அத்தியாயம் – 21
திருமண மண்டபம் முழுக்க உற்றார் உறவினர் என்று பெரும்படையே திரண்டு இருக்க மணமகள் அறையில் இரவு ருத்ரா அவளின் தோழிகளோடு இருந்தாள். அதேபோல கிருஷ்ணாவும் அவனின் அறையில் இருந்தான்.
இரவுநேரம் உணவு முடித்துவிட்டு மண்டபத்தில் அமர்ந்த உறவினர்கள் பேசிகொண்டிருக்க மாடியில் தனியாக நின்று இருளை வேடிக்கைப் பார்த்தாள் மது.
‘அவனோட குரல்கேட்டு எவ்வளவு நாளாச்சு. இனி லண்டன் போயிட்ட கண்டிப்பா அங்கே அவனோட குரல் கேட்க முடியாது. நேரில் பார்க்க கிடைத்த சான்ஸில் அவனை பார்க்க முடியல. இனி..’ என்ற சிந்தனையில் வானில் சென்ற மேகங்களை வேடிக்கைப் பார்த்தாள்.
மறுநாள் காலைபொழுது விடிந்ததும் கிருஷ்ணாவின் திருமணம் அடுத்து ஊருக்கு செல்வது என்று மனம் எங்கோ பறந்தது.
“ஹாய் மது..” என்ற குரல்கேட்டு அவள் வெடுக்கென்று திரும்பிப் பார்க்க அங்கே ருத்ரா நின்றிருந்தாள்
‘வாங்க ருத்ரா..’ சாதாரணமாக அழைத்தவளை பிரம்மிப்புடன் நோக்கினாள். அவளுக்கு அனுதாபபட்டால் பிடிக்காது என்று தெரியும். அவள் எப்படியும் தன்னோடு சகஜமாக பேசாம போவத்தில்லை என்றே நினைத்தாள்.
அவள் எப்போதும்போல பேசியதும், “என்மேல் கோபம் இல்லையா?” என்று கேட்டாள்.
அதற்கு மறுப்பாக தலையசைத்த மது, ‘எனக்கு பேச வராதுன்னு உங்களுக்கு தெரியாது. சோ தெரியாமல் அனுதாபபட்டு பேசிட்டீங்க. அதுக்கு கோபப்பட்டு பேசாம இருந்தது என்னோட தப்பு..’ என்று இயல்பாக பேசியவளை ஏதோவொரு வழியில் ருத்ராவிற்கு பிடித்துப் போனது.
“ஸாரி உங்களுக்கு அனுதாபபட்ட பிடிக்காதுன்னு எனக்கே கிருஷ்ணாதான் சொன்னார்..” என்றதும் நிமிர்ந்த மதுவிற்குமே அவன் ஜவுளிக்கடையில் நடந்துகொண்டது பிடிக்கவில்லை என்றபோதும் அவனை விட்டுகொடுக்க மனம் வரவில்லை.
‘கிருஷ்ணாவை நீங்க தப்பா நினைக்காதீங்க. அவனுக்கு கோபம் வரும். ஆனா ரொம்ப நல்லவன். நாங்க எல்லாம் இப்போ ஒரே அப்பார்ட்மெண்ட். அதனால் என்னைப்பற்றி அவருக்கு தெரியும். அதனால் சொல்லிருப்பார்’ அவளின் பேச்சை அவளும் கவனிக்கவே செய்தாள்.
“இட்ஸ் ஓகே. நான் எதுவும் தப்பா நினைக்கல..” எனவும் புன்னகைத்த மதுவை இமைக்காமல் பார்த்தாள்.
“உங்க மேரேஜ் எப்போ மது..” என்று கேட்க, ‘நான் பாலாவை விரும்பிறேன். அவர் ஓகே சொன்ன நாளைக்கே கூட நடக்கலாம்’ என்று குறும்புடன் கூறியவளை பார்த்து அதிர்ந்தது என்னவோ ருத்ராதான்.
அவள் பாலா என்றதும் இவளுக்கு பகீரென்றது. அவள் அதிர்ந்து விழிப்பதைக் கண்டு, ‘என்ன ருத்ரா அப்படி பார்க்கிறீங்க..’ என்று ஆச்சரியமாக கேட்டாள்
“அவருக்கு என்ன வொர்க்..” என்று கேட்டதும் அருகிலிருந்த ரேடியோவைக் காட்டிய மதுவை புரியாமல் பார்ப்பது இப்பொழுது ருத்ராவின் முறையானது.
