கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 30

கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 30

கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 30 

நிரஞ்சனா ஆர்வமாகத் தலையைக் குனிந்து கொண்டு, ரோஜாச் செடியை நோக்கிப் பார்க்க… அவள் கண்களிலிருந்த எதிர்பார்ப்பை, கீர்த்தனா ரசித்துப் பார்த்தாள்.

‘காதல் பல இனிமையான கிறுக்குத் தனங்களைக் கொண்டது போலும்!’ என்று தோன்றும் எண்ணத்தை கீர்த்தனாவால் தடுக்க முடியவில்லை.

மலர்ந்தும் மலராத அந்த ரோஜா சின்ன சின்ன நீர்த் துளியோடு அழகாகக் காட்சி அளிக்க, “அக்கா… தேங்க்ஸ்… தேங்க்ஸ்..” என்று கீர்த்தனாவை இறுகக் கட்டிக்கொண்டாள் நிரஞ்சனா.

கீர்த்தனாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு, தட்டாமாலை சுற்றி, அவள் கன்னத்தில் பச்சக் என்று இதழ் பதித்தாள் நிரஞ்சனா.

“ஏய்!” என்று கீர்த்தனா தன் கன்னத்தைச் சிணுங்கலோடு துடைக்க, மீண்டும் சின்ன சின்ன மழைத் துளி இவர்களை வந்தடைந்தது.

வானத்தை அண்ணாந்து பார்த்த நிரஞ்சனா, “வானம் தெளிவா தான் இருக்கு. ரொம்ப காத்து மழை வராது.” என்று கீர்த்தனாவின் கைகளை பிடித்தபடி நிரஞ்சனா கூற, “தெரியுதில்லை? ரூமுக்கு போ.” என்று விஜயேந்திரன் மழையில் இவர்கள் நனைத்து கொண்டிருந்த கடுப்பில் கூறினான்.

“அத்தான். நேரம் கெட்ட நிறத்தில் தொந்தரவு பண்ணிட்டேனோ? அது மட்டுமில்லை. உங்க ப்ரொபேர்ட்டியை நான் சொந்தம் கொண்டாடிட்டு இருக்கேனா?” என்று கீர்த்தனாவை ஜாடை காட்டி நிரஞ்சனா கேலி பேசினாள்.

நிரஞ்சனாவின் கேலி பேச்சில், கீர்த்தனா முகம் சிவக்க, அந்த முக சிவப்பில் கீர்த்தனாவின் அழகு மேலோங்க அதில் சொக்கி போனான் விஜயேந்திரன்.

“அக்கா… நான் சொன்னது தான் சரி. நான் வேளை கெட்ட வேளையில் உங்களை தொந்திரவு பண்ணிட்டேன். அதை அத்தானின் பார்வை சொல்லுது.” என்று நிரஞ்சனா கீர்த்தனாவின் காதில், விஜயேந்திரனுக்கு கேட்கும் படியே கிசுகிசுக்க, “நிரஞ்சனா… சும்மா இரு.” என்று முணுமுணுத்தாள் கீர்த்தனா.

‘கீர்த்தனா கண்டுபிடிக்காத விஷயத்தைக் கூட, இவள் கண்டுபிடித்து விடுவாள் போல?’ என்ற எண்ணத்தோடு,  “கீர்த்தி… அவளை ஒழுங்கா உள்ள போக சொல்லு, இல்லைனா ரோஜா பூ அவளுக்கு இல்லை… நான் என் பொண்டாடிட்டுக்கு வச்சி விட்டிருவேன்னு சொல்லு.” என்று விஜயேந்திரன் நிரஞ்சனாவை மறைமுகமாக மிரட்ட, “ஐயோ அத்தான்… உங்களுக்கு ஊர் உலகத்தில் வேற ரோஜா பூவே இல்லையா? அக்காவுக்கு ரோஜா பூவெல்லாம் வேண்டாம். அவங்களே இன்று மலர்ந்த ரோஜா பூ மாதிரி தான் இருக்காங்க.” என்று சமாதானம் பேசி, “இதோ போய்டறேன். ரோஜா பூ பத்திரம்.” என்று எச்சரிக்கை செய்து விட்டு, அவள் அறை நோக்கி சிட்டாகப் பறந்தாள் நிரஞ்சனா.

