Puthu Kavithai 26

Puthu Kavithai 26

26

பார்த்திபன் அன்று தான் வெளிநாட்டிலிருந்து திரும்புவதாக இருந்தது. காலை எழுந்தது முதலே மது பரபரப்பாக சுற்றிக் கொண்டிருந்தாள். அவளது பரபரப்பை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் பானுமதியும் சகுந்தலாவும்.

முந்தைய தினமே வீட்டை சுத்தப் படுத்துகிறேன் என்று கூறி தலைகீழாக மாற்றிக் கொண்டிருந்தாள், ஆட்களை வைத்துக் கொண்டு!

“ஏன் மதுக்குட்டி இவ்வளவு சிரமப்படற?” என்று சகுந்தலா கேட்டதற்கு கூட,

“சும்மா இருக்க போரடிக்குது அம்மாச்சி…” என்று கூறியவள், அவளது வேலையை பார்த்துக் கொண்டிருக்க,

“போரடிக்குதா? அப்படீன்னா என்னோட காரமடை வந்து இரேன்… ஒரு பத்து நாளைக்கு… மாடு கன்னை எல்லாம் பாத்துக்க… உனக்கு போரே அடிக்காது மதுக்குட்டி…” அப்பாவியாக சகுந்தலா கூற,

“அந்த மாட்டையெல்லாம் நீயே பாத்துக்க… எனக்கு இங்க நெறைய வேலை இருக்கு…” என்று கழுத்தை நொடித்து விட்டு போக,

“உனக்கு போரடிக்குதுன்னு தான சொன்னேன் மதுக்குட்டி…”

“நாளைக்கு மாமா வந்துட்டா பொழுது தானா போக போகுது… அங்க வந்து உக்கார்ந்துக்கிட்டு உன் மூஞ்ச மட்டும் பார்த்துட்டு இருக்க சொல்றியா?” சிரிக்காமல் கேட்டவளை ‘அடிப்பாவி’ என்று பார்த்து வைத்து,

“எல்லாம் நேரம் தான்…” என்று சிரித்தபடி நகர்ந்தார் சகுந்தலா.

இவ்வளவிற்கும் தினம் போனில் பேசிக்கொண்டு தான் இருந்தான் பார்த்திபன், மதுவிடம்!

நாள் தவறாமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசி விடுவான். என்ன நடந்தது என்று கேட்கவில்லை என்று கேட்காமல் அவனாலும் இருக்க முடியாது, என்ன நடந்தது என்பதை அவளாலும் சொல்லாமலிருக்க முடியாது.

அதுவும் விடுமுறை என்பதால் அவள் தனிமையை உணரக் கூடாது என்று என்ன வேலையிருந்தாலும் அழைத்து விடுவான். அவன் அழைக்கவில்லை என்றால் மது, அழைத்து விடுவாள். வேலை இருக்கும் பட்சத்தில் கூட இரண்டு நிமிடமாவது அவன் பேசாமல் வைத்ததில்லை.

பானுமதி மதுவை திட்டியபோதும் கூட, உடனே அவனுக்கு அழைத்தவள், கொட்டித் தீர்த்து விட்டாள்.

“என்னை ஏன் மாமா உங்க அக்கா கிட்ட விட்டுட்டு போனீங்க?” என்று எடுத்தவுடன் கேட்க, மறுபுறம் அவனுக்கு புரியவே இல்லை.

“என்னடா? என்னாச்சு?” என்று சற்று பதட்டத்தோடு கேட்க,

“எப்பப் பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்காங்க…” என்றவுடன் தான் சற்று நிம்மதியானது அவனுக்கு.

மீண்டும் இருவருக்கும் முட்டிக் கொண்டது போல! சகுந்தலாவும் சரி, பானுமதியும் சரி, அவன் இருக்கும் போது, அவன் முன்னால் எதுவும் பேச மாட்டார்கள். அவனிடம் அந்த பயமுண்டு!

