Mayavan 16

மாயவனின் மயிலிறகே 16

தாயாய் அவன் மாறிட, அவன் மடியில் சுகமாய் துயின்றிருந்தாள் அவள்.

சுற்றி நின்றவர்கள் நின்றவாறே சிலையாகியிருக்க, அவன் கண்ணாட்டியோ கலையாத கனவாக அவனுள் நிரம்பினாள்.

அவன் நல்லவன்தான். ஆனால் இவளது மெய்யன்பினால் அவனை தீட்சை பெற வைத்தாள் அந்த மயிலிறகாள்.

பாட்டியும், பொன்னம்மாவும் நெகிழ்ச்சியில் மௌனமாக பார்த்திருக்க, அவனின் தாயோ மகன் தாயாக மாறியிருப்பதை கண்டு சிலிர்த்துதான் போனார்.

ஜனனியோ பாப்புவின் பதிலடியில் அதிர்ந்து, தான் எவ்வளவு கீழாக நடந்திருக்க வேண்டாமோ என தவித்து, கண்களில் குற்றவுணர்வுடன் நின்றிருந்தாள்.

“அண்ணா” தயக்கமாய் ஜனனி அழைக்க,

ஒற்றைக் கை காட்டி தடுத்தவன் அவளை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. தன்னுடைய சேயான பெண்ணிடமே கண்களை படரவிட்டிருந்தான்.

எத்தனை பெருமை! எத்தனை கௌரவம்! எத்தனை கர்வம்! அவள் அளித்துவிட்டாள் அவனுக்கு.

ஒரு தந்தை தாயாகலாம். ஒரு சகோதரன் தாயாகலாம். ஏன் ஒரு கணவன்கூட அவன் மனைவிக்கு தாயாகலாம்.

இங்கு யாரென்றே அறியாத ஆண் ஒரு பெண்ணிற்கு தாயாக இருக்கிறான் என்றால், அவன் எத்தகைய மேன்மையுடையவன்!

அவளின் அதீத அன்பினால் கலங்கிய கண்களை சமாளித்தவன், அவள் உறக்கம் கலையாமல் அவளை அள்ளியெடுத்து மாடியை நோக்கி சென்றான்.

அவனறையில் படுக்க வைத்து, போர்த்தி விட்டவன், அவளன்புக்கு பதிலாய் அழுத்தமாய் நுதல் முத்தமிட்டு, அடுத்த நொடி அங்கிருந்து வெயியேறியிருந்தான்.

கீழே வந்தவன் அங்கிருந்த பெண்களை கண்டுகொள்ளாமல் பொன்னம்மாவிடம் மட்டும், “பாப்பு முழிச்சதும் எனக்கு போன் பண்ணுங்க” என்று கூறி, ஜனனி அவனிடம் பேச முற்பட அவளைத் தவிர்த்துவிட்டு, அவனுக்கு தேவையான கோப்போடு சென்றேவிட்டான். அவனது செய்கையில் ஜனனிதான் திகைத்தவாறு நின்றிருந்தாள்.

இதுதான் அவன். அழுத்தம்… வெகு அழுத்தம். கோபத்தில், வீசும் வாளை விட, மௌனம் உயிரை சிதைக்கும் ஆயுதம் என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.

அலுவலகம் வந்தவனுக்கு மனதே ஆறவில்லை. ஜனனிக்கும், பாப்புவிற்கும் இடையில் சுமூகமான உறவு இருக்க வேண்டுமென இவன் ஆசை கொள்ள, நடந்ததோ வேறு.

ஜனனி பாப்புவின் மனம் வருத்தப்படும் அளவிற்கு பேசியிருக்க வேண்டிய அவசியம் என்ன? அவனுக்கு தெரியவில்லை, இது அவனுக்கான பேச்சு என்று. அவன் அன்பின் பங்கீட்டிற்கான பேச்சு என்று. அப்படி தெரியும் போது என்ன முடிவெடுப்பான்.

பாப்பு பற்றிய யோசனையை ஒதுக்கி வைத்தவன் தான் கொண்டு வந்திருந்த கோப்பில் கவனத்தை வைத்தான்.

பள்ளிக்கூட சிறுவர் முதல் கல்லூரி இளைஞர்கள் வரை பாதிக்கப்பட்டிருக்கும் விசயம் இது. போதைப்பொருள் மூலம் அவர்களின் வாழ்க்கையை அழிக்கும் மாஃபியா கூட்டத்தின் அடி முதல் நுனி வரையிலான தகவல்கள் முழுவதும் ஆதாரத்துடன் இப்போது அவன் கையில்.