விஜயேந்திரனின் கண்கள் கீர்த்தனாவைத் தழுவியது. மழையில் நனைந்த அவள் ஸ்பரிசம், அவள் அங்க வடிவுகளை எடுத்து காட்ட, தன்னிலை மறந்து நின்றான் விஜயேந்திரன்.

“நிரஞ்சனா பாவம்ங்க… முகுந்தனுக்கு சீக்கிரம் சரியாகணும்.” என்ற கீர்த்தனாவின் குரலில் தன்னிலை உணர்ந்து, “ம்…” என்று தலை அசைத்தான் விஜயேந்திரன்.

“நாம்ம அவங்க அம்மா, அப்பா கிட்ட பேசி, அவங்க வீட்டோட சமாதானம் செஞ்சி வைப்போமா?” என்று கீர்த்தனா கேட்க, விஜயேந்திரன் அவளைக் கூர்மையாக பார்த்தான்.

மழை நின்றிருந்தது. “மழை விட்டிருச்சு. ரூமுக்கு போகிற ஐடியா இல்லையா?” என்று நிரஞ்சனா வீட்டுக்குள் சென்றதை உறுதி செய்துவிட்டு விஜயேந்திரன் முன்னே நடந்த படியே கேட்டான்.

அவன் முன் வழிமறித்து  நின்று, “நான் கேட்ட கேள்விக்கு பதில்?” கீர்த்தான் கேட்க, “உனக்கே ஆயிரம் பிரச்சனை. இதில் நிரஞ்சனா பிரச்சனை வேறயா?” என்று புருவம் உயர்த்தி கேட்டான் விஜயேந்திரன்.

“எனக்கு என்ன பிரச்சனை? என் அப்பா சந்தோஷமா இருக்காங்க. அத்தை மாமாவும் சந்தோஷமா இருக்காங்க. யார் கிட்டயும் எந்த பிரச்சனையும் இல்லை. உங்க கிட்டயும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. குடும்பத்தில் எல்லாரும் நல்லாருக்கும் போது எனக்கு என்ன பிரச்சனை?” என்று கீர்த்தனா இன்முகத்தோடு கூற, அவள் அழகைக் காட்டிலும், அவள் மனம் அவனை இன்னும் ஈர்த்தது.

‘உனக்கு காதல் முக்கியம் இல்லை. எமோஷனல் ஃபூல். குடும்பம்… குடும்பம்… குடும்பத்தை கட்டிட்டு அழு. ஒரு கல்யாணத்தை நிறுத்த தெரியலை. ஆர் யூ எ மேன்?’ என்று லீலா அன்று திட்டியது நினைவு வர, ‘குடும்பம்… காதலிக்கும், மனைவிக்குமான வித்தியாசம் போலும்.’ என்ற எண்ணி கீர்த்தனாவை வாஞ்சையோடு பார்த்தான் விஜயேந்திரன்.

‘இவள் இறைவனால் எனக்காகப் படைக்கப்பட்ட பொக்கிஷம்.’ என்ற எண்ணம் தோன்ற, “போலாமா?” என்று கேட்டான் விஜயேந்திரன்.

சம்மதமாகத் தலை அசைத்து, கீர்த்தனா முன்னே செல்ல, “முகுந்தன் இப்படி இருக்கும் பொழுது, நாம எப்படி நிரஞ்சனா வீட்டில் பேசுறது? இந்த நிலமைங்கிறதால் பேசுறோமுன்னு அவங்க நினைச்சுக்க கூடாது. முகுந்தனுக்குச் சரியாகட்டும். நாம பேசி சரி பண்ணிருவோம்.” என்று விஜயேந்திரன் கீர்த்தனாவின் கேள்விக்கு பதில் கூற, “அது கரெக்ட். பட் கண்டிப்பா சரி பண்றோம். நிரஞ்சனா… கொஞ்சம் அவசரக் குடுக்கை. அது அவ வயசு அப்படி. சின்ன பொண்ணு தானே. பட் சோ ஸ்வீட்.” என்று கீர்த்தனா கூற, விஜயேந்திரன் புன்னகைத்துக் கொண்டான்.

