கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  12

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  12

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  12

விஜயேந்திரனின் கைகள் கோபமாக அவள் கன்னம் நோக்கி இறங்க, ‘என்னை அடிக்க முடியுமா?’ என்று கனல் கக்கும் பார்வை பார்த்தாள் கீர்த்தனா.

கீர்த்தனாவின் கண்களில் தெரிந்த தீச்சன்யமா?  இல்லை பருத்தி சேலை உடுத்தி பூ போல் மென்மையாகக் காட்சி அளித்த அவள் முகமோ?  விஜயேந்திரனின் கைகளை கீர்த்தனாவின் கன்னத்தைப் பதம் பார்க்க விடாமல் கீழே இறக்கியது.

சோபாவில் அமர்ந்திருந்த கீர்த்தனாவுக்கு எதிராகத் தரையில் சோர்வாக முகம் மூடி அமர்ந்தான் விஜயேந்திரன்.

நொடிப் பொழுதில் செய்யும் செயல், வாழ்க்கையைத் திசை திருப்பும் என்பதை அறிந்தவன் போல் விஜயேந்திரன் பொறுமையைக் கையில் எடுத்துக் கொள்ள, இயலாமையோடு அவன் அமர்ந்திருந்த கோலம் கீர்த்தனாவை உலுக்கியது.

உணர்ச்சி மிகுதியில் செய்வதறியாமல், கீர்த்தனா விஜயேந்திரனை பார்த்தபடி அமர்ந்திருக்க, ஆழ மூச்செடுத்து கீர்த்தனாவைப் பார்த்தான் விஜயேந்திரன்.

விஜயேந்திரனின் கண்கள் கலங்கியிருக்க, அவன் உள்ளத்தின் வேதனையைப் பிரதிபலித்த அவன் கண்களைக் கூர்மையாகப் பார்த்தாள் கீர்த்தனா. ‘அந்த கண்கள் தன்னிடம் காதல் பேசாதா?’ என்ற ஏக்கம் கீர்த்தனாவுக்குள் எழ, தன்னை உலுக்கிக் கொண்டு நிதர்சனத்திற்குத் திரும்பினாள் கீர்த்தனா. முகம் மூடி அமர்ந்து தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொண்ட விஜயேந்திரனை பரிதாபமாகப் பார்த்தாள்.

‘பெண்கள் மட்டுமில்லை. ஆண்களும் பல கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் தான். பாவம்! தாய் சொல் மீற முடியாத சராசரி ஆண். இவங்க காதலிச்சிருக்க கூடாது. அந்த பக்கங்களை அத்தனை எளிதாகக் கிழித்து எறிய முடியுமா? ஆனால், நான் என்ன தவறு செய்தேன்?’ என்று கீர்த்தனாவின் அறிவு விஜயேந்திரனின் மேல் பரிதாபப்பட ஆரம்பித்து கீர்த்தனாவின் மேல் பரிதாபம் கொண்டு முடிந்தது.

கீர்த்தனாவின் சிந்தனையைக் கலைப்பது போல், “ஒரு பெண்ணை அடிக்க கை ஓங்குற ஆள் நானில்லை. சாரி.” என்று விஜயேந்திரன் தரையில் அமர்ந்து கொண்டு தாழ்மையான குரலில் கூற, சோபாவில் அமர்ந்தபடி, “இல்லை என் மேலும் தப்பு இருக்கு. ஏதோ ஏமாற்றம். நானும் ரொம்ப பேசிட்டேன். நடந்தேறிய தவறுக்கு, உங்களைக் குற்றம் சாட்டி இப்ப என்ன ஆக போகுது?” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தாள் கீர்த்தனா.

“நான் கொஞ்சம் நல்லவன் தான். ரொம்ப கெட்டவன் எல்லாம் இல்லை.” என்று விஜயேந்திரன் சமாதான முயற்சியில் இறங்க, கீர்த்தனா மெலிதாக சிரித்தாள். “என்னை மன்னிச்சிரு. நான் உன் வாழ்க்கையை பாழாக்கணுமுன்னு நினைக்கலை. ஆனால், என்னால் ஒரு நாளும் லீலாவுக்கு துரோகம் செய்ய முடியாது.” என்று விஜயேந்திரன் தன்மையாகக் கூற, கீர்த்தனா பதில் ஏதும் கூறாமல் மௌனித்தாள்.

