கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 19
கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 19
கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 19
கண்ணாடி மாளிகை இரண்டாக உடைய, உடைந்த கண்ணாடி மாளிகையைக் கையில் எடுத்தபடி கீர்த்தனாவைக் குற்ற உணர்ச்சியோடும், பதட்டத்தோடும் விஜயேந்திரன் பரிதாபமாகப் பார்க்க, அவன் கைகளை உரிமையாகப் பற்றினாள் கீர்த்தனா.
அந்த தொடுகை, பல செய்திகளைக் கூற, விஜயேந்திரனின் பதட்டம் இன்னும் அதிகரிக்க, “எதுக்கு இவ்வுளவு டென்ஷன் ஆகுறீங்க? நான் கொடுத்த கண்ணாடி மாளிகை தான். அதுக்காக இவ்வுளவு வருத்தப்படணுமா? கண்ணாடி மாளிகை தானே, உடைஞ்சி போச்சு. என்னவோ எனக்கே என்னமோ ஆன மாதிரி வருத்தப்படுறீங்க. சரி பண்ணிரலாம்.” என்று முற்போக்கு சிந்தனையோடு கூற, பதில் கூற முடியாமல் விஜயேந்திரன் தடுமாறினான்.
“நீங்க எடுக்காதீங்க. நான் எடுத்து வைக்கிறேன்.” என்று விஜயேந்திரனிடம் பேசியபடியே, உடைந்ததைத் தூக்கி ஏறிய மனமில்லாமல் அதை மேஜை மீது வைத்தாள் கீர்த்தனா. பல குழப்பங்கள் நிறைந்த யோசனையோடு விஜய் மௌன ஆயுதத்தை எடுத்துக் கொண்டான்.
உடைந்த மாளிகை, கீர்த்தனாவின் மனதைப் பாதிக்கவில்லை. அவள் மனம் நிறைவாய் இருக்க, அவள் உதடுகள் பாடலை முணுமுணுத்தது.
மலரே மௌனமா மௌனமே வேதமா
அன்பே மலரே மௌனமா மௌனமே வேதமா
கீர்த்தனாவின் முகத்தில் புன்னகை தவழ, விஜயேந்திரன் அவளைப் பரிதவிப்போடு பார்த்தான். கீர்த்தனா, அறையின் பொருட்களைச் சரி செய்தபடி, தலை அசைத்தவாறே பாட, அவள் இசைக்கு ஏற்ப கூந்தல் அசைந்தாடியது.
பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ அ ஆ
மீதி ஜீவன் உன்னை பார்த்த போது வந்ததோ ஒ ஓ…
ஏதோ சுகம் உள்ளூருதே… ஏனோ மனம் தள்ளாடுதே
ஏதோ சுகம் உள்ளூருதே… ஏனோ மனம் தள்ளாடுதே…
விரல்கள் தொடவா… விருந்தைத் தரவா….
கீர்த்தனா இருக்கும் அறையில், தானும் இருக்க மூச்சை மூட்ட, விஜயேந்திரன் அறையை விட்டு வேகமாக வெளியேறினான்.
அவன் வெளியேறியதை உணர்ந்த கீர்த்தனா, ‘நமக்கு தானே வெட்கம் வரும். அவங்களுக்கும் வருமா?’ என்று தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை தன் நாடியில் கைவைத்து தீவிர சிந்தனையில் மூழ்கினாள். அதே நாளில், முகுந்தன், நிரஞ்சனா இருவரும் மகாபலிபுரம் செல்ல திட்டமிட்டனர்
“முகுந்தன். பைக்லயேவா போறோம்?” என்று நிரஞ்சனா கண்களை விரித்து கேட்க “எஸ் நீரு…” என்று உற்சாகமாக தலை அசைத்தான் முகுந்தன்.
“எதுக்கு அங்க மூணு நாள் ஸ்டே.” என்று நிரஞ்சனா கேட்க, “சொல்லட்டுமா.” என்று கண்சிமிட்டினான் முகுந்தன்.
“ம்…” என்று நிரஞ்சனா கெத்தாகக் கூற, முகுந்தன் இரண்டு அடி எடுத்து வைத்து முன்னேறினான். முகுந்தன் அவளை நெருங்க நிரஞ்சனா மெல்ல பின்னே நகர்ந்தாள். “டேய்… நீ சரி இல்லை.” என்று அவள் முனங்க, “எக்ஸாம் முடிஞ்சிருக்கு நீரு.” என்று அவன் மேலும் அவளை நெருங்கிக் குழைய, “இன்னும் படிப்பு முடியலை.” என்று நிரஞ்சனா பின்னே நகர்ந்தபடி இன்னும் குழைந்தாள்.