இவை ஒரே முறையில் எளிதாக சேகரிக்கப்படவில்லை. மாதக்கணக்கில் இன்ஃபார்மர்கள் மூலம் குற்றவாளிகளுக்கு தெரியாமல் துல்லியமாய் ஆதாரங்களை சேமித்திருந்தான். கவனக்குறைவால் சிறு தகவல் கசிந்தாலும் பல பேரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கும். அந்தளவு ஆபத்தான மிருகங்களுடன் அல்லவா மோதுகிறான்.

சமூக அந்தஸ்தில் உச்சியில் இருக்கும் மாமனிதர்களின் இத்தகைய மூன்றாம் தர வேலையை நினைக்கையில் நெஞ்சு பொறுக்குதில்லையே! நிலைதான்.

என்ன இல்லை அவர்களுக்கு! இருக்க வசதியான வீடு, உடுக்க வகை வகையான உடை, ருசியான சாப்பாடு. வேறு எதைத்தேடி மற்றவர்களின் வாழ்க்கையை அழிக்க இவர்கள் இத்தகைய இழி செயல்களை செய்கின்றனர் எனதான் புரியவில்லை.

இந்த குற்றத்தில் இருந்து அவர்கள் தப்பிக்க முடியாத அளவிற்கு, திறமையான முன்னாள் நீதிபதி மூலம் பக்காவாக விவரங்களை தயார் செய்திருந்தான். இதை சமர்ப்பித்தால் போதும் நியாயமான தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்பது திண்ணம்.

இதையெல்லாம் நினைத்துப் பார்த்தவன், அந்த கோப்புகளை சரிபார்த்து நீதிபதியிடம் சேர்ப்பிக்க வேண்டி அவரிடம் அனுமதி கேட்க, அவரோ வேறு பணி இருப்பதால் நாளை வரச்சொல்லி கூறிவிட்டார்.

அவர்தானே இன்று அனுமதி அளித்தது. இப்பொழுது என்னவாயிற்று என நினைக்க, அவன் மனமோ ஏதோ சரியில்லை, பத்திரம் பத்திரம் என கூறிக்கொண்டது.

காரணமில்லாமலே தன் சுகத்திற்காக மற்றவரை அழிப்பவர்கள், அவர்களுக்கு எதிராக செயல்படும் இவனை விட்டுவைப்பார்களா என்ன?

சிங்கத்திற்கும் குள்ளநரி கூட்டத்திற்கும் இடையில் நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தில், சிங்கத்தை பணிய வைக்க, சிங்கத்தினால் நேசிக்கப்படும் மான் பணயமாய் வைக்கப்படுமேயானால், அப்போது அந்த சிங்கத்தின் நிலை? அந்த மானின் கதி?

மாலை ஏழு மணி அளவில் அபிஜித் வீட்டிற்கு வர, பாப்பு அவனை ஆரவாரமாக எதிர்கொண்டாள். ‘அப்பாடா அவள் வருத்தமாக இல்லை’ என சிறு நிம்மதி அவனுள்.

அவன் ஷுவை கழட்டி வைத்துவிட்டு ஆசுவாசமாய் வந்து அமர, குடுகுடுவென சமையலறைக்கு ஓடியவள் அவனுக்கு பொன்னம்மா தயாரித்த டீயை கொண்டுவந்து கொடுத்தாள்.

‘என்னடா இது ‘ என நினைத்தாலும் ஒன்றும் கேட்கவில்லை. அவளை ஓரக்கண்ணால் பார்க்க, அவளோ அங்கு சற்று தள்ளி நின்றிருந்த ஜனனியிடம் அளவம் காட்டிக் கொண்டிருந்தாள்.

ஜனனி இவர்களை ஏக்கமாகவும், பாவமாகவும் பார்த்து வைக்க, அதைக் கண்டு இவளுக்கு குஷியாகிப் போனது. இதை பார்த்தும் பார்க்காமல் இருந்த அபிஜித்திற்கு ஜனனியை நினைத்து வருத்தமாக இருந்தாலும், தங்கையிடம் தனியாகதான் பேச வேண்டும் என அமைதியாக இருந்தான்.

டீயை குடித்துவிட்டு அபிஜித் மாடியேறவும், பாப்புவும் அவன் கையைப் பிடித்தவாறு அவனுடன் சென்றாள். மறக்காமல் ஜனனியை பார்த்து பழிப்பு காட்டிவிட்டு.

