கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  13

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  13

விஜயேந்திரன் கோபத்தில்  வண்டியை வேகமாகச் செலுத்தினாலும், அவன் எண்ணங்கள் கீர்த்தனாவைச் சுற்றி வந்தது. அவர்கள் அலுவலகத்தில் பணி  புரிந்ததால், அவள் கல்வி திறமை தெரிந்திருந்தாலும்,  திருமணமான ஒரு நாளில் கீர்த்தனாவின் பரிமாணத்தில் சற்று அயர்ந்து தான் போயிருந்தான் விஜயேந்திரன்.

‘நான் விவாகரத்து கேட்டால், அவள் விவாகரத்து பத்திரிக்கை கேட்கிறாள். என்ன ஒரு வில்லத்தனம்?’ என்றெண்ணியபடியே விஜயேந்திரன் காரை செலுத்தினான். கோபப்படவா? இல்லை வருந்தவா? இல்லை சிரிக்கவா? அவனுக்கே தெரியவில்லை போலும்! விஜயேந்திரனின் முகம் பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது.

அதே நேரம், முகுந்தனின் இல்லத்தில், நிரஞ்சனா புத்தகத்தைக் கையில் வைத்தபடி கண்களை மூடிக் கொண்டு நாற்காலியில் சாய்ந்தாள்.

அவள் அதரங்களில் மெல்லிய புன்னகை எட்டிப் பார்க்க, நிரஞ்சனாவின் கன்னங்கள் சிவக்க, அவள் உதடுகள் பாடலை முணுமுணுக்க ஆரம்பித்தது.

 “ஸ்நேகிதனே! ஸ்நேகிதனே!

ரகசிய ஸ்நேகிதனே!

சின்ன சின்னதாய் கோரிக்கைகள்

செவி கொடு ஸ்நேகிதனே!”

முகுந்தன் கண்கள் வெளிப்படுத்திய  அன்பில், நிரஞ்சனா நெக்குருகிப் போனாள்.     முகுந்தனின் கைகள் அவளை நெருங்க, நிரஞ்சனாவின் கன்னம் மேலும் சிவந்தது. முகுந்தனின் கைகள் அவளை இடையோடு அணைக்க, நிரஞ்சனாவின் தேகம் நடுங்கி மேலும் பாடினாள் நிரஞ்சனா.

“இதே அழுத்தம் அழுத்தம்

இதே அணைப்பு அணைப்பு

வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்

வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே

ஸ்நேகிதனே! ஸ்நேகிதனே!

ரகசிய ஸ்நேகிதனே!”

சுவரில் சாய்ந்து கண்ணோர குறும்போடு நிரஞ்சனாவின் பாடல், கண்கள் அவள் முகம் வெளிப்படுத்திய வெட்கத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் முகுந்தன். சில நொடிகளில், பாடுவதை விட்டுவிட்டு விழி மூடி மௌன நிலை செல்ல, நிரஞ்சனாவின் கனவு செல்லும் பாதையறிந்து அவளை நெருங்கி அவள் காதுகளைத் திருகினான் முகுந்தன்.

“ஆஆ…” என்று நிரஞ்சனா அலற, “என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கோபமாகக் கேட்டான் முகுந்தன். “ஹி…” என்று நிரஞ்சனா சிரிக்க, முகுந்தன் அவளைக் கோபமாக முறைத்தான்.

“எனக்குப் பாட தெரியாதுன்னு உனக்குத் தெரியும் தானே! எதோ எனக்குத் தெரிந்த ராகத்தில் கத்தினேன். நல்லா பாடாததுக்கெல்லாம் இப்படிக் கோபப்பட கூடாது.” என்று நிரஞ்சனா விசுக்கென்று கூறினாள். “படிக்காம்ம என்ன பாட்டு? நீ நல்லா படிக்கலைனா என் மேல் தான் தவறுன்னு எல்லாரும் சொல்லுவாங்க.” என்று முகுந்தன் முகத்தை உம்மென்று வைத்தபடி கூறிக்கொண்டே சமையலறை நோக்கிச் சென்றான். ” நான் நல்ல படிப்பேன். இனி அதை விட நல்லா படிக்கறேன்.” என்று கூறிக்கொண்டே அவன் பின்னோடு சென்றாள் நிரஞ்சனா.

