jeevan 27

jeevan 27

உன்னோடு தான்… என் ஜீவன்…

பகுதி 27

கருவில் உலாவரும், மழலையின் அசைவை போல, மெல்ல அசைந்த காயத்ரியின் கண்விழியை பார்த்த ஆரனுக்கு, அவள் சுயஉணர்வுக்கு வருவது புரிய, அவளை வேகமாக நெருங்கினான். கண்ணை திறக்க முயன்ற படியே, இருக்கும் சூழலை கிரகிக்க முயன்றவளுக்கு, தனது நுரையீரலில் நுழைந்த, ‘மருந்து நெடி’ தான் இருப்பது, மருத்துவமனை என்பதை உணர்த்தியது.

அந்த உணர்வு, அன்று நடந்த நிகழ்வுகளை, மனதில் ஊர்வலம் கொண்டு வர, தனக்கு நேரவிருந்த ஆபத்தும், அதற்குள் தன்னை காக்க வந்த கௌதமின் நினைவு வர,

‘பெருமாளே…! அவருக்கு என்னாச்சோ..?! நேக்கு வந்த கனவு மறுபடியும் அப்படியே நடக்குதே..! அவருக்கு எதுவும் ஆகிட கூடாது..!’ என மனதிலிருந்து வேண்டுதலை வைத்தாள், தனது கண் திறவாமலேயே….

அவளின் விழி அசைவில், அருகே வந்த ஆரனுக்கு, அவள் முகம் காட்டும் மாறுதலுக்கு, அர்த்தம் சில புரிந்தாலும், பலது புரியாமல், அவள் கண் விழிக்கும் நொடிக்காக காத்திருந்தான். காயத்ரி, தனது வேண்டுதலை முடித்த பிறகே, ‘இன்னும் தான் கண்விழி திறக்கவில்லை, தன்னவனை காணவில்லை!’ என்பது விளங்க,

பாறாங்கல்லாய் கனத்த இமைகளை, மிகவும் சிரமத்தோடு திறக்க, அங்கே தெரிந்தது என்னவோ, ஒரு ஆணின் வரிவடிவம் தான்.  ஆனால், அதிலேயே அது கௌதம் அல்ல, என்பதை அறிந்தவளின் பார்வை, அந்த அறையை சுற்றி சுழல, அங்கு வேறு யாரும் இருப்பதற்கான சாத்தியம் இல்லாது இருந்ததும், மனக்குதிரை அவளை இட்டுச்சென்ற, மிக பயங்கர காட்சிகளின் விளைவால், அவளின் தலையணை கண்ணீரில் நனைய துவங்கியது.

ஆரன், அவள் தன்னை பார்த்த பின் அங்கும், இங்கும் பார்த்ததும், அழுவதும் கண்டு, அவளின் தேடல் புரிய, “காயு எதுக்கு அழற, நர்திங் டூ வொரி. எவரிதிங் ஈஸ் பர்பெக்ட். எதாவது பெயின் இருக்கா ?! சொல்லு, நா போய் டாக்டர கூட்டிட்டு வர்றேன்” என அவளிடம் கேட்க,

‘கௌதம் பற்றி எதாவது சொல்வானோ?!’ என அவன் பேச ஆரம்பித்த கணம் முதல், அவன் முகத்தை பார்த்திருந்தவள், அவன் தனக்கு ஆறுதலாக பேசுவதை கேட்டு உள்ளுக்குள் கோபமும், அதே நேரம் அவனின் அக்கரையில் உள்ள பாசம் புரிந்து நிறைவும் தோன்றினாலும், அவளுக்கு தேவை அவளவன் பற்றிய தகவலாயிற்றே…!

அவன் அதை சொல்ல போவது இல்லை என உணர்ந்தவள், நன்கு உலர்ந்து போன தனது தொண்டையையும், நாவையும் மெல்ல அசைத்து, “கௌதம் எங்கே?!  அவருக்கு ஒன்னுமில்லையே?!” என கேட்க, அதுவோ காற்றாக வெளிவந்ததே தவிர சத்தம் வரவில்லை.

