அத்தியாயம் – 22
அவர்கள் காரணத்தை சொல்லும் முன்னரே அவர் வார்த்தைகளை சிதரவிட்டதும், “அத்தை மாப்பிள்ளைகிட்ட பேசிட்டு இருக்கீங்க. வார்த்தையை கொஞ்சம் அளந்து பேசுங்க..” என்றவனைப் பார்த்து அவருக்கு கோபம் வந்தது.
“என் அனுமதி இல்லாமல் என்னோட பெண்ணைக் கல்யாணம் பிண்ணியிருக்கிற உனக்கு எதுக்கு மரியாதை கொடுக்கணும்?” என்ற நிர்மலாவின் விழிகள் இரண்டும் கோவைபழம் போல சிவந்தது.
“இங்கே நடந்த எதுவும் தெரியாமல் பேசாதீங்க..” என்றவன் பொறுமையாக நடந்ததை எடுத்துசொல்ல ஒரு தாயாக அவரின் மனம் கொதித்தது. ‘தன்னுடைய மகள் என்ன அவசரத்திற்கு தொட்டுக்கொள்ள ஊறுக்காயா?’ மனதினுள் நினைத்தும் அவரின் கோபம் எல்லை கடந்தது.
“உன் கல்யாணம் நின்னு போனதுக்கு என்னோட பெண்ணை நீங்க பலிகாடு ஆக்குவீங்க. அதை நான் ஒத்துகிட்டு அமைதியாக போகனுமா?” என்றவரும் அவனுடன் சண்டை போட இருவரும் பேச பேச பிரச்சனை பெரிதாகிவிடும் முன்னே ஆறுமுகம், தாமரை எல்லோரும் சேர்ந்து அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினர்.
அவரின் கேள்விக்களுக்கு யாராலும் ப்[பதில் சொல்ல முடியாமல் போக தாய் பேசும்போது அவரிடமிருந்து வெடுக்கென்று போனை வாங்கியபோது அவர் கூறிய வார்த்தைக் கேட்டு அதுவரை அவன் இழுத்துபிடித்த பொறுமை அனைத்தும் காற்றில் பறந்தது.
“ஊமை பொண்ணுதானே யாரு என்ன சொன்னாலும் ஏத்துக்குவாங்க என்று நினைக்க நீங்க யாரு?” என்றவரின் வார்த்தைகளில் ‘ஊமை’ என்ற வார்த்தைகேட்டு கிருஷ்ணாவின் கோபம் எல்லைக் கடந்தது.
“ மதுவை ஊமைன்னு சொல்ல உங்களுக்கு தகுதி இல்ல. என்னோட மது நல்லா பேசுவா. இன்னொரு முறை நீங்க அப்படி சொன்னீங்க நான் மனுஷனாக இருக்க மாட்டேன். என் மனைவியை எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும் நீங்க போனை வைங்க..” என்றவனை மற்றவர்கள் அதிர்ச்சியுடன் பார்க்க மதுவோ அடுத்தடுத்த அதிர்ச்சியில் சிலையாக நின்றிருந்தாள்.
“மது இங்கே என்னைப் பாரு. நானா உன்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகும் வரை நீயாக உன் வீட்டிக்கு நீ போகக் கூடாது. என்னைப் மீறிப் போக நினைச்ச உன்னை என்ன பண்ணுவேன்னு தெரியாது” என்று கோபத்தில் கத்திவிட்டு வேகமாக மாடியேறிச் சென்றுவிட்டான்.
அதன்பிறகு வீடு எங்கும் அமைதி நிலவிட மற்றவர்கள் சாப்பாட்டை மறந்து விட்டதைப் பார்த்துகொண்டு அமர்ந்திருந்தனர். அவர்களை எல்லாம் மெல்ல எழுப்பிவிட்டு சாப்பிட வைத்து அவரவர் அறைக்கு அனுப்பிய சங்கீதா தான் மதுவை அலங்காரம் செய்து கிருஷ்ணாவின் அறைக்கு அனுப்பி வைத்தார்.
மது பால் சொம்புடன் அறைக்குள் நுழைந்தவளை நிமிர்ந்து பார்த்த கிருஷ்ணா புன்னகையுடன், “வா மது..” என்றான்.
