‘கட்சி அலுவலகம்’

தலைமை – தனபாலன் எம்.எல்.ஏ

அடையாரில் ஒரு பெரிய கட்டடத்தின் முன்னால் நின்று கொண்டிருந்த மேக்னா அங்கிருந்த பெயர் பலகையில் இருந்த தனபாலனின் பெயரை வெறித்துப் பார்த்து கொண்டு நின்றாள்.

சிறு வயதில் தன் உற்ற தோழியை பிரிந்து இளம் வயதில் தனக்கு அன்னைக்கு மேலாக இருந்து தன்னை பார்த்து கொண்ட தன் ராணி அம்மாவைப் பிரிந்து தான் பட்ட கஷ்டங்களுக்கும், தன்னோடு ஆசிரமத்தில் இருந்த மற்றைய பெண்கள் பட்ட கஷ்டங்களுக்கும் இந்த ஒரு நபர் தானே காரணம் என்று எண்ணிப் பார்த்தவள் கண்களோ கோபத்தால் சிவக்க ஆரம்பித்தது.

வெகு சிரமப்பட்டு தன் கண்களை மூடிக்கொண்டு தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தவள் அந்த கட்டடத்திற்குள் தன் முதல் அடியை எடுத்து வைத்தாள்.

அவள் அன்று அங்கு வைத்த அந்த முதல் அடி தான் இன்று அவளின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட, அவளது வாழ்வில் விழுந்த முதல் அடி.

சுற்றிலும் அந்த கட்டடத்தை நோட்டம் விட்டபடியே உள் நுழைந்தவள் ரிஷப்சன் போன்று அமைக்கப்பட்டிருந்த ஒரு இடத்தில் ஒரு நபர் இருக்கவே அந்த இடத்தை நோக்கி நகர்ந்து சென்றாள்.

“ஸார்!” கதிரையில் சாய்ந்து பாதி உறக்கத்தில் தலை கவிழ்ந்து இருந்த அந்த நபரைப் பார்த்து தயக்கத்துடன் மேக்னா மேஜையில் தட்டி அழைக்க

அந்த நபரோ தன் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவாறே
“தலைவர்! வாழ்க! வாழ்க!” என்றவாறு எழுந்து நின்றார்.

மேக்னா அவரது செய்கையைப் பார்த்து சற்று சத்தமாக சிரிக்க சுற்றிலும் திரும்பி பார்த்து விட்டு தன் தலையில் தட்டி கொண்டவர் அவளது சிரிப்பு சத்தம் கேட்டு அவளை முறைத்து பார்த்தவாறே
“யாரும்மா நீ? உனக்கு என்ன வேணும்? இங்கே எதற்கு வந்த? டொனேஷன் எல்லாம் தர முடியாது கிளம்பு கிளம்பு” என்று கூறவும்

தன் சிரிப்பை தற்காலிகமாக கை விட்டவள்
“நான் எம்.எல்.ஏ தனபாலன் ஸாரை பார்க்கணும் அவர் தம்பி…” என்று கூற வரவும்
அவள் பேசுவதை நிறுத்துமாறு சைகை காட்டி விட்டு

அவளை மேலிருந்து கீழாக ஒரு தடவை பார்த்தவர்
“எதற்கு தலைவரை பார்க்கணும்? அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா?” என்று கேட்க அவளோ இல்லை என்பது போல மறுப்பாக தலை அசைத்தாள்.

“அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமல் தலைவர் யாரையும் பார்க்க மாட்டாரு நீங்க போகலாம்” அவளது பதிலை எதிர்பாராமல் அந்த நபர் மீண்டும் தன் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொள்ள

மறுபடியும் அந்த மேஜையின் மீது தட்டியவள்
“ப்ளீஸ் ஸார்! நான் ஒரு முக்கியமான விஷயமாக அவரைப் பார்க்கணும் ப்ளீஸ்!” கெஞ்சலாக கேட்க அந்த நபரோ அது எதுவும் தன் காதில் விழாதது போல கண்களை மூடி அமர்ந்திருந்தார்.

