kannaadi Maaligai – 6

kannaadi Maaligai – 6

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  6

நிரஞ்சனா வீட்டிலிருந்து எதிர்ப்பு வரும் என்றறிந்திருந்தாலும், இத்தனை மனிதர்கள் காலை நேரத்தில் கூடுவார்கள் என்று முகுந்தனின் நண்பர்கள் பட்டாளம் எதிர்பார்க்கவில்லை.

நண்பர்கள் கூட்டம், கூட்டத்திற்குள் புகுந்து நிரஞ்சனாவை நெருங்க முயற்சிக்க, தான் துரிதமாகச் செயல்படவேண்டிய சூழ்நிலையைப் புரிந்து கொண்டான் முகுந்தன்.

வேகமாக அனைவரையும் இடித்துக் கொண்டு, “நிரஞ்சனா…” என்றழைத்துக் கொண்டு முகுந்தன் நிரஞ்சனாவை நெருங்க… அந்த குரலில் அந்த அழைப்பில் உயிர் பெற்று,  கூட்டத்தை ஒதுக்கி விட்டு… “முகுந்தன்…” என்று கதறிக் கொண்டு முகுந்தனின் மார்பில் சரண் புகுந்தாள் நிரஞ்சனா.

நிரஞ்சனாவை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, அவளை தன் பக்கத்தில் நிறுத்திக் கொண்டான் முகுந்தன். நிரஞ்சனாவின் தாய் மற்றும் தந்தை அவளைக் கையாலாகத தனத்துடன் பார்த்தனர்.

‘கீழே விழுந்தால் கூட, அம்மா… என்று கதறிக்கொண்டு தன்னிடம் சரண் புகும் மகளை நான் எங்கு இழந்தேன்.’ என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் நிரஞ்சனாவின் தாயார் சுந்தரி கண்ணீர் உகுக்க, நேற்று வரை தன் மடியில் படுத்துக் கதறிய தன் மகளை கை தவற விட்ட சோகத்தோடு நிரஞ்சனாவின் தந்தை ராமலிங்கம் வெறுமையோடு பார்த்தார்.

உறவினர்கள், சீற்றமாக நிற்க, “என்னை வேலை இல்லாத விடலை பையன்னு நினைசீங்களா? நான் இந்திரன் இண்டஸ்ட்ரீஸ் எம்.டீ. ” என்று கம்பீரமாகக் கூறினான் முகுந்தன். முகுந்தனின் குரலில் ஆளுமையில் அந்த கூட்டம் சற்று அமைதியானது.

“நானும், என் பிரன்ட்ஸும் நிரஞ்சனா சொன்ன வார்த்தைக்காகத் தள்ளி நின்னோம். என்ன? சும்மா கோவிலில் அவசர தாலி கட்டிருக்கான்… கழட்டி போட்டு இவளை கூட்டிட்டு போய்டலாமுன்னு பார்த்தீங்களா?” என்று நிரஞ்சனாவின் முகம் பார்த்துக் கேட்டான்.

நிரஞ்சனாவின் தலையில் ரத்தம் வடிய, அதை தன் கைக்குட்டையால் துடைத்து, “எனக்கு போலீஸ் முதல், லாயர் வரை எல்லாரையும் தெரியும். கல்யாணம் எப்படி நடந்ததுன்னு முக்கியம் இல்லை. நிரஞ்சனா என் மனைவி. அதை யாராலும் மாத்த முடியாது.” என்று கூறிவிட்டு, அங்கிருந்து முகுந்தன் நிரஞ்சனாவை அழைத்துக் கொண்டு செல்ல முற்பட்டான்.

அவர்கள் முன் கோபமாகச் சென்ற, நிரஞ்சனாவின் தாய் சுந்தரி, “உன் மனசில் கொஞ்சமாவது பாசம் இருந்திருந்தா? தங்கை மேல அக்கறை இருந்திருந்தா? இப்படி ஒரு காரியத்தை பண்ணிருப்பியா? உன் தங்கை வாழ்க்கை என்ன ஆகுமுன்னு ஒரு நொடி யோசிச்சி பார்த்தியா? சுயநலமா யோசிச்சிட்டேல்ல?” என்று நிரஞ்சனாவை குற்றம் சாட்டும் விதமாக அவள் தாய் கண்களில் கண்ணீரோடு  கோபமாகக் கேட்க, நிரஞ்சனா கூனி குறுகி நின்றாள்.

