AOA-1

AOA-1

அவனின்றி ஓரணுவும்- 1

இயற்கையை காதல் செய். அது பன்மடங்காக உன்னை திருப்பி காதலிக்கும்.

இயற்கையை நீ அழிக்க செய்தால் அதுவும் பன்மடங்காக திருப்பி உன்னை அழிக்கும்.

மாலை சூரியன் பூமியிடம் பிரியா விடை பெற்று சென்று கொண்டிருந்தான். இருளின் பிடியில் பூமி மூழ்க தொடங்கி கொண்டிருந்தது.

வங்காளவிரிகுடா கடற்கரை! சென்னை எல்லைகளை கடந்த சில தூரத்தில் கடப்பாக்கம் சாலை அருகாமையில் உள்ள ஒரு மீனவ குப்பம் அது. கடலின் கரையோரமாக மீனவ மக்களின் வீடுகள்.

மீனவர்களின் நடமாட்டத்தை தவிர அதிக வெளிமக்களின் நடமாட்டமில்லாத இடம். வழிமுழுதும் மீன்பிடி படகுகள் நின்று கொண்டிருந்தது. இயல்பாக இரவு நேரங்களில்தான் மீன் பிடிக்க செல்வது அவர்களின்  வழக்கம். அதற்கான ஆயத்த வேலைகள் நடந்தேறி கொண்டிருந்தன. வலைகள் யாவும் மடித்து அந்த படகிற்குள் திணிக்கப்பட்ட போதும், எல்லோரின் முகத்திலும் குழப்ப ரேகைகள்!

மீன் பிடிக்க இன்று போகலாமா வேண்டாமா என்று?!

திடீரென்று கடலலைகள் உயர எழும்ப தொடங்கியிருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக அலைகளின் சீற்றம் அதிகரிக்க, எல்லைகளை தாண்டி சீறி கொண்டு பாய்ந்து வந்தன அந்த அலைகள்.

கடலில் இப்படியான மாற்றங்கள் இயல்புதான் எனினும் அதிரடியாக உருவான இந்த மாற்றத்தை பார்த்த அந்த மீனவர்கள் கூட்டம் மீன் பிடிக்க செல்வதா வேண்டாமா என்று தவிப்பான மனநிலைக்குள் சிக்குண்டனர்.

ஆனால் இது எது பற்றியும் கவலையில்லாமல் கடலை வெறித்தபடி நின்றிருந்தார் ஹரிஹரன். ஐம்பது வயதை தொட்ட வதனம்தான் எனினும் அவர் உடலமைப்பும் நின்று கொண்டிருந்த விதமும் கம்பீரம் குறையாமல் இருந்ததுதான் ஆச்சரியம்.

சோகமும் வெறுமையும் கலந்த அவர் பார்வை கடலையே வெறித்து கொண்டிருந்தாலும், அந்த அலைகளின் சீற்றத்தை அவரின் விழிகள் உணரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  ஏனெனில் அப்போது அவரின் சிந்தனைக்குள் வேறு சில எண்ணலைகளால் அலைமோதி கொண்டிருந்தன.

ஹரிஹரன். உலகம் முழுக்க உள்ள முக்கியமான சுற்றுலா தளங்கள் என கருதப்படும் இடங்களில் அவரின் சுற்றுலா நிறுவனம் இயங்கி கொண்டிருந்தது. தொழிலில் நல்ல லாபமும் முன்னேற்றமும் அடைந்த சமயம். இந்தோனேசியாவில் தன் குடும்பத்தோடு சேர்ந்து சௌகரியமாகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.

இயற்கையின் சீற்றத்திற்கு முன்பு மனிதன் என்பவன் சிறு துரும்பு கூட இல்லையென்பதை உணர்த்தும் விதமாக இந்தோனேசியாவில் வசித்திருந்த ஹரிஹரனின் தந்தை, தாய், மனைவி, எட்டு வயது மகன் என்று பாரபாட்சமின்றி ஒருவர் விடாமல் காவு வாங்கியது அந்த ஆழி பேரலை. அன்றுதான் வாழ்க்கையே தலைகீழாக புரட்டிபோடப்பட்டது ஹரிஹரனுக்கு!

