T8

T8

தொடுவானம் _8

இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி

இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி

கண்ணாடி பிம்பம் கட்ட கயிர் ஒன்றும் இல்லையடி

கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி

நீ ஒன்று சொல்லடி பெண்ணே இல்லை நின்று கொல்லடி கண்ணே

எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்

என்னைத் துரத்தாதே உயிர் கரையேறாதே

அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே

அதை நானும் மெய்ப்பிக்கத்தானே புது ஆயுள் வேண்டுமே

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்

இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்

இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்

என்ன சொல்லப் போகிறாய்…என்ன சொல்லப் போகிறாய்…

நள்ளிரவு நெருங்கும் நேரம்.  மூன்றாம் பிறை நிலவு மெலிந்து சோகையாய் ஒளி வீசிக் கொண்டிருந்தது. ஏகாந்தமான அந்தப் பொழுதில் நண்பர்களுடன் மொட்டை மாடியில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தவனின் காதுகளை எட்டியது யாரோ குதித்தது போன்ற சப்தம். சப்தம் வந்த திசையில் பார்வையைக் கூர்மை ஆக்கியவனின் விழிகளில்,  காம்பௌண்டு சுவர் ஓரத்தில் இருந்த குற்றுச் செடிகளின் அருகே நின்றிருந்த இருவர் புலப்பட்டனர்.

வாயைக் குவித்து ஷ்ஷ்… என்று மெல்லிய சப்தம் எழுப்பியவாறு நண்பர்களை சைகையில் அருகே அழைத்தவன் பார்வையை மீண்டும் அந்த அந்நிய ஆடவர்கள் மீது பதித்தான்.  அப்போது மேலும் இருவர் அந்த சுற்றுச் சுவரைத் தாண்டிக் குதித்து பின் பதுங்கி நின்று அப்பகுதி முழுவதும் பார்வையை ஓட்டி நோட்டம் விட்டனர்.

சற்று மங்கலாக எரிந்து கொண்டிருந்த விடி விளக்கு வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சமில்லை. அது கழிவு நீர் தொட்டி இருந்த பகுதி. சற்று மேடான பகுதி.  ஆகவே மாடியில் இருந்து பார்த்தவனுக்குத் தெளிவாக தெரிந்தனர் பதுங்கி இருந்தவர்கள்.

அதற்குள் ஆகாஷின் அருகே வந்திருந்த அவனது நண்பர்கள், அவன்  பார்வை ஓடிய திசையில் பார்த்து அதிர்ந்தனர்.

“ யார் டா  இவனுங்க?  திருட்டுப் பசங்களா?…” என்று  மெல்லிய குரலில் கேட்டான் சுபாஷ்.

“அப்படித்தான் நினைக்கிறேன்.     டேய் அவனுங்க ஹோம் பக்கம் போறானுங்க. ரஞ்சன் நீ போலீஸ்க்கு ஃபோன் போடு.”  என்று கூறியபடி விடுவிடு வென்று மாடியில் இருந்து வீட்டினுள் செல்லும் படிக்கட்டு வழியாக இறங்கினான்.

அவனைப் பின் தொடர்ந்து இறங்கிய  சுபாஷும் நந்த குமாரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பெண்களிடம், “ அபி யாருன்னு  தெரியல , நாலு பேரு இங்க வீட்டு காம்பௌண்டுக்குள்ள திருட்டுத் தனமா நுழைஞ்சிருக்காங்க. நீ வாசல்ல செக்யூரிட்டிக்கு போன் போட்டு அலர்ட் பண்ணு.”

“ ஆர்த்தி, கங்கா ரெண்டு பேரும் வீட்ல கதவையெல்லாம் நல்லா மூடியிருக்கீங்களா செக் பண்ணுங்க.

அம்மா நீங்க ஹோம்க்கு போன் பண்ணி ப்ரண்ட் டோர் குளோஸ்  பண்ண சொல்லுங்க.”  விரைவாகக் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டே அங்கிருந்த ஹாக்கி மட்டைகளைத் தேடி எடுத்துக் கொண்டனர்.

