km12

km12

ரகுவை கோவிலிலிருந்து காரில் அழைத்து வந்தனர். சொந்தங்கள் அனைத்தும் சீர் வரிசையுடன் பேசியபடி கூட நடந்து வர, சிறு குழந்தைகளை அருகில் அமர வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ரகு.

அர்விந்த் பக்கத்தில் சேர்ந்து நடந்து வந்தான்.

“என்ன டா இது அரவிந்தா..இப்படி ஊர்வலம் போறோம் இந்தக் காலத்துல. ரோட்ல போறவன் எல்லாம் ஒரு மாதிரி பாக்கறான் டா” உட்கார முடியாமல் தவித்தபடி ரகு புலம்ப,

“ஆடு தெரியுமா அதை பலி கொடுக்கறத்துக்கு முன்னாடி இப்படித் தான் மாலை போட்டு அழைச்சுட்டு போவாங்க.இப்போ அது உனக்கு நடக்குது.” நக்கலடிக்க,

“டேய்! உனக்கு நடக்கும்ல அப்போ இதே டையலாக் திரும்பி வரும் பாத்துக்கோ!” எரிச்சலுற்றான்.

“திரும்பி வந்தாலும் சரி நேரா வந்தாலும் சரி நமக்கு பொண்ணு குடுத்தா போதும்ங்கற கேடகரி நானு” காலரை அர்விந்த் தூக்கி விட்டுக் கொண்டான்.

தலையில் அடித்துக் கொண்டான் ரகு.

“சரி சரி … எல்லாரும் பாக்கறா. இந்த மாதிரி பண்ணாத” அர்விந்த் முனுமுனுக்க, அவனையே வெகு நேரமாக கவனித்துக் கொண்டு வந்தாள் வைஷு.

பப்பி பாட்டியும் வைஷுவின் அருகில் வர,

“பாட்டி என்ன ரொம்ப சாந்தமா இருக்க, அந்த பங்கஜம் ஓவர் சீன் போடறாளே! இத எடுத்து வைங்கோ அத செய்யுங்கோ ன்னு அதிகாரம் பண்றா. நீ பாத்துண்டு இருக்க” முகம் கடுகடுக்க வைஷு கேட்டாள்.

“என்ன நெனச்சுண்டு இருக்க, நீ தான் அப்பப்ப பக்கத்துல இல்லாம போய்டற.நான் பதிலடி கொடுத்துண்டு தான் இருக்கேன்.”

“நான் எங்கயும் போகல. இங்க தான் இருக்கேன்” தூரத்தில் தெரிந்த அரவிந்தை முறைத்துக் கொண்டே வந்தாள். எங்கோ கூட்டத்தில் அவளை அந்தக் கணமே கண்டான் அர்விந்த்.

“திங்க் ஆப் டெவில். கொரங்கு” முனுமுனுத்தாள்.

“நீ என்கூட இருந்து அந்த கூத்தெல்லாம் பாரு.” பப்பி பாட்டி சொல்ல,

“சரி வா நாம இந்த ஊர்வலத்தோட போனா லேட் ஆகும். முன்னாடி போய்டுவோம்” வைஷு பப்பியை அழைத்துக் கொண்டு சென்றாள்.

அரவிந்த் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டான்.

“என்ன டா வைஷு உன்ன பார்த்துட்டு கெளம்பறா. அவ கிட்ட வம்பு பண்றியா?” ரகு சந்தேகமாகக் கேட்க,

“யாரு நானா?  அவ தான் ..” சொல்ல ஆரம்பித்தவன் வாயை மூடிக் கொண்டான்.

“என்ன டா ? அவ ..?ஏதோ சொல்ல வந்த?” ரகு புருவத்தை சுருக்கி அவனிடம் கேட்க,

“ஒண்ணுமில்ல..விடு”

“ஏதோ நடக்குது ஆனா சொல்ல மாட்டேங்கற”

“டேய் அர்விந்த்…” அருகில் ஒரு வந்து பேச,

அத்தோடு முடிந்தது அந்த உரையாடல். ரகுவுக்கும் அதன் பிறகு மண்டபம் நெருங்கி விட, வேறொன்றும் கேட்க முடியவில்லை.

மண்டப வாசலில் அனு நின்றிருந்தாள். அவளையும் மாப்பிள்ளை முன் வர வைத்து இருவரையும் ஒன்றாக உள்ளே அழைத்துச் சென்றனர்.

                   

அனுவிற்கு கல்யாணப் பெண்ணின் நாணம் குடிகொள்ள, அவள் மேலும் அழகானாள்.

அந்த அழகு ரகுவை வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் போகச் செய்தது.

