Ponnunjal17

ஊஞ்சல் 17

அழகான ஜீன்ஸ் டி-ஷர்ட்ல் இருந்தாள் மஹதி. வெண்ணையில் குழைத்த நிறமும் பாந்தமான அழகும் பத்ரியை அசராமல் ஆட்டி வைத்தது. கண்கள் பளபளக்க, அதிராத குரலில் பேசிய காட்டமான வார்த்தைகள் அவனை முற்றிலும் பந்தாட, தன்னை அவளுக்குள் முழுமையாக தொலைத்து நின்றான்.

மங்கையின் பேச்சு மனதிற்குள் வலி கொடுத்தாலும் இருகுடும்பத்திற்கும் முன்னே நிற்கும் அந்தஸ்து பேதம் என்ற தடைகல்லையும் தனக்கான பொறுப்புகளையும் விளக்கினால் புரிந்து கொள்வாள் என்று நினைத்து யதார்த்தத்தை விளக்கத் தொடங்கினான் பத்ரி.

“நான் சாதராண குடும்பத்தை சேர்ந்தவன் மஹதி! எங்க ஊருக்கு என்னால முடிஞ்ச உபகாரம் செய்வேன்னு நம்பிதான் என்னை படிக்க அனுப்பி இருக்காங்க… எங்க அப்பாவோட மரியாதை, என்னால குறைஞ்சு போனதுங்கிற பேச்சு வரக்கூடாது. என் தங்கைகளுக்கு பொறுப்பான அண்ணனா எல்லாத்தையும் செய்யனும், இதையெல்லாம் விட்டுட்டு என் காதலுக்கு கொடிபிடிக்க நான் விரும்பல” என்று பேசிட இவளுக்கு மீண்டும் கோபம் துளித்தது.

“நானும் எதையும் விட்டுட்டு வரச் சொல்லலையே பத்ரி… உங்ககூட சாதாரணமாதானே பழக ஆசைபட்டேன். அதை தப்பா புரிஞ்சுட்டு, உங்க மேல ஆசையும் அதே சமயத்துல கோபமும் வர்றதுக்கு நீங்கதான் காரணம். இப்போ மட்டும் ஏன் ரொம்ப நல்லவரா என்னோட வெல்விஷரா வந்து நிக்கிறீங்க? போங்க… நாளைக்கு என்னை, என்ன மாதிரி திட்டலாம்னு யோசிங்க!” என்று கரகரத்த குரலில் பேச, இவனுக்குமே வலித்தது.

“நம்ம கல்யாணம் நடக்க வாய்ப்பில்ல மதி, சொன்னா புரிஞ்சுக்கோ!” அழுத்தக் குரலில் பேசிட,

“நானா வந்து, என் விருப்பத்தை சொல்றதால என்னை ஈசியா நினைச்சுட்டீங்களா பத்ரி?”

“மதி…” அழுத்தமாக அழைத்து, கண்களின் சிவப்பில் தன் கோபத்தை வெளிப்படுத்தியவன்,

“நாம ரெண்டு பேரோட முடியுற விஷயம் இல்ல இது. உங்கப்பா இதுக்கு சம்மதிக்க மாட்டார், அப்படியே அவர் ஓகே சொன்னாலும் அவர் ஆட்டி வைக்கிற பொம்மையா அவர் தொழிலை மட்டுமே பார்த்துட்டு வாழ நான் தயாரா இல்ல. ஒரு அண்ணனா, மகனா என் குடும்பத்துக்கு நம்பிக்கையுள்ளவனா இருக்க ஆசைப்பட்றேன்…”

“ஃபைன்… எனக்கான ஸ்பேஸ் உங்க வாழ்க்கையில எப்போவும் கிடைக்காதுனு சொன்னதுக்கு தாங்க்ஸ்” ஏதோ ஒரு வேகத்தில் தன்மனதில் இருப்பதை கொட்டியவளுக்கு, அவனது விலகல் மேலும் அழுத்தத்தை தர, வெடித்து விட்டாள்.