இதைப் பார்த்த ஜனனிக்கு இப்போது கோபம் வரவில்லை. மாறாக சிறு புன்னகை கூட எழும்பியது.

அவனுடன் ஒட்டிக்கொண்டே சென்ற பூனைக்குட்டி, அவனோடே பாத்ரூமிற்குள்ளும் நுழைய, அவளது அட்டகாசம் தாங்காமல் அவளை பிடித்து இழுத்து வந்தவன் அவளை பெட்டில் அமரவைத்து ஒற்றை விரலை நீட்டி இங்கேயே அமர்ந்திருக்குமாறு சைகை செய்ய, “ஜித்து” என பேச வந்தவளை, “மூச், வரவரைக்கும் இப்படியே இருக்கற” என மிரட்டிவிட்டே சென்றான்.

மீண்டும் அவனுடனே ஒட்டிக்கொண்டு சுற்றினாள், உறங்கும் வரையிலும். உரிமை நிலைநாட்டலோ? அவள் உறங்கியதும் இவன் கீழே வர, குடும்பம் மொத்தமும் இவனுக்காக காத்திருந்தது.

வந்தவன் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான். “பாட்டி மதியம் என்ன நடந்தது” என அமைதியாக கேட்க, அவரும் நடந்ததை அப்படியே கூறிவிட்டார்.

அனைத்தையும் கேட்டவன் ஜனனியைப் பார்க்க, அவளோ அண்ணன் என்ன கூறுவான் என இவன் முகத்தை தவிப்புடன் பார்த்திருந்தாள்.

“ஜனனி உன்னோட கொஞ்சம் பேசனும். தோட்டத்துக்கு போலாமா” என கேட்க, அனைவரையும் பார்த்தவள் சரியென அவன் பின் சென்றாள்.

தோட்டத்தில் இருந்த கல் மேடையில் அமர்ந்தவன் அவளை தன் அருகில் அமர்த்திக் கொண்டான். அவள் கையை தனக்குள் ஆதரவாக பொருத்திக் கொண்டவன், “நீ ஏன் அப்படி பேசினன்னு கேட்க மாட்டேன் ஜனனி. ஆனா! அப்படி பேசற அளவுக்கு பாப்பு என்ன பண்ணான்னு நான் தெரிஞ்சிக்கலாமா” என மென்மையாக கேட்க, அவளோ குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள்.

அவனே தொடர்ந்தான், “எனக்கு தெரிஞ்சு அவ உன்னோட பெரிய பொண்ணாதான் இருப்பா. ஆனா மனசளவுல இப்போ குழந்தை. உனக்கு தெரியுமா? அன்னைக்கு அவ இல்லன்னா இப்போ இவ இருக்கற அளவு பாதிப்பு இல்லைன்னாலும், எனக்கு எதாவது ஆகிருக்கும்.” இது தெரிந்த ஒன்றென்றாலும் ஜனனி அதிர்ச்சியாய் பார்க்க,

“அதுக்காக நன்றிக்காகவும், கடமைக்காகவும் அவள பாத்துக்க நினைக்கல. ஹாஸ்பிட்டல்ல கண்ணு முழிச்சு தான் யார்னு தெரியாதப்பவே என்னை நம்பி என் கை பிடிச்சவ. மனசார அவ மேல பாசமும்…” என்றவன் ஒளிவீசிக் கொண்டிருந்த நிலவை ஒரு பார்வை பார்த்து, “நேசமும் இருக்கறதாலதான் அவள உயிரா நினைச்சு பாத்துக்கறேன். ”

கூறிவிட்டான் அவளுக்கானஅவன் மனதை. இப்போது இது சரியா? தவறா? என்றெல்லாம் நினைக்கவில்லை. இனியொரு முறை தெரிந்தோ தெரியாமலோ தன் குடும்பத்தினருக்கு பாப்பு அநாவசியமான ஒருத்தியாக தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

இந்த நேசம் பொருந்துமா? சரியா? கூடுமா? இந்த எதற்கும் விடையில்லை. ஆனால் அனைத்து தடைகளையும் மீறி இது கை சேருமாயின் அப்போது இவர்களுக்குள்ளான உறவில் எந்தவித சுணக்கமும் இருக்கக்கூடாது என்பதில் தெளிவாய் இருந்தான்.