கழுத்தில் இருந்த மாலை நீண்டு தொங்க, அதன் மறைவில் அவளது கையைப் பிடித்தான்.

“சும்மா இருங்கோ” அனு அவன் கையை விலக்கப் பார்க்க,

“ம்ம் சும்மா தான் இருக்கேன்.அதுனால தான் கையாவது பிடிச்சுக்கறேன்” கிசுகிசுத்தான்.

“கொழந்தேள் பக்கத்துல இருக்கா. பாத்தா என்ன நினைப்பா?”
“இந்தக் காலத்து குழந்தைகளுக்கு கூட உன்னை விட நெறய விஷயம் தெரியும். அது உனக்குத் தெரியுமா?”

“ஆமா. நேக்கு ஒன்னும் தெரியாது.” லேசாகச் சினுங்க,

“அது தான் எனக்கு பிடிச்சிருக்கு” அவளை பார்த்து யாரும் அறியாமல் கண்ணடித்து, கையை இன்னும் இருக்கமாகப் பற்ற,

மீண்டும் கன்னம் சிவந்தாள் அனு.

 

****

 

ஜானவசத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். பிள்ளைகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருக்க, பெரியவர்கள் ஆங்காங்கே அமர்ந்து கதை பேசிக் கொண்டு இருக்க,
பப்பி பாட்டியும் வச்சுவும் சீர் கொடுக்கும் பாத்திரங்களை அடுக்கிக்கொண்டிருந்தனர்.

குத்துவிளக்கு , காமாட்சி விளக்கு முதல் பூஜைக்கு வேண்டிய அனைத்தும் முன் வரிசையில் வைத்து , வெள்ளிக்குடம்,பித்தளைக் குடம் , தவளை , அண்டா குண்டா, வெண்கலப் பானை முதலியனவும் , வெள்ளித் தட்டு வெள்ளி லோட்டா , டபரா சொம்பு ஆகியவையும் அடக்கம். அத்துடன் சமைக்கும் பாத்திரங்கள் , புதிய குக்கர், மிக்ஸி , கிரைண்டர் என சகலமும் புதிதாக வாங்கி வைத்திருந்தார் வச்சு.

 

பப்பி பாட்டி வரிசைப் படுத்தி வைக்க, வச்சு,
“அம்மா நான் பொய் அந்த மாமிய கூட்டிண்டு வந்து காட்டிடட்டுமா?” எனக் கேட்க,

“இதோ பாரு டீ, அந்த மாமிய மாத்திரம் கூட்டிண்டு வராத, கூட அவா நாத்தனார் அப்புறம் இன்னொருத்தரையும் சேர்த்து அழைச்சுண்டு வா” சொல்லியே அனுப்பினாள்.

போகும் அவசரத்தில் சரியாக காதில் வாங்காமல் வச்சு சென்று விட,
அங்கே பங்கஜம் தங்களுக்கென கொடுக்கப் பட்டிருந்த அறையில் மறுநாளுக்கு வேண்டிய வற்றை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

“மாமி!” வச்சு அழைத்தபடி உள்ளே செல்ல,

“வாங்கோ! என்ன சமாச்சாரம்” முகத்தில் மறந்தும் சிரிப்பில்லை.

“சீர் பாத்திரம் மத்ததெல்லாம் வந்து பாக்கறேளா?!” பொறுமையாகக் கேட்டாள் வச்சு.

உடனே பங்கஜம் போட்டது போடப்படி எழுந்து வந்தாள். அந்த நேரம் அலமு உள்ளே வர,

“அலமு நீ இங்க எல்லாத்தையும் எடுத்து வை. நான் மாமியோட செத்த போயிட்டு வரேன்” பதிலுக்காக நிற்காமல் சென்று விட்டாள்.

பங்கஜமும் வச்சுவும் ஒன்றாக சீர் அடுக்கப்பட்ட அறைக்குச் செல்ல, தூரத்தில் நின்றிருந்த வைஷு அதைக் கண்டாள். வச்சுவை நிச்சயம் ஏதாவது சொல்வாள் பங்கஜம் என நினைத்து வைஷு அவர்களை நோக்கி வேகமாக ஓடிச் சென்றாள்.

அத்தனை நேரம் அவளை ஜாடையால் வம்பிழுத்துக் கொண்டிருந்த அர்விந்த் , ரகுவிடம் வந்துவிடுவதாக சொல்லிவிட்டு தனியாக மாட்டுவாளா என எழுந்து ஓடினான்.

