Rainbow kanavugal-38

38

காதல், அன்பு, பாசம் போன்ற உணர்வுகள் மீதுதான்  மனிதமனங்கள் ஆதாரப்பட்ட கிடக்கின்றன. இந்த உணர்வுகள்தான் ஒவ்வொரு மனிதனின் பலம் பலவீனங்களையும் கூட தீர்மானிக்கின்றன.

அந்த உணர்வுகள் மீதும் அந்த உணர்வுகளின் மீதான நம்பிக்கையின் மீதும் அடி விழும் போது எத்தனை மனஉறுதி கொண்டவளானாலும் அவள் பலவீனப்பட்டுதான் போவாள்.

மதுபாலாவும் அவ்விதமாக தன் மனஉறுதியும் தைரியமும் உடைந்து தளர்ந்து போயிருந்தாள்.

சற்று முன்பு அஜயிற்கு அவளுக்கும் கைபேசியில் நடந்த காரசாரமான விவாதம்தான் அவளின் இந்த நிலைக்கு காரணம்!

“உனக்கும் சுரேஷ் கொலைக்கும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்கா அஜய்?” நேரடியாக தன் கணவனிடம் இந்த கேள்வியை அவள் கேட்ட மறுகணமே அவன் எரிமலையாக பொங்கினான்.

“என்னடி பிரச்சனை உனக்கு? இப்ப எதுக்கு இந்த விஷயத்தை விடாம பிடிச்சு தொங்கிட்டு இருக்க நீ” என்று சீற்றமாக கத்தியவன்,

“என்னதான் நினைச்சிகிட்டு இருக்க உன் மனசுல… வீட்டுல யார்கிட்டயும் சொல்லாம நீ பாட்டுக்கு உங்க அம்மா வீட்டுக்கு கிளம்பி போயிருக்க… அதுவும் இபப் நீ இருக்கிற நிலைமையில ஏதாச்சும் ஒன்னு கிடக்கு ஒன்னு ஆனா” என்று அவன் பாட்டுக்கு பேசி கொண்டே போக,

“பேச்சை மாத்தாதே அஜய்… நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு?” என்று அவள் அழுத்தமாக பிடித்த பிடியில் நின்றாள்.

அவன் எரிச்சல் தொனியில், “என்னடி பதில் சொல்லணும் உனக்கு?” என்க,

“உனக்கும் சுரேஷ் கொலைக்கும் சம்பந்தம் இருக்கா இல்லையான்னு எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும்” என்றவள் பிடிவாதமாக கேட்ட நொடி,

“அந்த கொலையை பண்ணதே நான்தான்… போதுமா! பதில் தெரிஞ்சிடுச்சா? போனை வை” அவள் தலையில் இடியை இறக்கிவிட்டு அவன் பாட்டுக்கு அழைப்பை துண்டித்துவிட்டான்.

மதுவிற்கு ஜெயாவின் மூலமாக அஜய்தான் கொலை செய்தான் என்று தெரியவந்த போது அதை அவள் இம்மியளவு கூட நம்பவில்லை. அவன் அப்படி செய்யகூடியவன் அல்ல என்று ஊர்ஜிதமாக ஜெயாவிடம் மறுத்தலித்தாள்.

ஆனால் இப்போது அவள் நம்பிக்கை மொத்தமாக உடைந்து நொறுங்கி போனது. தான்தான் கொலை செய்ததாக அவனே ஒப்புகொண்டுவிட, அவளுக்கு ஒன்றே புரியவில்லை.

அவளுக்கு உலகமே சுழலாமல் ஸ்தமபித்தது போன்ற உணர்வு!

இரத்தமெல்லாம் வடிந்து விட்டார் போல அவளின் முகம் வெளுத்து போயிருக்க, அனிச்சை செயலாக அவள் விழிகளில் நீர் வடிந்து கொண்டே இருந்தது.

அந்த சமயம் பார்த்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்த அறை முழுக்கவும் இருளில் மூழ்கிவிட, விளக்கை எடுத்து கொண்டு உள்ளே நுழைந்த நந்தினி மகள் நின்றிருந்த கோலத்தை பார்த்து பதறி போனார்.

“மது மது” என்று அவரின் அழைப்பிற்கு பதில் வராமல் போக அவள் கரத்தை பற்றியவர்,

“என்னாச்சு மது? ஏன் அழுதிட்டு இருக்க?” என்று வினவவும் சற்றே நிதானித்தவள் தன் கண்ணீரை அழுந்த துடைத்து கொண்டு அம்மாவின் முகத்தை மௌனமாக ஏறிட்டாள்.

“என்னடா ம்மா?” என்று மகளின் கன்னம் வருடி அவர் கேட்க, அவளால் எதுவுமே பேச முடியவில்லை. ஜீரணித்து கொள்ள முடியாத அந்த உண்மை அவள் நெஞ்சு குழியை அடைத்தது. மூச்சு முட்டியது.

