கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 32

கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 32

கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 32

நிரஞ்சனா, முகுந்தன் கோவிலுக்குள் நுழைய… நிரஞ்சனாவின் குடும்பத்தினர், தரிசனத்தை முடித்துவிட்டு பிரகாரத்தைச் சுற்றிக் கொண்டிருந்தனர்.

தன் குடும்பத்தை பார்த்தவுடன், “அப்பா…” என்று அலறிக் கொண்டு ஓடினாள் நிரஞ்சனா.

அவள் ஓடுவதைக் கண்டு பதட்டம் அடைந்த முகுந்தன், “நீரு…” என்று அழைத்துக் கொண்டு சக்கர நாற்காலியில் பின்னே சென்றான்.

உடல் நிலை தேறிய பின், இன்று தான் தந்தையைப் பார்க்கிறாள் நிரஞ்சனா. தன் தந்தையை ஆரத்தழுவி, “அப்பா… நல்லா இருக்கீங்களா?” என்று குரல் தழுதழுக்க கேட்டாள் நிரஞ்சனா.

தன் மகளின் பாசம் அவர் நெஞ்சைத் தொட, அவள் செய்த தவறு அவர் நினைவைத் தொடக் கண்ணீர் உகுத்தார் ராமலிங்கம்.

“அப்பா… அழாதீங்க அப்பா. என்னை மன்னிச்சிருங்க அப்பா.” என்று கோவிலில் அவர் காலில் விழுந்து பாதம் முட்டி அழுதாள் நிரஞ்சனா.

“அக்கா…” என்று ஸ்வாதி பதற, “நீரு…” என்று முகுந்தன் பதறினான்.

“அப்பா! தப்பு தான். நான் பண்ணது தப்பு தான்.” என்று நிரஞ்சனா கதற, விழுக்கென்று நிமிர்ந்து தன் மனைவியை பார்த்தான் முகுந்தன்.

முகுந்தனின் கண்களில் நீர் கோர்த்தது. நிரஞ்சனாவின் மனநிலை புரிந்தாலும், ‘நீரு, எதை தப்புன்னு சொல்றா? கல்யாணத்தை தப்புன்னு சொல்லலாமா?’ என்ற கேள்வி அவன் மனதில் எழுந்தது.

அவன் கேள்விக்கு, அவன் காதலியே பதிலாகினாள்.

தன் தந்தையிடம் அசைவின்றி போக, “அப்பா… எனக்கு வேற வழி தெரியலை அப்பா. எனக்கு முகுந்தன் வேணும் அப்பா. அவர் இல்லைனா நான் செத்துருவேன் அப்பா.” என்று நிரஞ்சனா அழ, “அது தான் கல்யாணாம் பண்ணிக்கிட்டியே அப்புறம் என்ன?” என்று காட்டமாகக் கேட்டார் அவள் தாய் சுந்தரி.

கோவிலில் கூட்டம் இல்லைனாலும், ஒரு சிலர் இவர்களைத் திரும்பிப் பார்க்க, தன் மனைவி பெற்றவர்களாக இருந்தாலும் கெஞ்சுவது பிடிக்காமல், “நீரு…” என்று கெஞ்சுதலாக அழைத்தான் முகுந்தன்.

ஸ்வாதி செய்வதறியாமல் தவிக்க, முகுந்தனின் குரல் அவன் மன நிலையை அப்படமாக வெளிப்படுத்தியது.

“நிரஞ்சனா… எழுந்திரு.” என்று ஓங்கி ஒலித்தது அவள் தந்தையின் குரல்.

நிரஞ்சனா எழ, “படிக்குற வயசில் காதல் எப்படி தெரியுமா?” என்று கேள்வியாக நிறுத்தினார்.

அங்கு மௌனமே நிலவ, “வைரத்தை நோக்கி நீங்கப் பயணிக்கும் பொழுது, உங்கள் கவனத்தைத் திசை திருப்ப வரும் கண்ணாடி மாதிரி… பார்க்க அழகா தான் இருக்கும். ஜொலிக்கும். ஆனால், பல கீறல்களை ஏற்படுத்தும். உன் நல்ல நேரமோ, இல்லை யார் செய்த புண்ணியமோ, உனக்கு போற வழியில் கிடைத்ததே வைரம் ஆகிருச்சு. நம்பிப் போன இவர் மோசமா இருந்திருந்தா உன் நிலைமை என்னவாகியிருக்கும்?” என்று கேட்க, “அப்பா…” என்று விம்மினாள் நிரஞ்சனா.

