சுவாசம்  12

மேடு பள்ளமற்றச் சீரான சாலை.  அதிகக் குலுக்கலின்றி, மிதமான வேகத்தில் ஸ்கார்ப்பியோ சென்று கொண்டிருந்தது.  சிவரஞ்சனியின் உள்ளம்தான் அதிர்ந்து கொண்டிருந்தது.  கதிர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உள்ளுக்குள் சுழன்று கொண்டிருந்தது.

அவன் எந்தச் சலனமும் இல்லாமல் வண்டியோட்டிக் கொண்டிருந்தான்.  மனம் நிறைந்து நிம்மதியாக இருந்தது அவனுக்கு. என்னவென்றேத் தெரியாமல் வெகுநாட்களாக  உள்ளம் தேடிய தேடல், முற்று பெற்று விட்ட மனநிலை. உலகமே கைவசம் வந்த உணர்வு.

கதிர் எதையும் மனதில் வைத்து மருகும் ஆள் கிடையாது.  எதுவாயிருந்தாலும் பட் படா தான்.  சிவரஞ்சனியின் மீது தோன்றிய உணர்வுகளை இனம் கண்டதும், தயக்கமே இல்லாமல் அவளிடம் கூறிவிட்டான்.

உன்னை காதலிக்கிறேன், நேசிக்கிறேன், உன் மீது உயிராக இருக்கிறேன் என்றெல்லாம் பாலிஷ்ஷாகப் பேசவோ உருகவோத் தெரியாது அவனுக்கு.  காதல் என்ற வார்த்தையை விட அவளுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும்  திருமணம் என்ற பந்தம்தான்  சரி  என்பது அவனது எண்ணம்.

அவனைப் பொருத்தவரை சிவரஞ்சனியின் புற அழகும் அவனை ஈர்த்ததுதான்.  ஆனால் அதைவிட அக அழகுதான்  வெகுவாக ரசிக்க வைத்தது.  இன்னா செய்தாரையும் ஒறுக்கும்  நல்ல குணம் பிடித்தது.  மனதால் கூட யாருக்கும் தீங்கு நேரக்கூடாது என்று எண்ணும் அவளுடைய தூய உள்ளம் பிடித்தது. அவளுடன் வாழும் வாழ்க்கை   இனிமையாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் என்பதில் அவன் தெளிவாக இருந்தான்.

ஆனால் சிவரஞ்சனி வெகுவாகக் குழம்பிப் போயிருந்தாள்.  தன் மீதுள்ள பரிதாபத்தில்தான் அவன் இவ்வாறு கூறியதாக உறுதியாக நம்பினாள்.  தான் அவனுக்குக் கொஞ்சம் கூடப் பொருத்தம் இல்லாத போது,  தன் மீது அவனுக்குப் பிடித்தம் வர வாய்ப்பில்லை என்பது அவள் எண்ணம்.

இங்கு பொருத்தம் என்பது அவளைப் பொருத்தவரை தோற்றம், படிப்பு, வசதிவாய்ப்பு, குணம் எல்லாமே அடங்கும். அவளது மூளை பல்வேறு சிந்தனைகளில் உழன்று அவளைக் குழப்பிக் கொண்டிருந்தது. காதலில்லாத திருமண பந்தம் எப்படி இருக்க முடியும்? என்பது அவளது எண்ணம்.

ஆனால்  அவன் தன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறும் போது,  அவனது கண்களில் அவள் கண்ட உறுதி மனதைச் சற்று ஆறுதல் படுத்தியது. மேலும்  வெறும் நான்கு நாட்கள் மட்டுமே பழகிய ஒருவனின் அருகாமை, தனக்கு  அந்நியமாகத் தோன்றவில்லை   என்பதையும் வியப்புடன் உணர்ந்தாள்.