மீண்டும் மீண்டும் அந்த மேஜையின் மீது தட்டி மேக்னா அவரை அழைக்க அவள் அந்த கட்டடத்தில் உள் நுழைந்தது முதல் அந்த கணம் வரை அவளைப் பார்த்து கொண்டு நின்ற ஒரு வயதான நபர் அவளருகில் வந்து
“என்னம்மா ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்க

அத்தனை நேரமாக கண்களை மூடிக் கொண்டு இருந்த நபர் உடனே தன் கண்களை திறந்து கொண்டு
“யோவ்! பெரிசு தேவையில்லாத விஷயத்தில் தலையிடாமல் அந்த பக்கம் போ” என்று அந்த வயதான நபரை பார்த்து சத்தமிட்டு விட்டு

மேக்னாவின் புறம் திரும்பி
“ஏம்மா! உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? சும்மா வந்து நின்னு நேரத்தை வீணடிச்சுக்கிட்டு இருக்காமல் இங்கே இருந்து போம்மா” என்று கூற அவளோ அந்த இடத்தை விட்டு அசைய மாட்டேன் என்பது போல நின்று கொண்டிருந்தாள்.

“நான் தனபாலன் ஸாரை பார்த்தே ஆகணும்” மேக்னா உறுதியான குரலில் கூறி விட்டு உள்ளே நடந்து செல்ல போக

அவசரமாக அவள் முன்னால் வந்து நின்று கொண்ட அந்த நபர்
“ஏம்மா! யாரும்மா நீ? நான் சொல்லிட்டே இருக்கேன் நீ உன் பாட்டுக்கு உள்ளே போயிட்டே இருக்க முதல்ல இங்கே இருந்து போம்மா!” அவளது கையை பிடித்து அங்கிருந்து அனுப்பவதற்கு எத்தனிக்க

கோபமாக அந்த நபரின் கையை தட்டி விட்டவள்
“மேல கை வைக்குற வேலை எல்லாம் வேண்டாம் நான் தான் சொல்றேனே தனபாலன் ஸாரை நான் கண்டிப்பாக பார்த்தே ஆகணும் அவர் தம்பி சம்பந்தமாக பேசணும்” என்றவாறே முன்னால் செல்ல போக அந்த நபரோ அவளது வழியை மறித்தவாறு நின்று கொண்டிருந்தார்.

“ஏம்பா மாணிக்கம்! அந்த பொண்ணு தான் தலைவரோட தம்பியை பற்றி ஏதோ பேசணும்னு சொல்லுறா தானே! அதை என்னன்னு கேட்டு கொஞ்சம் தலைவர் கிட்ட கூட்டிட்டு போப்பா எதற்கு ஒரு பொண்ணு கிட்ட இப்படி வம்பு பண்ணுற?” அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டு நின்ற இன்னொரு நபரும் அவர்கள் அருகில் வர மேக்னா தன் முன்னால் நின்ற நபரை தயக்கத்துடன் நோக்கினாள்.

தன்னை சுற்றி நின்ற பலபேர் மேக்னாவிற்கு சாதகமாக பேசியதால் என்னவோ சற்று மனம் இளகிய அந்த நபர்
“சரி சரி முதல்ல என்ன விஷயம்னு கேட்டு சொல்லுங்க நான் தலைவர் கிட்ட போய் பேசி அனுமதி வாங்கிட்டு வர்றேன்” என்று கூறவும்

புன்னகையுடன் அந்த நபரை நிமிர்ந்து பார்த்தவள்
“ரொம்ப நன்றி அண்ணா!” என்று கூற

அந்த நபரோ வேறு எங்கோ பார்த்த வண்ணம்
“அண்ணே! முதல்ல என்ன விஷயம்னு சொல்ல சொல்லுங்கண்ணே” என்று கூறினார்.

“எம்.எல்.ஏ என் மேல ஒரு கம்ப்ளெயிண்ட் பண்ணி இருக்காங்க அது விஷயமாக அவர் கிட்ட கொஞ்சம் பேசணும்”

“கம்ப்ளெயிண்டா?” அவளை சுற்றி நின்ற அனைவரும் கேள்வியாக அவளை நோக்கவும்

அவர்கள் அனைவரையும் பார்த்து ஆமோதிப்பாக தலை அசைத்தவள்
“அவங்க தம்பியை அடித்ததற்காக கம்ப்ளெயிண்ட் பண்ணி இருக்காங்க” என்று கூற அங்கு நின்று கொண்டிருந்த அனைவரும் அதிர்ச்சியாக அவளை பார்த்து வாய் பிளந்து நின்றனர்.