மகளிடமிருந்து எந்த பதிலும் வாராததில் வெகுவாக குழம்பியவர் அப்போதைக்கு அவளை சமாதானம் செய்யும் விதமாக, “வா… கொஞ்ச நேரம் படுத்துக்கோ” என்று அவள் கரம் பற்றி படுக்கையில் அமர வைக்க அவள் எந்தவித எதிர்வினையுமின்றி அவர் சொன்னதை அப்படியே செய்தாள்.

ஆனால் அவள் செய்கையிலும் கண்களிலும் உயிரில்லை. அவள் நடவடிக்கையை பார்த்து பயந்து போன நந்தினி,

“ஏ மது! ஏன் இப்படி இருக்க?” என்று தோள்களை போட்டு உலுக்கி எடுக்கவும் அந்த நொடி உயிர் வரை ஆழமாக பாய்ந்த அந்த வலி அவளை சுயநினைவுக்கு இழுத்துவந்தது.

“ஆ… அம்ம்ம்ம்ம்ம்மா” என்ற அலறலோடு இடுப்பை அவள் அழுந்த பிடித்து கொள்ள, நந்தினி அதிர்ந்து போனார்.

“என்னம்மா என்ன பண்ணுது?” அவர் பதறி துடிக்க,

“வ… லிக்குது ம்மா” என்றவள் சொன்ன விதத்திலேயே நந்தினிக்கு கிலி பற்றி கொண்டது. சில நொடிகளிலேயே அது சாதாரண வலியல்ல. பிள்ளைபேறு வலி என்பதை உணர்ந்து கொண்டவர்,

“கடவுளே! இப்பன்னு பார்த்துதான் இவளுக்கு வலி வரணுமா? வெளியே வேற காத்தும் மழையுமா இருக்கு?” என்று புலம்பியபடி கணவனிடம் சென்று சொல்ல, அவருக்கும் பயம் பற்றி கொண்டது.

வலி விட்டு விட்டு வர, ஒவ்வொரு முறை வலி வரும் போதும் மது துடிதுடித்து போனாள்.

தாமு அவளை மருத்துவமனைக்கு அழைத்து போகும் ஏற்பாடுகளை மேற்கொள்ள, நந்தினி உடனடியாக அஜயிற்கு அழைத்து விஷயத்தை தெரிவித்திருந்தார்.

“அஜய் உன்கிட்ட பேசணுமாம் மது?” என்றவர் செல்பேசியை நீட்ட அவளுக்கு இருந்த கோபத்துக்கு அந்த பேசியை வாங்கி தூள் தூளாக நொறுக்கியிருப்பாள். ஆனால் அப்படி நிதானமில்லாமல் செயல்பட்டால் அவள் மதுபாலா இல்லையே!

“கட் பண்ணிட்டு அவனை வீடியோ கால் வர சொல்லுங்க” என்றவள் சொல்ல நந்தினியும் அப்படியே அஜயிடம் தெரிவிக்க, சில நொடிகளில் அவன் வீடியோ காலில் வந்திருந்தான்.

தன் வேதனை வலி அனைத்தையும் அவள் உள்ளடக்கி கொண்டு அவனை பார்க்க அவனோ பதட்டத்தோடும் தவிப்போடும் அவளை எதிர்கொண்டான்.

“இந்த நேரத்தில நான் உன் பக்கத்தில இல்லாம போயிட்டேனே மது” என்று கண்ணீர் மல்க கூறியவன் பின் தாமாகவே தன் விழிகளை துடைத்து கொண்டு, “சரி பராவாயில்ல  நீ கவலை பாடாதே… நான்… நான் இதோ உடனே புறப்பட்டு… வந்திடுறேன்” என்று கணவனின் பொறுப்புணர்வோடு பேசினான்.

அவனிடமிருந்த பதட்டம் அவளிடம் துளி கூட இல்லை.

வெகுநிதானமாக அவனை நோக்கியவள், “உஹும்… நீ வர கூடாது” என்று சொல்ல, “என்ன? என்ன சொன்ன?” என்றவன் புரியாமல் கேட்க,

“நீ வர வேண்டாம்னு சொன்னேன்” என்றவள் தெளிவாக அதேநேரம் அழுத்தமாக சொல்ல,

“நான் வர கூடாதா? என்ன பேசுற நீ” என்று அவன் அதிர, அப்போது அருகாமையில் நின்றிருந்த நந்தினியும் சேர்ந்தே அதிர்ச்சியானார்.