ஆனால் அவன் இல்லாத போது, சகுந்தலாவை விட பானுமதி மதுவை கொட்டுவார் என்பது தெரிந்ததுதான். அவருக்கு சற்று அவசரம். பொறுமை சற்று குறைவு. மது, பார்த்திபனோடு ஒட்டாமல் வாழும் வாழ்க்கையை பார்க்கும் போது அவருக்கு அத்தனை கடுப்பாக இருந்தது.

ஒருபுறம் உடன் பிறந்த தம்பியின் வாழ்வை சீரழித்து விட்டோமோ என்ற பயம். மறுபுறம், இருவருக்கும் ஒத்துவராமலே போய் விடுமோ என்ற நடுக்கம்.

பத்தொன்பது வயதில் குடும்ப வாழ்வை தொடங்க கூடாதா என்ற கேள்வி வேறு அவருக்கு… தனக்கும் இதே வயதில் திருமணமாகியதை மதுவிடம் மீண்டும் மீண்டும் சொல்லி, அவளை நறுக்கிக் கொண்டே இருந்தார்.

எப்படியாவது, எதையாவது பேசி, இருவரையும் ஒன்றாக்க முடியாதா என்ற ஆர்வத்தில் எதையாவது மதுவிடம் பேசுவது அவரது வாடிக்கை. இதை பார்த்திபனும் அறிந்திருந்தான். அவள் தான் தும்மினால் கூட அதை பார்த்தியிடம் தெரிவித்து விடுவாளே!

அப்போதெல்லாம், “அதையெல்லாம் கண்டுக்காத மது… பெரியவங்க அப்படித்தான் சொல்வாங்க…” என்று அவளை சுலபமாக சமாதானம் செய்து விடுவான்.

ஆனால் இத்தனை ஆயிரம் கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் போது அவனால் என்ன செய்து விட முடியும்? பானுமதி மீதான அவளது கோபம் அவனுக்கு ரொம்பவுமே சிறுபிள்ளைத்தனமாக இருந்தது.

“அப்படி என்ன உங்கம்மா திட்டினாப்ல?” புன்னகையோடு அவன் கேட்க,

“எங்கம்மான்னு சொல்லாதீங்க… உங்கக்கா…” ரோஷத்தோடு அவள் கூறியதை கேட்டவனுக்கு இன்னுமே சிரிப்பாக இருந்தது.

“சரி…” என்று ஒத்துக்கொண்டவன், புன்னகையோடு, “எங்கக்கா என்ன சொன்னாப்ல?” என்று கேட்க,

அவனது கேலியான கேள்வி அவளை இன்னமும் எரிச்சல்படுத்த, “ம்‌ம்‌ம்… சொரக்காய்க்கு உப்பில்லையாம்…” என்று கோபமாக கூறினாள்.

“அப்படியா? நீதான கிராசரி லிஸ்ட் போட்ட, உப்பை மறந்துட்டியா மதுக்குட்டி?” என்று அதற்கும் சிரிக்க,

“மாமா…” பல்லைக் கடித்தாள் மது.

“ஓகே ஓகே… என்னாச்சுடா? அதை சொல்லு…” என்று சிரிப்பை குறைத்துக் கொண்டு அவன் கேட்க,

“நான் தத்தியாம்… உங்க லைஃப்பையும் கெடுக்கறேனாம்… என்னோடதையும் கெடுத்துட்டு இருக்கேனாம். நான் என்ன மாமா பண்ணேன்? நானா கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேட்டேன்? வேண்டாம்னு தான சொன்னேன்? என்னை என்னமோ பனிஷ் பண்றதா நினைச்சுக்கிட்டு உங்களுக்கு பனிஷ்மெண்ட் கொடுத்துட்டாங்க… இப்ப இப்படி பண்ற… அப்படி பண்றன்னு எப்ப பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்காங்க…” அவளையும் மீறி மனதுக்குள் இருந்தவை எல்லாம் வெளியே வந்தது.

