Kannan Raathai – 24

அத்தியாயம் – 24

மறுநாள் காலை வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமே எழுந்துவிட்ட மது கிருஷ்ணா கண்விழிக்கும் முன்னே சமையலை எல்லாம் முடித்து கணவன் முதல் முறை தனக்கென்று தேர்வு செய்த புடவையை உடுத்தி கண்ணாடி முன்னாடி நின்று வேகமாக ஒப்பனைகளை முடித்துவிட்டு அவள் நெற்றியில் குங்குமம் வைக்கும்போது கண்விழித்தான்.

அவள் தனக்கு முன்னே தயாராகி நிற்பதைக் கண்டதும், “ஹே மது என்ன இது நான் எடுத்துகொடுத்த சேலையில் நிற்கிற”  எழுந்து அவளின் அருகே  வந்தவன் அவளின் இடையோடு கரம்கொடுத்து இறுகிணைத்து அவளின் கழுத்தில் முகம் புதைக்க அவனே அறியாதபடி மெல்ல அவளிடமிருந்து விலகினாள்.

அது அவனின் மனதில் அடியாக விழ, “இப்போ எதுக்கு நீ இப்படி விலகிற” என்றான் எரிச்சலோடு.

‘நம்ம பாலாவைப் பார்க்க போறோம் கிருஷ்ணா. பிளீஸ் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பு’ அவள் அவனைக் குளியலறை பக்கம் திருப்பிவிட, “என்னைவிட அவன் ரொம்ப முக்கியமா?” அவனின் கேள்வியில் பொறாமையை கண்டு அவளுக்கு சிரிப்பு வந்த போதும் அதை அடக்கி அமைதியாக நின்றாள்.

சிலநொடி அவளை கேள்வியாக நோக்கிய கிருஷ்ணா, “என்னை பற்றி நல்லா தெரிஞ்சு வெச்சிட்டு வேணுமென்றே நீ இப்படியெல்லாம் பண்ற மது” என்றவன் துண்டை காலையில் எடுத்துகொண்டு குளியலறைக்குள் நுழைந்தவனின் மனதில் கோபம் இருந்தது.

நான் எடுத்துகொடுத்த சேலையைக் கட்டிட்டு கண்ணு முன்னாடி நின்றவளை கட்டியணைத்தது ஒரு குத்தமா? ரொம்பத்தான் பண்றா. என்னோட பொண்டாட்டி எனக்காக மட்டும் தான் தன்னை அழகுபடுத்திக்கணும் அதை நான் அணு அணுவாக ரசிக்கணும் என்று நினைப்பது என்னோட தப்பா?

அந்த எண்ணத்துடன் குளித்துவிட்டு அவன் வெளியே வரும்போது, ஜானு, மது, விஷ்ணு மூவரும் டைனிங் ஹாலில் பேசுவது காதில் விழுக கோபத்துடன் உடையை மாற்றிவிட்டு அவன் கண்ணாடி முன்னாடி நின்று தலையை வாரிட அந்த அறைக்குள் நுழைந்தாள் மது.

கிருஷ்ணா இருந்த கோபத்தில் அவளை கண்டுகொள்ளாமல் அவன் வேலையில் கவனமாக இருக்க அவனின் முன்னாடி சென்று நின்றவள், ‘எனக்கு இந்த சேலை அழகாக இருக்கா? பாலாவுக்கு இந்த கலர் ரொம்ப பிடிக்கும். அதான் இது கட்டினேன்’ என்றாள் இதழசைவில்.

அவளை ஏற இறங்க பார்க்க கோவிலில் வைத்திருக்கும் தங்க விக்ரகம் கூட இவளின் முன்னே தோற்று போகும் என்று மனம் சொன்னபோதும், “எனக்கு இந்த கலர் பிடிக்கல” என்றான் கவனமாக.

‘அப்போ ஓகே நான் இந்த சேலையில் போறேன்’ என்ற மது பூவை எடுத்து அவனிடம் கொடுக்க, ‘முல்லை பூ பாலாவிற்கு ரொம்ப பிடிக்கும்’ என்றாள் அவனின் கோபத்தை தூண்டி விடுவது என்ற எண்ணத்துடன்.