‘ஆர்.ஜே..’ என்றவளைப் பார்த்து புன்னகைத்த ருத்ரா, “உங்க மேரேஜ்க்கு என்னோட அட்வான்ஸ் விஷ்..” என்றவள் முகம் மாறாமல் புன்னகைக்க, அவளோடு சிறிதுநேரம் பேசிவிட்டு தன்னறைக்கு சென்றுவிட்டாள்.
மதுவிடம் பேசிவிட்டு வந்தபிறகு ருத்ராவிற்கு தூக்கம் வர மறுத்தது. அவளுக்கு கிருஷ்ணாவைப் பற்றி அடிமுதல் நுனிவரை தெரியும். அவள் பாலா என்றதும் அவளுக்கு சில விஷயங்கள் யோசிக்க வேண்டி இருந்தது.
அப்போதும் அவளுக்கு அந்த திருமணத்தில் துளியும் விருப்பமில்லை. நாளை விடியலை பொறுத்து தன்னுடைய வாழ்க்கை என்ற முடிவுடன் உறங்கிவிட்டாள்.
மறுநாள் காலைபொழுது ரம்மியமாக விடியும் முன்னே மதுவை எழுப்பிய சங்கீதா, “சீக்கிரம் கிளம்பு மது.. இன்னும் ஒரு மணிநேரம் தான் இருக்கு..” என்று எழுப்பிவிடவே குளித்துவிட்டு வந்தவளுக்கு புடவையை கையில் எடுத்தாள்.
“உனக்கு புடவை கட்ட தெரியுமா?” என்றதும், ‘ம்ம் அம்மா சொல்லி கொடுத்திருக்காங்க..’ என்று வேகமாக சொல்லிவிட்டு அடுத்த சிலநொடியில் கிளம்பி வந்தாள்.
திருமண மண்டபத்திற்கு வந்தவர்களை மாதவ், ஆறுமுகம் இருவரும் வரவேற்று அமரவைக்க மற்ற வேலைகளை எல்லாம் தாமரை கவனித்துக்கொள்ள தாரிகா ஐயர் கேட்பதை எல்லாம் எடுத்துகொடுக்க அருகிலேயே நின்றிருந்தாள்
பட்டுவேட்டி, சட்டையில் தயாரான கிருஷ்ணா உற்சாகமாகவே மணமேடை ஏறினான். பெரியவர்களின் பேச்சிற்கு மரியாதை கொடுக்கும் மகனை நினைத்து அவனின் தாய் தந்தையின் உள்ளம் பூரித்துப் போனது.
தாரிகா மட்டும் தமையனின் செயலில் இருக்கும் வேறுபாட்டை கவனித்தாள். கிருஷ்ணாவை கட்டாயபடுத்தி எதையும் செய்ய வைக்க முடியாது. அப்படியிருந்தும் அவன் இவ்வளவு பொறுமையாக இருக்கிறான் என்றால் அதுக்கு பின்னே காரணம் இருக்குமென்று அவளும் நினைத்தாள்.
மணப்பெண் அலங்காரத்தில் தரையை நோக்கி அடிமேல் அடியெடுத்து வைத்து வந்தவளை பார்த்த கிருஷ்ணாவின் பார்வையில் உயிர்ப்பில்லாமல் இருந்தது. ஏதோ கடமைக்கு கல்யாணம் என்ற நிலையில் அமர்ந்திருந்தான்.
ருத்ராவை அவனின் அருகில் அமர வைத்த மறுநொடியே அவள் நிமிர்ந்து கிருஷ்ணாவின் முகம் பார்க்க அவனின் பார்வையோ முதல் வரிசையில் அமர்ந்து இருந்த மதுவின் மீது நிலைப்பது கண்டு அவளுக்கு கோபம் வந்தது.
“இங்கே கல்யாணப்பொண்ணு நான்..” என்று அவனின் காதோரம் மெல்ல சொல்ல இவளின் பக்கம் திரும்பியவன், “சோ வாட்..” என்றான் சாதாரணமாகவே.
அவன் மதுவை இமைக்காமல் ரசிப்பதை கவனித்து உள்ளுக்குள் சிரிப்பு வந்தபோதும் வெளியே வேண்டுமென்றே, “அவளை எதுக்கு இப்படி பார்க்கிற” என்று எரிச்சலோடு கேட்டவளை நோக்கிய கிருஷ்ணா,
“எனக்கு பிடிச்சிருக்கு. நான் வாங்கிக் கொடுத்த சேலையில் சோலை மாதிரி இருப்பவளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை..” என்றவன் ரசனையுடன் பதில் சொல்ல இவளின் கோபம் அதிகரித்தது.
