id-14

31

கரைந்து போன காதல்

விந்தியா மாட்டிக்கொண்ட பதட்டத்தில் சிறு பிள்ளைத்தனமான முகத்தோடு அவன் முன்னே வந்து நின்றாள். வெகு நாட்கள் வறட்சிக்கு பிறகு பொழிந்த மழைத்துளி, மண்வாசத்தை வீசி புத்துணர்வை உண்டாக்குவது போல இருந்தது… ஆதித்தியாவிற்கு விந்தியாவைப் பார்த்த அந்த நொடி…

ஒவ்வொரு முறையும் அவளின் பார்வையின் முன்னே தோற்றுப் போகிறோமோ என்று ஆதி எண்ணமிட்டுக் கொண்டான். இம்முறை ஆதித்தியா தன் உணர்ச்சிகள் நிரம்பிய மனதை விடுத்து மூளையால் இயங்க வேண்டுமென்று நினைத்தான்.

விந்தியாவிற்கு அவன் முன்னிலையில் குற்றவாளியாய் நிற்பது அவமானமாய் தோன்றியது. அவன் முகத்தை நேரெதிரே பார்க்க தயங்கியவளை, கண்கொட்டாமல் பார்த்தபடி அமர்ந்திருந்தான் ஆதித்தியா.

அவளின் தயக்கத்தைப் பார்த்து ஆதியே பேசத் தொடங்கினான்.

“பெட்டி படுக்கையோட அம்மா வீட்டுக்கு போன… மேடம் இப்ப எதுக்கு வந்தீங்க? நீ இந்த அறைக்குள்ளே ஒளிஞ்சிட்டு இருக்கிறதை கூடவா கண்டுபிடிக்க மாட்டேன்? உன் வாசனையும்… உன் மெலிதான கொலுசு சத்தம். இதை எல்லாம் தாண்டி அந்த ஆஷ் டிரெ…

சண்முகம் நான் இல்லாத போது என் ரூமுக்குள்ளேயே வர மாட்டான்… அப்போ வேறு யாருனு யோசிச்சா உன்னோட முகம்தான் என் கண் முன்னாடி வந்தது” என்றான், அவள் மீதான பார்வையைக் கண நேரம் கூட அகற்றாமல்.

“தேவையில்லாதது எல்லாம் பேசாதீங்க… நான் மறந்துட்டு போன பொருளை எடுத்துட்டு போக வந்தேன். வெளியிலிருந்து நீங்க கோபமாய் வருவதைப் பார்த்த பிறகு உங்க கண் முன்னாடி வந்தா என்ன நடக்குமோனு பயந்து ஒளிஞ்சுக்கிட்டேன்” என்றாள்.

ஆதித்தியா லேசாகச் சிரித்துவிட்டு, “நீ பயந்துட்ட… அதுவும் என்னைப் பாத்து… நான் இதை நம்பணும்”

“நீங்க நம்புங்க நம்பாம போங்க… நான் எடுக்க வேண்டியதை எடுத்துட்டேன்… கிளம்புறேன்” என்று விந்தியா அறையின் வாசலை நெருங்க ஆதித்தியா சந்தேகம் கொண்டவனாய் அவளை வழிமறித்தான்.

“ஏதோ தப்பா இருக்கே… எப்பவும் அலட்சியமா இல்ல கோபமா பார்க்கிற கண்ணில ஏதோ திருட்டுத்தனம் தெரியுதே”

“போதும் ஆதி… நிறுத்துங்க… திருட்டுத்தனமும் இல்ல ஒரு மண்ணும் இல்ல” என்று சொல்லிவிட்டு அவள் வெளியே செல்ல முயற்சிக்க ஆதியின் நீண்ட கரங்கள் வழிவிடவில்லை.

“வாட்ஸ் யுவர் பிராப்ளம் ஆதி?” என்று கொஞ்சம் விந்தியா அதட்டலாய் கேட்க,

ஆதி ரொம்பவும் இயல்பாய், “திஸ் இஸ் மை பிராப்ளம்” என்று சொல்லி,

ஹேன்ட் பேக்கை அவன் எதிர்பாராமல் இழுத்து பிரித்துப் பார்க்க விந்தியா பதறிக் கொண்டு அவன் கையிலிருந்து பிடுங்கினாள். இந்தச் செயல் ஆதித்தியாவிற்கு மேலும் சந்தேகத்தை வலுக்கச் செய்தது.

“மேனர்ஸ் தெரியாதா? என்னோட அனுமதி இல்லாம என் ஹேன்ட் பேக்கை எப்படி நீங்க திறக்கலாம்?” என விந்தியா பொறிந்து தள்ளினாள்.

“நீ என்னோட ரூமுக்குள்ள என்னோட அனுமதி இல்லாம வந்தது மேனர்ஸா?”

