KVI-1

KVI-1

அந்த ‘கோட்’  மனிதர், சயனாவை உள்ளே கூட்டி வந்து, ஒரு அறையில் விட்டார். அங்கு சயனாவைப் போல், உடையணிந்த இன்னொரு பெண்ணும் இருந்தாள்.

சயனாவைப் பார்த்தவுடன், அந்தப் பெண் முறுவலித்தாள். அவள் அருகே வந்து அமர்ந்து கொண்டாள் ,சயனா.

“என்ன ஆச்சரியமா இருக்கு? சுவிங்கம் இல்லாம வந்திருக்க”

“வெளியில ஒருத்தன் துப்ப சொன்னான், அதான் துப்பிட்டேன்” என்றாள்.

இதைக் கேட்ட அந்தக் ‘கோட்’  மனிதர், ‘உலக மொழிக்கு, மூத்த மொழி பேசுபவளா’ என்பது போல் பார்த்தார்.

“என்ன? இப்க செக் பண்ணனும்னு தோணுதா?” என்றாள், அவரிடம்.

“நோ மேடம்” என்றார்.

“அப்ப கிளம்புங்க” என்றவுடன், அவரும் வெளியே சென்றுவிட்டார்.

“இப்படி பேசுற? உட்காரு” என்று சொன்னாள் ரேவ்.

ரேவ், சயனாவுடன் பணிபுரிபவள். அதைத் தவிர அவளின் அடையாளம், சயனாவின் ஒரே ஒரு தோழி.

“அம்மா, அப்பா கிளம்பியாச்சா?” – சயனா.

“ம்ம்ம், மார்னிங் 4:30க்கே “

“இந்த தடவ நார்த் இந்தியா முழுசும் கவர் பண்றாங்களா? எத்தனை நாளு ரேவ்? “

“டுவென்டி பைவ் டேய்ஸ்”

“மார்னிங் நானும் சென்ட் ஆஃப் பண்ண வந்திருப்பேன். பட் நைட்டு தூங்க லேட் ஆயிருச்சு”

“ம்ம்ம்”  என்று மட்டுமே பதில் வந்தது. அவளுக்கு தெரியும் சயனாவின் தூக்கம் தாமதமானதற்கு, என்ன காரணமென்று.

“சயனா, அம்மா எப்படி இருக்காங்க? “

“அது வாழறதுக்கும் கஷ்டப்பட்டுச்சி. இப்ப சாகறதுக்கும் கஷ்டப்படுது” – இதுதான் சயனாவின் ‘தூக்க தாமதிற்கு’ காரணம்.

“ஏன் இப்படி பேசுற? எல்லாம் சரியாயிடும். “

“இங்க சரியாகிறது என்னன்னு தெரியும்ல. அதனால அப்படி பேசாத”

தாயின் வேதனைக்கு, மரணம் ஒன்றே மருந்து என்பதால், அது எந்த மருந்துக்கடையிலும் கிடைக்க கூடாது என்று மன்றாடும் மகள்.

“ஏன் சயனா? இன்னும் அம்மா அந்தப் பேச்சு பேசிட்டுதான் இருக்கிறாங்களா? ” – பயங்கரத் தயக்கத்துடன் ரேவ்.

சயனா முறைத்தாள்.

“முறைக்காத. பேசுறாங்களா? “

“டெய்லி “

‘நீ என்ன முடிவு எடுத்திருக்க’ என்று கேக்க ரேவிற்கு ஆசைதான். ஆனால் ‘இவள் என்ன சொல்வாளோ’ என்று அமைதியாக இருந்தாள்.

“ஏன் ரேவ், ஆப்பிரிக்கா காட்லருந்து ஆயில் தான வரும். நமக்கு மட்டும் எப்படி அலையன்ஸ் வருது?” – சயனாவின் சந்தேகம்.

“எது வருதோ அத ஏத்து… ” என்று ரேவ் ஆரம்பித்தாள், தேய்ந்து போனக் குரலில்.

“ஆங் ஆங் என்ன சொன்ன? திரும்பச் சொல்லு” என்று பாய்ந்து வந்தாள் சயனா.

அதற்குள்,

பனியால் மூடிய கண்ணாடி போன்ற மாதிரியில் செய்யப்பட்டக் கதவைத் திறந்து கொண்டு, ஒரு பெண்மணி வந்தார். காட்டன் புடவையும், டெரகோட்டா ஜுவல்லரியும், பெரிய பொட்டும், கலரிங் ஹேருமாய் இருந்தார். அவரைப் பார்த்தால், ஒரு ‘சிஐடி ஆபீசர்’ என்று சொல்ல முடியாது. ஆனால் சயனா மற்றும் ரேவினெ தலைமை, அவர்தான். பெயர் கனகா.

“ஹாய் மேம் ” – குறும்புடன் சயனா.

