Mayavan – 4
Mayavan – 4
அத்தியாயம் 4
மணி அதிகாலை மூன்றை கடந்து ஓடிக்கொண்டிருந்தது. குளித்து உடை மாற்றி வந்தவனை அமர வைத்த சஞ்சய் “எதாவது சாப்பிடறயா அபி? ” “சஞ்சு ப்ளீஸ் அந்த பொண்ணுக்கு எப்படி இருக்கு ஷி ஈஸ் ஓகே னா?” குரல் இதற்கு மேல் தாங்கமாட்டேன் என்னும் அளவிற்கு கெஞ்சியது. அனுமன் கண்டேன் சீதையை என்று ஒரு வரியில் ராமனின் துயர் துடைத்தது போல, “உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை” என்று சுருக்கமாக நிலையைக் கூறினான்.
“ஊஃப்” சட்டென தன் இறுக்கம் தளர்ந்தவன் சேரில் நன்றாக சாய்ந்தமர்ந்து தலையை பின்னால் சாய்த்து கண்களை மூடிக்கொண்டான். பாரம் விலகி மனம் லேசானது போல ஒரு நிம்மதி. இப்பொழுதுதான் புரிந்தது தான் எவ்வளவு கவலையில் இருந்திருக்கிறோம் என்பது. அடுத்து அவன் யோசனையை தடுக்கும் விதமாக “யார் அபி அந்த பொண்ணு?” என சஞ்சய் கேள்வி கேட்க கண்களை திறந்தவன் “தெரியாது” எனக்கூறி மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.
“வாட் தெரியாதா!!! தெரியாத பொண்ணுக்காகவா இவ்வளவு தவிப்பு” முன்னதை சத்தமாக கேட்டவன் பின்னதை மனதுக்குள் ஆச்சர்யமாக எண்ணி கொண்டான்.
சஞ்சயின் கேள்விக்கு “ம்” என்றவன் நடந்ததை கூறலானான். “ஓ” என சஞ்சய் அதோடு யோசனையானான். “ஏன் அபி அந்த பொண்ணு ஏன் அவங்க ஆளா இருக்க கூடாது”. அவன் கேள்வியில் கண்களை திறந்தவன் மனதில் அந்த குழந்தைத்தனமான முகம் மின்னி மறைந்தது “அதுக்கு வாய்ப்பே இல்ல சஞ்சு. அவ இன்னொசன்ட். அப்படி அவங்க ஆளா இருந்தா என்னை காப்பாத்த வேண்டி இப்படி வந்துப் படுத்திருக்க வேண்டிய அவசியமில்லையே?” என தன் கருத்தை கூற, “அதுவும் சரிதான் ” என அமைதியானான்.
“அபி…..” தயக்கமாய் அவன் குரல் ஒலித்தது.
“சொல்லு சஞ்சு” கண்களை மூடியவாறே கேட்க,
“அது…..அப்பா அம்மாவ பார்க்க போனயா?” கண்களைத் திறக்காமலேயே மௌனமே உருவாய் அமர்ந்திருந்தான் அபிஜித். ஆனால் அப்படியே அவனை விட்டால் அது சஞ்சு இல்லயே!
“அபி என்னடா! இன்னுமா உனக்கு கோபம் குறையல… அவங்க பாவம்டா” அவன் குரல் நலிந்து ஒலித்தது.
அதைக்கேட்டதும் கோபத்தில் “அப்ப நான். என்னை யாராவது நினைச்சு பாத்தாங்களா? அந்தசின்ன வயசில நான்….” அந்த நினைவுகளை புரட்டி பார்க்க கூட விருப்பமில்லை அவனுக்கு. “வேற எதாவது பேசு சஞ்சு” இனி இதை பற்றி பேசாதே என்று அந்த குரலின் அழுத்தம் கூறியது. இதை எதிர்பார்க்காத சஞ்சய்க்கு அவன் ஒரு மாவட்டத்தை நிர்வகிக்கும் கலெக்டராக தெரியவில்லை. இன்னும் அந்த சிறுவயதில் பார்த்த அபி போலவே தெரிந்தான்.