இருட்டில், மெல்லிய வெளிச்சத்தில் அவர்கள் அறைக்குள் நுழைய, கண்ணாடி மாளிகையின் ஒளி வெள்ளத்தில் கீர்த்தனா நின்ற கோலம் அவனை மெய் சிலிர்க்க வைத்தது.

கீர்த்தனா பால்கனி அருகே சென்று, “இந்த பெண்ணால், மழையில் நனைந்து தூக்கம் சுத்தமா போச்சு. அப்புறம் நீங்க பேசியதில் என் சேலை அடிச்ச காற்றில் காஞ்சே போச்சு.” என்று கீர்த்தனா தன் போக்கில் தலையை விரித்து கொண்டு பேச, விஜயேந்திரன் மௌனமாக நின்றான்.

விஜயேந்திரனிடம் பதில் இல்லாமல் போக, கீர்த்தனா திரும்பி நின்று கொண்டு அங்கிருந்த ரோஜாச் செடியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஈரமான உடை அவள் உடலோடு ஒட்டி இருக்க, அவள் கூந்தலை முன்னே விட அதிலிருந்து வடிந்த நீர் முத்து முத்தாக வடிந்து அவள் கழுத்தைத் தீண்டி, அவள் முதுகில் தவழ்ந்து, இடையில் சொருகி நின்றது.

முத்து முத்தாக தவழ்ந்த நீரின் மீது விஜயேந்திரனின் மனம் கோபம் கொண்டது. பொறாமையும் கொண்டது. கீர்த்தனா, ரோஜாவைப் பார்த்தபடி, நீராஞ்சனாவின் பேச்சை அசை போட்டு கொண்டிருந்தாள்.

‘காதல்… எத்தகைய காதல் இது? இந்த பெண்ணிடம் முகுந்தனின் விஷயத்தில் மட்டும் தனி பொறுமை. இது தான் காதல் செய்யும் மாயம் போலும்!’ என்ற எண்ணியபடி இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.

“உஸ்…” என்று காற்று வீச, கீர்த்தனா உடல் சிலிர்த்தாள். அவள் உடலில் ஏற்பட்ட நடுக்கத்தில் விஜயேந்திரன் உள்ளம் பதறியது. ஆனால், வார்த்தைகள் வெளி வரவில்லை.

கீர்த்தனாவின் நடுக்கத்தில், அவள் கூந்தல் பல நீர் முத்துக்களை உதிர்க்க, அனைத்து முத்துக்களும் அவள் தேகம் தீண்டிச் செல்ல, அந்த முத்துக்களை சட் சட் சட்டென்று தொடும் ஆவல் விஜயேந்திரனின் உள்ளத்தில் எழ, அவன் அவளை நெருங்கினான்.

கால்கள் பின்ன, அவன் அறிவு அவனை ஆட்டி படைக்க, மனமோ அவனை முன்னே முந்தி செல்ல சென்றது. விஜயேந்திரன் கீர்த்தனா அருகே சென்று, அவள் முதுகில் வடிந்து கொண்டிருந்த நீர்த் துளியை தன் ஆள் காட்டி விரலால் தொடுவதற்கு நெருங்க, கூந்தலிலிருந்து வேகமாக உருண்டு வந்த நீர்த் துளி அவளை முழுதாக தீண்டிச் சட்டென்று ஒலியோடு தரையைத் தொட, அந்த சத்தத்தில் விழுக்கென்று நிமிர்ந்தான் விஜயேந்திரன்.