அவனோ அவளின் கையில் இருந்த பூவை வாங்கி கசக்கி எறிந்துவிட்டு பால்கனிக்கு சென்றவன் ஒரு ரோஜாவை பறித்து வந்து, “இதை வெச்சிட்டு போ நல்லா இருக்கும். எனக்கு முல்லை பூ பிடிக்கல” என்றான்

அப்போது தான் அவனின் முகத்தைக் கூர்ந்து கவனித்த மதுவிற்கு அவனின் மனம் புரிந்துபோக, ‘எந்த கணவனுக்கும் இவன் மாதிரி பொறாமை வரும்தானே’ என்று மனதிற்குள் நினைத்தவள் வேண்டுமென்றே,

‘எனக்கு கூடத்தான் நீ என்னோட லிப்ஸ் ல பண்ற கிஸ் பிடிக்கல. அதுக்கு நான் வேண்டான்னு சொல்ல முடியுமா’ என்றாள் இதழசைவில் கூறியவளின் விழிகள் அவனின் மீது நிலைத்தது.

அடுத்தநிமிடம் அவளின் கரம்பிடித்து அருகே இழுத்த கிருஷ்ணா அவளின் இதழில் தன் இதழைப் பதிக்க அவனுக்குமே அப்போது அந்த முத்தம் தேவையாக இருந்தது. அவள் பாலாவை பார்க்க செல்கிறேன் என்று சொன்னபோது அவனின் மனதில் தோன்றாத பயம் இப்போது அவனின் மனதில் தோன்றியது.

அவளும் அவனின் இதழ் முத்தத்தை ரசித்து கிறக்கத்துடன் விழிமூட அவளிடமிருந்து விலகினான். அவனின் தோளில் தன் கரங்களை மாலையாக போட்டு அவனை வளைத்தவள், ‘கிருஷ்ணா எதுக்கு இப்படி பயப்படற. நான் இன்னைக்கு பாலாவை பார்த்துட்டு வந்துவிடுவேன். இனிமேல் அவனை பார்க்க போறேன்னு உன்னிடம் கேட்கவே மாட்டேன். இன்னைக்கு இந்த பாலாவிற்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கணும் கண்ணா. என் செல்லம் இல்ல சமத்தா நல்ல பிள்ளையா என்னை கொண்டுபோய் போக்கே ஷாப்பில் இறக்கிவிடுங்க’ என்றாள்.

அவளின் இதழசைவில் அவளின் மனம் புரிந்ததும், “மது நான் உன்னை சந்தேகப்படல. என்னவோ காலையில் நீ என்னை விலகியது மனசு ஏத்துகல” என்றான் அவளின் கன்னத்தை வருடியபடி.

அவளின் பேச்சில் அவளின் உதட்டில் புன்னகை அரும்பிட, ‘அட மக்கு புருஷா நான் பாலாவை பார்த்துட்டு வந்தால் தானே நம்ம லைப் ஸ்டார்ட் பண்ண முடியும். இப்போவே ஒரு வருஷம் வேஸ்ட் பண்ணிருக்கோம்’ என்றாள் கன்னங்கள் இரண்டும் சிவக்க வெக்கத்துடன்.

தன்னுடைய கணவனிடம் தானே என்ற தைரியத்தில் அவள் வாயடிக்க அவளின் பேச்சில் அவனின் மனம் துள்ளிட, “உனக்காக நான் காத்திருப்பேன் மது. ஒரு வருஷம் வேஸ்ட் பண்ண என்ன? அதுக்கு சேர்ந்து இராப்பகலாய் உழைக்கலாம்” என்று சொல்லி அவளின் இன்னும் சிவக்க வைத்தான்.

‘அதையும் பார்க்கலாமே’ என்று அவனின் மீசையை முறுக்கிவிட்டு மீண்டும் அவனின் கன்னத்தில் இதழ் பதித்து நிமிர, “டேய் கிருஷ்ணா நீ அப்புறம் ரோமன்ஸ் பண்ணு இப்போ இருவரும் வெளியே வாங்க. உங்க வீட்டுக்கு விருந்தாளியாக வந்த என்னை அடிக்கணும்” என்றவன் குரல்கேட்டு இருவரும் விலக மது தன்னுடைய படபடப்பை மறைத்துக்கொண்டு அறையைத் திறந்து வெளியே சென்றாள்.

அவளின் பின்னோடு கிருஷ்ணா வர, “பாரு ஜானு என்னை ரோமன்ஸ் பண்ண விடாமல் வம்பு இழுக்கிறான். இவனை ஒரு கடி கடிச்சு வை” என்று கிளியிடம் அவன் குறும்புடன் கூற அது புரியாமல் நிற்க விஷ்ணு சிரித்தான்.

“நீ சொன்ன உடனே உன் ஜானு கேட்பாளா” என்றவன் கேலி பேச ஜானுவிற்கு என்ன புரிந்ததோ தன்னை தொட வந்த விஷ்ணுவின் விரலை நறுக்கென்று கடிக்க, “அம்மா” என்று அலறினான்.