“என்ன பேசிட்டு இருக்க மது நீ” என்றவர் அவளிடம் கண்டிப்போடு கேட்க,

“நந்து ப்ளீஸ்… நீ கொஞ்ச நேரம் வெளியே இரு… நான் அஜய்கிட்ட பேசணும்”

அவள் ஏன் இப்படியெல்லாம் செய்கிறாள். என்ன யோசிக்கிறாள் என்று ஒன்றும் விளங்காமல் நந்தினி அறையை விட்டு வெளியேறிவிட,

அவள் மீண்டும் அவன் முகம் பார்த்தாள். அவள் வெளியே காட்டி கொள்ளாவிடிலும் அவள் கண்களில் தெரிந்த வலி அவனை பாடாய் படுத்த,

“மது… நான் இப்பவே வரேன்… நம்ம நேர்ல பேசிக்கலாம்… நீ போனை கட் பண்ணு” என்றவன் அழைப்பை துண்டிக்க போனான்.

“போனை கட் பண்ண நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்” என்றவள் சீற்றமாக கத்தும் போது அவள் முதுகத்தண்டை முறித்து போடுமளவுக்காய் ஒரு வலி பாய்ந்த வேகத்தில்,

“அமம்ம்ம்மம்ம்ம்ம்மா” என்று தங்காமல் அவள் வாய் விட்டே கதற, அவனுக்கு உயிரே போனது.

விழிகளில் நீர் திரள அவளை பார்த்தவன், “ஐயோ! மது.. இப்போ இது பத்தியெல்லாம் பேச வேண்டாமே… நல்லபடியா உனக்கு டெலிவரி ஆகட்டும்…” என்றவனை இறுக்கமாக ஒரு பார்வை பார்த்தவள் வைராக்கியமாக தன் வலியை அடக்கி கொண்டு பேசினாள்.

“எனக்கு நல்லபடியா டெலிவரி ஆகணும்னு அக்கறை இருந்தா இப்ப உடனே நான் சொல்றதை நீ செஞ்சாகணும்” என்றாள். அவள் என்ன சொல்ல போகிறாள் என்பதை பற்றிய எந்தவித யோசனையும் இல்லாமல்,

“சொல்லு மது… என்ன செய்யணுமே சொல்லு… நான் உடனே செய்றேன்” என்று அவன் உறுதியாக கூற,

“உடனே போய் போலிஸ் ஸ்டேஷன்ல் சரண்டர் ஆகு… நீதான் சுரேஷை கொலை செஞ்சன்னு ஒத்துக்கோ” என்றாள்.

அவள் சொன்னதை கேட்ட நொடியில் மௌனமாகி மீண்டவன், “சரி மது… நீ சொல்ற மாதிரியே நான் போய்  சரண்டாகுறேன்… ஆனா அதுக்கு முன்னாடி உனக்கு நல்லபடியா குழந்தை பிறக்கட்டும்… நீ ஹாஸ்பெட்டில் கிளம்பு… நானும் வரேன்” என்றான்.

அவன் சொன்னதை ஏற்காமல், “முடியாது… நான் ஹாஸ்பெட்டில் கிளம்பணும்னா நீ இப்பவே போலிஸ் ஸ்டேஷன் போகணும்… அப்படி நீ போனாதான் நான் ஹாஸ்பெட்டில் போவேன்” என்று அவள் கறாராக அவனிடம் சொல்ல,

“இது எமோஷனல் ப்ளேக் மெயில் மது” என்றவன் தாள முடியாத வேதனையோடு உரைக்க,

“எப்பவுமே நீ மட்டும்தான் நம்ம காதலையும் அன்பையும் வைச்சு பிளேக் மெயில் பண்ணணுமா அஜய்? நான் பண்ண கூடாதா?” என்றவள் குரலில் தெரிந்த எள்ளலும் எரிச்சலும் அவனை மொத்தமாக அடித்து நொறுக்கியது.

தான் செய்ததற்கு எல்லாம் நூறு மடங்காக இந்த சந்தர்ப்பத்தில் அவள் தனக்கு திருப்பி செய்துவிட்டால் என்று எண்ணியவன் அடிப்பட்ட பார்வை பார்த்து,

“சரி மது… நீ சொல்றதை நான் கேட்கிறன்… ஆனா ப்ளீஸ் இப்பவே போகணும்னு சொல்லாதே… எனக்கு இந்த மாதிரி நேரத்தில உன் பக்கத்தில இருக்கணும்டி” என்றவன் ஒரு நிலைக்கு மேல் அவளிடம் இறைஞ்ச ஆரம்பித்தான்.

“முடியாது அஜய்” என்றவள் தன் வலியையும் மீறி கொண்டு பிடிவாதமாக சொல்ல,

“இந்த மாதிரி நேரத்தில நான் பக்கத்தில இருக்கனும்னு உனக்கு தோணவே இல்லயா மது?” இம்முறை மிக ஆழமாக வலியோடு வெளிவந்து விழுந்தன அவன் வாரத்தைகள்.