“உங்கப்பாவோட முடிவு ஆரம்பத்தில இருந்தே தெரிஞ்சும் என்னால எப்டி பொண்ணு கேக்க முடியும்? அதான் உன்னை அவாய்ட் பண்ணேன். பெரியவங்கள பகைச்சிட்டு வாழுற வாழ்க்கையில சுத்தமா எனக்கு பிடித்தமில்ல மதி!”

“உங்க நியாயத்துக்கு என்னை பலி கொடுத்தது போதும்… இன்னும் ரெண்டு வாரத்துல இண்டேர்ஷிப் முடியுது, அதுவரை என் கண்ணுலபட்டு தொலைக்காதீங்க!” கோபத்தில் வார்த்தைகளை தணலாக கொட்டிக் கிளம்பினாள்.

மனதின் வலிகள் இருவரையும் பந்தாட, அடுத்து வந்த நாட்களை அமைதியாகவே கடந்தனர். மகளின் அமைதி ராகவனை சலனப்படுத்த, அவளிடம் கேட்டால் பதில் கிடைக்காதென்று, தோழி சஞ்சுவிடம் கேட்டு இருவருக்குமிடையே நடந்து கொண்டிருக்கும் பனிப்போரினை அறிந்து கொண்டார்.

ஒரு வாரத்திற்கு முன்பு அத்தனை பிடிவாதமாக திருமணத்திற்கு மறுத்து, தன்னிடம் தர்க்கம் செய்ததின் காரணமும் இதுதான் என்று தெரியவர, சஞ்சுவிடம் தனக்கு இந்த விடயம் தெரியும் என்பதை சொல்ல வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டார்.

ராகவனுக்கு நிறைய சிந்திக்க வேண்டியிருந்தது. ஜாதி, அந்தஸ்து பார்ப்பவர் அல்ல. ஆனால் தனது தொழில் பிளவுபட்டு விடக்கூடாது என்பதில் வீம்பாய் இருப்பவர். அதனால்தான், ஒரே வீட்டில் சம்மந்தம் வைத்து கொள்ளவும் நினைத்தார்.

வருங்காலத்தில் பங்குகள் கொடுத்து தொழிலை திறம்பட நடத்திட முயற்சி செய்தாலும் வெவ்வேறு குடும்பம் என்று வரும்பொழுது, அந்தந்த குடும்பத்தைச் சார்ந்த தொழில்களை மட்டுமே பிராதானமாக கவனிப்பது, பெரிய இடங்களில் வாடிக்கையான ஒன்று.

அப்படி தனது சாம்ராஜ்யம் யாரோ ஒருவரிடம் பாராமுகமாக இருப்பதை முற்றிலும் வெறுத்தார். அதனாலேயே இத்தனை முயற்சி செய்து ஒவ்வொரு காரியத்தையும் செய்து கொண்டிருப்பது.

அதற்கு தடங்கல் வரும் வகையில் இருக்கும் மகளது மனமாற்றம் குழப்பத்தை கொடுத்தது. தொழிலதிபராக நிற்பதா? அல்லது மகளுக்கு தந்தையாக நிற்பதா? என்ற போராட்டம் அவருக்கும் மனதோடு நடந்து கொண்டிருந்தது.

எக்காரணம் கொண்டும் தன்தொழிலில் பத்ரி தலையிட மாட்டான். அதேபோல தன்பாதையையும் மாற்றிக் கொண்டு இங்கே வரவும் மாட்டான் என்பதையும் தெளிவாக உணர்ந்தவருக்கு, மகளின் நிலையைப் பார்க்க பெரும் வேதனையளித்தது.

அருமையாக வளர்ந்த மகள், அல்லல்பட்டு அறைக்குள் கிடப்பதை பார்த்து தன்சுயத்தையும் சிதறவிட்டார் ராகவன். பயிற்சியை முடித்து வீட்டிற்கு வந்த மஹதியின் நிலையை தாய்புவனாவும் கவனித்து நடந்தவைகளை கணவரிடம் கேட்டறிந்து, அவரும் தன்பங்கிற்கு கவலை கொண்டார்.