“மேடம் ஐந்தே நிமிஷம் இங்கே இருங்க! நான் உடனே போய் தலைவர் கிட்ட சொல்லிட்டு வந்து உங்களை கூட்டிட்டு போறேன்” இத்தனை நேரமாக அவளை முறைத்து கொண்டு நின்ற அந்த நபர் இப்போது பவ்வியமாக கையை கட்டி நின்று அவளைப் பார்த்து கூறி விட்டு செல்ல மற்ற நபர்களும் அந்த இடத்தில் இருந்து சற்று விலகி நின்று தங்களுக்குள் ஜாடையாக மேக்னாவை சுட்டிக் காட்டி ஏதோ பேசியபடி நின்றனர்.

அவர்களது இந்த அமைதி அவள் எதிர்பாராதது அல்ல.

ஆனாலும் தன்னையே எல்லோரும் பார்த்து கொண்டிருப்பது ஏனோ அவளுக்கு சற்று உறுத்தலாகவே இருந்தது.

மேக்னாவிடம் இத்தனை நேரம் கோபமாக பேசிக் கொண்டிருந்த நபரோ தன் மனதிற்குள்
‘டேய்! மாணிக்கம்! உனக்கு ஆயுசு கெட்டி டா! இல்லைன்னா நீ பேசுன பேச்சுக்கு உன்னை அந்த பொண்ணு கைமா போட்டு இருப்பா தலைவர் தம்பியையே அந்த அடி அடிச்சு நார் நாராக தொங்க விட்டவ நம்ம சிக்கி இருந்தா ப்ப்ப்ப்பா! நினைத்து பார்க்கவே உடம்பெல்லாம் உதறுது!’ என புலம்பிக் கொண்டே படியேறி நடந்து சென்று ஒரு அறையின் முன்னால் தயங்கி நின்றார்.

‘அப்பா! கடவுளே! தலைவர் கோபத்தில் இல்லாமல் பார்த்துக்கோப்பா’ தன் கரங்கள் இரண்டையும் எடுத்து தலைக்கு மேல் கும்பிடு போட்டு கொண்டவர் மெல்ல அந்த அறைக் கதவை தட்டி விட்டு காத்து நிற்க சிறிது நேரத்தில் அந்த அறைக் கதவு திறக்கப்பட்டது.

உள்ளே சென்று பேசிவிட்டு வந்த அந்த நபர் தன் தோளில் கிடந்த துண்டால் தன் முகத்தை துடைத்து விட்டபடியே வேகமாக படியிறங்கி வந்து மேக்னாவை பார்த்து
“தலைவர் உங்களை மேலே வரச் சொன்னார்” என்று விட்டு செல்ல அவளும் தன் கண்களை ஒரு முறை இறுக மூடித் திறந்து விட்டு படியில் ஏறி நடக்கத் தொடங்கினாள்.

இத்தனை நாட்களாக யாரைப் பார்க்க கூடாது என்று எண்ணி இருந்தாலோ அந்த நபரை இன்று அவளாகவே தேடி சென்று பார்க்க வைத்து விட்டது அவளது விதி.

ராணி தனபாலனை பற்றி எச்சரித்த போதெல்லாம் அவளை அறியாமலே அவளது மனதிற்குள் வன்மம் ஒன்று வளர்ந்து வேரூன்றி இருந்து இருக்கிறது.

அது இப்போது தான் அவளை ஆட்டுவித்து கொண்டு இருக்கிறது என்று அவளுக்கு அன்று தனபாலனை நேரில் பார்த்த போது தான் புரிந்தது.

************************************************

மேக்னாவின் டைரியில் இருந்து….

‘ராணி அம்மா அன்றொரு நாள் நான் அவரை கோபமாக பேசிய போது அந்த தனபாலனால் அவர் பட்ட கஷ்டங்களை எல்லாம் என்னிடம் கூறினார்.

எங்கள் ஆசிரமத்திற்கு ஆரம்பித்தில் உதவுவது போல உள் நுழைந்து தன் தந்திரத்தால் பேசி பேசி பல குழந்தைகளை பல இலட்சம், கோடிகளுக்கு விற்று தருவதாக வார்த்தை ஜாலங்களால் எல்லோரையும் மயக்க பார்க்க ராணி அம்மாவோ அதற்கு சம்மதிக்கவில்லை.

அவர் அன்று அப்படி தனபாலனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு இருக்காவிட்டால் இன்று அவரிடம் மீதமிருந்த குழந்தைகளும் நெருப்போடு நெருப்பாகி சாம்பலாகி இருப்பர்.