‘நான் என்ன செய்யறேன்? இது காமமா? மனைவி என்ற உரிமையா? நான் மனைவி என்று இவளுக்காக என்ன செய்திருக்கிறேன்? விவாகரத்து கேட்டதை தவிர?’ என்று அவன் மனசாட்சி குடைய விஜயேந்திரன் கீர்த்தனாவிடம் இருந்து விலகி நின்றான்.

மீண்டும், அவன் கண்கள் கீர்தனாவிடம் செல்ல, ‘இவ இப்படி இருந்தா, நான் இன்னைக்கு எதாவது பண்ணிடுவேன்.’ என்ற எண்ணம் தோன்ற, “கீர்த்தி… சேலையை மாத்து. இல்லனா உடம்பு சரி இல்லாமல் போய்டும்.” என்று சற்று கண்டிப்போடு கூறினான் விஜயேந்திரன்.

விஜயேந்திரன் தன் எண்ணப்போக்கு கீர்த்தனாவுக்குத் தெரிந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

“உங்க ட்ரெஸ்ஸும் ஈரமாகத் தான் இருக்கு.” என்று அவன் கண்டிப்புக்கு மறுப்பு தெரிவிப்பது போல் பழிப்பு காட்டி அவர்கள் அறைக்குள் அவளுக்காக இருக்கும் தனி ட்ரெஸ்ஸிங்  அறைக்குள் சென்று உடை மாற்றிவிட்டு வந்தாள் கீர்த்தனா.

திருமணமான புதிதில் இருந்த உற்சாகமான முகத்தை இப்பொழுது கீர்த்தனாவிடம் பார்க்க முடிந்தது. கீர்த்தனா குறுக்கும் நெடுக்குமாக நடக்க, விஜயேந்திரன் மெத்தையில் படுத்துக் கொண்டு, தன் கைகளைத் தலைக்கு அண்டை கொடுத்தபடி, “தூங்கலையா கீர்த்தி?” என்று கேட்க, “தூக்கமே வரலீங்க. மழை நீர் குளுருதுன்னு வெதுவெதுப்பான தண்ணீரில் குளிச்சேன். தூக்கம் சுத்தமா போச்சு.” என்று சிறு குழந்தை போல் கண்களை உருட்டி உதட்டை பிதுக்கினாள் கீர்த்தனா.

‘என்ன கொடுமை இது. இன்னைக்கு இவ கண்ணு பேசுது. உதடு இம்சிக்குது. விஜய் சரி இல்லை டா.’ என்று அவன் கண்களை மூட எத்தனிக்க, “கொஞ்ச நேரம் பேசிட்டு இருப்போமா? மழை காத்து… சின்ன சின்ன தூரல்… நிலா வெளிச்சம். பூக்களின் வாசம். நம்ம தோட்டம் ரொம்ப அழகா இருக்கு. பால்கனியில் நின்னு பேசிட்டு இருப்போமா?” என்று கீர்த்தனா கேட்க, தலை அசைத்து எழுந்து வந்தான் விஜயேந்திரன்.

தோழியாய் பல கதைகள் பேசினாள் கீர்த்தனா. தவற விட்ட நாட்களை, பற்றிக் கொண்டான் விஜயேந்திரன்.

அவன் செவிகள் அவள் வார்த்தைகளுக்குச் செவி சாய்த்தாலும், அவன் கண்கள் அவளை இன்று வேறு விதமாகத்தான் பார்த்தது.

அவள் கூந்தல் மேகமாக நிலா போன்ற அவள் முகத்தை ஒட்டி பாந்தமாக நிற்க, மீண்டும் அந்த நீர்த் துளி கன்னம் தொட்டு, கழுத்தில் வடிய, ‘ஆண்டவா, நீர் துளியை நான் முன்னே பின்னே பார்க்காதது போல, இன்னைக்கு என் பார்வை அந்த நீர்த் துளி செல்லும் இடத்தையே தொடருதே…’ என்று விஜயேந்திரன் நொந்து கொள்ள, காற்று சற்று பலமாக வீச, அவள் சேலை சற்று விலகி, நீர் முத்துக்கள் தோய்ந்த அவள் இடுப்பின் வளைவை எடுத்துக் காட்டியது.