முகுந்தன் சமையல் வேலையில் இறங்க, சமயலறை திண்டில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தாள் நிரஞ்சனா. அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, அவள் கோபமாக இருக்கிறாள் என்று அறிந்தும் நிரஞ்சனாவை சட்டை செய்யாமல் வேலையைத் தொடர்ந்தான் முகுந்தன்.

“ஒரு பாட்டு பாடினா இவ்வளவு தப்பா?” என்று நிரஞ்சனா முணுமுணுக்க, “பாடின பாட்டு அப்படி! நாம இருக்கிற நிலையில், படிக்குற வேலையை விட்டுட்டு, அலைபாயுதே பாட்டு முக்கியமா? ஏற்கனவே அப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.  இப்ப இப்படி பாடினா என்ன அர்த்தம்?” என்று முகுந்தன் கோபமாக கேட்டான்.

“ஹே. முகுந்த்! ஒரு வேலை ஷாலினி மாதிரி எனக்கு  எதாவது ஆச்சுன்னா, நீ மாதவன் மாதிரி அழுவியா? எங்க அம்மா, அப்பா என்னைப் பார்க்க வந்திருவாங்களா?” என்று நிரஞ்சனா ஆர்வமாகக் கேட்க, “லூசா நீ?” என்று கடுப்பாகக் கேட்டான் முகுந்தன்.

அப்பொழுது அவர்கள் வீட்டிற்கு வந்த விஜயேந்திரன், “முகுந்தன்… முகுந்தன்…”  என்று வெளியிலிருந்தபடி அழைத்தான்.

“இதுல கோபப்பட என்ன இருக்கு?  எனக்கு எதுவும் ஆகாது.” என்று நிரஞ்சனா விளையாட்டாகவே கூற, “ஒன்னு குடுத்தா தெரியும் உனக்கு.” என்று முகுந்தன் கோபமாகக் கூற, “ம்… கொடுப்ப! கொடுப்ப! இப்ப எதுக்கு ஒன்னும் இல்லாத விஷயத்திற்கு இப்படி குதிக்குற? பாடினா திட்டுற? பேசினா திட்டுற? உனக்கு என் மேல் கோபம். இன்னைக்கு உங்க அண்ணனைப் பார்க்க போகமுடியலை. அவங்க மறுவீட்டுக்குப் போக முடியலைன்னு கோபம். அதைத் தான் இப்படி காட்டுற.” என்று நிரஞ்சனா கூற, செய்யும் வேலைகளை விட்டுவிட்டு அவளை ஆழமாகப் பார்த்தான் முகுந்தன்.

எவ்வுளவு அழைத்தும் பலன் இல்லாமல் போக… அழைப்பு மணியும் வேலை செய்யாமல் போக…. அலைப்பேசியில் அழைத்து பேசப் பொறுமை இல்லாமல் போக… கதவைத் திறந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான் விஜயேந்திரன். அங்கு அவன் கண்ட காட்சியில், வந்த விஷயம், கோபம் என அனைத்தையும் மறந்து அவர்களை ஆர்வமாகப் பார்த்தான் விஜயேந்திரன்.

நிரஞ்சனா கைகளில் புத்தகத்தோடு திண்டில் அமர்ந்து, முகுந்தனைக் கோபமாக முறைத்து, “என்ன பாக்குற? நான் சொல்றது தான் நிஜம். இவளைக் கல்யாணம் பண்ணது தானே பிரச்சனை. அப்படின்னு யோசிக்கிற? வேண்டாம் பொண்டாட்டி கை பட்டா குற்றம், கால் பட்டா குற்றம்முன்னு சொல்லுவாங்க. அது தான், இன்னைக்கு நான் உனக்கு வேண்டாதவளா தெரியறேன்.” என்று நிரஞ்சனா குரலை உயர்த்த, முகுந்தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு சமையலை தொடர்ந்தான்.