ஏனெனில் அன்றே அந்த கொடூர மிருகமான தனபாலன் ஆசிரமத்தை தீ வைக்கப் பார்த்தான்.

தன்னை நம்பி இருக்கும் உயிர்களை காப்பாற்ற நினைத்ததால் என்னவோ அவனது மிரட்டலுக்கு கட்டுப்பட்டு ராணி அம்மா அவனது கட்டளைக்கு அடிபணிந்து போனார்.

முதல் ஒன்றிரண்டு குழந்தைகள் ஆசிரமத்தில் இருந்து சென்ற போது அந்த குற்றவுணர்ச்சி அவரை கொல்லாமல் கொன்றது ஆதலால் அவசரமாக அந்த குழந்தைகளை வாங்கியவர்களை சென்று சந்தித்தவர் தன்னிடம் கொடுத்த பணத்தை திருப்பி அவர்களிடமே கொடுத்து விட்டு குழந்தைகளை தன்னிடமே திரும்பி அனுப்ப சொல்லி கேட்க அடுத்த நாளே தனபாலன் ராணி அம்மா முன்னால் வெறி கொண்ட சிங்கமாக வந்து நின்றான்.

அவனது தோற்றத்திலும், மிரட்டலிலும் பயந்து போன ராணி அம்மா இரண்டு, மூன்று மாதங்கள் அமைதியாக வேறு திட்டம் தீட்டத் தொடங்கினார்.

தன் குற்ற உணர்வால் மீதமுள்ள குழந்தைகளுக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று எண்ணி பயந்தவர் அமைதியாக தனபாலன் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பது போல நடக்க ஆரம்பித்தார்.

தனபாலனிற்கு பணம் வேண்டும் அதற்காக இந்த குழந்தைகளை எல்லாம் பலியாடாக மாற்றி கொண்டு இருந்தான்.

இரண்டு, மூன்று மாதங்களாக அவன் கொடுத்த பணத்தை தொடாமல் கிடப்பிலேயே போட்டு வைத்தவர் அவருக்கு தெரிந்த நபர்களிடம் பேசி, கெஞ்சி தனபாலன் ஊடாக அவர் பொறுப்பில் இருந்த குழந்தைகளை விற்பது போல செய்து அவருக்கு தெரிந்த வேறு வேறு ஊர்களில் உள்ள ஆசிரமத்தில் சேர்த்து கொள்ள செய்தார்.

இந்த உண்மை நான் அவரிடம் கோபமாக சண்டை போடும் வரை அவருக்கு மாத்திரமே தெரியும்.

தனபாலனால் தான் நான் என் சகோதரி போல பழகிய என் ப்ரியாவை இழந்தேன்.

ப்ரியா மட்டுமல்ல இன்னும் இன்னும் பல குழந்தைகள்.

இதற்கு எல்லாம் காரணம் அந்த தனபாலன் என்று எண்ணும் போதே என் மனதிற்குள் வன்மம் உருவானது போல நான் தான் அதை கவனிக்காமல் விட்டு விட்டேன்.

ஆனால் அன்று என் மேல் கொடுத்த கம்ப்ளெயிண்டிற்காக அவனைத் தேடி சென்ற போது தான் என் வாழ்க்கையின் உண்மையான ஆட்டமே எனக்கு புரிந்தது.

தனபாலனின் அறைக் கதவை தட்டி விட்டு அந்த கதவு திறக்கப்படும் ஒவ்வொரு நொடியையும் மனதிற்குள் வன்மமாக மாற்றிக் கொண்டே நின்றேன் என்னை அறியாமல்.

அந்த அறைக் கதவு திறக்கப்பட்டது மனதை திடப்படுத்திக் கொண்டு நான் உள் நுழைய என்னைப் பார்த்ததுமே அந்த தனபாலன் முகத்தில் ஷாக் அடித்தாற் போல அத்தனை பாரதூரமான அதிர்ச்சி!

அந்த அதிர்ச்சியான முகத்தை பார்த்ததுமே என் மனதிற்குள் எல்லையில்லா ஆனந்தம் கரை புரண்டது.

என் மனதிற்குள் பொங்கிப் பெருகிய வெற்றிக் களிப்புடன் நான் உள்ளே செல்ல தனபாலன் முன்னால் இருந்த அந்த நபரோ என் புறமாக திரும்பி பார்த்தார்.

அந்த முகம்!

அந்த முகம்!

வாழ்வில் நான் மறக்க முடியாத மறக்க கூடாத ஒரு முகம்!