சட்டென தோன்றிய அதிர்வோடு, மீண்டும் முயற்சிக்க, அதே போன்ற நிலையே…! சிறிது, சிறிதாக தனக்கு நேர்ந்தது புரிய, அவளின் அழுகை அதிகமாகி போன நேரம், அவளின் தோளில் பட்ட கையின் ஸ்பரிஷம் உணர்த்திய செய்தியில்,

‘தனக்கு நேர்ந்த குறையை விட,  கௌதம் திரும்ப தன் முன் வந்துவிட்டான்!’ என்பதே போதுமானதாக இருக்க, அழுகையை கட்டுக்குள் கொண்டு வந்தவள், அவன் நின்ற இடத்தை பார்க்க, அவளின் வேதனையை காட்டிலும், பலமடங்கு வேதனையை முகத்தில் சுமந்து, சோகமே உருவாய் நின்றிருந்தான் அவளின் கௌதம்.

கௌதம் சக்கரவர்த்தியாய், கம்பீரமாய் மேடையில் நின்ற, இன்று காலை தோற்றத்திற்கு நேர் எதிராய், சோகசித்திரமாய், பரிதவிப்போடு நின்றிருந்தவனை பார்த்த நொடி, தனது வேதனையை ஒதுக்கியவள், அவனின் நலத்தை அறிய, மேலிருந்து அவனை பார்வையால் வருடிட… அத்தனை நேரம் அடைத்து வைத்திருந்த, ஒட்டு மொத்த அழுகையோடு, அவளிடமே சரணடைந்தான், அந்த ஆறு அடி மனிதன் ஒரு குழந்தையாய்…

“சாரி செல்லம்மா..! எல்லாமே… என்னால தான்.. சாரி.. ஐ’ம் எக்ஸ்டீம்லி.. சாரி… !” என திரும்ப திரும்ப சொல்லியபடியை, அவளை அணைத்திருந்தவனின் குரலே சொன்னது, அவனின் வேதனையின் அளவையும், குற்ற உணர்வின் வீரியத்தையும்….

அவன் அவளை வற்புறுத்தி மேடை ஏற்றாமல் போயிருந்தால், இது நடந்திருக்காதே என்ற எண்ணமே அவனை குற்றஉணர்வில் கொன்றது. அதைவிட, ‘அவள் கடைசியில் கூட மேடை ஏற தயங்கியதற்கு பின்பும், தனக்காகவே வந்தவளுக்கு இந்நிலை ஏற்பட காரணம் தான் தானே!’ என திரும்ப திரும்ப நியாபகத்தில் எழ, அவனாலேயே தனது மனதை கட்டுக்குள் வரஇயலவில்லை..

கௌதமின் மனம் சொல்வது புரிந்தது போல, தன்னை அணைத்திருந்தவனின் முதுகில், மெல்ல வருடிவிடுவதை தவிர, அவளால் எதையும் செய்ய முடியாது போக, அவளுக்கும் அழுகையே துணையாகி போனது.

_______


மேடையில் பாடிக்கொண்டிருந்த காயத்ரியை பார்த்துக் கொண்டு இருந்தாலும், உள்ளுணர்வால் அவளை சுற்றிலும் இருப்பதை ஆராயத்தவன் கண்கள் கண்டது, மெல்ல நகர்ந்து கொண்டே இருந்த அந்த இரும்பு பட்டையே…

அது விழும் நிலையை உணரந்தவன், வேகமாய் அவளை நெருங்கி இழுக்கவும், அதில் கட்டப்பட்டிருந்த லைட்டில் சிலது, தனியாக பிரிந்து, கீழே விழுந்து சிதறிடவும் சரியாக இருக்க, அவளை தனக்குள் புதைத்தவன், அதற்கு தனது முதுகை காட்டிய படியே, அவளோடு நகர்ந்திருந்தான் அந்த இடத்தை விட்டு சிறிது தூரம்..

சில நொடிகளே என்றாலும், அந்த விளக்குகள் உடைந்ததாலும், அந்த தூண் விழுந்ததாலும் ஏற்பட்ட புகை மற்றும் கண்ணாடி சிதறல்களை தாண்டி கௌதம் காயத்ரியை முதலில் நெருங்கிய ஆரன் கண்டது, கோழி தனது குஞ்சை அடைகாப்பது போல தன்னுள் புதைத்து வைத்திருந்த காயத்ரியோடு, ஓரமாய் ஒதுங்கி மடங்கி அமர்ந்திருந்த கௌதமையே…