இறுதியில் மகளின் தந்தையாக ராகவனின் மனம் வெற்றி பெற, ரிஷபனிடம் சென்று உள்ள நிலைமையை விளக்கி விட்டார். அந்த குடும்பத்துடன் ஏற்கனவே நல்ல பழக்கமிருந்ததால், தயக்கமின்றி அவர்களிடம் பேச முடிந்தது.

“தொழில் நேர்த்திய கரைச்சு குடிச்ச எனக்கு, பொண்ணோட மனச புரிஞ்சுக்க முடியல ரிஷபன்… எல்லாத்துக்கும் நான் மட்டுமே பொறுப்பெடுத்துக்க ஆரம்பிச்சு, அவங்க அம்மாவும் ஒதுங்கிட்டா…” என்று தன்னிலையை ராகவன் விளக்க ஆரம்பித்தார்.

“பொறுப்பானவரா இருந்துருக்கீங்க ராகவன்! இதுல வருத்தப்பட ஒன்னுமே இல்லையே?”– ரிஷபன்.

“இதுநாள் வரைக்கும் அவளுக்கு தேவையானத நானே முடிவெடுத்த மாதிரி, கல்யாணத்தையும் முடிவு பண்ணிட்டேன். பொண்ண அருமை பெருமையா வளர்க்கிறேன்னு நினைச்சு, அவ மனச பாக்காம விட்டுட்டேன். நம்ம வளர்ப்பு, அக்கறை தாண்டியும் அவங்க மனசுல ஏக்கம் வரும்னு இப்போதான் புரியுது” என்ற அவரது உள்ளார்ந்த பேச்சில் ஒருதந்தையின் வருத்தம் பிரதிபலிக்க,

“நீங்க மனச தளரவிடுற அளவுக்கு எதுவும் நடக்கலண்ணா! நம்ம மனசறிஞ்சு நடக்கிற பிள்ளைகள் கிடைப்பது வரம். அந்த விசயத்துல நீங்க குடுத்து வச்சவங்க!” என்று அசலாட்சியும் தன்பங்கிற்கு ஆறுதல்படுத்தினாள்.

“உங்க மகன ரொம்ப அருமையா வளர்த்திருக்கீங்க!” என்ற அவர் பேச்சில் ரிஷபன் மனைவியை பார்க்க, அதில் அத்தனை பூரிப்பு.

“எந்த இடத்துலயும் யாருக்கும் தலைகுனிவு வராம இருக்க ரொம்பவே பாடுபட்டுட்டான். அவன் நெனக்கிறதயே என் பொண்ணுக்கும் புரியவச்சு, அவ மனசையும் ரொம்பவே கஷ்டப்படுத்திட்டான். அந்த வகையில எனக்கு, அவன் மேல கொஞ்சம் கோபமும் இருக்கு”– ஆதங்கமாய் ராகவன் பேச,

“புரியுது ராகவன்! நானும் ரெண்டுபெண்ணை பெத்தவன்தான்” என்றே அவரை சமாதானபடுத்தினான் ரிஷபன்.

“எனக்கு பிறகு, தொழிலை என்பொண்ணு நிர்வாகம் பண்ணும்போது அவளுக்கு உங்க குடும்பத்தோட ஆதரவு வேணும். அந்த உத்திரவாதத்தை மட்டுமே நான் உங்ககிட்ட கேக்குறேன்” தன்னை வாட்டி வதைத்த எண்ணங்களை எல்லாம் ராகவன் அங்கே வெளிப்படுத்தி விட்டார்.

உங்கள் மகனின் ஆதரவு வேண்டும் என்று தனியே பிரிக்காமல் அந்த குடும்பத்தையே, தன்குடும்பத்தில் இணைத்துக் கொண்டு தன்பெரிய மனித தோரணையை காண்பித்து விட்டார் ராகவன்.