அபிஜித்தே ஆரம்பித்தான் “அந்த பொண்ணுக்கு வேற எதுவும் ஆபத்தில்லையே? தலைல வேற அடிப்பட்டிருந்தது” என கேட்க, அவன் பேச்சை மாற்றுவதை கண்டு ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன் “இப்போதைக்கு ஒண்ணுமில்ல, கத்தி அவ்ளோ ஆழமா இறங்கல. சோ அதால எந்த பிரச்சனையும் இல்ல.. ஆனா ஹெட் இன்சுரி அதிகமா இருக்கறதால ஸ்கேன் எடுக்க சொல்லியிருக்கேன். அது ரிசல்ட் வந்தாதான் “ஸ்கல்ல” எதாவது டேமேஜ் ஆகிருக்கான்னு பாத்து சொல்ல முடியும். மத்தபடி அவங்க கண் முழிக்கற வரைக்கும் வெய்ட் பண்ணலாம்… ” என கூறி முடித்தான்.
“அப்ப ஸ்பெஷலிஸ்ட் வரவழைச்சு பார்க்கலாமா” பரபரப்பாக கேட்க, “அவங்க வந்தாலும் இததான் சொல்லுவாங்க அபி”
“ஓ… எப்ப கான்சியஸ் வரும் எனி ஐடியா”
“அது அவங்களோட வில் பவர் பொறுத்து எப்ப வேணா கான்சியஸ் வரலாம்”.
“இப்ப பாக்கலாமா”
“நோ..நோ இப்ப வேண்டாம், நாளைக்கு பார்க்கலாம்” அப்போது சஞ்சயின் செல்போன் ஒலித்தது. திரையில் ஒளிர்ந்த எண்ணை கண்டவன் “அச்சோ மறந்துட்டனே” என பதறியவாறு அழைப்பை ஏற்றான்.
“எஸ் மா…”
“என்னடா கண்ணா இப்ப கெளம்பிடுவேன்னு சொன்ன, இன்னும் காணோம். யாரவது உங்கிட்ட மாட்டிகிட்டாங்களா என்ன?” என கிண்டலை கிண்டி வைத்தார் அவனது அன்னை ஜானகி.
“ஹா..ஹா…என் மேல அவ்வளவு நம்பிக்கையா! திடீர்னு ஒரு எமர்ஜென்ஸி கேஸ் மா”
” உன்னையும் நம்பி வராங்க பாரு … அவங்கள சொல்லனும். நீ ஒரு போலி டாக்டர்னு அவங்களுக்கு தெரியல போல” என்று விடாமல் கிண்டி கொண்டிருந்தார்.
“ம்மா…தங்க தாரகையே! புண்ணியத்த பெத்த புண்ணியமே! என் இமேஜ்ஜ டேமேஜ் பண்ணாதீங்க… லண்டன்ல படிச்ச நான் போலி டாக்டரா? கண்ணா எனக்கு கால் வலிக்குது, தலை வலிக்குதுன்னு வருவீங்கள்ள அப்ப பாத்துக்கறேன் உங்கள. சரி அத விடுங்க இப்ப என் முன்னாடி ஒரு வி.ஐ.பி இருக்காரு யாருன்னு கண்டுபிடிங்க பாக்கலாம்”
“யாருடா அது உனக்கும், எனக்கும் தெரிஞ்ச வி.ஐ.பி”
இவர்களது உரையாடலை புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்த அபி போனை பிடுங்கி “ஹாய் க்யூட்டி” என அழைக்க, ” ஹேய்!! அபி குட்டி” இதை கேட்டதும் உதடுகளை இருபுறமும் இழுத்து வைத்திருந்த அவன் புன்னகை பற்கள் தெரியுமளவிற்க்கு அழகாக விரிந்தது.
” எப்படிப்பா இருக்க, நீ இங்கயே வந்துட்டன்னு இந்த பக்கி சொல்லுச்சு…கூட்டிட்டு போடான்னா, அபிக்கு நேரமில்ல..டைம் கிடைச்சா அவனே வருவான்னு சொல்லிட்டான் வேஸ்ட்டு ஃபெல்லோ!”