“அதை நீயே வச்சுக்கோ. ஏன் லேட்? “

“ஸாரி மேம், டிராபிக்”

“உண்மைய சொல்லு”

“வேணும்னுதான் லேட்டா வந்தேன். இவனுங்க கூப்பிட்டவுடனே, என்னால  ஓடி வரமுடியாது”

“சந்தோஷம். சீக்கிரம் உள்ளே போ. நான் என்னோட டீம்லருந்து ஒருத்தர் வருவாங்கனு  மட்டும்தான் சொல்லியிருக்கேன். நீயே உனக்கு ஒரு இன்ட்ரோ கொடுத்துக்கோ. “

“ஓகே மேம்” என்று அறையினுள் சென்றாள் சயனா.

*****

அறைக்குள், நால்வர் அமர்ந்திருந்தனர்.

அவர்களைப் பற்றிக் கூற நினைத்தால், அகரமுதலியே அலறிக் கொண்டு ஓட்டம் எடுக்கிறது. ஒரு நல்ல விஷயம் கூட இல்லை. வேண்டுமென்றால் அவர்களது வேலையைப் பற்றிக் குறிப்பிடலாம்.

ஒருவர் அரசியல்வாதி. ஒருவர் தொழிலதிபர். ஒருவர் பத்திரிகையாளர். ஒருவர் காவல்துறை அதிகாரி.

நால்வரின் எதிரே சென்று அமர்ந்து கொண்டாள். நால்வரின் பார்வையும்,  ஏதோ ஒன்றை எதிர்பார்த்து ஏமாந்து போனது போலிருந்தது.

“மேல் ஆபீஸர் யாரும் இல்லையா?” – இது இன்னாள் அமைச்சர்,அவரது உதவியாளரிடம்.

“ஏன் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறீங்களா?” என்று பட்டென்று பதில் வந்தது சயனாவிடமிருந்து.

நால்வரின் பார்வையும், இப்போது ஏமாற்றத்தைத் தவிர்த்து, எதிர்ப்பைக் காட்டியது.  ‘இவ்வளவு கொடூரமாக இருக்கின்றோம். அதைப் பார்த்து, இவளுக்கு எந்தப் பயமும் இல்லையே’ – என்று எண்ணங்கள் வேறு ஓடியது.

“என்ன பிரச்சனைன்னு  சொன்னா கேட்பேன். இப்படியே பார்த்துக்கிட்டு இருந்தா, போய்க்கிட்டே இருப்பேன்” – பொறுமையில்லா சயனா.

உடனே, இன்னாள் அமைச்சர் அவரது உதவியாளரைக் கூப்பிட்டுப் பிரச்சனை என்னவென்று சொல்லச் சொன்னார்.

“ஒரு நிமிஷம் ” என்று அந்த உதவியாளரைத் தடுத்தாள்.

“ப்ச், இப்ப என்ன” – அரசியல்.

“பிரச்சினை என்னன்னு நீங்க சொல்றத கேட்கத்தான், நான் இங்க வந்திருக்கேன். உங்க அசிஸ்டென்ட் சொன்னா, என் ஆபீஸ்ல வந்து சொல்லச் சொல்லுங்க”

“ஏன்யா உனக்கு வேற ஆளே கிடைக்கலையா?” – தொழிலதிபரின் தோரணையானக் கேள்வி.

“யாரைக் கேட்டாலும் இவ பேருதான் சொல்றாங்க” – அமைச்சரின் அடக்கமான பதில்.

சிறிது யோசனையின் பின், “சரி நானே சொல்றேன்” என்ற ஆரம்பித்தார் அமைச்சர், “எங்க பேங்க் அக்கவுண்ட்ல இருந்த பணத்தை, யாரோ  எடுத்திருக்காங்க” என்றார்.

“இதுதான் பிரச்சனைனா, நீங்க போலீஸ்கிட்ட சொல்லி இருப்பீங்க.”

நால்வரும், நான்கு திசை நோக்கித் திரும்பி, அமைதி காத்தனர்.

“பிரச்சனை என்னன்னு சொன்னீங்கனாதான், என்னால ஏதாவது ஹெல்ப் பண்ண முடியும்”

“எங்க நாலு பேரோட பேங்க் அக்கவுண்ட்ட யாரோ ஹேக் பண்ணி, பணம் எடுத்து, வரி கட்டிட்டாங்க” – பத்திரிக்கை.

“வரியா? யூ மீன் டேக்ஸ். யாரோட டேக்ஸ கட்டினாங்க?”

“எங்களோட வரியைத்தான்” – போலீஸ்.

“அப்போ இவ்வளவு நாள் நீங்க வரி கட்டலையா” – சயனாவின் குற்றம் சாட்டும் குரல்.

“இது உனக்கு தேவையில்லாத விஷயம்” – அமைச்சரின் அதிகாரம்.