திருமணம் பற்றியெல்லாம்  அவளுக்குப் பெரிதாக கனவோ எதிர்பார்ப்போ எதுவும் கிடையாது.   ஆனால் தனக்கென்று வருபவனுடன் காதலும் புரிதலும் கூடிய, இனிய வாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

கதிர் நல்லவன்தான்.  அவன் மனைவியை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொள்வான் என்பதும் உண்மைதான்.

ஆனால், கதிரைப் பார்க்கும் போது பயத்தைத் தவிர வேறு  உணர்வுகள் எதுவும் தனக்குத் தோன்றவில்லையே என்று குழம்பினாள். அவனுமே தன்னைச் சற்று ஆர்வமாகக் கூடப் பார்த்ததில்லையே என்றும் எண்ணிக்கொண்டாள்..

அவனுக்கும் அவளது குழப்பம் புரிந்துதான் இருந்தது.  தான் சொன்ன விஷயத்தைச் சுத்தமாக அவள் எதிர்பார்க்கவில்லை என்பது, அவளது அதிர்ந்த முகத்திலேயே தெரிந்தது.  அதனால்தான் அவளை நிதானமாக யோசித்து பதில் சொல் என்றான்.

முதலில் அவள் சகஜமாகத் தன்னோடு பேசிப் பழகட்டும், பிறகு அவளது குழப்பத்தைத் தீர்த்து வைக்கலாம் என்று நினைத்தவன், மெல்ல அவளிடம் பேச்சுக் கொடுத்தான்.

“உங்க காலேஜ்ல ஜெயக்கொடின்னு புரஃபசர் யாராவது இருக்காங்களா?”

எதற்குக் கேட்கிறான் என்று புரியாத போதும் வாய் தானாக பதில் கூறியது.

“ம்ம்ம்…  இருக்காங்க”

“உனக்கு பாடம் எடுக்கறாங்களா?”

“இல்ல அவங்க கம்பயூட்டர் டிபார்ட்மெண்ட்.  எனக்கு அவங்க பாடம் எடுக்கல.”

“ஓ…  ஓகே.  அவங்க டைப் எப்படி?”

புரியாமல் குழப்பமாக அவனது முகத்தைப் பார்த்தாள்.

“இல்லம்மா…  ஸ்டூடண்ட் கிட்ட எப்படிப் பழகுவாங்க.  நல்ல டைப்பான்னு கேட்டேன்.”

“ஸ்டூடண்ட் கிட்ட ஜாலியா மூவ் பண்ணுவாங்கன்னுதான் சொல்வாங்க. காலேஜ்ல அவங்களுக்கு நல்ல பேர்தான்.”

“சரி…  அவங்களைப் பத்தின தகவல் ஏதாவது தெரிந்தால் எனக்குச் சொல்லு.”

எதற்காக என்று புரியாவிட்டாலும், ‘சரி’ என்று தலையாட்டினாள்.

“தீனதயாளன் பத்தியெல்லாம் கவலைப் படாதே.   அவனெல்லாம் வெறும் குரைக்குற நாய்தான். அவன் குடும்பமே    எனக்கும்  வாசுகி அக்காவுக்கும்   நல்லாப் பழக்கம் தான்.

அவன் வைஃப்  கீதாராணி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல வாரியத்துல மெம்பர்.  அவன் மாமனார்  சீதாராமன் ரிடையர்டு ஜட்ஜ்.   அவன் பொண்ணுங்க ரெண்டும் காலேஜ்  படிக்குதுங்க. இந்த மாதிரி விஷயத்துல அவன் மாட்டினா, அவன் வீட்லயே அவனுக்குச் சங்குதான்.

அதனால தான் அவன், உன்னை மாதிரி  பயந்த  சுபாவம் உள்ள பொண்ணுங்க எதிர்த்து எதுவும் பண்ண மாட்டாங்கன்னு,  தெரிஞ்சுதான் வாலாட்டியிருக்கான்.  இன்னையோட அவன் வாலை ஒட்ட நறுக்கறேன். நீ எந்த பயமும் இல்லாம அங்க தங்கிப் படிக்கலாம்.”