மிகவும் பதட்டமடைந்த அபி செக்யூரிட்டிக்கு போன் செய்து,” வீர், இங்க வீட்டுக்குள்ள திருடனுங்க நுழைஞ்சிட்டாங்களாம். நீங்க கேட் லாக் பண்ணிட்டு ஹோம் கிட்ட போங்க” என்றாள். பிறகு ஹோமில் இருக்கும் பெண் உதவியாளருக்கு போன் செய்து ஹோமின் முன்புற பின்புற கதவுகளை தாழிடச் சொன்னவள் பதட்டத்துடன், “ சுபா ண்ணா பார்த்து ஜாக்ரதை அண்ணா” என்றாள்.

அறைக்குள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிக் கொண்ட ஆர்த்தி பின்புறக் கதவு தாழிடப் பட்டுள்ளதா என்று சரி பார்க்கச் சென்றாள்.

கங்கா முன்புறக் கதவை பூட்டிவிட்டு, மாடியில் இருந்த அறையின் பால்கனி கதவுகளைத் தாழிடச் சென்றாள். அனைவரிடமும் பதட்டமும் பயமும் நிறைந்திருந்தது.

அதற்குள்  ஆகாஷ் அவனது கைத்துப்பாக்கியை எடுத்து வந்தான். பெண்களிடம் வீட்டை உள் பக்கமாகத்  தாழிடச் சொல்லி விட்டு மூவரும் வெளியேறினர்.

அப்போது  மாடியில் இருந்த ரஞ்சன், அன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு அழைத்து உடனடியாக ஆகாஷின் வீட்டு முகவரியைக் கூறி வரச் சொன்னான். அவர்களும் அருகேதான் இருப்பதாகவும் ஐந்து நிமிடங்களில் வந்து விடுவதாகவும் கூறினர்.

உடனடியாக ராஜாவும் ரஞ்சனும் மாடியிலிருந்து வெளிப்புறமாகச் செல்லும் படிக்கட்டு வழியாக இறங்கி, தோட்டத்தை அடைந்தவர்கள், அங்கிருந்த கட்டைகளில் ஒன்றை ஆளுக்கொன்றாக உருவிக் கொண்டு , சத்தமில்லாமல் அக்கயவர்களைப் பின் தொடர்ந்தனர் .

அக்கயவர்கள் நால்வரும் ஹோமிற்கு சென்று உள்ளே நுழைய தோதான வழியைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.அதில் இருவர் பின்பக்கமாக ஏதேனும் வழியில் எளிதாக நுழைய முடியுமா என்று பார்க்கச் செல்ல, அவர்கள் ரஞ்சனின் பார்வையில் பட்டனர். அந்த நேரத்தில் ஆள் நடமாட்டத்தை எதிர்பார்க்காத இருவரும் சற்றுத் தடுமாறிப் பின் தங்கள் ஆயுதத்தை எடுக்க, ரஞ்சன் தன் கையில் வைத்திருந்த கட்டையை அரிவாள் வைத்திருந்தவன் கையைக் குறிபார்த்து எறிந்தான்.

அவன் கையில் வைத்திருந்த அரிவாள் தெறித்து இருளில் எங்கோ போய் விழுந்தது. சுதாரிக்கும் முன் விரைவாக நடந்த இந்த தாக்குதலால் அரிவாளைத் தவற விட்டவன் தடுமாறிப் பின் நின்றிருந்தவனையும் இடித்துக் கொண்டு கீழே விழுந்தான். இவர்களது கவனம் சிதறிய சில நொடிக்குள், தன் பிஸ்டலை எடுத்த ரஞ்சன் அவர்களுக்கு குறி வைக்க, இதனை எதிர் பார்க்காத இருவரும் திகைத்து நின்றனர்.

அங்கே ஹோமின் முன்புறம் நின்றிருந்த இருவரும் இவர்களின் சப்தம் கேட்டு சுதாரித்து பின்புறம் செல்ல எத்தனிக்க, அவர்களைச் சுற்றி வளைத்திருந்தனர் ஆகாஷ், சுபாஷ், நந்து மூவரும்.

இவர்களின்   வருகையை  எதிர்பார்த்திராத அடியாட்கள் இருவரும் தம் ஆயுதங்களோடு தாக்கத் தயாராகினர்.  ஆகாஷ் தன் துப்பாக்கியை அவர்களுக்கு குறி வைத்தபடி நிற்க சுபாஷும் நந்துவும் ஹாக்கி மட்டைகளை கையில் ஏந்தியவாறு அவர்களைத் தாக்கத் தயாராக நின்றனர்.