“பார்த்தியா பேச மாட்டேங்குற? உனக்கு என் கிட்ட பேச பிடிக்கலை.” என்று நிரஞ்சனா தீர்க்கமாகக் கூற, “இரண்டு.” என்று அழுத்தமாகக் கூறினான் முகுந்தன்.

‘முகுந்தன் கெட்டிக்காரன் தான். திறமைசாலி தான். ஆனால், இந்த பொறுமை புதிது. திருமணம் மனிதர்களை மாற்றிவிடும் போல? பொறுமைசாலி நான்… நேற்று முதல் அதிகமாகக் கோபப்படுகிறேன்.’ என்று எண்ணியபடி, ‘என்ன இரண்டு?’ என்று நடைமுறை  வாக்குவாதத்தின் சுவாரஸ்யத்தில், சுவரில்  சாய்ந்தபடி அவர்கள் பேச்சைக் கவனிக்க ஆரம்பித்தான்.

“இரண்டாவது சண்டைன்னு சொல்றியா? சண்டைக்குக் காரணம் நீ தான்.” என்று திண்டின் மீது சம்மணமிட்டு அமர்ந்து, நிரஞ்சனா அழுத்தமாகக் கூற, “சண்டை போடுற எண்ணம் எனக்கில்லை நிரஞ்சனா. நாம சண்டை போடுற நிலைமையிலும் இல்லை. புரிஞ்சிக்கோ. நீ படிக்கணும். வேலைக்கு போகணும். நான் இப்ப இருக்கிற வேலையில் முன்னேறணும். இதை நாம்ம பண்ணினா, நம்ம வீட்டில் ஏத்துக்க வாய்ப்பிருக்கு.” என்று கூறி முகுந்தன் இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தான்.

“நாம கல்யாணம் பண்ண முறை தப்பு. அதை நினைச்சி நாம்ம இரண்டு பெரும் தினமும் வருத்தப்படுறோம். ஏதோ, சூழ்நிலை… விதி இப்படி நடந்திருச்சு. இதனால், உன் தங்கை வாழ்க்கையும் பாதிக்கப்படும். என் அண்ணனுக்கும் அவசர கல்யாணம் ஆகிருச்சு. இதை எல்லாம் நம்மளால சரி செய்ய முடியாது. ஆனால்…” என்று முகுந்தன் ஆழ மூச்செடுக்க, சுவரின் மீது சாய்ந்திருந்த விஜயேந்திரனின் கண்கள் கலங்கியது.

முகுந்தன் மீதிருந்த கொஞ்சநஞ்ச கோபமும் விஜயேந்திரனின் கண்ணீரோடு கரைந்து போனது.

“நான் உன்கிட்ட வம்பு வளர்களை.” என்று நிரஞ்சனா தலை அசைத்து, சமாதானம் முயற்சியில் இறங்க, அவள் தலை கோதி, அவளை முகுந்தன் நெருங்க, “க்கும்…” என்று ஓர் கனைப்பு குரலில் முகுந்தன் நிரஞ்சனா இருவரும் பதட்டமாகத் திரும்பினர்.

“அண்ணா…” என்று  ஆனந்த, அதிர்ச்சி அழைப்போடு முகுந்தன் அவன் அருகே செல்ல எத்தனிக்க, தான் பேசிய பேச்சும், திண்டின் மீது அமர்ந்து செய்த அட்டகாசமும், முகுந்தன் வேலை செய்ததும் நினைவு வர நிரஞ்சனாவின் இதயம் வேகமாகத் துடித்தது.