“அவங்களுக்கான உலகத்துல, ரெண்டு பேரும் அருமையா பொருந்தி இருப்பாங்க ராகவன்! அந்த சந்தோஷ பயணத்துக்கு வழிகாட்ட நாமெல்லாம் இருக்கும்போது, உங்க பயத்துக்கான காரணம் காணாம போயிடும். அனுசரணையான வாழ்க்கைக்கு உத்திரவாதம் கொடுக்க வேண்டிய அவசியமில்ல… மூணு முடிச்சு பந்தம் அழகா செய்ய வைக்கும். தைரியமா உங்க பொண்ணை எங்க வீட்டுக்கு அனுப்பி வைங்க!” என்று ரிஷபன் கூற, பெரியவர்கள் உட்பட அனைவருக்கும் சந்தோசமே!

மனைவியுடன் மனக்கண்ணால் பேசி, விழிமொழியால் பரிமாறிக் கொண்ட வாழ்க்கையின் பிரதிபலிப்பு, ரிஷபனின் முதிர்ச்சியான பேச்சில் வெளிப்பட்டது. முறைப்படி பெண் பார்க்க வரவேண்டும் என்று கோரிக்கை வைத்து விட்டு விடைபெற்றார் ராகவன்.

“ராகவன் அண்ணா ரொம்ப நல்ல மனுஷன் பாவா! எங்கே இவர் நினைச்சது நடக்கனும்னு நம்ம பொம்மிய கேட்டுருவாறோனு ஒரு நிமிஷம் நானும் பயந்துட்டேன்” – அசலாட்சி.

“வயசு வித்தியாசம் அதோட அவளுக்கு அக்ரீயிலதான் இண்டரெஸ்ட்னு ஏற்கனவே அவர்கிட்ட சொல்லியிருக்கேன் சாலா! அவரும் யோசிச்சிருப்பார்” என்றவன் அடுத்து நடக்க வேண்டியதைப் பற்றி திட்டமிட ஆரம்பித்தான்.

*******************************************

கிட்டத்தட்ட ஒரு மாதம் முடிந்திருந்தது. பத்ரிக்கு, தன் தேவதைப் பெண்ணைப் பார்த்து… நாள் முழுவதும் மருத்துவமனையில் மனதை நிலைநிறுத்துபவன், விடுமுறை நாட்களில் பெருமளவு தவித்துப் போகிறான்.

‘ராட்சசி! என்ன பேச்சு பேசிட்டா? அவ கண்ணுல படக்கூடாதாம், அவ சொன்னமாதிரியே ஒரு மாசம் இருந்தாச்சு! இவதான் வந்து கண்ணாமூச்சி ஆடிட்டு இருக்கா!’ என்று அதிகாலை வேளையில், தள்ளிப்போன நாள்கணக்கை எண்ணும் மசக்கைகாரியைப் போல் தேதிகளை அடித்துக் கொண்டிருந்தான் பத்ரி.

அவளது நினவில் சுகமாய் திளைத்திருந்தவனை வெறுப்பேற்றவென்றே அவனைத் தேடிவந்தன, அவனது இரட்டைவால் குருவிகள்

“ஹேய் ரோஸ்கூட்டி எப்படிரா வந்தே? உன்கூட யார் வந்திருக்கா?” என்று தன்முன்னே திடீரென வந்து நின்ற சின்னகுட்டியைப் பார்த்து கேட்க,

“அக்கயாகூட வச்சிந்தி, அண்ணயா” என்று சொல்லி முடிக்கும்போதே பொம்மி அங்கே வந்து சேர்ந்தாள்.

“என்ன டாக்டரே! அம்மாகிட்ட நிறைய ஆசீர்வாதம் வாங்க ஆசைப்பட்டா ஒரேடியா அவங்க காலடியில தூங்கிறலாமே? இப்படியா வீட்டுக்கு வராம, எந்நேரமும் அவங்க வாயில விழுந்து வைக்கிறது”

“கொஞ்சம் வேலையிருந்தது பொம்மி, அதான் வரல”

“இப்பிடியே சொல்லி ரெண்டு வாரம் கடத்திட்ட! அர்ச்சனை நடக்குது உனக்கு… சேதாரம் நிறையவே எதிர்பார்க்கலாம் உடனே கிளம்பு சின்னையா”