“இருக்கு… ஆனா ஒரு கொலையை பண்ணி அந்த கரைப்பட்ட கையோட நம்ம குழந்தைகளை நீ தூக்கிறதுல எனக்கு விருப்பமில்ல” என்றவள் திடமாக சொல்லி முடிக்கும் போதும் மீண்டும் அவளுக்கு வலி எடுக்க அவள் அவஸ்தையாக நெளிந்தாள்.

அதற்கு மேல அவளிடம் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பாமல், “ஓகே… நான் ஸ்டேஷன் போறேன்… நீ பார்த்துக்கோ”  என்று வேதனையோடு சொன்ன அவன் கணகள் குளமாகின.

அவள் முகத்தை ஆழமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டான்.

அந்த பார்வை அவளை கொல்லாமல் கொன்றுவிட்டது. அத்தனை நேரம் அவள் தாங்கி பிடித்திருந்த கோபம், பிடிவாதம் எல்லாம் தளர்ந்து முகத்தை மூடி அழ தொடங்கினாள் அந்த பெண்மகள்!

இத்தனை நாளாக தன்னையும் தன் வயிற்றிலிருந்து சிசுவையும் எந்தளவு கண்ணும் கருத்துமாக அவன் காத்து வந்தான் என்று அவளுக்குத்தான் தெரியும். தன் வலியை தன்னை விட அதிகாமாக உணர்ந்து வேதனயுற்றவன் அவன்.

அவனது காதலுக்கும் அன்பிற்கும் தான் செய்தது மிக பெரிய அநியாயம்தான். ஆனால் அதில் சுயநலமே இல்லா அவளுக்கான ஒரு நியாயம் இருந்தது. அது அவளுக்கு மட்டுமே புரியும்.

நந்தினி மகள் அழுவதை பார்த்துவிட்டு, “அஜய் கிட்ட என்னடி சொன்ன?” என்று பதட்டமாக கேட்க அவள் எதுவும் பேசாமல் அழுது கொண்டே இருந்தாள்.

“ஏ! மது என்னடி சொன்ன? எனக்கு பயமா இருக்கு” என்றவர் குரல் இறங்க தன் கண்ணீரை துடைத்து கொண்டு நிமிர்ந்தவள்,

“எது நியாயமோ அதைதான் சொன்னேன்” என்றாள்.

மதுவிற்கு மெல்ல மெல்ல வலி அதிகமாக, அவள் இடிப்பை பிடித்து கொண்டு அலறி துடிக்க தொடங்கினாள்.

“கொஞ்சம் பொறுத்துக்கோ மது… இன்னும் கொஞ்சம் நேரத்தில அம்புலன்ஸ் வந்திரும்” என்று நந்தினி மகளை சமாதானம் செய்ய, தாமு பதட்டத்தோடு ஓடி வந்தார்.

“எந்த வண்டியும் உள்ளே வரவும் போகவும் வழியில்ல… பக்கத்துக்கு ரோட்ல எல்லாம் முழுக்க தண்ணி வந்திருச்சாம்… இங்கே கொஞ்சம் கொஞ்சமா தண்ணி அதிகமாகிட்டே இருக்கு… பக்கத்தில ஏரியை திறந்துவிட்டாங்களாம்… என்ன செய்றதுன்னே புரியல” என்று தாமு படபடப்போடு பேச நந்தினி விக்கித்து போனார்.

“ஐயோ! எதாச்சும் பண்ணுங்க… அவ வலில துடிக்கிறா… உடனே ஹாஸ்பெட்டில் கூட்டிட்டு போயாகனும்” என்றவர் கணவரிடம் அழுது கரைய வெளியே பயங்கரமாக ஒரு சத்தம் எழுந்தது.

அவர்கள் இருவரும் பதறியடித்து ஓடி சென்ற பார்க்க சரவணன் வீட்டு வாசலிலிருந்த வேப்பமரம் சரிந்ததில் அருகிலிருந்த மின்கம்பமும் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்திருந்தது.

அந்த பெரிய சத்தம் சரவணனின் ஆழ்ந்த உறக்கத்தையும் கலைத்திருந்தது. அவன் பதறியபடி எழுந்து அமர, இந்துவுமே அந்த சத்தத்தில் மிரண்டு கையிலிருந்த சிரஞ்சை தவறவிட்டிருந்தாள்.

சரவணன் படுக்கையில் இந்துவை காணாமல் தேடி விட்டு நிமிரும் போது அவள் எதிரே நடுக்கத்தோடு நின்றிருக்க, அவன் கேள்வியாக பார்த்தான்.

“இல்ல மாமா… வெளியே ஏதோ சத்தம் கேட்டுச்சு… அதான் ஜன்னலை திறந்து என்னன்னு பார்க்கலாம்”  என்றவள் அந்த நொடியே சமாளிப்பாக ஒரு பதிலை தயாரித்து சொல்லியிருந்தாள்.