அந்தநேரம் மதுவிற்கு ஒரு முக்கியமான அழைப்பு வரவே அவள் எழுந்து வெளியே சென்றுவிட்டாள். அவளும் பொறுமையாக இருக்க நினைத்தாலும், “அவளை பிடிச்சிருந்தா நீ அவளையே கல்யாணம் பண்ண வேண்டியதுதானே..” என்றாள் அவள் எரிச்சலோடு.
“இப்போகூட உனக்காகத்தான் இங்கே உட்கார்ந்திருக்கேன்” அவனும் கடுப்புடன் சொல்ல அவளோ கேள்வியாக நோக்கினாள்.
“ஆமா. திருமணம் வேண்டான்னு நான் அன்னைக்கே சொல்லிருப்பேன். அன்னைக்கு மோதிரம் போட சொல்லிசொல்லிட்டார். சரி நிச்சயதார்த்தம் நடக்கும் போது நிறுத்தலாம் என்று பார்த்த எல்லோரும் உப்பு மாத்திட்டாங்க” அவள் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது.
“அதுக்காக இப்போ என்ன சொல்ல வர..” என்றார் எரிச்சலோடு தொடங்கினாள் ருத்ரா.
“நீங்க இருவரும் பேசாமல் இருங்கோ..” என்று ஐயர் குரல்கொடுக்க அருகே இருந்த தேங்காய்யை கையில் எடுத்தவள், “நீங்க அமைதியா இல்ல உயிரோட ஆத்துக்கு போகமாட்டிங்க..” என்று அவரை மிரட்டிவிட்டு கிருஷ்ணாவின் பக்கம் திரும்பினாள்.
“உனக்கு இந்த திருமணம் பிடிக்கலையா?” என்று கேட்க அவனும் மறுப்பாக தலையசைத்துவிட்டு மதுவை பார்த்தான்.
“அப்புறம் வேண்டான்னு சொல்லிட்டு எழுந்து போக வேண்டியதுதானே..” என்று அவள் கோபத்துடன் சொல்ல, “பொண்ணு வேண்டான்னு நான் எழுந்து போன உன்னைக் கல்யாணம் பண்ணிக்க யாரும் வரமாட்டாங்க. நான் எழுந்துபோக எனக்கு ஒரு நிமிஷம் போதும். ஒரு பெண்ணின் சாபம் எனக்கு வேண்டான்னு நினைக்கிறேன்” என்றவனை ஏறயிரங்க பார்த்தவளை கவனிக்காமல் கூடத்திற்குள் மதுவை தேடியது கிருஷ்ணாவின் பார்வை.
“ஐயோ சித்த பேசாமல் இரு குழந்தை..” என்று ஐயர் சொல்ல,
“ஏய் இங்கே அவனவன் வாழ்க்கையே பறிபோகுதேன்னு கடுப்பில் இருக்கான். நீ என்ன பேசாமல் இருக்க சொல்ற..” என்று ஐயரை மிரட்டிய கிருஷ்ணாவைக் கோபத்துடன் பார்த்தவள்,
“நானும் அதையேதான் சொல்றேன். எனக்கு உன்னைக் கண்டாளே பிடிக்கல. இப்படியே எழுந்து போலான்னு இருக்கேன்..” என்றதும், “அப்புறம் எதுக்கு வெயிட் பண்ற” என்றவன் பொறுமையாகக் கேட்கவே, எழுந்து நின்று மாலையை கலட்டிவிட்டாள்.
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் தன்னால் குழப்பம் வரகூடாது என்று முடிவை அவளின் கையில் ஒப்படைத்துவிட்டான். அவனை பொறுத்தவரை திருமணம் நின்றால் போதும். அதன்பிறகு மதுவின் தாய்,தந்தையிடம் பேசி முறைப்படி மதுவை திருமணம் செய்ய நினைத்தான். அவன் சுயநலமாக யோசித்திருந்தால் இங்கே இரு பெண்களின் வாழ்க்கையும் கேள்வி குறியாக மாறியிருக்கும்.
அவளின் செயலில் எல்லோரும் அதிர்ந்து நிற்க, “ருத்ரா என்னம்மா பண்ற” என்று ராஜதுரை மற்றும் சம்பூரணம் மகளின் அருகே வந்தனர்.
கிருஷ்ணாவின் வீட்டினரும் அவளின் அருகே வர, “எனக்கு உங்களோட பையனைப் பிடிக்கல. நான் நினைத்த மாதிரி அவர் இல்ல. அதனால் எனக்கு இந்த திருமணம் வேண்டாம்..” என்று கோபமாக சொல்லிவிட்டு வேகமாக மணமேடை விட்டு இறங்கினாள்.