அவன் அவளிடம் தன்னுடைய மனதை வெளிப்படையாக கூற நினைத்தபோது, ‘அனுதாபம்’ என்ற வார்த்தை வந்து அவனைக் கட்டிபோட சரியில்லாத சூழ்நிலையில் நடந்த திருமணத்தை அவள் ஏற்கும் முன்னர் அவளை வருத்தப்பட வைக்க அவனுக்கு மனம் வரவில்லை.
ஒரே நாளில் தாய், தந்தை, தமையன் மூவரும் இல்லாமல் அவளுக்கு நடந்த திருமணம் அவளின் மூளையை வேலை செய்யவிடாமல் செய்தது. அவளின் இழந்த உறவுகளை மீண்டும் அவளோடு சேர்க்க தன்னால் முடிந்த முயற்சியை செய்ய வேண்டும் என்று மனதிற்குள் உறுதியுடன் நினைத்தாள்.
சிறிதுநேரம் என்ன செய்வது என்று அறியாமல் நின்ற மதுவைக் கைபற்றி இழுத்து அணைத்த கிருஷ்ணாவின் செயலில் அவள் அதிர்ந்து விழிக்க, “நீ நிம்மதியாக தூங்கு..” என்று சொல்லி அவளின் நெற்றியில் இதழ் பதித்தவன் அவளை அணைத்தபடியே உறங்கினான்.
அடுத்தடுத்து வந்த நாட்களில் மதுவை கிருஷ்ணாவின் வீட்டில் இருந்த அனைவரும் அக்கறையுடன் கவனித்துக்கொள்ள மதுதான் சற்று குழப்பத்தில் இருந்தாள். பாலாவை காதலித்துவிட்டு இப்பொழுது கிருஷ்ணாவை கல்யாணம் செய்தது சரியா என்ற கேள்வி அவளை குழப்பிக் கொண்டிருப்பது அறியாத கிருஷ்ணா அவளோடு இயல்பாக பேசினான்.
அவனின் செயல்களில் திருமணம் நின்ற வருத்தம் தென்படவே இல்லை என்பதைக் கவனித்த மதுவின் குழப்பம் நாளுக்கு நாள் அதிகரிக்க, ‘இவன் எனக்காக நடிக்கிறானோ’ என்ற எண்ணம் அவளை விலகி நிற்க வைத்தது.
ருத்ரா திடீரென்று ஏன் இந்த முடிவை எடுத்தாள் என்ற காரணமே புரியாமல் ஒருவாரம் அந்த வீட்டில் இருந்த மது வெளிநாடு போகும் நாள் நெருங்கிவிட்டதை உணர்ந்து கிருஷ்ணாவுடன் பேச நினைத்தாள். அன்று சென்னையில் வீடு பார்த்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு அறைக்கு வந்தான் கிருஷ்ணா.
“மது நாம் சென்னையில் தங்க எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்.நம்ம இப்போ இருக்கும் அபார்ட்மெண்ட் அருகே இருக்கும் இன்னொரு அப்பார்ட்மெண்ட்டில் நம்ம தங்க புதிசாக ஒரு பிளாட் வாங்கியிருக்கேன்..” என்று சாவியை அவளிடம் கொடுத்தான்.
மது அமைதியாக இருக்க, “திடீரென்று திருமணம் நடந்துவிட்டதேன்னு நீ வருத்தப்படாதே மது. நான் உன்கூடவே இருப்பேன்..” என்று அவளிடம் அவன் பேசிக்கொண்டே சென்றான்.
அவனை மெல்ல நிமிர்ந்து பார்த்தவளோ, ‘அப்பா, அம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு’ என்றதும் அவனுக்கே அவளைப் பார்த்து பாவமாக இருந்தது.
“இப்போ வேண்டாம் மது. உன்னை உங்க வீட்டில் எதுக்க மாட்டாங்க. நான் சொன்னா கேளும்மா. அவங்க கோபம் எல்லாம் குறைந்த பிறகு போலாம்..” என்று குழந்தைக்கு சொல்வது போல அவன் சொல்ல அவளோ மறுப்பாக தலையசைத்தாள்.
“சும்மா பிடிவாதம் பிடிக்காதே மது..” என்று அவளைத் திட்டிவிட்டு எழுந்து சென்று ஜன்னலின் அருகே நின்றான்.
மெல்ல அவனின் அருகே வந்த மது, ‘பிளீஸ்.. நான் அவங்களைப் பார்த்தும் வந்துவிடுகிறேன்..’ என்று சொல்ல அவளின் ஆசைக்கு தடைவிதிக்க அவனுக்கும் மனம் வரவில்லை.