“அப்கோர்ஸ், இப்ப நான் என்ன பண்ணனும்”

“அது யாருன்னு கண்டுபிடிக்கனும் “

“கண்டுபிடிச்சு என்ன பண்ணனும். அதச் சொல்லுங்க”

“கண்டுபிடிச்சிக் கொடுத்துட்டு நீ போய்கிட்டே இரு. அவ்வளவுதான் உன் வேலை”

“ஸோ, அன்அபிசியலா போகணும்னு நினைக்கிறீங்க”

“யெஸ், அதுவும் எலக்சனுக்கு முன்னாடி கண்டுபிடிக்கணும்னு”

” பட்.. “

“இங்க பாரு, உன்னோட டிபார்ட்மென்ட்லயும், நாங்க பேசியாச்சி. கவர்மென்ட் சைடலிருந்து எந்தப் பிரச்சினையும் வராது.”

“ஓகே, எப்ப அக்கௌன்ட் செக் பண்ணீங்க “

“நேத்து நைட்டு. அப்ப கம்ப்யூட்டர்ல ஏதோ லிங்க் வந்திச்சி, அதை கிளிக்.. ” என்று சொன்னவரை, இடைவெட்டினாள்.

“இல்ல, இல்ல. நமக்கு கம்யூட்டர் மூளை கிடையாது. அதெல்லாம் ரேவ் பார்த்துக்கிடுவா”

“ஏற்கனவே லேப்டாப் கொடுத்தாச்சி” – தொழில்.

“ஏதாவது போஃன் கால் வந்திச்சா?”

“இல்ல. இது வரைக்கும் எந்த போஃன் காலும் வரல” – அமைச்சர்.

“மத்தவங்களுக்கு “

“யாருக்கும் வரல”

“சரி. நீங்க இப்ப என்ன செய்யணும்  நான் சொல்றேன். ஜஸ்ட் பாலோவ் தேட்”

சரி என்றபடி தலையாட்டினார், பேச்சைப் பேசிய அமைச்சர்.

“உடனே ஒரு பிரஸ்மீட் அரேஞ்ச் பண்ணுங்க”

“அது எதுக்கு? ” இது போலீஸின் விசாரணை.

“நான் பேசறப்ப குறுக்க பேசக்கூடாது. சொல்லுங்க அங்க” என்று கூறி, அமைச்சரிடம் போலீஸை நோக்கி கை காட்டினாள்.

“யோவ் சும்மா இருய்யா ” என்று போலீஸ் வாய்க்கே விலங்கு மாட்டப்பட்டது.

“நீங்களா  முன்வந்து வரி கட்டனதா ஒரு ஸ்டேட்மெண்ட் பிரஸ்கிட்ட கொடுத்திருங்க “

“நாங்க யாருக்கும் தெரியக்கூடாதுனு நினைக்கிறோம். நீ என்னடானா? “

“உங்கப்பணம் பேங்க்ல இருந்து போயிருக்கு. ஆனா திருடு போகல. வேற எப்படி கண்டுபிடிக்கிறது”

“ஆனா, பிரஸ்மீட் வைக்காம கண்டுபிடிக்க முடியாதா? “

“முடியும். ஆனா கண்டுபிடிக்கிறதுக்கு டிலே ஆகும். நீங்க எலக்சனுக்கு முன்னாடி கண்டுபிடிக்கணும்னு சொல்றீங்கள. அதான் இந்த ஐடியா.  இன்னொரு விஷயம் இதுல இருக்கு”

” என்னது?”

“நீங்க சொல்றதுக்கு முன்னாடி, யாரு ஹேக் பண்ணாங்களோ, அவங்க போய் மக்கள்கிட்ட சொல்லிட்டா? அது ரொம்ப பெரிய பிரச்சனையாகும். அந்தப் பிரச்சினையை கண்டிப்பா சால்வு பண்ணவே முடியாது. அது உங்க மேல ஒரு ப்ளாக் மார்க்”

இன்னாள் அமைச்சரின் எதிர்காலம், காண்பிக்கப்பட்டது இங்கே.

“அப்படி மட்டும் இருந்துச்சினா, உங்க கட்சியே, உங்க மேல ஆக்க்ஷன் எடுப்பாங்க. அப்புறம் பதவியெல்லாம் போயிரும். இந்த மாதிரி எந்த ஒரு சிஐடி ஆபீஸருக்கும், ஹையர் அபிஷியல வச்சி பிரஷர் கொடுத்து, உங்க வீட்டுக்கே வரவைக்க முடியாது. அந்த நல்ல எண்ணத்லதான் சொல்றேன். “

இவள் தன்னை ஆதரித்து பிரசாரம் செய்கிறாளா ? அல்லது, தன்னை அழிக்க பிரச்சாரம் செய்கிறாளா? – அமைச்சரின் எண்ண ஓட்டங்கள்.

“விட்டா நீயே போய் சொல்லுவ போல” – போலீஸ் புத்தி.