நிரஞ்சனா சுவரில் சாய, அவள் இருபக்கமும் கைகளை ஊன்றி, அவளை ஆழமாகப் பார்த்தான் முகுந்தன். அவன் பார்வையின் வீரியம் தாங்காமல் நிரஞ்சனா தன் கண்களை இறுக மூட, அவள் முகத்தை தன் இதழ்களால் கோலமிட்டான் முகுந்தன். நிரஞ்சனாவின் இதயம் வேகமாகத் துடிக்க, “முகுந்த்…” அவள் குரல் வெளி வர துடித்து, வெட்கத்தில் தோய்ந்து போனது.
இளமையின் வேகம், இருவரிடமும் அலைபாய, நிரஞ்சனா தடுக்க நினைத்தும் தோற்றுப் போக, முகுந்தன் தன் ஆசை மனைவியை நெருங்க மொபைல் ஒலித்தது.
இருவரும் சுயநினவுக்கு வர, நிரஞ்சனா சடாரென்று விலகினாள். அவள் முகம் வெட்கத்தால் சிவந்திருக்க, அந்த வெட்கத்தை ரசித்தபடி முகுந்தன் சீட்டியடித்தபடி அங்கிருந்து நகன்றான்.
“நீரு… நேரமாச்சு. கிளம்பு.” என்று முகுந்தன் கூற, அச்சம் கலந்த கண்களோடு அவனைப் பார்த்தாள் நிரஞ்சனா. அவளை தன்னோடு அணைத்துக் கொண்டு, “ஜஸ்ட் எ ட்ரிப் பேபி. ஹனிமூன் இல்லை. நம்ம ஹனிமூன் எல்லாம் இப்படி சிம்பிளா மஹாபலிபுரத்திலயா இருக்கும். உன் படிப்பை முடி. அப்புறம் பாரு. சும்மா ஜிலுஜிலுன்னு எங்க போறோம்முன்னு.” என்று தன் காலரை உயர்த்தினான் முகுந்தன்.
நிரஞ்சனா அவனை மேலும் கீழும் பார்க்க, “நீரு… உண்மை. உன் கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வர விடமாட்டேன். உன் கண்ணீர் கீழ வரதுக்கு முன்னாடி என் கைகள், அதைத் தாங்கி பிடிக்கும். உன் பாதையில் முட்கள் இருந்தால், அந்த வலிகளை நான் எடுத்துப்பேன்.” என்று முகுந்தன் உணர்ச்சி பெருக்கோடு கூற, “கிளம்பலாம்.” என்று கூறி அவன் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தாள் நிரஞ்சனா.
அவனை பற்றி அவளுக்கு தெரியாதா?
மஹாபலிபுரத்திற்கு அவர்கள் பயணம் இனிதாகத் தொடங்கியது.
அன்றிரவு, விஜயேந்திரன் சற்று தடுமாற்றத்தோடு கீர்த்தனாவைத் தவிர்த்தான். விரைவாகத் தூங்குவது போல் பாசாங்கு செய்ய, ‘என்ன ஆச்சு? காலையில் நல்லா தானே இருந்தாங்க?’ என்று சிந்த்தித்தபடி பால்கனியில் உலாவினாள் கீர்த்தனா.
கால்கள் தோய்ந்து, அவளிடம் கெஞ்ச, அவள் கேள்விக்குப் பதில் தெரியாமல், ‘எங்க போக போறாங்க? அவங்க மனசில் நான் தான் இருக்கேன்,’ என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டு அறைக்குள் நுழைந்து உறங்க முயற்சித்து பல மணித்துளிகளுக்குப் பின் நித்திரையில் ஆழ்ந்தாள் கீர்த்தனா.
மறுநாள் காலையில், விஜயேந்திரன் அறையில் இல்லாமல் போக… எதோ துணுக்குற்று அவன் அலைபேசிக்கு அழைத்தாள் கீர்த்தனா.
“சுவிட்ச் ஆப்…” என்று வர, வேகமாகப் படி இறங்கி வந்தாள் கீர்த்தனா. அவளுக்கு எதிரே வந்த நவநீதன், “கீர்த்தனா. அவன் எதோ அவசர வேலையா யூ.எஸ். போறேன்னு சொன்னான். நீ தூங்கிட்டு இருந்தியாம். உன்னை எழுப்ப வேண்டாமுன்னு, என்கிட்ட சொல்லிட்டு கிளம்பினான்.” என்று நவநீதன் கூற, கீர்த்தனா அவரை அதிர்ச்சியாக பார்த்தாள்.