“எனக்கு ஓபி இருக்கு, பேஷண்ட்ஸ்க்கு அப்பாயின்ட்மென்ட் குடுத்தாச்சு, கேன்ஸல் பண்ண முடியாது”

“அட யார்ரா இவன்? சண்டே அன்னைக்கு எந்த டாக்டர் ஷெட்யூல் போட்டு ஓபி பாக்குறாருன்னு தெரியல? ஹாஸ்பிடல்ல கேட்டாச்சு, ரெண்டு வாரமா நீயே டுயூடி கேட்டு வாங்கிக்கிறியாம்… என்ன ரொம்ப சம்பாதிக்க பிளான் பண்றியா?”

“அடிப்பாவி! எனக்கு ஆப்பு வைக்க சிஐடி வேலையெல்லாம் பாக்குற!”

“நோ மோர் டாக் ப்ரோ! கிளம்பு… கிளம்பு”

“சொன்னா கேளு! ஓபி இருக்கு”

“உனக்கு அரைமணிநேரம் குடுக்குறேன், டுயுடிக்கு ஆள் மாத்திட்டு ரெடியாகி வா… இல்லைனா நாணாக்கு கால் பண்ணி பேசு, எது செய்ற?” என்ற மிரட்டல் நன்றாக வேலை செய்ய தயாராகி வந்தான்.

“எதுல வந்தீங்க?”

“உனக்கு பிடிச்ச வோல்ஸ்வாகன் காரைத்தான் உருட்டிட்டு வந்தேன். என்னோட புல்லட்ரைட்ல வந்திருந்தா, எப்பவோ வந்து சேர்ந்திருப்பேன்” என்று சொன்னவள் அவனை கிளம்ப வைத்தாள்.

“இந்தா! நீதான் ட்ரைவ் பண்ணனும், உன்னோட ஹாஸ்பிடல்க்கு போ… நாணா ஃபிரண்ட் ஒருத்தவங்கள அங்கேயிருந்து கூட்டிட்டு போகணும்” என்று அங்கே சென்று இறங்கவும், மஹதி அவர்களை கையாட்டி முன்னே வரவும் சரியாக இருந்தது.

“ஹாய் ஐயாம் பத்மாக்ஷினி” என்று பொம்மி ஆரம்பிக்கும்போதே,

“நீ பொம்மி, இவ ரோஸ்குட்டி” அவர்களை அழைத்து புன்னகைத்தாள் மஹதி.

“யெஸ்… அவ்ளோவா சொல்லி வச்சுருக்கான் என் அண்ணயா” என்று சிலாகித்தாள் பொம்மி.

“யாருக்கா இவங்க?” – ரோஸ்குட்டி

“மதிமேடம்ரா! ஹாய் செப்பு” பொம்மி சொல்லும்போதே இடையிட்டு,

“கால்மீ மஹதி, சரியா அம்மு? கிளம்புவோமா?” என்றவளும் காருக்கு அருகே செல்ல, டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தவன் தன்தேவதை கண்முன்னே வருவதை பார்த்து ஸ்தம்பித்து நின்றான். வெள்ளைபூக்களுடன், கற்கள் பதிக்கப்பட்ட சாக்லேட் வண்ண அனார்கலியில் அத்தனை அழகாய் பத்ரியின் கண்களுக்கு தெரிந்தாள்.

புன்னகை பூத்தவளின் மலர்ச்சியான முகத்தை பார்த்தவனுக்கு, ஏனோ பனிசாரலில் நனைந்த குளிர்ச்சியாய் மனதை சாந்தபடுத்தியது. அன்று அழுகையில் கரைந்து தன்னோடு கோபித்துக் கொண்டவளை, இன்றுதான் கண்ணெதிரே காண்கிறான். அவளும் இவனுக்கு எதிரில் வராமல் கண்ணாமூச்சி ஆட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்க, இப்பொழுது நேரடி தரிசனம் இருவருக்கும்.