‘என்னைத் திருமணம் செய்தது என்ன கணக்கில் சேருமோ?’ என்று கீர்த்தனாவின் மனம் சிந்தித்தாலும், அவள் அறிவு அவளை மௌனிக்க செய்தது.

“லீலா என் பொறுப்பு. நான் இங்க ரொம்ப நாள் இருக்க மாட்டேன். நமக்கு டிவோர்ஸ் வாங்க ஒரு வருஷம் வேணும். அம்மாவுக்கு அதுக்குள்ளே புரிய வச்சிருவேன். நீங்க கேட்ட மாதிரி தான் டிவோர்ஸ் வேணுமின்னா, நான் அப்படியும் கொடுக்க தயார்.” என்று விஜயேந்திரன் பொறுமையாகக் கூற, அவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள் கீர்த்தனா.

“நான் ஒரு சராசரி மனுஷன் தான். உண்மையை சொல்லணுமின்னா பல மனிதர்களைப் போலச் சுயநலவாதி தான். எங்க அம்மா நல்லாருக்கணும். அப்பா நிம்மதியா இருக்கனும். தம்பி சந்தோஷமா இருக்கனும். நான், என் விருப்பம் எல்லாம் என் ஆசைப்படி இருகனும்முன்னு நினைக்கிற சாதாரண மனுஷன் தான் நான். ஆனால், மத்தவங்க வாழ்க்கையை அழித்து இல்லை.” என்று விளக்கம் போல் ஆரம்பித்து, உறுதியாக முடித்தான் விஜயேந்திரன்.

“நீங்க சொல்ற மாதிரி விவாகரத்தும், அத்தோடு உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையும் அமைக்காம நான் இங்கிருந்து போக மாட்டேன்.” என்று விஜயேந்திரன் கூற, “ஷட் அப். ஐ சே…” என்று கோபமாகக் கூறினாள் கீர்த்தனா.

“என் வாழ்க்கையை முடிவு செய்ய நீங்க யாரு? எனக்கு ஒரு மனசு இருக்கு. அந்த மனசுக்கு நான் தான் அதிபதி. நீங்க இல்லை.” என்று கூறி விறுவிறுவென்று அந்த அறையை விட்டு வெளியே சென்றாள் கீர்த்தனா.

கீர்த்தனா அறையை விட்டு வெளியே சென்றாலும், அவள் மனம் விஜயேந்திரனை சுற்றியது.

‘யார் மறுத்தாலும், இந்திரன் என் கணவர். இதை யாரால் மாற்ற முடியும்?’ என்ற எண்ணம் தோன்ற அவள் மனதில் ஓர் இறுமாப்பு தோன்றி, உதட்டில் மென்னகை படர்ந்தது.

விஜயேந்திரனின் குழம்பிய முகம், அவள் கண் முன் தோன்ற, தாயில்லாமல் தன்னை வளர்க்க, தனிமையில் தவிக்கும் தன் தந்தையின் முகம் நினைவு வர, விஜயேந்திரனிடம் தன் தந்தையைக் கண்டாள் கீர்த்தனா.

“பாவம். காதலித்த பெண்ணிடமும் நெருக்கடி இருக்கும். அம்மா, அப்பா கிட்டயும் சொல்ல முடியாது.” என்று முணுமுணுத்துக் கொண்டு அவர்கள் அறைக்கு மீண்டும் திரும்பினாள் கீர்த்தனா.

விஜயேந்திரன் இலக்கில்லாமல் எங்கோ பார்த்தபடி கைகோர்த்து தரையில் அமர்ந்திருக்க, அவன் முன் தரையில் மண்டியிட்டு அமர்ந்தாள் கீர்த்தனா.

கீர்த்தனா அணிந்திருந்த சேலை அவள் அங்க வடிவை எடுத்துக் காட்ட, அவள் கூந்தல் தரையைத் தழுவிக் கொண்டிருந்தது. சற்று முன் அவள் பாடிய இன்னிசையை அந்த அறையின் சுவர்களும் அவள் மீண்டும்  பாடமாட்டாளா? என்று ஏங்குவது போல் அவளை உற்றுப் பார்த்தது.

