கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  24

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  24

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  24

அதிகாலை நேரம்.  கீச்… கீச்… என்ற பறவை சத்தம். கீர்த்தனா புரண்டு படுத்தாள்.மீண்டும் பறவைகளை ஒலி. ‘பால்கனி கதவை மூடலையோ?’ என்று எழுந்து அமர, அருகே விஜயேந்திரன் இல்லை. கீர்த்தனாவின் இதயம் வேகமாகத் துடித்தது. ‘கிளம்பிட்டானோ?’ அவள் மனம் சிந்திக்க, அவள் நெற்றியில் வியர்வை துளிகள். மனம் என்பது  நம்பிக்கை சார்ந்தது. அது நம் ஆசையை நம்பிக்கையாக வெளிப்படுத்தும். விஜயேந்திரன், கீர்த்தனாவின் ஆசை. அவள் கணவன் என்ற நம்பிக்கையை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.

‘இது என்ன வாழ்க்கை? இவன் எதற்கு எனக்கு? வேற ஒருத்தியை நினைச்சுக்கிட்டு. சொல்லாமல் கொள்ளாமல் போனவன்.’ என்று கீர்த்தனாவின் அறிவு அவளை நிந்தித்தது.  அறிவு காரணம் கற்பிக்கும். நிதர்சனத்தை உணர்த்தும். கீர்த்தனா நிதர்சனத்திற்கும், ஆசைக்கும் இடையே போராடிக் கொண்டிருந்தாள். அறிவும், மனமும் விடாப்பிடியாகச் சண்டை இட்டுக்கொண்டது.

கீர்த்தனாவின் மனம் விஜயேந்திரனின் செயலால் மரத்துப் போயிருந்தது. அவள் அறிவே வேலை செய்தது. ‘போகிறவரை நான் பிடித்தா வைக்க முடியும்? நான் என்ன ஏமாளியா? எனக்கு மானம் இல்லையா? ரோசம் இல்லையா?’ என்று வீம்போடு சிந்தித்துக் கொண்டே, கீர்த்தனா பால்கனிக்கு செல்ல, தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான் விஜயேந்திரன்.

கீர்த்தனாவின் அறிவு தன்  செயலை நிறுத்திக் கொண்டது. ‘ஐயோ… நைட் முழுக்க இங்க தான் தூங்குனாங்களா? ஐயோ, கொசு கடிச்சிருக்குமே. பனி காத்து வேற. உடம்பு என்ன ஆகும்?’, என்ற சிந்தனையோடு கீர்த்தனாவின் மனம் விஜயேந்திரனின் முகம் பார்த்த்தும் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

விஜயேந்திரனின் முகத்தை உற்றுப் பார்த்தாள் கீர்த்தனா. ‘அழுத்திருக்கங்களோ? நான் ஓவரா பேசிட்டானோ? இல்லலை. அப்படி எல்லாம் இல்லை. நான் நியாயமா தான் கேட்டேன். என் மேல என்ன தப்பு இருக்கு?’ என்று தனக்கு தானே வாக்குவாதம் செய்து கொண்டு, குளியலறை நோக்கிச் சென்றாள் கீர்த்தனா.

பூஜையை முடித்துக் கொண்டு, சமையலறை நோக்கிச் சென்று அனைவருக்கும் அவர்களுக்கு ஏற்றவாறாக, காபி, டீ கலந்து சென்றாள் கீர்த்தனா.

“ஏன் அந்த மகாராணி வர மாட்டாங்களா?” என்று பூமாவின் குரல் வெளிவர, பொந்திலிருந்து எட்டிப் பார்க்கும் எலியைப் போல  நிரஞ்சனா மெதுவாக தன் தலையை வெளியே நீட்டினாள். “ம்.. க்கும்… ம்… க்கும்…” என்று நிரஞ்சனா சத்தம் எழுப்ப, “அக்கான்னு கூப்பிடு.” என்று முகுந்தன் கூற, ‘கூப்பிடலாமா?’ என்ற கேள்வியோடு நிரஞ்சனா கீர்த்தனாவைப் பார்க்க, ஒரு புன்னகையோடு சம்மதத்தைத் தெரிவித்தாள் கீர்த்தனா.