தன் கைகளை உயர்த்தி, அவளை அமைதி காக்கச் செய்து, “சீக்கிரமா கிடைச்சது வைரமா இருந்தாலும், கிடைச்ச பாதை தப்பு தான். அந்த ரணங்கள் இருக்க தான் செய்யும்.” என்று அழுத்தமாகக் கூறினார் ராமலிங்கம்.

“நீ எங்க இருந்தாலும் நல்லாருக்கணுமுன்னு நினைக்கிற உயர்ந்த மனம் எங்க கிட்ட இருக்கு. ஆனால், உன் தங்கையோடு எதிர்காலத்தைப் பத்தி கூட யோசிக்காமல், நீ செய்த தப்பை மறந்து ஏத்துக்கற பரந்த மனம் எங்க கிட்ட இல்லை.” என்று தன் மகளிடம் கை எடுத்துக் கும்பிட்டு அங்கிருந்து வேகமாகச் செல்ல, நிரஞ்சனாவின் தாய், தங்கை இருவரும் அவர் பின்னே சென்றனர்.

தன் மகளை ஏற்றுக்கொள்ளும் ஆசை அவரிடம் இருந்தாலும், ஒரு நடுத்தர வர்க்கத்தின் தந்தையாக, இந்த சமுதாயம், உறவினர்கள், அவர் கோபம், ஏமாற்றம் அவரை ஆட்டி படைத்தது.

நிரஞ்சனா, மெதுவாக நடக்க, “நீரு… நான் வேணா பேசட்டுமா?” என்று அவள் சோக முகத்தைப் பார்த்துக் கேட்டான் முகுந்தன். மறுப்பாகத் தலை அசைத்து, “யூஸ் இல்லை முகுந்த். வலி இல்லா காதல் ஏது? சினிமாலையும், கதைகளையும் தான், காதலை உடனே ஏத்துப்பாங்க. அதெல்லாம் பார்த்து தான் நிறையப் பேர் இப்படி லவ் பண்ணிடறாங்க. ஆனால், உண்மையில் காதல் ரொம்ப கஷ்டம் டா.” என்று நிரஞ்சனா கூற, ஆமோதிப்பாக தலை அசைத்தான் முகுந்தன்.

“எனக்கு குழந்தை பிறந்தா கூட, பார்க்க யாரும் வர மாட்டாங்களா?” என்று நிரஞ்சனா சந்தேகமாகக் கேட்க, “நீரு…” என்று கண்டிப்போடு அழைத்தான் முகுந்தன்.

“விடு டா. உங்க வீட்டிலையாவது இருக்காங்களே! உன்னையும் ஏத்துக்கலைனா, நம்ம நிலைமையை நினைச்சாலே பயமா இருக்கு. இதெல்லாம் கல்யாணம் பண்ணும் போது தோணலை பாரேன்.” என்று நிரஞ்சனா கூற, “ஏன் நினைச்சிருந்தா கல்யாணம் பண்ணிருக்க மாட்டியா?” என்று கேட்டான் முகுந்தன்.

“அது எப்படி? நீ இல்லாமல் நான்?” என்று ஆரம்பித்த இடத்தில் வந்து நின்றாள் நிரஞ்சனா.

“தள்ளி இருந்து பாக்குறவங்களுக்கு காதல் அழகா தெரியும். கஷ்டம் தான் நீரு. காலம் எல்லாத்தயும் சரி செய்யும்.” என்று முகுந்தன் கூற, “செய்யணும்…” என்று கூறிக் கொண்டே இறைவனைத் தரிசிக்கச் சென்றாள் நிரஞ்சனா.

சில நொடிகளில், “சுகமான கஷ்டம் தான்.” என்று இருவரும் ஒரு சேர கூற, அவர்கள் முகத்தில் ஓர் அழகான புன்னகை பூத்தது.

“அப்பா…” என்று அழைத்துக் கொண்டு, கீர்த்தனா வீட்டிற்குள் நுழைய, இன்முகத்தோடு தன் மகளையும், மருமகனையும் வரவேற்றார் சத்யமூர்த்தி.