அவன் அவளிடம் இயல்பாக உரையாடுவது ஒரு வித பாதுகாப்பு உணர்வை அவளுக்குள் விதைத்தது.  கதிருடன் சென்று தீனதயாளனைத் தைரியமாகச் சந்திக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது. உன்னுடன் நான் இருப்பேன் என்ற உணர்வை அவளுக்கு உணர்த்தினான்.

அவளுடைய அம்மா அப்பா மற்றும் இளவயது நிகழ்வுகளைப் பற்றி  அவளை சகஜமாகப் பேச வைத்தான். தன்னுடைய வேலை மற்றும் ராகவனுக்காகச் செய்யும் பணிகள் குறித்தும் அவளிடம் பேசிக் கொண்டே வந்தான்.

அவர்கள் கடலூரை அடைந்து,  கல்லூரிக்குள்  சென்றதும் வாகனத்தை  நிறுத்தி விட்டு,  அவளுடன் இணைந்து படியேறியவன், அவளை முதலில் பிரின்ஸ்பால் அறைக்குள் போகச்சொன்னான்.

“நீ முதல்ல போய் பேசு.  நான் அடுத்து உடனே வரேன்.  பயப்படாமப் போ.”

“சரி”

என்றவள் சற்றுத் தயக்கத்துடனே அனுமதி கேட்டு பிரின்சிபாலின் அறைக்குள் நுழைந்தாள். அவளைப் பார்த்ததும் முகம் மலர்ந்த தீனதயாளன்,

“சிவரஞ்சனி…  வா… வா… மூனு நாளா வரலைன்னதும் படிப்பை விட்டுட்டு போயிட்டியோன்னு நினைச்சேன்.  புத்திசாலிப் பொண்ணு சரியான முடிவெடுத்து என்னைப் பார்க்க வந்திருக்க.

குட்… வெரிகுட்… இன்னைக்கே சனிக்கிழமைதான்… உனக்கும்  கெஸ்ட்ஹவுஸ்  எங்க இருக்குன்னு பார்த்த மாதிரி இருக்கும்.  இப்பவேப் போகலாமா?”

கண்களில் ஆசை மின்னக் கேட்டவனை அற்பப் புழுவைப் போலப் பார்த்தவள்,

“போகலாம் சார். உங்க வைஃப் கிட்டயும், என் வயசுள்ள உங்க பொண்ணுங்க கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு, அப்புறமாப் போகலாம்.”

“ஏன்னா எனக்கு  கெஸ்ட்ஹவுஸ்லாம் போய்ப் பழக்கம் இல்ல.  ஆனா உங்கப் பொண்ணுங்களுக்கு  கண்டிப்பாத் தெரிஞ்சிருக்கும்  பாருங்க.  அதான் அவங்ககிட்ட  கொஞ்சம் ஆலோசனை கேட்டுக்கறேன்.”

அவளது பதிலில் கொதித்துப் போன தீனதயாளன், “ஏய்…”  என்ற கிரீச்சிடலோடு நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வேகமாக எழுந்தவன், அறையைத் திறந்து கொண்டு உள்ளே வந்த  கதிரைப் பார்த்து அரண்டு  போய் நின்றான்.

“க…கதிர்,  வா… வாங்க… வாங்க.”

“என்ன தீனதயாளன் கேமரா இருக்கறத மறந்துட்டு, அவ்வளவு வேகமா எந்திரிச்சு வர்றீங்க?    இவங்க  கோபத்துல கால்ல கிடக்கறதக் கழட்டி, பளார் பளார்ன்னு நாலு அறை விட்டா என்ன செய்வீங்க?”

எதிர்பாராமல் உள்ளே வந்த  கதிரைப் பார்த்து அதிர்ந்து போன தீனதயாளன்,   அப்படியே உறைந்து போய் நின்றிருந்தார்.

