Sirpiyin Kanavugal – 4
Sirpiyin Kanavugal – 4
அத்தியாயம் – 4
அன்று வானம் ஏனோ இருள்சூழ்ந்து மழை வரும் நிலையில் இருக்க சித்தார்த் வழக்கம்போல வேலைக்குக் கிளம்பி கீழே வந்தார். அதே நேரத்தில் கேம்பஸ் கிளம்பிய மேகாவை அழைத்துக்கொண்டு அண்ணனின் வீட்டிற்குள் நுழைந்தாள் திவ்யா.
“வாம்மா மேகா இன்னைக்கு கேம்பஸ் முதல் நாள் போகிறாயா” என்று அவளை அருகில் இருந்த கதிரையில் இருக்க வைத்தார்.
“ஆமா மாமா” என்று சொல்லும் போது வழக்கம்போல தன்னறையில் இருந்து கம்பீரமாக வெளியே வந்தவனைப் பார்த்தும் கோபத்தில் முகத்தைத் திருப்பினாள்.
வெள்ளை நிற சுடிதாரில் தேவதை போல இருந்தவளை கண்டதும், ‘என்ன நேற்று அத்தனை பேசிட்டு சிடுமூஞ்சி முதல் ஆளாக வந்து இருக்கிறாய்’ என்று பார்வையில் அவளின் கோபத்தை தூண்டிவிட்டான்.
சிகப்பு நிற சட்டையும் புளூ கலர் ஜீன்ஸில் வயதிற்கு ஏற்ற உயரத்துடன் கண்ணில் கனலை கக்கும் பார்வை கண்டு, ‘திருட்டு ராஸ்கல்’ என்று இதழசைத்தாள்.
அவளின் பார்வையை கவனிக்காத பாவனையுடன், “அம்மா கேம்பஸ்க்கு நேரமாகிறது” என்று சமையலறை நோக்கி குரல் கொடுத்தான்.
அவனின் குரல்கேட்டு திரும்பிய நந்தினி, “அங்கே தான் அப்பம் சாம்பாரும் இருக்கு சாப்பிடு. நான் வந்து உனக்கு தீத்திவேற (ஊட்டிவிட) விடணுமா?” அவரின் எரிச்சலோடு கூற சித்தார்த் மகனைப் பார்த்தார்.
அவரின் பேச்சில் மேகா தன்னையும் மீறி சிரித்துவிட, “ம்ம் உங்க மருமகள் முன்னே என்னை முறைக்க வேண்டாம்” என்று மெல்லிய குரலில் இயம்பிவிட்டு சாப்பாட்டில் கவனத்தை திருப்பிவிட்டான்.
“என்ன முகில் மாமியுடன் இன்னைக்கு நீ பேசாமல் இருக்கிறாய்” கேள்வியாக புருவம் உயர்த்தினார் சித்தார்த்.
“மாமி மகளை கூட்டிட்டு போவன் என்று சொல்ல வந்திருக்கிறார். அதனால் இன்று அவரோடு நான் கதைப்பதில்லை” என்றான். முகில் எதுவாக இருந்தாலும் நேரடியாக பேசுவதால் அவனை திவ்யாவிற்கு மிகவும் பிடித்தம்.
அவனின் பேச்சில் வெளிப்பட்ட வேண்டாவெறுப்பைக் கண்டு, ‘எனக்கு இது தேவையா?’ தாயை முறைத்தாள் மேகா. சித்தார்த், திவ்யா, முகில், மேகா அனைவரும் சாப்பிட்டு எழும் போது அங்கே வந்தார் நந்தினி.
அவரையும் கண்டுகொள்ளாமல் பைக் சாவியை எடுத்தவன், “அப்பா, அம்மா, மாமி போயிட்டு வாறன்” என்று அவன் வாசல் வரை செல்ல, “முகில்” என்ற நந்தினியின் குரல்கேட்டு ஜன்னலை வழியாக எட்டிப் பார்த்தார்.
அங்கே கேட்டின் அருகே முகில் பைக்கில் நின்றிருக்க அவனின் அருகே நின்ற மேகாவைப் பார்த்து கேள்வியாக புருவம் உயர்த்தினார். இன்று கேம்பஸ் முதல்நாள் என்பதால் முகிலுடன் மேகாவை அனுப்பும் முயற்சியில் இறங்கியிருந்தார் நந்தினி.
