Mayavan-2

அத்தியாயம் 2
மேஜை மேல் அடுக்கி வைக்கப் பட்டிருந்த கோப்புகளை பார்வையிட்டு கொண்டிருந்தான் அபிஜித்.  அப்போது கதவு  படாரென்று திறக்கப்பட,  யாரென்று கண்ணை மட்டும் உயர்த்தி பார்த்தான்.
சார்..சார் நில்லுங்க சார். இப்படி  உங்கள உள்ள விட்டா என் வேலை போயிடும் சார்..”  என நாகா சொல்லிக் கொண்டே வர அதை காதில் வாங்காமல் உள்ளே நுழைத்தார் ரத்தினம். முன்னாள் அமைச்சர். சுருக்கமாக சொல்வதானால் இன்று அபிஜித் மேல் தொடுக்கப்பட்ட கொலை முயற்சியின் சூத்திரதாரி.
உடுப்பு  மட்டுமே வெண்மை நிறம், மனம் முழுதும் அழுக்கு நிரம்பிய பெரிய மனிதர். இவருக்கென்று நான்கு கல்லூரிகள் உள்ளன.  அதை தவிர பினாமி பேரில் வெளிமாவட்டங்களில் கல் குவாரிகள், தவிர ஒரு மருத்துவமணையும் நடத்தி வருகிறார். இவை சொற்ப கணக்குகளே!
இவையெல்லாம் பரம்பரை சொத்துகளா? என்றால், இல்லை  இவர் அமைச்சராக இருந்த நான்காண்டுகளில் சம்பாரித்தவை.  தவறு கொள்ளையடித்தவை என கூற வேண்டுமோ!.  இவர் இப்படி அடித்து உதைத்து சொத்து சேர்க்க, அதை அனுபவிக்க என்றே அவரது ஒரே  மகன். அவன் சொத்தை மட்டும் அனுபவித்து அழித்திருந்தால் யாருக்கும் பிரச்சனை இல்லையே! ஆனால் அவனோ அவன் தந்தையின் கல்லூரியில் படிக்கவரும் ஒன்றும் அறியாத கிராமத்து பெண்களையும் அல்லவா அனுபவித்து அழித்தான்.
அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல ஆறு பெண்கள் .  அவர்களின் விடுதியில் தங்கி படிக்கும், வசதியில்லாத பெண்களாக தேர்ந்தெடுத்து  அவர்களை நாசமாக்கியது போதாதென்று  அவர்களை கொன்று  தற்கொலை அல்லது ஓடிப்போனது போல  பிம்பத்தை  ஏற்படுத்தி விடுவான்.
இதையெல்லாம் கண்டும் காணாது இருந்த தகப்பன் இன்று மகனை காக்க வேண்டியே, மகனை பற்றிய உண்மை அறிந்து அவனை கைது செய்ய பார்க்கும் அபிஜித்தை பல வழிகளில் மிரட்டி  அது பலனளிக்காது போகவே இப்போது சமாதான தூதுவனாக வந்திருந்தா(ன்)ர்.
“சார் நான் எவ்வளவோ சொன்னேன் சார் இவர் கேக்க மாட்டேன்னு வந்துட்டார் சார்” என நாகா பரிதாபமாக உரைக்க,  அபிஜித்  அவனை போ என சைகை செய்ய நாகா கதவை சாற்றி விட்டு சென்று விட்டான்.
“வணக்கம் தம்பி”, என கை கூப்பி வணக்கம் வைத்தவரை, கால் மேல் கால் போட்டவாறு  ரோலிங் சேரில் அங்கும் இங்கும் அசைந்தபடியே கையில் வைத்திருந்த பேனாவை விரல்களில் சுழற்றியபடி பார்த்திருந்தான்.
அவனது தோரனையை பார்த்த ரத்தினமே ஒரு கணம் சொக்கிதான் போனார். அது பதவியால் வந்த கம்பீரமா? இல்லை இயல்பிலேயே அமைந்து விட்டதா?  பதவி என்று பார்த்தால் இவனை விட பெரிய பதவியில் இருப்பவர்கள் எல்லாம் தன்னை எதிர்த்து பேசவே பயந்து ஒதுங்கி கொள்வரே!