“நீங்க வேற, நாங்க வருவோம்னு எதிர் பார்த்திருக்க மாட்டீங்க. ஸோ…  கேமராவ ஆஃப் பண்ணியிருக்க மாட்டீங்க.  எனக்கு அந்த  கேமரா ஃபுட்டேஜ கலெக்ட் பண்ணி, சோஷியல் மீடியால ஷேர் பண்ணறது  ஒன்னும் பெரிய விஷயமில்ல.”

“…”

“ஆனா பாருங்க, அப்படி ஒரு வீடியோ லீக் ஆனா,   அடுத்த  அரை மணி நேரத்தில  நேர்மையான ஜட்ஜ்ன்னு பேர் எடுத்த சீதா ராமன் சார்க்கும்,  மேடைக்கு மேடை பெண் குழந்தைகள் பாதுகாப்பு பத்தி பேசற, மேடம் கீதாராணி தீனதயாளனுக்கும் போயிடும்.

அப்புறம்… உங்க பெரிய பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கறீங்கன்னு கேள்விப் பட்டேன்,  அங்கயும் அசிங்கப் படுவீங்க.”

“க… கதிர்,  ப்ளீஸ்… ”  பயத்தில்  தொண்டைக்குழி அடைக்க வார்த்தைகள் வெளிவராமல் நின்றார்.

 

“அந்த வீடியோக்கு விளக்கமே தேவையில்ல. ஒரு பொண்ணு, அதுவும் உங்க காலேஜ் ஸ்டூடண்ட். உங்கள செருப்பால அடிக்கற மாதிரி வீடியோ வெளியேறினா கதை திரைக்கதை வசனம்லாம் அவங்களே எழுதிடுவாங்க.  எப்படி வசதி?”

கதிர் பேசப் பேச அவருக்கு நெற்றி கழுத்து என அனைத்து இடத்திலும் வேர்த்து வடிந்தது.  அவரைக் கேலியாகப் பார்த்தபடி, சாவகாசமாக நாற்காலியில் அமர்ந்து கொண்டவன் சிவரஞ்சனியையும் அமரச் சொன்னான்.

சிவரஞ்சனிக்கு ஆதரவாக கதிர் வருவான் என்று ஒரு துளி கூட நினைத்துப் பார்க்கவில்லை  தீனதயாளன்.   இந்த விஷயம் மட்டும் வீட்டிற்குத் தெரிந்தது,  அவ்வளவுதான் அவரது மனைவியே அவர் மீது  போலீஸில் புகார் கொடுத்து விடுவார்.

கதிரின் அமர்த்தலான பார்வை வேறு வயிற்றில் புளியைக் கரைத்தது. யாருமற்ற பெண் எனத் தான் அலட்சியமாக நினைத்திருக்க,   ஆறு அடியில் ஆஜானுபாகுவாய் அடியாள் போல துணைக்கு இவனை அழைத்து வருவாள் என்று, அவர் என்ன கனவா கண்டார்?

அதிலும் கதிர் இப்படிப் பொறுமையாக உட்கார்ந்து பேசும் ஆள் எல்லாம் கிடையாது.  பெண் பிள்ளை விவகாரம் என்பதாலேயே அவன் வாய் பேசிக் கொண்டிருக்கிறது.  இல்லையென்றால் அவரால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படாமல், நடு ரோட்டில் ஓட விட்டுத் தன்னை உதைப்பான்  என்பது அவருக்குத்  தெளிவாகத் தெரியும்.

“க… கதிர்,  நா…நான்  தெரியாமல் அந்தப் பொண்ணுகிட்ட அப்படிப் பேசிட்டேன்.  என்னை மன்னிச்சிடுங்க ப்ளீஸ்.”