மரணத்தின் கோர தாண்டவத்தை கண்ட பின்பு, தான் மட்டும் ஏன் உயிர் வாழ்கிறோம் என்று அவர் எண்ணி  வேதனையுற்று வெதும்பாத நாட்களே கிடையாது. அதன் பின்பு ஹரிஹரன் வாழ்க்கையே வெறுத்து போய் தன் மனைவி மக்களை இழந்த அந்த இடத்தில் வசிக்க விருப்பமின்றி சுவரில் அடித்த பந்து போல தமிழகத்திலுள்ள சொந்த ஊருக்கு திரும்பினார்.

குடும்பத்தின் நினைவு வரும்போதெல்லாம் கடலின் அருகில் வந்து கண்ணீர் சிந்தி அலைகளில் கால் நனைத்து செல்லும் ஹரிஹரன் வாழ்க்கையில் மீண்டும் ஓர் திருப்பத்தை அந்த கடலே கொண்டு வந்து சேர்த்தது.

வெகுநேரமாக பந்து போல ஒரு மனித தலை அலைகளின் உள்ளே சென்று மீண்டும் மேலெழும்பி வர, அந்த காட்சியை பார்த்து திகைத்து போனார். அதுவும் கடலின் ஆழம் அதிகமான பகுதியில் தெரிந்தது அந்த தலை. ஒரு வேளை உயிருக்காக போராடி கொண்டிருக்கிறானோ என்று அஞ்சியவர் உடனடியாக அங்கிருந்த மீனவர்களிடம் அந்த காட்சியை காண்பிக்க, யாருமே அதை பெரிய விஷயமாகவே எடுத்து கொள்ளவில்லை.

“அந்த பையனா?” என்று ரொம்பவும் சாதரணமாக அவர்கள் கேட்ட விதத்தில் ஹரிஹரன் வியப்பின் விளம்பில், “பையனா?” என்று கேட்க,

“ஹ்ம்ம்… என்ன ஒரு ஏழு எட்டு வயசு இருக்கும்… எந்த நேரமும் கடலுகுள்ள நீச்சலச்சலடிசிட்டு இருப்பான் சார்” என்று அத்தனை சாதாரணமாக அவர்கள் பதிலளிக்க, “அதெப்படி?” என்று மேலும் வியப்பனார் அவர்.

“அவன் அப்படித்தான் சார்… வந்த புதுசுல எங்களுக்கும் ஆச்சரியமாகதான் இருந்துச்சு… அப்புறம் பழகி போச்சு”

“அவனோட அம்மா அப்பா” என்று ஹரிஹரன் நிறுத்தி நிதினமாக கேட்க,

“அதெல்லாம் யாருக்கு சார் தெரியும்… போன வருஷம் அடிச்ச சுனாமில வந்து சேர்ந்த பையன்… யாரு என்னனு ஒன்னும் தெரியல” என்று அவர்கள் சொன்ன நொடி ஹரிஹரனின் தலை சுழன்றது. நிற்க முடியாமல் கால்கள் பின்னுக்கு இழுக்க, அவரின் மகனின் முகம் கண்முன்னே வந்து மறைந்தது.

“எதாச்சும் ஆசிரமத்துல கொண்டு போய் சேர்க்கலாம் இல்ல” என்று மூச்சை இழுத்துவிட்டு கொண்டு வேதனையோடு உரைத்தார்.

