Kannaadi Maaligai – 7

Kannaadi Maaligai – 7

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  7

விஜயேந்திரன் அவன் அறிந்த செய்தியிலிருந்து அடைந்த அதிர்ச்சியிலிருந்து மீள, சற்று அவகாசம் கொடுத்து நாம் சென்னை நோக்கி பயணிப்போம்.

அலுவலகத்தில் கீர்த்தனா தன் வேலையில் மூழ்க முயற்சித்து முடியாமல் தோற்றுப் போனாள். “விஜயேந்திரன்…” என்று மெல்ல முணுமுணுத்தாள்.  ‘விஜய் இல்லைனா இந்திரன்…’ என்று விஜயேந்திரன் கூறியது நினைவு வர, கீர்த்தனா வெட்கப்பட்டுப் புன்னகைத்தாள்.

‘எல்லாரும் விஜய்ன்னு தானே சொல்றாங்க. நாம்ம இந்திரன்னு கூப்பிடுவோம்.’ என்று எண்ணியபடி தன் அருகே உள்ள பேனாவைச் சுழற்றினாள் கீர்த்தனா.

“கீர்த்தனா… கீர்த்தனா…கீர்த்தனா… கீர்த்தனா…” என்று பல முறை கீர்த்தனாவின் தோழி அழைத்தும் கீர்த்தனா திரும்பாமல் போக, அவளை உலுக்கி எழுப்பினாள் அவள் தோழி.

கீர்த்தனா திருதிருவென்று முழிக்க, “என்ன கீர்த்தனா இப்படி ஆபிசில்  முழிச்சிகிட்டே தூங்கற?” என்று அவள் தோழி கடுப்பாகக் கேட்க, “அ….” என்று கீர்த்தனா தடுமாறினாள்.

“விளங்கிரும். எம்.டீ. சார் ஏன் இன்னும் வரலைன்னு தெரியுமா?” என்று கீர்த்தனாவின் தோழி கேட்க, “தெரியலை…” என்று உதட்டைப் பிதுக்கினாள் கீர்த்தனா.

தோழிக்குப் பதிலளித்தாலும், ‘என்ன ஆச்சு? முகுந்தன் கால் கூட எடுக்கலையே!’ என்று கீர்த்தனா சிந்திக்க ஆரம்பித்தாள்.

அதே நேரம், முகுந்தன் பைக்கை வேகமாகச் செலுத்த, நிரஞ்சனா சாலையை வெறித்துப் பார்த்தபடி அவன் பின்னே அமர்ந்திருந்தாள்.  நிரஞ்சனா வீட்டில் கிளம்பிய எதிர்ப்பிற்கு சிறிதும் குறையாத எதிர்ப்பு முகுந்தனின் வீட்டிலும் கிளம்பியிருப்பது இருவரின் முகத்திலும் தெரிகிறது.

‘உங்க பணம், உங்க பிசினெஸ்,  நீங்க வாங்கி கொடுத்த கார், இப்படி எதுவுமே எனக்கு வேண்டாம். என் சொந்த காசில் நான் வாங்கிய பைக், என் படிப்பு இதை வைத்து நான் என் வாழ்க்கையை பாத்துக்குறேன்.’ என்று பெற்றோரின் கோபத்திற்கு எதிராக, முகுந்தனும் எதிர்த்துப் பேசியதை எண்ணியபடி பைக்கில் மெளனமாக அமர்ந்திருந்தாள்  நிரஞ்சனா.

“முகுந்தன்… எதுக்கு இவ்வளவு பிரச்சனை. நான் வேணுமுன்னா எங்க வீட்டுக்கு போயிறட்டுமா?” என்று சிந்தனையில் ஆழ்ந்தவளாக கேட்க, முகுந்தன் அவன் பைக்கை சரேலென்று சத்தத்தோடு வேகமாக நிறுத்தினான்.

“முகுந்தன்…” என்று நிரஞ்சனா சற்று அச்சத்தோடு அழைக்க, “எட்டி இழுத்தன்னு வையென் அப்பத் தெரியும்.” என்று தன் கழுத்தைத் திருப்பி, நிரஞ்சனாவின் முகம் பார்த்து மிரட்டிவிட்டு பைக்கை மீண்டும் வேகமாகச் செலுத்தினான்.

முகுந்தனின் பைக் ஒரு வீட்டின் முன் நின்றது.

