அத்தியாயம் – 30
கிருஷ்ணா – மதுமதி இருவரும் தங்களின் பயணத்தை முடித்து லண்டன் ஏர்போர்ட் வந்து சேர்ந்தனர். அவர்கள் செக்கிங் எல்லாம் முடிந்து வெளியே வரும்போது, “மதும்மா” என்றவரின் குரல்கேட்டு சட்டென்று குரல் வந்த திசையை நோக்கி திரும்பினாள் மது.
அங்கே அவளின் தந்தை ராம்குமார் மகளை நோக்கி வந்தார். அதுவும் யாரின் துணையும் இல்லாமல் தனித்து நடந்து வந்தவரைப் பார்த்து அவளின் கண்கள் கலங்கிட, “அப்பா” என்ற அழைப்புடன் ஓடிச்சென்று குழந்தைபோல அவரின் தோளைப் பிடித்துகொண்டு தொங்கினாள் மகள்.
அவளின் எட்டு வயதில் இருந்து மருத்துவமனை மற்றும் அவரின் அறை என்ற இரண்டைத் தவிர வேறு எதுவும் வேண்டாமென்று மகளுக்காகவே வாழ்ந்தவர் மகள் பேசியதும் தன்னுடைய முயற்சியால் கொஞ்சம் கொஞ்சமாக நடக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டார்.
அவரின் பின்னோடு விஷ்ணு மற்றும் நிர்மலா இருவரும் வர, “அப்பா நடந்து என்னைப் பார்க்க ஏர்போர்ட் வரை வந்திருக்கீங்க” என்றவளின் சந்தோஷத்தில் அவரின் கண்களும் கலங்கியது.
“அதை ஏன் மது கேட்கிற. நீ பேசிய நாளில் இருந்து நடக்கணும் என் மகளை நான் ஏர்போர்டில் போய் பார்க்கணும் என்று இவர் செய்த முயற்சி நிறைய இருக்கு..” என்றான் விஷ்ணு.
தமையன் சொன்ன விஷயத்தை சிந்தித்தப்படியே தந்தாவ்யின் முகம் நோக்கிய மது, “அப்பா நீங்க பிடிவாதமாகத்தான் நடக்காமல் இருக்கீங்க என்று கிருஷ்ணா சொன்னது உண்மைதானா?” அவள் கேட்டார்.
அவரும் ஆமோதிப்பது போல தலையசைத்து, “என்னோட மகள் வாய்பேசாமல் போனதால் என்னோட கால்களை நடக்காது என்று நானே முடிவு பண்ணிட்டேன் கண்ணம்மா. பெண் பிள்ளைகளுக்கு அப்பா இல்லாமல் ஒன்றுமே இல்ல. ஆனா நான் இப்படி பண்ணதுக்கு நீதான் காரணம்..” என்றவரின் உணர்வுகளை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.
“மகள்களுக்கு அப்பாதான் ஹீரோ. நீ செய்யும் செய்கை எனக்கே புரியல என்றபோது, நீ என்னோடு இயல்பாக பேச முடியாமல் தவித்த தவிப்பைப் பார்த்து நீ நானே என்னை ஊனம் ஆகிட்டிட்டேன். அண்ணா உன்னை நல்லபடியா வளர்த்தான்.” என்றவர் நிறுத்திவிட்டு அவளின் பின்னோடு நின்ற கிருஷ்ணாவைப் பார்த்தார்.
எந்தவிதமான பிரதிபலனும் எதிர்ப்பார்க்காத துய அன்பு அவனின் கண்களில் தெரிய, “அன்னைக்கு குந்திக்கு செய்து கிருஷ்ணர் பண்ணிகொடுத்த சத்தியத்தில் கூட மாற்றம் நிகழ்ந்து இருக்கலாம். ஆன இன்னைக்கு இந்த கிருஷ்ணா பண்ணிகொடுத்த சத்தியத்தில் ஜெய்த்துவிட்டான்.” என்றவர் மகளின் பளிங்கு முகத்தை விரலால் வருடினார்.
“இன்னைக்கு என் மகளை என்னிடம் திரும்ப கொடுத்துட்டான். அவனோட சத்தியத்தை நிறைவேற்றி விட்டான்” என்றவர் மகளின் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு அவனின் அருகே சென்றார்.