“அதெல்லாம் எங்கே சார்?” என்றவர்கள் விரக்தியாக பதில் சொல்லிவிட்டு, “இங்கயும் புள்ள குட்டி இழந்துட்டு கிடக்கிறோமே… யாரு வீட்டுக்கு கூப்பிட்டாலும் வரமாட்டாங்கிறான்… என்ன… அவனா வந்து சாப்பாடு கேட்பான்… இல்லன்னு சொல்லாம எங்க வீட்டு பொம்பள ஆளுங்க சோறு குடுப்பாங்க… சாப்பிடுவான்… மணலில் படுத்து கிடப்பான்… அப்படியே சுத்திக்கிட்டு திரியிறான்… கடலில் சலிக்க சலிக்க நிந்துகின்னு கிடப்பான்… யார் கூடயும் பழக மாட்டான்” என்று அவர்கள் சொன்னதை கேட்க வியப்ப பொங்க பார்த்த ஹரிஹரன்,

“அந்த பையனை என் கூட அனுப்பி வைச்சிருங்க… நான் பார்த்துக்கிறேன்” என்று அந்த வினாடியே ஒரு முடிவை எடுத்து அதனை ஆதங்கத்தோடு அவர்களிடம் சொல்லி கேட்க, அந்த மீனவர்கள் எல்லோருமே அதிர்ச்சியில் நின்றனர்.

அவர்கள் பார்வையும் அதிர்ச்சியே சொன்னது. யாருக்கும் அதில் விருப்பமில்லை என்று. அந்த மக்கள் ஒன்று திரண்டு திட்டவட்டமாக அவனை அவருடன் அனுப்ப மறுப்பு தெரிவித்தனர். அவர் தன்னிலையை விளக்கி சொன்ன பிறகும் அவர்கள் சம்மதிக்கவில்லை.

அந்த மக்களுக்கு பாசத்தை தாண்டிய வேறேதோ பிணைப்பு இருந்தது அவனிடம். அவருக்கு ஒன்றும் புரியவில்லை.  அங்கிருந்த பெண்கள் அவனை ஆச்சர்ய பிறப்பு என்று விவரித்தனர்.

அந்த ஊருக்கே அவன் ரொம்பவும் முக்கியமானவனாக இருப்பதன் காரணம் புரியாமல் அவர் திகைத்து நிற்க அந்த மக்கள் அவனை, ‘கடல் மகன்’ என்று சொல்லி, ‘அவனை அனுப்பவே முடியாது’ என்று பிடிவாதமாக மறுத்தனர்.

அப்போது ஏற்பட்ட கடலின் சீற்றத்தின் பேரொலி ஹரிஹரன் செவிகளை துளைக்க,  அவர் அதிரடியாக அந்த பழைய நினைவுகளிலிருந்து மீண்டு வந்தார். காலங்கள் அலைகளின் நுரைகள் போல கரைந்து சென்றுவிட, அப்போதுதான் கவனித்தார்.

இத்தனை நேரமாக அவர் அருகில் அவருடன் நின்றிருந்த இளைஞனை காணவில்லை.

கடல் ஆவேசமாக சீறி கொண்டிருப்பதை கவனித்தபடி படபடப்போடு,  “பிரபா” என்று அவர் குரல் கொடுத்து கொண்டே அந்த மணற்பரப்பில் அவனை தேடி கொண்டே நடந்தார்.  அவர் விழிகள் பதட்டத்தோடு அந்த இருளில் அவனை தேட தொடங்கின.

அச்சம் சூழ, “பிரபா” என்று அவர் சத்தமாக கத்திய போதும் கடலைகளின் ஒலி அவரின் குரலின் ஒலியை வெளியே வரவிடாமல் முடக்கிவிட்டது. அப்போதும் அவர் தளராமல் அழைத்து கொண்டே நடந்தவர் எதிரிப்பட்டவர்களிடம் எல்லாம் அவனை பற்றிய அடையாளங்களை சொல்லி பதட்டத்தோடு விசாரிக்க, அதில் ஒரு சிலர் அவன் சென்ற பாதையை காண்பித்தனர். அந்த வழியாக சற்றே தள்ளாட்டத்தோடே நடந்து சென்றார் அவர்.