சொல்ல ஆரம்பித்தாளே தவிர அவளால் முடிக்க முடியவில்லை. குரல் அழுகையில் தேய்ந்தது. அழுகை ரொம்பவும் அதிகமாக, அவளால் பேச முடியாமல் போக, அந்த பக்கத்தில் பார்த்திபனின் மனதுக்குள் தவிப்பு. அவளை இழுத்து அணைத்துக் கொள்ள வேண்டும் போல தோன்றியது!

ஆனால் அதற்கு முன் அவனுக்கு சிலவற்றை தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

லேசாக செருமிக் கொண்டவன், “இந்த மேரேஜை பனிஷ்மெண்ட்டா நினைக்கிறியா மது?” என்று கேட்க, அவனது கேள்வியில் அதிர்ந்து விழித்தாள்.

இந்த திருமணம் தண்டனையா?

அப்படி நினைத்தாளா?

நினைக்காமல் எப்படி சொல்ல முடியும்?

முதலில் அப்படி நினைத்திருக்கலாம். ஆனால் இப்போது அந்த நினைப்பு சுத்தமாக இல்லையே. சொல்லப் போனால் இந்த வாழ்க்கை அவளுக்கு ரொம்பவுமே பிடித்து இருந்தது.

பார்த்திபனை பார்க்காமல், அவனுடன் பேசாமலிருப்பது தான் தண்டனையாக இருக்கிறதே! திருமணத்திற்கு முன்னர் அவனை சற்று கடுமையான ஆசிரியனைப் போல என்று நினைத்திருந்தவள் தான், ஆனால் இப்போது ஒருநாள் அவனுடன் பேசாமலிருந்தாலும் எதையோ இழந்ததை போல அல்லவா இருக்கிறது!

இதன் அர்த்தம் என்ன?

உடல் முழுவதும் சில்லென்ற உணர்வு பரவியது!

ஷாலினியை பார்த்திபனோடு சேர்த்து வைத்து கலாய்த்து இருக்கிறாள். அஞ்சலியோடு அவனுக்கு என்ன உறவு என்பதும் அவளுக்கு தெரியும். எதுவும் அறியாதவள் அல்ல மது. சஞ்சய்யை காதலிப்பதாக நினைத்துக் கொண்டிருந்தவள். அவனோடு பிணக்கு வந்தபோது வெகு இயல்பாக அவனை கடந்து வர முடிந்தது. பிரச்சனையின் போது பார்த்திபனை தான் முதலில் தேடியது மனம்! அவனால் மட்டும் தான் தன்னை பாதுகாக்க முடியும் என்று தோன்றியதாலா? தன்னால் பார்த்திபனை அப்படி இயல்பாக கடந்து விட முடியுமா? அது நடக்கக் கூடியதா?

இல்லவே இல்லையென்று முரண்டியது மனம்!

ஒரு வேளை பார்த்திபன் அப்படி நினைக்கக் கூடுமா?

திக்கென்று இருந்தது! அதனால் தான் அவன் ஒதுங்கியே இருக்கிறானோ? காரமடையில் அவள் அவனது கண்ணில் கண்ட மயக்கத்தை கூட பொய் என்றாக்கிவிட்டிருந்தான் அல்லவா!

“இப்ப நான் அப்படி எதுவுமே நினைக்கல மாமா…” என்று கூற, குரல் நடுங்கியது.

“அப்படீன்னா முன்னாடி அப்படி நினைச்சியா மது?” ஆழ்ந்த குரலில் கேட்டவனின் குரல் அப்படியே அவளது நெஞ்சுக்குள் இறங்கியது.