தூக்க கலகத்திலிருந்த காரணத்தால் அவள் சொன்னதை பற்றி பெரிதாக அலட்டி கொள்ளாமல் வெளியே கேட்ட சத்தம் என்னவென்று அவன் பார்க்க சென்றுவிட,

“தப்பிச்சோம்” என்று பெருமூச்செறிந்தாள்.  தரையில் அமர்ந்து தீவிரமாக அந்த ஊசியை கைகளால் துழாவி தேடி கொண்டிருந்த சமயத்தில் சரவணன் டார்ச்சை பிடித்தபடி உள்ளே நுழைந்தான்.

அவள் பதட்டத்தோடு மீண்டும் எழும்பி நிற்க அவள் என்ன தேடுகிறாள் என்பது போல அவன் சந்தேகமாக பார்த்தான்.

அவனுக்கு ஏதோ அவளிடம் சரியில்லை என்று தோன்ற அவள் எச்சிலை கூட்டி விழுங்கியபடி,

“இல்ல கரென்ட் இல்லயா? அதான் விளக்கு ஏத்துலாம்னனு கேண்டில் எடுத்துட்டு வந்தேன்… அது கை தவறி கீழே விழுந்துடுச்சு… அதைதான் எங்கன்னு தேடிட்டு இருந்தேன்” திரும்பியும் அவள் சொன்ன அந்த சாமளிப்பு பதிலை நம்ப அவன் ஒன்றும் முட்டாள் இல்லை.

அதுவுமில்லாமல் அவள் தவிப்பும் படபடப்பும் அவன் சந்தேகத்தை வலுக்க செய்ய, டார்ச் வெளிச்சத்தை தரையில் காட்டி என்ன விழுந்திருக்கிறது என்று பார்த்தான்.

அவள் கைகளுக்கு தட்டுப்படாத அந்த ஊசி அவன் கண்களில் பட்டுவிட, அதனை தன் கைகளில் எடுத்துவிட்டு அவளை கூர்மையாக பார்த்தான்.

“அது சும்மா சாதராண ஊசி மாமா” என்றவள் சொல்லவும் அவன் நம்பாமல் அவளை பார்த்தபடி நெருங்க அவள் கை கால்கள் வெடவெடத்தன.

தலை கவிழ்ந்து நின்றவளின் முகத்தை அவன் நிமிர்த்தி பிடிக்க, அவள் அழ தொடங்கியிருந்தாள்.

“மாமா” என்றவள் குரல் திக்கி திணறியது. வார்த்தைகளுக்கும் இல்லாத வலிமை அவன் பார்வைக்கு இருந்தது.

“சாரி மாமா… எனக்கு வேற வழி தெரியல” தற்கொலையாளிகள் எல்லோரின் அக்மார்க் வசனத்தை  சொன்னவள் மேலே காவல் நிலையத்தில் நடந்த விஷயங்களையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள்.

உடைந்து அப்படியே படுக்கையில் அமர்ந்தவனுக்கு அவளின் தற்கொலை முடிவுக்கு  வருந்துவதா அல்லது அவள் கையெழுத்து போட்டதற்கு வருந்துவதா என்று புரியவில்லை.

திக்கு தெரியாத காட்டில் சிக்கி கொண்டவன் போலிருந்தது அவன் நிலைமை! யார் செய்த புண்ணியமோ? அந்த வேப்ப மரம் தன் உயிரை நீத்து அவன் உயிரானவளை காப்பாற்றிவிட்டதில் மனம் நிம்மதி அடைந்தாலும் சுரேஷ் கொலை வழக்கிலிருந்து தன்னவளை எப்படி மீட்க போகிறோம் என்ற கேள்வி அந்த நொடி மலையாக வளர்ந்து அவன் முன்னே நின்றது.

அப்போது அவன் முகத்தை வாஞ்சையாக பார்த்தபடி தரையில் வந்து அமர்ந்தவள், “சாரி மாமா” என்று சொல்ல, அவளை பார்த்த அவன் பார்வையில் கோபமில்லை. ஆழமான வலியிருந்தது.

‘உன்னை காப்பாற்ற முடியாத வக்கத்தவனா நீ என்னை நினைச்சிட்ட இல்ல? என் மேல நம்பிக்கை இல்லாமதானே நீ இப்படி ஒரு முடிவை எடுத்த’ என்ற பேசாமல் பேசிய அவன் உணர்வுகளில் அவள் துடித்து போனாள்.

“சத்தியமா அப்படி நினைக்கல மாமா… உங்களுக்கு மேலும் மேலும் எந்த பிரச்சனையும் வர கூடாதுன்னுதான்  நினைச்சேன்” என்றவள் விழிகளில் கண்ணீர் பெருகியது. வெகுநேரம் அவன் மடியில் தலைசாய்த்து, “தப்பு செஞ்சிட்டேன் மாமா” என்று உடைந்து அழுதவளை தேற்றி அணைத்து கொண்டான்.

