Kannan Raathai – 23

அத்தியாயம் – 23

அந்த குடும்பத்தின் மூத்த மருமகள் இளைய மருமகள் இருவரும் பொங்கல் வைக்க நேரம் சென்றது. அவர்கள் தெய்வத்திற்கு படையல்போட்டு சாமி கும்பிட்ட பிறகு தேர்கடைகளை சுற்றிப் பார்க்க சென்றனர்.

“அண்ணி இந்த கோவில் திருவிழா ஊரில் ரொம்ப பேமஸ்” தாரிகா விளக்கம் கொடுத்தபடி நடக்க மதுவின் வழியை அவள் வந்து மறைக்க பட்டென்று நிமிர்ந்தாள் மதுமதி.

அவளின் எதிரே நின்ற ருத்ரா அவளைப் பார்த்து கேள்வியாக புருவம் உயர்த்தி, “எங்கே ராதாவின் கண்ணனை கண்ணில் காணவில்லை” என்று அவளின் பின்னோடு தேடினாள்.

அவளின் கேள்வி கோபத்தை தந்தபோதும், ‘இப்போ உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்றாள் மது எங்கோ பார்த்தபடி.

அவளின் முகத்தை வைத்தே மனத்தைக் கணித்த ருத்ரா உண்மையைச் சொல்லும் முன்னரே, “ஹே ருத்ரா ராதையின் கண்ணன் இங்கே இருக்கேன்” என்று அங்கே வந்தான். அவன் அருகே வருவதைக் கவனித்தும் மது அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

அவள் செல்வதை தடுக்க ருத்ரா நினைத்தபோது கிருஷ்ணா மது அறியாதபடி ருத்ராவிடம் மறுப்பாக தலையசைக்க அவளும் புரிந்துகொண்டாள். மது தன்னைவிட்டு தொலைவில் சென்றதும், “ருத்ரா என் காதலுக்காக விட்டுகொடுத்தேன்னு நீ அவளிடம் சொல்லாதே. அவளுக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கும்” என்றான்.

அவன் ருத்ராவிடம் பேசியபோதும் அவனின் பார்வை தூரத்தில் நின்ற மதுவின் மீதே நிலைக்க கண்டவளோ, “அன்னைக்கு நீ மணமேடையிலிருந்து இறங்கி போயிருந்தா என் கல்யாணமும் நின்னு போயிருக்கும். என்னோட அப்பா, அம்மாவோட தற்கொலைக்கு அது ஒரு காரணம் ஆகிருக்கும். விருப்பம் இல்லை என்றபோதும் கடைசி நிமிஷம் வரை மணமேடை அமர்ந்திருந்த உனக்கு இதைக்கூட செய்யலைன்ன நான் மனுஷியே இல்ல கிருஷ்ணா” அவள் நிறுத்தி நிதானமாக கூற அதிர்ந்து அவளை நோக்கினான் .

“ருத்ரா” என்றவன் எதோ சொல்ல வரும் முன்னே, “எனக்கு தெரியும்” என்று பேச்சிற்கு முற்றிபுள்ளி வைத்துவிட்டு அவனைவிட்டு விலகி இரண்டடி எடுத்து வைத்தவள், “எனக்கு நம்பிக்கை இருக்கு கிருஷ்ணா” என்ற உண்மையை அவனுக்கு உணர்ந்திய பிறகே அவளின் மனம் நிம்மதியானது.

அதன்பிறகு அவனும் அவளோடு பேசவில்லை. ஊர் திருவிழாவில் பொங்கல் வைத்தல், மாவிளக்கு, மஞ்சநீராட்டு என்று அந்த வாரம் மின்னல் வேகத்தில் சென்றது. ஆனால் கிருஷ்ணா – மதுவின் வாழ்க்கையில் மாற்றம் வரவில்லை.

கிருஷ்ணாவுடன் மது பேசியே ஒரு வாரம் முடிந்திருந்தது. அன்று காலை அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட, “கண்ணா எப்போ ஊருக்கு போக போற” என்று கேட்டார் சங்கீதா.

அவன் நிமிர்ந்து அண்ணியைக் கேள்வியாக நோக்கிட அவளோ சாப்பாடு பரிமாறுவதில் கவனமாக இருக்க தாரிகா தமையனின் அருகே மெல்ல குனிந்து,  “அண்ணா நீ மது அண்ணியை கண்டுக்காமல் இருக்கேன்னு செம கோபத்தில் இருக்காங்க” என்றாள் நமட்டு சிரிப்புடன்.