விஜயேந்திரனின் கைகளில் மேல் அவள் கைகளை வைத்தாள் கீர்த்தனா. விஜயேந்திரன் உடல் சிலிர்த்தது. நேற்று கீர்த்தனாவின் தேகம் தொட்டு அவன் கட்டிய தாலி, அவன் சம்மதம் இல்லாமல் அவளுக்குப் பல உரிமைகளை அள்ளி கொடுத்திருப்பதைப் பாவம் அவன் அறியவில்லை.

கீர்த்தனாவின் கைகள் காதல் பேசவில்லை! உரிமை பாராட்டவில்லை! நட்புக் கரமே நீட்டியது, என்பதை அவள் தொடுகை கூற, அவளைக் கேள்வியாகப் பார்த்தான் விஜயேந்திரன்.      “நான் பார்த்த இந்திரன் இது இல்லை. முகுந்தன் கிளைண்ட்ஸ் கிட்டச் சாதிக்க முடியாத விஷயத்தைக் கூட, அங்கிருந்தே பொறுமையா பேசி சாதிக்கிற இந்திரனைத் தான் நான் பார்த்திருக்கிறேன். எல்லாம் சரி ஆகிரும்.” என்று கீர்த்தனா பொறுமையாகக் கூற, அவளை ஆழமாகப் பார்த்தான் விஜயேந்திரன்.

“நீங்க என் எதிர்காலத்தைப் பத்தி பேசாதீங்க. நான் உங்கள் கடந்த காலத்தைப் பத்தி பேசலை.” என்று கீர்த்தனா நிகழ் காலத்தின் அவசியத்தையும், நிதர்சனத்தையும் உணர்த்த, ‘யாருக்கும் இழப்பு வராமல் இந்த திருமணப் பந்தத்தை எப்படி உடைப்பது.’ என்று விஜயேந்திரன் சிந்திக்க, ‘யாருக்கும் வருத்தம் கொடுக்காமல் இந்த திருமணப் பந்தத்தை எப்படிக் காப்பது?’ என்று சிந்தனையில் மூழ்கினாள் கீர்த்தனா.

தன்னிலை அறிந்து விஜயேந்திரன் விலக, கீர்த்தனா தன்னை மீட்டுக் கொண்டு எழுந்து வேகமாக அறையை  விட்டு வெளியே சென்றாள்.

கீர்த்தனாவின் கண்கள் அவள் மனம், அறிவு இவை இரண்டின் கட்டுபாட்டையும் தாண்டி காதல் மொழி பேசியது. கீர்த்தனாவின் கைகளின்  பாஷையைப் புரிந்து கொண்ட விஜயேந்திரனால், அவள் கண்களின் மொழியை அறிந்து கொள்ள முடியவில்லை. இல்லை அவன் முயலவில்லை என்றும் கூறலாம்.

விஜயேந்திரன் வெளியே செல்ல எத்தனிக்க, “விஜய். காலை டிபன் கூட சாப்பிடாமா எங்க கிளம்புற? இன்னைக்கு கீர்த்தனா வீட்டுக்கு போகணும். மறுவீட்டுச் சாப்பாட்டுக்கு.” என்று படியிலிருந்து இறங்கிய விஜயேந்திரனை வழி மறித்துக் கேட்டார் நவநீதன்.

“இல்லை அப்பா. கொஞ்சம் முக்கியமான வேலை. அது தான்.” என்று விஜயேந்திரன் இழுக்க, “புது மாப்பிள்ளைக்கு அப்படி என்ன வேலை? மறுவீட்டுக்கு போய்விட்டுப் போனால் போதும்.” என்று பூமா கண்டிப்போடு கூறினார்.

“அம்மா…” என்று விஜேயேந்திரன் இழுக்க,  “சரி. சீக்கிரம் போயிட்டு வா.” என்று அனுமதி வழங்கினார் விஜயேந்திரனின் தந்தை.