நெற்றியில் வழிந்த வேர்வையைத் துடைத்தபடி அவர் கெஞ்ச,   அவரை தீர்க்கமாகப் பார்த்தவன்,

“சுத்திப் பொம்பளப் பிள்ளைங்க இருந்தா,  வயச மீறி அவங்களத் தப்பாப் பார்க்கத் தோனுதோ? வகுந்துடுவேன்… ஜாக்கிரதை.   இனி எந்த ஜென்மத்திலும் இப்படி ஒரு நினைப்பு உனக்கு வரக்கூடாது. நீ மன்னிப்பு கேட்க வேண்டியது   என்கிட்ட இல்ல சிவரஞ்சனிகிட்ட”

என்று கர்ஜித்தவனைக் கண்டு அரண்டு போனவர்,  சற்றுத் தயக்கத்துடன் சிவரஞ்சனியைப் பார்த்துத் தலையைக் குனிந்து,

“என்னை மன்னிச்சிடும்மா.  உன் கிட்ட நான்   அப்படிப் பேசினது தப்புதான். என்னை மன்னிச்சிடு.”

“…”

“அப்புறம் இன்னோரு விஷயம்.  சிவரஞ்சனி இதேக் காலேஜ்லதான் தொடர்ந்து படிக்கப் போறா. அவளுக்கு முழுப் பாதுகாப்பும் நீதான் குடுக்கற?  அவ மேல சின்னதா ஒரு கீறல் பட்டாக் கூட உன்னை உயிரோட புதைச்சிடுவேன். என்னப் பத்தி உனக்கு நல்லாத் தெரியும்னு நினைக்கிறேன். என்ன புரியுதா? “

“நா… நான் பார்த்துக்கறேன் கதிர்.  இனி இங்க சிவரஞ்சனிக்கு எந்தப் பிரச்சினையும் வராது.”

“இந்த வருஷத்து  காலேஜ் ஃபீஸ்  கட்டிடுறேன்.  அப்புறம்  ஹாஸ்டல்ல  சிவரஞ்சனியச் சேர்க்க என்ன ஃபார்மாலிடீஸ்?”

கதிர் கேட்டதும், அலுவலகப் பணியாளர்களைத் தனது அறைக்கே வரவழைத்த தீனதயாளன்,  அதற்கான நடைமுறைகளை  எடுத்துக் கூறி,   கல்லூரிக் கட்டணத்தையும் விடுதிக் கட்டணத்தையும் செலுத்தச் சொன்னார். பிறகு  ஒரு விண்ணப்பப் படிவத்தைக்   கொடுத்து   நிரப்பித் தருமாறு கூறினார்.

கட்டணங்களை தனது வங்கி அட்டையின் மூலம் செலுத்தியவன்,  விண்ணப்பத்தை அவளிடம் நிரப்பச் சொல்லிக் கொடுத்தான். அப்பொழுது ஒரு முக்கியமான ஃபோன் கால் வரவும்,  பேசுவதற்காக எழுந்து வெளியே சென்றான்.

கதிருக்கு பயந்து நடுங்கும் தீனதயாளனைப் பார்த்துச் சிரிப்புதான் வந்தது சிவரஞ்சனிக்கு.   வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டுதானே.  அன்று தன்னிடம் அவ்வளவு இறுமாப்பாக பேசியவர் இன்று பம்மியபடி பேசுவதைக் கண்டவள், மனதிற்குள் சந்தோஷமாக உணர்ந்தாள்.

தானும்  இன்று பேசியதைப் போல, அன்றும் கொஞ்சம் தைரியமாகப் பேசியிருக்கலாம் என்று எண்ணிக் கொண்டவள்,  கதிர் அருகில் இருப்பதால்தான் தன்னால் இவ்வளவு தைரியமாகப் பேச முடிந்தது என்பதையும் உணர்ந்திருந்தாள்.