தன் பெற்றோரோடு இப்போது எந்த கோபமும் வருத்தமும் அவனுக்கு இல்லை. ஆனால் தடையின்றி பேசவும் மனம் வரவில்லை. இத்தனை நாள் ஒதுங்கி இருந்துவிட்டு இப்போது பேச தயக்கமாய் இருந்தது. காலப்போக்கில் அது மாறி அவன் அவர்களுடன் சேரவும் செய்யலாம்.

ஆனால் தன் மனைவியாக வருபவள் அவர்களுடன் எப்போதும் ஒன்றி இயல்பாக பழக வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு. அதற்கான முதல் படி அவன் வைத்துவிட்டான்.

ஜனனிக்கு திகைப்புதான். தன் அண்ணன் அந்த பெண்ணை விரும்புகிறானா என்று. “ஆனா அண்ணா, அவ…அவங்க ” என தடுமாற,

மூச்சை இழுத்து விட்டவன், “புரியுதுடா நீ என்ன சொல்ல வரேன்னு, என்னோட,நேசத்த முதல்ல பாப்புகிட்டதான் சொல்லனும்னு நினைச்சேன், அவ குணமான பின்னாடி. ஆனா இப்போ இத சொல்றது அவசியம்னு தோணுது.”

அவளுக்கு புரிந்தது, “அண்ணா அது வந்து, நான்…”

“நீ ஏன் அப்படி பேசினேன்னு கேட்க மாட்டேன்டா. ஆனா என்னோட வாழ்க்கைல முக்கியமான ரெண்டு பொண்ணுங்க நீங்க. நீங்க எப்பவும் ஒற்றுமையா இருக்கனும்னு நினைக்கறேன். இத்தன நாள் யாரோடயும் ஒட்டாம இருந்தாச்சு, இனியும் அப்படி வேண்டாம்னு தோணுது.”

“அண்ணா, உன் கோபம் போச்சா அப்பா, அம்மாட்ட பேசுவயா? அம்மா பாவம், நீ அவங்களோட பேசமாட்டியான்னு ஏங்காத நாளில்ல” என்று அனைத்தையும் மறந்து குதூகலமாக ஆர்ப்பரிக்க,

அவளது தலையை செல்லமாக ஆட்டியவன், “ஹா..ஹா பேசுவேன். ஆனா இப்ப இல்ல. கொஞ்ச நாள் போகட்டும். அதுவரை இது யாருக்கும் தெரியக் கூடாது புரியுதா” என செல்ல மிரட்டல் விடுத்தான்.

சரி…சரி என தலையை ஆட்டியவளிடம், “ஆமா நீ எதுக்கு பாப்புவ திட்டின, எதாவது வம்பு பண்ணாளா?” என சிரிப்போடு கேட்டான். அவனும்தான் பார்க்கிறானே மாலையில் இருந்து ஜனனியிடம் காட்டும் சேட்டையை.

“அது வந்து அண்ணா…” என அசடு வழிந்தவள் அவளது எண்ணத்தை கூற, “ச்சே…ச்சே அசடு இப்படியா நீ நினைச்ச. நான் ஏன் அம்மா, அப்பாட்ட பேசறதில்லன்னு தெரியுமா?”

“தெரியும். உங்கள அவங்க தனியா விட்டுட்டாங்கன்னு. ஆனா அவங்க உங்க நல்லதுக்காகதானே செஞ்சாங்க”

“இது எனக்கு புரியலன்னு நீ நினைக்கறயா?” என்றவன், ” நீ அம்மா வயித்துல இருந்தப்ப, நான் எப்பவும் என்னோட குட்டி பாப்பாட்ட பேசிட்டே இருப்பேன். இதோ இன்னும் கொஞ்ச நாள்ல என் குட்டி பாப்பா என்கிட்ட வந்துடுவான்னு ஆவலா இருக்கப்ப என்னை மட்டும் தனியா அனுப்பிட்டாங்க. நான் எவ்ளோ அழுதேன் தெரியுமா? சரி நீ பொறந்த பிறகு கூப்டுப்பாங்க நினைச்சேன். ஆனா அதுவும் நடக்கல. அப்பறம் அவங்களா கூப்பிட வரப்ப எனக்கு ஒரு பிடிவாதம். அதனாலதான் அப்படியே இருந்துட்டேன். அப்பவும் குட்டி குட்டி பிள்ளைங்கள பாக்கயில உன்னோட ஞாபகம்தான் வரும். அதான் திருவிழாக்கு மட்டும் வருவேன் உன்ன பாக்கறதுக்குன்னே. ஆனாலும் ரொம்ப நெருங்க முடியல.” என தன் மனநிலையை அவளிடம் கூறினான்.