கீர்த்தனாவின் தலை முடி அவள் இடுப்பை மறைக்க முயல, வீசிய காற்றில் அவள் முடி சிலும்பிக் கொண்டு என்னைப் பார் பார் என்று அழைக்க விஜயேந்திரன் தன் கண்களை இறுக மூடினான்.

‘இது காதலா? இல்லை காமமா?’ அவன் மனதில் பட்டிமன்றம் அரங்கேற, மூடிய கண்களுக்குள்  நீச்சல் குளத்தில் பல நேரம் நீச்சல் உடையில்  அவன் முன் காட்சியளித்த லீலா தோன்றினாள்.

‘அவளிடம் நான் கண்ணியம் தவறவில்லை.  அவை எதுவும் என்னை இப்படி இம்சித்ததுமில்லை. அது காதல் இல்லையா? இல்லை இது காதல் இல்லையா? இல்லை இது… அவனால் மேலும் சிந்திக்க முடியவில்லை.’ பல கேள்விகள் விஜயேந்திரனுள் எழ, அவன் மௌனிக்க, விஜயேந்திரனை தோள் தொட்டு உலுக்கி, “நான் ரொம்ப போர் அடிக்குறேனா? தூங்க போவோம்.” என்று அவள் பரிதாபமாகக் கூற, சம்மதமாகத் தலை அசைத்தான் விஜயேந்திரன்.

மழை தூரல் மீண்டும் மண்ணை தொட, “இஸ்…” என்ற சத்தத்தோடு பூச்செடிகளில் இருந்து வந்த வண்டு கீர்த்தனாவை நெருங்க, வண்டின் சத்தத்தில் திரும்பிய கீர்த்தனா, பின் நகர்ந்து, “இந்திரன்… இந்திரன்… இந்திரன்…” என்று அச்சத்தோடு முனங்கிக் கொண்டு பின்னே நகர்ந்து அவன் மீது மோதி நின்றாள்.

விஜயேந்திரனின் கொள்கை, அவன் விலகல், அவன் கட்டுப்பாடு மொத்தத்தையும் உடைத்து எரிந்தது கீர்த்தனாவின்  தீண்டல்.

விஜயேந்திரனின் அறிவு அதன் செயல்பாட்டை நிறுத்திக் கொள்ள, மனமோ, ‘இவள் என் மனைவி…’ என்று உரிமையும் எடுத்துக் கூறியது.

விஜயேந்திரனின் கைகள் தானாக அவளைச் சுற்றி வளைத்தது.

வண்டு அதன் வேலையை செவ்வனே முடித்து விட்டு விலகிச் செல்ல, விஜயேந்திரனின் அணைப்பு கீர்த்தனாவைச் சொல்ல முடியாத உணர்வுக்குள் அழைத்துச் செல்ல, கீர்த்தனா அமைதியானாள்.

“கீர்த்தி…” தன் கைவளைவிற்குள் இருக்கும் மனைவியை அழைத்தான் விஜயேந்திரன்.

‘ம்…’ என்று சொல்ல நினைத்து, தோற்று போனாள் கீர்த்தனா. ஒரு கையால் கீர்த்தனாவின் இடுப்பை வளைத்துப் பிடித்து, தன் அருகே இருக்கும் மனைவியின் கழுத்து வழியாக வழிந்தோடிய நீர் துளியை தன் ஆள் காட்டி விரலால் தொட, அது பட் பட்டென்று காணாமல் போனது.