முகிலன் – மேகா இருவரும் சரியான சண்டை கோழிகள். இரண்டுக்கும் சண்டை வந்தால் அதில் நந்தினி தருணின் தலைதான் உருளும். அந்த இருவரையும் எப்படி சேர்க்க போகிறோமோ என்ற சிந்தனையுடன் இத்தனை வருடங்கள் கடந்த பிறகு அதற்கான விடை மட்டும் இன்றும் கிடைக்கவில்லை.
“தம்பி மேகாவையும் உன்னோடு கூட்டிட்டுப் போவன்” என்ற தாய்க்கு அவன் மறுப்பாக தலையசைத்துவிட்டு அருகே தயாராகி நின்றவளை கனல் பார்வை பார்த்து வைத்தான்.
அவனின் மனக்கண்ணில் நேற்று நடந்தது படமாக விரிந்தது.
மாலை வழக்கம்போல டென்னிஸ் கிளாஸ் முடித்துவிட்டு வீடு வந்தவனைகே கண்ட தருண், “வழமையான வரும் நேரம் கடந்தது போலும்” என்றார்
அவரின் கேள்விக்கு பதில் உடைக்காமல் உதட்டில் புன்முறுவலுடன் அவனின் எதிரே அமர, “அப்பா” என்று தந்தையுடன் கதைக்க வந்த மேகா வந்த வார்த்தைகள் தொண்டைக்குளிக்குள் சிக்கிக்கொள்ள அவனோ வேண்டா வெறுப்பாக அவளைப் பார்த்தான்.
“என்னம்மா ஏதோ கதைக்க வந்து பாதியில் நிறுத்தியது போல இருக்கு” என்றவர் மகளை இழுத்து மற்றொரு பக்கம் அமர, “மாமா எனக்கு கொஞ்சம் தலையிடி(தலைவலி) நான் வீட்டிற்கு போறன்” வேகமாக எழுந்தான்.
அவனை கனல் பார்வை பார்த்தது மட்டும் இல்லாமல், ‘என்னைக் கண்டாலே இந்த ஆளுக்கு வந்துவிடுமே தலையிடி’ என்று நினைத்தை அவள் பார்வையில் வெளிபடுத்தினாள்.
அதற்கு ஏதோவொரு காரணம் இருக்குமென்று அவன் நினைக்கும்போது கையில் தேத்தண்ணி(தேனீர்) வந்த திவ்யா, “டென்னிஸ் வகுப்பு இன்று வழமைக்கு மாறாக நேரத்தில் முடிந்தது போலும்” என்று கேலியுடன் வினாவிட அவரின் குறும்பில் அவனின் முகம் மலர்ந்தது.
“ஆமாம் மாமி” எனவும் அவனின் கையில் தேத்தண்ணி கொடுத்தவர், “என்ன மேகா அப்பாவிடம் சொல்லிவிட்டாயா?” என்று கேட்க அவளின் முகமோ சிவக்க முகிலனை முறைத்தாள்.
அவனை நிற்க வைத்து சொல்ல வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்க, “அப்பா நாளைக்கு கேம்பஸ் முதல்நாள். நான் வழமைபோல சைக்கிளில் போறன்” என்றாள். அவள் ஸ்கூல் போக வாங்கிக் கொடுத்த சைக்கிளில் அவள் செல்வதாக சொன்னதும் தருணின் முகம் சிந்தனையுடன் முகிலனை நோக்கியது.
திவ்யா அமைதியாக இருக்க, “அது வேண்டாம்மா. நீ முகிலனோடு நாளைக்கு கேம்பஸ் போவன்” என்றதும் எழுந்தாள் மகள்.
“இந்தாளுடன் நான் போவதென்றால் நான் கேம்பஸ் போகவில்லை. நான் தனியாக போகிறேன் என்று கதைக்கிறேன். நீங்க என்னை அந்தளோடு போக சொல்கிறீர்” என்று தந்தையுடன் சண்டைக்கு வந்தாள்.