ஆரன், அவர்களை நெருங்கி, “கௌதம்..! உனக்கு எதுவுமில்லையே…?! அடி எதாவது பட்டிருக்கா?” என கேட்க, தான் கேட்பது எதுவுமே புரியாதது போல விழித்தவனை பார்த்தவன்,  கௌதமை பார்க்க, அவனுக்கு அடிபட்டதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாது இருக்க, அவனுக்கு எதுவுமில்லை என்பது புரிய,


அவனுக்கு ஏற்பட்ட அதிர்வில், இப்போதைக்கு பேச முடியாது என்பதை உணர்த்தவன், அவனை விலகி காயத்ரியை பார்க்க, அவளோ ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தாள். ‘நடந்த நிகழ்வின்  அதிர்வாலா?! அல்லது எதாவது அடி பட்டதா?!’ என்பது புரியாத போதும், உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பது நல்லது என தோன்ற, கௌதம் செய்ய வேண்டியதை துரிதமாய் செய்து முடித்தான் ஆரன்.

கௌதமோ, ஆரன், காயத்ரியை தனது கரத்திலிருந்து பிரித்து எடுத்து சென்றதை கூட உணராது இருந்தவன்,  அவனை நெருங்கிய மற்றவர்களினால் சுயஉணர்வுக்கு வர, சட்டென தனது கரத்தை பார்த்தான் தனது செல்லம்மாவின் நிலை அறிய…

தனது கரத்தில் காயத்ரி இல்லாது இருக்க, ‘அவள் எங்கே?!’ என்பது போல பார்த்தவன் கண்டது, அவளை தனது கரத்தில் ஏந்தி சென்று கொண்டிருந்த ஆரனையே…

அடுத்த நிமிடம் அவ்விடத்திலிருந்து விரைந்து வந்தவன், ஆரனுக்கு முன்பு சென்று, கல்லூரியில் எமர்ஜென்சிக்காக விழா நேரத்தில், எதற்கும் இருக்கட்டும்! என வரவழைத்திருந்த ஆம்புலன்ஸ்ஸில் ஏற, அவனையும், அவளையும் சேர்த்து ஆரனோடு அவர்கள் சொன்ன மருத்துவமனை நோக்கி சென்றது அந்த விரைவுந்து….

_______

காயத்ரி கண் திறக்கும் முன்பு வரை, அவளுக்கு அருகிலேயே அவளின் கையை பிடித்த படி, அமர்ந்திருந்தவன், மருத்துவர் எடுத்த பரிசோதனைகளுக்கான ரிப்போர்ட் வந்துவிட்டதாக அழைத்ததால், அவளை விட்டு சென்றிருக்க, மருத்துவரோ, ‘அவளின் நிலை, இவ்வாறு ஆக வாய்ப்பு இருப்பதாக’ சொன்ன நொடி, அங்கிருந்து விரைந்திருந்தான் காயத்ரியை நாடி…

அவனுக்கு நிச்சயம் தெரியும், அவள் கண்விழித்த நேரம் முதல், தன்னை தான் தேடுவாள் என்பது.. அதோடு, ‘டாக்டர் சொல்வது போல நடந்துவிட்டால்…?!’ என்ற எண்ணமே அவளை நாடி ஓடிவர செய்திருந்தது அவனை…

அவனின் எண்ணம் பொய்யில்லை எனும் விதமாக, தன்னை தேடி தவித்தவளை பார்த்தவன், தன்னை பற்றி கேட்க நினைப்பதும், அது முடியாத போது கொண்ட அதிர்வையும், அவளின் வேதனை நிறைந்த முகத்தையும் பார்த்தவன், அவளுக்கு ஆறுதல் சொல்ல நெருங்கினால், அவளோ அவளின் வேதனையை காட்டிலும், தனது நலனை ஆராய்ந்ததை கண்டவனுக்கு, அவள் எத்தகைய பொக்கிஷம் என்பது விளங்க அதை பாதுகாக்க தவறிய, தன் மீதே கோபம் வந்தது.

_______


கௌதம் காயத்ரியின் நிலை நன்கு உணர முடிந்தாலும், கல்லூரியில் நடந்த நிகழ்வு என்பதால், அந்த கல்லூரி நிறுவனர் மற்றும் முக்கியமான சிலர் காயத்ரியை காண வர இருப்பதை அறிந்த ஆரன், அவர்களை ஓரளவு கட்டுப்படுத்தி வைக்க வேண்டி இருந்ததால், அவர்களை நெருங்கி..