“ஜானு என்னோட செல்லம். நான் சொன்னதும் கடிச்சா பார்த்தியா” என்று கிருஷ்ணா வாய்விட்டு சிரிக்க கையை ஆராய்ந்த விஷ்ணு தங்கையை முறைத்துவிட்டு, “நல்ல புருஷன் நல்ல கிளி. இரண்டுமே உன்னை மாதிரியே இருக்கு மது” என்றான் கோபத்துடன்.

‘அது குழந்தை மாதிரி நீதான் ஏதாவது பண்ணிருப்ப’ என்றவளை விஷ்ணு முறைக்க இருவரும் சண்டை போடுவதை பார்த்து கிளிக்கு சாரி சொல்ல இரண்டு மூன்று முறை சொல்லி கொடுத்தான்.

இருவரும் இடையே வந்து நின்ற ஜானு, “சாரி” என்று சொல்லிவிட்டு சிறகு இரண்டையும் தூக்கிக்கொண்டு நடக்க விஷ்ணு வியப்பில் வாயைப் பிளந்தான்.

“அடப்பாவி நல்ல ட்ரைனிங் கொடுத்து வெச்சுருக்கடா” என்று மூவரும் பேசியபடி சாப்பிட்டு முடிக்க விஷ்ணு ஒரு வேலை விசயமாக வெளியே செல்ல இவர்கள் இருவரும் அண்ணனிடம் விவரம் சொல்லிவிட்டு பைக்கில் கிளம்பினர்.

இருவரின் அந்த பைக் பயணம் அழகாக இருக்க ஒரு போக்கே ஷாப் முன்னே மனைவியை இறக்கிவிட்டுவிட்டு, “மது சீக்கிரம் போய் பார்த்துட்டு வந்துவிடு. நான் ஆபீஸ் போறேன் வர லேட் ஆனாலும் ஆகலாம்” என்றவன் மனைவியிடம் விடைபெற்று பைக்கில் கிளம்பிச் சென்றான்.

அவள் போக்கே வாங்கிவிட்டு அந்த ரேடியோ ஸ்டேஷன் இருக்கும் காம்பிளக்ஸ் சென்றாள். அவள் அங்கே செல்லும்போதே ஒரு மணிநேரம் தாமாகிவிட மனம் பதட்டமாக இருந்த போதும், ‘எப்படியும் இன்னைக்கு அவனை சந்திக்காமல் போக கூடாது என்ற முடிவுடன்’ அவள் படிக்கட்டில் நான்காவது மாடிக்கு சென்று ரிஷப்ஷன் பெண்ணிடம் தான் வந்தவிவரம் சொல்லி கேட்டாள்.

“ஓ நீங்க அன்னைக்கு வந்த மதுதானே. வாங்க மேடம் உட்காருங்க. பாலா சார் வேலையில் ஜாயின் பண்ணிட்டார். ஆனால் இன்னைக்கு இன்னொரு ஆர்.ஜே. வராத காரணத்தால் அந்த சோ அவர் பண்றார். எப்படியும் இன்னும் ஒரு மணிநேரம் வெயிட் பண்ணனும். உங்களால் முடியுமென்றால் இங்கே இருங்க” அந்த பெண் தெளிவான விளக்கம் கொடுக்கமதுவும் தான் காத்திருப்பதாக தன்னுடைய மொபைலில் டைப் பண்ணி காட்டிவிட்டு அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்தாள்.

அப்போது ஒரு சிறிய இடைவெளியின் போது அவனின் கேபினுக்குள் நுழைந்த டீன், “ஹாய் பாலா. சாரி இந்த ஆர்.ஜே. ரகுபதி இன்னைக்கு வரம்மாட்டார். அவர் மனைவிக்கு ரொம்ப முடியல எமர்ஜென்சி வேலையாக போயிருக்கார். சோ இந்த இரண்டு பிரோகிராம் நீயே பண்ணிருப்பா” என்றார்.

பாலா பளிச்சென்ற புன்னகையுடன் அவரின் பக்கம் திரும்பி, “இட்ஸ் ஓகே சார். நான் பார்த்துகிறேன். நீங்க ரகுபதியிடம் போன் பண்ணி டென்ஷன் ஆக வேண்டான்னு சொல்லுங்க” என்றான் புரிதலோடு வேறொரு பாடலை ஒலிபரப்பியபடி.

“நீ வேலைக்கு வந்த அன்றே உனக்கு நிறைய வேலை தரேன் சாரிப்பா?” என்றார்.

“சார் இதில் என்ன இருக்கு ஐ வில் மேனேஜ்” என்றான் புன்னகை மாறாத முகத்துடன்.