அவனோ அவரைப் புரியாத பார்வை பார்க்க, “மதுவிற்கு பேச்சு போன அன்னைக்கு என்னோட கையைப் பிடித்துகொண்டு மாமா நான் மதுவை பேச வைப்பேன்னு ஆறுதல் சொன்னான். இன்னைக்கு சொன்னதை செய்துட்டான்” என்றார் மருமகனை ஆரத்தழுவி கொண்டார்.
“உன்னால முடியும் என்று எனக்கு தெரியும் கிருஷ்ணா” என்று மருமகனின் தோளில் கைபோட்டு அணைத்தவர் அவனோடு சேர்ந்து மகளின் அருகே வந்தார்.
இதற்கு நடுவே அம்மாவைக் கட்டியணைத்து பாசத்தை வெளியிட்ட மகளோ, “அம்மா நான் இப்போ பழையபடி பேசறேனா?” அவள் புன்னகையுடன் கேட்க, “நீ இப்படி பேசுவதை பார்க்கத்தான் உயிர் வாழ்ந்த மாதிரி இருக்கும்மா..” என்றார் மகளின் கன்னம் வருடியபடி.
அவர்கள் இருவரும் திரும்பி வரும்போது, “மது பேசுவான்னு நான் நினைக்கவே இல்ல மாப்பிள்ளை. ஆனா பாருங்க மணி மணியா பேசற” என்றவர் அவனைக் கையெடுத்துக் கும்பிட, “அத்தை” என்ற அதட்டலுடன் அவரின் கைகளை கீழே இறக்கிவிட்டான்.
விஷ்ணுவிற்கு தங்கை பேசியது ஒருப்பக்கம் சந்தோஷம் என்றால், இன்னொரு புறம் அவள் கணவனோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை கண்டு மனநிறைவுடன் தங்கையை அணைத்துக் கொண்டான்.
“அண்ணா இந்த கிருஷ்ணா அன்னைக்கு எப்படி நடிச்சான் தெரியுமா? நீ சொன்ன மாதிரி செம பிராடு. அப்படி நடிக்கிறான் நானே உண்மைன்னு நம்பிட்டேன்” என்று அவள் கதையளக்க தொடங்கினாள்.
அவளும் விஷ்ணுவும் பேசுவதை ரசித்தவனை பார்த்து நிர்மலா ராம்குமார் இருவரும் சந்தோசப்பட்டனர். இந்த காலத்தில் பெண்களை அவர்களின் உறவுகளோடு பழகுவதை வன்மத்துடன் நோக்கிய பலரை அவர்கள் சந்தித்தது உண்டு.
ஆனால் அவர்களின் மருமகனோ அமைதியாக இருப்பது அவர்களுக்கு மனநிறைவைத் தந்தது. அவர்களையும் அறியாமல் அவனை ஆயிரம் முறை திட்டியது நினைவு வந்தது.
‘எத்தனை முறை மகளோட வாழ்க்கையைக் கெடுத்துட்டான் என்று நினைச்சு இருக்கேன். இன்னைக்கு அவனோ என் மகளை ராணி மாதிரி வெச்சிருக்கான். அவ எங்களோட இருந்ததை விட இவரோட இருக்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கா’ என்று நினைத்து அவர்களை பின் தொடர்ந்தார் நிர்மலா.
கிருஷ்ணா அமைதியாக அவர்களைப் பின் தொடர, “மாப்பிள்ளை இப்படியா என் தங்கையை பயமுறுத்தி பேச வைப்பீங்க” என்ற அவன் மிரட்டல் போல கேட்டபோது அவனையும் அறியாமல் கிருஷ்ணாவின் தோளில் சாய்ந்தான்.
“தேங்க்ஸ்டா. என்னோட தங்கை இப்படி பேச மாட்டாளா என்று நான் ஏங்கிய ஏக்கம் எனக்கு மட்டும்தான் தெரியும். என்னை கல்யாணம் பண்ணி வரபோகும் பொண்ணு இவளைப் பார்த்து எதாவது சொல்லி அது பிரச்சனையில் முடியுமோ என்று கூட சிலநேரம் நினைச்சிருக்கேன்..” அவனின் வலி அப்போது வெளிவர கிருஷ்ணா அவனின் கைகளில் அழுத்தம்கொடுத்து அமைதிபடுத்தினான்.
