கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  27

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  27

பதட்டத்தோடு அவள் செவ்விதழ்களை, கைகளால் மூடிய விஜயேந்திரன், “எனக்கு கீர்த்தனாவைப் பிடிக்கும். அது உனக்கும் தெரியும். ஆனால், ஒரு மனைவியா? இந்த கேள்விக்கு எனக்குப் பதில் தெரியலை.” என்று கூற, கீர்த்தனா வெளி வரத் துடித்த கண்ணீரை உள்ளிழுத்து, மௌனமாக அமர்ந்திருந்தாள்.

உடல் வலி, மன வலி என இரண்டும் கீர்த்தனாவுக்குத்  தரும் சலிப்பை அவள் முகம் அப்பட்டமாக வெளிப்படுத்தியது.

“கீர்த்தனா. நல்லவ! ரொம்ப நல்லவ.” என்று அந்த நல்லவ என்ற சொல்லுக்குச் சற்று அழுத்தம் கொடுத்துக் கூறினான் விஜயேந்திரன்.

“என்னை காயப்படுத்துறதுக்காக, உன் தரம் குறைய வேண்டாமே?” என்று கண்களைச் சுருக்கி கேள்வியோடு நிறுத்தினான் விஜயேந்திரன்.

“நான் உன்னை காயப்படுத்தணும்னு நினைக்கலை கீர்த்தனா. ஆனால், நான் பேசுகிறதைக் கொஞ்சம் கேளேன்.” என்று விஜயேந்திரன் கெஞ்சலாகக் கூற, அவள் உடல் பட்ட காயத்தால் தகதகவென்று எரிய, பேச முடியாமல் அசையவும் முடியாமல், அவள் இருந்த கோலத்தில் நிமிரவும் முடியாமல் தலை குனிந்து அமைதியா அமர்ந்திருந்தாள் கீர்த்தனா.

அவள் மௌனத்தைச் சம்மதமாக ஏற்றுக் கொண்டு, “அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான் விஜயேந்திரன். நான் பண்ணது தப்பு தான். இப்ப என்ன செய்யலாமுன்னு நீயே சொல்லு. இங்க இந்த வீட்டில் இருக்குமுன்னு நினைச்சாலும் அது உன் விருப்பம். உன் விருப்பப்படி இருக்கலாம். நான் உன்னை எந்த தொந்தரவும் பண்ண மாட்டேன். இல்லை, நீ என்னை விவாகரத்து பண்ணனும்னு நினைச்சாலும் உன் விருப்பம். நீ என்ன சொல்றியோ நான் அதை அப்படியே ஏத்துக்கறேன்.” என்று விஜயேந்திரன் கம்மலான குரலில் கூறினான்.

“என்னால் எங்க வீட்டுக்குப் போக முடியாது. என் பிரச்சனை எங்க அப்பாவுக்கு தெரியக் கூடாது. என் வாழ்க்கை இப்படி ஆனது தெரிஞ்சா, எங்க அப்பா தாங்க மாட்டாங்க. நான் உயிர் வாழறதே எங்க அப்பாவுக்காகத் தான்.” என்று கீர்த்தனா முகத்தைத் திருப்பி சுவரைப் பார்த்தபடி கூறினாள் கீர்த்தனா.

“எந்த தவறிலும் வாழ்க்கை தேங்கிற கூடாது கீர்த்தனா. கடந்து தானே போகணும். நாம அடுத்த கட்டத்திற்கு நம்ம வாழ்க்கையைக் கொண்டு தானே  போகணும்.” என்று விஜயேந்திரன் நிதானமாகக் கூறினான். அவன் செய்த தவற்றின் வீரியம் அவனுக்குப் புரிந்து வருந்துவதை அவன் குரல் அப்படமாக வெளிப்படுத்தியது.