“ருத்ரா மணமேடை வரை வந்துட்டு இப்படி செய்வன்னு நான் எதிர்பபார்க்கவே இல்ல..” என்ற தந்தையின் குரலில் கண்டிப்பை உணர்ந்தும் திரும்பாமல் நடந்தவளின் எதிரே வந்த ஆறுமுகம்,
“என்னோட மகனிடம் அப்படியென்ன குறையைக் கண்டுட்ட..” என்றவரின் கேள்வியில் சற்றே நின்ற பொழுது மண்டபத்தின் உள்ளே நுழைந்த மது புரியாமல் சுற்றியிருந்த அனைவரையும் பார்த்தவள் அப்பொழுது தான் ஆறுமுகத்தின் எதிரே நின்ற மதுவைக் கவனித்தாள்.
‘இவங்க இங்க நிற்கிறாங்க..’ என்ற கேள்வியுடன் அவளையே நோக்கினாள்.
“உங்க மகனிடம் வாய்தான் அதிகமாக இருக்கு. அவனோட வாய்க்கு எல்லாம் இதோ இவளை மாதிரி ஊமைப் பொண்ணாக பார்த்து கட்டிவைங்க. அவளை மாதிரி பொண்ணுதான் உங்க மகனுக்கு செட் ஆகும். என்னால் அவன் சொன்னதுக்கு எல்லாம் தலையாட்ட முடியாது” என்றவள் தாய், தந்தையை நிமிர்ந்து பார்த்துவிட்டு மண்டபத்தைவிட்டு வெளியேறினாள்.
அவளின் பேச்சில் அதிர்ந்துபோய் நின்ற மதுவைப் பார்த்த கிருஷ்ணாவிற்குதான் வலிக்க அவனும் மணமேடை விட்டு எழுந்துவிட அவனைத் தடுத்தது ஆறுமுகத்தின் குரல்.
“கண்ணா நீ அப்படியே உட்காரு..” என்றதும் கிருஷ்ணா ஒரு நிமிடம் நிதானித்து, “அப்பா கல்யாணம் நின்றால் இப்போ என்ன ஆகபோகுது” என்று எழுந்து செல்ல நினைத்தான்.
அவனைத் தடுத்து “தாமரை நம்ம மதுவை கூட்டிட்டு போய் மணமேடையில் உட்கார வை..” என்ற ஆறுமுகம் சொல்ல, ‘என்னது நானா?’ என்ற அதிர்ச்சியில் சிலையென உறைந்தாள் மது.
திருமணம் நின்றதே போதுமென்று இருந்த கிருஷ்ணா தந்தையிடமிருந்து இப்படியொரு செயலை எதிர்பார்க்காததால் அவனும் திகைப்புடன் அவரையே பார்த்தான்.
திருமணம் என்று வந்த இடத்தில் இப்படியெல்லாம் நடக்குமென்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் அதெல்லாம் அவளின் கண்முன்னே நடக்க தாமரை மெல்ல மதுவின் அருகே சென்றார்.
அவளின் எதிரே நின்றவர், “மதும்மா வா வந்து கிருஷ்ணா பக்கத்தில் உட்காரு..” என்று சொல்ல நிமிர்ந்து அவரின் முகம் பார்த்தவள் எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் கல் மாதிரி நின்றிருந்தாள்.
“உன் அம்மா, அப்பாகிட்ட நாங்க பேசிக்கிறோம் மது. இப்போ வந்து மணமேடையில் உட்காரும்மா. உன் அம்மா எதுவும் சொல்லமாட்டா. அப்படியே சொன்னாலும் அவளை சமாளிப்பது எங்க பொறுப்பு..” என்றவர் கண்களில் கண்ணீர் வழிய கேட்டார்.
மணமேடை வரை வந்து திருமணம் நின்றாலே கிராமத்தில் உள்ளவர்கள் ஒரு மாதிரியாக பேசுவார்.அதுவும் மணப்பெண் எழுந்து சென்ற பின்னால் இனிமேல் தன் மகனுக்கு திருமணம் நடக்கவே நடக்காது என்பதை புரிந்து கொண்ட ஆறுமுகம் மதுவை கிருஷ்ணாவிற்கு திருமணம் செய்துவைக்க நினைத்தார்.
தாமரை மட்டும் இல்லாமல் சங்கீதா மற்றும் தாரிகா எல்லோரும் மதுவிடம் பேச அவள் நிமிர்ந்து கிருஷ்ணாவைத்தான் பார்த்தாள். அவனோ பார்வையில் வேறுபாடு இன்றி அமைதியாக அமர்ந்திருப்பதைக் கண்டு இவளின் இதயத்தில் வலி எழுந்தது.