அவன் அருகாமையில், தான் மிகவும் பாதுகாப்பாக உணர்வதையும் புரிந்து கொண்டாள்.  இந்த பாதுகாப்பு உணர்வை எல்லாராலும் ஏற்படுத்தி விட முடியாது, என்பதும் அவளுக்குப் புரிந்தது.

இத்தகைய பாதுகாப்பு உணர்வைத்தான் வாழ்நாள் முழுவதும் தருவதாக, அவன் கூறினான் என்று எண்ணிக் கொண்டாள்.  இந்தக் கணம் ஏனோ கதிரை அவ்வளவு பிடித்தது அவளுக்கு.

நேற்று கேசவனிடமும் அவன் தனக்காகத்தான் சண்டையிட்டான். இன்று தீனதயாளனிடமும் தனக்காகத்தான் அவன்  இயல்பை விட்டு பொறுமையாகப் பேசிக் கெண்டிருக்கிறான். தன்னுடைய மரியாதை எதிலும் சீர் கெட்டு விடக் கூடாது என்பதற்காகவே,  தீனதயாளனை வாய் வார்த்தையாக  மிரட்டிக் கொண்டிருக்கிறான்.

ஒருவேளை தீனதயாளனைத் தானோ  அல்லது கதிரோ அடிப்பது போன்ற வீடியோ வெளியானால்,  தன்னிடமும் பல கேள்விகள் எழுப்பப் படும்.  ஆகவே அத்தகைய காரியத்தை கதிர் செய்ய மாட்டான் என்பது அவளுக்குத் தெரியும்.  தீனதயாளனை மிரட்டவே கதிர் அவ்வாறு சொன்னது.

ஆனால் கதிர் தன்னுடன் வந்ததற்கே தீனதயாளன்   பயந்து மிரண்டு விட்டான். இனி அவனுக்கு எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் தவறான எண்ணம் வராது என்பது உறுதி.

மனதில் பல்வேறு சிந்தனைகள் ஓட,  விண்ணப்பப் படிவத்தை கவனமாகப் பூர்த்தி செய்து கொண்டிருந்தவளிடம்  தீனதயாளன்,

“கதிரை உனக்கு எப்படித் தெரியும்மா?”

இந்தக் கேள்விக்கு அவசியம் பதில் சொல்லனுமா என்பது போல அவரைப் பார்த்தவள் மீண்டும் குனிந்து எழுதத்  தொடங்கினாள். அவளுக்கு அவர் மீது மரியாதையே வர மறுத்தது.

அவளின் அலட்சியம் அவருக்கு அவமானமாக இருந்தது.  ஒரு நிமிட சபலத்தில் என் மரியாதையை நானேக் கெடுத்துக் கொண்டேனே என்று வருந்தியவர்,

“இல்ல…  கதிர்க்கு சொந்தம்னு அவங்க மாமாவத் தவிர யாரும் இல்லை.  அதான் உனக்கு எப்படிப் பழக்கம்னு தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்.”

கதிரைப் பற்றி நன்கு தெரியும் அவருக்கு.  ட்ரஸ்ட் மூலமாகப் பலரை ராகவன் படிக்க வைப்பதும் தெரியும்.  ட்ரஸ்ட் விவரங்களை கதிர்தான் பார்த்துக் கொள்கிறான் என்பதும் தெரியும்.  ஆனால் சிவரஞ்சனிக்கு ஃபீஸ் கட்ட  அவன் தன்னுடைய சொந்த அக்கவுண்ட்டில் இருந்து பணம் ட்ரான்ஸ்பர் செய்தது அவரை யோசிக்க வைத்தது.

அப்படியெல்லாம் எந்தப் பெண்ணுடனும் அவனைப் பார்த்துவிட முடியாது. கண்டிப்பாக இந்தப் பெண் அவனுக்கு முக்கியமான பெண்தான் என்று உறுதியாக நம்பியவர்,  ஒரு ஆர்வத்தில் அவளிடம் விசாரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது தனது அலைபேசி உரையாடலை முடித்து விட்டு உள்ளே வந்த கதிர்,

“என்ன தீனதயாளன்?  என்ன தெரிஞ்சிக்கனும் உங்களுக்கு?”