“ஸ்டாப் இட் ஆதி… நான் என் திங்க்ஸைத்தான் எடுக்க வந்தேன்”

“சரி… அந்த பொருளை காட்டிட்டு போ” என்று சொல்ல விந்தியாவிற்குப் பதட்டம் அதிகரித்தது.

“என்னை நீங்க நம்பமாட்டீங்களா?” என்று விந்தியா கேள்வியால் மடக்க,

“நோ… உன்னை மட்டும் நம்பமாட்டேன்டி… அமுக்கமாய் கேத்ரீன் விஷயம் தெரிஞ்சதை மறைச்சு போலீஸ் அரெஸ்ட் பண்ற வரைக்கும் அமைதியா இருந்தியே” என்று சொல்லியபடியே பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை பற்ற வைத்தான்.

விந்தியா அவனிடமிருந்து தப்பிக்க ஃபோனை எடுத்து டயல் செய்தாள். ஆதித்தியா அவள் போனை பிடுங்க அதில் சிவா என்ற பெயரை பார்த்ததும் கோபம் கொண்டவனாய் தூக்கி வீசி எறிந்தான்.

“ஹெலோ மிஸ்டர்… என்ன உரிமையில என்னோட ஃபோனை தூக்கி அடிச்சீங்க? “

“நான் உன் புருஷன்… உன்னை கேள்வி கேட்டா பதில் சொல்லு… அதை விட்டுட்டு எவனுக்கோ ஃபோன் போட்டா… டென்ஷன் ஆகாதா? அதான் தூக்கி அடிச்சேன்” என்றதும் விந்தியாவிற்கு உள்ளுக்குள் அவனின் செயலால் மனதிற்குள் பயம் உண்டானது.

அவளுடைய தைரியம் கரைந்து கொண்டே வர தப்பிக்கும் வழியை மட்டுமே அவள் யோசித்துக் கொண்டிருந்தாள்.

ஆதித்தியாவிற்கு அவளின் பதட்டம் குழப்பமாயிருந்தது. அந்த பேக்கில் என்ன இருக்கிறது எனப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்க, மீண்டும் அவன் அந்த பேக்கை இழுத்த போது விந்தியாவின் பிடியும் அத்தனை லேசில் இல்லை.

“என்ன… அந்த சிவா உன்கிட்ட ஏதாவது ஆதாரத்தைத் தேடி அனுப்பினானா? மொத்தத்தில் என்னை உள்ள தள்ள இரண்டு பேரும் குறியா இருக்கீங்க”

ஆதித்தியா சொன்னது அப்பட்டமான உண்மை. ஆனால் இந்த ஆதாரம் அவனைக் காப்பாற்றுவதற்கு என்று சொன்னால் நம்புவானா?

இப்படி அவள் சிந்தித்துக் கொண்டிருக்க அவள் அசந்த நேரம் பார்த்து பேக்கை உருவிக்கொள்ள, விந்தியா விட்டுகொடுக்காமல் அந்த பேக் இருவருக்கிடையிலும் மாட்டிக் கொண்டு தவித்தது.

இந்தப் போராட்டத்துக்கு இடையில் ஆதித்தியாவின் கையிலிருந்த சிகரெட் துண்டு விந்தியாவின் கைகளில் பட்டு விட, “அம்மா…” என்று அவள் கைகளை உதற…

ஆதித்தியா அவன் கையில் சிக்கி கொண்ட பேக்கை ஒரு பொருட்டாய் மதிக்காமல் தூக்கி வீசி விட்டு சிகரெட் துண்டை காலில் போட்டு மிதித்தான்.

“சாரி… சாரி… சாரி… தெரியாம நடந்து போச்சு” என்று அவள் கையில் சூடுபட்ட இடத்தைத் தடவியவன்,

“வெய்ட்… ஐஸ்… எடுத்துட்டு வர்றேன்” என்று சொல்லி தன் அறையினுள் இருந்த சின்னக் குளிர்சாதனப்பெட்டியை நாடிப் போனான்.

இதுதான் சமயம் என விந்தியா பேக்கை சத்தமின்றி எடுத்துக் கொண்டு கதவை நெருங்க, ஆதித்தியாவின் கண்கள் அவளைப் பார்த்த நொடியில் அவன் மூளையும் கை, கால்களும் அதிவேகமாய்ச் செயல்பட்டன.

சுவற்றில் மாட்டியிருந்த சாவியை எடுத்துக் கொண்டு பின்புறமாய் விந்தியாவை அணைத்து இழுத்தபடி பிடித்துக்கொண்டு மறு கையினால் கதவை அடைத்து பூட்டினான்.

அவனின் ஒரு கையை விலக்கி விடவே விந்தியாவிற்குக் கடினமாயிருந்தது. உண்மையிலேயே பார்க்கும் போது தெரியாத அவனின் கம்பீரம் அவன் பிடிக்குள் சிக்குண்ட போது மிரட்டியது.