“சரி நானும் உன்னோடு வரேன்..” என்றவனை வேண்டாம் என்று தடுத்த மது, ‘நான் அவங்களைப் போய் பார்க்கிறேன். அப்புறம் நீங்க வாங்க..’ என்றாள்.
அவள் சொல்வதே அவருக்கு சரியென்று தோன்றிவிட, “ம்ம் சரி..” என்ற கிருஷ்ணா அவளை தனியாக சென்னை அனுப்பிவைக்க முடிவெடுக்க வீட்டில் இருந்த பெரியவர்களின் சரியென்று சம்மதித்தனர்.
மது தான் கொண்டு வந்த பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்ப வாசலின் அருகே நின்ற கிருஷ்ணா, “மது அம்மா என்ன திட்டினாலும் கோபபடாமல் பதில் சொல்லு. நான் வரேன்னு சொன்ன நீ கேட்காமல் போற. எனக்கு உன்னை அனுப்பவே மனசு வரல..” என்றவன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்
கிருஷ்ணாவின் பேச்சில் காதல் இருப்பதை கவனிக்காத மது, ‘உன்னை விட்டுட்டு போக எனக்கும் மனசு வரலடா. ஆனா இப்போ நான் போய்தான் ஆகணும்’ என்று அவனிடமிருந்து விலகிய மது புன்னகையுடன் அவனைப் பார்த்து தலையசைத்தாள்.
அவளையும் மீறி அவளின் கண்கள் கலங்கிட, “ஸ்ஸ்ஸ் என்னடா குழந்தை மாதிரி பண்ற..” என்று கிருஷ்ணா அவளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தான்.
அவனின் முகம் மறையும் வரை பார்த்துக்கொண்டே சென்றாள் மதுவை பார்த்தபடி நின்ற கிருஷ்ணாவிற்கு தெரியாது அவள் தன்னை ஏமாற்றிவிட்டு செல்கிறாள் என்று!
அவளின் மனம் பாரமாக கணக்கா மறுநாள் விடியலின் போது வீடு வந்து சேர்ந்தவள் காலிங்பெல் அடுக்க நிர்மலா வந்து கதவைத் திறந்தார்.
வீட்டின் வாசலில் தனியாக நின்றிருந்த மகளைப் பார்த்தும் மனம் பதறியவர், “மது என்னம்மா தனியாக வந்து நிற்கிற?” என்று அவளை இழுத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றார்.
அவள் தாயைக் கட்டியணைத்து அழுகவே, “இங்கே பாருடா என்னாச்சும்மா? ஆமா மாப்பிள்ளை எங்கே? நீ மட்டும் தனியாக வந்து நிற்கிற” என்று மகளின் முதுகை வருடியபடியே கேட்டார்.
அவரின் கேள்விக்கு அவள் என்னவென்று பதில் சொல்வாள். கம்பெனியில் அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டது நான் கண்டிப்பாக இப்போது லண்டன் செல்லவேண்டும் என்று கிருஷ்ணாவிடம் சொல்லாமல் வந்துவிட்டேன் என்று பட்டென்று அவளால் உண்மையை சொல்ல முடியவில்லை.
அவளின் மனதில் இருந்த ஏதோவொன்று அவளை சொல்லவிடாமல் தடுத்தது. அவனை விட்டு பிரிந்து செல்வதை நினைத்தாலே இதயத்தின் ஓரம் ஒரு மெல்லிய வலி பரவியது.
அதற்குள் கிருஷ்ணாவின் பரிவான பேச்சும், அவனை ஏமாற்றிவிட்டு வந்த குற்ற உணர்வும் அவளைக் கொல்லாமல் கொன்ற போதும், ‘அம்மா நம்ம லண்டன் கிளம்பலாம்..’ தாயை அதிர்ச்சியில் உறைய வைத்தாள் மகள்.
மதுவின் குரல்கேட்டு, “மது வந்திருக்கிறாளா நிர்மலா?” என்று கேட்டார் ராம்குமார்.
“ம்ம் ஆமாங்க..” என்றவர் மகளை அந்த அறைக்குள் அழைத்துச் சென்றார். வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்து எதுவும் சொல்லாமல் அழுத மகளை தாயும் தந்தையும் பார்த்து தங்களுக்குள் வருந்தினர்.