அவன் தன்னைத் தவறாக   எதுவும் எண்ணி  விடுவானோ என்ற பதட்டத்துடன்,

“ஒ… ஒன்னும் இல்ல கதிர்.  சும்மாதான்…  சிவரஞ்சனி உங்களுக்குச் சொந்தமான்னு கேட்டுட்டு இருந்தேன்.”

அவருக்கு என்ன பதில் கூறுவது என்று ஒரு நொடி யோசித்தவனின் கரங்களில், பூர்த்தி செய்த  விண்ணப்பத்தைத் திணித்தாள்.  அதில் பார்வையை ஓட்டியவனின் அதரங்கள்   புன்னகையில் மெல்லியதாக விரிந்தன.   அவளைத் திரும்பிப் பார்த்தவன்,

“ம்ம்ம்…   சொந்தம்தான்.    கூடிய    சீக்கிரம்  சொந்தம் ஆகப்போறவங்க.”

அவன் கூறியது புரிந்தது அவருக்கு.

“வாழ்த்துகள் கதிர். ரொம்ப சந்தோஷம். சிவரஞ்சனி ரொம்ப நல்ல பொண்ணு.

நான் மறுபடியும் மன்னிப்பு கேட்டுக்கறேன் கதிர்.  ப்ளீஸ் மனசுல எதுவும் வச்சிக்காதீங்க.

நீயும் என்னை மன்னிச்சிடும்மா.  இனி இப்படி ஒரு நினைப்பு எனக்கு என்னைக்கும் வராது.”

அவ்வளவு பெரிய பதவியில் இருக்கும் மனிதர் செய்த தவறை உணர்ந்து  மீண்டும்   மீண்டும் மன்னிப்புக் கேட்கும் போது,  மேற்கொண்டு  அதைப் பற்றிப் பேசாமல் மறந்து விடுவதே சிறந்தது என்று எண்ணிக் கொண்டாள்.  மன்னிக்க மனம் வராவிட்டாலும்  மறக்க முடியும் என்று தோன்றியது.

“நான் எதையும் மனசுல வச்சிக்கல சார்.  இனி இதைப் பத்திப் பேச வேணாம்.”

என்றவளை மெச்சுதலாகப் பார்த்தவன்,   தீனதயாளனிடம் விடைபெற்றுக் கொண்டு, மீண்டும் ஒரு முறை சிவரஞ்சனியின் பாதுகாப்பை அவரிடம் உறுதி செய்து கொண்டான்.  பிரின்ஸ்பால் அறையிலிருந்து  இருவரும் வெளியேறி  கார் நிறுத்தியிருந்த இடத்தை அடைந்தனர்.

கதிரின் மனது உல்லாசமாக இருந்தது. விண்ணப்பத்தில் கணவன் என்ற இடத்தில் அவள் தனது பெயரை எழுதியிருந்தது அவனை மிகுந்த சந்தோஷமாக உணர வைத்தது.  அந்தச் சூழ்நிலையில் தீனதயாளன் கேட்டக் கேள்விக்கு பதிலாகத் தான் என்ன  கூறுவது என்ற தயக்கம் ஒரு நொடி இருந்தது அவனுக்கு.

மனைவி என்று மனதில் நினைத்து விட்ட பிறகு,  வேறு எப்படியும் சொல்லப் பிடிக்கவில்லை.   அவள் தன் விருப்பத்தைத் தெரிவிக்கும் முன், அவளை மனைவி என்று அறிமுகப்படுத்தவும் தயக்கமாக இருந்தது.  விண்ணப்பத்தில் தனது பெயரைப் பார்த்ததும்,   வானம் வசப்பட்ட உணர்வுதான்.