வழியில் ரெண்டு மூன்று பேர் பேசப் பிடித்துக் கொள்ள , பங்கஜம் அவர்களிடம் நின்று நின்று பேசி வந்து கொண்டிருந்தாள். அதற்குள் வைஷு அவர்கள் செல்லுமிடத்தை கவனித்து அங்கே செல்ல, பப்பி பாட்டி மட்டும் சீர் பட்ஷணங்களையும் அடுக்கிக் கொண்டிருந்தாள்.

“என்ன பப்பி, அம்மா அந்த அல்டாப்பிய கூட்டிண்டு வந்ததுண்டு இருக்கா?” ரகசியமாக கேட்க,

“என்னது? அவளை மட்டுமா கூட்டிண்டு வரா? இன்னும் அவா ஆத்து மனுஷா ரெண்டு பேரை சேர்த்து கூட்டிண்டு வான்னு சொல்லிருந்தேன். சீர் காட்ட வேண்டாமா? இவை மட்டும் வந்தா அது இல்ல இது இல்ல ன்னு குறை சொல்லுவா. அதுனால சொன்னேன். உங்க அம்மா காதுல வாங்காம அவளை மட்டும் அழைச்சுண்டு வராளே, கடவுளே!”

“இரு நான் போய் வேற யாரையாவது கூட்டிண்டு வரேன்” அவள் அவசரமாக வெளியேறினாள்.

அதற்குள் வச்சு பங்கஜத்துடன் உள்ளே நுழைய, பப்பி பாட்டி அனைத்தையும் காட்டினாள்.”இதென்ன குடம் சின்னதா இருக்கு? சாம்பார் வாளியை காணுமே!” இடுப்பில் காய் வைத்துக் கொண்டு பங்கஜம் சொல்ல ஆரம்பிக்க,

“உங்காத்துல இன்னும் குடத்துல தான் தண்ணி புடிச்சு வெச்சுக்கறேளா?” பப்பி நக்கலாக கேட்டாள்.

“இல்லையே! எங்காத்துல ஆர் ஓ போட்ருக்கோம். பியூரிஃபைட் வாட்டர்”

“அப்பறம் என்னத்துக்கு குடம். ஏதோ சாஸ்ரத்துக்கு வெச்சா போறாதோ!” அவளை வைத்தே மடக்கினாள் பாட்டி.

“இந்தக் காலத்துல யார் குடம் யூஸ் பண்றா..” தன போக்கில் பேசிக்கொண்டார்.பங்கஜத்திற்கு கோபம் வரவே செய்தது. இருந்தாலும் மற்ற விஷயங்களைப் பார்க்க முயன்றாள்.

வெளியே வைஷ்ணவி ரகுவின் அத்தை அலமுவை தேடச் சென்றாள். அவள் அப்போது தான் அறையை பூட்டிக் கொண்டு வெளியே சென்றிருந்தாள். வேறு யாரும் கிடைக்கிறார்களா என்று பார்க்க, வேறு எவரையும் வைஷுவுக்குத் தெரியவில்லை.

அவள் அங்குமிங்கும் சுற்றுவதைப் பார்த்த அர்விந்த் , என்ன தேடுகிறாள் என்று அவளிடமே கேட்க வந்தான்.

“என்ன மேடம் தேடறீங்க?” பின்னால் வந்து நின்றான்.

கடுப்பானாலும் அந்த நேரம் அவனைத் தவிர வேறு யாரும் உதவ முடியாது என்பதை அறிந்தாள். உடனே அவனிடம், “உங்க நெருங்கின சொந்தக் காரா யாரையாவது கூப்ட முடியுமா?” முகத்தை கெத்தாகவே வைத்துக் கொண்டு கேட்டாள்.

“எதுக்கு? என்ன விஷயம் சொல்லு?” விளையாடாமல் அவனும் கேட்க,

‘இவனிடமே இவன் அம்மாவைப் பற்றி எப்படி சொல்வது’ என தயங்கினாள். பிறகு இவனிடம் சொன்னால் என்ன என்று மறுபுறம் தோன்ற,

“உங்க அம்மாவ சீர் பாத்திரம் காட்ட கூப்டோம். அதான் கூட வேற ஒருத்தர் இருக்கலாம்னு பாட்டி கூட்டிண்டு வரச் சொன்னா!” ஒருவழியாக சொல்லிவிட்டாள்.

“என்ன! இதெல்லாம் எனக்கும் புடிக்காது ரகுக்கும் பிடிக்காது. எதுக்கு இதெல்லாம் பண்றீங்க? ” அவன் கோபமாக கேட்டான்.

முதல் முறையாக அவன் பேசியதைக் கேட்டு, ஒரு நல்ல அபிப்பிராயம் அவன் மேல் தோன்றியது வைஷுவுக்கு. இருந்தும் “இப்போது ஆள் வேண்டுமே! யாராவது வரச் சொல்லுங்க” என்றாள்.