அவர்கள் நால்வரும் காரில் செல்லும்போது அவளுக்கு ஞாபகம் வர, “அப்பா எப்படிப்பா நடக்க ஆரம்பிச்சீங்க” என்று கேட்க மகள் பேசியா நாளில் இருந்தே அவர் எடுத்துக்கொண்ட பயிற்சி பற்றி கூறினான் விஷ்ணு.
அதன்பிறகு இத்தனை மாதமும் நடந்த விஷயத்தை அவள் புன்னகையுடன் பட்டியலிட காருக்குள் மதுவின் குரல் மட்டுமே கீதமென்று ஒலித்தது. அங்கிருந்த ஒவ்வொரு நாளும் கிருஷ்ணாவிற்கு வரவேற்புக்கு பஞ்சமில்லை.
அந்த ஊரில் சில இடங்களை சுற்றி பார்த்தனர். கிருஷ்ணாவிற்கும் – மதுவிற்கும் ஹனிமூன் ஏற்பாடு செய்ய நினைத்தான். அதற்குள் அவர்கள் இருவரும் இணைந்து பிரீத்தியின் விசயத்தை கூற அவர்கள் ஊருக்கு சென்ற மறுநாளே அவர்களின் திருமணம் என்று முடிவு செய்யபட்டது.
அதன்பிறகு ஒருவாரம் அங்கே செல்ல அடுத்தவாரம் சென்னை வந்து சேர்ந்தனர். ராம்குமார், நிர்மலா, விஷ்ணு மூவரும் அவர்களோடு இணைந்து சென்னை வந்தனர்.
அவர்களின் திட்டமிட்டபடி பிரீத்திக்கும் – விஷ்ணுவிற்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்யபட்டு சாப்பாடு மட்டும் ஹோட்டலில் ஏற்பாடு செய்யபட்டது. பிரீத்தி முதலில் திருமணம் ஆகி விதவையான பெண் என்பதால் அவள் மனதளவில் வருந்த கூடாது என்று இப்படியொரு முடிவை எடுத்தான் கிருஷ்ணா.
அந்த திருமணத்திற்கு வந்த கிருஷ்ணாவின் குடும்பம் மற்றும் ராகவ் – ருத்ராவின் குடும்பமும் வந்தது.
அப்போது அவர்கள் இருவருக்கும் திருமணம் ஏற்பாடு பற்றிய பேச்சு எழுந்திட, “நீங்க இருவரும் மாடிக்கு போய் பேசுங்க..” என்றாள் மது வெளிப்படையாகவே.
மொட்டை மாடிக்கு சென்றவர்கள் இருவரும் வானத்தை வேடிக்கைப் பார்த்தனர். இந்த முறை ராகவ் நேரடியாக பேச்சைத் தொடங்கினான்.
“கிருஷ்ணா உன்னைபற்றி நிறைய சொல்லியிருக்கான் ருத்ரா..” என்றவனை அவள் கேள்வியாக நோக்கினாள்.
“எந்தொரு பெண்ணோட வாழ்க்கைகாகவும் இங்கே அவங்க வாழ்க்கையை யாரும் தியாகம் செய்ய மாட்டாங்க. ஆனா நீ கடைசி நேரத்தில் மணமேடை விட்டு இறங்கியதை மது சொன்னா. என்னையும் அறியாமல் என் மனசு உன் பக்கம் சாய அதுதான் காரணமாக மாறுச்சு..” என்றான் எதார்த்தமாக.
“பலமுறை உன்னால் எப்படி இப்படி செய்ய முடிஞ்சிது என்று யோசிச்சு இருக்கேன். அதுவும் நீ யாருன்னே தெரியாத போதே. உன்னோட அந்த மனோதிடம் ரொம்ப பிடிச்சிருக்குடி. நான் உன்னை லவ் பண்றேன் ருத்ரா” என்றவனை அவள் கட்டியணைத்து கொண்டாள்.
அவனும் புன்னகையுடன் அவளை அணைத்து கொள்ள அந்தி சாயும் நேரத்தில் இருமனமும் ஒரு கூட்டில் குடியேறியது. அடுத்து வந்தவொரு நல்ல நாளில் இருவருக்கும் சிம்பிளாக கோவிலில் வைத்து திருமணம் நடந்தது..