“தப்பு பண்ணவங்க அதை எளிதா கடந்திரலாம். பாதிக்கப்பட்டவங்க அதை அத்தனை எளிதா கடக்க முடியாது.” என்று பளிச்சென்று கூறினாள் கீர்த்தனா.

“உண்மை தான்.” என்று தன் மெல்லிய புன்னகையோடு கூற,  விஜயேந்திரனின் பொறுமை கீர்த்தனாவைச் சுட்டது.

‘சண்டை போட்டால் போடலாம். இப்படி இறங்கிப் பேசுபவனிடம் நான் என்ன பேசுவது? அதற்காக நான் இவனை மன்னிக்க வேண்டுமா? இவங்களுக்கு என்ன திடீர் ஞனோதயம்?’ என்ற கேள்வி கீர்த்தனாவுக்குள் எழ, அதைப் புரிந்து கொண்டவன் போல், “யோசிச்சி பார்த்தா நீ சொல்றது தான் சரி. நான் பண்ணது எவ்வுளவு பெரிய தப்புன்னு தெரியுது. ஒன்னு நான் உன்னைக் கல்யாணம் பண்ணிருக்கக் கூடாது. பண்ண பிறகு, நான் போயிருக்கக் கூடாது.” என்று விஜயேந்திரன் இறங்கிப் பேச, அவன் குற்றவுணர்ச்சியோடு பேசுவதை கீர்த்தனாவின்  காதல் கொண்ட மனம் ஏத்துக் கொள்ள முடியாமல் தவித்தது.

அப்பொழுது உடைந்த கண்ணாடி அவள் கண்ணில் பட, “உறவுகள் கண்ணாடி மாதிரி, உடைந்தால் உடைந்தது தான். நான் உங்களை காயப்படுத்தணும்னு நினைக்கலை. ஆனால், எனக்கு எங்க அப்பா முக்கியம். அதே நேரம் என்னால் நீங்க செய்ததை மறக்கவும்  முடியாது. மன்னிக்கவும் முடியாது. நீங்க செய்ததை வெளிய சொன்னால் கூட, என்னைத் தான் பொறுத்துப் போக சொல்லுவாங்க. உங்க அம்மாவும் அதைத் தான் சொல்லுவாங்க. எங்க அப்பாவும் அதையே தான் சொல்லுவாங்க.” என்று கூறி கீர்த்தனா பெருமூச்சு விட்டாள்.

“இதே தப்பை நான் செய்திருந்தால்? காலம், காலமா கேட்கப்படுற கேள்வி தான். எண்பது படங்களிலும், கதைகளிலுமிருந்து கேட்கப்படுற கேள்வி தான். கேள்வியும் மாறலை. பதிலும் மாறலை. நான் இந்த தப்பை செஞ்சிருந்தா, வாழ்க்கை தவற்றில் தேங்கிக் கிடக்கக் கூடாது? வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தித் தான் கொண்டு போகணும், மறந்திருன்னு உங்க அம்மா சொல்லுவாங்களா? இல்லை எங்க அப்பா சொல்லுவாங்களா? பெண்களுக்காக இந்த சமுதாயம் மாறாமல் இருக்கலாம். ஆனால், நாங்க மாறி இருக்கோம். என்னால், இதை ஏத்துக்கவே முடியாது.” என்று கீர்த்தனா கோபமாகப் பேச, தன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு தன் கண்களைச் சுருக்கிக் கொண்டு கீர்த்தனாவைக் கூர்மையாகப் பார்த்தான் விஜயேந்திரன்.

“ஒரு மூன்றாவது மனிதரா நானே கூட, விட்டுக் கொடுத்து போனா என்னன்னு கேட்டிருக்கலாம்? ஆனால், ஒரு மனைவியாக என்னால் முடியலை.” என்று நிறுத்தி நிதானமாகக் கூறினாள் கீர்த்தனா.