பூட்டிய கணத்தில் அவன் கையின் இறுக்கம் விலக அத்தனை நேர தவிப்பினால் ஏற்பட்ட கோபம் அவள் அவன் மீது கை ஓங்கி கொண்டு அடிக்கப் போனாள். ஆதித்தியா அவளின் செயலை எதிர்பார்த்தவன் போல் நிற்க ஓங்கிய கைக்கு அடிக்க மனமில்லாமல் இறங்கிப் போனது.

“ஏன் நிறுத்திட்ட… அடிடீ என் கலியுக கண்ணகி” என்றான்.

விந்தியா அவனிடம் போராட சக்தியில்லாமல் தரையில் அமர்ந்து தலையில் கை வைத்துக் கொள்ள அவளின் இயலாமை அவனுக்குப் பரிதாபமாய் இருந்தது. ஆனால் அவளைப் போகட்டும் என்று அனுப்பவும் மனசு வரவில்லை. எத்தனை முறை அவனை வேதனையுற பார்த்திருப்பாள்.

இம்முறை அனுபவிக்கட்டும் என மனதில் எண்ணிக் கொண்டே மீண்டும் ஐஸ்ஸை எடுத்துக் கொண்டு வந்து அவளருகில் தரையிலேயே உட்கார்ந்தான்.

அவன் மீதுள்ள கோபத்தில் வேண்டாமென தள்ள ஆதித்தியா கோபமாய் பார்த்த பார்வையில் அவனிடம் காயம்பட்ட கையினைக் காண்பித்தாள்.

“உன்னைப் பார்த்ததுமே நீ திரும்பியும் என்னை பார்க்கத்தான் வந்திருக்கியோனு நினைச்சேன்… ஆனா என்னை ஏமாத்திறதுல உனக்கு அப்படி ஒரு சந்தோஷம் இல்ல?”

ஆதித்தியா அவளைப் பார்த்துக் கொண்டே காயத்தின் மீது ஐஸ் தடவ அது கரைந்து கொண்டே போனது. ஆனால் விந்தியாவின் மனம் துளி கூடக் கரையவில்லை.

“என்னைப் போக விடுவீங்களா, மாட்டீங்களா ஆதி?” என்று கண்களில் நிரம்பிய கோபத்தோடு அவனைப் பார்த்தாள்.

“சரி போ” என்று எழுந்து நின்று கொண்டு சாவியை நீட்ட அதை வாங்க அவள் எழுந்திருக்கும் போது மீண்டும் சாவியை மறைத்தான்.

“ஆதித்தியா… யூ ஆர் சீட்டிங் மீ”

“நீ கூடத்தான் ஏமாத்திட்டு ஓட பாத்த”

“ஓகே ஃபைன்… இந்த பேக்கில என்ன இருக்குனு தெரிஞ்சிக்கணும்? இந்தாங்க செக் பண்ணிக்கோங்க… இல்ல நீங்களே கூட வைச்சுக்கோங்க… என்னை வெளிய விடுங்க ஆதி” பேக்கை நீட்டினாள்.

ஆதித்தியா கலகலவென சிரித்து விட்டு அந்த பேக்கை விசிறி சோபாவின் மீது எறிந்தான்.

“அந்தப் பேக்குக்காகவா உன்கிட்ட இவ்வளவு நேரம் போராடிட்டிருக்கேன்?”

“தென் வாட் எல்ஸ்… என்கிட்ட வேற எதுவும் இல்ல”

“நீ இருக்கியே மை டார்லிங்”

“அப்படினா?”

“நீதான்டி வேணும்… நீ மட்டும்தான் வேணும்… ஒவ்வொரு முறை நீ எனக்கு ஏற்படுத்தின காயங்களுக்கு மருந்தா வேணும்”

“சந்தர்ப்பத்தை சாதகமா பயன்படுத்திக்கப் பார்க்கிறீங்களா? உங்க கண்ணியத்தை தான் நான் அதிகமா நேசிக்கிறேன்… அதைக் கலங்கப்படுத்தாதீங்க”

“நான் கண்ணியமானவனா? அப்படினு யார் சொன்னது? நான் ஒரு பொறுக்கி… ஒழுக்கம் இல்லாதவன்… கேத்ரீனை அடைய ஆசைப்பட்டு மாடியிலிருந்து விழ காரணமானவன்… காமப் பிசாசு… இன்னும் எத்தனையோ… இப்படித்தான் ஊரே சொல்லுது”

“அப்படி நான் சொல்லலியே… அதை எல்லாம் நான் நம்பவும் மாட்டேன்… எத்தனை ஆயிரம் பேர் பொய் சொன்னாலும், அதைத் தாண்டி ஒரு நாள் உண்மை தெரிய வரும் ஆதி”

“எப்போ… இந்த அவமானத்திற்கு எல்லாம் பிறகா?”