“ஆரம்பத்துல மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு மாமா. ஆனா இப்ப அப்படி எதுவுமே இல்ல. இன்ஃபாக்ட் ஐ அம் வெரி கம்பார்ட்டபிள் நவ்…”

உண்மையை தான் கூறினாள். மனதுக்குள் என்னவோ சலனங்கள்… ஒதுக்கவும் முடியவில்லை… ஒப்புக் கொள்ளவும் பயமாக இருந்தது. அவளது அம்மாச்சியையும், அம்மாவையுமே அப்படி வறுத்தெடுப்பவன், தன்னை என்ன சொல்வான்?

உள்ளுக்குள் சிலபல நிலநடுக்கங்கள்!

ஆனால் அவள் சொன்னதை கேட்ட பார்த்திபனுக்கு வெகு சந்தோஷம். ‘கம்பார்ட்டபிள் சரி… காதல்?’

“அப்புறம் எப்படி மது எனக்கு மட்டும் பனிஷ்மெண்ட்ன்னு நினைக்கற?”

“அப்படீன்னா அப்படி இல்லையா மாமா?”

“எப்படீன்னா எப்படி இல்ல?” அவனது குரலில் குறும்பு மீண்டிருந்தது.

“மாமா…” சிணுங்கினாள் மது. அந்த குரல் அவனை வசியப்படுத்தியது! என்னன்னவோ செய்ய தோன்றியது.

“சரிடீ… எங்கக்காவ கூப்பிடு… என் பொண்டாட்டிய எதுக்கு திட்டினான்னு கேக்கறேன்…”

“இதோ கூப்பிடறேன்… நல்லா திட்டி விடுங்க… நீங்க திட்ற திட்டுல அவங்க ஊருக்கே ஓடி போய்டனும். இனிமே கோயம்பத்தூர அவங்க கனவுல கூட நினைக்கக் கூடாதாக்கும்… சொல்லிட்டேன்…”

ரொம்பவும் தீவிரமான குரலில் அவள் கூற, பார்த்திபனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அப்போதிருந்த உல்லாசமான மனநிலை அவனை என்னவோ செய்தது!

“அடிப்பாவி… அம்மான்னு கூட பாக்காம நாத்திய தொரத்த பாக்கற பாத்தியா… அங்க நிக்கற மது…” என்று அவன் சிரிக்க,

“அவங்க மட்டும் என்னை பொண்ணா நினைக்காறாங்களா? அவங்க தம்பி லைஃப்பை நான் என்னவோ கெடுத்துட்டு இருக்க மாதிரி பேசறாங்க…”

சீரியஸான தொனியிலேயே அவள் கூற, அடக்கமாட்டாமல் அவன் சிரித்தான்.

“சரி சரி… எங்கக்காவ கூப்பிடு… இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு பார்த்துடலாம்…” அவனும் அவளைப் போலவே கூற, செல்பேசியை எடுத்துக் கொண்டு தங் தங்கென்று நடந்து வந்தவள், பானுமதியிடம் பேசியை நீட்டப் போனவள், அவசரமாக ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு,

“உன் தம்பிக்கிட்ட பேசு…” விறைப்பாக கூறினாள்.

“போட்டுக் கொடுத்துட்டியா?” என்றபடியே பேசியை வாங்கிய பானுமதி, ஸ்பீக்கரை ஆஃப் செய்யப் போக,

“ஸ்பீக்கர்ல பேசு… மாமா உன்னை திட்டறதை நானும் கேக்கணும்…” என்று பானுமதியின் கையை தட்டி விட்டாள் மது.

“உன்னோட ரவுசு பெருசா இருக்குடி…” என்று நொடித்த பானுமதி, பேசியை காதுக்கு கொடுத்து,

“சொல்லு பார்த்தி…” என்று கூற,

“என் பொண்டாட்டிய என்ன சொன்ன?” என்று எடுத்ததும் அவன் கேட்ட கேள்வியில் உண்மையில் இனிமையாக அதிர்ந்தார் பானுமதி.

“உன் பொண்டாட்டிய நான் என்ன சொல்லப் போறேன்?” என்று மெல்லிய சிரிப்போடு அவர் கேட்க,

“அப்புறம் ஏன் அப்படி அழறா?”