சகல வசதிகளோடு, அனைத்து பொருட்களோடும், புதிதாக நண்பர்கள் வாங்கி வைத்திருந்த சமையல் பொருட்களும் அங்கிருக்க, நிரஞ்சனா அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“நீ கால் பண்ணப்பவே எனக்குச் சந்தேகம் வந்திருச்சு. இது என் பிரென்ட் வீடு தான். வேலைக்காக  ஆஸ்திரேலியா போய்ட்டான். எல்லாமே செட் அப் பண்ணின வீடு தான். நாம்ம இங்க வந்த வீட்டை யூஸ் பண்றது அவனுக்குச் சந்தோசம் தான்.” என்று முகுந்தன் கூற, நிரஞ்சனா தலை அசைத்துக் கேட்டுக் கொண்டாள்.

“நான் இனி கம்பனிக்கு போக மாட்டேன். வேற வேலை தான் தேடணும். கார், அப்படி இப்படின்னு சொகுசா இருக்க முடியாது. ஆனால், உனக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் என்னால் நிச்சயம் பண்ண முடியும்.” என்று முகுந்தன் உறுதியாகக் கூற, “நான் உன்னை உன் பணத்துக்காக விரும்பலை.” என்று முகுந்தனின் முகம் பார்த்து அழுத்தமாகக் கூறினாள் நிரஞ்சனா.

நிரஞ்சனாவின் அருகே சென்ற முகுந்தன், அவள் தலை முடி கோதி, “உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா டீ?” என்று ஆழமான குரலில் கேட்டான். முகுந்தனின் சட்டையைக் கொத்தாகப் பிடித்து, “என்னால் தானே உனக்கு இவ்வுளவு கஷ்டம்.” என்று கதறினாள் நிரஞ்சனா. நிரஞ்சனாவை தன் தோள் மேல் சாய்த்து, அவள் காதில், “ஏன் நீ மட்டும் தான் என்னை விரும்பினியா? நான் உன்னை விரும்பலையா?” என்று குரலில் காதல் வழிய கிசுகிசுப்பாக கேட்டான் முகுந்தன்.

நிரஞ்சனா, தன் கண்களைத் துடைத்துக் கொண்டு, முகுந்தனின் முகத்தை வாஞ்சையோடு பார்த்தாள். முகுந்தன் ஒற்றை புருவம் உயர்த்த, நிரஞ்சனா வெட்கப்பட்டுப் புன்னகைத்தாள்.  “நிரூ…” என்று முகுந்தன் கொஞ்சலாக அழைக்க, “ஆ…” என்று வாயைப் பிளந்தாள் நிரஞ்சனா. “என் மனைவியை இப்படி தான் செல்லம்மா கூப்பிடணுமுன்னு பார்த்தேன். அது இவ்வுளவு சீக்கிரம் நடக்கும்ன்னு நினைக்கலை.” என்று குரலில் சந்தோஷத்தோடும், அதே நேரம் சற்று வலியோடும் கூறினான் முகுந்தன்.

“சாரி… நான் அவசரப்பட்டுட்டேன் தானே. நான் இப்படி எல்லாம் நடக்கணுமுன்னு ஆசைப்படலை… நினச்சும்  பார்க்கலை. ஆனால், நடந்திருச்சு.” என்று நிரஞ்சனா மனத்தாங்களோடு கூற, “நடந்து முடிந்ததைப் பேசி என்னவாக போகுது? இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம். நீ இப்ப உன் படிப்பை மட்டும் பாரு.” என்று கூற, நிரஞ்சனா சம்மதமாகத் தலை அசைத்தாள்.

“நான் டிபன் வாங்கிட்டு வரேன். நீ ஸ்வீட் பண்றியா?” என்று முகுந்தன் கேட்க , நிரஞ்சனா அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள். ‘என்ன?’ என்று முகுந்தன் கண்களால் வினவ, “எனக்கு சமைக்க தெரியாது.” என்று படபடப்போடு தன் கண்களைச் சிமிட்டினாள் நிரஞ்சனா.

இவர்கள் காதலிக்கும் பொழுது என்ன தான் பேசுவார்களோ என்ற சந்தேகம் தான் எனக்கும்!