அவள் நிலைமைலிருந்து பார்க்கும் போது ‘அவளும் என்ன செய்வாள் பாவம்’ என்று அவனுக்கு அந்த நொடியும் அவள் மீது இரக்கம்தான் பிறந்தது.

அப்போது வாயிலில் தாமுவின் குரல் பதட்டத்தோடு, “சரோ” ஈனஸவரத்தில் ஒலிக்க அவன் விரைவாக எழுந்து வெளியே சென்றான். இந்துவும் அவனை பின்தொடர்ந்து செல்ல சரவணனிடம் தாமு மதுமதியின் நிலைமையை பற்றி சொல்லி தவிப்புற்றார்.

‘எனக்கு யாரை கூப்புடுறதுனே தெரியல… பக்கத்தில யாரச்சும் டாக்டர் இருந்தா அழைச்சிட்டு வரணும்” சரவணனுக்கும் பதட்டம் கூடியது. ஏனைய பிரச்சனைகள் அனைத்தும் மறந்து தன் தோழிக்காக அவரோடு சென்றான்.

அவர் சொன்னதை எல்லாம் கேட்டு கொண்டிருந்த இந்து வேகமாக மதுவின் வீட்டிற்குள் நுழையும் போதே  அவளின் கதறல் சத்தம் இந்துவின் மனதை பிசைந்தது.

மதுவின் கரத்தை பற்றி கொண்டு நந்தினி தைரியம் கூறி கொண்டிருக்க, இந்து நேராக உள்ளே நுழைந்தாள்.

நந்தினியும் மதுவும் அவளை ஆச்சரியமாக பார்க்க, “நல்லா பெயின் வந்துருச்சா? இல்ல விட்டு விட்டு வருதா?” என்று மதுவின் அருகில் அமர்ந்து கரிசனமாக கேட்டு அவள் கண்களை உற்று  பார்த்தாள்.

பின் அவள் நாடி துடிப்பை சோதித்தவள் மற்றும் வயிற்றை தொட்டு பார்த்தவள், “இல்ல இனிமே டிலே பண்ண கூடாது… ரொம்ப ரிஸ்க்” என்று சொல்ல, நந்தினியை அச்சம் தொற்றி கொண்டது.

“நீங்க கொஞ்சம் சுடு தண்ணி வையுங்க… கை பொறுக்கிற சூடுல இருக்கட்டும்… நான் வீட்டுக்கு போய் அத்தையை கூட்டிட்டு வரேன்… பக்கத்தில யாராச்சும் வாயசனவங்க… விவரம் தெரிஞ்சவாங்க இருந்தா அவங்களையும் அழைச்சிட்டு வருவோம்… எனக்கு என்னவோ இதுக்கு மேல தாமதிக்கிறது சரியில்லைன்னு தோணுது… மாமாவும் உங்க வீட்டுக்காரரும் டாக்டரை கூட்டிட்டு வர போயிருக்காங்க.. அப்படி தெய்வாதீனமா டாக்டர் யாராச்சும் வந்துட்டா சந்தோஷம்… ஆனால் இதுக்கு மேலயும் லேட்டானா குழந்தை அம்மா இரண்டு பேருக்கும் கஷ்டம்” என்று பரபரப்பாகவும் அதேநேரம் மிக தெளிவாகவும் பேசியவளை நந்தினி மட்டுமில்லை. மதுவும் கூட வியப்போடு பார்த்தாள்,

ஆனால் நந்தினி குழப்பத்தோடு, “இல்ல ம்மா அவளுக்கு” என்று ஏதோ சொல்ல எத்தனிக்க,

“எனக்கு தெரியும் ம்மா… அவங்களுக்கு ரெட்டை குழந்தைன்னு… அதனாலதான் லேட் பண்றது ஆபத்துன்னு சொல்றேன்” என்றாள்.

நந்தினிக்கு உண்மையிலேயே இந்து சொல்வதை எப்படி எடுத்து கொள்வதென்றே தெரியவில்லை. மகளின் துடிப்பும் கதறலுக்கும் இடையில் இது சரியாக வருமா என்று யோசிக்கும் போதே மனம் படபடத்தது. இது தன் ஒரே மகளின் உயிர் பிரச்சனையாயிற்றே!

நந்தினி என்ன செய்வது என்று புரியாமல் தவிக்க மது அப்போது, “இந்து சொல்ற மாதிரி செய் நந்து… நமக்கும் வேற வழியும் இப்ப இல்லை” என்க, நந்தினிக்கு மகள் சொன்னது சரியாகவேப்பட்டது. இந்து சொன்னது போல சுடுதண்ணீர் வைக்க நந்தினி சென்றுவிட,

“நீங்க பயப்படாதீங்க மது… எல்லாமே நல்லதாவே நடக்கும்” என்ற போது மதுவின் கரம் இந்துவின் கரத்தை அழுந்த பற்றி கொண்டது. அந்த பற்றலில் ஆழமான நம்பிக்கை இருந்தது.

