கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  9

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  9

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  9

மணமேடையில் ஐயர் பெருங்குரலில் சிரிக்க, “என்ன விஷயம்?” என்று விஜயேந்திரனின் தந்தை நவநீதன் ஆர்வமாக வினவ, “கல்யாண பொண்ணு, நான் சொல்ற மந்திரத்துக்கு அர்த்தம் கேட்கறால்ப்ல.” என்று புன்னகையோடு கூறினார்.

அக்னி சாட்சியாகச் சுலோகம் கூறி அரங்கேறிய சடங்குகளின் பின்னணியையும், திருமணத்தின் முக்கியத்துவத்தையும்  ஐயர் கூற, உணர்ந்து தலை அசைத்தாள் கீர்த்தனா. அனைவரும் பொறுமையாகக் கேட்டுக்கொள்ள, பூமா தன் மருமகளைப் பெருமிதத்தோடு பார்த்து திருஷ்டி கழித்தார்.

அனைத்து சடங்குகளும் சிறப்பாக நிறைவேற, ரிசப்ஷன் நெருங்கியது. கருநீல கண்ணனின் நிறத்தில் கோட் சூட் அணிந்து கம்பீரமாகக் காட்சி அளித்தான் விஜயேந்திரன். பால் நிற விலை உயர்ந்த சட்டை அந்த கோட் சூட்க்கு இடையில் பளிச்சென்று தெரிந்தது. விஜயேந்திரனின் முகத்தில் புன்னகை மட்டுமே குறையாக இருந்தது. அருகே நின்று கொண்டிருந்த கீர்த்தனா முகத்தில், கண்களில் புன்னகையைத் தேக்கி சந்திரனின் ஒளியோடு பதிக்கப் பட்ட கற்களைத் தாங்கிய கடலும், வானமும் ஒத்த நீல நிற புடவையில் ஜொலித்தாள்.

பலரும் வாழ்த்திச் செல்கையில், விஜயேந்திரனின் அலுவலக கூட்டம் மேடையேறியது. அதில் பலர் கீர்த்தனாவின் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் கேக் வெட்ட திட்டமிட, “கீர்த்தனா ஒரு பாட்டுப் பாடலாமே.” என்று ஓர் குரல் ஓங்கி ஒலித்தது.

நிரஞ்சனா மணமேடையில் அரங்கேறிக் கொண்டிருந்த காட்சியைக்  கண்களில் ஏக்கத்தோடு ஓர் ஓரமாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். பெரியவர்கள் முதல் வரிசையில் அமர்ந்து, இள வட்டத்தினரின் கேலி பேச்சுக்களை ரசித்துச் சிரித்துக் கொண்டிருந்தனர். “அண்ணா. உண்மை… கீர்த்தனா. சாரி! சாரி! அண்ணி செம்மயா பாடுவாங்க. அவங்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.” என்று தன் சகோதரனைப் பார்த்துக் கூறிய முகுந்தன், கீர்த்தனாவைப் பார்த்து, “அண்ணி. எங்க அண்ணனும் சூப்பரா பாடுவான்.” என்று பெருமை பேச, கீர்த்தனா முகம் சிவந்து தலை குனிந்து புன்னகைத்தாள்.

விஜயேந்திரன், ‘இவர்களை  எப்படித் தவிர்ப்பது?’ என்று தீவிரமாகச் சிந்தித்து மௌனித்தான். பலர் வற்புறுத்தியும் விஜயேந்திரன் பாட மறுத்துவிட, கீர்த்தனாவை அனைவரும் பாட சொல்ல கீர்த்தனா மெல்லிய புன்னகையோடு பாட ஆரம்பித்தாள்.

கீர்த்தனா, விஜயேந்திரனின் விழிகளைப் பார்த்தபடி, கண்களில் காதல் வழிய பாட ஆரம்பித்தாள்.