“உங்க கடந்த காலத்தை எளிதா எடுத்துக்கிட்டு கடந்து போகிற அளவுக்கு நான் ப்ரோடு மைண்ட் தான்! ஆனால், ஒரு மனைவியாய் என்னை நீங்க பார்த்த பிறகு, நீங்க… நீங்க… வேற… வேற…” என்று சொல்ல முடியாமல் கீர்த்தனா தவிக்க, அவள் கண்களில் கண்ணீர் வடிய, கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கதறினாள் கீர்த்தனா.

“என்னால் உங்களை மன்னிக்கவே முடியாது. ஏத்துக்கவே முடியாது.” என்று கீர்த்தனா கதற, இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் மனதில் மண்டிக்கிடந்த அவள் வலி, அதை ஏற்படுத்தியவனிடமே கண்ணீராய் வெளி வந்தது.

கீர்த்தனாவைக் கையாலாகாத தனத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்  விஜயேந்திரன். அவள் வேதனை கண்ணீரில் குறைய, “கீர்த்தனா… யார் பண்ணா என்ன? தப்பு தப்பு தான். நீ என்னை மன்னிக்கவும் முடியாது. நான் செய்ததை மறக்கவும் முடியாது. நீ சொல்றது சரி தான். ஒரு மனைவியா இல்லாமல், ஒரு மூன்றாவது நபரா ஒரு தோழியா நான் செய்த தப்பை மறந்து  மன்னிக்கலாமே?” என்று விஜயேந்திரன் புன்னகையோடு கேட்டான்.

அவன் வசீகர புன்னகையில் தன்னை மறந்தாள் கீர்த்தனா.

‘இந்த புன்னகைக்குச் சொந்தக்காரி யார்?’ என்ற கேள்வி அன்று போல் இன்றும் தோன்றினாலும் அதை ஒதுக்கி விட்டு, அவன் பேச்சு சாமர்த்தியத்தை எண்ணிப் புன்னகைத்தாள் கீர்த்தனா. அன்பு கொண்ட மனிதர் மேல் எத்தனை நாள் கோபத்தை பிடித்து வைக்க முடியும்?

“நல்லா பேசுறீங்க. நல்ல பிஸ்னஸ் மேன்  தான் நீங்க.” என்று கீர்த்தனா சிலாகிக்க அவள் மன நிலையைப் புரிந்து, “பழம்…” என்று நடு விரலை ஆள்காட்டி விரல் மீது வைத்துக் கூறினான் விஜயேந்திரன்.

உதட்டைச் சுழித்து அவன் ஆள் காட்டி விரலையும், மோதிர விரலையும் வைத்து இப்படி வைத்தா தான் பழம் நீங்க வச்ச மாதிரி வச்சா சண்டை.” என்று கீர்த்தனா கூற “ஹே… நான் வைக்கும் விதத்தில் தான் இரண்டு விரலும் சேர்ந்திருக்கு. அது தான் பழம். நீ வைக்குற விதத்தில் விரல் பிரிஞ்சிருக்கு. அது சண்டைன்னு அர்த்தம்.” என்று விஜயேந்திரன் கூற, “அப்படியா சொல்றீங்க?” என்று கீர்த்தனா கண்களை விரித்தாள்.

“சொன்னா  கோபப்படாத. உன் முட்டைக் கண்ணை விரிச்சா, எனக்கு உண்மையிலே பயமா இருக்கு கீர்த்தனா.” என்று விஜயேந்திரன் சற்று தள்ளி அமர்ந்து கேலியாக கூற, “என்கிட்டே பழம் விடுற ஐடியா உங்களுக்கு இருக்கிற மாதிரி தெரியலியே?” என்று கீர்த்தனா உதட்டைப் பிதுக்கிக் கண்சிமிட்டிக் கேட்டாள்.

“ஹே… அதெல்லாம் இல்லை. பழம்… பழம்… பழம் தான்.” என்று தன் ஆள் காட்டி விரல் மீது நடுவிரலை வைத்து சிறுகுழந்தை போல் கூறினான் விஜயேந்திரன்.