அதன் பின் இந்து மளமளவென தன் வேலையில் இறங்கினாள். தன் மாமியாரையும் அருகிலிருந்து சில அனுபவமிக்க பெண்டிர்களையும் அழைத்து வந்திருந்தாள். அவர்கள் மதுவிற்கு தைரியம் உரைத்து மூச்சை இழுத்துவிட்டு குழந்தையை வெளியே தள்ளும் முறையை சொன்னார்கள்.

மது வலி தாங்கமால் அவ்வப்போது கதற நந்தினி மனதில் அத்தனை தெய்வங்களையும் துணைக்கு அழைத்து வேண்டியபடி இருந்தார்.

அப்போதைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை  இந்துமதி அருகே இருந்த மருந்து கடைக்காரர் மூலமாக ஏற்பாடு செய்து எடுத்து வந்திருந்தாள்.

இதற்கிடையில் தாமு நந்தினிக்கு பேசியில் அழைத்து, “இங்க பக்கத்துல எந்த டாக்டரும் இல்ல” என்று கவலைப்பட்டு கொண்டிருந்தார்.

இந்துமதி தாயோடு சேர்த்து அந்த இரட்டை சிசுவையும் காப்பாற்ற படாதபாடுபட்டு கொண்டிருந்தாள். இப்படியான பிரசவங்களில் ஒரு செவிலயராக கொஞ்சம் அனுபவமிருந்தாலும் மருத்துவர்களின்றி தனித்து இயங்குவதில் பெரும் சிரமமும் ஆபத்தும் இருந்தது.

இருப்பினும் அவர்களுக்கு வேற வழியில்லை. அத்தகைய பெரிய சவாலான காரியத்தை அவள் திடமாகவும் தைரியாமாகவும் மேற்கொண்டாள். மது அந்த பிரசவத்தில் உடலால் போராடினால் என்றால் இந்து மனதால் போராடினாள்.

மதுவையும் சேர்த்து மூன்று உயிர்களையும் காக்கும் பொறுப்பு முழுக்க முழுக்க தன்னுடையதாகவே கருதி அவள் மூச்சு விடவும் மறந்து செயல்பட, முழுதாக ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மது தன் முதல் குழந்தையை பெரும் வலியோடு ஈன்று எடுத்தாள். அதேநேரம் அவள் அந்த நிலையிலேயே சோர்ந்து களைத்து போனாள்.

அவளின் மொத்த சக்தியும் வடிந்த நிலையிலிருக்க, “மது ப்ளீஸ்… சோர்ந்து போயிடாதீங்க… உங்க ரெண்டாவது குழந்தை இந்த உலகத்தை பார்க்க வேண்டாமா?” என்றவளுக்கு ஊக்கம் கொடுத்து அடுத்த குழந்தையும் வெளியே எடுப்பதற்குள் மதுவோடு சேர்த்து இந்துவிற்கும் உயிர் போய் உயிர் வந்துவிட்டது.

சுகபிரசவ முறையிலேயே இரட்டை குழந்தைகளையும் எடுப்பது மிக பெரிய சாவல். தாயிற்கு இரத்தபோக்கு அதிகமாகிவிட்டால் உயிர் போகுமளவுக்காய் ஆபத்திருக்கிறது என்பதை உணர்ந்து எல்லாவற்றிலும் கவனம் செலுத்தி கண்ணும் கருத்துமாக அவற்றை செய்து முடித்து, அவளுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளையும் எந்தவித அசூயை உணர்வுமின்றி சுத்தம் செய்து மதுவின் அருகில் கொண்டு வந்து வைத்தாள்.

ஒரே நேரத்தில் இருமுறை மரணத்திலிருந்து மீண்டு  தாய்மை உணர்வின் வலி வேதனையை முழுவதுமாக அனுபவித்து களைத்து போன பெண்ணவளுக்கு அந்த வலியெல்லாம் குழந்தைகளின் முகத்தை பார்த்த நொடியில் மறைந்து மாயமாகி போன ஆச்சரியத்தை யார்தான் அறியகூடும்?!

அதுதான் தாய்மைக்கே உண்டான மேன்மையான குணம். கண்ணீர் மல்க தன் குழந்தைகளின் அசைவுகளையும் அழுகைகளையும் கண்டு நெகிழ்ந்தவள் இந்துவை நன்றியோடு பார்த்தாள்.

இந்து மகிழ்வோடு, “குழந்தைங்க இரண்டும் அப்படியே மூக்கும் முழியுமா உங்களை மாதிரியே இருக்கு” என்று சொல்ல,

அந்த நொடி, “நம்ம குழந்தைங்க இரண்டும் உன்னை மாதிரிதான் இருக்கும் பாரேன்” என்ற அஜயின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன். அவளின் தாய்மை பூரிப்பு மொத்தமும் வடிந்து வெறுமை நிலைக்கு சென்றது.