“மது நீயேன் தனியாக வந்த?” என்ற தந்தையின் கேள்விக்கு, ‘கிருஷ்ணாவிற்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லம்மா. அதான் என்னை அனுப்பி வைத்துவிட்டார்..’ என்று சொன்னவளைப் பார்த்து தாயும் தந்தையும் அதிர்ந்தனர்.
கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள அவர்களின் கோபம் அனைத்தும் அவனின் மீது திரும்பிவது அறியாமல், ‘நம்ம லண்டன் போலாம்..’ என்றாள் மகள்.
“நீ உன்னோட அண்ணாவிற்கு போனைப் போடு. என்ன கேட்க ஆள் இல்லன்னு நினைச்சிட்டு இருக்கானா? நான் அவனிடம் போய் கேட்கிறேன்..” என்று கிளம்பிய தாயை தடுப்பதற்குள் அவளுக்கு போதும் போதுமென்று ஆனது.
கம்பெனியில் அனைத்து ஏற்பாடும் தயாராக இருக்க தனக்கு பதிலாக வேறு ஆளை மாற்றி அனுப்ப வழி இல்லாமல் போனது கடைசி நேரத்தில் ஒன்றும் செய்ய முடியாமல், திடீரென்று நடந்த திருமணத்தில் கிருஷ்ணாவின் செயல்களுக்கு அவளே ஒரு காரணத்தை உருவாக்கிக்கொண்டு அவனைவிட்டு பிரிந்து சென்றாள் மது. அவள் பிரிந்து சென்ற பிறகு அவன் வேறு திருமணம் செய்வான் என்று நினைத்தாள்.
அவள் ஊருக்குச் சென்ற ஒரு வாரம் கழித்து சென்னைக்கு வந்த கிருஷ்ணாவிடம் பிரீத்தி கொடுத்த தகவல், ‘அவங்க எல்லோரும் ஊரைவிட்டுப் போயிட்டாங்க கிருஷ்ணா..’ என்பதுதான்.
அந்தநேரம் ராகவ் அம்மாவைப் பார்க்க ஊருக்குச் சென்றிருக்க அவன் வந்த பிறகு விசாரித்த போதும் அவனின் மீதிருந்த கோபத்தில் ராகவ் அவனிடம் உண்மையைச் சொல்ல மறுத்தான்.
நாட்கள் விரைந்து செல்ல கிருஷ்ணாவின் நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் நேரத்தில் தான் அவள் வேலை விஷயமாக ஆன்சைட் சென்றாள் என்ற உண்மையை உணர்ந்து அவன் பொறுமையாக இருந்தான்.
அதற்கு எதிர்மறையாக மதுவின் மனதில் அவன் திருமணம் செய்திருக்க மாட்டான் என்ற எண்ணமே வலுபெற்றது. ஏனோ அவனை பிரிந்து இருக்க முடியாமல் தவித்தாள். அந்த ஒரு வாரத்தில் அவனோடு வாழ்ந்த நாட்கள் அவளின் மனதில் காதல் வர காரணமானது.
அப்போதுதான் பாலா மீது கொண்டிருந்தது காதல் அல்ல வெறும் ஈர்ப்பு என்றும், கிருஷ்ணாவின் மீது அவளுக்கு வந்தது காதல் என்பதும் தெளிவாக புரிந்தது.
ஆறுமாதம் முடிந்த பின்னர் லண்டன் சென்ற கிருஷ்ணா அதன்பிறகு நடந்த அனைத்தும் நினைத்தபடி எங்கிருந்தோ கேட்ட குயிலின் சத்தத்தில் கண்விழித்து பார்த்தாள் மது.
வானில் வெளிச்சம் பரவியிருக்க பறவைகள் எல்லாம் இரைதேடி வானத்தில் பறக்க கிழக்கில் மலையின் முகட்டில் மெல்ல தலைகாட்டிய சூரியனைப் பார்த்து அவளின் மனதில் ஒரு தெளிவு பிறந்தது. அவள் அறைக்குள் நுழைய அதுவரை தூங்காமல் ஜன்னலின் ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்தவனின் முன்னே சென்று நின்றாள்.
அவன் அவளை கேள்வியாக நோக்கிட, ‘நீ உன்னோட விருப்பத்துக்கு என்னை மணமேடை ஏற வெச்சிட்ட. ஆனா என் விருப்பம் என்னன்னு ஒரு முறை என்னிடம் நீ கேட்டிருந்தா நிம்மதியா இருந்திருக்கும் இல்ல..’ என்று இதழசைக்க அவளை பேசவிட்டு இவன் அமைதியாக கவனித்தான்.