அவளின் பேச்சில் இவனுக்கு சுர்ரென்று கோபம் வந்துவிட, “மாமி நான் வீட்டிற்கு போறன்” என்று சொல்லிவிட்டு அவன் சென்றதும் திவ்யா அவளை பிலுபிலுவென்று பிழிந்தது மட்டும் இன்றி, “நாளை நீ அவனோடுதான் கேம்பஸ் போறன். இல்ல நீர் படிக்கவே செல்ல வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
அவளின் பேச்சில் தன்னை அவமான படுத்தியதாக நினைத்தவன் அதற்கான வாய்ப்புக்காக அமைதியாக இருந்தான். நேற்று தனியாக செல்வேன் என்று சொன்ன ஒரே குத்ததிற்கு இப்போது அவளை உடன் கூட்டிச்செல்ல முடியாது என்று வேண்டுமென்றே மறுத்தான். அவள் முகம் அவனின் மீதான வெறுப்பை பிரதிபலிக்க அவனுக்குள் கோபம் கன்றியது,
நந்தினியின் பேச்சிற்கு சிலைபோல நின்றவனை பார்த்து நந்தினி பொறுமை இழக்கும் சமயம், “கண்ணா மாமிக்காக அவளை கூட்டிட்டுப் போவன்” என்ற திவ்யாவின் குரல்கேட்டு அவனின் முகம் கனிந்தது.
முகிலன் சரியான அத்தை செல்லம். அத்தை சொல்லிவிட்டால் அதற்கு சரி என்ற வார்த்தை தவிர்த்து வேறு எதுவும் வராது. இப்போதும் அவரின் பாசத்திற்கு கட்டுப்பட்டு, “மேகா சொல்லிட்டு சீக்கிரம் வாறன்” என்றான்.
அவள் தாயிடம் தலையசைத்துவிட்டு திரும்பி மேலே பார்க்க அங்கே ஜன்னலில் மாமனின் முகம் காணாமல் கலங்கிய விழியுடன் திரும்ப, “மேகா பார்த்து போயிட்டு வாம்மா” என்றதும் அவளின் இதழ்களில் புன்னகை அரும்பியது.
மேகா அப்படியே முகிலனுக்கு எதிர்துருவம். அவளுக்கு மாமா சித்தார்த்திடம் சொல்லவில்லை என்றால் மற்ற எதுவும் சரியாக நடக்காது. சரியான மாமா செல்லம். அவளை பள்ளிக்கு அனுப்பியதில் இருந்து இன்று கேம்பஸ் செல்லும் வரை அவளுக்கு மாமாதான் வேண்டும்.
“சரி மாமா போயிட்டு வாறன்” என்று முகிலனோடு பைக்கில் ஏறியதும் அவன் வேகத்தில் செல்ல, “கொஞ்சம் மெதுவா போங்க” என்றாள் சிடுசிடுப்புடன்.
“சரியான சிடுமூஞ்சி. நீ இன்னைக்கு கேம்பஸ் வா உனக்கு யாரென்று காட்டுறன்” அவன் வாய்விட்டு கூற, “நான் இதற்கெல்லாம் பயந்தவள் அல்ல” என்றாள் வீராப்புடன்.
முகிலனுக்கு இது இறுதி வருடம். மேகா முதலாம் ஆண்டு மாணவி. அந்த முறையில் பார்க்கும்போது கேம்பஸ் உள்ளே நுழைந்த பிறகு யாராக இருந்தாலும் ராகிங் கட்டாயம் உண்டு.
அவன் கேம்பஸ் உள்ளே நுழைந்ததும், “மேகா இறங்கி வகுப்புக்கு போ” அவள் எதுவும் பேசாமல் சென்றுவிட தன் உயிர் தோழன் எழிலரசனைத் தேடிச் சென்றான் முகில்.
அவர்கள் வழக்கமாக அமரும் மரத்தடியில் அவன் அமர்ந்திருக்க அவனின் எதிரே நின்ற பெண்ணின் முகத்தில் வந்து சென்ற கலவையான உணர்வுகளை கவனித்தபடி, ‘நிவி’ என்ற சிந்தனையுடன் அவர்களை நெருங்கினான்.
“என்னை மன்னித்துவிடும். நான் அப்பா பார்த்த மாப்பிள்ளையைத் திருமணம் செய்ய போறன்” என்றவளின் பதிலில் கொஞ்சம் திகைத்துத்தான் போனான் முகில்.