“இப்போ தான சொன்னேன். நானே வரேன் வா!” என அவளுக்கு முன்னாள் விறு விறுவென நடந்தான்.

ஓட்டமும் நடையுமா அவன் பின்னே சென்றாள். 

“நீ இங்கயே இரு” அவளை அங்கேயே நிறுத்தினான்.
“ஏன்?” கோபம் வர,

“சொன்னா கேளு. எல்லாம் தெரிஞ்ச மாதிரி. நீ வந்தா எங்க அம்மாக்கு டவுட் வராதா! ” ஒரே வாரியில் அவளை அடக்கி விட்டான்.

அவளும் வாசலில் நின்றாள்.

அவன் அந்த அறையை அடைந்ததும் , வச்சு “வாப் பா ” என்றாள்.

பங்கஜம் சரியாக “என்ன ஒரு சொம்பு வெச்சிருக்கேள். சாந்தி முகூர்த்தத்துக்கு ஒன்னு தனியா வாங்க வேண்டாமோ! “

“அதுக்கும் வாங்கிருக்கோம். இதோ இருக்கு பாருங்கோ!” வச்சு காட்ட,
“இது நான் குழந்தைக்கு போட்டுற பால் கிண்ணின்னு நெனச்சேன்.”நக்கலடிக்க,

இதைப் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் அர்விந்த்.
“என்ன மா பண்ணிண்டு இருக்க?” குரல் அழுத்தமாக ஒலித்தது.

பங்கஜம் உள்ளே அதிர்ந்தாலும் காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.

“சீர் பாத்திரம் டா கிச்சா. இது பாரு ” என பேச்சை மாற்றி சாதாரணமாக இருக்க முயல,

அவருக்கு அருகில் சென்று , “இது ரகுக்கு தெரியுமா?” மெதுவாகக் கேட்க,

“டேய் என்ன டா. நானா ஒன்னும் கேட்கல. அவளா காட்டறா அதை தான் பாத்தேன்” அவளும் முணுமுணுக்க

“நீ பாக்க வந்த மாதிரி தெரியலையே! இது சரி இல்ல அது சரி இல்லன்னு சொல்லிண்டு இருக்க..” பல்கலைக் கடித்துக் கொண்டு முறைத்தான் .

“இப்போ என்ன டா பண்ண சொல்ற” அதற்கு மேல் மகனிடம் மல்லுக்கு நிற்க முடியாமல் சொல்ல,

“எல்லாம் நன்னா இருக்குன்னு சொல்லிட்டு கெளம்பு”

“சேரி டா. உங்களுக்கெல்லாம் நல்லது பண்ணத் தான்..”

“கெளம்புறியா” முடித்துவிட்டான்.

பப்பியிடம் திரும்பி,

“எல்லாம் நன்னா இருக்கு மாமி. உங்க பொண்ணுக்கு செய்யறேள். நான் என்னத்த சொல்லிட போறேன். வரேன் மாமி. காத்தால முகூர்த்தத்துக்கு நாழி ஆயிடும். செத்த கண்ண மூடி எழுந்தா தான் சௌரியமா இருக்கும். வரேன்” என அவசரமாக சொல்லிவிட்டு கிளம்பினாள்.

அவள் என்றதும் அர்விந்த் பப்பியிடமும் வச்சுவிடமும்,

“நீங்க எங்க அம்மா பேசினதை மனசுல வெச்சுக்காதீங்கோ. எதுவா இருந்தாலும் என்கிட்டே நீங்க தாராளமா சொல்லலாம். என்ன உதவி வேணும்னாலும் கேளுங்கோ.” சிரித்துக் கொண்டே கிளம்பினான்.

பப்பிக்கு அவனை மிகவும் பிடித்து விட்டது. வச்சு ஏற்கனவே அவனை நல்ல பையன் என செர்டிபிகட் கொடுத்தவள் தான்.

இவை அனைத்தையும் வாசலில் நின்று கேட்ட வைஷு தான் அவனது இந்த முகத்தைக் கண்டு அசந்து நின்று விட்டாள்.

அர்விந்துக்கு இப்படி ஒரு குணம் உண்டா!

வைஷுவுக்கு அவனை புதியவனாக பார்க்க தோன்றியது. வெளியே அவன் வந்ததும் நன்றி சொல்ல நினைத்தவள் அவன் அருகில் வர மீண்டும் படபடப்புடன் நின்றாள்.

அவன் “தேங்க்ஸ் பேபி” என்றுவிட்டு கண்ணசைவில் விடை பெற்றுச் சென்றான்.

 

 

error: Content is protected !!