‘இவங்க ஏன் இங்க வரணும்? எதுவும் திட்டுவாங்களோ?’ என்ற எண்ணம் மேலே எழும்ப, நிரஞ்சனாவின் கைகள் நடுங்கியது. முகுந்தனின் தோள்களை பற்றி, முகுந்தன் பின்னே பாதி ஒளிந்து கொண்டு மிரண்ட விழிகளோடு விஜயேந்திரனை பரிதாபமாகப் பார்த்தாள் நிரஞ்சனா.

நிரஞ்சனாவின் நிலையை முகுந்தன் அறியவாய்ப்பில்லை. ஆனால், அவள் நிலையைப் புரிந்து கொண்ட விஜயேந்திரன் தலை அசைத்து அவர்களை அருகே அழைத்தான்.

வருத்தம் தான். கோபம் தான். ஆனால், அதை வெளிப்படுத்தி என்ன செய்வது? யாருக்கு என்ன பலன்? என்ற எண்ணத்தை விஜயேந்திரனின் கண்கள் வெளிப்படுத்தியது.

நிரஞ்சனாவின் இமைகள் பதட்டத்தில் துடிக்க, ‘சின்ன பெண்.நேற்று திருமண பதட்டத்தில் நான் இவளைக் கவனிக்கவில்லை.’  என்று எண்ணினான் விஜயேந்திரன். “உன் பெயர் என்ன?” என்று விஜயேந்திரன் கேட்க, நிரஞ்சனாவை அப்பொழுது தான் திரும்பி பார்த்த முகுந்தன், அவள் நிலை அறிந்து, “நிரஞ்சனா.” என்று கூறினான்.

“உன்னை கேட்கலை.” என்று விஜயேந்திரன் அழுத்தமாகக் கூற, முகுந்தன் மௌனமாக தன் தமையனைப் பார்த்தான். “பயப்பட வேண்டாம். நான் காதலுக்கு எதிரி இல்லை. உங்களைப் பிரிக்க மாட்டேன்.” என்று குரலைச் சற்று உயர்த்தி, அதற்கு அழுத்தம் கொடுத்து நிரஞ்சனாவுக்கு புரிய வைக்கும் நோக்கோடு கூறினான் விஜயேந்திரன்.

நிரஞ்சனா விஜயேந்திரனை விழி விரியப் பார்த்து, “அவங்க மேல, எந்த தப்பும்…” என்று நிரஞ்சனா பேச ஆரம்பிக்க, “நிரஞ்சனா.” என்று அவளை கண்டிக்கும் விதமாக அழைத்தான் முகுந்தன்.

“இல்லை முகுந்தன். நான் யார் கிட்டயாவது சொல்லணும். என்னைப் பேச விடு.” என்று முகுந்தனிடம் கூற, விஜயேந்திரனிடம் திரும்பி, “அவங்க மேல எந்த தப்புமில்லை. நான் தான்… நான் தான்…” என்று கண்ணீர் வடிய, கூற வந்ததை முடிக்க முடியாமல், நிரஞ்சனா தடுமாற, தன் மனைவியின் சொல்லுக்கு கட்டுப்பட்டோ  இல்லை கோபப்பட்டோ அமைதியாக நின்றான் முகுந்தன்.

அங்கிருந்த பாட்டில் நீரை நிரஞ்சனாவிடம் கொடுத்து, “பழசை பேச நான் வரலை. உங்க இரண்டு பேரை ஒரு எட்டு பார்த்துட்டு போகலாமுன்னு வந்தேன். சரியோ, தப்போ இந்த வாழக்கையை சண்டை போடாம சந்தோஷமா  வாழுங்க. எல்லார் கோபத்தையும் கொஞ்ச நாளில் சரி செஞ்சிரலாம். எனக்கு முகுந்தன் எப்படியோ? அப்படி தான் நீயும்.” என்று பொறுமையாகப் பேசினான் விஜயேந்திரன்.

மேலும் சில நிமிடங்கள் முகுந்தனிடம் பேசிவிட்டு, தண்ணீரை மட்டும் அருந்திவிட்டு அங்கிருந்து கிளம்பினான் விஜயேந்திரன். இருவரும் உணவருந்தச் சொல்ல, அனைத்து பிரச்சனைகளயும் சரி செய்துவிட்டுச் சாப்பிடுவதாகக் கூறிவிட்டுச் சென்றான் விஜயேந்திரன்.