” கண்ணோடு கண் சேரும் போது வார்த்தைகள் எங்கே போகும்

கண்ணே உன் முன்னே வந்தால் என் நெஞ்சம் குழந்தை ஆகும்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்

என் எதிர் காலம் நீ தான் என்று உயிர் சொன்னதே

உன்னோடு வாழ்ந்திடத்தானே நான் வாழ்கிறேன்…” 

கீர்த்தனாவின் இனிய குரலில் அனைவரும் மெய்சிலிர்த்து அமர்ந்திருக்க,   ஒரு கூடை நெருப்பைத் தலையில் கவிழ்த்தியது போல் விஜயேந்திரன் தவித்தான்.

 

வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்

என் வழித்துணை நீ தான் என்று நிழல் சொன்னதே

இதுவரை என் இருதயம் இந்த உணர்வினில் தடுமாறவில்லை

முதல்முறை இந்த இளமையில் சுகம் உணர்கிறேன் நான் தூங்கவில்லை

 விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்

என் எதிர்காலம் நீ தான் என்று உயிர் சொன்னதே!

கீர்த்தனா உணர்ந்து பாட, அங்கு, “ஓஹ்… ஓஹ்…” என்று பெருங்குரல் எழுந்தது.  அனைவரும் அங்கு ஆனந்தமாக இருக்க, ‘இந்த பெண்ணின் காதலுக்கு நான் தகுதியானவன் இல்லை. இதை இவளிடம் எப்படிச் சொல்லுவது?’ என்றெண்ணி விஜயேந்திரன் தடுமாறினான்.

பாட்டின் வரிகள் விஜயேந்திர னின் மனதை  ரணமாய் அறுக்க, கீர்த்தனா அதை உணர்ந்து  பாடிய விதம் அவனுக்கு விண்விண்னென்று தலை வலியைக் கொடுத்தது.

திருமண வைபவம் முடிந்து அனைவரும் கிளம்ப, முகுந்தன், நிரஞ்சனா அவர்கள் வீட்டை நோக்கிப் பயணித்தனர்.  நிரஞ்சனா எதுவும்  பேசாமல் சாலையை வெறித்தபடி மௌனமாக அமர்ந்திருந்தாள்.  முகுந்தன் தன் சகோதரனின் திருமணத்தில் கலந்து கொண்ட சந்தோஷத்தில் பாடலை முணுமுணுத்தபடி வண்டியை செலுத்தினான். நிரஞ்சனாவின் மௌனத்தை முகுந்தன் கவனிக்கவில்லை.

வீட்டிற்குள் நுழைந்ததும், நிரஞ்சனா குளித்து உடை மாற்றிப் படுத்துவிட்டாள். நிரஞ்சனவை கவனித்த முகுந்தன், ‘இன்னைக்கு முழுக்க அலைந்த களைப்போ?’ என்றெண்ணி அவனும் குளித்துவிட்டு மின்விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தான்.

அப்பொழுது மெல்லிய விசும்பல் சத்தம் கேட்க, முகுந்தன் பதறியடித்து எழுந்தான். “நீரு…” என்று அழைக்க, நிரஞ்சனா முகுந்தனைத் திரும்பியும் பார்க்கவில்லை.

“நீரு…” என்று அழைத்தபடி முகுந்தன் அவள் தோள் தொட, படக்கென்று முகுந்தனின் கைகளை  தட்டிவிட்டாள் நிரஞ்சனா. நிரஞ்சனாவின் கோபத்தின்  காரணம் தெரியாமல் படுத்திருந்த நிரஞ்சனவை குழப்பமாக பார்த்தான்.

‘ஒரு வாரத்தில் நிரஞ்சனா பல முறை அழுதாலும், என் கிட்ட கோபப்பட்டு அழுததே இல்லியே? இன்னைக்கி என்ன ஆச்சு?’ என்று சிந்தித்து, “நிரஞ்சனா. உன்னை யாரும் எதாவது சொன்னாங்களா?” என்று அவளை தன் பக்கம் திருப்பி கேட்டான் முகுந்தன்.