சிறிது நேரம் பேசிவிட்டு, கீர்த்தனா சமையலறைக்குள் செல்ல, “தேங்க்ஸ் மாப்பிள்ளை.” என்று சத்யமூர்த்தி கூற, அவரை புரியாமல் பார்த்தான் விஜயேந்திரன்.

“இல்லை. கல்யாணமான புதிதில், கீர்த்தனா முகத்தில் பழைய சந்தோசம் இல்லை. இப்ப பழைய மாதிரி இருக்கா.” என்று கூற, விஜயேந்திரனின் மனம் சிறு குழந்தை போல் துள்ளிக் குதித்தது.

‘கீர்த்தனா சந்தோஷத்தில் என்னக்கு இவ்வளவு அக்கறையா?’ என்ற எண்ணத்தோடு, சிறிது நேரம் சத்யமூர்த்தியோடு பேசிவிட்டு, வந்த காரியத்தில் கண்ணாக அவர்கள் அறைக்குள் நுழைந்தான் விஜயேந்திரன்.

“கீர்த்தி…” என்று அழைக்க, கீர்த்தனா அவள் அறைக்குள் நுழைய, படக்கென்று கதவைச் சாத்தினான் விஜயேந்திரன்.

“ஐயோ! அப்பா இருக்காங்க.” என்று கீர்த்தனா பதற, “அது மட்டும் தான் பிரச்சனையா?” என்று குறும்போடு கேட்டான் விஜயேந்திரன்.

கீர்த்தனா அவனை மேலும் கீழும் பார்க்க, அவன் அவள் அன்று மறைத்து வைத்த இடத்திற்குச் செல்ல, அவள் வழி மறித்து நின்றாள்.

“எங்க போறீங்க?”  என்று கீர்த்தனா கேட்க, “அன்னைக்கு, நீ மறைத்து வைத்ததைப் பார்க்க…” என்று விஜயேந்திரன் கூற, அவள் இமைகள் படபடக்க, அவள்  இதயம் வேகமாகத் துடிக்கச் செய்வதறியாமல் திகைத்தாள்.

“இந்திரன்…” என்று கீர்த்தனா மென்மையாக அழைக்க, “காத்து தான் கீர்த்தி வருது.” என்று விஜயேந்திரன் புன்னகைத்தான்.

“ஒரு பாட்டு பாடேன்…” என்று இந்திரன் ஆர்வமாகக் கேட்க, கீர்த்தனா மறுப்பாகத் தலை அசைக்க, அவளைத் தூக்கி மறுப்பக்கம் நிறுத்திவிட்டு அவள் நிதானிக்கும் முன் அவள் வரைந்திருந்த படத்தை எடுத்தான் விஜயேந்திரன்.

கீர்த்தனா ஓர் இளவரசியின் உடையில் மார்பு கச்சையோடும், இடுப்பு கச்சையோடும் பின்னே சாய்ந்திருக்க, ஒரு ஆணின் கைகள் அரச உடையில் அவள் இடையைத் தழுவி இருந்தது. உருவம், உயரம் அனைத்தும் விஜயேந்திரனை உணர்த்தினாலும், அதில் அவன் முகம் முடிவு பெறாமல் இருந்தது. கீர்த்தனாவின், கண்களில் அன்பு, உரிமை, வெட்கம், எதிர்பார்ப்பு கலந்திருந்தது. அத்தோடு ஓர் இளவரசியைப் போன்ற கம்பீரமும்…

“உங்கள் அன்பை எதிர்பார்த்து நானும்… என் ஓவியமும்…” என்று அதிலிருந்த வாக்கியத்தை விஜயேந்திரன் வாசிக்க, “இந்திரன்… அதைத் தாங்க.” என்று வெட்கத்தோடு கேட்டாள் கீர்த்தனா.

விஜயேந்திரன் அவள் அருகே நெருங்கி, அவள் முகத்தை வரி வடிமாக தீண்டி, “ஓவியத்தில் இருக்கும் அதே வெட்கம்.” என்று அவள் கன்னம் உரசி அவன் அவள் காதில் கிசுகிசுக்க, “இந்திரன்…” என்று மென்மையாக அழைத்தாள் கீர்த்தனா.

“கீர்த்தி… இதைப் பார்த்தா இப்படி உன் மனநிலை மாறுமுன்னு தெரிஞ்சிருந்தா அன்னைக்கே கூட்டிட்டு வந்திருப்பேனே!” என்று ஏக்கமாகக் கூறினான் விஜயேந்திரன்.