எழிலரசனை கேம்பஸ் வந்த நாளில் இருந்து துரத்தி துரத்திக் காதலித்தவள் இன்று வேறு ஒருவனை திருமணம் செய்ய போவதாக சொல்லவதைக் கேட்டதும் முகிலுக்கு கோபம் வந்தது. ஆனால் அவளின் எதிரே அமர்ந்திருந்தவனோ கற்சிலை போல எந்தவிதமான அசைவும் இல்லாமல் இருக்க கண்டு கேள்வியாக புருவம் உயர்த்தினான்.
அவளை இமைக்காமல் நோக்கினான் மூன்று ஆண்டுகளாக தன்னை கதைப்பதாக சொல்லி சுற்றி வந்தப்பெண். இன்று அவளின் பேச்சில் அவனின் மனம் காயப்பட்டதா? அதற்கு மனதின் பதிலோ இல்லைதான்.
அவனும் ஒரு முடிவுடன் நிமிர, “நிவி” அவளின் இதயம் படபடவென்று அடித்துக்கொள்ள அவனின் பதிலுக்காக காத்திருந்தாள்.
“ம்ம் நீர் அவனையே கல்யாணம் பண்ணிகோவன்” என்று சாதாரண குரலில் இவன் சொன்னது அவளின் முகம் மலர நிம்மதியுடன் அவனிடமிருந்து விலகி நடந்தாள் நிவேதா.
அவள் செல்லும் திசையை நோக்கிவனின் அருகே யாரோ அமரும் ஆரவாரம் கேட்டு திரும்பியவன் “வா முகில்” என்றான் எந்தவிதமான தடுமாற்றமும் இன்றி
எழிலரசன் பெயரில் மட்டும் எழில் அல்ல. அவனின் தோற்றம்கூட எழில்தான். அலையலையாக கேசமும், கூர்மையான விழிகளும், நேரான நாசி, செதுக்கபட்ட உதடுகள், சற்று உயரம் அதிகம் கொண்டவனின் உயரத்திற்கு ஏற்ற உடல்வாகுடன் ஆண்மகனாக இருந்தவனின் மீது ஆசைபடாத பெண்கள் அந்த கேம்பஸில் இல்லை.
அப்படியிருந்தும் அவனை ஒரு பெண் வேண்டாமென்று சொல்லிவிட்டு போக, “என்ன அவள் அப்படி சொல்லிவிட்டு போறாள். நீ அமைதியா இருக்கிறன்” என்றான்.
“அவள் போனால் போகிறாள் விடடா. எனக்கு ஏற்ற பெண் இவள் அல்ல. என்னை விரட்டி விரட்டி காதலித்த இவளின் மீது என்றும் எனக்கு காதல் வந்ததில்லை. நான்தான் ஒருத்தியை காதலிக்கணும் அதுவும் என்னையும் அறியாமல் என் மனம் அவளிடம் பறிபோக வேண்டும்” என்று ரசனை ததும்பும் விழிகளுடன் அவன் சொல்லும்போது திடீரென்று மழைபொழிய தொடங்கியது.
இருவரும் நிழல் குடைக்குள் சென்று நனையாமல் நின்றிருக்கும் போதும், “நிலா” என்ற குரல்கேட்டு திரும்பிப் பார்த்தான் எழில்.
‘மழை பொழியும் நேரத்தில் நிலவு எங்கே வந்தது’ என்று ஆர்வத்துடன் நோக்கியது அவனின் விழிகள். அப்போதும் கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்தபடி ஓடி வந்தவளோ நிழல்குடையைக் கண்டதும் அதன் உள்ளுக்குள் நுழைந்தான்.
“நல்ல மழை இல்ல நிலா” என்ற ஜானவியை முறைத்தது அவளின் விழிகள். அவளின் வதனங்கள் சிவக்க கண்டு பார்வையை அங்கே நிலைக்கவிட்டான் எழில்.
“என் பெயரைக் கொலை பண்ணாதே அது உனக்கு நல்லதில்லை” என்று மிரட்ட இவனோ ரசனையுடன் அவளையே இமைக்காமல் பார்த்தான். மஞ்சள் நிற சுடிதாரில் சிவப்பு நிற ரோஜா பூக்கள் அள்ளித் தெளிக்கபட்டு இருக்க அவளின் உடல் வளைவுகளை அவனின் கண்களுக்கு படம்பிடித்துக் கட்டியது.