நிரஞ்சனா நேராகப் படுத்து மேலே சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறியைப் பார்த்தபடி, “அதெல்லாம் இல்லை.” என்று வெடுக்கென்று கூறினாள். “அப்ப என் மேல் கோபமா?” என்று முகுந்தன் பரிதாபமாக கேட்க, “…” நிரஞ்சனா தன் விழிகளை உருட்டியபடி பதில் கூறாமல் படுத்திருந்தாள்.

அவள் அருகே தன் கையை அண்டை கொடுத்து நிரஞ்சனாவின் முகம் பார்த்து படுத்துக் கொண்டு, “நீ கோபப்பட்டா கூட செம்மயா இருக்க.” என்று முகுந்தன் கண்சிமிட்ட, படக்கென்று எழுந்து அமர்ந்தாள் நிரஞ்சனா.

“இந்த வேலை எல்லாம் என் கிட்ட வேண்டாம். இப்படி எல்லாம் பேசி என்னைச் சமாதானம் செய்ய வேண்டாம்.” என்று  நிரஞ்சனா மிடுக்காகக் கூற, “நான் உன்னைச் சமாதானம் செய்யவே இல்லையே. காரணம் தெரியாம எப்படி சமாதானம் செய்ய முடியும்.” என்று முகுந்தன் நிரஞ்சனாவை ஆழமாகப் பார்த்தபடி கேட்டான்.

“நீ ஏன் என்னைச் சமாதானம் செய்யணும். உனக்குத் தான் எல்லாரும் இருக்காங்களே?” என்று நிரஞ்சனா தலை சரித்து முகுந்தனிடம் ஊடலோடு கூற,  முகுந்தன் ஒற்றை புருவம் உயர்த்தி நிரஞ்சனாவை யோசனையாகப் பார்த்தான்.

“உங்க வீட்ல உன்னை ஏத்துக்கிட்டா? நீ என்னை விட்டுட்டு போயிருவியா?” என்று நிரஞ்சனா சிறு குழந்தை போல் கேட்க, முகுந்தன் விசுக்கென்று கோபத்தோடு அவளைப் பார்த்தான்.

முகுந்தன் எதுவும் பேசாமல் படுத்துக் கொள்ள, “முதல் சண்டை.” என்று நிரஞ்சனா கூறிக்கொண்டே மறுபக்கம் திரும்பிப் படுக்க, “ஆரம்பிச்சது நீ.” என்று சுவரைப் பார்த்தபடி கூறினான் முகுந்தன்.

“காரணம் நீ.” என்று எதிர்ப்பக்கம் சுவரைப் பார்த்தபடி, நிரஞ்சனா கூற, கோபமாக மெத்தையில் எழுந்தமர்ந்து நிரஞ்சனாவை வேகமாக எழுப்பி தன் பக்கம் திருப்பினான் முகுந்தன்.

நிரஞ்சனா நிலை தடுமாறி, முகுந்தன் மீது சாய, தன்னை நிதானப்படுத்திக் கொண்டு முகத்தை உர்ரென்று வைத்து சுவரைப் பார்த்தபடி அமர்ந்திருக்க, அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி, “நான் என்ன காரணம்?” என்று விடாப்பிடியாகக் கேட்டான் முகுந்தன்.

“உங்க வீட்டு  ஆளுங்களை பார்த்தவுடன். அப்படியே போயிட்ட?” என்று நிரஞ்சனா மனத்தாங்கலோடு கேட்க, “நீ தான டீ போகச் சொன்ன?” என்று முகுந்தன் இறங்கிய குரலில் கேட்டான். “மணமேடைக்கு போன்னு சொன்னேன். அதுக்காக கூட வந்தவ இருக்காளா? செத்தாலான்னு கூட நீ பார்க்க வேண்டாமுன்னு நான்  சொன்னேனா?” என்று நிரஞ்சனா கோபமாக வினவினாள்.