ஆனால் இவனோ அரட்டல், மிரட்டல் எதற்கும் அஞ்ச மாட்டேன் என்று தோரனையை காட்டுகிறானே! என்று எண்ணிய படியே தானாக அங்கிருந்த ஒரு இருக்கையை நிரப்பினார்.
“என்ன தம்பி பதிலுக்கு வணக்கம் வைக்க மாட்டீங்களா?  சரி விடுங்க,  அது உங்க இஷ்டம்.   நான் நேரடியா விசயத்துக்கே வரேன்.  என் பையன இந்த கேசுல இருந்து காப்பாத்த உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க அப்படியே செஞ்சிடலாம்..   வீணா நமக்குள்ள பிரச்சனை எதுக்கு  பாருங்க” என கேவலமான  சிரிப்புடன்  கைதேர்ந்த அரசியல்வாதியாக  பேசினார்.
“சோ, பையன காப்பாத்த லஞ்சம் கொடுக்க பேரம் பேச வந்திருக்கீங்க.. ஏம் ஐ கரெக்ட்”  என அபிஜித் நேரிடியாக கேட்க ரத்தினம்  முகம்  யோசனையை காட்டியது….
“என்ன ரகு வாங்கிடலாமா  ல..ஞ்..ச..ம்.” என நிறுத்தி  நிதானமாக வினவ,
“சார்..அது  வந்து…..” என  ரகு தடுமாறினான்.
“சும்மா  சொல்லுங்க ரகு, சார் தான் சொல்றாரில்ல”  பேச்சு ரகுவிடத்தில் ஆனால் பார்வை முழுதும் ரத்தினத்தையே துளைத்தது.
இப்படி  கேட்டால் அவனும் என்ன சொல்வான். அமைதியாக நின்று  கொண்டான்.
“இப்பதான் தம்பி நல்ல முடிவு எடுத்திருக்கீங்க…பசங்க பேச தெரியாத உங்ககிட்ட பேசியிருக்கானுங்க.. நான்கூட  நீங்க  மசிய மாட்டீங்கன்னு  நினைச்சி காலைல என்னவோ பண்ண பாத்தேன்.” என தலையை தேய்த்தவாறு சன்னமாக முனகியவர்,  “சரி அத விடுங்க, இப்ப சொல்லுங்க பணம், பொருள், வீடு,   நகைங்க என்ன வேணும். ”  என அடுத்த அடியை உடனே எடுத்து வைத்தார் அந்த பாசக்கார தகப்பன்.
“இந்தாள் என்ன லூசா இன்னைக்கு காலைல கொலை பண்ண ஆள் அனுப்புனத வெளிப்படையா சொல்றான்.  இவர பத்தி தெரியாம பேரம் வேற பேசறான் என்ன நடக்க போகுதோ” என திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ரகு.
“ச்ச்ச் … என தலையை இடவலமாக ஆட்டியவன் இதுல ஒரு சிக்கல் என்னன்னா, பணம் அது என்கிட்டயே  நிறைய இருக்கு,  அடுத்து பொருள், வீடு இதுல எல்லாம்  எனக்கு விருப்பமில்ல, அப்பறம் நகைங்க  அத வாங்கி  கொடுக்கறதுக்கு யாரும் இல்ல , சோ எதுவும் எனக்கு யூஸ் ஆகாது.” என  உதட்டை நெளித்தவாறு நக்கலாக  கூற.
“ஓ…அப்ப தம்பிக்கு  நல்ல இளங்குட்டியா மாசத்துக்கு ஒண்ணு …..” என்ன விகார சிரிப்புடன் சொல்லிக் கொண்டே சென்றவர் அவன் பார்த்த  பார்வையில் பாதியிலேயே நிறுத்திக் கொண்டார்.