“எனக்குத் தேவைனா அதையும் செய்வேன்” – கத்தி போல் பதில் வீசப்பட்டது.

அதிகாரம் கையில் இருப்பதால் வரும் ஆணவச் சிரிப்பு சிரித்தது, அரசியல்வாதியின் குரல்.

“எனக்குத் தெரியும், இப்ப நான் போய் யார்கிட்ட சொன்னாலும் எதுவும் ஆகப் போறது கிடையாதுனு.  ஸோ, நான் அதைப் பத்தியெல்லாம் யோசிக்கல. உங்களுக்கு ஹெல்ப் பண்றேன். ஆனா நான் சொல்ற மாதிரி, நீங்க கேக்கணும்” என்றாள், அந்த அதிகாரத்தைப் பார்த்து.

“ஆனா எப்படியும் மக்கள் கேட்பாங்கள. அமைச்சரா இருந்துட்டு, இவ்வளவு நாளும் வரிகெட்டலன்னு? ” – இது போலீஸ் மூளை.

“கண்டிப்பா கேட்பாங்க. ஆனா அவர் பிரஸ்மீட்ல சொன்னதுனால, அத ஃபாலோவ் பண்ணி, நாங்களும் வரி கட்டினோம்னு, அடுத்தடுத்த நீங்க மூனு பேரும்  பிரஸ்மீட் வச்சி சொல்லுங்க.”

“இது உண்மைனு நம்பி, வேற யாராவது, இதையே பாலோவ் பண்ணாங்கனா” – தொழிலதிபரின் கவலை.

“அமைச்சரே இன்ஷியேட்டிவ்  பண்ணதாலதான், இவ்வளவு நடந்திருக்கின்னு மக்கள் நினைக்க ஆரம்பிப்பாங்க. ஸோ உங்க எலக்சனுக்கு அது ஒரு பிளஸ்” என்று, சயனாவின் முழுப் பார்வையும் அமைச்சரிடத்து இருந்தது.

“ஆனா…” – இதுவும் போலீஸின் சந்தேகம்.

“உங்கள அடுத்த எலக்சன்ல,  இவரே ஜெயிக்க விட மாட்டார் போல ” என்று போலீஸையே கைதி ஆக்கினாள்.

“யோவ் என்னய்யா அப்படி ஏதாவது ப்ளான் பண்றீயா? ” – இது இன்னாள் அமைச்சரின் இப்போதைய பயம்.

“ஐயோ, அப்படியெல்லாம் இல்ல சார் ” – போலீஸின் வழிசல்.

சிறு சமயம், அவர்கள் அனைவரும் யோசித்தார்கள்.

“நீங்க யோசிச்சு ஒரு முடிவு எடுங்க. நான் கிளம்புறேன். பிரஸ்மீட் வைக்கறதும் வைக்காததும்  உங்களோட இஷ்டம்”

“அட இரும்மா. நீ சொன்ன மாதிரி செய்றோம்” – அரசியல்.

“ஓகே என்ன பேசனும்? எப்படி பேசனும்? எந்தெந்த இண்டர்வெல்ல பிரஸ்மீட்  கொடுக்கணும்? எல்லாமே நான் சொல்றேன்” என்று எழுந்து நடக்கத் தொடங்கினாள்.

“எலக்சன் வரதுக்குள்ள கண்டுபிடிச்சிருவியா? இல்லனா பெரிய பிரச்சினை ஆயிரும்” – தேர்தல் மட்டுமே தேவையாகிப் போன அமைச்சரின் ஆசை.

“இத வரி கட்டாம இருக்கும்போதே யோசிச்சிருக்கணும்” என்று கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள் சயனா.

‘உன் தேவைக்கெல்லாம் என்னால வேலை செய்ய முடியாது’ என்று சொல்லாமல் சொல்லி விட்டுச் சென்றாள்.

*****

அறைக்குள் இன்னும்,

“சார், எப்படிப் பேசிட்டுப் போறா பாருங்க. நீங்க அந்தப் பொண்ணுக்கு ரொம்ப இடம் கொடுக்கிறீங்க.” – இது பொறாமையில் போலீஸ் மூளை.

“எப்படிச் சொல்ற”

“சார், அது சொல்றத அப்படியே கேட்கிறீங்கள”

“ராத்திரி இந்தப் பிரச்சனைய  உன்கிட்ட சொன்னப்ப, நீயும் என்கூட சேர்ந்துகிட்டு பணம் போச்சேனு பொலம்பத்தான செஞ்ச “

தலை குனிந்தது, கேள்வி கேட்ட உருவம்.

“ஏதாவது ஒரு யோசனை சொன்னீயா? ஆனா அந்தப் பொண்ணு வந்துச்சி, கடகடன்னு அதப் பண்ணுங்க… இதப் பண்னுங்கனு… கண்டுபிடிச்சித் தாரேனு சொல்லிட்டுப் போகுது”

“ஆனாலும் அது ரொம்பத் திமிரா பேசுது” – திமிரைத் தனக்கு மட்டுமே குத்தகைக்கு எடுத்த தொழிலதிபர்.