அபாய பகுதி என்று ஒரு பலகையில் எழுதி வைக்கப்பட்டிருக்க, அதிர்ச்சியில் அவர் கால்கள் வேகமெடுத்தன.

அப்போதே அவர் விழிகள் அந்த காட்சியை கண்டு ஸ்தம்பித்தன. கடலின் அலைகளினூடே கிழித்து கொண்டு உள்ளே நீந்தி சென்று கொண்டிருந்தான் அவன். பிரபஞ்சன்!

“பிரபஞ்சன்” என்று ஒரே குரலாக ஹரிஹரன் சத்தமாக அழைத்து அதிர்ச்சியில் உறைந்து நின்றார். அங்கே அலைகளின் சீற்றம் பெரும் கொந்தளிப்பாக மாறி கொண்டிருந்தது. ஆழம் அதிகமான அந்த பகுதியில் சிறிதும் அச்சமின்றி நீந்தி கொண்டு சென்ற பிரபஞ்சன், தான் சென்று கொண்டிருந்த நோக்கம் நிறைவேறாமல் திரும்புவதில்லை என்ற முடிவோடு இன்னும் ஆழமாக உள்ளே நீந்தி சென்றான்.

அவருக்கு அவன் தலை மட்டுமே புலப்பட்டது. முதல்முறையாக ஹரிஹரன் அவனை எப்படி பார்த்தாரோ அப்படியே இருந்தது அந்த பயங்கர காட்சி சீறி கொண்டிருந்த அந்த கடலலைகளின் வழியே!

திக்கற்று இயலாமையோடு அவர் அவன் சென்ற திசையை அதிர்ந்து பார்த்திருக்க, அப்போது சிறியதாக ஒரு பெண்ணின் தோள் பை அலையில் மிதந்து கரையை தொட்டது. அது மீண்டும் கடலுக்குள் செல்லாமல் கையிலேந்தினர் ஹரிஹரன்.

அதனை பார்த்த போதுதான் அவருக்கு ஒரு விஷயம் புரிய ஆரம்பித்தது. பிரபஞ்சன் கடல் மகன். மரணத்தையே வென்றெடுக்கும் சக்தி வாய்ந்தவன். அவன் மீண்டு வருவான். மீட்டு வருவான்.

மனதில் ஒருவித நிம்மதி பரவ ஆசுவாசமாக மூச்சை இழுத்துவிட்டபடி அந்த பையை திறந்து ஆராய்ந்து பார்த்தார். அதிலிருந்த பொருட்கள் எல்லாமே நீரால் நனைந்திருக்க, அவற்றிலிருந்த ஒரு அட்டையில் அவளின் விபரங்கள் இருந்தன. அவள் இந்திய நாட்டை சேர்ந்த பெண் அல்ல. வேற்று நாட்டு குடி மகள்.

பெயர்  ‘ஷெர்லி எட்வர்ட்ஸ்’

************

சரியாக இந்த சம்பவம் நடக்க ஒரு  மாதங்களுக்கு முன்பாக….

இயற்கையின் விதியாகப்பட்டது புவியின் ஒருபுறத்தில் இருள் கவ்வும் போது அதன் மற்றொரு புறத்தில் விடியலை காண்பதுதான்.

கலிபோர்னியாவில் விடியலின் தொடக்கமாக வெளிச்சம் பரவி கொண்டிருந்தது. குளிர் கால தொடக்கமென்பதால் சூரியன் கூட சோம்பியபடியே துயில்கலைந்தான். அங்கிருந்த பனித்துகள்களை விரட்ட அவன் எந்தவித முயற்சியிலும் ஈடுபட்டதாகவே தெரியவில்லை.