அப்பொழுது காவல்துறையினர் வந்த வாகனத்தின் சைரன் ஒலியைக் கேட்டவர்கள்,  தாங்கள் வசமாக சிக்கிக் கொண்டதை உணர்ந்தனர். இப்போது இந்த இடத்தில் இருந்து தப்பித்தால் போதும் என்று எண்ணியவர்கள்,  ஒருவன் தம் கையில் வைத்திருந்த அரிவாளை ஆகாஷின் கைகளைக் குறி வைத்து வீச, மற்றவன் சுபாஷின் புறம் வீசியிருந்தான். சுபாஷ் அவனை நோக்கி வரும் ஆயுதத்தில் இருந்து தப்பிக்க சற்று விலகினான். ஆகையால் அவனைத் தாண்டிச் சென்று விழுந்தது அந்த அரிவாள்.

ஆனால் ஆகாஷ் சற்று சுதாரிக்கும் முன் அவனது கைகளை லேசாக உரசிச் சென்றது மற்றையவன் வீசிய அரிவாள். ஆகாஷின் தோள் பகுதியில் காயத்தை ஏற்படுத்திய ஆயுதம் அவனைச் சற்று தடுமாறச் செய்ததில் அவனது கையில் இருந்த துப்பாக்கி நழுவி விழுந்து விட்டது.

“ஆகாஷ்…”

நந்துவும் சுபாஷும் ஆகாஷின் புறம் பதட்டமாகத் திரும்பிய இடைவெளியில் அந்த அடியாட்கள் இருவரும் ஓட்டம் பிடித்தனர்.

முன்புறம் நடந்த இந்த களேபரங்களால் பிரச்சனையைப் புரிந்து கொண்டனர் பின்புறம் இருந்தவர்கள். காவல்துறை வாகன சத்தத்தையும் கேட்டவர்கள், எக்காரணம் கொண்டும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று அவர்களுக்கு கொடுக்கப் பட்ட கட்டளையின் படி கையில் இருந்த  அரிவாளை ரஞ்சனை நோக்கி வீசி விட்டு ஓட்டமெடுத்தனர்.

தங்களை நோக்கி வந்த ஆயுதத்திலிருந்து சற்று விலகிச் சுதாரித்துப் பின் அவர்களைத் துரத்தத் துவங்கினர் ரஞ்சனும் ராஜாவும் .

பின்புறம் இருந்த கழிவு நீர்த் தொட்டியின் மீது ஏறி ஒருவன் குதித்துத் தப்பிவிட. மற்றவன் ஏறும் போது அவன் கால்களைக் குறி பார்த்து  சுட்டான் ரஞ்சன். “ஆ…” என்ற அலறலுடன் கீழே விழுந்தவன் வலியுடன் எழுந்து மீண்டும் தப்பிக்கப் பார்க்க, அவனை ஓடிச் சென்று பிடித்தவன் நையப் புடைத்து முன்புறம் இழுத்து வந்தான்.

வீட்டினுள் நுழைந்த காவல் துறையினர் மற்றும் வாட்ச் மேன் ஆகியோர் முன்புறம் தப்பி ஓடியவர்களை பிடிக்கும் முன் அங்கிருந்த தாழ்வான மரக்கிளையில் ஏறி காம்பௌண்டு சுவரைத் தாண்டிக் குதித்து ஓட்டம் பிடித்தனர் இருவரும்.

காலில் அடிபட்டவனை இரத்தம் சொட்ட இழுத்து வந்த ரஞ்சன், அங்கிருந்த காவலரிடம்  ஒப்படைத்து விட்டு, காவல் துறை வாகனத்தில் ஏறி, தப்பியோடியவர்களைத் தேடிச் சென்றான். ராஜாவும் தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு ரஞ்சன் சென்ற திசைக்கு எதிர்புறம் தேடிச் சென்றான்.

காவல்துறை வாகனத்தின் சத்தம் கேட்டு வெளியே வந்திருந்த அபியும், கங்காவும்  ஆகாஷின் அடி பட்ட கையைப் பார்த்ததும் அதிர்ந்து போய் ஓடி வந்தனர்.

அபி அழுகையுடன்,”என்ன ண்ணா? என்ன ஆச்சு ? இப்படி அடிபட்டிருக்கு… “

” ம்ப்ச்… ஒன்னும் இல்லடா. லேசான காயம் தான்”

“லேசான காயமா? எவ்வளவு இரத்தம் வருது? வா ண்ணா ஹாஸ்பிடல் போகலாம்” என்று அபி துடித்துக் கொண்டிருந்தாள்.