“ஏன்டா தம்பி… அவ அழுகறதுக்கு நான் என்ன பண்ண முடியும்?”

“அழற மாதிரி என்ன சொன்ன?”

“என் பொண்ணை நான் எதுவுமே சொல்லக் கூடாதா?” பெற்ற பெண்ணை கணவனோடு இணக்கமாக இரு என்று சொன்னது ஒரு குற்றமா? ஆனால் அதுவும் சந்தோஷமாகத்தான் இருந்தது. இருவருக்கும் எல்லாம் சரியானால் போதுமே!

“உன் பொண்ணை என்ன வேண்ணா சொல்லிக்க, ஆனா என் பொண்டாட்டிய ஒண்ணும் சொல்லக் கூடாது. இதுக்காகத்தான் உன்னை அங்க விட்டுட்டு வந்தேனா?” என்று லேசான சிரிப்போடு சொல்ல,

“மாமா… சிரிக்காம திட்டுங்க…” அருகில் அமர்ந்து கொண்டு பேசியில் தன் காதையும் வைத்திருந்த மது குரல் கொடுக்க,

“வந்து இருக்கு கச்சேரி… எப்படி என் பொண்டாட்டிய திட்டுவன்னு கேக்கறேன் மதுக்குட்டி… டோன்ட் வொர்ரி… உன் நாத்தனாரை வீட்டை விட்டு தொரத்தறதுதான் அடுத்த டார்கெட்… ஓகே வா?” என்றான் சிரித்தபடி!

“ஹேய்யியியி…” என்று எழுந்து நின்று குத்தாட்டம் போட்டவளை பார்த்து தலையிலடித்துக் கொண்ட பானுமதி,

“எப்பா சாமி… நல்ல தம்பி… அவனுக்கு இப்படியொரு பொண்டாட்டி… எப்படியோ போங்க…” என்று அவனிடம் சலித்துக் கொண்டு, அந்த கதையை தாயிடம் கூறப் போனார்.

அதே சந்தோஷத்தோடு தான் சகுந்தலாவும் வந்தார், அடுத்த நாள் கோவை வரும் மகனையும் பார்த்தது போலவும் இருக்குமென்று!

முதல் நாள் வீட்டை ஒழுங்குபடுத்துகிறேன் என்று தலைகீழாக்கியவள், இரவுணவுக்கு தான் ஓய்ந்தாள், நடுநடுவே அம்மாச்சியையும் பானுமதியையும் கலாய்த்தபடி!

“ஏய் செல்லாத்தா… என்ன பண்ற நீ?” கையில் காஃபி டம்ப்ளரோடு பானுமதியை நோக்கி போன செல்வியை இழுத்து வைத்து வம்பிழுத்தாள்.

“அம்மாவுக்கு காஃபி கொடுக்கணும் கண்ணு…”

“அந்த வேஸ்ட் லக்கேஜுக்கு காஃபி ஒண்ணுதான் குறைச்சல்… அதை அங்க வெச்சுட்டு இந்த தொட்டிய புடி…” செல்வியை வம்பிழுத்ததும் இல்லாமல், பானுமதியை வேஸ்ட் லக்கேஜ் என்று வேறு அசிங்கப்படுத்தி அவளது அட்டகாசங்களின் எல்லைகளை அதிகப்படுத்த, அவளது சிண்டை பிடிக்க தயாரானார், பானுமதி.

“ஏய் வேணா… அடங்கு… ரொம்ப ஆடாத…” என்று ஒரு விரலை காட்டி அவர் எச்சரிக்க, பதிலுக்கு அவளோ,

“அம்மாச்சி…” என்று கத்த, அமர்ந்திருந்த சகுந்தலா, யாருக்கு ஆதரவு கொடுப்பது என்று தெரியாமல், கடைசியில் எப்படி இருந்தாலும் மருமகளே துணை என்று அவள் பக்கம் சாய்ந்தார்.