“இந்த பாரு. நான் கல்யாணத்துக்கு போகணும்ன்னு சொல்லலை. நீ தான் போகலாமுன்னு சொன்ன. அங்க அமைதியா இருக்க சொன்னதும் நீ. நிறைய வேலை டீ. நான் அங்க இருந்தாலும், என் கண்கள் உன்னைத் தான் கவனிச்சிட்டு இருந்தது. நீ தனியா இருக்கியே என் மனசு உன்னை தான் தேடுச்சு. இதெல்லாம் நான் உனக்கு சொன்னா தான் புரியுமா?” என்று முகுந்தன் சமாதானமாகப் பேச, “இல்லை. உங்க வீட்டில் உன்னை மட்டும் ஏத்துக்கிட்டா?” என்று மேலே பேச முடியாமல்  நிரஞ்சனா தடுமாற, “ஏத்துக்கிட்டா?” என்று புருவம் உயர்த்தி முகுந்தன் நிரஞ்சனாவை பார்த்துப் புன்னகைத்தான்.

முகுந்தனின் புன்னகையில் சகலமும் மறந்து அவன் தோள் சாய்ந்தாள் நிரஞ்சனா. “லூசு…” என்று நிரஞ்சனாவை கேலியாகத் திட்டியபடியே, “நிரு…” என்று முகுந்தன் அழைக்க, “ம்…” என்று தலை உயர்த்தி அவன் முகம் பார்க்காமல் மென்மையாகப் பதில் கூறினாள் நிரஞ்சனா.

“தேவை இல்லாம மனசை போட்டு குழப்பிக்காத.” என்று நிரஞ்சனாவின் தலை கோதி கூற, “சாரி.” என்று நிரஞ்சனா இறங்க, “இல்ல டீ. நானும் உன் கிட்ட வந்து உன்னை கவனிச்சிருக்கணும். நீ தனியா இருப்பன்னு யோசிச்சேன். ஆனால் உன்னை கவனிக்கனும்னு எனக்கு தோணலை பாரு. இனி மாத்திக்கறேன்.” என்று முகுந்தனும் இறங்க நிரஞ்சனா அவனின் அருகாமையை இன்னும் ரசித்தாள்.

மனிதர்கள் சற்று இறங்கினால், இல்லற இனிமை இறங்காதே!

அதே நேரம், விஜயேந்திரனின் அறையில், ‘என்ன பேசுவது? எப்படிப் பேசுவது?’ என்றறியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான் விஜயேந்திரன்.

“கீர்த்தனா உட்காருங்க. ஏன் நிக்கறீங்க?” என்று விஜயேந்திரன் விலகல் தன்மையோடு கூற, துணுக்குற்றவாளாய் அவனை பார்த்தாள் கீர்த்தனா.

“நான் உங்க கிட்டக் கொஞ்சம் பேசணும்.” என்று விஜய் ஆரம்பிக்க, கீர்த்தனா மௌனம் காத்து அவனுக்குப் பேச இடம் கொடுத்தாள்.

“நான் கல்யாணம் பண்ணிக்க யூ.எஸ்.லிருந்து இங்க வரலை. உண்மையை சொல்லணுமுன்னா எனக்கு கல்யாணம்ங்கிற விஷயமே எனக்குத் தெரியாது. முகுந்தன் கல்யாண விஷயம் கேட்டு தான் நான் இங்க வந்தேன். முகுந்தனைப் பார்க்க, நிலைமையைச் சரி செய்ய இப்படியான காரணத்துக்காகத்  தான் நான் வந்தேன்.” என்று விஜயேந்திரன் கூற, ‘நடந்து முடிந்த கல்யாணத்துக்கும் இந்த விளக்கத்திற்கும் என்ன சம்பந்தம்?’ என்பது போல் கீர்த்தனா அவனை யோசனையாகப்  பார்த்தாள்.

“நான். நான் லீலாவை விரும்பறேன். ஷி இஸ் மை லவ். ஷி இஸ் மை லைப்.” என்று கண்களில் காதலோடு  விஜயேந்திரன் நிதானமாக கூற, கீர்த்தனா அவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.