அந்த சாலைகளில் வீடுகள் அட்டை பெட்டிகள் போல வரிசை கட்டி இருக்க, வீடுகளின் ஓடுகளின் மீது திட்டு திட்டாக பனி துகள்கள் படர்ந்திருந்தன. ரம்யமாக தொடங்கிய அந்த காலை பொழுதை ரசிக்கவோ லயிக்கவோ முடியாமல் அதிர்ச்சியில் எழுந்தமர்ந்தான் சத்யா!

எங்கே இருக்கிறோம் என்று சுற்றுமுற்றும் பார்த்தான்.

அழகான சிறிய படுக்கையறை அது! குளிரின் தாக்கம் துளியும் உள்ளே உணரப்படாத அளவுக்கு கதகதப்பாக இருந்தது. தேவையற்ற எந்த பொருட்களும் அந்த அறைக்குள் திணிக்கப்பட்டிருக்கவில்லை.

மூடிய கண்ணாடி சாளரம். சுவற்றையொட்டி ஒப்பனை பொருட்கள் வைக்க வடிவமைக்கப்பட்ட ஓரு அழகிய கபோர்ட். அதனோடு இணைந்து முகம் பார்க்கும் ஒரு வட்டவடிவ கண்ணாடி. உடைகள் வைக்கவென்று அருகில் ஒரு சிறிய அறை போன்று வடிவமைக்கப்பட்ட வாட்ரூப்.

சாளரத்தின் ஓரத்தில் மெல்லிய வெள்ளை திரைசீலைகள் விலகியிருக்க, பனித்துகள்கள் வழியே அந்த அறைக்குள் ஊடுருவியது சூரிய ஒளி. அதில் மிளிர்ந்தது அவளின் அந்த புகைப்படம்.

மோகன புன்னகை வழிய அதில் அவள்!

ஒரு முறை பார்த்தாலே மையல் கொள்ள செய்யும் அவளின்   விழிகளும் தோள்களில் நீண்டு சரிந்தாடும் அந்த கார்குழலிலிருந்தும்  பார்வையை யாராலும் அத்தனை சீக்கிரத்தில் அகற்றி கொள்ளவே முடியாது.

ஆனால் சத்யாவோ அவளின் படத்தை மிரட்சியோடு பார்த்தான்.

‘அப்படின்னா இது ஷெர்லியோட அறையா?!’

எகிறியது அவன் இதயத்துடிப்பு. அச்சம் மேலிட அந்த படத்தை பார்த்து கொண்டிருந்த அவனின் அச்சத்தை மேலும் அதிகாரிக்கும் விதமாக ரீங்காரமிட்டது அவன் கைப்பேசி.

அனுசுயா என்று அதில் ஒளிர்ந்த பெயரை பார்த்த நொடி இன்னும் அதிகமாக அதிர்ந்தான். தன் செல்பேசியை கையிலெடுத்து உற்று பார்த்தான். அவனின் ரத்த ஓட்டம் தாறுமாறாக ஏறியது. வியர்க்க தொடங்கியது.

அவன் குற்றவுணர்வில் அந்த அழைப்பை ஏற்க முடியாமல் தவிப்புற்றான்.

‘அனு கிட்ட நான் இப்ப எப்படி பேசுவேன்?’ தனியாக புலம்பிய அவன் மனதிற்கு நேற்றிரவு உண்மையிலேயே அப்படி நடந்திருக்குமோ என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்தது.

அதற்கேற்றார் போல் அவன் நேற்றிரவு அணிந்திருந்த ஜெர்கின், மேலாடை எதுவும் அவன் தேகத்தில் இல்லை. வேகமாக படுக்கையை சுற்றி அதனை தேட, அவன் பார்வைக்கு பட்டது அங்கிருந்த இருக்கையின் மீது கிடத்தப்பட்டிருந்த அவளின் ஆடை!