“இப்போ உன் விருப்பத்தை நான் கேட்கலன்னுதான் என்னை பிரிஞ்சி போனாயா?” என்றவன் விரக்தியுடன் கேட்க அவளோ மறுப்பாக தலையசைக்க அவனோ அவளை நேருக்கு நேர் பார்த்தான்.
‘நான் வருவதற்கு முன்னே நீ ருத்ராவை காதலிச்சு கல்யாணம் நின்றதால் என்னை கல்யாணம் பண்ணிட்டியோன்னு நினைச்சேன், ஆனா உங்கூட சண்டை போட்டாலும் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதன் கடைசி நிமிசத்தில என் மனசில் இருந்த காதலை அழிச்சிட்டு மணமேடை வந்தேன்..’ என்றவள் கண்கலங்க கூற திடுகிட்டு நிமிர்ந்தான் கிருஷ்ணா.
அவன் இதுவரை நினைத்த காரணம் ஒன்றாக இருக்க இப்போது அவள் சொல்லும் காரணம் உண்மைக்கு முரணாக இருந்தது. அவன் மனைவியைக் கேள்வியாக நோக்கிட அவளோ தீர்க்கமாக அவனைப் பார்த்தாள்.
“என்ன சொல்ற மது” அவன் அதிர்ச்சியுடன் கேட்க அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கும் உண்மையைச் சொல்ல மனசுக்கு கஷ்டமாக இருந்தாலும் இனியும் மறைக்க முடியாதென்று!
‘நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நான் பாலான்னு ஒருத்தரை காதலிச்சேன். அவரு ரேடியோ ஸ்டேஷன்ல வேலை பார்க்கிறாரு என்பதைத் தவிர எனக்கு வேற எந்த விசயமும் தெரியாது, நிஜமா நான் அவரை நேரில் கூட பார்த்தது இல்ல’ என்று சொல்ல கிருஷ்ணாவிற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
அவன் உயிராக நேசித்த பெண்ணே அவள் வாயால் வேறொருவனை நேசிக்கிறேன் என்று சொல்வது காதலனால் ஏற்றுக்கொள்ள முடியாது என்னும் போது கணவன் ஸ்தானத்தில் இருக்கும் கிருஷ்ணாவின் நிலையை என்னவென்று சொல்வது?
அவனின் உணர்வுகள் புரியாத மதுவோ, ‘கிருஷ்ணா நான் ஒரே ஒருமுறை அவரை நேரில் போய் பார்க்கட்டுமா?’ என்றவளின் உதட்டசைவில் இவனின் மனமே இரண்டாக பிளந்த வலி அவனின் கண்களில் தெரிந்தது.
“மது அப்போ நீ என்னை..” அவனால் கோர்வையாக பேச முடியாமல் தடுமாறுவதை உணர்ந்து, ‘லூசாடா நீ?’ என்றாள் கோபத்தில் முகம் சிவக்க.
அவன் அவளை புரியாத பார்வைப் பார்க்க, ‘அவனை நான் காதலிச்சேன்னு சொல்லல. ஆனா அவன் கல்யாணம் ஆனவனா? ஆகாதவனா இதெல்லாம் எனக்கு தெரியாது. என்னவோ அவன் குரல்மேல் ஒரு ஈர்ப்பு. நமக்கு கல்யாணம் ஆன பிறகுதான் அது காதல் இல்ல வெறும் ஈர்ப்பு என்று புரிஞ்சிது. நான் இப்போ உன்னோட மனைவி’ அவனுக்கு ஞாபகபடுத்த அவனோ மௌனமானான்.
‘தன்னை எப்படி அவன் தவறாக நினைக்கலாம்’ என்று அவனின் மீதிருந்த கோபம் இன்னும் அதிகமாகவிட அவள் படுக்கையில் படுத்து உறங்கிவிட்டாள். கிருஷ்ணா விடியும் வரை சிந்தனையுடன் இருளான வானத்தை வெறித்தான்.
மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்ததும், பொங்கல் வைக்க குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்றனர். கிருஷ்ணா, மதுவுடன் பேச வந்தாலும் அவனின் மீதிருந்த கோபத்தில் விலகிச் சென்றாள். அவனோடு அவள் முகம் கொடுத்து பேசாமல் இருப்பதை ரசனையுடன் நோக்கியது இரு விழிகள்!