“ஸ்வாதி என்னை அக்கான்னு தான் கூப்பிடுவா.” என்று நிரஞ்சனா கண்களில் ஏக்கத்தோடு கூற, ‘அப்படி எதுக்கு எல்லாரையும் விட்டு லவ் பண்ணனும்? கல்யாணம் பண்ணனும்?’ என்ற கேள்வியெல்லாம் இப்பொழுது கீர்த்தனாவிடம் இல்லை. நிரஞ்சனா, முகுந்தன் அன்னியோன்னியம் கீர்த்தனாவின் எண்ணத்தை சற்று மாற்றி இருந்தது.

“எல்லாம் சரியாகிரும். இல்லைனா சரி பண்ணிரலாம்.” என்று கீர்த்தனா கூற, “ரியல்லி? தேங்க்ஸ்.” என்று கீர்த்தனாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் நிரஞ்சனா.

கீர்த்தனா அவர்கள் அறைக்குள் செல்ல, நிரஞ்சனா அறையை அவசர அவசரமாகச் சரி செய்தாள்.

“பரவால்லை இருக்கட்டும். நான் தானே.” என்று கீர்த்தனா கூற, “அண்ணி… அண்ணா வரச் சொல்ல முடியுமா? நீரு வெளியே போகணுமுன்னு சொன்னா.” என்று முகுந்தன் கூறினான்.

‘இவ என்கிட்டே மட்டும் தான் கோபத்தை காட்டுவா போல.’ என்ற கீர்த்தனா பற்றிய  எண்ணத்தோடு இவர்கள் சம்பாஷணையை முகுந்தன் அறைக்கு  வெளியே இருந்து கேட்டுக் கொண்டிருந்த விஜயேந்திரன்,  “இதோ.” என்று கூறிக்கொண்டே, அவர்கள் அறைக்குள் நுழைந்தான்.

முகுந்தனிடம் இயல்பாகப் பேசிக்கொண்டே, நிரஞ்சனா அவனுக்குத் தேவையானதைச் செய்து கொண்டிருந்தாள்.

நிரஞ்சனா அவனை வெளியே அழைத்துச் செல்ல, “இப்ப இதெல்லாம் தேவையா? ஒரு காபி சாப்பிடறதுக்கு வெளிய போகணுமா?” என்று பூமா கேள்வி எழுப்ப, “அம்மா…” என்று தாயை அடக்கிவிட்டு அவர்கள் அறைக்குச் சென்றான் விஜயேந்திரன்.

நிரஞ்சனா முகுந்தனின் சூழல் நாற்காலியைப்  பூப்பந்தலுக்குக் கீழ் நிறுத்தினாள்.

அதே நேரம்,

கீர்த்தனா காபி கோப்பையோடு, விஜயேந்திரனின் அறைக்குள் நுழைந்தாள். விஜயேந்திரன் அவன் கைகளை நீட்ட, படக்கென்று காபியைத் தரையில் வைத்தாள் கீர்த்தனா.

பல துளிகள் கீழே சிதறி விழுந்தது. “இதுக்கு காபி குடுக்கமாலே இருந்திருக்கலாம்.” என்று விஜயேந்திரன் கூற, “நானும் அப்படி தான் நினச்சேன். நான் காபி கொண்டு வரலைனா, நம்ம பிரச்சனை அத்தை, மாமாவுக்கு  தெரிஞ்சிரும். அவங்களுக்குகாகத் தான் கொண்டு வந்தேன்.” என்று சுவரைப் பார்த்தபடி கூறினாள் கீர்த்தனா.

“அப்ப, அத்தை மாமாவுக்கு விஷயம் தெரியக் கூடாது?” என்று விஜயேந்திரன் தனக்குத் தேவையான விஷயத்தை உறுதி செய்து கொள்ள, “ஆமா, பழைய காதலியைக் கடல் கடந்து போய் பார்த்துட்டு வந்ததால் அது உங்களுக்கு உலக சாதனையா தெரியலாம். எனக்கு அசிங்கமாகவும், அவமானமாகவும் இருக்கு.” என்று கூறிக் கொண்டே அவள் காபியை அருந்த ஆரம்பித்தாள் கீர்த்தனா.

