிய, “அம்மா… அக்கா பாவும் அம்மா… எதோ தெரியாம பேசுறா. நான் பேசுறேன்.” என்று நிரஞ்சனாவின் தங்கை ஸ்வாதி குறுக்கே புகுந்தாள்.
அவள் வாங்கிய அடியில் நிரஞ்சனாவின் பிடிவாதம் ஏற, “யாரும் எனக்காகப் பேச வேண்டாம். நான் மேஜர். அவரை தான் கல்யாணம் செய்துப்பேன்.” என்று திட்டவட்டமாக அறிவித்தாள் நிரஞ்சனா.
நிரஞ்சனாவின் தந்தை ராமலிங்கம் செய்வதறியாமல், கைகளைப் பிசைய, அருகே இருந்த துடப்பத்தால் நிரஞ்சனாவின் தாய் சுந்தரியை அடிக்க நிரஞ்சனா பின்னே நகர நகர சுவரில் அடிப்பட்டு அவள் கைகளில் ரத்தம் வழிந்தது.
அடி வாங்கிய நிரஞ்சனாவின் கால்கள் பலம் இழந்து நடுங்க ஆரம்பிக்க, “சுந்தரி நிறுத்து. நிரஞ்சனா அவனை மறந்திரு…” என்று கண்டிப்போடு ஒலித்தது அவள் தந்தை ராமலிங்கத்தின் குரல்.
நிரஞ்சனா மறுப்பாகத் தலை அசைக்க, அவள் அலைப்பேசி ஒலித்தது. அவள் தாய் கோபமாக அந்த அலைப்பேசியைச் சுவரில் விட்டெறிய அந்த விலையுயர்ந்த அலைப்பேசி சுக்கு நூறாக உடைந்தது. ‘அவள் காதலின் நிலைமையும் அது தானோ?’ என்று நிரஞ்சனா மிரண்டு விழித்தாள். தன் வீடே அவளுக்குச் சிறையாகத் தெரிந்தது.
“நீ படிச்ச லட்சணம் போதும். இனி நீ காலேஜ் போக வேண்டாம். உன் படிப்பை நிறுத்தறேன். உனக்கு உடனே கல்யாணம்.” என்று ராமலிங்கம் அழுத்தமாக கூற, எங்கோ அகப்பட்டுக் கொண்ட உணர்வில் நிரஞ்சனாவின் உள்ளம் பதறியது.
“அப்பா…” என்று கதறியபடி அவர் கால்களில் விழுந்தாள் நிரஞ்சனா. “அப்பா… எல்லாத்தயும் மறந்துட்டு படிக்கறேன்னு சொல்லு. நீ நல்லா படிக்கிற பொண்ணு. உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.” என்று அவர் நிரஞ்சனாவின் தலை கோதி கூற, நிரஞ்சனா என்ன சொல்வதென்று தெரியாமல் கண்ணீர் உகுத்தபடி அவள் தந்தையைப் பரிதாபமாகப் பார்த்தாள்.
“எல்லாத்தயும் மறந்திருவேன்னு சொல்லு.” என்று நிரஞ்சனாவின் தந்தை அழுத்தமாகக் கூற, நிரஞ்சனா மௌனம் காக்க நிரஞ்சனாவை தரதரவென்று படுக்கை அறைக்குள் இழுத்துச் சென்று கதவை அடைத்தார் நிரஞ்சனாவின் தாய் சுந்தரி.
நிரஞ்சனாவின் தந்தை ராமலிங்கம் சுவரைப் பார்த்தபடி வெறுமையாக அமர்ந்திருக்க, “அம்மா… கதவை திறங்க… அம்மா… அம்மா…” என்று அலறியபடி கதவை படார் படாரென்று அடித்தாள் நிரஞ்சனாவின் தங்கை ஸ்வாதி.
நிரஞ்சனாவின் வீட்டிற்கு மௌனம், அழுகை, கோபம், விரக்தி எனப் பல விருந்தாளிகளை அழைத்து வந்திருந்தது நிரஞ்சனாவின் காதல்.
சுமார் மூன்று நாட்கள் கடந்த நிலையில், மாலை நேரத்தில் முகுந்தன் இலக்கில்லாமல் சுவரை வெறித்தபடி அமர்ந்திருந்தான்.
அவன் அறைக்குள் நுழையக் கதவைத் தட்டிவிட்டு, அதற்குப் பலன் இல்லாமல் போக… முகுந்தன் அறைக்குள் சென்றாள் கீர்த்தனா.
‘எதாவது பிரச்சனை என்று கேட்கலாமா? அதைக் கேட்க எனக்கு இப்பொழுது உரிமை இருக்கிறதா?’ என்று எண்ணியபடி “முகுந்தன்…” என்று அழைத்தாள் கீர்த்தனா.
“அ….” என்று முகுந்தன் தடுமாற, “எனி ப்ரோப்லேம்?” என்று கீர்த்தனா கேட்க, மறுப்பாகத் தலை அசைத்து, “நீங்க நெக்ஸ்ட் மீட்டிங் ஹாண்டில் பண்ணுங்க. நான் வெளிய போகணும்.” என்று கூறிவிட்டு அவசரமாக வெளியே கிளம்பினான் முகுந்தன்.