அண்ணனின் செயலுக்கு இப்படி ஒரு கோணம் இருக்கும் என எண்ணாதவள், “அண்ணா சாரிண்ணா” என அவன் தோள் சாய,

“ச்சு என்ன சின்ன பிள்ளையாட்டம் அழுதுட்டு. எல்லாம் சரியா போகும். சரி, நேரமாகிடுச்சு போய் துங்கு”

அண்ணன் தனக்காக, தன்னை கொண்டுதான் இத்தனை வருடங்கள் பிரிந்து இருக்கிறான் என்றதும் ஒரு சின்ன அல்ப சந்தோஷம் எட்டிப் பார்க்கத்தான் செய்தது.

சட்டென அவன் தோளில் இருந்து விலகியவள், “அண்ணா, அவங்க… என்ன… நான்” என திக்க,

“பாப்புன்னே சொல்லுடா”

“ம்ம்… பாப்பு என் மேல கோபமா இருப்பாங்களா?”

அதைக் கேட்டவன் கடகடவெனச் சிரித்தான், “கோபமா, அதெல்லாம் சும்மா. நாளைக்கு வேணா நீ ஐஸ்க்ரீம்ம அவ முன்னாடி வச்சு பேசிப்பாறேன். அப்படியே உன்னோட ஒட்டிப்பா. சரியான வாலு. நாமதான் உஷாரா இருக்கனும்.” என கண்களில் நேச ஒளியுடன் சொல்ல, ஜனனியும் சந்தோஷமாக சரியென தலையாட்டினாள். அனைத்தும் நொடியில் சரியாகிவிட்ட உணர்வு அவளிடத்தில்.

மறுநாள் அபிஜித் கூறியதைப் போலவே ஜனனி பாப்புவை கவனிக்க, அவளும் ஜனனியுடன் ஒட்டிக் கொண்டாள். வீடே இதனை அதிசயமாக பார்த்தது. அபிஜித்தோ ஒருபடி மேலே போய், “ஈவ்னிங் ரெடியா இருங்க வெளியில போகலாம் என்றிருந்தான்.”

அவனுக்கு நேற்றுதான் தான் செய்த தவறு புரிந்தது. இனியேனும் ஜனனியுடம் இயல்பாக இருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டான்.

மற்றவரிடம் நான் போய் வருகிறேன் என்றவன், தாயைப் பார்த்து தலையாட்டிவிட்டு சென்றான். இதற்கே காயத்ரிக்கு அழுகையே வந்துவிட்டது. இனி விரைவில் அனைத்தும் சரியாகும் என உறுதியாக எண்ணி, தன் சரிபாதியிடம் போனில் கூறி சந்தோஷப்பட்டார்.

அலுவலகத்துக்கு வந்த அபிஜித்திற்கோ இன்றாவது நீதிபதியை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறவில்லை. அவருக்கு உடல் நலம் சரியில்லை என அவரது உதவியாளரால் கூறப்பட்டது. அதனால் அபிஜித்திற்கு இன்னும் யோசனையானது. எதுவோ சரியில்லை என உறுதியானது.

மாலையில் இருவரையும் வெளியில் அழைத்துக் கொண்டு வந்திருந்தான் அபிஜித். இருவரும் ஷாப்பிங் என்று சுற்றிக் கொண்டிருக்க, இவன் சற்று தள்ளி நின்றிருந்தான். ஆனாலும் கண்கள் சுற்றி வட்டமிட்டவாறே இருந்தது.

கொஞ்ச நாட்களாகவே யாரோ கண்காணிப்பதைப் போல அவனுக்கு தோன்றிக் கொண்டே இருக்கிறது. இடுப்பில் துப்பாக்கி இருக்கிறதா என ஒருமுறை சரிபார்த்துக் கொண்டான்.

அதே இடத்தில் சற்று தொலைவில், “எல்லாரும் சரியா இருக்கீங்களா. இன்னைக்கு அவனா? நாமளா? பாத்துடலாம். கூட ரெண்டு பொண்ணுங்க வேற இருக்கு. அவன எதுவும் செய்ய முடியலன்னா இந்த பொண்ணுங்கள வச்சி நினைச்சத முடிக்கவேண்டியதுதான்.” என சிறுகுரலில் ஒருவன் கூறிக் கொண்டிருந்தான்.