“ஆள்  யாருன்னு மட்டும் கண்டுபிடிச்சிக் காட்டட்டும். அதுக்கு அப்புறம் இவளப் பாத்துக்கலாம். இப்போதைக்கு, இவ சொல்றத கேட்டுத்தான் ஆகனும்” – அரசியல்வாதியின் அறம்.

மேலும், “ஆனா யாருன்னு மட்டும் தெரியட்டும், நான் யாருன்னு காட்டறேன்” என்றவரின்  முகக் கோபத்தை, சயனா கண்டிருந்தால் பயந்திருப்பாளோ?

ஏனெனில் அவருடைய முகத்தில், அத்தனைக் கடுங்கோபம்.

இருந்தும், “யோவ் நான் முதல பேசுறேன். எனக்கு அடுத்து, பிஸினஸ் நீ பேசு. உனக்கு அடுத்து ரிப்போர்ட்டர். அந்த ஆளுக்கு அடுத்து போலீஸ்” என்றார், அவள் சொல்லிச் சென்ற திட்டத்தின்படி.

*****

வெளியே வந்த சயனா,  நேரே கனகா மேமிடம் சென்றாள். இருவரும் பேசிக்கொண்டே வாசல் நோக்கி நடந்தனர்.

“அவங்கள பிரஸ்மீட் அரேஞ்ச் பண்ண சொல்லி இருக்கிறேன். என்ன பேசனும், அத நீங்க பாருங்க”

“சயனா அவங்க வெளியில் தெரியக் கூடாதுன்னு நினைக்கிறாங்க”

“இப்படி போய் சொன்னாதான், யாரு ஹேக் பண்ணாங்களோ அவங்களோட அடுத்த மூவ் என்னவா  இருக்கும்னு நமக்குத் தெரியும் “

“இது தொடர்ந்து நடக்கும்னு நினைக்கிறாயா?”

“தெரியல மேம். லெட்ஸ் வெயிட் அண்ட் சி. சப்போஸ் தொடர்ந்து பண்ணாங்கனா, விஷயம் பெருசு. நம்ம தேடவேண்டிய சர்க்கிளும் பெருசாகும்”

“தொடரலனா?”

“இஃப் ஸோ, அவங்களோட டார்கெட் இந்த நாலு பேரும்தான். அப்போ இவங்க நாலு பேரு.. ” என்று பாதியிலேயே நிறுத்தியவள்…” அதை இங்கே பேச வேண்டாம். நம்ம ஆபீஸ்ல போய் பேசலாம் ” என்றாள்.

இவர்கள் வாசலில் நின்று பேசிக் கொண்டிருக்கும் போது, ரேவின் அருகே அந்தப் போலீஸ்காரர் நின்று ஏதோ பேசிக் கொண்டிருந்தார். அந்தப் பேச்சும், பார்வையும் சரியில்லை என்று தோன்றியது, சயனாவிற்கு.

“என்ன சயனா? “

“இது யாரு மேம்? எந்த ஏரியா? “

” ஏன் சயனா?”

“பார்வையே சரியில்ல ” என்றவள், “ஒரு நிமிஷம் இருங்க” என்றாள், கனகா மேமிடம்.

“ரேவ், என்ன பண்ற?” என்றாள், சத்தமாகச் சயனா.

“இல்ல சயனா, இவங்க லேப்டாப்ப போலீஸ் ஸ்டேஷன்ல வந்து  வாங்கிக்க சொல்றாங்க” என்றாள் ரேவ்.

இதுதான் சயனாவிற்கும் ரேவிற்கும்  இடையே உள்ள நட்பு. யாராவது ரேவைத் தவறாக ஒரு பார்வை பார்த்தாலோ இல்லை, தவறாக ஒரு வார்த்தை சொன்னாலோ, சயனாவின் கோபம் எல்லை தாண்டும்.

“இங்க என்ன லேப்டாப் சர்வீஸ் பண்ணவா வந்தோம். அங்க வந்து வாங்கு… இங்க வந்து வாங்குனா… அவங்களுக்கு தேவைனா, நம்ம ஆபீஸ்ல வந்து கொடுக்கச் சொல்லு. ” என்றாள் அடங்காதக் கோபமாக.

அதைக் கேட்ட காவல்துறை அதிகாரி, மீண்டும் உள்ளே சென்று விட்டார்.

“நீ எதுக்கு இங்க இருந்து பாத்துட்டு இருக்க. கிளம்பு ” – இன்னும் கோபம் குறையவில்லை.

சயனா சொன்ன அடுத்த நிமிடமே ரேவ் எழுந்து, அவர்கள் இருவரும் இருக்கும் இடத்திற்கு அருகில் வந்தாள்.

“நீ எதுல வந்திருக்க” – சயனா.