அங்கே அந்த இடத்தில் அந்த நபரை நான் பார்க்கக்கூடும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

சிறிது நேரத்திற்கு முன்னர் என் மனதிற்குள் எழுந்த பேரானந்தம் இப்போது சட்டென்று காணாமல் போக தனபாலன் என்னைப் பார்த்து அடைந்த அதிர்ச்சியிலும் பன்மடங்கு அதிர்ச்சி எனக்குள் வந்து சேர்ந்தது.

தனபாலன் என்னைப் பார்த்து அதிர்ச்சியாக நான் அந்த நபரை பார்த்து அதிர்ச்சியாக அந்த நபரோ எங்கள் இருவரையும் அதிர்ச்சியாக பார்த்து கொண்டு நின்றார்.

காலம் என்னும் பகடை ஆட்டத்தை தனபாலனை வைத்து நான் ஆரம்பிக்க காத்திருக்க அந்த விதியோ என்னைப் பகடை காயாக மாற்றி தன் ஆட்டத்தை அன்று ஆரம்பித்து வைத்தது’
சித்தார்த் மும்முரமாக மேக்னா எழுதிய கூற்றை எல்லாம் படித்து கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சரியாக அவனது தொலைபேசியும் ஒலித்தது.

“ப்ச்! யாருப்பா இது? நல்ல இன்ட்ரஸ்டிங்கான இடத்தில் தொல்லை பண்ணுறது?” சலிப்புடன் தன் போனை எடுத்து பார்த்தவன் திரையில் ஒளிர்ந்த தன் அன்னையின் எண்ணைப் பார்த்து விட்டு

“அம்மா எதற்கு இப்போ போன் பண்ணுறாங்க?” என்றவாறே கடிகாரத்தை திருப்பி பார்க்க அதுவோ நள்ளிரவு பன்னிரண்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

“அய்யய்யோ!” தன் தலையில் தட்டிக் கொண்டே அவசரமாக தான் படித்துக் கொண்டிருந்த டைரியை மூடி தன் காலருகில் இருந்த பெட்டிக்குள் போட்டு மூடியவன் தன் தொலைபேசியை எடுத்து யசோதாவின் அழைப்பை எடுத்தான்.

“டேய் சித்தார்த்! எங்கே டா இருக்க? மணி என்னன்னு பார்த்தியா? வீட்டுக்கு வர நேரமாகும்னா அதையாவது சொல்லலாம் இல்லை?”

“அம்மா! அம்மா! ஸாரி ம்மா! ஒரு கேசைப் பற்றி படிச்சுட்டு இருந்தேன் நேரம் போனதே தெரியலை இதோ இப்போ கிளம்பிட்டேன்” யசோதாவிடம் பேசி கொண்டே மேக்னா கொடுத்த பெட்டியை தன்னறைக்குள் இருந்த கப்போர்டில் வைத்து பூட்டியவன் அந்த அறைக்குள் இருந்து வெளியே வர வந்தான்.

“அப்படி என்ன கேஸோ? நேரம், காலம் தெரியாமல்! சரி சரி நேரம் ஆகிடுச்சுன்னு அவசரமாக வராமல் பார்த்து பொறுமையாக வா”

“சரி ம்மா இதோ கிளம்பிட்டேன்” தன் தொலைபேசியை அணைத்து பேண்ட் பாக்கெட்டில் போட்டு விட்டு பைக் சாவியை சுழற்றிக் கொண்டே நடந்து வந்தவன் தன் மேஜையின் மீது கிடந்த ஒரு புகைப்படத்தை பார்த்து விட்டு யோசனையோடு அதை எடுத்துப் பார்த்தான்.

நன்கு செக்கச்செவேல் என்ற நிறத்தில் குண்டு கன்னங்களோடு கொலு கொலுவென்று ஒரு குழந்தை ஒரு தம்பதிக்கு நடுவில் நின்று கொண்டிருந்தாள்.

“யாரோட போட்டோ இது?” குழப்பத்துடன் அந்த புகைப்படத்தை திருப்பி பார்த்தவன் அதில் எதுவும் இல்லாது போகவே

“நாளைக்கு வந்து கேட்போம்” என்று எண்ணியபடி அதை தன் சட்டைப் பாக்கெட்டில் போட்டு கொண்டு தன் வண்டியை நோக்கி சென்றான்.