இவன் பெருசா எதிர்பாக்கறானோ என அவரது அரசியல் மூளை யோசிக்க ஆரம்பித்தது.  ஆனால் மனமோ அவன் என்ன கேட்டாலும் கொடுத்துதான் ஆக வேண்டும். ஏனெனில்  இதில் மாட்டிக்கொண்டிருப்பது அவரது ஆருயிர் மகனாயிற்றே என்று சமயத்தில் எடுத்துரைத்தது. அவர் முகம் யோசனையிலேயே இருக்க அதை கண்ட அபிஜித்,
“அடடே நீங்க இவ்வளவு யோசிக்கவே வேண்டாம்… நான் கேக்கறத கொடுத்தா போதும் எ..ல்…லாம் முடிஞ்சிடும் என்ன டீல் பேசலாமா”  என கேட்க முன்னாள் அமைச்சரின் முகம் மலர்ந்தது.  “நீங்க கேளுங்க தம்பி எதுவா இருந்தாலும் பண்ணிடலாம்” என உற்சாகமாக வாக்களித்தார்.
பேனாவினை மூடியவாறே “அப்படினா  செத்து போன ஆறு பொண்ணுங்களையும் உயிரோட கொண்டு வாங்க ” என இறுகிய முகத்தோடு பல்லை கடித்துக் கொண்டு கூற, திடுக்கிட்டு அவனை பார்த்தார் ரத்தினம். அவரது முகத்தில் இருந்த சந்தோசம் துணி கொண்டு துடைத்தார் போல் கானாமல் போனது.
“என்ன தம்பி மாத்தி மாத்தி பேசறீங்க,  விளையாண்டு பாக்கறீங்களா!  என்னோட பவர்  தெரியாம  பேசறீங்க.  ” என கோபமாக  பேசியவர், முன்னிருந்த  டேபிளில் கைவைத்து சற்று முன்வந்து “ஆமா உங்களுக்கு ஒரு தங்கச்சி இருக்காமே… அதுவும் அழகா வேற இருக்காம்”  இதை கேட்டு அவனது முகம் பாறை போல் இறுகுவதை பார்த்து  ரசித்தவாறே,
“நான் சொல்லலப்பா, நம்ம பசங்கதான் சொன்னாங்க, கொஞ்சம் மோசமான பசங்க தம்பி பார்த்து சூதானமா இருக்க சொல்லுங்க தங்கச்சிய..இப்பலாம் என்னென்னவோ நடக்குது  பாருங்க நாமதான் எச்சரிக்கையா இருக்கனும்” என நக்கலாக கூறினார்.
அதை கேட்டு தன் பற்கள் தெரிய அழகாக சிரித்தவனை “அந்தாள் மிரட்றாரு, இவர் ஏன் சம்மந்தமேயில்லாமல் சிரிக்கறாரு” என ரகுதான்  குழப்பத்தோடு பார்த்திருந்தான்.
“ம்ஹும்  குட் ஜோக்” என சிரித்து முடித்தவன்  “அவளோட நிழல கூட உன்னால நெருங்க முடியாது முடிஞ்சா பாத்துக்கோ” என சவால் விட்டான்.
 “என்ன முடியாதா!!  இப்ப..இப்ப தூக்கி காட்றேன் பாக்கறியா” என  ரத்தினம் ஆவேசமாக கத்த,
“நான் ஒன்னுமே பண்ணல, இங்கதான் உன் கண்ணுமுன்னாடிதான் இருக்கேன்  முடிஞ்சா துக்கு”  என  மேலும் சாய்வாக அமர்ந்து தெனாவட்டாக கூறியவனை  என்ன செய்தால் தகும் என பார்த்திருந்தார் ரத்தினம்.
உடனே யாருக்கோ போன் செய்தவர்  அந்த பக்கம் என்ன சொன்னார்களோ!  போனை கட் செய்து விட்டு, “வேணாம் தம்பி எங்கிட்ட மோதாதீங்க”
“ஒழுங்கா உன் பையன தப்ப ஒத்துகிட்டு சரணடைய சொல்லு,  இன்னும் கொஞ்ச நாள்ல அரெஸ்ட் வாரண்டோட போலீஸ் வீட்டுக்கு வரும். இல்ல நான் இந்த மாதிரி  எதையாவது பண்ணிட்டுதான் இருப்பேன்னா..உன் பையன் உனக்கில்ல இது மிரட்டல் இல்ல… புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்” என்றவன் வாயிலை நோக்கி கைகாட்ட, தன் இயலாமையை காட்ட முடியாமல் அவனை முறைத்தவாறே வேகமாக வெளியேறி இருந்தார் ரத்தினம்.