கங்காவின் உடல் வெளிப்படையாக நடுங்கிக் கொண்டிருந்தது. கண்கள் அவனது தலை முதல் பாதம் வரை ‘வேறு எங்கும் காயம் பட்டுள்ளதா?’ என்று ஆராய்ந்தது. கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது. பேச்சே எழும்பாமல் பயத்தில் வாயடைக்க நின்றிருந்தாள்.

உடனடியாக அவனுக்கு முதலுதவி செய்த சுபாஷ் ,தையல் போடும் அளவு காயம்  ஆழமாக இல்லாததால் மருந்து வைத்து பேண்டேஜைச் சுற்றினான்.

அதற்குள் வெளியே வந்திருந்த மஞ்சுளாவும் ஆர்த்தியும் பதட்டத்துடன் நடந்தவைகளை கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

மஞ்சுளா அவன் கையில் இருந்த காயத்தைப் பார்த்து கண்ணீருடன், “ பார்த்து ஜாக்ரதையா இருந்திருக்கக் கூடாதா ஆகாஷ்”  என்று துடித்துப் போனார்.

அதற்குள் ஹோமில் இருந்தவர்களும் வெளியே வந்து நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இத்தனை  வருடங்களில் இது போன்றதொரு நிகழ்வு நடைபெற்றதில்லை, ஆகையால் அனைவரும் பலத்த அதிர்ச்சியில் இருந்தனர்.

தப்பிச் சென்றவர்களைப் பிடிக்க முடியாமல், காவல் துறையினரை  வேறு பக்கம் தேடச் சொல்லி விட்டு, வீட்டிற்கு திரும்பிய ரஞ்சன், குண்டடிபட்டு அரை மயக்க நிலையில் இருந்தவனிடம் விசாரணையைத் துவக்கினான்

“ யார் டா நீங்க?”

இனி தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டவன், “திருட வந்தோம் சார்” என்றான்.

“யார் கிட்ட கதை விடற? திருட வந்தவனுங்க ஏன்டா அத்தனை பேரும் கையில அரிவாளோட வந்தீங்க? யார் அனுப்பியது உங்களை?”

“அதெல்லாம் இல்ல சார்… திருடத் தான் வந்தோம் சார்.”   கண்கள் அரைமயக்கத்தில் சொருகியது அவனுக்கு.

அருகே நின்றிருந்த சுபாஷ், “ ரஞ்சன் அவனுக்கு ப்ளட் ஹெவியா போகுது. அப்புறம் அவன் உயிருக்கே ஆபத்தாயிடும்.  முதல்ல அவன ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ. அப்புறமா விசாரணை பண்ணு” என்றபடி தற்காலிகமாக  இரத்தத்தைக் கட்டுப் படுத்த காலில் பேண்டேஜைச் சுற்றினான்.

ரஞ்சனும் அங்கிருந்த காவலர்களிடம், குண்டடிப் பட்டவனை வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பணித்து விட்டு, ஓய்வாக அமர்ந்திருந்த ஆகாஷிடம் வந்தான்.

அபி தன் அண்ணன் அருகே அமர்ந்து அவன் காயத்தை வருடிக் கொண்டிருக்க, கங்கா பதட்டம் குறையாதவளாய், இன்னும் கண்ணீரோடு அவனருகே நின்றிருந்தாள். மஞ்சுளா அவனுக்கு குடிக்க ஏதேனும் தரலாம் என்று சமையல் அறையில் தயாரித்துக் கொண்டிருந்தார்.

அங்கு வந்த ரஞ்சன், “ வந்தவனுங்களை எங்கயாவது இதுக்கு முன்னாடி பார்த்திருக்கியா?”

“இல்ல ரஞ்சன்.”

“நல்லா யோசிச்சி பாரு ஆகாஷ். அவனுங்க கண்டிப்பா திருட வந்தவனுங்க இல்ல. இங்க யாரையோ டார்கெட் பண்ணிதான் வந்திருக்கானுங்க. இத என்னால உறுதியா சொல்ல முடியும்.”