“என்ன மதுக்குட்டி?”

“இங்க பார் அம்மாச்சி… உன் பொண்ணை வந்தமா போனமான்னு இருக்க சொல்லு. ரொம்ப தலையிடலாம்னு நினைச்சா என்னோட இன்னொரு ஃபேஸை காட்ட வேண்டியிருக்கும்… சொல்லி வை…”

“ஆனாலும் ரொம்பத்தான் ஆடறா உன் பேத்தி…” பானுமதி, அவரது பங்குக்கு, சகுந்தலாவை இடித்து விட்டு போக, இரண்டு பேருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு விழித்தார்.

பேச்சுதான் இப்படியே தவிர, வியர்க்க விறுவிறுக்க வேலை செய்து கொண்டிருந்தாள், செல்வியையும் சின்னதம்பியையும் ஆட்டி வைத்தபடி!

வேலையெல்லாம் முடித்து, குளித்து முடித்து, கண்ணாடி முன் தவம் கிடந்தாள்!

ஒரு ஆடையை அணிந்து பார்த்தவள், தாடையை தட்டிக் கொண்டும், மூக்கை சுருக்கிக் கொண்டும், உதட்டை அஷ்ட சேஷ்டைகள் செய்தபடியும் சரி பார்த்தவள், திருப்தி இல்லாமல், மாற்றினாள்.

ஷார்ட்ஸ், மினிஸ் போன்றவற்றை இப்போதெல்லாம் அவளாகவே அணிவதில்லை. பார்த்திபன் ஏதாவது சொல்வானோ என்ற பயம் மாறி, அவளாகவே அதை தவிர்க்க ஆரம்பித்து இருந்தாள். அதிலும் அன்றொருநாள் அவன் சேலை கட்டிவிட்டபோது அவனது மயக்கத்தை கவனித்து இருக்கிறாள்.

ஒருவேளை அவனுக்கு சேலை மிகவும் பிடித்த உடையோ?

பார்த்திபன் வரும் போது அவனை இம்ப்ரெஸ் செய்தேயாக வேண்டும் என்பது போல மனதுக்குள் ஒரு தவிப்பு! அது ஏனென்று அவளுக்கு புரியவில்லை. புரிவது போல இருந்தாலும், அதை சவுகர்யமாக தள்ளி வைத்தாள்.

ஏதாவது எதிர்மறையாக அவன் கூறிவிட்டால் அவள் உடைந்து விடுவாள் என்பதும் திண்ணமாக தெரிந்தது. அதை எதிர்கொள்ளத்தான் மனதுக்கு தைரியம் போதவில்லை!

அவன் எப்போதும் வெளியூர் செல்வான் தான். அதுவும் மூன்று நான்கு நாட்கள் வரை கூட அவளை விட்டு பிரிந்து இருந்திருக்கிறான். ஆனால் மொத்தமாக இருபது நாட்கள், திருமணத்திற்கு பின், அவளை விட்டு பிரிந்து இருப்பது இப்போதுதான்.

முழுதாக இருபது நாட்கள் பார்க்காமல் இருந்தது தான் அவளை என்னமோ செய்தது. இது கல்லூரி சமயத்தில் வந்த பிரிவென்றாலும் பரவாயில்லை. கல்லூரி போய்விட்டு வருவது என இருக்கும் போது, பெரிதாக இந்த பிரிவாற்றாமை வந்து படுத்தாது. ஆனால் இப்போதோ, அத்தனை கஷ்டமாக இருந்தது.

இருபது நாட்கள், இருபது வருடங்களை போல நீண்டது!

தலைவனை பாராமல், இளைத்து, கை வளைகள் தாமாக கழலும் நிலையிலிருந்தாள் மது.