“அவன் இப்போ எல்லாம் ஊருக்கு போக வேண்டாம்” என்று தாமரை அவசரமாக மறுப்பு சொல்ல மது நிமிர்ந்து கிருஷ்ணாவின் முகம் பார்த்துவிட்டு தலையைக் குனிந்து கொண்டாள்.

அவளின் செயலைக் கவனித்த மாதவ், “என்ன மது ஏதாவது சொல்லனுமா” என்று சாதாரணமாக கேட்டு அவளை கிருஷ்ணாவிடம் மாட்டிவிட அவளோ மறுப்பாக தலையசைத்துவிட்டு எழுந்து சென்றாள்.

அப்போதுதான் மதுவின் செயலைக் கவனித்த கிருஷ்ணா, “அம்மா எனக்கு சாப்பாடு போதும்” என்று சொல்லிவிட்டு பாதி சாப்பாட்டில் எழுந்து சென்றான்.

அவள் தோட்டத்தின் கிணற்றடியில் கைகழுவ அவளின் பின்னாடியே சென்றவன் நொடிபொழுதில் அவளை நின்று ரசித்தவன் யாராவது வருகின்றார்களா என்று சுற்றிலும் பார்வையை சுழற்றிவிட்டு மதுவை பிடித்து அருகே இழுத்தான்.

அவள் பதறியபடி நிமிர அவளின் விழிகளை நேருக்கு சேர் பார்த்தவனின் பார்வையில் இருந்த மாற்றம் கண்டு அவள் திருதிருவென்று விழிக்க அவனின் பார்வை தன் உதட்டில் படிவத்தை உணர்ந்து வேகமாக முகத்தை திருப்பினாள்.

அவனோ அவளிடம் வம்பு செய்ய வந்ததால் அவளின் கழுத்தின் அடியில் முகம் புதைக்க அவனின் சூட்டான மூச்சுகாற்று அவளின் காது மடல்களைத் தீண்ட அவளின் உள்ளமோ படபடவென்று அடித்துக்கொண்டது.

அவனின் கரங்கள் அவளின் இடியுடன் உறவாட, ‘பக்கி பேசுவதை எல்லாம் பேசிவிட்டு இங்கே வந்து என்ன பண்ணிட்டு இருக்கிறான் பாரு’ என்று மனதிற்குள் சிணுங்கியவள் அவனின் கரங்களுக்கு தடை விதிக்கவில்லை.

கிருஷ்ணாவிற்கோ அவளின் இந்த செயல் உள்ளுக்குள் சிரிப்பைக் கொடுக்க, ‘உனக்கு இவ்வளவு கோபம் வருதா?’ என்று நினைத்தபடி தோட்டத்தில் வேலை பார்க்க இன்னும் யாரும் வரவில்லை அந்த தைரியத்தில் அவளை நெருங்கி நின்று இன்னும் இம்சை கொடுத்தான்.

அவனோடு உரசியபடியே நின்றபோதும் அவனின் மனம் உணர்ந்து அவள் கொஞ்சம் இசைந்துகொடுக்க, “மது நீ பாலாவை நேரில் போய் பார்த்துட்டு வா”என்றவன் அவளின் காதுமடல்களை கடித்துவிட்டு அவன் பட்டென்று விலக அவளோ அதிர்ச்சியில் சிலையென உறைந்தாள்.

அவனிடமிருந்து இந்த வார்த்தையை அவள் எதிர்பார்க்கவில்லை என்பதை உணர்ந்த கிருஷ்ணா வேகமாக வீட்டிற்குள் சென்றான்.

“கண்ணாளனே எனது கண்ணால் நான் எதையும் பார்க்கவில்லை” அவள் குறும்பாக பாடியபடியே வர, “நீ பின்னாடியே வருவேன்னு தெரிஞ்சிதான் நான் எதுவுமே பண்ணல” என்று தங்கையின் தலையில் நறுக்கேன்று கொட்டிவிட்டு சென்றான்.

