கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 8_Part 2
மனிதர்களின் அனைத்து முடிவுகளும் அவர்கள் கையிலா இருக்கிறது? பாவம் விஜயேந்திரன் பாசப்பிடியில் சிக்கி வேறுவழியின்றி, “உங்க இஷ்டம் அம்மா…” என்று குரலில் பல உணர்வுகளைத் தேக்கியபடி சம்மதம் தெரிவித்து தன் அறை நோக்கிச் சென்றான்.
தன் காதல் விஷயத்தைச் சொல்ல முடியாமல் தோற்றுப் போன விஜயேந்திரன் தன் அறைக்குள் சென்று, கதவை தாழிட்டுக் கொண்டான். இவர்கள் திருமணத்தைப் பற்றிச் சிந்திக்க, விஜயேந்திரனின் நிலையை அறிய யாரும் முற்படவில்லை.
கீர்த்தனா இல்லத்தில், “கீர்த்தனா, முகுந்தன் தம்பி விஷயத்தால், கல்யாணத்தைச் சீக்கிரம் முடிக்கணுமுன்னு நவநீதன் சொல்றாப்ல.” என்று தோளில் துண்டை போட்ட படி, நாற்காலியில் அமர்ந்து சத்தியமூர்த்தி கூற, கீர்த்தனா வெட்கப்புன்னகையோடு தலை அசைத்தாள்.
“கீர்த்தனா… நிறைய வேலை இருக்கு. கல்யாணம் வரைக்கும் நீ ஆபிஸ் போக வேண்டாம். அப்புறம் உள்ளதை நீ அங்க போய் முடிவு பண்ணிக்கோ.” என்று கீர்த்தனாவின் தந்தை கூற, “சரி அப்பா.” என்று கீர்த்தனா சம்மதமாகத் தலை அசைத்தாள்.
தாயில்லாத குறையை கீர்த்தனாவின் தந்தை தீர்த்தாலும், கீர்த்தனாவுக்கும் பல வேலைகள் இருந்தன. அந்த வேலைகள், கீர்த்தனாவுக்குக் கடினமாகத் தெரியவில்லை. சலிப்பைத் தட்டவில்லை. விஜயேந்திரனின் முகம் அவள் கண்முன்னே தெரிந்தது. கீர்த்தனாவின் உதடுகள், “இந்திரன்.” என்று மென்னகையோடு அவ்வப்பொழுது யாரும் அறியாவண்ணம் முணுமுணுத்துப் பார்த்தது.
கீர்த்தனா, தன் வேலைகளைத் தொடர்ந்தபடி,
இதுதானா இதுதானா
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா
இவந்தானா இவந்தானா
மலர் சூடும் மணவாளன் இவந்தானா
பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானே
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்
என்று இனிய குரலில் பாட, கீர்த்தனாவின் திருமண கனவுகள் அவள் வீடெங்கும் கானமாக ஒலிக்க, “ஆகா…” என்று சத்தியமூர்த்தியின் குரலில், “அப்பா…” என்று சிணுங்கிக்கொண்டு தன் அறைக்குள் ஒளிந்து கொண்டாள் கீர்த்தனா.
தன் மகளின் இந்த புதிய அவதாரத்தில் தன் கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீரை சத்தியமூர்த்தி துடைத்துக் கொள்ள, அறையிலிருந்து கதவின் இடுக்கின் வழியாக தன் தந்தையைப் பார்த்த கீர்த்தனா, “அப்பா…” என்று அழுத்தமாக அழைத்துக் கொண்டு அவர் முன்னே நின்றாள்.
“என்ன அப்பா? ஏன் கண்கலங்குறீங்க?” என்று கீர்த்தனா பொறுப்பாகக் கேட்க, சற்று முன் கீர்த்தனாவின் கண்களிலிருந்த குறும்பு, அவா அனைத்தும் மறைந்திருந்ததைக் கவனித்த அவள் தந்தை, “நான் எவ்வுளவு தான் உன்னை அன்பா வளர்த்தாலும், அம்மா இல்லாதது ஒரு பெரிய குறை. உன் திருமண வாழ்க்கையாவது முழு சந்தோஷத்தோடு அமையனும்.” என்று எதிர்பார்ப்போடு கூறினார் சத்தியமூர்த்தி ஓர் தந்தையின் பொறுப்போடு.