“கார்லதான். நீ ஏன் இவ்வளவு கோபப்படுற? யோகா பண்ணு சயனா. ஜிம் பக்கமே போகாத” என்றாள் ரேவ்.

“சரி, நீ போ. ஹேக்கிங் டிடெயில்ஸ் கலெக்ட் பண்ணு”

“பேச்ச மாத்ற. பை மேம்.” என்று சொல்லி, இருவரிடமும் விடை பெற்றுச் சென்றாள்.

“உன்கிட்ட ஒரே ஒரு ரெக்யூஸ்ட். நீ மட்டும் கொஞ்சம் பார்த்துப் பேசு” – கனகா மேம்.

“ஏன்?”

“ஏன்னா அவங்க ஆட்சிதான் நடக்குது. அப்புறம் நம்ம டிபார்ட்மென்ட் ஹையர் அபீஸியலும் சொல்லிருக்காங்க”

“என்ன சொல்லிருக்காங்க, உங்க ஹையர் அபிஷியல்ஸ்”

“எவ்வளவு ஸ்மூத்தா முடிக்க முடியுமோ, அவ்வளோ ஸ்மூத்தா முடிச்சிட்டு விலகிறனும்னு”

” ம்ம்ம் “

“நீ மட்டும் கோபப்படாம இருந்தா, நீ என்ன சொன்னாலும். நான் செய்றேன். “

“ரியலி, டெய்லி என் என்பீல்டுப்குச் சாப்பாடு போடுறீங்களா? “

‘என்பீல்டிற்கு சாப்பாடா’ என்று நினைத்தவர்… ” ஹேகஹே… ஹேகஹே… நீ யாருகூட  வேணாலும் மல்லுக்கட்டு… யாருகூட வேணாலும் சண்டை போடு. எனக்கென்ன? ” என்று அவரும் கிளம்ப தயாரானார்.

சிறிது தூரம் தள்ளிச் சென்றவர், ” சயனா, அந்தக் கேமராமேனுக்கு ஓகே சொல்லு, அப்புறமா அவனே என்பீல்டுக்கு சாப்பாடு போடுவான்” என்று நக்கலாகச் சொல்லி, விரைவாகச் செல்லத் துவங்கினார்.

சயனாவும், அவரைப் பின் தொடர்ந்து சென்றாள். கனகாவின் உருவம் பெரியதாக இருந்தாலும், ஐபிஎஸ் ட்ரெய்னிங்கில் கற்றுக்கொண்ட ஓட்டத்தைப் பயன்படுத்தி தப்பினார்.

ஒரு கட்டத்தில், சயனாவும் துரத்துவதை விட்டுவிட்டு அவளது என்ஃபீல்டு இருக்கும் பக்கத்திற்குச் சென்றாள்.

ராயல் ராக்கெட்டாக மாறியது.

*****

நகரத்தின் முக்கியமான இடத்தில் அமைந்திருந்தது, அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு.  இனிப்புக் கடைகளில் மைசூர்பாக்கை அடுக்கி வைத்திருப்பார்களே, ஆதுபோல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது, அந்தக்  கட்டிடத்தின் வீடுகள்.

‘மெட்ரோ ரயில்’ ஓடும் வேகத்துடன் என்பீல்டை ஓட்டி வந்து, அடுக்குமாடிக் கட்டிடத்தின் பார்க்கிங்கில் நிறுத்தினாள். அவளது பாணியிலே, ‘பைக் ஸ்டேண்ட்’ போடப்பட்டது.

கட்டிடத்தின் முழுஉயரம் கால் சதவீதத்தைத் தாண்டி இருந்தது. ஆனால் சயனாவின் முகவரி என்னவோ எட்டாவது தளத்திலேயே முடக்கப்பட்டது.

மின்தூக்கி இருந்தும் அதனை நாடாமல், கடகடவென படிகளில் ஏறினாள். எட்டாவது தளத்திற்கு வந்த பின்தான், நிற்கவே செய்தாள். மூச்செல்லாம் இறைக்கவேயில்லை. அத்தனை பழகிய விஷயம் இது. ஜிம் சென்று, இறுகிப் போன தேகம் அவளுடையது. மொத்தத்தில் ‘ஜிம் கேர்ள்’.

சாவியைக் கொண்டு வீட்டை திறக்கும் சத்தம்தான், வீட்டினுள்  இருந்து அமைதியைக் கலைத்தது. லேசாக முகம், கைகள் மட்டும் கழுவிக்கொண்டாள். முழுக்கைச் சட்டையை முக்கால் தூரம் வரை மடக்கிக்கொண்டு, நேராக சமையலறை சென்றாள்.

சண்டைக்குப் போகிறாளா? இல்லை, சமைக்கப் போகிறாளா?

வாயில் சுவிங்கத்தைப் போட்டு அரைத்துக் கொண்டே, தன் போக்கில் இரவு உணவு தயாரிக்க ஆரம்பித்தாள்.