நிரஞ்சனாவின் கைகள் நடுங்க, முகுந்தன் அதை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான். “பெத்த வயிறு பத்தி எரியுது டீ… நீ நல்லாருக்க மாட்ட… நல்லாவே இருக்க மாட்ட… அம்மான்னு நீ கதறிக்கிட்டு வீடு தேடி வர நாள் சீக்கிரம் வரும்.” என்று அவள் காலடி மண்ணை எடுத்து வீச, “சுந்தரி… என்ன பண்ற? அவ நம்ம பொண்ணு. கோவில் வாசல்ல வச்சி சொல்ற வார்த்தையா இது.” என்று  ராமலிங்கம் தன் மனைவியை அடக்கினார்.

“இல்லைங்க… இவ என் பெண்ணில்லை. நான் இவளை இப்படி வளர்க்கலை. என் பொண்ணு செத்துட்டா. நான் இவளைத் தலை முழுகிட்டேன். நான் இவளைத் தலை முழுகிட்டேன்.” என்று தலையிலும், மார்பிலும் அடித்துக் கொண்டு கதறினார் நிரஞ்சனாவின் தாய் சுந்தரி.

“செத்த பொண்ணுக்கு யாரவது சாபம் கொடுப்பாங்களா? அவளை இங்கிருந்து போக விடு.” என்று ராமலிங்கம் தன் மனைவியைச் சமாதானம் செய்ய, மேலும் அவர்கள் பேச்சைக் கேட்க விரும்பாமல், நிரஞ்சனா அங்கிருந்து வேகமாக முகுந்தனின் கார் நோக்கிச் சென்றாள்.

முகுந்தன் அவன் நண்பர்களிடம் பேசிவிட்டு, காரை நோக்கி நடந்தான். முகுந்தன் சாலையை பார்த்தபடி காரை செலுத்த, நிரஞ்சனா எதுவும் பேசவில்லை. அவள் விசும்பல் சத்தம் மட்டுமே, அந்த வாகனத்தை நிரப்பிக் கொண்டிருந்தது.

முகுந்தன் நிரஞ்சனாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அவள் காயத்திற்கு மருந்திட்டு அவர்கள் வீட்டை நோக்கி தன் காரை செலுத்தினான் முகுந்தன்.

முகுந்தன் காரை நிறுத்திவிட்டு உள்ளே செல்ல, தயங்கியபடி அவளை பின் தொடர்ந்தாள் நிரஞ்சனா. முகுந்தனின் வீட்டின் பிரமாண்டத்தில் மிரண்டு போனாள் நிரஞ்சனா.

நிரஞ்சனா நடுத்தர மேல்தர வர்க்கத்தைச் சார்த்திருந்தாலும், முகுந்தன் பணக்காரன் என்று தெரிந்திருந்தாலும் நிரஞ்சனா இத்தனை பிரமாண்டத்தை எதிர்பார்க்கவில்லை.

‘எங்க வீட்டிலே ஏத்துக்களை? முகுந்தன் வீட்டில் என்னை ஏத்துப்பாங்களா?’ என்ற அச்சத்தை வீட்டை நெருங்க நெருங்க அந்த பிரமாண்டம் கொடுத்தது.

முகுந்தனையும், அவனோடு  ஓர் இளம் பெண் தாலியோடு நிற்கவும் நடந்து முடிந்ததை முகுந்தனின் வீட்டில், ஒவ்வொரு அங்கமும் புரிந்து கொண்டது.

அதே நேரம், அலுவலகத்தில்  ‘முகுந்தன் ஏன் இன்னும் வரலை? கால் பண்ணியும் எடுக்கலை.’ என்றுண்ணியபடி கீர்த்தனா தன் வேலையில் மும்முரமாக மூழ்க முயன்றாள்.

“ஆன்சைட் கால் பேசணும். வழக்கமா முகுந்தன் அவங்க அண்ணன் விஜயேந்திரன் கிட்ட பேசிப்பாங்க. இன்னைக்கி இன்னும் வரலை. இன்னைக்கி ஒர்க்ஸ் நான் தான் டிஸ்கஸ் பண்ணனுமா?” என்ற சிந்தனையோடு அமர்ந்திருக்க, அவள் மடிக்கணினியில் மீட்டிங் அலெர்ட் மிளிர்ந்தது.