“ஹா… ஹா…” என்று பெருங்குரலில் சிரித்தான் முகுந்தன். “உனக்கு எல்லாமே நான் தான் சொல்லி கொடுக்கணும் போல?” என்று முகுந்தன் கண் அடித்து கூற, நிரஞ்சனா அவனைக் கோபமாக முறைத்தாள்.

“ஓகே… நிரூமா… நோ டென்ஷன். உன் டார்லிங், உனக்கு எல்லாமே சொல்லி தருவான்.” என்று ஆனந்தமாகக் கூறி முகுந்தன் செல்ல, நிரஞ்சனா அங்கிருந்த சோபாவில் யோசனையாக அமர்ந்தாள்.

முகுந்தன் நிரஞ்சனாவுக்கு உணவு, , அவளுக்கு தேவையானதையும் வாங்கி கொடுத்துவிட்டு வேலை விஷயமாக வெளியே சென்றுவிட்டான்.

நேரம் செல்ல செல்ல, இருள் கவ்வக் கவ்வ நிரஞ்சனாவின் மனதில் பயம் சூழ ஆரம்பித்தது.

முகுந்தன், உள்ளே நுழைய, நிரஞ்சனா சாப்பிடாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க, “நிரஞ்சனா” என்று கோபமாக அழைத்தான் முகுந்தன்.

“சாப்பிடு. நான் தேவையான வேலையை முடிச்சிட்டு வரேன்னு சொன்னேன் தானே?” என்று முகுந்தன் தன் கண்களைச் சுருக்கி கேட்க, நிரஞ்சனா பதில் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

“இந்தா ஸ்வீட்.” என்று இனிப்பை முகுந்தன் நீட்ட, ‘இது இப்ப தேவையா?’ என்பதைப் போல் அவனைக் குழப்பமாகப் பார்த்தாள் நிரஞ்சனா.

“எப்படி நடந்தாலும், நமக்கு நடந்தது கல்யாணம் தானே? எத்தனை வருஷமானாலும் நமக்கு இந்த நாள் தானே கல்யாண நாள்?” என்று முகுந்தன் கேள்வியாக நிறுத்த, அவனை ஆமோதிப்பது போல் தலை அசைத்தாள் நிரஞ்சனா.

நிரஞ்சனா அருகே அமர்ந்து, தன் தலையைத் திருப்பி அவள் முகம் பார்த்த முகுந்தன், “கவலைப் படாத டீ… நான் எல்லாம் பாத்துக்கறேன்.” என்று மெதுவாக அன்பாக அவளைச் சமாதானம் செய்யும் விதமாக கூறினான் முகுந்தன்.

“நான் யாரையும் கஷ்டப்படுத்த கூடாதுன்னு தான் நினச்சேன். ஆனால், அம்மா… அம்மா… ” என்று நிரஞ்சனா விசும்ப, “இப்படி அழுதுகிட்டே இருந்தா, பேசாம உங்க வீட்டுக்கு போ.” என்று முகுந்தன் கோபமாகக் கூற, “நான் எங்கயும் போக முடியாதுன்னு தானே, வந்த முதல் நாளே என்னை வெளிய போக சொல்ற?” என்று நிரஞ்சனா சண்டைக்குத் தயாராகினாள்.

 

முகுந்தன் எதுவும் பேசாமல், படுக்கையறைக்குள் சென்று படுக்க அவனைக் கோபமாக பின் தொடர்ந்து சென்ற நிரஞ்சனா முகுந்தன் சென்றது படுக்கையறை என்றவுடன்  உள்ளே  செல்ல தயங்கி அறையின் வாசலிலே நின்றாள் நிரஞ்சனா.

நிரஞ்சனாவின் செயலில், ‘இவ என்னை  பத்தி என்ன  நினைச்சுகிட்டு இருக்கா?” என்று எண்ணத்தோடு ஒற்றை கண்ணைச் சுருக்கி  முகுந்தன் நிரஞ்சனாவை ஆழமாகப் பார்த்தான்.

நிரஞ்சனா திரும்பி வேறு பக்கம் செல்ல, “நிரஞ்சனா…” என்று அழுத்தமாக அழைத்தான் முகுந்தன்.

அந்த குரலில் கட்டுப்பட்டு அங்கு அசையாமல் நின்றாள் நிரஞ்சனா. “நிரஞ்சனா…” என்று அவன் மீண்டும் அழைக்க, நிரஞ்சனா திரும்பி அவன் முகம் பார்த்தாள். முகுந்தன் எதுவும் பேசாமல் தலை அசைத்து உள்ளே அழைக்க, உள்ளே சென்ற நிரஞ்சனா சுவரோடு சாய்ந்து அவனைப் பார்த்தபடி பரிதாபமாக நின்றாள்.