கீர்த்தனாவின் பார்வை எங்கோ பார்ப்பது போல் இருந்தாலும், அவள் கண்கள் விஜயேந்திரனை வட்டமடித்தது.

விஜயேந்திரன் காபியை அருந்த, தன் கண்களை இறுக மூடினான். காபியைக் கொடுத்துவிட்டு, தன் ஒற்றை வார்த்தைக்காகக் காத்திருக்கும் கீர்த்தனா அவன் கண்முன் தோன்றினாள்.

‘சக்கரை இல்லாத காபிக்கு எதாவது சொல்லுவாங்க. சொல்லட்டும், அப்ப கொடுக்கிறேன் குடு.’ என்ற எண்ணத்தோடு கீர்த்தனா விஜயேந்திரனைப் பார்த்தாள்.

எதுவும் சொல்லாமல், அமைதியாக அருந்தினான் விஜயேந்திரன். “காபி சூப்பர்.” என்று விஜயேந்திரன் நக்கலாக புன்னகைக்க, “தேங்க்ஸ். இனி இப்படியே கலந்து கொண்டு வரேன்.” என்று கூறி கீர்த்தனா தன் பக்கம் வந்த பந்தை அதிவேகமாக அவன் பக்கம் வீசி, பால்கனிக்கு செல்ல, அவளை யோசனையாகப் பார்த்தான் விஜயேந்திரன்.

‘நான் சொல்லிட்டாவது போயிருக்கணுமோ?’ என்ற தன் புருவத்தை உயர்த்தி கண்களை விரித்து யோசித்தான் விஜயேந்திரன்.

பால்கனியில் நின்று கீர்த்தனா தோட்டத்தைப் பார்க்க, அவள் கண்களில் பூப்பந்தலும், அதன் கீழே இருந்த முகுந்தனும், நிரஞ்சனாவும் இருந்தனர்.

மெலிதாக காற்று வீச, அவள் சேலையின் ஊடே அவள் இடையை தென்றல் தீண்ட கீர்த்தனாவின் உடல் சிலிர்த்தது.

அந்த மென்மையான தேக தீண்டல், கீர்த்தனாவின் நினைவுகளில், விஜயேந்திரனின் தீண்டலையும், அதனை தொடர்ந்து அவள் செவ்விதழில் பட்டுத்தெறித்த மழைத்துளியும் அவள் நினைவுகளில் முட்டி மோத, கீர்த்தனாவின் கண்கள் அப்பட்டமாக ஏக்கத்தை வெளிப்படுத்தியது.

முகுந்தனிடம் சிரித்த முகமாகப் பேசியபடியே, அவன் கைகளை நிரஞ்சனா நீவி விட, அவ்வப்பொழுது முகுந்தனின் தலைகோதி அவன் செவிகளில் நிரஞ்சனா ரகசியம் பேசி சிரிக்க, பூமா அவர்கள் அறையிலிருந்து தோட்டத்தைப் பார்த்தபடி, “ஏங்க, தோட்டத்தில் எல்லாரும் பாக்குற மாதிரி என்ன நடக்குது?” என்று தன் கணவன் நவநீதனிடம் காட்டமாக கேட்டார்.

“நீ ஏன் அதெல்லாம் பாக்குற பூமா? சின்னஞ் சிறுசுக. அப்படி இப்படி தான் இருக்கும்.” என்று நவநீதன் கூற, “அப்ப, எல்லாம் தெரிஞ்சி தான் நீங்க அமைதியா இருக்கீங்களா?” என்று பூமா சண்டைக்குத் தயாராக, தான் படித்துக் கொண்டிருந்த செய்தித்தாளை மூடி வைத்துவிட்டு  தன் மனைவி அருகே வந்தார்.

“டாக்டர் முகுந்தனுக்கு எல்லாம் சரியாகிருமுன்னு சொல்லிருக்காங்க.  கொஞ்ச நாள் எடுக்கும்ன்னு சொன்னார் அவ்வுளவு தான். ஆனால், நிரஞ்சனாவால் தான், உன் மகனுக்குச் சீக்கிரம் சரியாகப்போகுது.” என்று நவநீதன் கூற, பூமா தன் கணவனை யோசனையாகப் பார்த்தாள்.