“ஆனா, அப்படி என்ன அவசர வேலை?” என்று நவநீதன் கீர்தனவிடமே கேட்க, “அ…” என்று தடுமாறினாள் கீர்த்தனா. ‘என்னிடம் சொல்லாமல் சென்று விட்டான்.’ இந்த எண்ணம் கீர்த்தனாவைச் சாட்டையால் அடித்தது. நவநீதன் இயல்பாகக் கூறினாலும், அவள் மனம் முரண்பாட்டை உணர்த்தியது.
‘என்னை விட்டுவிட்டுச் சென்றுவிட்டான்.’ இதை ஏற்க அவள் மனம் மறுத்தது. ஆனால், உண்மை அவள் நெஞ்சை ஈட்டியால் குத்தியது. கதறித் துடிக்க எண்ணிய அவள் மனம் சுற்றுப்புறத்தை எண்ணி ஊமையாய் அழுதது.
பதட்டம், ஏமாற்றம் சூழ்ந்த அவள் இதயம் வேகமாகத் துடித்தது. அவள் மூளை அதை விட வேகமாகச் சிந்திக்க, அவள் சிந்தனையைக் கலைத்தது பூமாவின் குரல்.
“கீர்த்தனா, விஜய் உங்கிட்ட சொல்லலியா?” என்று கேட்க, வரத்துடித்த கண்ணீரை மறைத்துக் கொண்டு, தன் தலையை வலப்பக்கமும், இடப்பக்கமும் அசைத்தாள் கீர்த்தனா.
“என்ன பொன்னுமா நீ? அவன் உன்கிட்ட சொல்லாம போறமாதிரியா நீ அவனை விட்டு வச்சிருப்ப?” என்று பூமா கடிந்து கொள்ள, கீர்த்தனாவின் முகத்தில் விரக்தி புன்னகை தோன்றியது.
‘நான் நினச்சது எல்லாம் தப்பு. அவர் மனசில் நான் இல்லை. அவர் மனசில் லீலா மட்டும் தான். அவர் என்னை நெருங்கியது கூட அவளை எண்ணி தான் இருந்திருக்கும். அது தான் உண்மை தெரிந்தவுடன் என் முகம் பார்க்கக் கூசி, விலகி விட்டார்.’ கீர்த்தனாவின் சுய அலசல் நிலைமையை அவளுக்கு உணர்த்தியது.
“எப்ப வருவான்னு தெரியலியே? அப்படி என்ன வேலை?” என்று பூமா புலம்பிக் கொண்டிருக்க, ‘வருவார். ஒரு வருஷம் கழிச்சி, விவாகரத்து வாங்க.’ என்று கீர்த்தனாவின் மனம் கூற, அவள் உதடுகள், “தெரியலை அத்தை.” என்று இயல்பாய் இருப்பது போல் காட்டிக் கொண்டு கூறியது.
மேலும் அங்க நிற்க இயலாமல் வேகமாக அவர்கள் அறைக்குள் நுழைந்தாள் கீர்த்தனா.
கதவைச் சாத்திக்கொண்டு, “ஓ…” என்று கதறினாள் கீர்த்தனா. விஜயேந்திரன் அவளுக்காக வாங்கி கொடுத்த கலைக்குத் தேவையான அனைத்து பொருட்களும், அவளை விசித்திரமாகப் பார்க்க, “இதுவெல்லாம் பொய்யா? இதுவெல்லாம் என் மீதான அக்கறை இல்லையா?” என்று அந்த பொருட்களைப் பார்த்து ஏமாற்றத்தோடுக் கேட்டாள் கீர்த்தனா.
அங்கிருந்த உடைந்த கண்ணாடி மாளிகை அவளைப் பரிதாபமாகப் பார்த்தது.
அங்கிருந்த தலையணையை வெறுப்பாகத் தூக்கி எறிந்தாள் கீர்த்தனா. “அக்னி சாட்சியாக அரங்கேறிய திருமணம் பொய்யா? நான் அவர் மீது கொண்ட அன்பு உண்மை இல்லையா?” என்று பூட்டிய அறைக்குள் வாய்விட்டுக் கதறினாள் கீர்த்தனா.
“அவர் கொண்ட காதல், நான் அவர் மீது கொண்ட அன்பை விட எந்த விதத்தில் உசத்தி?” என்று கீர்த்தனாவின் மனம் ஓலமிட்டது.
“இல்லை… திருமணம் நிஜம். நான் அவர் மனைவி என்பது நிஜம். அதை யாராலும் மாற்ற முடியாது.” என்று அவள் மனதின் வார்த்தைகள் உறுதியாக வெளியே வர, அவள் தன் கைகளால் நெற்றியை படார் பாடாரென்று அடித்துக் கொண்டாள்.