அன்று இரவு உணவை தாயார் செய்த தாயின் பின்னோடு குழந்தை போல சுற்றிக் கொண்டு இருந்த மனைவியைப் பார்க்கும்போது அவனுக்கு சிரிப்பாக இருந்தது.
“பாருங்க மாப்பிள்ளை மூணு வயசு பண்ணு செட்டை எல்லாம் பண்ணிட்டு இருக்கிறா” என்றவரின் அருகே சென்று அமர்ந்தான் கிருஷ்ணா. அப்போது அவர் அவனின் தொழில் விவரங்கள் சொல்ல சொல்ல மகளோ தாயின் கழுத்தைக் கண்டிகொண்டு நின்றிருப்பது அவனின் கண்களில் விழுந்தது.
“சின்ன குழந்தை மாதிரி பண்றாளே” என்றவன் வாய்விட்டு கூற, “என்ன கிருஷ்ணா கவனம் இங்கே இல்ல போல” என்றார் ராம்குமார் குறுஞ்சிரிப்புடன்.
அவருக்கு புன்னகை மட்டும் அவன் பதிலாக கொடுத்தான். அவனின் கவனம் முழுவதும் மதுவின் மீதே நிலைக்க பார்வை அவளைவிட்டு அங்கே இங்கே அசைய மறுத்தது.
“என்னடி தோளில் கைபோட்டு தொங்கிகிட்டு வேலை செய்ய விடாமல் பண்ற” நிர்மலா மகளிடம் கூற அவளோ அமைதியாக இருந்தாள்.
“என்னடா அம்மாகிட்ட ஏதாவது சொல்லணுமா” என்ற கேள்விக்கும் அவள் பதில் சொல்லவில்லை.
அவளின் மௌன நிலையை கலைக்க விரும்பாமல் மகளின் தலையை வருடிகொடுத்து அவரும் அமைதியாகிவிட அவரின் கைகள் தானாக ரேடியோவை ஒலிக்கவிட பாடல் இனிமையாக அவர்களை வருடி சென்றது.
“கற்பூர பொம்மை ஒன்று” பாடல் தாயும் மகளையும் வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்ல மக்களைப்பற்றிய நினைவில் கண்கள் கலங்கியது நிர்மலாவிற்கு.
நேரம் செல்ல செல்ல அவர்களின் மௌனம் மனதை நிறைத்தது. அவர் சமையலை முடித்துவிட்டு மூவருக்கு பரிமாறும் போதும் அவரின் மௌனம் கலையவில்லை.
“அத்தை நீங்க ரேடியோ கேட்பீங்களா” என்றான் கிருஷ்ணா சாப்பாட்டை சாப்பிட்டபடி.
“இருவருக்கும் அதுதான் மெயின் வேலை. இதோ இவளுக்கு அந்த எப். எம். ல பேசும் பாலாவின் குரல் அவ்வளவு பிடிக்கும் தெரியுமா மாப்பிள்ளை. ஒருமுறை நேரில் சந்திக்கிறேன்னு சொல்லிட்டு போயிட்டு வந்த பிறகு எங்களை படுத்தியபாடுகளை மறக்க முடியுமா” என்றவர் பெருமூச்சுடன் சொல்லும் போது அவனின் பார்வை மதுவின் மீதுதான்.
தன் தாயிடம் அத்தனை விசயத்தையும் சொன்னவள், ‘அந்த ஆர்.ஜே. பாலா கிருஷ்ணா தான்’ என்று சொல்லவே இல்லை. அதை கிருஷ்ணா தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவளின் விஷயத்தை தெரிந்து கொண்டான்.
“எந்த நேரமும் ரேடியோவே கேதின்னு கிடப்பா. சாமி அவன் வேலையைவிட்டு போயிட்டான் என்று தெரிஞ்ச நாளில் இருந்து மாடிக்கு போன அந்த இரண்டு மணிநேரம் இவ கீழே வரவே மாட்டா” என்றவர் சொல்லிக்கொண்டே சென்றார்.
“மது நீ ஏன் என்னிடம் இதெல்லாம் சொல்லவே இல்ல” அவன் வேண்டுமென்றே வம்பிற்கு இழுக்க, “என்னோட பாலகிருஷ்ணன் பற்றி நான் எதுக்கு உன்னிடம் சொல்லணும்” என்றவள் அவளும் விடாமல்.