உடனடியாக வாசுகியிடம் சொல்ல வேண்டும் என்று  ஒரு சந்தோஷப் பரபரப்பு.  கட்டவிழ்த்த காளை போல மனம் துள்ளியது. அகமும் புறமும் மலர்ந்த மகிழ்ச்சியோடு,

“ நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை உனக்கு காலேஜ் லீவ் தான.  ஹாஸ்டல்ல திங்கள்கிழமை வந்து ஜாயின் பண்ணிக்கலாம். இப்ப ஊருக்குப் போய் அக்காகிட்ட இந்த விஷயத்த சொல்லலாம்   சரியா?”

மலர்ந்த முகத்துடன் தன்னைப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கும் கதிரைக் கண்டவள், ‘நான் சம்மதம் சொன்னது இவருக்கு இவ்வளவு சந்தோஷம் தருதா?  மனதில் காதல் இல்லாவிட்டால் இத்தனை மகிழ்ச்சி கண்களில் வருமா?’   என்று எண்ணிக் கொண்டாள்.

கதிரின் கண்களில் மின்னியக் காதலைக் கண்டு கொண்டவள்   உள்ளத்தில் பொங்கிய உவகையுடன் சம்மதம் என்று தலையசைத்தாள். அழகான தேவதைகள் மந்திரக் கோலை அசைத்து ஒரு நொடியில் தன் வாழ்க்கையை வண்ண மயமாக்கிவிட்டது  போல இருந்தது.

கார் பயணத்தில் இருவரின்    இதழ்களும்  ஒரு வார்த்தை கூட பேசாவிட்டாலும்,   உள்ளங்கள்    மௌன மொழி பேசிக் கொண்டன.   வரும்போது  குழப்பம் இருந்த மனதில்,   இப்போது அவளுக்குத் தயக்கமும் நாணமும் குடி கொண்டது.

அவனது மனநிலைக்கு ஏற்ப இளையராஜாவின் குஷியான காதல் பாடல்கள் காரில்   ஒலித்துக்    கொண்டிருந்தன.  அவ்வப்போது அவளது முகத்தைத்   திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளுக்குத்தான் அவனது முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை.  இதுவரை இல்லாத உணர்வுகள் அடிவயிற்றில் புரியாத இம்சையை ஏற்படுத்தியது.  அவன் தன் முகத்தைப்  பார்ப்பது தெரிந்த போதும், அவன் கண்களைத் தன்னால் சந்திக்க முடியும் என்று தோன்றவில்லை.

புதிதாய் அவள் முகத்தில் தோன்றியுள்ள நாணமும், முகச்சிவப்பும்  அவன் மனதை மேலும்    அவளிடம் இழுத்தது. பார்த்த நாள் முதலே இவள் தன்னை பாதித்திருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டான்.

இவள் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ள கடலில் குதித்திருப்பாளோ என்று சுந்தர் கூறியதும் தனக்கு ஏன் அவ்வளவு எரிச்சல் வர வேண்டும்.   வயதுப் பெண்ணைப் படகில் மூன்று நாட்கள் தங்க வைக்க ஒப்புக் கொள்பவனா நான்?   இவளிடத்தில் வேறு பெண் இருந்திருந்தால் கண்டிப்பாக படகை மீண்டும் திருப்பச் சொல்லியிருப்பேன் என்று எண்ணிக் கொண்டான்.

இதுவரை எந்தப் பெண்ணையும் ரசனையாகப் பார்த்திராத தனது விழிகள் தடுமாறியது இவளிடம்தான். என் இயல்பை மாற்றியவள் இவள்தான்.  பார்த்த கணமே மனதை அவளிடம் இழந்ததை மனம் கவிதையாய் நினைத்துப்   பார்த்தது.

 

மனதை மயிலிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
மறந்து இருந்து பறந்து தினம் மகிழ

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

 

காற்று வீசும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!