“அப்பா… உங்க பிரென்ட் வீடு தான். எனக்கு ஒரு பிரச்சனையும் வராது.” என்று கீர்த்தனா நம்பிக்கையோடு கூற, “ம்… தெரிஞ்ச இடம். நானும் அதே நம்பிக்கையில் தான் கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னேன்.” என்று கீர்த்தனாவின் சொல்லுக்கு இசையாகக் கூறினார் சத்தியமூர்த்தி.
தன் மகளின் தலையை வாஞ்சையோடு தடவி, “என்ன தான் தெரிஞ்ச இடமா இருந்தாலும், புகுந்த வீடு எந்த பெண்ணுக்கும் ரோஜா பூக்களை மட்டும் விரிச்சி வைக்கிறதில்லை. சின்ன சின்ன கஷ்டங்களா சில முட்கள் இருக்கத்தான் செய்யும். நீ தான் பார்த்து பக்குவமா முட்களைக் கையாளனும். அப்பா தானே வளர்ந்தாங்கன்னு ஒரு சொல் வந்திற கூடாது.” என்று சத்தியமூர்த்தி உணர்ச்சி பொங்கக் கூற, “அப்பா… ரோஜானா முள் இருக்கத்தானே செய்யும். எதுக்கு பார்த்து பக்குவமா நடந்துகிட்டு. முள்ளைப் பிடுங்கி தூர எரிஞ்சிருவோம்.” என்று தந்தைக்கு விளையாட்டு போல் கீர்த்தனா பதிலளிக்க, ‘விளையாட்டு பிள்ளை.’ என்றெண்ணியபடி கீர்த்தனாவின் தந்தை புன்னகைத்துக் கொண்டார்.
ஆனால், மனதிலோ , ‘அப்பா. எனக்கு எந்த கஷ்டமும் வராது அப்பா. அப்படியே எவ்வுளவு கஷ்டம் வந்தாலும், உங்களை ஒரு நாளும் நான் வருத்தப்பட விடவே மாட்டேன் அப்பா.’ என்று சூளுரைத்துக் கொண்டாள் கீர்த்தனா.
கீர்த்தனாவின் நாட்கள் இப்படியான இனிமையான எதிர்பார்ப்புகளோடு நகர, விஜயேந்திரனின் நாட்கள்?
முகுந்தன் பல முறை முயன்றும் தாயின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு முகுந்தனிடம் பேசுவதைத் தவிர்த்துவிட்டான் விஜயேந்திரன். தாயின் மனநிலையை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அது மட்டும் தான் காரணமா? அவனுக்கும் பல மனக்குழப்பங்கள்!
ஆனால்? ஆனால்? ஆனால்? இப்படிப் பல ஆனாக்களுக்கு பின் விஜயேந்திரனின் நாட்கள் திருமணத்தை நோக்கிப் பல வலிகளோடும், பல தியாகங்களோடும், சில திட்டங்களோடும் நகர்ந்தது.
முகுந்தன் இல்லத்தில், திருமணம் முடிந்ததன் அடையாளமாக நிரஞ்சனா, முகுந்தன் இருவரும் ஒரே வீட்டிலிருந்தனர். நிரஞ்சனா வழக்கம் போல் கல்லூரிக்குச் செல்ல, முகுந்தன் அவளைக் கல்லூரியில் விட்டுவிட்டு பணிக்குச் சென்றான். உணவு உணவகத்தில் இருந்து வாங்கிக் கொண்டனர். சில சமயம் முகுந்தன் சமைக்க, நிரஞ்சனா அவனுக்கு உதவினாள்.
இப்படி ஒரு வாரம் நகர, அன்று முகுந்தன் சோர்வாக அமர்ந்திருக்க, “என்ன ஆச்சு?” என்று அவன் தலை கலைத்து நிரஞ்சனா புருவம் உயர்த்திக் கேட்டாள். “ம்ச்…” என்று முகுந்தன் சலித்துக் கொள்ள, “என் மேல கோபமா. நான் எதுவும் தப்பு பண்ணிட்டேனா?” என்று நிரஞ்சனா குழந்தையாய் சிணுங்க, அவளை தன் கை வளைவிற்குள் கொண்டு வந்து தலை மோதி, “நீ தப்பே பண்ணாலும், எனக்குக் கோபம் வராது.” என்று முகுந்தன் நிரஞ்சனாவின் கண்களைப் பார்த்தபடி கூறினான்.