“லீலா இல்லாமல் என்னால வாழ முடியாது. நான் இல்லைனா அவளுக்கு யாருமே கிடையாது. ரொம்ப கஷ்டப்படுவா.” என்று உணர்ச்சி பொங்க லீலாவின் நினைவுகளை மனதில் சுமந்தபடி  கூறினான் விஜயேந்திரன்.

‘விஜயேந்திரனின் விலகலைக் குறித்து தன் மனதைக் காலையிலிருந்து குடைந்த விஷயம் சரி தான் போல.’ என்ற எண்ணம் கீர்த்தனாவுக்குத் தோன்ற, மேலே என்ன பேசுவது என்று தெரியாமல் மௌனித்தாள்.  கீர்த்தனாவின் விழிகள் பல கேள்விகளைத் தேக்கி நிற்க, “நான் இந்த கல்யாணத்திற்குச் சம்மதம் சொல்லிருக்கக் கூடாது. ஆனால், அம்மா… அம்மாவோட உடல் நிலை, மனநிலை இதெல்லாம் தான் என்னை  இந்த திருமணத்திற்குச் சம்மதம் சொல்ல வச்சிருச்சு.” என்று விஜயேந்திரன் விளக்கமளித்தான்.

“மன்னிப்புங்கிற ஒரு வார்த்தை எல்லா விஷயத்தையும் சரி செய்யாது. நான் மன்னிப்பு கேட்க போறதில்லை.  நான் மன்னிப்பு கேட்டும் ஒரு பிரயோஜனமுமில்லை. ஆனால், நான் உங்க அன்புக்குத் தகுதியான ஆள் கிடையாது.” என்று விஜயேந்திரன் கூற, அவன் பேசுவது புரியாமல் விழித்தாள் கீர்த்தனா.

“கொஞ்ச நாள் டைம் கொடுங்க. நான் எல்லா பிரச்சனையையும் சரி பண்ணிறேன். அம்மாவுக்கு புரிய வச்சறேன். உங்களுக்கு டிவோர்ஸ் கொடுத்திடறேன். நீங்க உங்க தகுதிக்கு ஏத்தாப்ல நல்ல வாழ்க்கையை அமைச்சிக்கோங்க.” என்று விஜயேந்திரன் கோர்வையாகப் பேசி முடிக்க, கீர்த்தனா தன் மனதைக் கனலாய் கொதிக்கும் இரும்பினால் சுட்டது போல் வலியோடு பார்த்தாள்.

கீர்த்தனாவின், கோபம், அழுகை எனப் பல உணர்ச்சிகளை எதிர்பார்த்த விஜயேந்திரனின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி, “சோ…” என்று புருவம் உயர்த்தி தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அவன் எதிரே இருந்த நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்தாள் கீர்த்தனா.

“ரொம்ப நல்ல மனிதர் நீங்க?” என்று கீர்த்தனா கேள்வியாக நிறுத்த, “உங்க அம்மா உடம்புக்கு எதுவும் ஆகிற கூடாது? உங்க லவ்வர். ம்… அவங்க பெயர் என்ன சொன்னீங்க. அ… லீலா. அவங்களை ஏமாத்திர கூடாது? அப்படி தானே?” என்று நக்கலாகக் கேட்டாள் கீர்த்தனா.

“இவங்களை எல்லாம் சரி செய்ய ஒரு பலியாடு வேணும் அது நான்?” என்று கீர்த்தனா அவனை நேரடியாகக் குற்றம் சாட்ட, சீற்றமாக அவளைப் பார்த்தான் விஜயேந்திரன்.

விஜயேந்திரனின் கோப பார்வையைப் பார்த்து, “இப்படி கோபமா பார்த்தா, நான் பயபடணுமா? இல்லை நீங்க செஞ்சது தப்பு இல்லைன்னு ஆகிருமா?” என்று கீர்த்தனா கிடுக்கு பிடியாகக் கேட்க, “மைண்ட் யுவர் வர்ட்ஸ்.” என்று விஜயேந்திரன் தன் பற்களை நறநறத்தான்.