“ஸ்ஸ்ஸ் வலிக்குன்னு தெரிஞ்சே கொட்டிட்டு போறானே” என்று தலையைத் தேய்த்துக்கொண்டு அவள் கிணற்றடிக்கு செல்ல அங்கே மது இவளைக் கண்டதும் சிவந்த முகத்தை மறைத்துக்கொண்டு தோட்டத்திற்குள் ஓடி மறைய, “எல்லாமே ஒரு மார்க்கமாவே இருக்காங்க என்னனு தெரியல” என்று தனியாக புலம்பினாள்.

ஆறுமுகம் மகனின் வரவை எதிர்பார்த்து காத்திருக்க, “அப்பா நாங்க சென்னை கிளம்பறோம்” என்ற முடிவுடன் வந்து நின்ற மகனைப் பார்த்து அவருக்கு சிரிப்பு வந்தபோதும் அவனின் மனநிலை உணர்ந்து, “சரிப்பா போயிட்டு வா” என்றார்.

அதன்பிறகு சங்கீதா, தாரிகா, தாமரை மூவரும் அவர்கள் கிளம்புவதற்கு தேவையான பொருட்களை எடுத்து வைக்க பொழுது சென்று மறைந்தது. மறுநாள் மதுரையில் இருந்து கிளம்பி சென்னை வந்தடைந்தனர்.

இவர்கள் இருவரும் எப்போதும்போல சிரித்த முகமாக வருவதைக் கண்டு அவர்களை நெருங்கிய பிரீத்தி, “இந்தாங்க சாமி உங்களோச ஜானு. என்னால இவளை சமாளிக்கவே முடியல” என்றாள்.

கிருஷ்ணா வீட்டைத் திறந்து உள்ளே போக, “கிருஷ் ராதா” என்று கத்திய கிளியைப் பார்த்து மது புன்னகைக்க பிரீத்தியின் பின்னோடு வந்து நின்றவனைக் கண்டதும் மதுவின் முகம் மலர்ந்தது. அதை உணர்ந்து பிரீத்தி சட்டென்று திரும்பிப் பார்க்க அங்கே நின்றவனைப் பார்த்தும் இவளின் முகம் பேய் அறைந்ததுபோல ஆனது.

அவளின் எதிரே நின்ற விஷ்ணுவைப் பார்க்க அவனும் இமைக்காமல் அவளையே பார்த்தான். இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி நின்றிருக்க, “மது” என்ற அழைப்புடன் அங்கே வந்த கிருஷ்ணா,

“விஷ்ணு வாட் ஏ சர்பிரைஸ். நிஜமாவே வந்திருப்பது நீதானா?” அவனின் குரல்கேட்டு மற்றவர்களின் கவனம் களைய பிரீத்தி மௌனமாக அங்கிருந்து நகர்வதை கவனித்த கிருஷ்ணாவின் மனதிற்குள் சந்தேகம் எழுந்தது.

“ஆமா என் தங்கையை பிளைட் வெச்சு அனுப்பிவிட்டு இத்தனை மாசம் ஆச்சே இன்னும் பயபுள்ள லண்டன் வராமல் இருக்கே நம்மளாவது ஒரு முறை பார்த்துட்டு போலான்னு வந்தேன்” என்றான் நக்கலுடன்.

“ம்ம் உன் தங்கத்தை பார்க்க வந்தியா? இதோ நிற்குது பாரு உன்னோட தங்கம். எல்லாமே பண்ணிட்டு எதுவுமே பண்ணாத மாதிரி அமைதியா நிற்குது பாரு” என்று இவனும் விடாமல் வாரினான்.

விஷ்ணுவின் பாசம் கிருஷ்ணா அறிந்ததே. அதனால் வேண்டும் என்றே அவனை வம்பிற்கு இழுத்து மதுவின் கோபத்திற்கு ஆளானான்.

அவளின் முறைப்பைக் கண்டு, “மச்சான் மேலிடம் முறைக்குது”என்றான் பாவமாக. விஷ்ணு சிரித்தபடி எனக்கும் இதுக்கும் சம்மதம் இல்ல சாமி என்று வீட்டிற்குள் செல்ல மது அவனை பின் தொடர்ந்தாள்.