“ஜஸ்ட் லீவ் இட்… யார் நம்பினாலும் நம்பாட்டியும் நான் உங்கள நம்பிறேன் ஆதித்தியா “

“அதனாலதான் உன்னை நான் ரொம்ப நேசிக்கிறேன்… இந்த உறவு எனக்கு நிலைக்கணும்… டில் மை டெத். அதனால நீ எனக்கு வேணும்”

“நான் உங்கள நம்பினதுக்கு, இது எனக்கு நீங்க கொடுக்கிற தண்டனையா?”

“நம்புற… ஆனா புரிஞ்சிக்கவே மாட்டற… சின்னதாய் நடக்கிற சண்டைக்குக் கூட என்னை விட்டு நீ விலகி போயிடுறியா? என்னை நீ நேசிச்சதை விடக் காயப்படுத்தினதுதான்டி அதிகம்”

“ஒத்துக்கிறேன்… உங்களுக்கு வலிக்குமேனு யோசிக்காம நான் உங்கள ரொம்பக் காயப்படுத்திருக்கேன்… நான் இனிமே புரிஞ்சு நடந்துக்கிறேன்… கொஞ்ச நாள் பொறுமையா இருங்க ஆதி. இந்தப் பிரச்சனை எல்லாம் முடியட்டுமே”

“எனக்கு இந்தப் பிரச்சனை முடியும்னு தோணல விந்தியா.  நாளைக்கு மரணமே ஆனாலும் இந்த மொமன்ட் நான் உன்னோட வாழணும்…”

“இந்தப் பிரச்சனை முடியாதுன்னு யார் சொன்னது? ஐம் தேர் வித் யூ.  நான் இருக்கும் போது உங்களுக்கு எதுவும் வரவிடமாட்டேன்… என்னை நீங்க நம்புங்க ஆதி பிளீஸ்”

“நான் உன்னை நம்பபுறேன்டி… அதே நம்பிக்கையை நீ என் மேல வைக்கமாட்டியா?”

இதற்கு மேல் அவனிடம் என்ன சொல்வது? எப்படிப் புரிய வைப்பது?

“உன் திமிரும் கர்வமும் உன்னை இறங்கி வர விட மாட்டேங்குது… இல்ல?” என்றான் மெளனமாய் இருக்கும் விந்தியாவைப் பார்த்து.

“நான் என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி ஜடம் மாதிரி வாழ்ந்திட்டிருந்தேன். எனக்கு திரும்பியும் உணர்வுகளைக் கொடுத்ததே நீங்கதான். அதை நீங்களே பறிக்கப் பார்க்கிறீங்களே! வானத்தில் திடீர்னு ஏற்படுற வானவில் மாதிரி தோணணும் ஆதி… புயலுக்கும் மழைக்கும் இடையில் இன்ஸ்டன்ட் வொர்க் அவுட்… புரிஞ்சுக்கோங்க”

“நீ என்னைப் புரிஞ்சிக்கோ. மறுபடியும் மறுபடியும் உன்னைக் கெஞ்சிக்கிட்டு உன் திமிருக்கு முன்னாடி என்னால தலைவணங்கி போக முடியாது. ஆம்பளன்ற அந்த ஈகோவை நீ சீண்டி பார்க்கிற… இதான் பைஃனல்” என்று சொல்லிவிட்டு ஒரு பூமாலை தாங்குவது போல் தூக்கி கொண்டான்.

அவன் படுக்கையின் மீது அவளைப் படுக்க வைக்கும் போது விந்தியாவின் கண்களில் நீர் வழிந்தது.

“என்கிட்ட நீங்க சம்மதம் கேட்கல… உங்க விருப்பத்தை என் மேல திணிக்கிறீங்க”

“ஆமாம்… எனக்கு வேற வழி தெரியல. இப்ப கூட என்னைத் தடுக்கவும் உதறித் தள்ளவும் உன்னால முடியும்… உனக்கு அந்த கட்ஸூம் திமிரும் இருக்கு. ஆனா என்னை நீ தடுக்கல… இந்த லவ் போதும்… எவ்ரித்திங் வில் வொர்க் அவுட்”

அதற்கு மேல் அவர்களுக்கு இடையில் எந்த வித வாக்குவாதமும் நடக்கவில்லை. அதற்கான வாய்ப்பை ஆதித்தியா விந்தியாவிற்கு தரவும் இல்லை.

கடந்து போகும் ஒவ்வொரு கணமும் அவள் காதல் கரைந்து கொண்டே போனது. அவள் பார்த்து பார்த்து ரசித்த அவனின் கண்ணியம் கலங்கப்பட்டது. அவள் இத்தனை காலமாய் தேக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் ஒரே நாளில் மடையை உடைத்து பெருக்கெடுத்த வெள்ளமாய் வற்றிப் போனது.