தவறே செய்திருந்தாலும், அதை ஒத்து கொண்ட அவன் வெளிப்படையான குழந்தை மனதில் கவரப்பட்டு கவலை மறந்து புன்னகையோடு நட்புக் கரம் நீட்டினாள் கீர்த்தனா.

 

“இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு ஆபீஸ் வரியா?” என்று விஜயேந்திரன் கேட்க, “இல்லைங்க. முகுந்தன் ரொம்ப ஆர்வமா இருக்கும்போது, போகலைனா நல்லா இருக்காது. நான் சமாளிச்சுப்பேன்.” என்று கீர்த்தனா கூற, “சரி. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. அப்புறம் கிளம்புவோம்.” என்று அவள் சொல்லுக்கு இசைவாகப் பதிலளித்தான் விஜயேந்திரன்.

நிரஞ்சனா கல்லூரிக்குக் கிளம்பி இருக்க, “முகுந்த். நான் கோவமா இருக்கேன்.” என்று முகுந்தனுக்கு உதவி செய்தபடியே மெதுவாகக் கூறினாள் நிரஞ்சனா. “ம்… சரி…” என்று முகுந்தன் பதிலளிக்க, “டேய்… நான் ரொம்ப கோவமா இருக்கேன்.” என்று காட்டமாகக் கூறினாள் நிரஞ்சனா.

“அதுக்கு…” என்று நிரஞ்சனாவின் செயலுக்கு இசைந்தபடி முகுந்தன் கேட்க, அவன் உதாசீனம் தாங்க முடியாமல் “முகுந்த் என்னைச் சமாதான செய்ய மாட்டியா?” என்று அவன் முகமருகே, தன் முகத்தை வைத்து பாவமாகக் கேட்டாள் நிரஞ்சனா.

நிரஞ்சனாவின் அருகாமை, அவள் குரல் அவனைத் தாக்க முகுந்தனின் முகத்தில் இளக்கம் வர, “முகுந்த். உனக்கு உண்மையா என்மேல் கோபமே இல்லை. எனக்குத் தெரியும் டா. எனக்குத் தான் உன்மேல் கோபம். என்னைச் சமாதானம் செய்வியாம். அப்படியே என்னை உன் கூட ஆபீஸ் கூட்டிட்டு போவியாம். சரியா?” என்று நிரஞ்சனா அவன் மடியில் அமர்ந்து அவன் கழுத்தில் கைகளை மாலையாகக் கோர்த்து, அவன் நெற்றில் மோதிக் கொஞ்சினாள் நிரஞ்சனா.

‘இவ சரிப்பட்டு வர மாட்டாப் போலயே.’ என்ற எண்ணத்தோடு, “நீரு. நீ இப்படி பண்றது எனக்கு ரொம்ப ஹர்டிங்கா இருக்கு. நான் என்னால ஆபீஸ் போய் மேனேஜ் பண்ண முடியுமுன்னு நினைக்கறேன். நீ பண்றது என் நம்பிக்கையை உடைக்கிற மாதிரி இருக்கு.” என்று முகுந்தன் விலகல் தன்மையோடு கண்டிப்போடு கூறினான்.

முகுந்தனின் பேச்சில் கண்கலங்க, அதை அவனறியாமல் மறைத்துக் கொண்டு, “நான் காலேஜ் கிளம்பறேன்.” என்று நிரஞ்சனா கூற, “நீரு நில்லு. சேர்ந்தே போகலாம். நாங்க போகும்போது உன்னை ட்ரோப் பண்ணிட்டு போறோம்.” என்று முகுந்தன் கூற, நிரஞ்சனா சம்மதமாகத் தலை அசைத்து இருவரும் வெளியே வந்தனர்.