விஷ்ணு திடுதிப்பென்று வந்து நிற்கவே ஒரு நிமிசம் பயந்து போனவளோ, ‘அப்பா அம்மா இருவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லையே’ என்று விசாரிக்க, “அதெல்லாம் இல்லடா” என்றான் இவன் அவளின் உதட்டசைவை புரிந்து பதில் கொடுத்தேன்.

கிருஷ்ணா எந்தவிதமான முக சுளிப்பும் இல்லாமல் அவனின் அருகே வந்து அமர்ந்து மாமா,அத்தை பற்றி விசாரித்துவிட்டு, “மது அண்ணாவும் தங்கையும் பேசிட்டு இருங்க நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வறேன்” என்றவன் அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.

அவள் சரியென்று தலையசைக்க கையில் இருந்த கிளியை கூண்டிற்குள் விட்டுவிட்டு அவள் வீட்டை சுத்தம் செய்ய, “கிருஷ்ணா கூட சந்தோசமாக இருக்கிறாயா?” என்றான்.

அதைக்கேட்டு தங்கையின் முகம் மலர, “இருவரும் சந்தோசமாக இருந்த போதும்” என்றவன் எழுந்து சென்று ரிப்ரெஷ் ஆகிவந்து பேசிக் கொண்டிருக்க மது அதன்பிறகு நடந்த அனைத்தையும் அண்ணனிடம் கூறியபடியே சமையலைக் கவனித்தாள்.

“மது எங்ககிட்ட கேட்காமல் அவன் கல்யாணம் பண்ணினான் என்ற கோபம் மனசில் இருந்ததே தவிர மற்றபடி கிருஷ்ணாவின் மீது குறை சொல்ல என்னால முடியாதும்மா. அந்த நேரத்தில் நானே அந்த இடத்தில் இருந்தாலும் அதே முடிவுதான் எடுத்திருப்பேன்.” என்றபோது அவள் வேலையை முடித்துவிட்டு வந்து அமரும்போது எப்.எம். போட்டாள்.

“இன்னும் நீ இந்த எப். எம் கேட்கும் பழக்கத்தை விடவே இல்லையா?” விஷ்ணு வேண்டும் என்றே வம்பிற்கு இழுக்க மறுப்பாக தலையசைத்துவிட்டு சோபாவில் வந்து அமர்ந்தாள்..

அப்போது விஷ்ணு ஏதோ சொல்லவர கைநீட்டி தடுத்த மது வாய்மீது விரல்வைத்து, ‘உஸ்ஸ்ஸ் சத்த போடாதே’ என்றவள் அதில் கவனத்தை திருப்ப அவனோ தங்கையை புரியாத பார்வை பார்த்தான்.

“வணக்கம் வந்தனம் நமஸ்தே நமோஸ்கார்.. இன்னைக்கு நான் ரொம்ப சோகமாக இருக்கேன் ஃப்ரெண்ட்ஸ்.. ஏன் என்று கேட்கிறீங்களா? இதுதான் என்னோட கடைசி பிரோகிராம். இந்த நிகழ்ச்சியை முதலில் தொகுத்து வழங்கிய  ஆர்.ஜே. பாலா வந்துவிட்டார். நாளை முதல் அவளின் குரலில் ஒலிக்கும் இனிமையான கானங்கள் தொகுத்து வழங்க நாளை முதல் அவரே வருவார் என்ற சோக செய்தியுடன்..” அவன் அடுத்து பேசியதை கவனிக்கும் நிலையில் மது இல்லை.

அவளின் பூவாக மலர, ‘ஸ்ஸ்ஸ் அப்பா இவ்வளவு சீக்கிரம் வந்துட்டான். இன்னைக்கு கிருஷ்ணா கிட்ட சொல்லிட்டு நாளைக்கே போய் பார்த்துட்டு வரணும்..’ என்ற சிந்தனையுடன் இவள் கிருஷ்ணாவின் வரவை எதிர்ப்பார்த்தான்.

அண்ணன் வந்திருக்கிறான் என்று அவள் உணவை பார்த்து பார்த்து செய்திட பிரீத்தி எதையோ கேட்பதற்கு வேகமாக வீட்டிற்குள் நுழைய வெளியே செல்ல கிளம்பிய விஷ்ணுவின் மீது மோதி, “சாரி” என்றாள்.

அவளை மெல்ல பார்வையால் அளவிட்ட விஷ்ணு, “என்ன முடிவு எடுத்திருக்கிற” என்றான் சாதாரண குரலில். அவள் அவனை நிமிர்ந்து பார்க்காமல் நின்றிருந்தாள்.