உயிருக்கு உயிராக நேசித்த காதலியின் மீதான உரிமை என அவன் நினைத்தது… அந்த அழகான உறவையே சிதைக்கப் போகிறது.

வானிலிருந்து வீழ்ந்த மழைத்துளி சேற்றில் கலப்பது போல ஆதித்தியா விந்தியாவின் மனதில் தரம் தாழ்ந்து போனான்.

32

விந்தையானவள்

தன் அறையின் படுக்கை மீது அப்படியே சிலை போலவே அமர்ந்திருந்தாள். கருமை அடர்ந்திருந்த விழிகள் பார்ப்பவர்களையும் கூடச் சோகத்தில் ஆழ்த்தும் அளவிற்கு வேதனை நிரம்பியிருந்தது. வீட்டில் உள்ள எல்லோருக்குமே அவளின் வருத்தம் புரிந்தாலும், அதற்கான காரணம் தெரிந்திருக்கவில்லை.

அனைவரும் மாறி மாறி சொன்ன சமாதனங்கள் அவள் காதுக்கு எட்டியதே தவிர மூளைக்கு எட்டவில்லை. தான் அவன் முன்னே, ஒவ்வொரு முறையும் பலவீனமாய் மாறிவிடுவது ஏன் என்று எண்ணிய போதே, அவளுக்கு அவள் மீதே வெறுப்பும் கோபமும் உண்டானது.

ஆதித்தியா தான் செய்த செயலுக்கு இனி எந்த ஒரு நியாயம் கற்பித்தாலும் அதெல்லாம் அவள் முன்னே எடுபட வாய்ப்பில்லை. இனி வரும் ஆதியுடனான அத்தியாயங்கள் கசந்து போனதாகவே இருக்கப் போகின்றன.

இந்நிலையில் விந்தியாவைப் பார்க்க சிவா வீட்டிற்கு வர,

“அக்கா ரொம்ப அப்செட்டா இருக்கா மாமா… என்னன்னு எதுவும் சொல்ல மாட்டிறா…” என்று வருண் கூறினான்.

எந்த நிலையில் இருக்கிறாளோ என்று குழப்பத்தோடு அவளின் அறைக்கதவை தட்டிவிட்டு திறந்தவன், உள்ளே எங்குமே அவளைக் காணாமல் விழித்தான். விந்தியா தன்னை இந்தக் கவலையில் இருந்து மீட்டுக்கொள்ள எண்ணி முகத்தை அலம்பி விட்டு துடைத்துக் கொண்டே குளியலறையிலிருந்து வெளியே வந்தாள்.

சிவா “விந்தியா…” என்று அழைத்ததும் அவனைப் பார்த்த விந்தியாவிற்கு மீண்டும் மறக்க நினைத்த விஷயங்கள் ஞாபகத்திற்கு வந்தது.

எல்லாவற்றிக்கும் இவன்தான் காரணம் என்று எண்ணி கோபம் கொண்டவளாய் வாயில் வந்த வார்த்தைகளால் திட்டி கையில் கிடைத்த பொருட்களை அவன் மீது எறிந்தாள்.

“நிறுத்துடீ… உன் தம்பி நீ அப்செட்டா இருக்கனு சொன்னான்… பைத்தியம் பிடிச்சிடுச்சுன்னு சொல்லவே இல்லையே” என்று சொல்லிக் கொண்டே அவள் எறிந்த பொருட்களின் தாக்குதலில் இருந்து லாவகமாகத் தப்பித்துக் கொண்டான்.

“ஆமான்டா பைத்தியம்தான்” என்று சொல்லி பெரிய பொம்மையை எடுத்து தூக்கி வீச அவன் தலைக்குக் குறியாக வந்ததைச் சிவா ஒரு நொடியில் கையில் பிடித்துக் கொண்டான்.

“என்னடி இது? இந்தக் கணம் கணக்குது? கொலை முயற்சினு சொல்லி உள்ள தூக்கி போட்ருவேன்… ஜாக்கிரதை” என்று சிவா மிரட்ட, பெருமூச்சு விட்டு தன் அறையின் படுக்கையில் அமர்ந்தாள்.

“நான் ரெடி… முதல்ல உள்ள தூக்கி போடு” என்றாள்.

“என்னாச்சு?” என்றான் அவள் அருகில் போய் நின்று கொண்டு

“என்கிட்ட பேசாதே… நானும் உன் கூடப் பேசமாட்டேன்…” என்றாள்.

“சரி பேசலன்னா பரவாயில்ல… ஃபோட்டோவை எடுத்துக் கொடு… கிளம்பறேன்” என்றான்.

“அவன் அவனுக்கு அவன் அவனோட வேலைதான் முக்கியம்…” என்று விந்தியா வாய்க்குள் முனக,

சிவா உடனே “யார திட்ற?”