 

‘அவசியம் வீட்டுக்கு போகணுமா? அவ சொன்னா நான் கேட்கணுமா? அது எப்படி நான் வருவேன்னு அவ சொல்லுவா?’ என்ற எண்ணத்தோடு, விஜயேந்திரன் காரை செலுத்த, இன்று எங்க செல்வது என்றறியாமல் விஜயேந்திரனின் கார் அவர்கள் வீட்டை நோக்கி சென்றது.

அதே நேரம்  ‘நேரத்திற்கு வருவங்களா? மாட்டாங்களா?’ என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டு, கீர்த்தனா அவள் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.

‘வரலைனா எப்படி வர வைக்கிறது?’ என்று சிந்தித்தபடி அவர்கள் அறையில் இருந்த விஜயேந்திரனின் புகைப்படத்திற்கு முன் நின்ற கீர்த்தனா அவனை ஆழமாகப் பார்த்தாள்.

“ஆள் பார்க்க நல்லா தான் இருக்காங்க. புத்தி தான் சரி இல்லை.” என்று முணுமுணுத்தாள் கீர்த்தனா.

புகைப்படத்தில்  விஜயேந்திரனின் முகத்தைப் பார்த்தபடி, நேரத்தைப் பார்த்தாள் கீர்த்தனா.

நேரம் செல்ல செல்ல, கீர்த்தனாவின் கோபம் ஏற, விஜயேந்திரனை புகைப்படத்தில் பார்த்து,

    “மொத்து மொத்துன்னு மொத்தனும் பாட்டு…

     குத்து குத்துன்னு குத்தனும் பாட்டு…

   மொத்து மொத்துன்னு மொத்தனும் பாட்டு…

      குத்து குத்துன்னு குத்தணும் பாட்டு…  “ என்று நம்பியாரை போல் கைகளைப் பிசைந்தபடி கீர்த்தனா பாட, அவள் பின்னே அமைதியாக நின்று கொண்டு அவளை பார்த்துக் கொண்டிருந்தான் விஜயேந்திரன்.

கீர்த்தனா பாடி முடிக்கவும்,  விஜயேந்திரன் கைதட்ட, அந்த சத்தத்தில் திரும்பிப் பார்த்த கீர்த்தனா,  ‘செத்த டீ… கீர்த்தனா.’ என்று எண்ணி விஜயேந்திரனை பார்க்க, “ரொம்ப நல்ல பாடுற.” என்று நக்கல் தொனியில் விஜயேந்திரன் கீர்த்தனாவைப் பாராட்ட, அங்கிருந்து செல்ல முயன்றாள் கீர்த்தனா.

அவள் வழி மறிக்க கீர்த்தனா பின்னோடு நடக்க, சுவரில் சாய்ந்து நின்றாள். ‘என்ன?’ என்பது போல், கீர்த்தனாவின் வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தாலும், நிமிர்வாக அவனைப் பார்த்தாள்.

“நல்லா  பாடுறேன்னு சொன்னா தேங்க்ஸ் சொல்லணும்.” என்று விஜயேந்திரன் அழுத்தமாகக் கூற, கீர்த்தனா முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

‘நல்ல வசமா மாட்டிகிட்டோம் போலையே.’ என்று எண்ணி பெருமூச்சு விட, “உங்க வீட்டுக்கு போகணுமா?” என்று தேனொழுக கேட்டான் விஜயேந்திரன்.

கீர்த்தனா மேலும், கீழும் தலையசைக்க, “சரி பாடு. நீ இப்ப என் போட்டோ பார்த்து பாடினியே. அதை என்னைப்  பார்த்துப் பாடு. அப்புறம் போலாம்” என்று விஜயேந்திரன் தன் வலக்கையால் கழுத்தை நீவியபடி கூற, கீர்த்தனா அவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.

கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்…