தாய்மை உணர்வையும் சில சமயங்களில் காதல் வென்றுவிடுகிறது.

சில நிமிடங்கள் கழித்து அலைந்து திரிந்து சரவணனும் தாமுவும் ஒரு பெண் மருத்துவரோடு வந்து சேர்ந்தனர்.

அவர் மதுவையும் குழந்தைகளையும் சோதித்துவிட்டு வியப்போடு இந்துவின் கைகளை குலுக்கி பாராட்ட சரவணனுக்கு நடப்பது ஒன்றுமே புரியவில்லை.

அதன்பின் நந்தினி அனைத்தையும் விவரமாக விளக்கிய போது சரவணன் வியப்படங்காமல் தன் மனைவியை பார்க்கலானான்.

தாமுவோ மகளை காப்பாற்றிய நன்றி உணர்ச்சியோடு கண்ணீரோடு பார்க்க, அந்த பார்வை இந்துவையும் உணர்ச்சிவசப்பட வைத்தது.

அதேசமயம் நந்தினியும் அவள் கரத்தை சேர்த்து பிடித்து கண்களில் ஒற்றி கண்ணீர் பெருக்கினார்.

“ஐயோ! என்னம்மா நீங்க? ஒரு நர்ஸா நான் ஹாஸ்பெட்டில இருந்தா இதெல்லாம் செஞ்சிருப்பேன்தானே” என்றவள் சாதாரணமாக சொன்னாலும் அவள் செய்தது அப்படி சுலபமாக கடந்துவிடும் விஷயமில்லை. அவள் சமயோசிதமாக அந்த சூழ்நிலையை கையாளாமல் போயிருந்தால் மதுவின் நிலைமை என்னவாகி இருக்குமோ என்று யோசிக்க கூட முடியவில்லை.

“இல்ல நீ ஒரு நர்ஸா எனக்கு தெரியல… இந்த நிமிஷம் நீ எனக்கு கடவுளாதான் தெரியுற” என்றவர் சொல்ல, “என்ன ம்மா நீங்க… என்னை போய் கடவுள் அது இதுன்னு” என்று பதறினாள்.

“கடவுள்ங்கிறது கோவில இருக்க சிலையில இல்ல… அது ஒரு உணர்வு… யாருக்கோ என்னவோன்னு இல்லாம இந்த நடுராத்திரில மதுவை காப்பாத்த நீ பட்ட பாடு இருக்கே… அந்த சுயநலமில்லாத உணர்வுதான் கடவுள்” என்றவர் மனதார அவள் செயலை பாராட்ட துர்காவின் கண்களிலும் மருமகளை எண்ணி பெருமிதம் பொங்கியது.

அந்த சமயத்தில் துணைக்கு பிரசவம் பார்க்க வந்த பக்கத்து வீட்டு பாட்டியும் போகிற போக்கில் இந்துவை பாராட்டிவிட்டு, “நீயும் சரவணணும் எந்த குறையும் இல்லாம நீண்ட ஆயுளோட நல்லா இருப்பீங்க” என்று மனதார வாழ்த்த, இந்துமதி புன்னகை ததும்ப கணவன் புறம் பார்வையை திருப்பினாள்.

அவன் முகமெல்லாம் புன்னகையாக நின்றிருந்தான். சற்று முன்பு தன் உயிரை போக்கி கொள்ள இருந்தவள் தற்போது மூன்று உயிர்களை போராடி மீட்டிருக்கிறாள். தன் மரணத்திற்கு வித்திட எண்ணியவள் இப்போது இரண்டு உயிரின் ஜனனத்திற்கு காரணமாக இருந்திருக்கிறாள்.

ஒவ்வொரு விநாடிகளும் வாழ்க்கையின் மிக பெரிய ஆச்சரியங்கள்தான்!

வாழ்க்கையின் பக்கங்களில் சோதனைகளும் வலிகளும் மட்டுமே இல்லை. பெரிய பெரிய ஆச்சரியங்களும் சந்தோஷங்களும் கூட காத்திருக்கிறது.

முதல் சில பக்கங்களிலேயே பொறுமையிழந்து தன் உயிரை மாய்த்து கொள்கிறவன் இத்தகைய ஆச்சரியங்களையும் சந்தோஷங்களையும் காணக்கிடைக்காமலே மடிந்து போகிறான்.

ஆனால் வாழ்க்கையில் பொறுமையை கடைபிடித்து சாவல்களை எதிர்கொள்கிறவன் ஆளுமை நிலைக்கு உயிர்கின்றான். இழிவுகள் அவமானங்களை கடந்து பெரும் பேரும் புகழையும் அடைகிறான். ஆதலால் தற்கொலை என்பது எப்போதுமே எதற்குமே தீர்வு அல்ல.

error: Content is protected !!