“மேம்” என்ற குரல் கேட்டுத் திரும்பினாள். அங்கு நின்றவள், சயனாவின் தாயாரைக் கவனித்துக்கொள்ளும் செவிலியர்.

கையாலே ‘கிளம்புங்க’ என்று சைகை செய்தபடி, மீண்டும் சமையலில் கவனம் தொடரப்பட்டது.

“அம்மா இன்னைக்கும் சரியா சாப்பிட மேம்”

திரும்பவும் ‘நான் பார்த்துக்கிறேன்’ என்பது போல் கையசைப்பு மட்டுமே.

அவர் சென்றவுடன், கஞ்சியைக் கிண்ணத்தில் ஊற்றிக் கொண்டு, தாயின் அறையை நோக்கி நடந்தாள் சயனா.

தாயின் அறைக் கதவைத் திறந்தவுடன், மருத்துவமனை உணர்வுதான் வந்தது. ஏனெனில் சுற்றிலும் அத்தனை உபகரணங்கள், அந்தத் தாயின் உயிரைப் பிடித்து வைத்திருக்க வேண்டி. அவர் வாழ்க்கை, கடந்த ஒரு வருடமாகவே இப்படித்தான் நகர்கின்றது. முதல் ஆறுமாதம் மருத்துவமனையில் இருந்தார். பின் மருத்துவர் அறிவுரைப்படி, மாற்றத்திற்காக, இந்தவாறு மாற்றி இருந்தார்கள்.

“சயனா வந்திட்டயா” – ஆழ்துளைக் கிணற்றிலிருந்து வருவது போல் இருந்தது, அந்தத் தாயின் குரல்.

அத்தனை மருந்தின் நெடியிலும், தன் மகளின் வாசத்தைக் கண்டறிய முடிந்தது, அந்தத் தாய்க்கு.

தன் தேகம் இறுகிப் போனது என்று நினைத்தாலும், அந்த அறைக்குள் வந்து, அந்தக் குரலைக்  கேட்கும் போது முற்றிலும் உடல் தளர்ந்து விடுவது போல் உணர்வு, சயனாவிற்கு.

“ம்ம்ம்” என்றாள் கஞ்சியை ஆர வைத்துக் கொண்டு.

“இன்னைக்கு நாள் எப்படி இருந்தது?” – குரல் ஓய்ந்து போய் வந்தது தாயிடமிருந்து.

“நீ ஒரு வாய் கஞ்சி குடிக்கனும். அப்பத்தான் நான் சொல்லுவேன்” என்று கட்டளையிட்டு, ஒரு வாய் புகட்டினாள்.

அடுத்த வாய் புகட்டிக் கொண்டே, என்ன நடந்தது என்று சொன்னாள்.

“எரிச்சலா இருக்கு. இதெல்லாம் ஒரு கேஸூனு, வருது பாரு எனக்கு ” – இது சயனாவின் ஆதங்கம்.

“அப்படி சொல்லக் கூடாது. இந்த வேலையை வச்சி, எத்தனை பேருக்கு நல்லது பண்ணிருக்க”

“அதுக்கு… இந்த மாதிரி கேவலமான காரியம் பண்ணனுமா?”

“நாலு நல்லவங்களுக்கு உதவனும்னா, ரெண்டு கெட்டவங்களுக்கு உதவுனாதான் முடியும்கிற நிலைமை. அத நீ புரிஞ்சிக்கனும். அதனால இதெல்லாம் யோசிக்கக்கூடாது” – நடப்பை ஏற்றுக்கொள்ளச் சொல்லும் தாய்.

“அதான்  கேஸ கையில எடுத்திருக்கேன். நீ பேசாம சாப்பிடு”

“சயனா, நீ எப்படிப் பேசினனு அம்மாகிட்ட சொல்லிக் காட்டு “

வாழ்க்கையில் அடிபட்டே வாழ்ந்து வந்தவர், அந்தத் தாய். தன் மகளின் அடாவடியைப் பார்க்க ஏங்கும் ஏக்கம், அந்தக் கண்களில்.

சிலவற்றைச் சொல்லிக் காட்டினாள். அதேபோல் சிலவற்றைச் செய்தும்  காட்டினாள். அதில் அந்தத் தாய்க்கு அப்படி ஒரு ஆனந்தம். சில சமயம் தன்னையும் அறியாமல் கைதட்ட வேண்டும் என்று நினைத்து, அது முடியாமல் போனது.

அதைக் கண்ட சயனா,  “இன்னொரு வாய் குடி” என்றாள், கிண்ணத்தை எடுத்துக் கொண்டு.

“வேண்டாம் சயனா, அம்மாவால முடியலைடா” என்று மறுத்துவிட்டார்.

கிண்ணத்தை எடுத்துப் பக்கத்தில் வைத்துவிட்டு, “சரி நீ தூங்கு” என்றாள்.