“அவங்க கல்யாணம் பண்ணிகிட்ட முறை தப்பு தான். நான் இல்லைன்னு சொல்லலை. ஆனால், எல்லா காதலும், ஜஸ்ட் மோகமில்லை பூமா. அந்த பொண்ணு சின்ன பொண்ணு தான். கல்யாணமாகி ஆறு மாசம் தான் ஆகுது. அந்த பொண்ணு முகம் சுழிக்கவே இல்லை பூமா. முகுந்தனுக்கு சரி ஆகணுமுன்னு யோசிக்கிறாளே தவிர, அவ வாழ்க்கை என்ன ஆகுமுன்னு அவ யோசிக்கவே இல்லை பூமா. நீயோ, நானோ ஒரு பெண்ணை பார்த்திருந்தால் கூட, இந்த அளவுக்கு இருப்பாளான்னு எனக்குச் சொல்லத் தெரியலை பூமா.” என்று நவநீதன் கூற, அவர்கள் பேச்சை இடையூறு செய்வது போல், “ஹா.. ஹா…” என்று சத்தமாகச் சிரித்துக்  கொண்டிருந்தான் முகுந்தன்.

அவன் முன்னே தன் இடுப்பில் கை வைத்து முகுந்தனிடம், தலையை ஆட்டி பேசிக் கொண்டிருந்தாள் நிரஞ்சனா.

இருவர் கண்களிலும் ஒரு வருத்தமிருந்தாலும், ஒருவருக்காக மற்றொருவர் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க, அவர்கள் பேச்சும் வலியை மறைத்தபடி நீண்டு கொண்டே போனது.

‘இப்ப சரி. ஆனால், எத்தனை நாளைக்கு என்று?’ என்ற கேள்வி பூமாவின் மனதில் எழுந்தது.

மாடியிலிருந்து முகுந்தன், நிரஞ்சனாவை பார்த்துக் கொண்டிருந்த விஜயேந்திரன், “நிரஞ்சனாவுக்காகவாது முகுந்தனுக்குச் சீக்கிரம் குணமாகனும்.” என்று அவர்களைப் பார்த்தபடி, கீர்த்தனாவிடம் கூற, அவர்களைப் பார்த்தபடி, “ம்…” என்று கூறினாள் கீர்த்தனா.

முகுந்தன் பற்றிய பேச்சாக இருந்தால், இந்த “ம்…” என்ற பதில் கீர்த்தனாவிடமிருந்து வரும். மற்ற விஷயங்களுக்கு மௌனமே கீர்த்தனாவின் பதில்.

அதே நேரம், பூ பந்தலுக்குக் கீழ், முகுந்தன் பேச்சுக்கு இடையே, “நீரு… நான் அடிபட்டு கீழே விழுந்து கிடந்தப்ப, தனியா ரொம்ப கஷ்டப்பட்டியா நீரு?” என்று முகுந்தன் கேட்க, “அந்த பேச்சு, இப்ப உங்களுக்கு எதுக்கு?” என்று நிரஞ்சனா கேட்க, “கேட்குற கேள்விக்கு பதில் சொல்லு டீ.” என்று முகுந்தன் மீண்டும் அவளுக்கு அழுத்தம் கொடுக்க, “முகுந்த்…” என்று அழைத்துக் கொண்டு, தரையில் முட்டியிட்டு அவன் மடியில் தலையை வைத்துக் கொண்டாள் நிரஞ்சனா.

“முகுந்த்… பிரசவ வலி. ஒரு தாய்க்கு, அவ குழந்தையோட முகத்தைப் பார்த்ததும் மறந்திருமா. அதே மாதிரி தான், நீ பொழச்சி வந்ததும், நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு  மறந்து போச்சு முகுந்த். இந்த கஷ்டமும் கொஞ்ச நாள் தான். அப்புறம் பாரேன் எல்லாம் சரியாகிரும். நான் உன்னை எவ்வுளவு நல்லா பாத்துக்கறேனோ, உனக்கு அவ்வளவு சீக்கிரம் சரியாகிரும்.” என்று நிரஞ்சனா நம்பிக்கையோடு கூற, அதே நம்பிக்கை முகுந்தனையும் தொற்றிக் கொள்ள, “நீரு…” என்று காதல் பொங்க  அழைத்தான் முகுந்தன்.