“உன்னைப் பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்கு பாலா” என்றவரின் குரலைகேட்டதும், “சார் நம்ம அப்புறம் பேசலாம் வேலை இருக்கு” என்பதோடு அவன் தன் கவனத்தை வேலையில் திருப்பிவிட்டான்.

அவர் அவனின் தோளில் தட்டிகொடுத்துவிட்டு வெளியே செல்ல, “ஹாய் திஸ் சைனிங் ஆஃப் ஆர். ஜே. பாலா” என்றவன் வேலையை தொடர அவர் சொன்னதை மறந்தே போனான்.

அடுத்த ஒரு மணிநேரம் மின்னல் வேகத்தில் சென்று மறைய ஆறு பாடல்கள், நான்கு முறை விளம்பரம், பத்து நிமிஷம் பேச்சு என்று நேரம் சென்றதே தெரியவில்லை அவனுக்கு.

அப்போது கையில் காபியுடன் வந்த ஷைலஜா, “பாலா என்ன வந்த அன்றே வேலை அதிகம் போல” என்றவள் அவனிடம் காபி கப்பைக் கொடுக்க அவனும் ஒப்புதலாக தலையசைத்துவிட்டு கண்ணாடியின் அருகே சென்று நின்றான். அப்போது சோபாவில் அமர்ந்திருந்தவளைப் பார்த்ததும்,

“யாரு சைலு அது. ரொம்ப நேரமாக வெயிட் பண்றாங்க” அவன் காபியைப் பருகியபடியே கேட்க அப்போதுதான் தலையில் அடித்துகொண்டவள்,

“ஸாரி பாலா சொல்ல மறந்துட்டேன். அவங்க மதுமதி உன்னைப் பார்க்கத்தான் வெயிட் பண்றாங்க. கிட்டதட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் அவங்க உன்னோட குரலுக்கு தீவிர ரசிகை தெரியுமா” என்றவள் மது இரண்டு முறை தன்னை தேடி வந்ததையும் கூறினாள்.

“அவங்களைப் பார்த்த குடும்பத்தில் இருக்கிற பொண்ணு மாதிரி இருக்கு. அவங்களை வெயிட் பண்ண வேண்டான்னு சொல்லு. எனக்கு நிறைய வேலை இருக்கு. இன்னும் இரண்டு மணி நேரம் பிரோகிராம் இருக்கு. அதுக்கு மேல நம்மளால் பேச முடியாது சாமி” என்று அவளைக் கையெடுத்துக் கும்பிட்டான்.

“டேய் உன்னை பார்க்க தேவதை மாதிரி ஒரு பொண்ணு வந்திருக்கிற, நீ என்னடா இப்படி சொல்ற” என்றாள் சலிப்புடன்.

“தேவதை மாதிரி வந்தாலும் இப்போ எனக்கு நேரம் இல்லம்மா. வேண்டுமென்றால் நாளைக்கு சந்திக்கிறேன் அவங்களை வர சொல்லு” என்றவன் தொடர்ந்து, “எங்க வீட்டில் தெரிஞ்சுது அம்மா தொலை உரிச்சு உப்பை தடவிருவாங்க. நீ என்னை வம்பில் மாட்டிவிடாதே” என்றான் குறும்பாக சிரித்தபடி.

“வழக்கமாக பொண்ணுங்க நாங்கதான் பயப்படுவோம். இப்போ என்ன நீ பயப்படற” என்றாள் கேள்வியாக புருவம் உயர்த்தி.

“நாங்க எல்லாம் கொஞ்சம் கௌரவம் உள்ள குடும்பம். அதனால் கொஞ்சம் ஊரு உலகத்திற்கு பயப்பட வேணும் தாயே” என்றான்.

“போடா ரசனை இல்லாதவனே. நமக்கு வருவது எல்லாம் வத்தலும் தொத்துலுமா வருது” என்று அவள் புலம்பியபடி வெளியே செல்ல, “கரசி மாதிரி காத்தினால் அப்படித்தான் வரும் சைலு” என்று சொல்ல அவளோ அவனை முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அதன்பிறகு அவன் அந்த பெண் வந்ததை மறந்துவிட்டு வேலையைத் தொடரந்தான். சைலு சென்று மதுவிடம் பாலா சொன்னதை கூறியதும், ‘அவரை இன்னைக்கு பார்க்க முடியாதா?’ என்று கேட்க அவள் காரணத்தை தெளிவாக கூறினாள். அதைக்கேட்டதும் மதுவின் முகம் சட்டென்று வாடிவிட “நீங்க நாளைக்கு வாங்க” என்றாள்.