“நான் உன் புருஷன். என்னிடம் நீ பாலாவைப் பற்றி சொல்லியிருந்தா நமக்குள் இவ்வளவு பிரச்சனை வருமா” என்றவன் கேட்கும்போதே நிர்மலா சுதாரித்து இருவரின் முகத்தையும் மாறி மாறி பார்த்தார்.
இரண்டும் சண்டை போடுவது போல குரல்கள் இருந்தாலும் மகளின் கன்னசிவப்பும், கிருஷ்ணாவின் குறும்பும் அவருக்கு வேறு கதை சொல்ல, “கிருஷ்ணா என்ன இருவரும் ஒரு மாதிரி பேசுறீங்க” என்று விளக்கமாக விசாரித்தார்.
“அம்மா அந்த பாலாவே இவன்தான். இங்கே பக்கத்து வீட்டில் இருந்தே என்னை உயிரை வாங்கியிருக்கான்” அவள் கோபத்துடன் மற்றொரு சப்பாத்தி போட்டு கொள்ள, “தேங்காய் சட்டினி” என்றார் ராம்குமார்.
நிர்மலா மகள் சொன்னதைக்கேட்டு அதிர்ந்தபோதும், “நீ விரும்பிய வாழ்க்கை தானே மது” என்று பேச்சை முடித்துவிட்டவரின் மனம் நிறைந்துவிட்டது. அந்த பாலா விஷயம் மட்டும் அவருக்கு உறுத்திக்கொண்டே இருந்தது.
இன்றுடன் அதற்கும் முற்றுபுள்ளி வைத்தான் கிருஷ்ணா.
அன்று இரவு படுக்கையில் அமர்ந்திருந்த மனைவியில் அருகே வந்த கிருஷ்ணா, “என்னடி யோசனை பலமாக இருக்கு” என்றான் அவளை தன்பக்கம் இழுத்தபடி.
“கிருஷ்ணா நான் காலேஜ் முன்னாடி ஒரு பொண்ணை அடித்த விஷயத்தை நீ ரேடியோவில் சொன்னியா” என்று கேட்க, “ஆமா நீ செய்தது சரிதானே” என்றான்.
“இந்த மாதிரி பல விஷயம் உன் கண்ணில் பட்டிருக்கும் இல்ல” என்றாள் சந்தேகமாகவே.
அவனும் ஒப்புதலாக தலையசைக்க, “என்னை எப்போ எந்த விஷயம் பார்த்து லவ் பண்ண ஸ்டார்ட் பண்ண” என்று கேட்டவளின் பார்வை அவனின் மீது நிலைத்தது.
அவளின் கற்றைக் கூந்தலை காதோரம் ஒதுக்கிவிட்டு, “ஒரு நாள் மதியம் சாப்பிட ஹோட்டலுக்கு வரும் வழியில் சிக்னலில் நின்றேன். அன்னைக்கு ஒரு தாத்தா வேகாத வெயிலில் ஒவ்வொரு காரின் கதவையும் தட்டி பசிக்கு சாப்பாடு கேட்டார் ஆனா யாருமே அவரை ஒரு பொருட்டாக மதிக்கல” என்றவன் மனைவியின் கைகளை வருடியபடியே மேல பேசினான்.
“நான் போய் காசு கொடுக்க நினைத்து வண்டியை யூ டர்ன் போட்டு திருப்பிட்டு வந்தேன். அப்போ நீ போய் அவரிடம் நூறு ரூபாய் கொடுக்க அவர் எதுவுமே சொல்லாமல் வாங்கிட்டு போனாரு. ஒரு நன்றிகூட சொல்லல. நீயோ அமைதியாக நின்னுட்டு இருந்தாய்” என்றவன் சொல்ல அந்த நிகழ்வில் இவள் மனம் மூழ்கியது.
அவர் நேராக சென்று ஒரு ஹோட்டலில் தன்னால் முடிந்தளவு சாப்பிட்டுவிட்டு வந்து, “அம்மா நீ நல்லா இருக்கணும். எவ்வளவு பசி தெரியுமா அவ்வளவு பசியும் இப்போ உன்னால பறந்து போச்சு. வயிறார சாப்பிட்டேன் மா” என்றார்.