“ம்… என்னத்தான்” என்று சொல்லிக் கொண்டே அறையைச் சுற்றி சுற்றி எதையோ தேடினாள்.

“என்னடி தேடற? என்கிட்ட சொன்னா நானும் தேடுவேன் இல்ல”

“மை ஹேன்ட் பேக்” என்றாள்.

“பொறுப்பே இல்லடி உனக்கு” என்று சொல்லிக் கொண்டே அறை முழுக்கத் தேடினான்.

“மறந்துட்டு வந்துட்டியா விந்து” என்று சிவா கேட்க,

“அதற்கு வாய்ப்பே இல்லை” என்றாள்.

அவளுக்கு நன்றாய் ஞாபகம் இருந்தது. அவள் மனம் நொந்து கிளம்பும் போது ஆதித்தியா அவள் ஹேன்ட் பேக்கை கையில் கொடுத்து,

“இதுதானே உனக்கு வேணும்” என்று சொல்லி கையில் திணித்தான்.

அத்தனை வேதனையிலும் வலியிலும் அந்த பேக்கை எடுத்து வந்தது அவளுக்கு நன்றாய் நினைவிருந்தது.

சிவா “இதுவா?” என்று ஒரு பேக்கை எடுத்துக் காட்டினான்.

“ஆமாம்” என்று சொல்லி அந்த பேக்கினுள் வைத்த ஃபோட்டோவை பார்க்க கூட விருப்மின்றிச் சிவாவிடம் கொடுத்தாள்.

சிவா சில கணங்கள் அந்த ஃபோட்டோவை உற்று பார்த்து விட்டு

“இதுதான் ஆதித்தியாவா ஆளே அடையாளம் தெரியல” என்று ஃபோட்டோவை அவள் முன் நீட்டினான்.

“எனக்குத் தெரியாது… நீயே தேடிக்கோ” என்று அந்த ஃபோட்டோவை தன் முன்னிருந்து அகற்ற, அந்த ஃபோட்டோவில் இருந்த ஒருவனின் முகம் வேறொரு சம்பவத்தை நினைவுப்படுத்தியது.

சிவாவிடம் அந்த ஃபோட்டோவை வாங்கி உற்று பார்த்தவள்…

சிவாவிடம் அந்த முகத்தைக் காண்பித்து, “இவன் யாருன்னு உனக்குத் தெரியுமா சிவா?” என்றாள்.

“தெரியலியே… ஏன் கேக்குற?” என்றான் விந்தியாவை நோக்கி.

“எனக்கு யாருன்னு தெரியாது. பட் இந்த ராஸ்கல்… நான் ஆதியோட பார்ட்டிக்குப் போன போது என்கிட்ட தப்பா நடந்துக்கப் பார்த்தான். எனக்கு என்ன தோணுதுன்னா இவன் அந்த மினிஸ்டர் பையனா இருப்பானோ? பிகாஸ் இவனோட ஆட்டீட்யூட், திமிரெல்லாம் பார்த்தா சேன்ஸ் இருக்கு” என்றாள்.

“நான் விசாரிச்சுப் பாக்குறேன்” என்றான். திடீரென சிவாவிற்கு அவனைப் பார்த்துச் சிரிப்பு வந்தது.

“எதுக்குச் சிவா சிரிச்சே… ?”

“தப்பா நடந்துக்கப் பார்த்தான்னு சொன்னியே… அதான் சிங்கத்தோட வாயில தலையை விட்ட அவன் நிலைமையை நினைச்சேன்… சிரிச்சேன்”

“போடா” என்று அவனிடம் கோபித்துக் கொண்டாள்.

சிவா ஃபோட்டோவை எடுத்துக் கொண்டு புறப்பட நினைத்தவன் மீண்டும் விந்தியாவைப் பார்த்தபடி திரும்பினான்.

“நீ இரண்டு நாளைக்கு வந்து வனிதாவோட இரு” என்றான்.

“எதுக்கு?” என்று விந்தியா கேட்டாள்

“நான் இந்தக் கேஸ் விஷயமா கோவா போறேன்… எனக்கு உடம்பு சரியில்லனு பொய் சொல்லி டிபார்ட்மன்டுக்கு தெரியாம போயிட்டு வரப் போறேன். முக்கியமா வேணு மகாதேவனுக்கு தெரியவே கூடாது. சோ என்னைத் தேடி யார் வந்தாலும் நீதான் சமாளிக்கணும்” என்றான்.

“ஏன் உன் பொண்டாட்டிக்கு பொய் சொல்லவே வராதா?”

“உன் அளவுக்கு வராது… நீதான் சமாளிக்க முடியும்… சீக்கிரம் வந்து சேரு” என்று அதிகாரமாய் சொல்லிவிட்டு புறப்பட்டான்.