மேலும் அதிர்ச்சி! நேற்றிரவு அவள் அணிந்திருந்த அதே ஆரஞ்சு நிறத்தில் அந்த ஸ்லீவ்லெஸ் கவுன். அந்த உடை அவளை பேரழகியாக காட்டியது என்று சொன்னால் அது மிகையல்ல. எந்தவொரு ஆணையும் சபலப்படுத்துவிடும் அவள் அழகில் அவன் மட்டும் என்ன விதிவிலக்கா?

அதுவும் போதை மயக்கத்தில் அவளிடம் அந்த இரவு பொழுதில் தனிமையில் உத்தமபுத்திரனாக நடந்து கொள்வதெல்லாம் சாத்தியமே இல்லை.

இந்த எண்ணம் தோன்றிய மறுநொடி அதிர்ச்சியில் அவன்  படுக்கையில் சரிய, அவன் பேசி மீண்டும் அழைத்தது. அனுசுயாவின் அழைப்புதான்! அவனுக்கு பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. இன்னும் ஒரு மாதத்தில் அவனுக்கும் அனுசுயாவிற்கும் திருமணம்!

எப்படி இப்படி ஒரு செயலை தான் செய்தோம். என்னதான் அவள் பேரழகியாகவே இருந்தாலும் தான் செய்தது மன்னிக்கவே முடியாத துரோகம் இல்லையா?

சத்யா. ரொம்பவும் ஒழுக்கமான கட்டுக்கோப்பான குடும்பத்தில் கண்டிப்போடு வளர்க்கப்பட்டவன். இப்படியான ஒரு செயலை அவன் செய்தான் என்று மட்டும் தெரிந்தால் அவன் வீட்டில் அவனை கொன்றே போட்டுவிடுவார்கள்.

அதிலும் அனுசுயாவிற்கு தெரிந்தால்…

அதிர்ச்சியில் அவனுக்கு நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது.

கணிப்பொறியில் பொறியியல் படிப்பு  முடித்துவிட்டு நான்கு வருட காலம் நொய்டாவில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தான்.  அங்கே வேலை நிமித்தமாக அவன் உட்பட அவன் நிறுவனத்தில் வேலை செய்யும் பத்து பேரை தேர்வு செய்து  ஆறு மாதகாலம் கலிபோர்னியாவிற்கு அனுப்பியிருந்தார்கள்.

திருமண ஏற்பாடான நிலையில்  போக வேண்டாமென தமிழகத்திலுள்ள சத்யாவின் குடும்பத்தினர் தடை சொல்ல, அவனோ அவர்களிடம் படாதபடுப்பட்டு சம்மதம் வாங்கினான்.

அதுவும் அனுசுயா வேறு, “நீங்க கண்டிப்பா போயே ஆகணுமா?” என்று குழைவாக கேட்க

அவளிடம்,  “இந்த மாதிரி வாய்ப்பு அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் கிடைகாதும்மா… ப்ளீஸ்”  என்று கெஞ்சி கொஞ்சி அவளிடமும் சம்மதம் பெற்றுவிட்டான். ஆனால் விதியாகப்பட்டது சத்யாவின் வாழ்கையில் ஷெர்லியின் ரூபத்தில் விளையாட தொடங்கியது.

அவர்களின் பத்து பேர் கொண்ட குழு கலிபோர்னியா சென்று சேர்ந்ததும் அந்த நாட்டு  பெண்கள் ஆண்களை என  எல்லோரையும்  ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்தனர். அவர்கள் பழக்கவழக்கம் நிறம் உடை என்பவையெல்லாம் அவர்கள் பார்த்திராத ஒன்று அல்ல. எனினும் நெருங்கி அந்த மக்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது அதுதான் முதல்முறை அல்லவா?!

அவர்கள் தங்கள் வேலையை தொடங்கிய இரண்டாவது நாள்தான் ஷெர்லியின் அறிமுகம். பார்த்த மாத்திரத்தில் யாருமே அவளை அந்த நாட்டு பிரஜை என்று ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.