‘அந்த உடையில்…’ என்ற எண்ணத்தில், அவள் முகம் நாணத்தில் சிவக்க, “அப்படி எல்லாம் இல்லை.” என்று கீர்த்தனா, அவள் மனதை அவன் அறிந்து கொண்டதையும் , தன் செயலையும் அவன் பார்த்து விட்டான்  என்ற வெட்கத்திலும் தடுமாறினாள்.

“கீர்த்தி, அதில் என் கண்கள் மட்டும் இல்லை… இன்னும் கொஞ்ச முக பாவனையும். என் கண்ணில் நீ உனக்கான அன்பைப் பார்க்கவே இல்லையா?” என்று விஜயேந்திரன் ஏக்கமாகக் கேட்டான்.

கீர்த்தனா அவன் முகம் பார்க்க முடியாமல் தவிக்க, “கீர்த்தி… என்னை பாரேன்.” என்று அவள் முகத்தை நிமிர்த்தி, “அன்னைக்கு இந்த படத்தை பார்த்தப்ப, நான் தவித்தது நிஜம். முதல் காரணம், ஒரு பெண்ணிடம் இப்படி ஒரு எதிர்பார்ப்பை உண்டு பண்ணி ஏமாத்தறோமேன்னு குற்ற உணர்ச்சி.

இரண்டாவது, உரிமை இல்லாத பெண்ணை இப்படி ஒரு உடையில் பார்த்தது.” என்று விஜயேந்திரன் தன்னிலை விளக்கம் கொடுத்தான்.

“அன்னைக்கு, பதட்டத்தோடு வெளியே போனேன். இன்னைக்கு அப்படி எல்லாம் இல்லை. என் படத்தையும் முழுமையா வரைந்து கொடு.” என்று ஆர்வமாகக் கேட்டான் விஜயேந்திரன்.

கீர்த்தனா அவனைப் பதட்டமாகப் பார்க்க, “என் கண்ணில் நீ அன்பைப் பார்க்கவே இல்லையா?” என்று விஜயேந்திரன் ஏக்கமாகக் கேட்க, “தெரியலை…” என்று தயக்கமாகக் கூறினாள் கீர்த்தனா.

அவள் தயக்கத்தைப் போக்கும் விதமாகத் தலை கோதி, “காதலிக்கும், மனைவிக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?” என்று கேட்டு அவளை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தான் விஜயேந்திரன்.

கீர்த்தனா அவனைக் கோபமாகப் பார்க்க, அவளை கை பிடித்து தன் கைவளைவிற்குள் கொண்டு வந்து, “இவங்களோட வாழ்ந்தா நல்லாருக்கும்ன்னு வயசில் வரச் சிந்தனை தான் காதல். ஆனால், இவங்க இல்லைனா வாழ்வே முடியாதுன்னு வர எண்ணம் தான் மனைவி. அந்த எண்ணத்தை எனக்கு கொடுத்தது நீ. நானும், என் குடும்பமும் உன் அன்பில் கட்டுண்டு இருக்கோம்.” என்று விஜயேந்திரன் கூற, அவள் அவனை பரிதவிப்போடு பார்த்தாள்.

பரிதவித்த அவள் விழிகளில், இதழ் பதித்து… “நமக்காகக் காலம் காத்திருக்கும். உனக்காக நான் காத்திருப்பேன்.” என்று அவளை தன்வசமாக்கி அவன் வீட்டிற்குக் கிளம்பச் செய்தான் விஜயேந்திரன்.

“இந்த படத்தை எடுத்துக்கிட்டு கிளம்பு. நேரம் ஆச்சு.” என்று விஜயேந்திரன் கூற, சம்மதமாகத் தலை அசைத்துக் கிளம்பினாள் கீர்த்தனா.

அதன் பின், விஜயேந்திரன், கீர்த்தனாவை தன் அன்பு வளையத்தில் எல்லை மீறாமல் நிறுத்திக் கொண்டான். அவன் அந்த ஓவியத்தைப் பற்றி மீண்டும் பேசவில்லை. ஆனால், அந்த ஓவியம் முற்றுப் பெறுகையில் மட்டுமே, அவர்கள் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு நகரும் என்றும் உணர்த்தியிருந்தான் விஜயேந்திரன்.