தனக்கு எல்லோரையும் சமாளிக்கத் தெரிந்திருந்தால் நேற்று ஏன் தன்னால் ஆதித்தியாவை சமாளிக்க முடியாமல் போனது. முடிந்த வரை விந்தியா இயல்பாய் இருக்க முயற்சி செய்தாள்.

அவள் கண்களில் மட்டும் ஒரு விதமான சோகம் படிந்திருந்தது. வலியோடும் வேதனையோடும் வாழ கற்றுக் கொண்ட பின்னும் இந்தக் கவலை மட்டும் அவளை முழுமையாய் ஆக்கிரமித்துக் கொண்டு சரியாக இயங்க விடாமல் செய்தது.

விந்தியா வனிதா வீட்டிற்குப் புறப்பட்டுக் கொண்டிருக்க வருண் தன்னுடைய ஃபோனிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்திருப்பதாகக் கூறினான்.

மறுமுனையில் சண்முகம் சந்திரகாந்த்தின் உடல் நிலை சரியில்லை என்றும் சாக்ஷி மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகக் கூறினான். விந்தியா பதறிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள்.

சண்முகம் தனியாகக் கலங்கியபடி நின்று கொண்டிருந்தார்.

“என்னாச்சு அண்ணா… நீங்க மட்டும்தான் இருக்கீங்களா?”

“இன்னைக்குக் காலையில் சின்ன ஐயாவுக்கும் பெரிய ஐயாவுக்கும் பயங்கர வாக்குவாதம்… அதைப் பற்றியே யோசிச்சு யோசிச்சு… பெரிய ஐயாவுக்கு ரொம்ப உடம்புக்கு முடியாம போச்சு” என்றார் சண்முகம்.

‘ஆதித்தியாவிற்கு வெறி பிடித்து விட்டதா என்ன?’ என்று எண்ணிக்கொண்டே சீஃப் டாக்டர் அறைக்குச் சென்றாள்.

அவளைப் பார்த்தவுடனே சாக்ஷி மருத்துவமனையின் தலைமை மருத்துவருக்கு அவளை நன்றாக அடையாளம் தெரிந்தது.

“வாங்க ஸ்ட்ராங்க் லேடி…” என்றார். ஏற்கனவே மாதவி இருந்த மருத்துவமனை என்பதால் டாக்டர் ரொம்பவும் பழக்கப்பட்டவராய் இருந்தார்.

“டாக்டர்!… மாமாவுக்கு என்ன பிராப்ளம்”என்றாள்.

அவர் மெலிதான புன்னகையோடு

“வயசாகிட்டாலே இதெல்லாம் சகஜம்தான்… ஆனா என்ன… மனசில தெம்பு இருந்தால் இதெல்லாம் பெரிய நோயே இல்லை “ என்றார்.

“அப்போ குணமாயிடுவாரு இல்ல?”

“என் சைடுலருந்து செய்ய வேண்டியதை முழுமையா செய்றேன்… அட் தி சேம் டைம் ஒரு மருமகளாய் உன் கடமையையும் சரியா செஞ்சாத்தான் சந்திரகாந்த்தை குணமாக்க முடியும்” என்றார்.

விந்தியா புரிந்தும் புரியாமல் தலையாட்டிவிட்டு மீண்டும் சந்திரகாந்த்தின் அறைக்கு வந்தாள்.

அந்த அறைக்குள் சுபா, சமுத்திரன், திருமூர்த்தி மூவரும் நின்றிருந்தனார்.

சுபா அவளைப் பார்த்த மறு கணமே, “ஆதித்தியா அண்ணனை கூட்டிட்டு வந்திருக்கலாமே அண்ணி” என்றாள்.

இந்தக் கேள்விக்கு விந்தியாவிடம் பதில் எதுவும் இல்லை. அவள் மெளனமாய் இருந்ததைப் பார்த்து சுபா மேலும் தொடர்ந்தாள்.

“அங்கிள் … ஆதி அண்ணன் வரலியானு கேட்டுட்டே இருக்காரு அண்ணி “ என்றாள். விந்தியா சந்திரகாந்த்தின் சோர்வடர்ந்த முகத்தைப் பார்த்தாள்.

கண்ணில் நீர் நிரம்பியது. லேசான மயக்க நிலையில் இருந்தவரின் கையைப் பிடிக்க, அவர் எழுந்தவுடன் விந்தியாவின் கையை அழுத்தி பிடித்துக் கொண்டு,

“ஆதியை பார்க்கணும் விந்தியா… அவங்கிட்ட மனசார மன்னிப்பு கேட்கணும்” என்று வேதனையோடு உரைத்தார்.

“நீங்க ஏன் மாமா மன்னிப்பு கேட்கணும்? அதுக்கெல்லாம் அவசியமில்ல…” என்றாள்.