“ம்…” என்று அவள் வெட்கத்தோடு அவன் முகம் பார்த்துச் சிணுங்க, “எனக்கு உன்னை இப்ப ரொம்ப பிடிச்சிருக்கு டீ.” என்று முகுந்தன் இழைய, “அப்ப, முன்னாடி பிடிக்கலையா?” என்று நிரஞ்சனா சண்டைக்குத் தயாரானாள்.

முகுந்தன் சிரித்துக் கொண்டே, “பார்த்தவுடன் வரது காதல் இல்லை நீரு. முதலில் வரது என்னனு சொல்ல எனக்கு  தெரியலை நீரு. ஆனால், ஒருத்தருக்காக ஒருத்தர் பார்த்துப் பார்த்து செய்றதில் தான் காதல் வளரும். அன்னியோன்னியம் பெருகும். என்னவோ… லவ் யூ நீரு. ” என்று கூற, நிரஞ்சனா அமைதியாகத் தலை அசைத்தாள்.

“நான் எதுவும் தப்பா சொல்றேன்னா நீரு?” என்று முகுந்தன் கேட்க, “இல்லை… முகுந்த். நீ சொல்றது தான் உண்மை. முன்னை விட, உன்னை நம்பி வந்த பிறகு, எனக்காக எவ்வுளவு அக்கறை எடுத்துகிட்ட, அப்ப எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப  பிடிச்சுது. எனக்கும் என்னனு சொல்ல தெரியலை.” என்று நிரஞ்சனா கூறினாள்.

பேச்சுவாக்கில் முகுந்தன் நீருவிடம் அப்படியொரு கேள்வியை கேட்க, கண்களில் கண்ணீரோடு முகுந்தனின் மார்பில் குத்தினாள் நீரு.

கண்களில் கண்ணீரோடு, அவள் அடிகளை வாங்கிக்கொண்டு, அவள் பேசிய பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டே, “நீரு… நீரு… நீரு…” என்று நெக்குருகி முணுமுணுத்தான் முகுந்தன். அந்த அழைப்பில், அவன் காதலை  உணர்த்தினான் முகுந்தன்.

காதல், காமம் இரண்டிற்கும் இடையே உள்ள மெல்லிய கோட்டில் அந்த இளம் ஜோடி பயணித்துக் கொண்டிருந்தனர்.

நீரு முகுந்தனை நெருங்கி அவன் நெற்றியில் இதழ் பதிக்க, “ஐய… இது தான் லவ்வா?” என்று பூமா முனங்கிக்கொண்டே,  அவள் கண்களை மூடிக்கொண்டு ஜன்னலிருந்து விலகிச் சொல்ல, நவநீதன் தன் மனைவியைக் குறும்பு புன்னகையோடு பார்த்தார்.

அதே நேரம், கீர்த்தனா, விஜயேந்திரன் நிரஞ்சனா, முகுந்தனைப் பார்ப்பதைத் தவிர்த்து, வேறு பக்கம் திரும்ப, அவர்கள் மௌனத்தை கலைக்கும் விதமாக, “என் கிட்ட பேசமாட்டியா கீர்த்தனா?” என்று விஜயேந்திரன் குரல் பரிதாபமாக ஒலித்தது.

“பேச என்ன இருக்கு? நீங்க ஏற்கனவே சொல்லிருக்கீங்க எனக்கும் உங்களுக்கும் ஒண்ணுமில்லைனு. ஒரே ரூமில் இருந்ததால் ஒரு நட்பு இருந்துச்சு. அதுவும் நீங்க சொல்லாம போனதில் அறுந்து போச்சு. நான் எதுக்கு உங்க கிட்ட பேசணும்?” என்று கீர்த்தனா கேட்க, ‘சொல்லாமல் போனது தப்பா? இல்லை போனதே தப்புன்னு சொல்றாளா?’ என்ற கேள்வி விஜயேந்திரனின்  மனதில் எழுந்தது.