‘என்னுடைய கழல்வளையைத் தாமும் கழல் வளையே யாக்கினரே…’ என்ற கோதை நாச்சியாரின் நிலை பரிதாபத்துக்கு உரியதல்லவா! தலைவனை பாராத தலைவி எதிர்கொள்ளும் இடும்பைகள் ஒன்றா இரண்டா? ஆனால் என்ன… அதை அவள் உணரவில்லை. உணரவும் தயக்கமாக இருந்தது.

மீண்டும் மீண்டுமாக வேறு வேறு உடைகளை அணிந்து பார்த்து விட்டு, கடைசியாக ஒரு சேலையை எடுத்தாள்.

திருமணத்திற்காக தன் அன்னை எடுத்து, விடாப்பிடியாக பிலௌஸ் தைத்து தந்தது. மீண்டும் இன்று தான் கையிலெடுத்து பார்க்கிறாள். சிவப்பு நிற ஷிபான் டிசைனர் சேலை. அவளது நிறத்தை வெகுவாக தூக்கிக் காட்டியது. மென்மையான அந்த சேலையை வருடிப் பார்த்தாள்.

மிகவும் பிடித்திருந்தது!

பார்த்திபனுக்கு பிடிக்குமா?

அவனுக்கு ஏன் பிடிக்க வேண்டும் என்று அவள் யோசிக்கவில்லை. பிடிக்கவில்லையென்றால்? கொஞ்சம் பயம் வந்தது!

அவளுக்கு பிடித்த அந்த சேலையை பொறுமையாக அணிந்தாள். அதே நிதானத்தோடு தலைவார, வெளியே சப்தம் கேட்டது.

“பார்த்தி… எப்படிப்பா இருக்க?” என்று சகுந்தலா கேட்கும் சப்தம் கேட்டது. அவசரமாக பின்னலிட்டவள், எடுத்து வைத்த மல்லிகை சரத்தை வழிய விட்டாள்.

“சூப்பரா இருக்கேன்… நீ எப்பம்மா வந்த?”

தாயிடம் விசாரித்துக் கொண்டிருப்பான் போல, “நேத்து தான் சாமீ… ரெண்டு பேரையும் பார்த்துட்டு போலாம்ன்னு வந்தேன்…” என்று கூற,

“ஓகே ஓகே… சரி மது எங்க?” என்று கேட்க,

“ரூம்ல இருக்கா.. இரு கூப்பிடறேன்…” என்று சகுந்தலா கூற,

“இல்ல பரவால்ல… நான் பாத்துக்கறேன்…” அவசரமாக மறுமொழி கூற,

“சாப்பிடு பார்த்தி…”

“பிளைட்ல சாப்ட்டுட்டேன்…” என்றவன், “டயர்டா இருக்கும்மா…” என்று முடித்து விட்டதும் கேட்டது மதுவுக்கு!

சகுந்தலா ‘அடப்பாவி’ என்பதை போல பார்க்க, “அவன் அடப்பாவி ஆகி ரொம்ப நாளாச்சு… இப்பத்தான் உனக்கு தெரியுதா?” என்று பானுமதி கிண்டல் செய்வதும் கேட்க, மெல்லிய புன்னகை படர்ந்தது அவளது உதட்டில்.

‘உனக்கு டைம் மேனேஜ்மெண்ட்டே இல்ல மது…’ என்று தன்னைத் தானே திட்டியவள், அவசரமாக பொட்டை ஒட்டி, கண்ணாடியில் சரி பார்த்துவிட்டு, மோதிர விரலால் குங்குமத்தை எடுத்தாள்.

கையை உயர்த்தி நடு வகிட்டில் குங்குமத்தை வைக்க, மதுவுக்கு பின்னிருந்த சுவரில் சாய்ந்தபடி நின்று கொண்டு அவளையே பார்த்திருந்த பார்த்திபனை கண்டவள், அனைத்தையும் மறந்து, உறைந்தாள்!

அவனையே பார்த்தபடி!

error: Content is protected !!