அந்த வார்த்தை இப்போதும் அவளை கண்கலங்க வைக்க, “எவ்வளவு கொடுத்தாலும் வேண்டான்னு சொல்லாத இந்த உலகம் போதும் என்று சொல்லும் ஒரே விஷயம் உணவு மது. அந்த இடத்தில் அவருக்கு நீ கொடுத்த நூறு ரூபாய் பெருசு இல்ல. ஆனா அவரோட பசி தீர்ந்தும் மனசு நிறைந்துவிட்டது.” என்றவன் நிறுத்திவிட்டு மனைவியை இழுத்து மார்புடன் அணைத்துக் கொண்டான்.
“அந்த நொடி உன்னை லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணேன் மது” என்றவனின் மார்பில் முகம் புதைத்த மது, “இருக்கிறவங்களுக்கு கொடுக்க மனசு வருவதில்லை கிருஷ்ணா. இல்லாதவங்களுக்கு அந்த உணவின் அருமை தெரியுது தெரியுமா” என்றவள் தொடர்ந்து, “ஐ லவ் யூ கிருஷ்ணா” என்றாள் கண்ணீரோடு.
“மது இந்தநேரத்தில் அழுகை தேவையாடி” என்று அவளை அதட்டிவிட்டு அவன் அவளை கிச்சு கிச்சு மூட்டிவிட வாய்விட்டு சிரித்தாள் மது. கிருஷ்ணா – மதுவை இழுத்து அணைத்து சங்கமிக்க அங்கே வளை ஓசையும், கொலுசின் ஓசையும் பாடலுக்கு இணையாக ஒலித்தது.
அந்த ஏகாந்த நிலையில் நிலவு வானில் உலா வர மது சென்று ரேடியோவைப் போட அங்கிருந்த நிசப்தத்தை கலைத்தது. அவள் கிருஷ்ணாவின் மார்பில் சாய்ந்து கொள்ள அவனும் அவளை அணைத்துகொண்டான்.
அந்த பாடலின் மேட்டு ஒலிக்கும் பொழுதே இருவரின் விழிகளும் சந்தித்துக்கொள்ள அவனின் காதல் பார்வை தாளாமல் பெண் பாவை அவள் வெக்கத்துடன் அவனின் மார்பில் முகம் புதைக்க கலகலவென்று சத்தமாக சிரித்தான் கிருஷ்ணா.
இருவரின் மனம் போலவே அந்த பாடலும் ஒலித்தது..
“நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு..
இனிக்கும் சவரம் கேட்டு அதை எடுத்துச் செல்லும் காற்று..
கொலமேநிதான் எந்தன் கனவில் தோன்றுமே..
வரம் தாராதோ பூ மரம் இனி தீராதோ காதல் தாகம்..
நூறு நூறு ஆண்கள் இங்கு பார்க்கிறேன்..
இங்கு வேறு யாரு அவனுக்கீடு கேட்கிறேன்..
வானில் நூறு கொடி உண்டு தாரகை
ஒளி வீசும் நிலவு போல எந்தன் காரிகை..
ஆகாயம் காணாத தேவன்..
ஆனாலும் என் பெண்ணை நெருங்க முடியுமா.. [நினைத்த வரம் கேட்டு]
பெண்மை என்ற சொல்லுகேற்ற மோகனம்..
அவள் பிரம்மன் இந்த உலகுக்கு ஈன்ற சீதனம்..
சீதனங்கள் கொடுத்து வாங்க முடியுமா..
அட தென்றல் மோதி இமயம் என்ன சரியுமா..
வீணாக வாய் வார்த்தை ஏனோ..
வேராரும் என் அன்பை நெருங்க முடியுமா.. [ நினைத்த வரம் கேட்டு]
இருவரும் நினைத்த வரம் கேட்டதும் கிடைத்ததோ? இரண்டு மனங்களும் இசையோடு இணைந்துவிட்டது. கண்ணனும், ராதையும் இணைந்த பின்னர் கானகத்தில் குரலோசைக்கும், இதழோசைக்கும் இடமுண்டா? இருவரின் இடையே இனிமேல் இடைவெளியே கிடையாது..
சுபம்