“ஆதியோட பிரச்சனைக்கு நான்தான் காரணம்… நான் அவனைக் கவனிக்காம விட்டதுனாலதான்”

“உங்க அருமை பிள்ளை இப்படி எல்லாம் சொன்னாராக்கும்… உங்களுக்கு மகனா இருக்கவே அவருக்குத் தகுதி இல்ல” என்றாள்.

“எப்படி வேணா இருக்கட்டும். எனக்கு ஏதாவது ஆவதற்கு முன்னாடி நான் ஆதியை பார்க்கணும்… எல்லாப் பிரச்சனையும் மறந்து அவன் என்னை அப்பானு கூப்பிடணும்… எனக்காக இந்த உதவியைச் செய்றியாம்மா?” என்று சந்திரகாந்த் உணர்ச்சி வசப்பட்டுப் பேச… விந்தியா விரும்பாத ஒன்றை சந்திரகாந்த் வரமாய்க் கேட்கிறார்.

வார்த்தைகளின்றி தலையை மட்டும் அசைத்து விட்டு அறைக்கு வெளியே வந்து நின்று கொண்டாள். சிறிது நேரத்திற்கெல்லாம் சுபாவும் திருமூர்த்தியும் அவளிடம் சொல்லிவிட்டு முன்னே போக, சமுத்திரன் மட்டும் அவளின் எதிரே நின்றபடி அந்தத் தவிப்பையும் சோகத்தையும் உள்ளூர ரசித்தான்.

“ச்சோ… ச்சோ… பாவமாய் இருக்கு உன்னைப் பார்த்தா… உன் மாமானாரோட கடைசி ஆசையை உன்னால நிறைவேற்றவே முடியாதே…

ஆதியை நீ நல்லாவே கைக்குள்ள போட்டு வைச்சிருக்கலாம்… நீ எது சொன்னாலும் செய்யலாம்… ஆனா இந்த விஷயத்தில் மட்டும் ஆதி இறங்கி வரவே மாட்டான். ரொம்பக் கஷ்டம்… உன்னால இது மட்டும் முடியவே முடியாது” என்றான்.

துவண்டுக்கிடந்த விந்தியா நிமிர்ந்து பார்த்தாள்.

“கெட்ட எண்ணத்தோட அப்பாவையும் பிள்ளையையும் இத்தனை காலமாய்ப் பிரிச்சு வைச்சிருக்க உன்னால முடியும்னா நல்ல எண்ணத்தோட அவங்களைச் சேர்த்து வைக்க என்னால முடியாதா?”

“நானா பிரிச்சு வைச்சேன்?“

“வேறு யாரு… நீதான்… உன் சுயநலத்துக்காக இப்படி ஒரு காரியத்தைப் பண்ணிருக்கியே… வெட்கமா இல்லை உனக்கு?”

“வேண்டாம் விந்தியா “

“என்ன சமுத்திரன்… உண்மை கசக்குதோ? இன்னமும் சொல்றேன் கேளு… ஹோட்டல் ஆதித்தியாதான் உன்னோட மோட்டிவ். மாமாக்கிட்ட நீ நல்ல பேர் வாங்கிட்டு… ஆதியை தப்பானவன் மாதிரி காட்டின… அப்படியே வாரிசாயிடலாம்னு கனவு கண்ட… உன்னோட பேட் லக்… நான் இந்த வீட்டுக்கு மருமகளா வந்தேன்…

என்மேல இருந்த நம்பிக்கையால ஹோட்டல் பொறுப்பை மாமா என்கிட்ட கொடுத்ததை உன்னால தாங்கிக்க முடியல… என்னை விரட்ட நீ என்னல்லாம் பிளான் போட்ட… சோ சேட்… நான்தான் உன்னைப் பாத்து பாவப்படனும்… நீ நினைச்சது எதுவும் நடக்கல”

சமுத்திரனுக்கு அதிர்ச்சி தாங்க முடியயவில்லை. தன் மனைவி கூட யூகிக்க முடியாத தன் எண்ணத்தை எப்படி தெரிந்து கொண்டிருப்பாள் என்று புரியாமல் நின்றான்.

“இன்னமும் சொல்றேன் கேட்டுட்டு போ சமுத்திரன். ஆதி இங்க வருவார் தன்னோட அப்பாகிட்ட பேசுவார்… உன்னால என்ன கிழிக்க முடியுமோ கிழிச்சுக்கோ…

அடுத்தவங்க பிச்சை போட்டு வளர்ந்த உனக்கே இவ்வளவு திமிருன்னா… சுயமா வளர்ந்த எனக்கு எவ்வளவு இருக்கும்? இனிமேயாவது என்கிட்ட உன் வாய் சவடாலை காட்டாதே” என்று சொல்லிவிட்டு சந்திரகாந்த் இருந்த அறைக்குள் சென்றாள்.

விந்தியா ஏற்கனவே கோபத்தோடு இருந்த நிலையில் சமுத்திரன் அவளிடம் வகையாக வந்து சிக்கி கொண்டான்.