அவர் சென்றபின்  போனை எடுத்து  குறிப்பிட்ட எண்ணை டயல் செய்ய  சிறிது தயங்கியவன்,  ஆனால் பேச வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து  போன் செய்து  சில விசயங்களை பேசி வைத்திருந்தான்.
ஒரு மாதம் கடந்திருந்தது. ரத்தினம் வந்து சென்ற பின்  எவ்வித இடையூரும் இல்லை அமைதியாக  சென்று கொண்டிருந்தது. ஆனால் அவன் இத்தோடு விடுவான் என்று  தோன்றவில்லை. அவன் மகனுக்கு எதிரான ஆதாரங்களை முழுவதுமாக திரட்டியிருந்தான் அபிஜித். நாளையோ,  அதற்கு அடுத்த நாளோ  அவன் ஜெயிலுக்கு செல்வது உறுதி.    அந்த பெண்களின் பெற்றவர்களை நினைத்து மனம் கனத்தது அபிஜித்திற்க்கு. எத்தனை கனவுகளோடு படிக்க வந்த பெண்கள் இப்படி அநியாயமாய் கொல்லப்பட்டதை நினைத்து மனம் வருந்தினான். தன் செல்வாக்கின் மூலம் அவன் தப்பிவிட கூடாது என்பதற்காகவே  இந்த வழக்கை நேரடியாக தன் கண்காணிப்பில் கொண்டு வந்திருந்தான்.
இன்று கொஞ்சம் தாமதமாகிவிடவே  டிரைவரை மறுத்து வீட்டிற்கு போக சொல்லிவிட்டு  அபிஜித்தே அரசு வாகனத்தை ஓட்டி வந்திருந்தான்.  இரவு பத்தரை மணி சாலை துடைத்து போட்டதை போல ஆள் அரவமற்று இருந்தது. இவன் மனதிலும் அந்த சாலையை போலவே ஒருவித வெறுமை சூழ்ந்தது எதையெதையோ நினைத்தவாறு வாகனத்தை ஓட்டி வந்தவனின் கண்ணில் தூரத்தில் ஒரு பெண் ஓடி வருவதையும், அவளை நான்கு பேர் துரத்தி வருவதையும் கண்டவன்  வாகனத்தை வேகமாக செலுத்தி  அந்த பெண்ணை நெருங்கியிருந்தான்.
எதற்கும் இருக்கட்டும் என்று தன் கைத்துப்பாக்கியை எடுத்து இடுப்பில்சொருகி கொண்டு  காரை விட்டு இறங்கினான்.  தலைதெறிக்க ஓடி வந்த பெண்ணவளோ   இவனின் பின்னால் வந்து மறைந்து கொண்டு “சா…ர்   ப்…ளீஸ்  சேவ் ..மீ ” என சொல்லுவதற்குள்ளாகவே பலமாக மூச்சு வாங்கியது. அவள் முகத்தை கூட சரியாக இவன் பார்க்கவில்லை.  அவளை காருக்குள் அமர செய்தவன் வாட்சை கழட்டி காருக்குள் வைத்து, கை பட்டனை கழட்டி மேலேற்றியவாறே கார் கதவை சாற்றிவிட்டு, துரத்தி வந்தவர்களை நோக்கி சென்றான்.
உள்ளே அமர்ந்த பெண்ணவளோ முகத்தில் வழிந்த வியர்வையை கூட துடைக்க தோன்றாமல் கைகால்கள் வெளிப்படையாக நடுங்க, காருக்குள் இருந்த பாட்டிலில் இருந்து நீரை அருந்தினாள். ஆனால் பாதி நீர் கை நடுக்கத்தால் அவள் மேலேயே ஊற்றிக்கொண்டிருந்தது.