“ஆஹா…” என்று நாற்காலியில் சாய்ந்து, “உங்க குடும்ப கௌரவத்தைக் காப்பற்ற கல்யாணம் பண்ண உங்க  அம்மா அமைதியா இருக்கனும். வேற ஒரு பொண்ணை காதலிச்சிட்டு அவளை ஏமாத்தின நீங்க அமைதியா இருக்கனும். நான் ஏன் அமைதியா இருக்கனும்?” என்று நிறுத்தி நிதானமாகக் கேட்டாள் கீர்த்தனா.

“நான் யாரையும் ஏமாத்தலை. உனக்கும் நல்லது பண்ணணுமுன்னு தான் நினைக்கறேன்.” என்று விஜயேந்திரன் தன்மையாகக் கூற, “அதை இன்னக்கி ராத்திரி பண்றதுக்கு பதிலா நேத்து ராத்திரி பண்ணிருக்கலாமே? ஊரை கூட்டி என் கழுத்தில் தாலியை கட்டிட்டு. இப்ப அதைக் கழட்டத் திட்டம் போடுறதை விட, அது பெட்டர் ஆப்ஷனா இருந்திருக்குமே எனக்கு?” என்று ஆராயும் தன்மையோடு கேட்டாள் கீர்த்தனா.

தன் மேல் இருக்கும் தவறை உணர்ந்தவனாக விஜயேந்திரன் பொறுமை காக்க, “மேரேஜ் அவ்வுளவு ஈஸியா ஆகிருச்சு?” என்று தன் உதட்டை சுழித்துக் கேட்டு, “இந்த கல்யாணம் நடக்கலைன்னா உங்க அம்மா ஏவ்வுளவு வருத்தப்படுவாங்களோ? இந்த கல்யாணம் தோத்துட்டா எங்க அப்பா அவ்வுளவு வருத்தப்படுவாங்க.” என்று ஆழமான குரலில் கூறினாள் கீர்த்தனா.

“இல்லாத அன்பை வேணுமுன்னு கெஞ்ச நான் ஆளில்லை. ஆனால், அதே நேரத்தில் இந்த திருமணத்தை விட்டுக்கொடுக்க நான் ஏமாளியும் இல்லை. உங்க அம்மா, உங்க காதல்ன்னு என் வாழ்க்கையைத் தியாகம் பண்ண நான் தியாகி இல்லை. நான் சராசரி பெண்  ஊரறிய நடந்த இந்த திருமணம் நிஜம். என் கழுத்தில் ஏறியத் தாலி உண்மை. நான் இங்க சந்தோஷமா இருப்பேன்னு எங்க அப்பாவோட  நம்பிக்கை என் வாழ்வின் ஆதாரம். இதை எதையும் நான் எந்த காரணத்துக்காகவும் குலைக்க மாட்டேன்.” என்று கீர்த்தனா அழுத்தமாகக் கூற, “என் காதல் நிஜம்.” என்று விஜயேந்திரன் கூற, “காதல்.” என்று ஏளனமாகச் சிரித்தாள் கீர்த்தனா.

“இட்’ஸ் எ கப்பில் பூலீஷ் கேம்.”என்று கீர்த்தனா முணுமுணுக்க, “என்ன?” என்று விஜயேந்திரன் தன் ஒற்றை கண்ணைச் சுருக்கி கேட்டாள்.

“திருமணத்திற்கு முன் வரும்  காதல், முட்டாள்களின் செயல்ன்னு சொல்றேன். இரண்டு இள முட்டாள்கள் செய்ற வேலையை அறிவில்லா  ஓராயிரம் பேர் பேசிப்பேசி பெருசாக்குற விஷயம் தான் லவ். அதை பத்தி  விமர்சனம் பண்ண கூட  எனக்கு விருப்பமில்லை. பட்… ஆனால், உங்கள் முட்டாள்தனத்துக்கு என் வாழ்க்கையை என்னால இரையாக்க முடியாது.” என்று கீர்த்தனா நக்கலாகக் கூற, விஜயேந்திரன் அவளைப் பிரமிப்பாகப் பார்த்தான்.