“என்ன பிரச்சனை? என்கிட்ட சொல்லக் கூடாதா?” என்று நிரஞ்சனா காரியத்தில் கண்ணாகக் கேட்க, “அண்ணனுக்கு நாளைக்கு கல்யாணம்.” என்று முகுந்தன் கண்களில் வலியோடு கூற, நிரஞ்சனா அவனிடமிருந்து விலகி நின்று முகுந்தனை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.
நிரஞ்சனா மௌனமாக இருக்க, “அண்ணன் கூட இந்த விஷயத்தை என்னிடம் சொல்லலை. அம்மா, அப்பாக்கு தானே என் மேல் கோபம். இவனுக்கு என்ன?” என்று முகுந்தன் தன் உணர்ச்சிகளை அடக்கியபடி கூற, அவன் கண்கள் கலங்கியது. அதை நிரஞ்சனாவிடம் மறைக்க, தன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான் முகுந்தன்.
முகுந்தனின் முகத்தை வல்லந்தமாக தன் பக்கம் திருப்பி, “இன்னைக்கி காலேஜ்க்கு நான் லீவு. நாம கல்யாணத்துக்கு போறோம்.” என்று நிரஞ்சனா ஒற்றைக் கையை இடுப்பில் வைத்துக் கூற, “கல்யாணம் நாளைக்குத் தான். நீ காலேஜ் லீவு போட பிளான் பண்ணாத.” என்று நிரஞ்சனாவின் காதுகளைத் திருகினான் முகுந்தன்.
“அது மட்டுமில்லாமல், நம்மளை யாரும் கல்யாணத்துக்குக் கூப்பிடலை.” என்று முகுந்தன் வெறுப்பாகக் கூற, “நாம பண்ண வேலைக்கு நம்மளை யாரும் கூப்பிட மாட்டாங்க. வீட்டுக்கு வர கூடாதுன்னு தான் சொல்ல முடியும். கல்யாணத்துக்குப் போவோம். பார்த்திட்டு வருவோம். கல்யாணத்துக்கு வர கூடாதுன்னா சொல்ல முடியும்? எல்லாரும் இருக்கிறதால் பிரச்சனை பண்ண மாட்டாங்க. அப்படியே கோப பட்டா அமைதியா வந்திருவோம்.” என்று நிரஞ்சனா எதையும் ஏற்கும் மனநிலையோடு கூற, முகுந்தன் அவளை யோசனையாகப் பார்த்தான்.
“ஆ…” என்று நிரஞ்சனா மேலும் கீழும் தலை அசைத்து குழந்தை போல் கூற, நிரஞ்சனாவை குழப்ப விரும்பாமல் முகுந்தன் சம்மதமாகத் தலை அசைத்தான்.
விஜயேந்திரன், கீர்த்தனா திருமண நாளும் வந்தது.
முகுந்தனிடம் தைரியமாகப் பேசிவிட்டாலும், மண்டபத்திற்குச் செல்லுகையில் நிரஞ்சனாவிற்கு வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கத்தான் செய்தது.
திருமண ஏற்பாடுகளைப் பார்த்து நிரஞ்சனா பிரமித்துவிட்டாள். ‘ஒரு வாரத்தில் ஏற்பாடான கல்யாணம் மாதிரி தெரியலையே. காசு இருந்தால் என்னவேணாலும் பண்ணலாம் போல?’ என்று சிந்தித்தபடியே முகுந்தனோடு சென்றாள் நிரஞ்சனா.
முகுந்தனின் தாயார் பூமா வானத்திற்கும், பூமிக்கும் குதிக்க, “நம்ம பிரச்சனை நம்மளோட இருக்கட்டுமே! அதை ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டணுமா?” என்று நவநீதன் தன் மனைவியை கண்டிக்க, விஜயேந்திரன் அனைத்தையும் துளைத்தவன் போல் எங்கோ வெறித்தபடி மணமேடையில் அமர்ந்திருந்தான்.
பூமா வேறுவழின்றி தன் கணவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, “இவன் மட்டும் மணமேடைக்கு வரட்டும். இவ ஓரமாக இருக்கனும். இவ மணமேடைக்கு வரக்கூடாது.” என்று பூமா நிரஞ்சனாவை பார்த்து அழுத்தமாக கூற, “அம்மா.” என்று முகுந்தன் ஏதோ பேசத் தொடங்க, முகுந்தனின் கைகளை இறுகப் பற்றினாள் நிரஞ்சனா.