கீர்த்தனா, தன் அன்பில் குடும்பத்தில் அமைதியை நிலை நாட்ட நிரஞ்சனா அவள் கலகலப்பில் குடும்பத்தில் சந்தோஷத்தை நிரப்பினாள்.

நாட்கள் அதன் போக்கில் இனிமையாக நகர்ந்தது. முகுந்தனின் கால்கள், வலுப்பெற்று அவன் நடக்க, நிரஞ்சனா செய்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் அவள் குறும்பை ரசித்தனர்.

முகுந்தன், நிரஞ்சனாவின் காதல் லீலைகள் பூமாவின் ஜன்னல்களுக்கு அத்துப்பிடி.

வாழ்வென்னும் கண்ணாடி மாளிகையில், காதல் தோற்றாலும், ஜெயித்தாலும் பல கீறல்களை ஏற்படுத்தும் வலிமை கொண்டது. காலம் மட்டுமே இதற்கு மருந்து.

காலமும், விஜயேந்திரனின் பொறுமையும், அன்பும் கீர்த்தனாவின் மனதை மாற்றியது.

நீ, நான் என்ற சிந்தனை கால போக்கில் நாமாக மாற, அவன் கண் பேசும் காமம் தாண்டிய அன்பை அவள் உணர  அந்த ஓவியத்தை வரைந்து விட்டாள் கீர்த்தனா.

“டேய் முகுந்த் உங்க அண்ணனை பாரு. எப்படி ரோமனாஸ் தூள் பறக்குது தெரியுமா? நீ என்னை படி படின்னு சொல்ற…” என்று நிரஞ்சனா சிணுங்க,  “அவங்க வயசு என்ன? நம்ம வயசு என்ன?” என்று முகுந்தன் அவள் காதை திருகினான்.

நிரஞ்சனா, புலம்பிக் கொண்டே படிக்க…

கீர்த்தனா  விஜயேந்திரனிடம் ஓவியத்தைக் கொடுக்க, அதையும், கீர்த்தனாவையும் ரசித்தபடி, “பாடேன்…” என்று குழைவாகக் கேட்டான் விஜயேந்திரன்.

சிறிதும் தயக்கமின்றி,

“சின்ன சின்ன கண் அசைவில் உன் அடிமை ஆகவா

செல்ல செல்ல முத்தங்களில் உன் உயிரை வாங்கவா?”

என்று இனிதாகப் பாடியபடி, விஜயேந்திரனின் கழுத்தில் கைகளை மாலையாகக் கோர்த்து, அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள் கீர்த்தனா.

“டேய் பாடுறாங்க டா… என்ன டா நடக்கும்?” என்று ஜன்னல் வழியாகக் கேட்ட கீதத்தில், நிரஞ்சனா சந்தேகம் கேட்க, ஜன்னலை மூடி, படி என்று செய்கை காட்டினான் முகுந்தன்.

முகுந்தன், நிரஞ்சனா இருவரும் அன்பையும், அறிவையும் வளர்க்க…

“மெல்ல மெல்ல என்னுயிரில் உன்னுயிரும் அசையுதே

துள்ள துள்ள என் இதயம் நம்முயிரில் நிறையுதே…”

என்று விஜயேந்திரனின் அணைப்பில் உருகி, தன்னுள் கரைந்து கீர்த்தனா பாட விஜயேந்திரனின் செய்கை எல்லை மீறியது.

கீர்த்தனா பாட முடியாமல் தவிக்க, விஜயேந்திரன் அவளைத் தனதாக்கித் தொடர்ந்தான்.

“உன்னை அள்ளி ஏந்தியே ஒரு யுகம் போகவா

தலை முதல் கால் வரை பணிவிடை பார்க்கவா…”

அன்பு மேலோங்க, விஜயேந்திரனின் முன் கீர்த்தனாவின்  நாணமும்  நாணப்பட்டு ஒளிந்து கொண்டது. விஜயேந்திரனின்  கம்பீரமும், கம்பீரமாக ஒதுங்கி நின்று அவள் அன்பின் முன் அவனைக் கரையச் செய்தது .

காதலில் தோற்றாலும், ஜெயித்தாலும் காலம் பல வலிகளை மறக்கடித்து, அனைவருக்கும் நல்வாழ்வைக் கொடுக்கும் என்று நம்பிக்கையோடு இந்த கண்ணாடி மாளிகையை இளம் நெஞ்சங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

– அகிலா கண்ணன்.

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!