அவரது பேச்சில் மேலும் புன்னகைத்தவன் “நான் நல்லாயிருக்கேன் டாலி.. அவன் கெடக்கறான் விடுங்க .. நீங்கபாட்டுக்கு கிளம்பி வரவேண்டியதுதான”
“எப்படிப்பா காரோட்ட டிரைவர் வேணுமில்ல, அதுவும் சம்பளமில்லாத டிரைவர்” என அவர் பாவமாக வினவ,
இவன் மேலும் சத்தமாக சிரிக்க தொடங்கினான். அவனையை புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தான் சஞ்சய். அபிஜித் இதுபோல் சிரிப்பதெல்லாம் அபூர்வம். அவன் வாழ்வில் நடந்த நிகழ்வால், இறுக்கம் இல்லையென்றாலும், முகத்தில் மலர்ச்சியும் இருக்காது. ஆனால் இப்போது பதவியின் காரணமாக வெறுமையை மறைக்க பழகியிருந்தான்.
சிறிது நேரம் ஜானகியிடம் பேசிவிட்டு வைத்தவன் “அம்மா இன்னும் அப்படியேதான் இருக்காங்க.. அம்மாவ பாக்கனும்னு இருக்கு..ஆனா வேலை அதுக்கும் மேல இருக்கு. சீக்கிரமா வரேன்னு அம்மாட்ட சொல்லுடா” என சிரிப்புடனே கூறி முடித்தான். சஞ்சய் புன்னகைக்கவும், மணியை பார்த்தவன் “சரிடா சஞ்சு கொஞ்சம் வேலை இருக்கு, நான் போய்ட்டு வந்துடறேன் அதுவரைக்கும் அந்த பொண்ண கொஞ்சம் பாத்துக்க”
“சரிடா பாத்து போய்ட்டு வா, அதுவரைக்கும் நான் அவங்கள பார்த்துக்கறேன்”.அவனது பதிலில் நிம்மதி வரபெற்றவன் தனது கடமையை நிறைவேற்ற கருஞ்சிறுத்தையாய் சீறிக் கொண்டு சென்றான்.
அதற்கு மேல் அவன் கொண்டது புயல் வேகமே. இதுவரை தனக்கு நடந்த தாக்குதலைப் பற்றி யாருக்கும் அவன் அறிவிக்கவில்லை. தன் அரசாங்க விடுதிக்கு சென்றவன் விரைவில் தயாராகி அந்த அதிகாலை வேளையிலேயே அலுவலகத்துக்கு சென்று தன் உதவியாளரையும் அழைத்தவன் அடுத்த சில மணி நேரங்களுக்கு பம்பரமாய் சுழன்று ரத்தினத்தின் மகனுக்கு கைது ஆணை வாங்கினான்.
அவன் வெளிநாடு தப்பி செல்வதற்காக விமான நிலையத்திற்க்கு செல்ல, அங்கு வைத்தே சிறைபிடித்தான். ரத்தினத்தையும், மகனை தப்புவிக்க முயன்றதாக கூறி கைது செய்தான். இவ்வளவு முயற்சி செய்தும் வீணாய் போனதே என ரத்தினம் தன் நிலையை நொந்தவாறே சிறைக்குச் சென்றார்.
நீரின்றி, உணவின்றி சுழன்றடித்தவன் நண்பகலில் சற்று ஓய்வானான். இப்போதுதான் பாவையவளின் ஞாபகம் எழ அலுவல் வேலைகளை முடித்துவிட்டு மருத்துவமணை விரைந்தான். இதுவரை அவள் கண்விழிக்கவில்லை. அதில் மீண்டும் அவன் மனம் கவலையடைய தொடங்கியது.
சஞ்சய் ரவுண்ட்ஸ் சென்றிருக்க அமைதியாக அவன் அறையில் அமர்ந்திருந்தான். இரவு பகல் பாராமல் உணவில்லாமல் அலைந்தது, மனசோர்வு எல்லாம் சேர்ந்து கண்களை சுழற்ற சேரில் அமர்ந்தபடியே மேஜையில் தலை சாய்த்தவாறு உறங்கிப்போனான்.