பொன்னிறத்தில் செந்நிறத்தை குழைத்து செய்த பதுமை போன்ற நிறம். அவளின் கருமையான விழிகளும் கூந்தலும் எந்தவிததிலும் அந்த நாட்டு பெண்ணாக அவளை தோன்றவே செய்யவில்லை.

அதுவும் சத்யாவுடன் வந்த பத்து பேர் கொண்ட குழுவில் ஆறு பேர் டில்லியை சேர்ந்தவர்கள். இருவர் பெங்களூர். மற்றும் ஒருவர் ஆந்திரா. சத்யா மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவன்.

பார்த்த உடனே அவனுக்கு அவள் தமிழ் பெண்ணாகத்தான் இருப்பாள் என்று தோன்றியது. மற்றவர்களும் அவள் இந்தியா என்றே யுகித்தனர். ஆனால் அவள் வட இந்தியாவா தென்னிந்தியாவா?

இதுதான் அவர்களின் பெருத்த சந்தேகம். ஆனால் அவர்களின் எண்ணத்தை பொய்யாக்கும் விதமாக அவர்கள் குழிவின் மேலாளர் அவளை அறிமுகம் செய்து வைத்தார்.

‘ஷெர்லி எட்வர்ட்ஸ்’

அவளின் நடை உடை பாவனை மற்றும் அவள் நுனிநாக்கில் பேசிய ஆங்கிலம் உட்பட அவள் எந்தவிதத்திலும் இந்திய பெண் அல்ல என்பது தெளிவுப்படுத்திய போதும் அந்த கூட்டத்திலிருந்து அவள் மட்டும் வித்தியாசமாக தெரிவது அவர்கள் எல்லோரின் பார்வையையும் உறுத்தி கொண்டேயிருந்தது.

எப்படியாவது அவளின் குடும்பபின்னணியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்று அவர்களுக்குள் ஆவல் பிறந்தது.

ஆனால் அது அத்தனை சுலபமான காரியமாக இல்லை. ஷெர்லி ரொம்பவும் கண்டிப்பான பேர் வழி. வந்து ஒரு மாதம் கடந்துவிட அலுவலக விஷயம் தவிர வேறெந்த விஷயமும் அவள் வாயிலிருந்து வாங்கவே முடியவில்லை. அதற்கும் மேலாக அவள் ரொம்பவும் அழுத்தமான பெண். நட்பு ரீதியாக அவளிடம் நெருங்குவதற்கு  கூட அவள் யாருக்கும் வாய்ப்பு தரவில்லை. அவள் வேலை உண்டு அவள் உண்டு என்றிருந்தாள்.

ஷெர்லியை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவர்கள் யாருக்கும் அப்போதும் குன்றியபாடில்லை. இதனால் அவர்கள், “இங்கிருந்து நாம எல்லோரும் கிளம்புறதுக்கு முன்னாடி நம்மலில ஒருத்தர் ஷெர்லி பேமிலி கண்டுபிடிச்சா  என்ன பெட்?” என்று தீவிரமாக அவள் விஷயத்தில் இறங்கினர்.

சத்யாவிற்கு இதில் பெரிதாக உடன்பாடில்லை. இருப்பினும் இந்த சவாலை அவன் ஏற்கவில்லை என்றால் கோழை என்று பட்டம்கட்டி கேலி செய்தே கொன்று விடுவார்கள் என்ற காரணத்திற்காக அவன் அவர்கள் சொல்வதை ஏற்றது போல் காட்டி கொண்டான். ஆனால் எந்தவிதத்திலும் ஷெர்லியிடம் பழகும் முயற்சியை அவன் செய்யவில்லை. ஆனால் அதிர்ஷ்ட காற்று தானாகவே அவன் பக்கம் வீசியது.

சத்யாவிடம் ஷெர்லியே சென்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட ஒரு நாளும் வந்தது.

 

 

error: Content is protected !!