“இல்லடா… இங்க டார்கெட் பண்ணி கொல்ற அளவு யார் மேல பகையிருக்கு சொல்லு? எனக்கு தெரிஞ்சு எங்க குடும்பத்துக்கு யாரும் பகையாளி இல்ல. ஹோம்ல இருக்கறவங்க எல்லாருமே ஆதரவு இல்லாம இங்க வந்தவங்க தான். அவங்களுக்கு என்ன பகையிருக்கும்?

அவனுங்க திருட வந்தவனுங்களாதான் இருக்கும். வீடுன்னு நினைச்சி ஹோம் பக்கம் போயிருப்பானுங்க. யாராவது எதிர்த்து வந்தா தாக்கறதுக்கு ஆயுதங்கள எடுத்துட்டு வந்து இருப்பானுங்க.”

ஆகாஷ் கூறியதை நம்ப மறுத்தது ரஞ்சனின் போலீஸ் மூளை. “ சரிடா அவன் போட்டோவ எல்லா ஸ்டேஷன்க்கும் அனுப்பியிருக்கேன். கூடிய சீக்கிரம் எல்லாவனும்  மாட்டுவானுங்க பாரு. இப்ப நீ ரெஸ்ட் எடு நாளைக்கு காலையில வந்து ஒரு கம்ப்ளைண்ட் கொடு. நான் இப்ப அவன் கண்டிஷன் எப்படி இருக்குன்னு பார்த்திட்டு  வரேன்.” என்றவன் கிளம்பினான்.

கங்கா மனதளவில் பலத்த அதிர்ச்சியில் இருந்தாள். இங்கு வந்தவர்கள் கண்டிப்பாக அவளைக் கொல்லத்தான் வந்திருக்க வேண்டும். இன்று பிடிபட்டவன் அன்று காரில் துரத்தி வந்தவர்களுள் ஒருவன் தான் என்று அவளுக்கு உறுதியாகத் தெரிந்தது. ஆனால் இவ்வளவு வஞ்சம் வைத்துக் கொல்லும் அளவு தான் செய்த தவறு என்னவென்று அவளுக்குப் புரியவில்லை.

குடும்பத்தோடு இருந்தபோதும் எந்த பிரச்சனையும் அவள் அறிந்திருக்க வில்லை. சொத்துப் பிரச்சனை, கோர்ட் கேஸ் என்று ஏதேனும் அவர்கள் பேசும் போது, அவள் காதில் விழுந்து  விளக்கம் கேட்டாலும், யாரும் சொன்னதில்லை அவளிடம்.

“ உனக்கு எதுக்கு ராஜாத்தி இந்த பிரச்சனை எல்லாம்? இதெல்லாம் அப்பாவும் சித்தப்பாவும் பார்த்துக்குவோம். நீ சந்தோஷமா இரு டா…” என்று அவளை சமாதானம் செய்து விடுவர்.

திடீரென்று ஒருநாள் , நாம நம்ம சொந்த ஊருக்கு போகலாம் என்று சொல்லி அவசர அவசரமாக கிளம்பியதும்,  சாமான்களையெல்லாம் லாரியில் ஏற்றி அனுப்பிவிட்டு, அனைவரும் ஒரே வண்டியில் ஏறி சென்றதும் நிழலோவியமாய் மனதுக்குள் வந்தது. யாரிடமும் சொல்லிக் கொள்ளக் கூட அவகாசமில்லாமல் கிளம்பியது ஏன்? என்று பலமுறை யோசித்ததுண்டு.

அப்பொழுது நடந்த விபத்தில் அனைவரும் இறந்த பின், இரண்டு நாட்கள் சுய நினைவின்றிக் கிடந்ததும், பின் ஊட்டிக்குச் சென்றதும் நினைவில் வந்தது. ஊட்டியில் இருந்த போது சிஸ்டர் ஸாண்ட்ரா அவளை எங்கும் வெளியே அனுப்பியதில்லை. அப்போது வெளி உலகை கவனிக்கும் நிலையிலும் அவள் இல்லை. பிறகு அவள் அந்த ஆசிரமத்தை விட்டு வெளியேறியதும்,  அவளைக் கொல்லத் துரத்தியதும், பின்  இங்கு வந்து சேர்ந்ததும் அனைவரும் அறிந்ததே.