‘இல்லங்க இன்னைக்கு பார்க்கலாம் என்று வந்தேன். நாளைக்கு என்னால் வர முடியாது. எங்க வீட்டில் அதுக்கு விடமாட்டாங்க’ என்று அவள் செல்லில் டைப்பண்ணி ஷைலுவிடம் காட்டினாள்.

“அது என்னங்க இன்னைக்கே பார்க்க வேண்டுமேன்ற பிடிவாதம்” என்று சிரிக்க, ‘எனிவே அவரின் குரலை மட்டும்தான் நான் ரசிச்சேன். என்றுமே அவரோட ரசிகை நான். எங்கோ ஒரு மூலையில் அவரோட குரலை கேட்டுட்டே இருந்துப்பேன்’ என்று கூறிவிட்டு அவள் நகர்ந்தாள்.

ஷைலு அவளின் கையிலிருந்த போக்கேவை காட்டி, “இதையாவது கொடுங்க நான் பாலாவிடம் கொடுக்கிறேன்” என்றாள். மறுப்பாக தலையசைத்துவிட்டு அறையின் கதவுகளை திறந்து சென்றுவிட சைலு எதுவும் பேசாமல் தன்னுடைய வேலையைக் கவனிக்க சென்றாள்.

கிருஷ்ணா தன்னுடைய வேலையை முடித்துவிட்டு ஆபிசில் இருந்த கடிகாரத்தை பார்த்துவிட்டு மாலை வீட்டிற்கு கிளம்பும்போது மதுவிற்கு போன் செய்ய நினைக்கும்போது அவனுக்கு ஒரு குறுந்தகவல் வந்திருந்தது.

‘கிருஷ்ணா நான் பார்க்கில் இருக்கேன்’ என்று வந்திருக்க அவன் பைக் சாவியை எடுத்துகொண்டு அங்கிருந்து கிளம்பினான். அவன் பார்க் முன்னே பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே நுழைய பார்வையால் தன்னவளை தேடினான்.

அப்போது தூரத்தில் நின்றிருந்த மதுவைப் பார்த்து அவன் அவளின் அருகே செல்ல அவளோ தன்னுடைய கையால் புல்லாங்குழல் வாசிப்பது போல காட்டியபிறகு உச்சியில் மயிலிரை வருடிவிடுவது போல கையைக் காட்டி, ‘கிருஷ்ணா’ என்றாள்

பிறகு அவளின் நெஞ்சை ஒரு விரலால் தொட்டு காட்டி, ‘ஐ’ என்றாள்.

மீண்டும் இரண்டு கரத்தையும் இணைத்து ஹார்ட்டை உருவாக்கிட, ‘லவ்’ என்றாள்.

இறுதியாக அவனை நோக்கி ஆள் காட்டி விரலைக் காட்டி, ‘யூ’ என்றதும் கிருஷ்ணா சிலகில்லாமல் வானத்தில் பறந்தான். அவன் அவளை நெருக்கும் போது அங்கே குழந்தை கிருஷ்ணனின் வேடத்தில் நின்ற சிறுவனை கண்டதும் அவனின் முகம் காற்று போன பலூன் போலானது.

அதுவரை இருந்த மகிழ்ச்சி சென்ற இடம் தெரியாமல் சென்று மறைய மெல்ல அவளை நெருங்கினான்.

“மது இந்த பையனுக்கு தான் இப்போ நீ ஐ லவ் யூ சொன்னீயா” என்றான் அவளைப் பார்த்தபடி

‘ஆமா கிருஷ்ணா ரொம்ப அழகாக இருக்கான் இல்ல’ என்றவள் அப்போதுதான் அவனை கேள்வியாக நோக்கினாள். அப்போது அவனின் எதிர்ப்பார்ப்பு புரிந்தாலும் அவள் மனம் திறந்து பேசவில்லை.

அவன் முகம் வாடிப்போக, “பாலாவைப் பார்த்தியா?” என்று பேச்சை மாற்றிட அவளோ, ‘இல்லை’ என்று சொல்லி அங்கே நடந்ததை சொல்லிவிட்டு, ‘இனிமேல் நான் பாலாவைப் பார்க்க போகவே மாட்டேன் கிருஷ்ணா. இதுதான் முதலும் கடைசியும்’ என்றவள் அவனின் கரம்பிடிக்க யாரும் அறியாதபடி அவளின் நெற்றியில் இதழ் ஒற்றி எடுத்தான்.

அதன்பிறகு கிருஷ்ணாவின் மனம் நிம்மதியடைய இருவரும் வீடு நோக்கி பயணித்தனர்.