‘என்ன யோசனை? என்ன பயம்? என்ன தயக்கம்?’ என்றெல்லாம் நிரஞ்சனாவுக்கு தெரியவில்லை. ஆனால், திருமணப் பந்தத்தில் ஏற்படும் ஆசை, எதிர்பார்ப்பு இவை எதுவும் இப்பொழுது மனதில் இல்லை என்று நிரஞ்சனாவால் அடித்து கூற முடியும். ஆனால், அதே எண்ணம் முகுந்தனிடம் இருக்கும் என்று நிரஞ்சனாவால் வரையறுத்துக் கூற முடியவில்லை.

முகுந்தன் சற்று கோபக்காரன் தான். நிரஞ்சனாவின் மேல் எழுந்தக் கோபம் அவள் பரிதவிப்பைப் பார்த்தவுடன் அடங்கிப் போனது.

சுவரோடு சாய்ந்து நின்ற நிரஞ்சனாவை நெருங்கினான் முகுந்தன். அவன் சுவாசக்காற்று   நிரஞ்சனாவை தீண்ட அவள் உடல் பயத்தால் நடுங்கியது. ‘ஏன் யாரும் என்கூட இல்லை. நான் ஏன் இப்படி அவசரக் கல்யாணம் பண்ணினேன். அம்மா, அப்பா ஆசீர்வாதத்தோடு நான் முகுந்தனை கைபிடித்திருந்தால் எவ்வுளவு நல்லா இருக்கும்.’ என்ற எண்ணத்தை முகுந்தனின் நெருக்கம், அவன் சுவாசக்காற்று உருவாக்க, நிரஞ்சனாவின் கண்கள் கண்ணீர் உகுக்கத் தயாராக இருந்தது.

‘அழுதால் கோபப்பட்டுவிடுவானோ?’ என்ற ஐயம் நிரஞ்சனாவின் மனதில் சூழ, முகுந்தனின் முகம் பார்ப்பதைத் தவிர்த்து தலை குனிந்து கொண்டாள் நிரஞ்சனா.

நிரஞ்சனாவின் முகத்தை முகுந்தன் நிமிர்த்த, வெளி வரத்துடித்த கண்ணீரை உள்ளிழுத்து அதை அவன் அறியாவண்ணம் மறைத்துக் கொண்டாள்.

“ஏய்…” என்று முகுந்தனின் குரல் கொஞ்சலாய், கெஞ்சலாய் நிரஞ்சனாவின் காதில் ஒலித்தது.

முகுந்தனின் கன்னம் நிரஞ்சனாவின் கன்னத்தை உரச, நிரஞ்சனாவின் உடல் நடுங்க, “பயப்படுறியா?” என்று அவளை இடையோடு அணைத்து பரிதவிப்போடு கேட்டான் முகுந்தன்.

‘ஆம்.’ என்று நிரஞ்சனாவின் மனம் ஓலமிட, “இல்லை.” என்று முணுமுணுத்தாள் நிரஞ்சனா. “ஏன் டீ. என்கிட்டே நீ பொய் சொல்லுவியா?” என்று கோபத்தோடு, அதே நேரம் உரிமையோடும் கேட்டான் முகுந்தன்.

நிரஞ்சனா முகம் உயர்த்தி முகுந்தனை விழி விரித்து  பார்க்க, அவள் மூக்கை பிடித்து செல்லம் கொஞ்சி, “நீ இப்ப என் பொண்டாட்டி. முன்னே விட இப்ப உனக்கு உரிமை ஜாஸ்தி. நீ என்ன சொன்னாலும் நான் கேட்பேன்.” என்று தன் கைகளைக் கட்டி நிரஞ்சனாவின் முன் இடைவரை குனிந்து முகுந்தன் கூற, நிரஞ்சனா பக்கென்று சிரித்தாள்.

“இது என் நிரஞ்சனா.” என்று கூறி அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான் முகுந்தன்.