“கௌதம், காயு ரெண்டு பேரும் முதல்ல அந்த நிகழ்ச்சில இருந்து வெளிய வாங்க. அதையே யோசிச்சா, அந்த இடத்திலையே தேங்கிடுவோம், குட்டைய போல..! அது வீணா நமக்கு வாடைய கொடுக்கறது, மாதிரி தீராத வேதனைய தான் கொடுக்கும்…

இப்ப என்ன, காயுவால பேச முடியல அவ்வளவு தான். ஆனா அது நிரந்தரமா இருக்க விட்டுடுவோமா என்ன?! ஏன் கௌதம், நீ இப்படியே விட்டுடுவியா அவள…?! எவ்வளவு செலவு ஆனாலும், எந்த நாட்டுக்கு வேணுமின்னாலும் கூட்டிட்டு போக உன்னால முடியாதா…?! பிரச்சனைய விட்டு, விலகி நின்னு யோசிக்காம, நீயும் அவகூட சேர்ந்து… ஏன்டா..?” என கேட்க


அதுவரை, ‘தன்னால் தானே, இப்படி ஆகிவிட்டதே!’ என்பதையும் மட்டுமே நினைத்து தவித்தவன், ஆரனின் வார்த்தையில், ‘அவளை சரி செய்யும் மார்க்கத்தை’ பற்றி டாக்டரிடம் கேட்காது வந்த மடத்தனம் புரிய… ஆரன் சொல்வது போல பிரச்சனையை தள்ளி நிருத்தி யோசிப்பதே சிறந்தது என உறுதி கொண்டான் கௌதம்.

_________

கொண்டாட்டமாய் ஆரம்பித்த அன்றைய நாள், அலங்கோலமாய் கௌதம் காயத்ரிக்கு முடிய, ஸ்வேதா துஷ்யந்திற்கோ குதுகலமாய் முடிந்தது.

“அண்ணா! நா ரொம்ப ஹேப்பிடா…! எப்படிடா, சரியா ப்ளான் பண்ண…?!” என சந்தோஷ மிகுதி குரலில் வெளிப்பட கேட்டவளை பார்த்த துஷ்,

“குட்டிம்மா, நா ப்ளான் பண்ணதுல ஜெஸ்ட் மிஸ் ஆகிடுச்சுடா! கௌதம் மேடைய விட்டு இறங்கி வராம போனதால..! இல்லாட்டி, மொத்தமா அவ போய் சேர்ந்திருப்பா..!”  என தனது திட்டத்தில் நேர்ந்த சிறு பிழையாய் அதை சொல்லிட,

“டேய், பரவாயில்ல விடுடா! அவ பாடுப்போது அவ குரல கேட்டதும், அப்படியே ஐஸ் மாதிரி இருந்துச்சு! இப்ப அது இல்லாம, அவள முடக்கி போட்டதே எனக்கு சந்தோஷம் தான்…! அவ செத்திருந்தா கூட, இப்படி சந்தோஷம் கிடச்சிருக்காது. இப்ப ஒவ்வொரு நாளும், அவ பேச முடியாம, அவளோட உணர்வ வெளிப்படையா, சொல்ல முடியாம தவிக்கறது……. செமையா இருக்குமில்ல….!” என சொன்னவளின் குரலில் இருந்த வஞ்சம், அவளையும் பழி தீர்க்குமா….


________

முழுதாய் ஒரு நாள்  ஆகிய போதும், ‘தனது வீட்டிற்கு அதுவும் இப்போதைய கல்யாண வேளையில், தனது நிலையை சொன்னால், அண்ணனின் திருமணத்தில் தடை ஏதும் வந்திடுமோ?!’ என்ற கவலை வேறு காயத்ரியை படுத்த, அது வெளிப்படையாய் தெரிய அமர்ந்திருந்த காயத்ரிக்கு,

தன்னை  மீட்டுக்கொண்டு உணவை கொண்டு வந்த கௌதம், வேதனையையும் மீறி யோசனையோடு இருந்தவளின் முகத்தை பார்த்து…

“செல்லம்மா! என்ன டீப் திங்கிங்.. சொன்னா… நானும் உனக்காக யோசிப்பேனே! உனக்கு இருக்கற குட்டியூண்டு… மூளைய கசக்கி, பிழிஞ்சு அது வேற கரஞ்சிட்டா… என்ன செய்ய?!” என கேலியாய் கேட்டு, அவளை நடந்த நிகழ்விலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்க…