சிறிது நேரம் கழித்து அறைக்கு வந்த சஞ்சய் பார்த்தது ஆதரவற்ற குழந்தை போல உறங்கி கொண்டிருக்கும் நண்பனையே. அவன் குடும்ப பலம் என்ன? பாரம்பரியம் என்ன? சிறு வயதில் நடந்த ஒன்றுக்காக கோபம் கொண்டு இன்றுவரை அவர்களுடன் ஒட்டாமல் வாழும் பிடிவாதத்தை எண்ணி மனம் வருந்தினான்.
சஞ்சய் அவனை எழுப்பாமல் அமைதியாக அவனது வேலையை கவனிக்க ஆரம்பித்தான். உறங்கி கொண்டிருந்த அபிக்கு உறக்கத்திலும் பெண்ணவளின் ரத்தம் தோய்ந்த முகம் தெரிய திடுக்கிட்டு விழித்தான். சிறிது நேரத்திற்க்கு பின்னே நிதர்சனம் உரைக்க முகத்தை அழுந்த தேய்த்துக் கொண்டவன் முன் சஞ்சய் டீ கப்பை நீட்ட அமைதியாக வாங்கி அருந்தினான்.
“என்னடா தூங்க முடியலயா?” என வாஞ்சையாய் கேட்டவனிடம். “ஆமா சஞ்சு அந்த பொண்ணு நல்லாயிருக்குன்னு தெரிஞ்சா ரிலாக்ஸா ஃபீல் பண்ணுவேன்” என மறையாமல் மனதை எடுத்துரைத்தான்.
மணி மாலை நான்கை நெருங்கியது, அப்போது செவிலி ஒருவர் “டாக்டர் ஐ.சி.யு ல இருந்த பேசன்ட்டுக்கு நினைவு திரும்புது” என கூறவும் பரபரப்பான சஞ்சய் “வா அபி அந்த பொண்ணுக்கு நினைவு திரும்புது” என கூறியவாறு விரைந்தான். இருவரும் அறைக்கு சென்ற போது நினைவு திரும்புவதற்கு அறிகுறியாய் பெண்ணவளின் கை, கால்களில் மெல்லிய அசைவு தெரிந்தது.
சஞ்சய் அவளை பரிசோதித்து கொண்டிருக்க, அபி அவளின் முகத்தைதான் இமைக்காமல் பார்த்திருந்தான். இரவின் இருளில் அவளை சரியாக கவனித்து பார்க்கவில்லை. பாலில் பன்னீர் ரோஜா இதழை கலந்தது போல நிறம். எடுப்பான நாசி, பிறந்த குழந்தையின் இதழ்களை போல சிவந்த இதழ்கள். முகத்தில் சோர்வு அப்பட்டமாய் தெரிந்தாலும் அதுவும் கூட தனி சோபையான அழகை அள்ளி வழங்கியது.
கண்ணில் கருமணிகள் அசைய, பிரிக்க முடியாத இமைகளை சிரமப்பட்டு பிரித்தாள். மின்சார விளக்கின் ஒளியில் கண்கள் கூசியது போல இரண்டு மூன்று முறை திறந்து திறந்து மூடி அடுத்த முறை கண்களை மலர்த்தினாள். பார்வை அறையை வலம் வந்தது. அபியிடம் கூடுதல் நொடிகள் நிலைத்து பின் செவிலி, மருத்துவ உபகரணங்கள், திரைச்சீலை என மாறி கடைசியில் சஞ்சயிடம் நிலைத்தது.
தலை வலித்தது போலும் முகம் சுருங்கி கசங்க கையை தலைக்கு கொண்டு செல்ல வெய்ன் பிளாண்ட் போட்டிருந்ததால் சுருக்கென்று வலித்தது. கையை திருப்பி அதை பார்த்தவள் உதடு அழுகையில் பிதுங்க கையை மூடி மூடி திறந்து பார்த்தாள். அறையில் இருந்த மூவரும் இல்லை…. நால்வர் சஞ்சயின் தாயும், பிரபல மகப்பேறு மருத்துவரும், மருத்துவமனையின் நிர்வாகியுமான ஜானகியும் அங்கே பிரசன்னமானார். இவள் மேல் கவனத்தை வைத்திருந்ததால் யாரும் அவரை கவனிக்கவில்லை.