விஜயேந்திரன் கீர்த்தனா இருவரும் படி இறங்கி வர, பூமா, நவநீதன் இருவரும் கீர்த்தனா, விஜயேந்திரனை கூர்மையாகப் பார்த்தனர். அவர்கள் முகத்திலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியாமல், “கீர்த்தனா இப்ப பரவால்லையா?” என்று பூமா கேட்க, “பரவால்லை அத்தை.” என்று கீர்த்தனா கூறினாள். பூமாவின் பார்வை நிரஞ்சனா முகுந்தனிடம் செல்ல, எள்ளும், கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்த நிரஞ்சனாவின் முகம் அவர் கண்ணில் பட்டது.

“காதலிச்சா மட்டும் பத்தாது. வாழ்க்கையில், விட்டுக்கொடுத்தும் போகணும்.” என்று பூமா, நிரஞ்சனவை பார்த்தபடி ஜாடைமாடையாகக் கூற, நிரஞ்சனா பெரிதாகப் புன்னகைத்தாள்.

“முகுந்தன். பெரியவங்க அறிவுரை சொன்னால், கேட்டுக்கணும். சிரிக்க கூடாது.எதுக்கு இந்தச் சிரிப்பு? உன் பொண்டாட்டி கிட்ட கேளு டா.” என்று பூமா கூற, “எதுக்கு சிரிப்பு? சந்தோசம் தான் அத்தை. நான் எப்படி இருக்கன்னு பார்க்க எனக்குத் தான் யாருமில்லை. முகுந்தனுக்காவது யாரவது இருக்காங்களேன்னு சந்தோசம் தான்.” என்று நிரஞ்சனா கூற, “இப்ப எதுக்கு தேவை இல்லாத பேச்சு. நேரமாச்சு கிளம்புங்க.” என்று நவநீதன் கூற, பூமா இவர்களை கூர்மையாகப் பார்த்தார்.

அனைவரும் கிளம்ப, நிரஞ்சனாவை கல்லூரியில் இறக்கி விட்டுக் கிளம்ப, முகுந்தன் அவளைத் தன்னோடு அழைத்துச் செல்வான், என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றமடைய, கோபமாகப் படக் படக்கென்று கால்களைத் தரையில் மிதித்தபடி கல்லூரி நோக்கி நடந்தாள் நிரஞ்சனா.

காரைக் கிளப்பிய விஜயேந்திரன், “முகுந்தன் சண்டையா?” என்று விஜயேந்திரன் கேட்க, “அப்படிலாம் இல்லை அண்ணா. லைட்டா கோபப்பட்டேன்.” என்று முகுந்தன் தோள்களைக் குலுக்கினான்.

“முகுந்த். நிரஞ்சனா பாவம். அவ…” என்று கீர்த்தனா சொல்லத் தயங்க, “அண்ணி. எனக்குத் தெரியும் அண்ணி. நிரஞ்சனாவுக்கு, சொல்லி அழக் கூட யாருமில்லை. என் முன்னாடி அழுதா, நான் கஷ்டப்படுவேன்னு, அவ சோகத்தை மறைச்சிகிட்டு என் முன்னாடி சிரிக்குறா. அவ படிப்பு நிற்கக் கூடாது. காலேஜ் போனால், அவ பிரெண்ட்ஸ் எல்லாரையும் பார்த்தா, என்னை மறந்து கொஞ்ச சந்தோஷமா இருப்பான்னு தான் அவளைக் கட்டாயப்படுத்தி அனுப்ப வேண்டியதாகிருச்சு.” என்று முகுந்தன் கூற, விஜயேந்திரன் சாலையைப் பார்த்து வண்டியைச் செலுத்திய படி தலை அசைத்தான்.