நிதானமான நடையுடன் நடத்து வந்த அவனை அந்த நால்வரும் எதிர்பார்க்கவில்லை போலும்.  இருட்டுக்குள் இருந்ததால் அரசு வாகனத்தை அவர்கள் கவனிக்கவில்லை.  தனியாக ஒரு பெண் மாட்டவும் அவளை துரத்தி வந்திருந்தனர்.  இப்படி ஒருவன் வருவான் என்று நினைக்கவில்லை. அவளை விடவும் மனமில்லை, அவ்வளவு அழகாக இருந்தாள்.
நூறில் கால்பங்கு வாய்ப்பாக இவனை அடித்து துரத்திவிட்டால், இன்று நல்ல வேட்டை அவர்களுக்கு. அவர்களும் தயாரானார்கள் பலப்பரீட்சைக்கு.  ஆனால் அவர்கள் நினைத்தது போல இவன் சாதாரணமாக தாக்குவது போல் தெரிந்தாலும் அது அவ்வாறு இல்லை என்பதை விரைவிலேயே உணர்ந்து கொண்டனர். இனி ஓடவும் முடியாது ஏனெனில் அபிஜித் அந்தளவுக்கு அவர்களை தாக்கியிருந்தான்.
இவை அனைத்தையும் காரினுள் இருந்தே திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் காரிகை. அப்போது அவள் கவனத்தை கலைத்தது பின்னாலிருந்த வந்த ஒரு ஒளி.  அது என்னவென்று கூர்ந்து பார்த்தாள். ஒரு பெரிய ஜீப் போன்ற வாகனம் அதிலிருந்து  இறங்கினர் தடிதடியாய் ஆட்கள் கையில் ஆயுதங்களுடன்.
அதை கண்டதும் வெலவெலத்து போனது அவளுக்கு,  இன்றைய கண்டம் இதோடு நிற்கவில்லையோ அவளுக்கு.   அவர்கள் தன்னை காத்தவனை நோக்கிதான் வந்து கொண்டிருந்தனர் என்பது அவளுக்கு புரிந்தது.
இவனை அழைக்கலாம் என்றால்  காருக்கு வலது புற பக்கவாட்டில் அவர்களை பந்தாடிக் கொண்டிருந்தான்.  உள்ளிருந்து அழைத்தால் சத்தம் கேட்காது. எனவே பயத்துடன் கார்கதவை திறந்து இறங்கியிருந்தாள்.
அதற்குள் அபிஜித் அடித்தவர்களுள் ஒருவன் கீழே விழ, பக்கத்தில் ஒரு பெரிய இரும்பு ராட் ஒன்று  இருந்தது. அதை கண்டவன் அதை எடுத்துக் கொண்டு அபிஜித்தை நெருங்கினான்.
அதற்குள் காரிலிருந்து வந்தவர்கள் அவனை நெருங்கியிருந்தனர்.  இனி அவனை அழைத்து கூறுவதென்பது இயலாத காரியம் அதனால் இவளே அவனிடத்திற்க்கு விரைந்திருந்தாள். இவள் ஒன்றும்  அவ்வளவு தைரியசாலியெல்லாம் இல்லை.  தன்னை காத்து சண்டை போட்டுக் கொண்டிருக்கும் அவனை காக்க வேண்டும் என்ற அந்த நேர பரிதவிப்பு மட்டுமே அவளை விரைய செய்திருந்தது.
இவள் செல்வதற்கும்  காரிலிருந்து வந்தவர்களில் ஒருவன் கையில் உள்ள கத்தியால் அபிஜித்தை  ஓங்கி குத்த வரவும் சரியாக இருக்க அவனை தள்ளிவிட சென்றவள் கால் தடுக்கி அவனுக்கும் அவர்களுக்கும் இடையில் தடுமாற கத்தி இவள் இடுப்பு பகுதியை ஊடுருவி சென்றது.
அதே நேரம் இரும்பு ராட் ஐ எடுத்தவன் அபிஜித்தை தாக்க வரவும்,  அபிஜித் தன்னை காத்துக் கொள்ள வேண்டி குனிய அந்த அடியும் பெண்ணவளின் பின் மண்டையை பலமாக தாக்கியது.
இரண்டு தாக்குதல்களாலும் நிலை குலைந்த பெண் பரிதாபமாக கீழே விழுந்திருந்தாள்.