உதட்டை பிதுக்கி கண்களில் நீர் திரள “அங்கிள் ஏன் எனக்கு இது போட்டீங்க வலிக்குது” என கேட்ட கேள்வியில் அபிக்கு குழந்தையை போலஇருந்த அவளை கண்டு மனம் பாகாய் உருகிற்று. சஞ்சயோ வாய் பிளக்க கையில் இருந்த ஸ்டெதஸ்கோப்பை தவறவிட்டவன் “அங்கிளா!!!” என உச்சபட்ச அதிர்வில் திகைக்க, இவர்களைக் கலைத்தது ஜானகியின் சத்தமான சிரிப்பு.
“ஹா…ஹா..ஹா.. ” என கண்ணில் நீர் வர சிரித்தவரைக் கண்டு சஞ்சய் முறைக்க, அபியும் அப்போதுதான் அவரை கண்டான். எதற்கு சிரிக்கிறார் என முதலில் அறியாதவன் “அங்கிள்! அவங்க ஏன் அப்படி சிரிக்கிறாங்க எனக்கு பயமா இருக்கு” என பெண்ணவள் கூறியதை கேட்டு புரிந்ததும், அவனுக்கும் புன்னகை பொத்துக் கொண்டு வர, அதற்கு இரண்டு மூன்று தடுப்பணைகளை போட்டு தடுத்து வைத்தான். அப்படியும் சிறிது கசியத்தான் செய்தது.
சிரிப்பு வந்தாலும் பயந்து நடுங்கி கொண்டிருந்தவளை ஆறுதல் படுத்த வேண்டி கால் எட்டி வைக்கயிலேயே ஜானகி அவளிடம் விரைந்திருந்தார். “என்னடாம்மா பயந்துட்டியா! இங்க ஒரு கோமாளிய பார்த்தேனா சிரிப்பு வந்துடுச்சு நீ பயப்படாத” என கனிவான குரலில் தலையை தடவியவாறுப் பேசியவரைக் கண்டவள் சற்று இயல்புக்கு திரும்பினாள்.
சஞ்சய் மேலும் அவரை முறைத்தவாறு நிற்க, சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டிருந்த செவிலியை காப்பாற்றும் பொருட்டு அவரை வெளியே அனுப்பியவர் “இப்ப சொல்லு சஞ்சு “என கேட்க “ம் என் ஸ்டெதஸ்கோப்புக்கு ஹார்ட் அட்டேக் வந்து உயிரை விட்ருச்சு” என கடுப்பாகக் கூறினான்.
அவனது கோபத்தை கண்டதும் மேலும் ஜானகியிடம் ஒண்டியவளை கண்ட அபி “சஞ்சு” என அதட்டல் போட, ஜானகியின் தோளில் சாய்ந்தவாறே குரல் வந்த திசையில் திரும்பியவள் அபியையே வைத்தகண் வாங்காமல் பார்த்து கொண்டிருக்க, அதில் கட்டுண்ட அபியும்அவளையே பார்த்தான்.
இருவரையும் கலைத்தது சஞ்சயின் குரலே “ம்மா என்ன பார்த்தா அவ்ளோ வயசான மாதிரியா இருக்கு” என பாவமாக வினவினான். அவனும் என்னதான் செய்வான் இன்னும் திருமணமாகாத கண்ணியமான கட்டுக்கோப்பான ஆண்மகனை பார்த்து குமரி பெண் ஒருத்தி அங்கிள் என்று அழைத்தால் அவன் மனம் பதைக்கதானே செய்யும்.
ஜானகியும் சிரிப்பை கைவிட்டு “ஏன்டாம்மா அப்படி அங்கிள்னு கூப்பிட்ட” என கேள்வி கேட்க “ஏன் ஆன்ட்டி அப்படி கூப்பிட கூடாதா..நான் குட்டி பாப்பாதான..அப்ப பெரியவங்கள அங்கிள்னுதான கூப்பிடுவேன்” என அறியா பிள்ளையாய் கண்களை சுழற்றி கூற, அவள் கூறிய பதிலில் மூவரும் அதிர்ந்து நின்றனர்.