இன்னும் சிலரும் அவ்விடத்தை கண்காணித்தபடி சுற்றிக் கொண்டிருந்தனர். அனைவரின் கைகளிலும் ஆயுதங்கள்.

அபிஜித், ஷாப்பிங் முடிந்து பெண்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு வெளியேற, அவனுக்கு பக்கவாட்டில் இருவரும், பின்னால் இருவரும் தொடர்ந்தனர்.

அபிஜித் இதை கவனித்தாலும் கவனிக்காதவாறு நடையை தொடர்ந்தான். பெண்கள் இருவரையும் வைத்துக்கொண்டு எந்த ரிஸ்க்கையும் எடுக்க அவன் விரும்பவில்லை.

மக்கள் கூட்டமும் அவ்வளவாக இல்லை. அதிகபட்சம் ஐம்பது பேர்தான் இருப்பர். இதில் சாதகமும், பாதகமும் சரிவிகித அளவில் இருப்பதால் அமைதியாக கடக்க எண்ணினான்.

ஆனால் மற்றவர்களும் அவ்வாறு நினைப்பார்களா? திடீரென்று துப்பாக்கி சத்தம் கேட்க, மக்கள் சிதறி ஓடத்தொடங்கினர்.

அபிஜித் சட்டென இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுத்து லோட் செய்தவன், அப்போதுதான் கவனித்தான் தன் கையிலிருந்து வழியும் ரத்தத்தை. சத்தமில்லாமல் முழங்கைக்கும் மேலாக கூர்மையான பொருளால் கீறிச் சென்றுள்ளனர்.

கடுமையான வலியை உணரவும் செய்தான். ஆனால் விரைவாக பெண்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்ல வேண்டுமென எண்ணிய நேரத்தில் ஒரு கத்தி இவர்களை நோக்கி பாய பெண்களை தள்ளி விட்டவன் குனிந்து தன்னை காத்துக்கொண்டிருந்தான்.

துரித கதியில் அவன் செயல்பட, கத்தி வீச வந்தவனின் முழங்காலுக்கு கீழ் சைலன்சர் உதவியுடன் சத்தமில்லாமல் குண்டு இறக்கியிருந்தான். அடுத்து வந்தவனுக்கும் அதுவே நடக்க, சீறும் சிங்கமென வேட்டைக்கு தயாராக இருந்தவனை பின்புறமிருந்து, “ஜித்து” “அண்ணா” என்ற குரல் அவனை திரும்பி பார்க்க வைத்தது.

அவர்களின் கழுத்தில் கத்தி பதிந்திருக்க இருவர் இவனை கொடூரமாக முறைத்தவாறு நின்றிருந்தனர். “என்னடா கலெக்டர்னா பெரிய இவனா நீ? இப்ப போடுடா பாக்கலாம்” என சலம்பல் விட, அபிஜித் என்ன செய்வது என அறியாமல் நின்றிருந்தான்.

ஜனனி பயத்தில் விரைத்து நின்றிருக்க, பாப்பு சத்தமாக அழவே ஆரம்பித்திருந்தாள். “ஏய் சும்மா கத்தின இப்படியே சங்க அறுத்துட்டு போய்ட்டே இருப்பேன், கத்தாம வாய மூடு” என மிரட்ட, அவள் இன்னும் சத்தமாக அழத் தொடங்கியிருந்தாள்.

அபிஜித்திற்கோ பயம். அவன் கூறியபடி செய்துவிட்டால். ஆனால் அடுத்த நொடி அவன் என்னவென அறியும் முன்பே இரண்டு துப்பாக்கிகள் பாய்ந்த சத்தம் அவன் இதயத்தை அதிரச் செய்தது.

சத்தம் கேட்ட அடுத்த நொடி, பெண்களை பிடித்திருந்த காட்டெருமைகள் இரண்டும் பொத்தென மண்ணில் விழ, இவர்களைச் சுற்றி ஆட்கள் பாதுகாப்பாக வளைத்துக் கொண்டனர்.

அபிஜித் பெண்களிடம் பாய்ந்து செல்ல, அவர்களும் அதே வேகத்தில் இவனிடம் தஞ்சமடைந்திருந்தனர். அடுத்தடுத்த நொடிகளில் இது நடந்துவிட சினிமாவைப் போல் மக்கள் வேடிக்கை பார்த்தவண்ணம் இருந்தனர்.

“இத பாப்புகிட்ட இப்போ சொல்ல முடியாது. அதனாலதான் உங்கிட்ட மட்டும் சொல்றேன்.”