“இந்த ஆப்பிரிக்கா பையனப் பத்திப் பேசலாமா”

கடந்த பத்து நாட்களாகவே, நடக்கும் புலம்பல் இது.

“மனோகர் நல்ல பையன் சயனா”

“உம் ” – வழக்கம்போல ‘உம்’ கொட்ட ஆரம்பித்தாள்.

“காட்ல கேமராமேனா இருக்கிது. போட்டோவும் எடுக்குமாம். அந்தப் பையன் எடுக்கிற போட்டோ, புக்லகூட வருமாம்.”

” உம்”

“பாவம்டா… யாருமே இல்லாத பையன்”

“உம்”

“அதுக்கு புடிச்ச வேலைங்கறதால, காட்டுக்குள்ள போய் இருக்குது”

ஒரு கட்டத்திற்கு மேல் ‘உம்’ கொட்ட முடியாமல், “போதும், நீ தூங்கு” என்று போர்வையைச் சரி செய்தாள்.

“இப்போதான், இந்தக் கேஸ எடுத்திருக்கேன். எப்ப முடியும்னு தெரியல. அதனால, இந்த நேரத்தில இதப் பத்தி பேசாத”

” இல்ல சயனா “

“படுத்து தூங்கு” என்று சொல்லி, அவருக்கு தலையைத் தடவிக் கொடுத்தபடி இருந்தாள்.

மகளின் அந்த தலைக் கோதலில், தாய் கண்மூடித் தூங்க ஆரம்பித்தார்.

அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

கணவனின் மறைவு… சுமையாய் நினைத்த சொந்தங்கள்… சோதனை போக்காத சுற்றங்கள்… இவற்றுக்கிடையில், தன் பெண்ணை எப்படிப் பார்க்க வேண்டும் என்று நினைத்தாரோ , அதே போலவே உருவாக்கிக்  காட்டியிருக்கிறார்.

ஆம்! சயனா பார்க்கும் வேலை, அவளுடைய அம்மாவின் ஆசை, கனவு. மகளின் வேலையை நினைத்து, பெருமை, கர்வம், பூரிப்பு என்று எல்லாம் உண்டு அவருக்கு.

ஆனால் இன்று, அவள் இந்த நிலைமையில் இருக்கும் போது, அதை சந்தோஷமாக உணர முடியாமல், சங்கடப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

சிறிது நேரம் சென்றதும், அவர் தூங்கிவிட்டார் என்று நினைத்து, சயனா எழுந்து கொள்ள நினைத்தாள்.

ஆனால் சயனாவின் தாயோ, அவளது கையைப் பிடித்து, “நீ அந்தப் பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டனா, அம்மா சந்தோஷமா இருப்பேன்” என்றார்.

“நீ தூங்கு, நான் பார்த்துக்கிறேன்” என்று, திரும்பவும் தட்டிக்கொடுத்து தூங்க வைத்தாள்.

அவர் நன்றாக தூங்கி விட்டார் என்று தெரிந்ததும், இரவு விளக்கைப் போட்டுவிட்டு, அவளுடைய அறைக்குச் சென்றாள்.

*****

இது இவளது அறையா? அல்லது இரும்பு பட்டறையா? என்பது போல், அறை முழுவதும் உடற்பயிற்சி உபகரணங்கள்.

அழுக்குப் போகவும், அசதி தீரவும் லேசாகக் குளியல் போட்டுக் கொண்டு வந்தாள்.

தொலைக்காட்சிப் பெட்டியை ஓட விட்டாள். ஒரு சுவிங்கத்தை எடுத்து சுவைத்துக் கொண்டே, மெத்தையில் அமர்ந்தாள். நாலு கிலோ எடையுள்ள டம்பிலை(dumbell), ஒரு கரத்தில் பளு தூக்கிக் கொண்டே, டீவியைப் பார்த்தாள்.

ஒவ்வொரு ஊடகங்களும், அந்த நாலு பேரின் முன்மாதிரிச் செயலைக் கொட்டமடித்துக் கொண்டாடிக் கொண்டிருந்தது.

உண்மையைப் பார்ப்பது என்பது வேறு… பொய்யை உண்மையாகப் பார்ப்பது என்பது வேறு… ஒரு கட்டத்தில் அலுப்புத் தட்டியது. அப்படியே டம்பிலைக் கீழே போட்டு விட்டு, டிவியை ஆஃப் செய்தாள். அமர்ந்திருந்தபடியே பின்புறமாகக் மெத்தையில் சாய்ந்தாள்.

இப்போது அவளுடைய எண்ணமெல்லாம், அந்த நபர் யார்? என்ன செய்து கொண்டிருப்பார்? இதையெல்லாம் பார்க்கும்போது, அந்த நபரின் எதிர்வினை எப்படி இருக்கும்? என்ற கேள்விகள் மட்டுமே!!

error: Content is protected !!