இப்போது என்ன செய்வது என்ற பெரும் குழப்பம் கங்காவின் மனதில். ‘இப்போது தன்னை நோக்கியுள்ள ஆபத்தைக் கூறுவதா? வேண்டாமா?  இதனைக் கூறுவதால் தன்னைப் பற்றிய விபரங்கள் இவர்களுக்குத் தெரிய வருமே!  அதன்பின் தன்னால் இங்கிருக்க முடியுமா? தன்னை அன்பாக பார்த்துக் கொள்ளும் மஞ்சுளா, பாசத்துடன் பழகும் அபி, ஆகாஷ் இவர்களைப் பிரிந்து இருக்க முடியுமா?

விதி என்னை விடாமல் துரத்துவது ஏன்?’  மன அழுத்தத்தைத்  தாள முடியவில்லை அவளால். ஆனால் தனக்கு நேர வேண்டிய ஆபத்து ஆகாஷைத் தாக்கியதில் பெரிதும் அதிர்ந்து போயிருந்தாள். என்ன செய்வது  என்றே விளங்கவில்லை அவளுக்கு. மன உளைச்சல் அதிகரித்து ஜுரம் வந்தது போல உடல் கொதித்தது.

அப்பொழுது கங்காவை கவனித்த ஆகாஷ் அபியிடம், ”அவளை உள்ளே கூட்டிட்டு போய் படுக்க வை அபி. இங்க நடந்ததைப் பார்த்து ரொம்ப பயந்து போய் இருக்கா” என்று கூறியவன், அனைவரையும் ஓய்வெடுக்க அனுப்பிவிட்டு தானும் படுக்கச் சென்றான்.

விடிய விடிய உறங்காமல் மனதைக் குழப்பிக் கொண்டிருந்த கங்கா, ஆகாஷின் மீது தான் அளவு கடந்த நேசம் வைத்திருப்பதை உணர்ந்து வேதனையுடன் விதியை நொந்து கொண்டாள். இந்த ஒரு வாரத்தில் வந்த நேசமில்லை இது என்பதில் தெளிவாக இருந்தாள்.

ஆகாஷ் தனது படிப்பு முடிந்து ஊரை விட்டுச் சென்றதும் கங்கா வெகுவாக தவித்துப் போனாள். அவனை இனிக் காண முடியாது என்பது அவளைச் சோர்வுறச் செய்தது. ஆனால் ‘அந்த சிறு வயதில் அனைவருக்கும் வரும் ஈர்ப்பு தான் இது என்பதையும், காதல் மற்றும் திருமணத்திற்கான வயது இது அல்ல’ என்பதிலும் தெளிவாக இருந்தவள்,  தன் மனதை படிப்பு மற்றும் நாட்டியத்தின் புறம் திருப்பி வெற்றியும் கண்டாள்.

கிட்டத்தட்ட அவனை மறந்து விட்டதாக எண்ணிக் கொண்டவளுக்கு, ஊட்டி யில் இருந்த காலகட்டங்களில் அவன் நினைவு சுத்தமாக இல்லை என்பது உண்மையே. ஆனால் அவனை அப்படி ஒரு சூழ்நிலையில் மீண்டும் சந்திப்போம் என்று எண்ணியிராதவள், அவனைக் கண்டதும் ‘காடு மேடெல்லாம் அலைந்து திரிந்தவன் தன் கூட்டை அடைந்தது போல’ ஆசுவாசம் அடைந்தாள்.

மறந்ததாக எண்ணிக் கொண்ட நேசம் இந்த ஒரு வார காலத்தில் மெதுவாக எட்டிப் பார்த்தது. அதிலும் இரத்தம் வழிய நேற்று இரவு அவன் நின்றிருந்த கோலம், உயிரை யாரோ உருவி வெளியே எடுப்பது போல வலி கொடுத்தது.

‘எதிர்காலமே இல்லாத இந்த நேசம் தனக்கு எதற்கு வந்தது?’ என்று எண்ணி எண்ணி இரவெல்லாம் மருகிக் கிடந்தாள். ‘அவனை மனதால் நினைக்கும் தகுதியாவது தனக்கு இருக்கிறதா?’ என்று தனக்குள்ளே கலங்கியவள், விடியலின் பொழுதில்,’ தன் மனதில் நிறைந்தவனை  அருகில் பார்த்துக் கொண்டிருப்பதே போதும், இங்கு இருப்பவர்களுக்கு  எந்த ஆபத்து வந்தாலும் தன் உயிரைக் கொடுத்தாவது காக்க வேண்டும்’ என்று எண்ணிக் கொண்டு உறக்கத்தை தழுவினாள்.