தடுக்க ஆளின்றி, அரவணைக்க தோளின்றி கீர்த்தனாவை அழகை, வெடி சத்தமாக மாறி பெருத்த ஓலையிடும் சத்தத்தை எழுப்பியது. ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம் கண்ணீராக வெளியேறியது.
பித்துப் பிடித்தவள் வெறுப்பாக அமர்ந்திருந்த கீர்த்தனா, சில நொடிகள் மௌனித்தாள்.
கீர்த்தனாவின் மனம் நொந்து, மடிந்தது. கீர்த்தனாவின் மனம் செயலிழக்க, அவள் அறிவு தன் செயல்பாட்டைத் துவங்கியது.
‘திருமணம் நிஜம் என்றால், எதற்கு இத்தனை விவாகரத்துகள்?’ கீர்த்தனாவின் அறிவு அவள் முன் நிதர்சன கேள்வியை முன்வைத்தது. இந்த கேள்வி அவளை நடுங்கச் செய்தாலும் நிதர்சனத்தைப் புரிய வைத்தது.
‘ஊரறிய தாலி கட்டினால் போதுமா? மனம்?’ என்று அவள் மூளை அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்க, தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் கீர்த்தனா.
“அழக்கூடாது. அழுது என்ன பயன்?” என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டாள் கீர்த்தனா. “முதல் நாளே, புத்திசாலித் தனத்தோடு நடந்திருக்க வேண்டும். அவங்க தான் உண்மையை சொல்லிட்டாங்களே? நீ தான் லூசு மாதிரி நம்பிக்கை வளர்த்துக்கிட்ட.” என்று தன்னை தானே சத்தமாகத் திட்டிக் கொண்டாள் கீர்த்தனா.
‘எவளோ ஒருத்தியைக் காதலித்தவன்! அது முடிந்த கதை. பெருந்தன்மையாக நீ ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இன்னொருத்தியை நினைத்து கொண்டிருப்பவன்?’ இந்த எண்ணம் கீர்த்தனாவுக்கு வலித்தது. ஆனால், நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ள, அவள் அறிவு அதையும் தாண்டி ஆராய முற்பட்டது.
‘இப்பவும் இன்னோருத்தியை நினைத்துக் கொண்டிருப்பவனோடு உனக்கு எதற்கு வாழ்க்கை? நீ ஏன் தாழ்ந்து போக வேண்டும்? மனைவி, நீ இங்கிருக்க… அவன் யாரை தேடி போக வேண்டும்? எதற்காக, உன்னிடம் சொல்லாமல் போக வேண்டும்?’ கீர்த்தனாவின் தன்மானம், சுயகௌரம் அவளை பார்த்து ஏளனமாக கேட்டது.
‘அன்பால் கட்டப்பட்ட வேண்டிய பந்தம். அன்பை எதிர்பார்த்துக் கட்டப்பட்டுவிட்டது துரதிஷ்டம். ஆனால், இந்த நிலை போதும்!’ என்று அவள் மனம் உறுதியாகக் கூற, “நான் என் வீட்டுக்குப் போகிறேன்.” என்று தனக்கு தானே கூறிக்கொண்டாள்.
‘இப்படியே போகக் கூடாது. இந்த விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது. இப்போதைக்கு என் வீட்டுக்கு போகணும். அங்க போய், நிதானமா யோசிக்கணும். என்னால், இனி அவர் முகத்தில் கூட விழிக்க முடியாது. அப்படி அவரை பார்த்தால், என் மனம் மானங்கெட்டு அவருக்காகவே வக்காலத்து வாங்கும். ‘ என்று தன்னையே நொந்தபடி ஓரிரு நாளில் அங்கிருந்து கிளம்ப முடிவு செய்தாள் கீர்த்தனா.
‘என் நண்பனே என்னை ஏத்தாய்… ஓ என் பாவமாய் வந்து வாய்த்தாய்
உன் போலவே நல்ல நடிகன்… ஓ ஊரெங்கிலும் இல்லை ஒருவன்
நல்லவர்கள் யாரோ தீயவர்கள் யாரோ கண்டுக் கொண்டு கன்னி யாரும்
காதல் செய்வது இல்லையே கங்கை நதி எல்லாம் கானல் நதி என்று
பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ?’
கீர்த்தனாவின் மனம் ஊமையாய் அழுதது.