வட்ட முகமும், கோபம் சுமந்த விழிகளும், மூக்குத்தி தடம் பதிக்காத மூக்கு, சிவந்த இதழ்கள், அளவான உடலமைப்புடன் தேவதை போல நின்றவளைப் பார்த்தும் அவனுக்கு பிடித்துப்போனது. அவன் சிலநொடி அவளைப் பார்த்திருப்பான் ஆனால் அவனுக்குள் ஏழேழு ஜென்மம் பழகிய உணர்வு வந்து சென்றது.
தன் மனபெட்டகத்தில் அவளின் முகத்தை செதுக்கிய அவனுக்கு தெரியாது. இவர்களின் பந்தம் முன்பிறவி பலன், இப்பிறவியில் மீண்டும் அவளை சந்தித்திருக்கிறான் என்று.
அவனின் பார்வைக் கண்ட அவளின் தோழி மயூரி, “சீனியரின் பார்வை உன் மீதுதானடி” குறும்புடன் கூற பட்டென்று நிமிர்ந்தவளோ, “கேம்பஸ் ஹீரோ பார்வையா? ஐயோ சீனியர் பாடமாக்குதல் செய்ய மறந்துட்டேன். இன்னைக்கு சீனியரிடம் ஏச்சு வாங்கறது உறுதி” என்றாள்.
அப்போது விளையாட்டாக எழிலைப் பார்த்தும் அவளின் மனதில் திடீரென்று ஒரு தடுமாற்றம். அவள் இதுவரை யாரைக் கண்டும் இப்படி தடுமாறியது கிடையாது. அவனின் விழிகளின் காந்தசக்தியில் அவனின் மனம் அவளையும் அறியாமல் அவனிடம் தஞ்சமடைந்தது.
அவளுக்கு பார்த்தும் காதலில் நம்பிக்கை இல்லாதபோதும் அவனைக் கண்டதும் தன் மனம் தடுமாறியது ஏனென்று அறியவில்லை. ஆனால் அவன் முகம் கண்டகணம் அவனுடன் வெகுநாள் பழகிய நினைவு அவளுக்குள் எழுந்தது.
இவளின் பார்வை சீனியரின் மீது படிவத்தைக் கண்டு, “என்னடி சைட் அடிக்கிற மாதிரி தெரிகிறது” என்றாள் குறும்புடன் கண்சிமிட்டி சிரித்தபடி.
“என்னவோ தெரியல மயூ இவரோடு வெகுநாள் பழகிய ஒரு நினைவு. எங்களுக்குள் அதிகம் நிகழ்ந்தது சண்டைதான் போலும். அடிக்கடி கண்டதில்லை ஆனால் முகம் மட்டும் மனதில் பதிகின்றது” என்றாள் குழப்பத்துடன்.
சில்லென்ற தென்றல் மோதிட இருவரின் விழிகளும் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக்கொள்ள அவளைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்டிவிட்டு, “முகில் வா வகுப்புக்கு போவோம்” அவனை இழுத்துச் சென்றான்.
“கொஞ்சம் மழை விடட்டும்” அவனின் பேச்சை காதில் வாங்காமல் முன்னே நடந்தான் எழில்.
அவனின் இந்த செயலில் அவளின் இதயத்தின் ஓரம் தென்றல் சாமரம் வீசியது. அவனின் செயலில் பார்வை அவள் சமைந்து நின்றிருக்க அவளை உலுக்கி நிஜத்திற்கு அழைத்து வந்த மயூரி, “என்னடி சிலை போல நிற்கிறாய்” என்றாள் திகைப்பு மாறாத குரலில்.
அவளின் கேள்வியில் இவளின் வதனம் செம்மையுற ‘கள்ளன்’ என்ற நினைவுடன் தோழியின் பக்கம் திரும்பிட, “ரோமன்ஸ் எல்லாம் நடக்குது” அவளை கிண்டலடிக்க, “அதெல்லாம் இல்லை” என்றவள் வேகமாக முன்னே நடந்தாள்.
அதன்பிறகு வந்த நாட்களில் இருவரும் சந்திக்கவில்லை. அந்த மழை நாள் தடுமாற்றத்தை மறந்து இவள் படிப்பில் கவனத்தை திருப்பியது. எழிலரசனும் அவளின் நினைவுகளை மறந்துவிட்டு படிப்பை கவனித்தனர்.