அந்த நொடி கிருஷ்ணாவைவிட வாழ்க்கையில் எதுவும் பெரிதல்ல என்ற முடிவிற்கு வந்த மது கலங்கும் கண்களைத் துடைத்துக்கொண்டு மணமேடை ஏறினாள். அவனுக்காக தன் காதலை மனதிற்குள் போட்டு புதைத்துவிட்டு அவனின் அருகே சென்று அமர்ந்தவளின் கழுத்தில் மாலை சூட்டினர்.
ஐயர் தாலியை எடுத்து கிருஷ்ணாவின் கையில் கொடுக்க, “மது நிமிர்ந்து பாரு. இந்த தாலியை உன்னிட கழுத்தில் கட்டட்டுமா? உனக்கு இதில் விருப்பம் தானே..” என்றவனின் கேள்வியில் நிமிர்ந்தவள் அவனின் விழிகளை நேருக்கு நேர் பார்த்து சம்மதமாக தலையசைத்தாள்.
அவளிடம் சம்மதம் வாங்கிய மறுநொடியே அவளின் கழுத்தில் மாங்கல்யத்தை கட்டிய கிருஷ்ணா அவளின் நெற்றியில் போட்டு வைத்துவிட்டான். ருத்ராவுடன் நடக்க வேண்டிய திருமணம் மதுவுடன் நடந்தது.
இதெல்லாம் நடக்குமென்று கிருஷ்ணாவும் நினைக்கவில்லை. ஆனால் நடந்த அனைத்துமே கனவு மாதிரி இருந்தது. திருமணம் முடிந்தபிறகு மணமக்களை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றனர்.
வீட்டின் வாசலில் நிற்க வைத்து ஆரத்தி எடுத்தனர். மதுவின் மனமோ அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை. தாய், தந்தையிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் திடீரென்று இப்படியொரு முடிவு எடுத்துவிட்டதை நினைத்து வருந்தியது.
அவர்கள் இருவரும் வீட்டின் உள்ளே நுழையும்போது தாயிடமிருந்து அழைப்பு வருவதைக் கவனித்த மது, ‘இப்போ போன் எடுக்கலாமா?’ என்ற சந்தேகத்தில் நின்றிருக்கவே அவளின் கையிலிருந்த போனை வாங்க கிருஷ்ணா வீடியோ காலில் அவருக்கு அழைத்தான்.
“மது என்னம்மா திருமணம் முடிந்ததா?” என்றவர் கிருஷ்ணாவைப் பார்த்தும், “கிருஷ்ணா நீதான் மாப்பிள்ளையா?” அதிர்ச்சியுடன் கேட்க அவனும் ஒப்புதலாக தலையசைத்தான்.
“ஆமா பொண்ணு யாரு..” என்றவரின் கேள்விக்கு அருகே நின்றிருந்த மதுவின் கைபற்றி இழுத்து, “என்னோட மனைவி..” என்று மதுவை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தான்.
தன்னுடைய மகளை மணக்கோலத்தில் பார்த்த நிர்மலாவிற்கு முதலில் பேச்சே வரவில்லை. அவளை அப்படியொரு கோலத்தில் பார்க்கவே முடியாது என்று நினைத்திருந்தவரின் கண் முன்னே நின்ற மகளைப் பார்த்து அவரின் கண்கள் கலங்கினாலும், தங்களின் விருப்பம் இல்லாமல் இவர்களே முடிவெடுத்தால் அவரின் கோபம் அதிகரித்தது.
முதல் முறையாக பெண்ணை தனியாக திருமணத்திற்கு அனுப்பியது தவறோ என்று நினைத்தவருக்கு கணவனின் பேச்சை மீறி அனுப்பியதை நினைத்து தலையில் அடித்துகொண்டார்.
அப்போது இருந்த கோபம் முழுவதும் அவனின் மீது திரும்பிட, “உங்க வீட்டிக்கு திருமணத்திற்கு அனுப்பி வைத்த பெண்ணை யாரைகேட்டு கல்யாணம் பண்ணினீங்க. அவளுக்கு யாருமில்லை என்ற நினைப்பா? இல்ல வாய்பேச வராதுன்னு நீங்களே ஒரு முடிவெடுத்து இப்படி பண்ணிடீங்களா?” என்றவரின் கேள்வியில் வீட்டிலிருந்த அனைவருமே அதிர்ந்து நின்றனர்.