கீர்த்தனா பேச வாய் எழாமல், தான் விரும்பிய கணவனின் அணைப்பில், அனைத்தையும் மறந்தாள். ஒவ்வொரு முறையும் ஆள் காட்டி விரலால் அவன் அவளைத் தீண்ட, கீர்த்தனாவின் மனம் வெட்கத்தில் தவிக்க, தன் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

விஜயேந்திரன் கீர்த்தனாவை தன் பக்கம் திருப்பி, அவள் நெற்றியில் இதழ் பதிக்க, ‘முதல் முத்தம்… முதல் ஸ்பரிசம்…’ என்று கீர்த்தனாவின் மனம் ஆர்பரிக்க, அவள் கூந்தல் மறைக்க எத்தனித்த இடத்தை தீண்ட, அங்கு வார்த்தைகளுக்கு வாய்ப்பில்லாமல் போக, இடைவெளிக்குச் சந்தர்ப்பம் இல்லாமல் போனது.

முதல் முத்தம்… முதல் ஸ்பரிசம்… என்ற அவள் எண்ணப் போக்கில் முதல் காதலும் வந்து அமர்ந்தது.

உணர்வுகளின் பிடியில் அவன் நெருங்க!

உணர்ச்சிகளின் பிடியில் அவள் விலக!

உணர்வு  வெள்ளத்தில் அவன் பழசை மறக்க!

உணர்ச்சி வெள்ளத்தில் அவள் நினைவுகள் அலைமோத!

கீர்த்தனா அப்படி ஒரு கேள்வியைக் கேட்க, விஜயேந்திரன் சரேலென்று விலகி அவளைக் கண்கள் கலங்கப் பார்த்தான்.

விஜயேந்திரன் கண்களில் வழிந்த கண்ணீர்,  தான் கேட்ட கேள்வியின் வீரியத்தை உணர்த்த கீர்த்தனா தன் தவற்றைப் புரிந்து மண்டியிட்டுக் கதறினாள்.

உணர்வுகளும், உணர்ச்சிகளும் இடம் மாற, விஜயேந்திரன் தன்  முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

சில நிமிட கதறலுக்கு பின், விஜயேந்திரனை தன் பக்கம் திருப்பி, கண்ணீர் வழிய, “தப்பு தான்… நான் அப்படி கேட்டது தப்பு தான். என்னால் பழசை மறக்க முடியலை. ஆனால், நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாது. என்னை மன்னிச்சிருங்க. சாரி சாரி..” என்று விஜயேந்திரனின் மார்பில் சாய்ந்து கதறினாள் கீர்த்தனா.

விஜயேந்திரனின் கைகள் மேலே எழவில்லை.

தன் மேலே கோபம் கொண்டு, தன்னை திட்டிக் கொண்டு தன்னிடமே அழும் மனைவியை அவனுக்கு இன்னும் பிடித்துத் தான் போனது.

சில நொடிகளில் தன்னை தானே சாமாதானம் செய்து கொண்டு, “கீர்த்தி… அழாத… எல்லாம் சரியாகிரும். நான் சரி பண்றேன்.” என்று அவள் தலை கோதி ஆறுதல் கூறினான் விஜயேந்திரன்.

தான் காயப்படுத்தியும், தன் வலிகளை மறைத்து தன்னை சமாதானம் செய்யும் கணவனை அவளுக்கு இன்னும் பிடித்துத் தான் போனது. “நான் கேட்டது தப்பு… தப்பு… தப்பு…” என்று அவன் மார்பில் ஒன்றிக் கொண்டு பதறும் மனைவியை சமாதனம் செய்யும் வகை தெரியாமல் அவளை தோளோடு அணைத்துக் கொண்டு அவளை சரி செய்யும் வழி தெரியாமல் பரிதாபமாக பார்த்தான் விஜயேந்திரன்.

இங்குக் காமம் இல்லை. இது காதலா? இல்லை மனைவி… தன்னவள்… இல்லை அனைத்தும் அவளே என்ற அங்கீகாரமா!                       தெரியவில்லை… ஆனால், இருவரின் மனதிலும் அன்பும், தன் சரி பாதியின் எண்ணமும் நிறைந்திருந்தது.

அத்தோடு,

தவறுகளும்! அதன் வடுக்களும்! சில வலிகளும்!

நிறைந்திருக்க…

கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்.

 

error: Content is protected !!