“உங்களை விட்டுட்டு போக நிரஞ்சனாவுக்கு மனசில்லை.” என்று கீர்த்தனா முகுந்தனை பார்த்தபடி நிரஞ்சனாவுக்கு சாதகமாகக் கூற, “ம்… நான் லவ் பண்ணிருக்க கூடாது அண்ணி. என்னால் தான் நிரஞ்சனாவுக்கு இவ்வுளவு கஷ்டம். நீரு பாவம் அண்ணி. நான் தான் அவளைத் தேடி போய்க் காதலை சொன்னேன். பிடிச்சிருந்தாலும், அவ படிக்குற பொண்ணுன்னு தெரிஞ்சவுடன் விலகிருக்கனும். நான் காதலிக்க போய்த் தான் அவளுக்குக் கஷ்டம். யாருமில்லாம, காலையில் செருப்பு கூட இல்லாம கோவில் முன்னாடி அழுதுகிட்டே வந்தா. எல்லாம் என் காதல் பண்ண வேலை. அவளை என் கைக்குள் வச்சி தாங்கணுமுன்னு நினச்சேன் அண்ணி. நான் செய்த தப்பா? இல்லை என்னைக் காதலிச்சது அவ பண்ண தப்பான்னு தெரியலை.” என்று முகுந்தன் கண்கலங்கினான்.

“டேய்… முகுந்த் இந்த நிலை மாறிட்டா, எல்லாம் சரியாகிரும்.” என்று விஜயேந்திரன் கூற, “அந்த நம்பிக்கை தான் அண்ணா.” என்று முகுந்தன் நம்பிக்கையோடு கூறினான்.

“முகுந்தன். நிரஞ்சனா கிட்ட பக்குவமா பேசிப் புரிய வை. நாங்க எல்லாரும் கூட இருபோம்முன்னு…” என்று விஜயேந்திரன் கூற, முகுந்தன் புன்னகையோடு சம்மதமாகத் தலை அசைத்தான்.

அலுவலகத்திற்குள் நுழைய, பலரின் கண்கள் பல விதமாக முகுந்தனை தழுவினாலும், அவர்கள் கண்களில் முகுந்தன் வந்ததில் ஓர் மகிழ்ச்சியும் தெரிந்தது.

விஜயேந்திரன், முகுந்தன், கீர்த்தனா என அனைவரும் ஒரே அறையில் அமர்ந்திருந்தனர்.

கீர்த்தனா, உடனிருந்து முகுந்தனுக்கு தேவையான அலுவலக பணிகளையும், வாய்ஸ் செட்டப் வேலைகளையும் செய்ய, விஜயேந்திரனின் கண்கள் அவளைத் தொடர்ந்தது.

கீர்த்தனாவின் வேகம், அவள் வேலை செய்யும் பாங்கு என அனைத்தையும் பார்த்த விஜயேந்திரன், ‘நான் கீர்த்தனாவை என்னோடு, அலுவலகத்திற்கு அழைத்து வந்திருக்க வேண்டும். இத்தனை நாள், வேலை செய்தவளை, நான் வீட்டில் இருக்க செய்தது எவ்வுளவு பெரிய முட்டாள்தனம். நான் செய்ததெல்லாம் தப்பு தானோ?’ என்று தன்னை தானே நொந்துகொண்டான் விஜயேந்திரன்.

முகுந்தன் வேலையில் மூழ்க, கீர்த்தனா அவளுக்கான இடத்தில் நிமிர்வாக அமர்ந்தாள். அவள் கட்டியிருந்த சேலை அவளுக்குத் தனி அழகையும் கம்பீரத்தையும் கொடுக்க, அவள் கூந்தல் நீளமாக முன்னே பின்னலோடு மெலிதாக அசைந்து கொண்டிருந்தது.

“அண்ணா… அண்ணியை சைட் அடிக்கறியா? என்னை வேணா வேற ரூமுக்கு மாத்திருங்க. நான் ஏன் உங்களுக்கு இடைஞ்சலாக?” என்று முகுந்தன் கேட்க, “அ… ச்ச… நான் அப்படி எல்லாம் பார்க்கலை.” என்று விஜயேந்திரன் தடுமாறினான்.