அவனின் கேலியால் வந்த கோபத்தில், மற்றைய யோசனையை விடுத்து, அவனை முறைத்தவள்,  அடுத்த நொடி லேசாக சிரித்த படி, அவனை சைகையால் அழைக்க, “என்ன.. செல்லம்மா..!” என அவளின் சிரிப்பால் வந்த சந்தோஷத்தோடு நெருங்கியவனின் தலையில், நங்கென கொட்டியவள், ஜாடையால், ‘எனக்கு மூளை குட்டியா!! அது வேற கரஞ்சிடுமா.. ?! பிச்சு…!!’ என மிரட்டிட,

அவளின் செயலில் மனம் நிறைந்தாலும்,  வலிப்பது போல தலையில் கை வைத்தவன், “என்ன செல்லம்மா, வரவர ரொம்ப வயலண்ட்டா பிகேவ் பண்ணற..! அன்னைக்கி கரண்டில அடுச்ச, இப்ப உலக்கை மாதிரி இருக்கற, உன் கையால அடிக்கற..” என முகத்தை உம்மென வைத்தபடி, நடித்தவனை பார்த்தவள்,

அவனின் உலக்கை எனும் வார்த்தையில் மீண்டும், “என்னோடது அப்படியா இருக்கு.. ?!” என கேட்டு மீண்டும், முதுகில் நன்கு நாலு போடு போட … கௌதமின் விளையாட்டான அலறல் அந்த அறையெங்கும் ஒலித்தது.

அப்போது தான், வீடுவரை சென்று திரும்பிய ஆரன், நடக்கும் விளையாட்டை சுவாரஸ்யமாக பார்த்திருக்க, அவனை முதலில் பார்த்த கௌதம், “டேய் ஆரா! காப்பாத்துடா… தெரியா தனமா ஒரு ரவுடிய .. இன்னோஷென்ட்டுன்னு நம்பி…  தலைய கொடுத்துட்டேன்டா… முடியல!” என சொல்லிட,

காயத்ரியோ, பத்திரகாளி போல அவனின் தலைமுடியை பிடித்து உழுக்கத்துவங்கினாள், அவனின் அலறலையும் பொருட்படுத்தாமல்…. இறுதியில் இருவருக்கும் இடையே புகுந்து, ஆரன் தான் பிரித்துவிட வேண்டி இருந்தது.

__________

காயத்ரியை பரிசோதித்த மருத்துவர், “கௌதம், அவங்களுக்கு திடீர்ன்னு நடந்த அதிர்ச்சில தான் பேச முடியாம போயிருக்கு. அளவுக்கு மீறின அதிர்ச்சியான நிகழ்வோ, செயலோ நடக்கும் போது, நம்ம மூளையில இதுமாதிரியான குறைபாடு உண்டாக்கும் விசயம் நடக்கறது இயல்பு தான் !”  என சொல்ல,

அதை கேட்ட கௌதம் இதயம் துயர் கொண்டாலும், நடந்ததை மாற்ற இயலாது, அதை சரி செய்யும் மார்க்கம் தான் தேவை என்ற உறுதியோடு,  “இத சரி செய்ய முடியாதா?! டாக்டர் !” என கேட்க,

“அத 100% உறுதியான்னு சொல்லிட முடியாது. சிலருக்கு நார்மலா மருந்து மாத்திரைகளால அது சரியாகி இருக்கு. சிலருக்கு  அவங்க இப்ப சந்திச்ச அதிர்ச்சிய விட அதிகமான, அதிர்ச்சிய சந்திக்க நேரும் போது, இது மாற வாய்ப்பு அதிகம். ஆனா நாம, அத உருவாக்கிடும் போது, அது அவங்களுக்கு எதிராவும் மாற வாய்ப்பிருக்கு! அதனால அத யாரும் செய்யறது இல்ல.

முக்கியமா, இப்ப அவங்களுக்கு தேவை ‘ஒரு ஸ்ட்ரஸ் ரிலீப் தான்!’. அவங்க அவங்க கவலைய விட்டு வெளிய வந்து ப்ரீ யா இருந்தாலே, ஒரளவு மாற்றம் வரும்.