‘முகுந்தன் இல்லாமல் நான் மட்டும் தனியா அட்டென்ட் பண்ணனும். பெர்சனலா எதுவும் பேசுவாங்களா?’ என்ற எண்ணம் தோன்ற, கீர்த்தனாவைக் கொஞ்சம் அச்சம், சற்று வெட்கம் என பல உணர்ச்சிகள் ஆட்கொள்ள  அவள் முகம் செவ்வானமாகச் சிவந்தது.

கான்பெரென்ஸ் ஹால் சென்று, காணொளி அழைப்பில் இணைய, “ஹாய்… கீர்த்தனா.” என்று விஜயேந்திரன் சிரித்த முகமாகக் கூற,  “ஹாய்…” என்று இன்முகமாகக் கூறினாள் கீர்த்தனா.

பல முறைகள் விஜயேந்திரனை காணொளி அழைப்பில்   பார்த்திருந்தாலும், பேசியிருந்தாலும், இந்த திருமண பேச்சு ஆரம்பித்த பிறகு இதுவே முதல் முறை.

‘அவங்க கிட்ட எந்த மாற்றமும் தெரியலியே.’ என்றெண்ணி விஜயேந்திரனை கூர்ந்து பார்த்தாள் கீர்த்தனா. ‘இன்னும் இவங்க கிட்டக் கல்யாணம் விஷயம் சொல்லலையோ?’ என்ற யோசனையோடு அமர்ந்திருக்க, “கீர்த்தனா…” என்று அழுத்தமாக மீண்டும் ஒலித்தது விஜயேந்திரனின் குரல்.

“சொல்லுங்க…” என்று கீர்த்தனா தடுமாற, “கால் எதோ ப்ரோப்ளேமேன்னு நினைக்கிறேன். நீங்க பிளான்க் ஆகிட்டீங்க.” என்று புன்னகையோடு விஜயேந்திரன் பொறுமையாகக் கூற, அவன் குரலில் அவன் புன்னகையில் மயங்கி என்ன பதில் கூறுவது என்றறியாமல் தடுமாறினாள் கீர்த்தனா.

“முகுந்தன் வரலையா?” என்று விஜயேந்திரன் கேட்க, “தெரியல சார். நான் கால் பண்ணேன் எடுக்கலை.” என்று எந்த உரிமையையும் எடுக்க தயங்கி, விலகல் தன்மையோடு பேசினாள் கீர்த்தனா.

“ஹல்லோ… நான் உங்களை மேடமுன்னு சொல்லட்டுமா?” என்று விஜயேந்திரன் கேலி  தொனியில்  கேட்க, கீர்த்தனா திருதிருவென்று முழித்தாள்.

“எந்த காலத்தில் இருக்கீங்க?” என்று விஜயேந்திரன் கேட்க, ‘இவங்க தெரிஞ்சு தான் பேசுறாங்களா? இல்லை தெரியாம பேசுறாங்களா?’ என்ற குழப்பத்தோடு கீர்த்தனா விஜயேந்திரனை பரிதாபமாகப் பார்த்தாள்.

“முகுந்தனை சார் அப்படினா கூப்பிடுறீங்க. என்னை மட்டும் ஏன் சார் அப்படின்னு கூப்பிடுறீங்க? கால் மீ விஜய் ஆர் இந்திரன்.” என்று விஜயேந்திரன் நட்பு கரம் நீட்ட, கீர்த்தனா தலை அசைத்துக் கொண்டாள்.

விஜயேந்திரன் மேலும் தன் பேச்சைத் தொடர்ந்தான். “நானும் முகுந்தனுக்குக் கால் பண்ணேன் எடுக்கலை. இன்னக்கி முக்கியமான விஷயத்தை நீங்க நோட் பண்ணிக்கோங்க. நான் முகுந்தன் கிட்ட அப்புறம் பேசுறேன்.” என்று கூறி மேலும் பணி சம்பந்தமாக விஜயேந்திரன் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டு  தன் பேச்சை முடித்துக் கொண்டான்.

‘விஜயேந்திரனுக்கு திருமண விஷயம் தெரிவிக்கப்படலை.’ என்று கீர்த்தனாவின் அறிவு புரிந்து கொண்டாலும், அவன் ஆளுமை. அவன் பொறுமை, அவன் திறமை என  கீர்த்தனாவின் மனம் விஜயேந்திரனின் உயரிய பண்புகளைச் சுற்றி வந்தது. கீர்த்தனா, தன் மனதைக் கடிவாளமிட்டு அடக்கி பணியைத் தொடர்ந்தாள்.