“ஓகே.” என்று விஜயேந்திரன் வேக நடையில் செல்ல, அவனை பின் தொடர்ந்து ஓடினாள் கீர்த்தனா.  வேகமாகச் சென்ற அவன் முன் முட்டி மோதி அவள் நிற்க, அங்கிருந்த வேலைக்காரர்கள் நக்கல் சிரிப்போடு விலகினர்.

கீர்த்தனா ஏதோ பேச ஆரம்பிக்க, அவளை இடைமறித்து, “என்ன பண்ணிட்டு இருக்க?” என்று விஜயேந்திரன் பற்களைக் கடிக்க, அவன் பேசுவது புரியாமல் மலங்க மலங்க விழித்தாள் கீர்த்தனா. “இப்ப எதுக்கு உன் முட்டைக் கண்ணை இப்படி விரிச்சி பாக்குற?” என்று விஜய் கடுப்பாகக் கேட்க, கீர்த்தனா கூற வந்த விஷயத்தை விடுத்து, “என் கண் முட்டை கண்ணு மாதிரியா இருக்கா?” என்று  கோபமாகக் கேட்டாள்.

“ஆமா, பெரிசா முட்டை கண்ணு மாதிரி இருக்கு. அதைப் பார்க்கவே எனக்குப் பயமா இருக்கு.” என்று விஜேயேந்திரன் எங்கோ பார்த்தபடி கூற, “அப்புறம்?” என்று ஒற்றை புருவம் உயர்த்தி அவன் எண்ண ஓட்டத்தைப் படிக்க முயன்று கேட்டாள்  கீர்த்தனா.

“அப்புறம் என்ன அப்புறம்? பார்க்கப் பட்டிக்காடு மாதிரி சேலை. எல்லாரும் ஸ்டைலா ஹேர் கட்  பண்ணிருப்பாங்க. ஏதோ அந்த காலத்து ஆளுங்க மாதிரி இவ்வுளவு பெரிய கூந்தல்.” என்று விஜேயேந்திரன் முகத்தை வெறுப்பாகச் சுழித்துக் கொண்டு பங்கமில்லாமல்  கீர்த்தனாவைக் கடுப்பேற்றும் எண்ணத்தோடு அவன் மனசாட்சிக்கு எதிராக எடுத்துரைத்தான்.

விஜயேந்திரன் லீலாவிடம் எதிர்பார்த்ததை எல்லாம் பஞ்சமில்லாமல் அவன் ரசனைக்கு ஏற்ப அவன் முன் கீர்த்தனாவை நிறுத்திய விதி  விஜயேந்திரனை  கோபமாக முறைத்துப் பார்த்தது.

“அப்புறம். உன் பாட்டு ரொம்ப மோசம். கேட்க சகிக்கலை. போதுமா? வழி விடறியா? நான் கிளம்பட்டுமா?” என்று விஜயேந்திரன் அவளைத் தாண்டி செல்ல, மீண்டும் அவன் வழியில் நின்றாள் கீர்த்தனா. விஜேயேந்திரன் விழி மூடி, பொறுமை காக்க, “சோ…” என்று அவனை யோசனையாகப் பார்த்தாள் கீர்த்தனா.

‘என்ன சொல்லுவாளோ?’ என்ற அச்சம் விஜயேந்திரனின் மனதில் தோன்றினாலும், கீர்த்தனாவைக் கெத்தாகப் பார்த்தான் விஜயேந்திரன்.

“என்னைப் பார்க்காத மாதிரி, நடந்ததெல்லாம் பொய்.  இடையில் தலைகாணி எல்லாம் வேற வச்சீங்க? தலைகாணி எல்லாம் தாண்டி, என்னை சைட் அடிச்சிருக்கீங்க? என் பாட்டை ரசிச்சிருக்கீங்க.” என்று கீர்த்தனா, “ச்சீச்சீய்.” என்று விஜயேந்திரன் கையசைத்து  பதட்டமாக  மறுப்பு தெரிவித்தான்.

“அய்யடா… இப்படி இல்லைன்னு சொல்லிட்டா நாங்க நம்பிருவோமா?” என்று கூறி இடைவெளி விட்டு, “டிவோர்ஸ் கேட்கற ஆளை சைட் அடிக்கிறதெல்லாம் ரொம்ப  தப்பு. அது உங்க ஆளா இருந்தாலும் சரி. என் பாட்டை ரசிக்கிறது அதை விடத் தப்பு.” என்று கீர்த்தனா தலை அசைத்துக் கண்டிப்போடு கூறினாள்.