“பூஜை பண்ணிட்டியா கீர்த்தனா?” என்று விஜயேந்திரன் அவளிடம் பேச்சை வளர்க்க, கீர்த்தனா மௌனமாக தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

“கீர்த்தனா…” என்று விஜயேந்திரன் அழைக்க, “…” மௌனமே கீர்த்தனாவிடம் பதிலாகக் கிடைக்க, “கீர்த்தனா… கீர்த்தனா… கீர்த்தனா…” என்று மீண்டும் மீண்டும் அழைத்தான் விஜயேந்திரன்.

கீர்த்தனா பதிலேதும் கூறாமல் நிற்க, “கீர்த்தி…” என்று அழைத்தால் அவளுக்குப் பிடிக்காது என்று அறிந்தும் அவளை விஜயேந்திரன் அப்படி அழைக்க, அவனைச் சீற்றமாகப் பார்த்தாள் கீர்த்தனா.

‘கீர்த்தின்னு கூப்பிட்டா தான் நீ திரும்பி பாக்குற!’ என்று எண்ணியபடியே, “பூஜை முடிஞ்சிருச்சா?” என்று அவன் கேட்க, கீர்த்தனா பதிலளிக்காமல் போக, “கீர்த்தி, பூஜை முடிஞ்சிருச்சா?” என்று அவன் மீண்டும் கேட்க, “முடிஞ்சிருச்சு. என்னை அப்படி கூப்பிடாதீங்க.” என்று கீர்த்தனா பட்டென்று கூறினாள்.

“தப்பு தான்னு மன்னிப்பு கேட்கறேன்ல்ல?” என்று அவன் கூற, “ம்… ச்…” என்று சலிப்பாக முகம் சுழித்தாள் கீர்த்தனா.

அவள் முக சுழிப்பை ஒதுக்கிவிட்டு, “நீ ஏன் இன்னைக்கு பூஜை பண்ணும் போது பாடலை. வழக்கமா பாடுவியே?” என்று விஜயேந்திரன் கேட்க, ‘பாடினா பாடாதன்னு சொல்ல வேண்டியது. இப்ப என்ன கேள்வி?’ என்ற எண்ணத்தோடு, “பாடுற  மனநிலையில் நான் இல்லை. எல்லாம் விட்டுப்போச்சு.” என்று கீர்த்தனா விரக்தியாகக் கூறினாள்.

“கீர்த்தி…” என்று விஜயேந்திரன் அழைக்க, “உண்மையைச் சொல்லட்டுமா? எனக்கு உங்களைப் பார்க்க பிடிக்கலை. உங்க கிட்ட பேச பிடிக்கலை. பேசவே வெறுப்பா இருக்கு. தயவு செய்து, என்கிட்டே பேசாம, என் கண்முன்னாடி வராம இருக்கீங்களா?” என்று கீர்த்தனா அழுத்தமாக வார்த்தைகளிலிருந்த மேன்மை குரலில் இல்லாமல் கை எடுத்து கும்பிட்டபடி கூறினாள்.

அவள் சொல்லில் அடிபட்டு, “இவ்வுளவு கஷ்டப்பட்டு எனக்காக நீ இங்க இருக்க வேண்டாம். நீ கேட்ட மாதிரி, ஊரை கூட்டி நான் டிவோர்ஸ் தரேன். நீ வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கோ.” என்று விஜயேந்திரன் கூற, கீர்த்தனா கூறிய பதிலில் அவளைக் கண்களில் வலியோடு பார்த்தான் விஜயேந்திரன்.

 

அன்பான வாசகர்களே!

என் மனதில் ஓர் வினா.

காதல் திருமணமோ? பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமோ?

கல்யாண பந்தத்தில்,

கவர்ச்சியைத் தாண்டி காதல் துளிர் விட்டு

அன்பென்னும் மொட்டு உருவாகி

வருடங்கள் செல்லச்செல்ல

மொட்டுகள் பூவாக விரிந்து… விரிந்து…

இல்லறத்தில் புரிதல் மேலோங்கி

திருமண மலர்

அன்னியோன்னியம்  என்னும் மணத்தைப் பரப்புவதை எத்தனை மனிதர்கள் உணர்கிறார்கள்?

மெல்லிய கோட்டில், புரிதலை நோக்கி அன்பைத் தேடி சர்வ ஜாக்கிரதையாக  கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்.

 

error: Content is protected !!