அதோட, இப்படி தனக்கு ஏற்பட்ட திடீர் குறை, சிலரோட குணத்தையும் மாத்திட வாய்ப்பு அதிகம்.. இதுவரை அமைதியா இருந்தவங்க அதிரடியா எதாவது செய்யறது. அடாவடியா இருக்கறவங்க, அடங்கி போய் ரூமுக்குள்ள அடஞ்சு கிடக்கறது எல்லாமே நடக்கலாம். அவங்கள ரொம்பவும் ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க. மனசுல அதே விசயத்த ஓட்டி பார்க்க விடாம, அவங்க மூட வேற விதத்துல மாத்திவிடுங்க. ஒரு அம்மா  எப்படி குழந்தை எது செஞ்சாலும் பொறுத்து போகிற மாதிரி அவங்க எதாவது செஞ்சா பொருத்து போகணும்.

அவங்க அழுத்தம் வெளிய வந்திட்டா, அடுத்த செஷன் ட்ரீட்மெண்ட்டுக்கு போயிடலாம். இதுக்கு மேல அந்த ஆண்டவன் கையில தான்!” என சொன்னதும்,

ஆரன், கௌதம் இருவரும், ‘இனி என்ன ஆனாலும், அவளை அந்த நிகழ்வை பற்றி யோசிக்க விடாமல், எதையாவது செய்து பழைய படி மாற்றுவது!’ என்றும் முடிவு செய்த படி, காலை முதல் அவளை மாற்றும் முயற்சியை செவ்வனே செய்து வந்தனர், அவளின் மாறுபாடான சில நடவடிக்கைகளை பொறுத்துக் கொண்டு….
_________

விளையாட்டாய் கழிந்த, சிறிது நேரத்திற்கு பின், அவளுக்கான உணவை கொடுக்க, அப்போதும் யோசனையாய் இருந்தவளை, “என்ன செல்லம்மா… மறுபடியும்..!” என கேட்க,

அவள் சொல்ல முடியாது தவிப்பதை பார்த்து, மனதில் எழும் வருத்ததை மறைத்தபடி, தனது போனை எடுத்து நீட்டியவன், “என்ன சொல்லனுமோ… அத இதுல டைப் பண்ணு…” என சொல்லிட,

இதுவரை, ‘எப்படி சொல்ல..?!’ என நினைத்தவளுக்கு, கண்கள் பளிச்சிட அவசரமாக அதில் டைப் செய்ததை படித்தவனுக்கு, ‘அடுத்து என்ன செய்யலாம்!’ என்று குழப்பம் தான் மிஞ்சியது.

குழப்பமான கௌதமின் முகத்தை பார்த்த ஆரன், ‘அப்படி என்னத்த.. மாமி எழுதி கொடுத்தா..?! உன் முகம், பீஸ் போன பல்பு மாதிரி இருக்கு..! கொடுடா…!” என வாங்கி படித்தவன், “அடச்சீ…  இதுக்கு தான், இவ்வளவு பில்டப்பூ…!!! இந்த ஆரன் இருக்க பயம் ஏன்…” என்றவன்…


“காயு, நா நேரா கிளம்பி, பிளைட் மூலமா திருச்சி போயிட்டு, உங்க வீட்டுக்கு நைட்டுக்குள்ள போயிடுறேன். நாளை மறுநாள் தானே கல்யாணம். அதற்குள்ள, அவங்ககிட்ட பக்குவமா பேசி, கல்யாணத்த முடிச்சிட்டு உன்ன பார்க்க வர சொல்லிடலாம். எப்படியும், நீ கல்யாணத்திற்கு போக முடியாது! கௌதமும் உன்ன விட்டு போறது சரி வராது. இது போன்ல சொல்லி புரிய வைக்கற மாதிரி சாதாரண விசயமும் இல்ல. அவங்ககிட்ட இப்ப சொன்னாலும், அவங்க வந்த போறது சிரமம்..! கல்யாணத்துல பிரச்சனை வரவும் வாய்ப்பு அதிகம்…”

என சொல்ல, அவன் சொல்வது அனைத்தும் சரியாக இருக்க, வேறு வழியும் இன்றி ஆரனை காயத்ரியின் வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்து…. அதற்கான ஏற்பாடுகளை பார்க்க …. மாலை வேலையில், ஆரன் விமானம் ஏறியிருந்தான், காயத்ரியின் இல்லம் நோக்கி…. இந்த பயணம் பின்னாளில், தனது வாழ்க்கை பாதை மாறிட போவது உணராமல்…

error: Content is protected !!