‘இல்லை இவள் பேச்சால் என்ன திசை திரும்புகிறாள்.’ என்று மனதளவில் சுதாரித்துக் கொண்டு, “நீ என்ன வேணா நினச்சிக்கோ. ஐ அம் லீஸ்ட் பாத்தெர்ட. ஒரு வருஷம். கொஞ்சம் சூழ்நிலை சரியானவுடனே, என் தம்பியை வீட்டுக்கு கூட்டிட்டுவந்துட்டு, எங்க அம்மாவுக்கு புரிய வச்சிட்டு  நான் கிளம்பி போய்கிட்டே இருப்பேன். காரணமே இல்லாமல் இந்த வாழ்க்கையை ஏன் வாழணுமுன்னு நீயும் டிவோர்ஸ் குடுத்துட்டு போய்கிட்டே இருப்ப.” என்று விஜயேந்திரன் உறுதியாகக் கூறிவிட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.

தன் கண்களை மூடி சாய்வாக அமர்ந்திருந்த விஜயேந்திரன் முன் கீர்த்தனா தன் விரல்களால் சுடக்கிட்டு அழைக்க, ‘என்ன திமிர்?’ என்று விஜயேந்திரன் அவளைக் கடுங்கோபத்தில் பார்க்க, “என்னை மதிக்கிறவங்களுக்கு மட்டும் தான் நான் மரியாதை கொடுத்து பழக்கம். மத்தவங்களுக்கு இல்லை. நீங்க இவ்வுளவு சுயநலமா யோசிக்கும் பொழுது நானும்  யோசிக்கனுமில்லையா?” என்று கீர்த்தனா தலை சாய்த்துக் கேட்க, விஜயேந்திரன் அவளை தன் கண்களைச் சுருக்கி தாடையை தடவியபடி பார்த்தான்.

“ஒரு வருஷமில்லை. நாலு வருஷமானாலும் நான் டிவோர்ஸ் கொடுக்க மாட்டேன். இந்திய பெண்களுக்கு இன்னும் விவாகரத்து சாதாரண விஷமில்லையென்று நம்புறவ நான். அதைத் தாண்டியும் உங்களுக்கு விவாகரத்து வேணுமுன்னா? அதை நான் தரணுமுன்னா அதற்கு  ஒரு வழி இருக்கு.” என்று அந்த வழியைக் கூறி கீர்த்தனா கண்சிமிட்ட, விஜயேந்திரன் வெடவெடத்து அமர்ந்திருந்த சோபாவில் இருந்து எழுந்து கீர்த்தனாவை மிரட்சியாகப் பார்த்தான்.

“இந்த அறையில் ஒரு மெத்தை தான் இருக்கு. எனக்கு கீழ படுத்தா தூக்கம் வராது. வேணுமுன்னா நீங்க கீழ படுங்க. இல்லை வேற ரூமில் போய் படுங்க. இல்லை இங்கயே படுக்கணுமுன்னாலும் படுங்க. யுவர் விஷ். ஐ அம் லீஸ்ட் பாத்தெர்ட.” என்று கூறி ஒயிலாக மெத்தையில் படுத்து தன் கண்களை இறுக மூடிக் கொண்டாள் கீர்த்தனா.

‘என்ன இப்படி சொல்றா? லீலா என்னை  ஒரு நாள் கூட இப்படி படுத்தினது இல்லையே. இந்த பெண்ணை எப்படிச் சமாளிக்க போறேன்.’ என்று எண்ணியபடி கீர்த்தனா கூறியதை சிந்தித்து தூக்கத்தைத் தொலைத்தவனாக பால்கனியில் நடக்க ஆரம்பித்தான் விஜயேந்திரன்.

கீர்த்தனா என்ன வழி சொல்லிருப்பாள்? ஏன் விஜயேந்திரன் இத்தனை பதட்டம் அடைய வேண்டும்?

அறியும் ஆவலுடன்,

கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்…

error: Content is protected !!