அப்போது தன்னுடைய பைக் சாவியை தூக்கிப்போட்டு பிடித்தபடியே வீட்டின் உள்ளே நுழைந்த கிருஷ்ணா இருவரும் நிற்கும் நிலையைக் கண்டு கேள்வியாக புருவம் உயர்த்தினான். அவன் இருவரையும் நெருங்கும் முன்னரே சமையலறையில் நின்ற மது, ‘கிருஷ்ணா நீ இங்கே வா’ என்றாள்.

அவன் பார்வையால் இருவரையும் காட்டி அவளிடம் கேள்வி கேட்க, ‘நான் எல்லாம் சொல்றேன் நீ இங்கே வா..’ என்று அவனை அருகே அழைக்க அவனும் சத்தமில்லாமல் நகர்ந்துவிட்டான்.

அவன் மதுவிடம் சென்று, ‘என்ன நடக்குது’ என்று பார்வையால் வினாவிட, ‘அண்ணா லவ் ப்ரொபோஸ் பண்ணியிருந்தான் பிரீத்திகிட்ட. அவங்க ஒத்துகல அதன் டைம் கொடுத்து விலகி போனான். அவன் கொடுத்த டைம் முடிஞ்சிது அதன் மறுபடியும் அவங்களை தேடி வந்திருக்கான்’ என்றாள் குறும்புடன் கண்சிமிட்டி.

அவளின் முகம் மலர்ந்திருப்பது கண்டு அவனுக்கு வம்பு இழுக்க தோன்றிட, “அண்ணனும் தங்கச்சியும் ஆன்சைட் போவது இதுக்குத்தானா? உங்க அண்ணனை கூட ஒரு கணக்கில் சேர்த்தலாம். அவனாவது காதலிக்கு டைம் கொடுக்க விலகி போனான். ஆனா நீ என்னை இங்கே தவிக்க விட்டுட்டு இல்ல போன. மனுஷன் உணர்ச்சிகளை புரிஞ்சிக்க தெரியாத கல்லு..” என்றான்  அவளை நெருங்கி காதுமடல்களை கடிக்கும்போது கிளி படபடவென்று இறகை அடிக்க கிருஷ்ணா மதுவிடமிருந்து விலகி நின்றான்.

ஒருவரையொருவர் பார்த்தபடி நின்ற பிரீத்தி, “எனக்கு கல்யாணம் வேண்டாம் விஷ்ணு. நீ வேறொரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ” என்றாள் தீர்க்கமாக அவனை பார்த்தபடி.

விஷ்ணு அவளின் பதிலை காதில் வாங்காமல் நின்றிருக்க கிருஷ்ணாதான் அவர்களின் அருகே வந்தான். பிரீத்தி கலங்கிய கண்களைத் துடைத்துவிட்டு அவனைவிட்டு விலகி வெளியே செல்ல அவளின் கரம்பிடித்து தடுத்தான் கிருஷ்ணா.

அவள் பட்டென்று திரும்பிப் பார்க்க, “போதும் பிரீத்தி இதுக்கு மேல் நீ தனியாக இருப்பது எனக்கு சரின்னு தோணல. விஷ்ணுவிற்கு என்ன குறைச்சல் சொல்லு பார்ப்போம்.. நீ ராஜூவை நினைத்து இவனோட வாழ்க்கையும் சேர்த்து வீணடிக்காதே” என்றான்.

மது தமையனின் அருகே வர விஷ்ணுவோ தனக்காக பேசும் கிருஷ்ணாவை கேள்வியாக நோக்கிட, “இவரை  நான் காத்திருக்க சொல்லல கிருஷ்ணா” என்றாள் எரிச்சல் மிகுந்த குரலில்.

“இப்போ உன்னோட முடிவு என்ன?” என்றான் விஷ்ணு பொறுமை இல்லாமல்.

“நீ வேறொரு கல்யாணம் பண்ணிக்கோ” என்றாள் அவளும் தன் முடிவை மாற்றாமல்.