‘தினமும் இந்நேரம் என்ன வேலையோ?’ என்று எண்ணி தோளைக் குலுக்கி தன் சேலை முந்தானையைச் சரி செய்தபடி அவள் வேலையைக் கவனிக்கச் சென்றாள் கீர்த்தனா.
‘மூணு நாள் ஆச்சு… நிரஞ்சனா கிட்ட பேச முடியலை. அவ வாட்ஸாப்ப் லாஸ்ட் ஸீன் கூட மூணு நாள் முன்னாடி காட்டுது. காலேஜ்க்கு வரலை. எதோ பிரச்சனை…’ என்று சிந்தித்தபடியே காரை நிரஞ்சனாவின் கல்லூரி நோக்கிச் செலுத்தினான் முகுந்தன்.
கல்லூரி விடும் நேரம், நிரஞ்சனா சோர்வாக நடந்து வந்து கொண்டிருந்தாள். நிரஞ்சனா முகுந்தனைக் கண்டு கொண்டாள். முகுந்தனும் அவளைக் கண்டு கொண்டு வேகமாக அவள் அருகே ஓடினான்.
முகுந்தன் தன் குடும்ப நிலை மறந்து, செல்வ நிலை மறந்து எதிரே வந்த மாணவர்களை இடித்துக் கொண்டு ஓடினான் நிரஞ்சனாவை நோக்கி…
முகுந்தனை அருகே பார்க்கவும், நிரஞ்சனாவின் கண்கள் கண்ணீரை வடிக்க, அவள் அதை உள்ளிழுத்துக் கொண்டு முகுந்தனைக் கடந்து சென்றாள்.
நிரஞ்சனாவின் முகம், கைகள் என அவள் உடல் முகுந்தனுக்குப் பல செய்திகள் கூற, “நிரஞ்சனா எதுவும் பெரிய பிரச்சனையா. வா என் கூட இப்பவே கல்யாணம் பண்ணிப்போம். எதாவது கஷ்டம்னா என்கிட்ட சொல்லு டீ.” என்று முகுந்தன் கண்களில் கண்ணீர் வழிய நிரஞ்சனாவிடம் கெஞ்சினான்.
“கல்யாணம்…” இந்த சொல்லில் ஒரு நொடி அசைவின்றி நின்று முகுந்தனைப் பார்த்துவிட்டு, நிரஞ்சனா கண்களைச் சூழல விட்டபடி, மௌனத்தைப் பதிலாகக் கொடுத்து வேகமாக நடந்து சென்று அவளுக்காகக் காத்திருந்த காருக்குள் நுழைந்து கொண்டாள்.
கார் வேகமெடுக்க, கண்ணீர் மல்க, முகுந்தனை தன் மனதிற்குள் படம் பிடித்துக் கொண்டாள் நிரஞ்சனா.
‘ஏதோ சரி இல்லை. ஆனால், இப்ப என்ன பண்றது? முதலில் நான் அம்மா அப்பா கிட்ட விஷயத்தைச் சொல்லியே ஆகணும். நான் இப்ப சொன்ன சரியா இருக்குமா?’ என்றெண்ணி தன் காரை மெதுவாகச் செலுத்தினான் முகுந்தன்.
காரில் பாடல் ஒலித்தது.
இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும் முன்னே கண்ணே காண்பேனோ
இலை மேலே பனி துளி போல்
இங்கும் அங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம்
பொன்னே பூந்தேனே
வலி என்றால் காதலின் வலி தான்
வலிகளில் பெரிது
அது வாழ்வினும் கொடிது
உன்னை நீங்கியே உயிர் கரைகிறேன்
வான் நீலத்தில் எனைப புதைக்கிறேன்
காதல் என்னைப் பிழிகிறதே
கண்ணீர் நதியாய் வழிகிறதே
நினைப்பது தொல்லை
மறப்பதும் தொல்லை
வாழ்வே வலிக்கிறதே
முகுந்தனின் கண்கள் கலங்க, அவனுக்குச் சாலை மங்கலாகத் தெரிந்தது.
அன்பான வாசகர்களே!
என் மனதில் ஓர் வினா? காதல் சரியா தவறா என்று தெரியவில்லை!
ஆனால், காதல் என்றால் பக்குவப்பட்ட வயதில் இருப்பவர்களும் இளைய சமுதாயத்திடம் எதிர்ப்பை மட்டும் தான் காட்ட வேண்டுமா? ஏன் அவர்கள் நிலையிலிருந்து இறங்கி சற்று பக்குவமாக நடந்து கொள்ளக் கூடாதா?
நம் கதாபாத்திரங்களின் வாழ்க்கை காதல், திருமணம் என்னும் பந்தத்திற்குள் சிக்கி கண்ணாடி மாளிகைக்குள் பயணிக்கத் தயாராகிவிட்டது.
யாரின் கண்ணாடி மாளிகை யாரால் கல்லடி படும்?
கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்…