வீதியில் பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லாததால் வழக்கமாக வீட்டுக்கு வந்து சேர எடுக்கும் நேரத்தை விட ஐந்து நிமிடம் குறைவாக எடுத்து இருக்க வாசலிலேயே அவனது வருகைக்காக காத்திருந்த யசோதா
“சொல்ல சொல்ல கேட்காமல் வேகமாக வந்து இருக்க இல்லையா?” தன் இடுப்பில் கை வைத்து சற்று கோபமாக கேட்பது போல கேட்க

“அய்யோ! அம்மா! எப்படி டைமிங் பார்த்து வைத்து இருக்கீங்க? சான்ஸே இல்லை! சரி சரி முதல்ல உள்ளே வந்து சாப்பாடு எடுத்து வைங்க” அவரது தோளில் கை போட்டபடி அவரை உள்ளே அழைத்து சென்றவன் அவரது கன்னத்தில் முத்தமிட்டு விட்டு தன்னறைக்குள் புகுந்து கொண்டான்.

“சரியான வாலுப் போலீஸ்!” புன்னகையுடன் தன் மகனைப் பார்த்து கொண்டு நின்றவர் அவனுக்கான இரவுணவை எடுத்து வைக்க சிறிது நேரம் அவருடன் பேசிய படியே சாப்பிட்டு முடித்தவன் காலையில் இருந்து பல மன நிலைகளுக்குள் மாட்டிக்கொண்டு தவித்ததால் என்னவோ கட்டிலில் விழுந்த அடுத்த நொடியே உறங்கிப் போனான்.

கனவிலும் மேக்னா தன்னையே சுற்றி சுற்றி வருவது போல இருக்க தூக்க கலக்கத்திலும் அவன் முகத்தில் மந்தகாசப் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

இதழில் தவழ்ந்த புன்னகையோடு சித்தார்த் தூக்கத்தில் மறுபுறம் புரண்டு படுக்க அங்கே மேக்னா சுவற்றில் சாய்ந்த வண்ணம் அவனைப் பார்த்து புன்னகையோடு நின்று கொண்டிருந்தாள்.

சூரியன் மெல்ல மெல்ல உயர்ந்து தன் வெளிச்சத்தை பரவ ஆரம்பித்து இருக்க அந்த வெளிச்சம் பட்டு அவள் மேனி தங்கம் போல ஜொலிக்க ஆரம்பித்தது.

சித்தார்த் தன்னிலை மறந்து
“மேக்னா!” என்றவாறே அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஒன்று சேர அவளையே பார்த்துக் கொண்டு கட்டிலில் இருந்து எழுந்து அமர அவளோ கண்ணிமைக்கும் நொடியில் மறைந்து போய் இருந்தாள்.

“சே! கனவிலும் அவ தானா? என்ன கொடுமை கடவுளே இது? மறக்க நினைத்தாலும் விட்டு போக மாட்டேங்குறாளே!” மனதிற்குள் புலம்பியபடி மறுபடியும் கட்டிலில் விழுந்தவன் போர்வையை இழுத்து தலை வரை போர்த்திக் கொண்டு தன் தூக்கத்தை தொடர மறுபுறம் அவனது அறையை சுத்தம் செய்வதற்காக வந்த யசோதா ஒவ்வொரு இடமாக சுத்தம் செய்து கொண்டு நின்றார்.

“இத்தனை வயசாகியும் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை எல்லாவற்றையும் கண்ட கண்ட இடத்தில் அப்படியே போட்டு வைத்து இருக்கான்” முணுமுணுத்தபடியே சித்தார்த்தின் உடைகளை எல்லாம் கையில் எடுத்தவர் அதில் இருந்து ஒரு காகிதம் போல ஒன்று விழவே யோசனையுடன் அதை கையில் எடுத்தார்.

“போட்டோ மாதிரி இருக்கே!” ஆர்வத்துடன் அந்த புகைப்படத்தை திருப்பி அதில் நின்ற நபர்களை பார்த்தவர் கண்களோ அதிர்ச்சியில் அந்த புகைப்படத்திலேயே நிலை குத்தி நின்றது.

“சித்தார்த்!” யசோதா அதிர்ச்சியில் தன்னை மறந்து சத்தமிட ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த சித்தார்த் பதட்டத்துடன் எழுந்து பார்க்க அவரோ அதிர்ச்சியில் சிலையென உறைந்து போய் நின்று கொண்டிருந்தார்…….

error: Content is protected !!