அடுத்தநொடி கிருஷ்ணாவின் கரங்கள் பிரீத்தியின் கன்னத்தைப் பதம் பார்க்க விஷ்ணு அவனை தடுக்கும் வலி தெரியாமல் நின்றிருக்க பிரீத்தி கண்களில் கண்ணீரோடு நின்றாள். அவன் அடுத்து அடிக்க கை ஓங்கும்போது மது வந்து கிருஷ்ணாவின் கரம்பிடித்து தடுத்தாள்.

“மது பாருடி சொன்ன கேட்காமல் பண்ற. எனக்கு வருகின்ற கோபத்திற்கு இவளை இன்னும் நாலு அரை விடணும்” என்றவன் விஷ்ணுவின் பக்கம் திரும்பி, “உனக்கு என்னடா தலைஎழுத்து. இவளை மட்டும் காதலிக்கிறேன் என்று ஏன் இப்படி இருக்கிற” என்றவன் எரிச்சலோடு கைகளை உதறிவிட்டு சோபாவில் போய் அமர்ந்தான்.

ராகவ் வீட்டிற்குள் நுழைய அங்கே ஆளுக்கு ஒரு மூளையில் நின்றிருக்க, “பிரீத்தி” என்றான்.

அவள் நிமிர்ந்து பார்க்க அவள் கன்னத்தில் இருந்த விரல்தடம் கண்டவுடன் கிருஷ்ணாவைப் பார்த்தான். அவன் அடித்த கரத்தை பார்த்தபபடி சோபாவில் அமர்ந்திருந்தான்.

“ராஜூ இறந்த அன்னைக்கு சொன்னதே தான் பிரீத்தி இன்னைக்கும் சொல்றோம். உனக்காக நானும் கிருஷ்ணாவும் இருப்போம். ஆனா விஷ்ணுவையும் எங்களால் விட்டுகொடுக்க முடியாது. நம்ம ஒரு இடத்தில் ஒரு அப்பார்ட்மெண்ட்டில் இருந்ததால் வந்த பாசமா என்று நீ கேட்ட அதுக்கு எனக்கு பதில் தெரியல. ஆனா நீ நல்லா இருக்கணும் என்றுதான் நாங்க இன்னைக்கும் நினைக்கிறோம்” என்றான் மனதை மறைக்காமல்.

விஷ்ணு பொறுமையாக அவளின் அருகே வந்து, “பிரீத்தி நான் உன்னை கட்டாயப்படுத்துறேன்னு தோணுதா?” என்றவனின் விரல்கள் அவளின் கன்னத்தை வருட அவனின் காலரை பற்றி இழுத்து மார்பில் முகம் புதைத்தவள் கதறி அழுதாள்.

“உன்னை எனக்கு பிடிக்கும் விஷ்ணு” என்றதும் அவளை அனைத்து கொண்டவனின் முகத்தில் புன்னகை அரும்பிட, “கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றான்

அவள் ஒப்புதலாக தலையசைக்க கிருஷ்ணாவிற்கும், ராகவிற்கும் மனதிலிருந்த பாரம் குறைந்தது. அன்று அவளை பூ, பொட்டு இல்லாமல் பார்த்து மனம் வருந்திய இருவரும் இன்றும் மனதார புன்னகைக்க, “கிருஷ்ணா தேங்க்ஸ்டா” என்றான் விஷ்ணு.

“நீங்க சந்தோசமா இருந்தா அதே போதும்டா” என்றவன் மதுவைப் பார்க்க அவளோ ராகவிடம் வேகமாக ஏதோ சொல்ல, “ஹே நிஜமாவா? ஹுரே..” என்று கத்த கிருஷ்ணா என்ன விஷயமென்று புரியாமல் நின்றிருந்தான்.

விஷ்ணுவும், பிரீத்தியும் மெல்ல விலக, “மது கேட்கும் ஆர்.ஜே. பாலா மறுபடியும் வேலைக்கு சேர்ந்தாச்சு கிருஷ்ணா. இப்போதான் ப்ரோகிராம் கேட்டோம்” என்றதும் ராகவும் புன்னகைக்க கிருஷ்ணா எதுவும் பேசாமல் அங்கிருந்து அகன்றான்.

மது அவனிடம் சொன்னது போலவே மறுநாள் பாலாவைப் பார்க்க கிளம்ப முகம் அறியாத பாலாவின் மீது கடலளவு கோபத்தில் இருந்தான் கிருஷ்ணா.

error: Content is protected !!