“எப்படி?” என்று முகுந்தன் வம்பிழுக்க, “முகுந்தன்.” என்று கீர்த்தனா கண்டிப்போடு அழைத்தாள்.

“அண்ணி. பிங்கி ப்ரோமிஸ். அண்ணன் உங்களைச் சைட் அடிச்சான்.” என்று முகுந்தன் தீவிரமாகக் கூற, ‘ஆளு தான் வளந்திருக்காங்க. பேசறதெல்லாம் சண்டை, பழம், பிங்கி ப்ரோமிஸ்…’ என்று கீர்த்தனா மனதுக்குள் நொந்து கொண்டாள்.

“கீர்த்தனா இவன் பொய் சொல்றான்.” என்று விஜயேந்திரன் விடாபிடியாகக் கூற, “அண்ணா… உங்களுக்குள்ள என்ன பிரச்சனை?” என்று முகுந்தன் நேரடியாகக் கேட்டான்.

இத்தனை நேரம் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கீர்த்தனா பதட்டமாக விஜயேந்திரனை பார்த்தாள்.

“என்ன தம்பி? போட்டு வாங்குறியா? நாங்க நல்லா தான் இருக்கோம்.” என்று விஜயேந்திரன் கூற, “அப்புறம் என் பொண்டாட்டியை நான் பாக்குறேன்னு சொல்ல வேண்டியது தானே? எதுக்கு இவ்வளவு பதட்ட படணும்? அண்ணியை எல்லார் மாதிரியும் நீ கீர்த்தனான்னு முழு பெயர் சொல்லித் தான் கூப்பிடணுமா?” என்று முகுந்தன் வரிசையாகக் கேள்வியை அடுக்கினான்.

“நீ இருக்கன்னு தான் கீர்த்தனானு கூப்பிடுறேன். இல்லைனா உங்க அண்ணி எனக்குக் கீர்த்தி தான்.” என்று விஜயேந்திரன் அழுத்தமாகக் கூறினான்.

அப்பொழுது, முகுந்தனின் நண்பர்கள் உள்ளே வர, “இன்னைக்கு முகுந்தன் வந்ததுக்கு ஒரு சின்ன கெட்-டுகெதர்.” என்று கூற, விஜயேந்திரன், முகுந்தன், கீர்த்தனா மூவரும் சம்மதமாகத் தலை அசைத்தனர்.

“கீர்த்தனா நீங்கப் பாடணும்.” என்று அவர்கள் கேட்க, கீர்த்தனா மறுப்பாகத் தலை அசைத்தாள். “அண்ணா. அண்ணி பாடணும். அப்படி இல்லைனா, நீ பாடணும்.” என்று முகுந்தன் கூற, நண்பரகள் அவன் சக்கர நாற்காலியைத் தள்ளி கொண்டு, அவனிடம் பேசுவதற்காக வெளியே அழைத்துச் சென்றனர்.

அங்குத் தனிமை நிலவ, “கீர்த்தி…” என்று விஜயேந்திரன் அழைக்க, கீர்த்தனா கோபமாக முறைத்தாள்.

“ஒரு நண்பனா எனக்கு அது பிடிச்சிருக்கு.” என்று கண்களைச் சுருக்கி விஜயேந்திரன் கெஞ்ச, அவன் முகபாவனையில் மறுக்க மனம் இல்லாமல் தலை அசைத்தாள் கீர்த்தனா.

“பாடலாமே?” என்று விஜயேந்திரன் கேட்க, “பாடுற மனநிலையில் நான் இல்லை” என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தாள் கீர்த்தனா.

“ஏன்?” என்று விஜயேந்திரன் கேட்க, கீர்த்தனா கூறிய பதிலில், கீர்த்தனாவின் மூளை, மனம் என அனைத்தும் வேண்டாமென்று நினைத்தாலும் அவள் பதில் அவள் விரும்பும் அடுத்த கட்டத்தைப் படம் பிடித்து காட்டிவிட்டது.

கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்.

 

error: Content is protected !!