அவளை அழைத்து மெத்தையில் அமர வைத்து, அவள் கை விரல்களை தன் கைகளுக்குள் புதைத்துக் கொண்டு, “நிரூம்மா… நீ படி. எந்த பிரச்சனையும் உன் படிப்புக்கு வர கூடாது.” என்று முகுந்தன் கூற அவள் தலை அசைக்க, மேலும் தயக்கத்தோடு பேச ஆரம்பித்தான் முகுந்தன்.

“நீ இப்படி பயப்படக் கூடாது. என்கிட்டே உனக்கு என்ன பயம்? என்ன தயக்கம்?” என்று கேள்வியாக நிறுத்தி, “உனக்கு எல்லா உரிமையும் இருக்கு.” என்று அவளிடம் பக்குவமாகக் கூறினான்.

காலையில் கூறியது தான் என்றாலும், அதை மீண்டும் அந்த இரவில் உறுதி படுத்தினான் அந்த காதலன்.

நிரஞ்சனா எதுவும் பேசாமல் மௌனம் காக்க, “நமக்கு நிச்சயம் எல்லார் சம்மதமும் கிடைக்கும். அதுவரைக்கும் காத்திருப்போம். அவசரமாக நடந்தது நம்ம கல்யாணமா மட்டும் தான் இருக்கணும். நம்ம வாழ்க்கை இல்லை.” என்று முகுந்தன் பட்டும் படாமலும் கூற, நிரஞ்சனா எம்பி அவன் கன்னத்தில் இதழ் பதித்து, “தேங்க்ஸ்…” என்று இன்முகமாகக் கூறினாள்.

“தூங்கு.” என்று முகுந்தன் கண்ணசைக்க, காலையிலிருந்த அழுத்தம் சற்று குறைந்தவளாக, நிரஞ்சனா கண்ணுறங்கினாள்.

நிரஞ்சனாவின் அருகே அமர்ந்து, தன் லப்டாப்பில் கவனத்தை செலுத்த  முயன்று, தோற்று நிரஞ்சனாவின் மீது முகுந்தனின் பார்வை திரும்பியது.

அவளைப் பார்த்துக் கொண்டிருந்த, முகுந்தனின் மனம் அலை பாய்ந்தது. நிலவொளி படர்ந்த இரவு. யாருமில்லா தனிமை.பக்கத்தில் ஓர் அழகான இளம்பெண்.      முகுந்தனின் மனம் தடுமாற,  ‘முகுந்தன் கெட்டிக்காரன். அவனால் எல்லா விஷயத்தையும் சமாளிக்க முடியும்.’ என்று தன் தந்தை நம்பிக்கையோடு  எப்பொழுதும் கூறுவது நினைவு வர, புன்னகைத்துக் கொண்டான்.

‘என்ன கெட்டிக்காரத்தனம் இருந்து, என்ன பயன்? அவசரக் குடுக்கை.’ என்று தன் தாய் கூறுவது நினைவு வர, முகுந்தனின் கண்கள் கலங்கியது.

எழுந்து சென்று ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்தான்.

‘அம்மா சொல்வது சரி தானோ? நான் அவசரக் குடுக்கை தானோ? நிதானமா செயல் பட்டிருக்கணுமோ? ஒரு சின்ன பெண்ணோட வாழ்க்கையும் சிக்கலில் மாட்டிவிட்டுட்டேனோ?’ என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டான் முகுந்தன்.

‘இல்லை. இந்த யோசனை தப்பு. இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம்.’ என்று எண்ணி தலையைக் குலுக்கி நிரஞ்சனாவை முகுந்தன் பார்க்க, “இனி இவளும் என் பொறுப்பு. நான் நிதானமாகச் செயல்பட வேண்டும்.” என்று தனக்கு தானே கூறிக்கொண்டான் முகுந்தன்.

பெற்றவர்கள் கோபத்தில் கூறி இருந்தாலும், அவர்கள் கொடுத்த சாபம் இவர்களை பின் தொடருமா?

‘அண்ணனுக்குக் கல்யாணம் விஷயம் தெரிஞ்சிருக்கும். விஜய் கிட்ட பேசணும்.’ என்றெண்ணியபடி விஜயேந்திரனுக்கு அழைத்தான் முகுந்தன்.

விஜயேந்திரன் அழைப்பை ஏற்கவில்லை. முகுந்தன் குழப்பத்தோடு அலைப்பேசியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.  காலம் யாருக்கு என்ன வைத்திருக்கிறது?

கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்…

error: Content is protected !!