‘வேண்டாம்.’ என்று நிரஞ்சனா தலையசைக்க, முகுந்தன் நிரஞ்சனாவை கோபமாக முறைத்தான். ‘நீங்க போங்க.’ என்று நிரஞ்சனா கண்ணிமைக்க, “வா முகுந்தன்.” என்று தோள் மேல் கை போட்டு அழைத்த தன் தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவரை பின்தொடர்ந்து மணமேடைக்கு சென்றான் முகுந்தன்.
விஜயேந்திரன் யாரையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை. மணமேடையில் உணர்ச்சி துடைத்த முகத்தோடு அமர்ந்திருந்தான். ஒருவேளை, கீர்த்தனாவுக்குத் தாய் இருந்திருந்தால், மாப்பிள்ளையின் மனநிலையை அறிந்திருப்பாரோ? கீர்த்தனாவுக்கு அந்த கொடுப்பினை இல்லை.
செம்பருத்தி பூவின் நிறத்தில் சேலை கட்டி, கூந்தல் அங்குமிங்கும் அசைய கீர்த்தனா மணமேடைக்கு அழைத்துவரப்பட்டாள். சாமுத்திரிக லட்சணம் பொருந்தி, தேவதையாகக் காட்சி அளித்தாள் கீர்த்தனா. விஜேயேந்திரன் லீலாவிடம் கூறுவது போல் அழகாகச் சேலை உடுத்தி, நீளமான கூந்தலோடு கீர்த்தனா அவன் அருகே அமர்ந்தாள். ஆனால், விஜயேந்திரனின் கண்களுக்கு கீர்த்தனா தெரியவில்லை.
முன்பொரு நாள், இதே சிவப்பு நிறத்தில், கட்டத் தெரியாத சேலையோடும், ஆங்காங்கே பறந்து கொண்டிருந்த தலை முடியோடு நின்ற லீலா விஜயேந்திரனின் கண் முன்னே தோன்ற லீலாவின் எண்ணத்திலும், அன்றைய சம்பவத்திலும் விஜயேந்திரனின் உதட்டில் மெல்லிய புன்னகை பூத்தது. விஜயேந்திரனின் கம்பீரத்திற்கு அந்த புன்னகை பாந்தமாகப் பொருந்த கீர்த்தனா அதைப் படம்பிடித்துக் கொண்டாள்.
“பொண்ணு பக்கத்தில் வந்ததும் தான் மாப்பிள்ளைக்கு முகத்தில் சிரிப்பு வருது.” என்று ஒரு பெரியவர் கேலி பேச, அங்குச் சிரிப்பலை பரவியது. ‘எதற்காகச் சிரிக்கிறார்கள்?’ என்று புரியாமல் விஜயேந்திரன் முகத்தைச் சுழித்தான். விஜயேந்திரனின் மனம் லீலாவுக்கு செய்யும் துரோகத்தை எண்ணி குற்ற உணர்ச்சியில் தவித்தது. காதல் என்னும் மாயவலையில் சிக்கி கொண்டாலும், பாசம் என்னும் கயிறால் இழுக்கப்பட்டு மணமேடையில் அமர்ந்து ஐயர் கூறுவதைக் கடனே என்று விஜயேந்திரன் கூற, கீர்த்தனா ஐயரிடம் ஏதோ மெதுவாகக் கேட்க, ஐயர் பெருங்குரலில் சிரித்தார்.
‘அப்படி என்ன கேட்டாள்?’ என்று விஜயேந்திரனின் முகத்தில் சலிப்பு தெரிய, அனைவரின் முகத்திலும் ஆர்வம் தெரிந்தது.
அதே நேரம், அமெரிக்காவில் தன் இல்லத்தில் அமர்ந்து இலக்கில்லாமல் எங்கோ பார்த்தபடி, “விஜய்… விஜய்…” என்று முணுமுணுத்துக் கொண்டு தன் கவலைகளை மறக்கப் போதைக்கு மேல் போதை ஏற்றிக் கொண்டிருந்தாள் லீலா.
போதையில் லீலா மிதக்க, விஜயேந்திரன் குற்ற உணர்ச்சியில் தவிக்க, கீர்த்தனா கனவுகளோடு காத்திருக்க…
கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்…