மறுநாள் காலை, தோட்டத்தில் அமர்ந்து வீட்டைச்  சுற்றி கேமரா பொருத்துவதற்கும், தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் இருந்து பாதுகாப்பு பணிக்கு ஆட்களை வரச் சொல்வதற்கும் அலைபேசியின் மூலம் பேசி ஏற்பாடு செய்தான்.

சுபாஷும் ஆர்த்தியும் அப்போதுதான் அவனது  வீட்டிற்குச் செல்லக் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

அபி அனைவருக்கும் தேநீர் தயாரித்து எடுத்து வந்தாள்.

“கங்கா அண்ணிக்கு கடுமையான ஜுரம் அடிக்குது ண்ணா.  அவங்களை  இப்பதான் எழுப்பி ப்ரெஷ் பண்ணிட்டு வரச்சொன்னேன்.”

சோர்வாக அங்கு வந்த கங்கா தனக்கான கோப்பையை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள். கண்களும் உதடுகளும் சிவந்திருந்தது. வெகுவாக வாடிப் போய் இருந்தாள் .

அவளது சோர்ந்த தோற்றத்தைக் கண்ட ஆகாஷ், “இனிமே இந்த மாதிரி நம்ம வீட்ல நடக்காது மா; வீடு முழுக்க கேமரா பொருத்த சொல்லியிருக்கேன்.  தனியார் செக்யூரிட்டிக்கும் ஏற்பாடு பண்ணியிருக்கேன். இனி பயமில்லாம இருக்கலாம். இப்ப சாப்பிட்டு ஃபீவர் க்கு மாத்திரை போட்டுக்கோ” என்றான்.

அவனை இமைக்காமல் பார்த்தவள் ‘சரி’ என்பது போல தலையாட்டினாள்.

சுபாஷும் ஆர்த்தியும் மாலை பிறந்த நாள் விழாவுக்கு அனைவரையும் அழைத்து விட்டு கிளம்பிச் சென்றனர்.

_____ _____ ______ ______ _______ _______ ______ _________ __________

கோயம்புத்தூரில் உள்ள உயர் ரக பார் ஒன்றில் அமர்ந்திருந்தனர் இருவர். அவர்கள், கங்காவைக் கொல்ல ஆள் அனுப்பிய பெரியவரின் மகன்கள்  சுந்தரமும் சுகுமாறனும்.

“நேத்திலேர்ந்து மனசு பக்பக்குன்னு இருந்துச்சி ண்ணே, ஆளை அனுப்பிட்டேனே ஒழிய எனக்கு அந்த புள்ளய கொல்ல மனசே இல்ல ண்ணே.”

“எனக்கு மட்டும் அந்த புள்ளைய கொல்லனுன்னு வெறியா என்ன?  ஐயா சொல்றத மீற முடியாம தான ஆளை அனுப்பி விட்டோம்”

“ மூனு பேரு தப்பிச்சிட்டானுங்க, ஒருத்தன் மாட்டிகிட்டான். நம்ப பேர சொல்லிடுவானோ?”

“அதெல்லாம் சொல்ல மாட்டான்… இருபது வருஷமா விசுவாசமா இருந்தவன். அவ்வளவு சீக்கிரம் வாயத் திறக்க மாட்டான்.”

“ஐயா தான் கொஞ்சம் டென்சனாயிட்டாரு.  இந்த பிரச்சனையெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்னு சொல்லி, அவர சமாதானப் படுத்தி ஊருக்கு அனுப்பறதுக்குள்ள  ரொம்ப கஷ்டமாயிடுச்சி அண்ணே.”

“அந்த புள்ளய இந்த ஊர விட்டு எங்கயாவது போகச் சொல்லனும்.”

“அவ வீட்டவிட்டு தனியா எங்கயாவது வந்தா பார்த்து பேசலாம் ண்ணே. நம்மை அடையாளம் தெரியுமா அவளுக்கு”

“சின்ன புள்ளையில பார்த்தது அடையாளம் தெரியுமோ என்னவோ?  தெரியலையே.”

அவள் வெளியில் வரும் போது அவளிடம் பேச வேண்டும் என்று இவர்கள் காத்திருக்க,  அங்கு அவள், ஒருவருக்கும் தெரியாமல் எப்படி வெளியே செல்வது என்று சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தாள்.

—– தொடுவோம்

error: Content is protected !!