‘இவளிடம் பேச்சில் தோற்றாலும் காட்டிக்க கூடாது.’ என்று முடிவு எடுத்தவனாக, “என்ன விஷயம்?” என்று அவள் வந்த நோக்கத்தைக் கேட்டான் விஜயேந்திரன்.

“எங்க வீட்டுக்கு போகணும்.” என்று கீர்த்தனா தயக்கமாகக் கூற, “அது தான் அம்மா கிட்ட சரின்னு சொல்லிட்டேனே.” என்று விஜயேந்திரன் கூற, “இல்லை. அத்தை நேரம் சொல்லலை. கொஞ்சம் சீக்கிரம் போகணும். உடனே வந்துருவீங்களா?” என்று ஆர்வமாக கீர்த்தனா கேட்க, “முடியாது. நீ சாவி கொடுத்தா ஆடுற பொம்மை இல்லை நான்.” என்று விஜயேந்திரன் வீராப்பாகக் கூறினான்.

“அப்படி என்ன அவசர வேலை?” என்று முணுமுணுத்துக் கொண்டே, “வரணும்.” என்று ஆணையாக கீர்த்தனா கூற, “வர முடியாது.” என்று அவன் கூற, மெலிதாக புன்னகைத்தாள் கீர்த்தனா. அவளின் புன்னகை மாறாமல் இருக்க, அவளைச் சந்தேகமாகப் பார்த்தான் விஜயேந்திரன்.

“வருவீங்க.” என்று கூறிவிட்டு, வீட்டை நோக்கி நடந்தாள் கீர்த்தனா.

‘இவ என்னை பத்தி என்ன நினைச்சிட்டு இருக்கா?’ என்று எண்ணிக்கொண்டே, விஜயேந்திரன் கிளம்ப, “வரலைனா வர வைப்பேன்.” என்று தனக்கு தானே கூறிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள் கீர்த்தனா.

கீர்த்தனா உள்ளே நுழைய, “கீர்த்தனா, உன்கிட்டயாவது எங்க போறான்னு சொன்னானா?” என்று பூமா வினவ, “இல்லையே அத்தை.” என்று கீர்த்தனா மறுப்பாக தலை அசைக்க, “இனி நீ தான் கேட்டு தெரிஞ்சிக்கணும்.” என்று இலவச ஆலோசனை வழங்கினார் பூமா.

‘உங்க பிள்ளை என்கிட்டே சொல்லிட்டு தான் மறுவேலை பார்ப்பார்.’ என்று எண்ணியபடியே, “சரி அத்தை.” என்று தன் மாமியாருக்குச் சம்மதம் தெரிவிக்கும் விதமாக தலை அசைத்தாள் கீர்த்தனா.

‘எங்க போயிருப்பாங்க?’ இந்த கேள்வி கீர்த்தனாவை குடைய, ‘எங்க போக முடியும்?’ என்று தன் மனதிடம் சொல்லி கொண்டு தன் கவனத்தை வேலையில் செலுத்தினாள் கீர்த்தனா.  விஜயேந்திரனின் முகத்தில் கோபம் கொப்பளித்தது. அவன் கார் செல்லும் வேகம் அவன் சினத்தை வெளிப்படுத்தியது.

‘முகுந்தனை வந்தவுடன் பார்த்துப் பேச வேண்டும்.’ என்று எண்ணிய விஜயேந்திரனின் எண்ணம் அவன் திருமண விஷயத்தில் குழம்பி இதுவரை முகுந்தனைச் சந்திக்க முடியாமல் தோற்றுப் போனது.

ஆனால் இன்று, முகுந்தனின் இல்லத்தில் விஜயேந்திரனை பார்த்த நிரஞ்சனா முகுந்தனுக்குப் பின் ஒளிந்து கொள்ள, விஜயேந்திரன் கூறிய வார்த்தையில் அவனை விழிகள் விரித்துப் பார்த்தாள் நிரஞ்சனா.

கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்…

 

error: Content is protected !!