கீர்த்தனாவிடம் பேசிவிட்டு, அருகே அமர்ந்திருந்த லீலாவை பார்த்து கண்ணுயர்த்தி சிரித்தான் விஜயேந்திரன்.

“ஏன் இப்படி ஓரமா இருந்து பார்க்கணும்? நீயும் என் கூட இருந்து பேசியிருக்கலாம். நம்ம கம்பெனி தானே.” என்று இன்முகமாக விஜய் கூற, “ஜஸ்ட் லைக் தட் பார்த்துட்டு இருந்தேன்.” என்று விஜய் அருகே அமர்ந்தபடி பதிலளித்தாள் லீலா.

“அவங்க பெயர் என்ன?” என்று லீலா நெற்றியைத் தடவ, “கீர்த்தனா.” என்று விஜய் கூற, “ரொம்ப அழகா இருக்காங்களா? சேரி வியர் பண்ணி… லாங் ஹேர்… ஹோம்லி லுக்… ரொம்ப அழகு… என்ன?” என்று லீலா கேள்வியாக நிறுத்த, உதட்டைச் சுழித்தான் விஜயேந்திரன்.

லீலாவின் முகம் பார்த்து, “நீ பக்கத்தில் இருக்கும் போது. என் கண்களுக்கு யாருமே அழகா தெரிய முடியாது.” என்று விஜயேந்திரன் லீலாவை ரசித்தபடி கூற, “நான் பக்கத்தில் இருக்கும் போது மட்டும் தானா?” என்று லீலா சிணுங்க, “ஹா… ஹா…” என்று பெருங்குரலில் சிரித்தான் விஜயேந்திரன்.

லீலா கோபித்துக் கொண்டு முன்னே நடக்க, வேகமாக ஒரே எட்டில் அவளை நெருங்கி, “நீ என் பக்கத்தில் இருக்கணுமுன்னு அவசியமில்லை. எப்பவும் என் மனசில் இருக்கும் போது…” என்று வாக்கியத்தை முடிக்காமல் விஜயேந்திரன் கண்சிமிட்ட, லீலா அழகாகப் புன்னகைக்க அங்குக் காதல் நாடகம் அரங்கேறியது.

அப்பொழுது விஜயின் அலைப்பேசி ஒலிக்க, “….” எதிர் பக்கம் பேசுவது நமக்குக் கேட்க வாய்ப்பில்லை.

லீலா, புருவம் உயர்த்தி வினவ, லேப்டாப் வைத்திருந்த தன்  கைகளை அசைத்து பொறுமையாக இருக்கும் படி செய்கை காட்டினான் விஜயேந்திரன்.

லீலா, விஜயேந்திரனுக்கு தனிமை கொடுத்து விலகி நடந்து செல்ல, லீலாவின் பெருந்தன்மையான குணத்தில் புன்னகைத்து அலைப்பேசி பேச்சில் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தான் விஜயேந்திரன்.

சில நிமிடங்கள் பேசிவிட்டு,  சிந்தனையில் ஆழ்ந்தவனாக விஜய் லீலாவிடம் வர, எதிரே ஓர் குழந்தை வேகமாக ஓடி வர, சரேலென்று விலகி விஜயேந்திரன் வழி கொடுக்க அங்கிருந்த தடுப்பில் விஜயின் கைகள் இடிபட்டு அவன் கையிலிருந்த மடிக்கணினி நழுவி விழுந்து சுக்கு நூறாக உடைந்தது.

கைகளின் ஏற்பட்ட வலி, அலைப்பேசியில் அவன் அறிந்த செய்தி என அனைத்தும் விஜயேந்திரனை ரணமாக அறுக்க… கீழே விழுந்து இரண்டாக உடைந்த  மடிக்கணினி அவனைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிப்பது போல் தோன்றும் பிரமையை விஜயேந்திரனால் தடுக்க முடியவில்லை.

விதி மனிதர்களை ஆட்டுவித்து, உருண்டு சிரிப்பதற்கு தயாராகத்தான் இருக்கிறது. பாவம் விதிக்கும் தெரியவில்லை யாரைப் பார்த்துச் சிரிப்பதென்று!

கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்…

error: Content is protected !!