‘ இரு மனங்கள் இணையாமல், திருமணம் அரங்கேற முடியும்? ஆனால், அந்த இருவரால் வாழ்க்கையை நகர்த்திவிட முடியுமா? ‘ என்ற கேள்வி விஜயேந்திரனின் மனதில் குடியேற, ‘என் மனம் எங்கோ லயித்திருக்க, திருமணம் என் மனதை மாற்றிவிட்டதா? நான் எதைத் தேடுகிறேன்? ஆனால், என்னால் கீர்த்தனா இருக்கும் அறையிலிருந்து கொண்டு சிந்திக்கக் கூட முடியாது. தொலை தூரம் செல்ல வேண்டும். அவளை விட்டு தொலை தூரம் செல்ல வேண்டும்.’ என்று எண்ணியபடியே விமானத்தில் பறந்து கொண்டிருந்தான் விஜயேந்திரன்.
அன்று மாலை, நிரஞ்சனா பின்னே அமர்ந்திருக்க, முகுந்தன் அவன் வண்டியை வேகமாகச் செலுத்திக் கொண்டிருந்தான். “முகுந்த்… கொஞ்சம் மெதுவா போ.” என்று கெஞ்சினாள் கொஞ்சினாள் நிரஞ்சனா. “கேட்கல… கேட்கல…” என்று கத்தினான் முகுந்தன்.
“டேய்…” என்று நிரஞ்சனா கத்த, “நீரு…” என்று அவன் அழைக்க, “ம்…” என்று நிரஞ்சனா சத்தம் செய்தாள்.
“ஏய்… பொண்டாட்டி.” என்று அவன் அழைக்க, “இது என்ன புதுசா?” என்று முகுந்தனை இறுகக் கட்டிக்கொண்டு, அவள் தோளில் முகத்தைப் புதைத்து, அந்த உரிமையான அழைப்பில் மனம் நெகிழ்ந்து கேட்டாள் நிரஞ்சனா.
“ம்… இப்படி உட்காரனும். என் பக்கத்தில். அதை விட்டுவிட்டு. லவ்வர்ஸ் கூட அவ்வுளவு நெருக்கமா உக்காத்திருக்காங்க. ஆனால், லவ் பண்ணி கல்யாணம் பண்ண நம்ம, எட்டடி தள்ளி உட்காறோம் பாரு.” என்று முகுந்தன் கோபம் போல் கூற, “என்ன ஆச்சு உங்களுக்கு இந்த இரண்டு நாளா?” என்று கேட்க, “நீ ரொம்ப அழகா தெரியுற என் கண்ணுக்கு.” என்று முகுந்தன் குறும்பாகச் சிரிக்க, “ஆகான்…” என்று நிரஞ்சனாவின் முகத்திலும் அதே புன்னகை பரவியது.
இருவரும் இன்ப கடலில் மூழ்கி காற்றைக் கிழித்துக் கொண்டு வண்டியில் செல்ல, பின்னே வந்த லாரி இவர்களை நெருங்க, அப்பொழுது ஒரு நாய் எதிரே குறுக்கே பாய, லாரி டிரைவர் ஸ்டெயரிங்கை நொடிக்க… லாரி, பைக்கை சிராய்த்துவிட்டு சென்றது.
பைக் கீழே சரிய, நிரஞ்சனா தூக்கி எறியப்பட்டாள். தலை தரையில் மோதி ரத்தம் வழிய ஆரம்பித்தது. அவள் அருகே எழுந்து செல்ல முயன்று முகுந்தன் தோற்றுப் போனான். அவன் மேல் இருந்த பைக், உடம்பில் ஏதோ ஒரு வலி விண்வினென்று தெறிக்க, அவன் யோசனை அவனை நடுங்கச் செய்தது.
‘ஐயோ… நிரஞ்சனாவுக்கு ஏதாவது ஒன்னுனா நான் என்ன செய்வேன்? யாரை அழைப்பேன்?’ இந்த கேள்வி அவன் முன் பூதாகரமாய் நின்றது. நிரஞ்சனாவிற்கு, இரத்தம் நிற்காமல் வழிய, அவள் மெல்ல மெல்லச் சுயநினைவை இழந்து கொண்டிருந்தாள்.
“காதல் வெல்லுமா காதல் தோற்குமா
யாரும் அறிந்ததில்லையே என் தோழியே”
‘இரு மனங்கள் இணையும் இடத்தில் திருமணம் அரங்கேற முடியும். ஆனால், இருவரால் மட்டுமே வாழ்க்கையை நகர்த்திவிட முடியுமா?’ என்ற சந்தேகமும் முதல் முறையாக நிரஞ்சனாவை நெருங்க முடியாமல் வலியால் துடித்துக் கொண்டிருந்த முகுந்தனுக்கு எழுந்தது.
கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்…