‘இப்போழுதும் நான்தான் உன்னைத் தேடி வந்திருக்கின்றேன், நீ என்னை தேடவில்லை’ என்ற குற்றச்சாட்டு மஹதியின் பார்வையில் தொக்கி நிற்க, அதைப் பார்த்தவன்,

“இவங்க எதுக்கு பொம்மி?” தடுமாற்றத்துடன் கேட்டான்.

“வர்றவங்கள வான்னு சொல்லாம, என்ன பேச்சு இது சின்னையா?” என்று பொம்மியும் பத்ரியை கடிந்து கொள்ள,

“சாரி” என்று முனங்கியவன், அவளை பார்த்து “வா மஹதி!” என்று சொல்ல, ஒரு வழியாக பயணம் தொடங்கியது.

சின்னக்குட்டி பத்ரியுடன் முன்புறம் அமர, பின்னால் இரண்டு யுவதிகளும் அமர்ந்தனர். இரண்டு மணிநேர பயணத்தை தங்கள் பேச்சிலும் பாட்டிலும் கடந்தவர்கள், நகரியை ஒட்டியுள்ள தங்களது மிளகாய் பதப்படுத்தும் கூடத்திற்கு வந்திறங்கினர்.

“இங்கே என்ன வேலை பொம்மி?” – சின்னா.

“மஹதி, நம்ம செகண்ட் யூனிட் பாக்கணும்னு சொன்னாங்க! அவங்க வந்ததே அதுக்குதான். நீ குட்டிகூட வீட்டுக்கு போ சின்னையா! நாங்க கொஞ்சநேரம் கழிச்சு வர்றோம், என்னோட புல்லட் இங்கேதான் இருக்கு”

‘இவளுக்கு இங்கே என்ன வேலை இருக்ககூடும்’ என்று யோசித்தபடியே காரில் ஏற முயற்சிக்கும்போதே, அங்கே வந்து சேர்ந்தான் விஸ்வேந்தர்.

“ஹாய் பத்மி”

“ஹாய் விச்சுகண்ணா” என்று இருவரும் ஆர்ப்பாட்டத்துடன் அழைத்துக் கொள்ள

“அக்கா… இப்டி கூப்பிடக்கூடாதுனு நாணா சொல்லியிருக்காங்க!”

“பரவாயில்ல ரோஸ்குட்டி” என்றவன் பொம்மியை பார்த்து, “என்ன? புல்லட்ராணி, கார்ல பவனி வர்றீங்க?” என்று விச்சு கேட்க, பத்ரியோ அவனை புதுவிதமாய் பார்த்தான்.

“சின்னையா இவன்தான் விஸ்வேந்தர்… ஏசிபி அங்கிள் பையன்… வருங்கால ஐபிஎஸ்… இப்போ டிகிரி முடிச்சிட்டு யுபிஎஸ்சி எக்ஸாம்க்கு பிரிபேஃர் பண்ணிட்டு இருக்கான். ப்ரீடைம்ல பிராக்டிஸ் பண்ண சிலம்பம் கிளாஸ்க்கு வந்துருவான்!” – பொம்மி.

“ஒருசின்ன திருத்தம் நான் ஐஏஎஸ்க்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன்” – விஸ்வா.

“உனக்கெல்லாம் அது செட்டாகாது விச்சு… எங்க சின்னையா மாதிரி அமுல்பேபி மொகத்துக்குதான் ஐஏஎஸ் செட் ஆகும். உனக்கு ஐபிஎஸ் தான்ரா கெத்து காமிக்கும்” என்று உரிமையாக பேசுவதைப் பார்த்து, அண்ணனாக தனது கண்டனப் பார்வையை பொம்மியின் மேல் செலுத்தினான் பத்ரி.

“மூணு வருசத்துக்கு முன்னாடியிருந்தே சிலம்பம் கிளாஸ்க்கு வர்றேன் சார்” என்று அவன் பார்வையை புரிந்தவனாய் விளக்கம் சொன்னான் விஸ்வேந்தர்.

“ஒஹ்… நைஸ் டூ மீட் யூ” என்று கைகொடுத்துக் கொண்டவர்கள், தங்கள வழிகளை பார்த்துப்போக, பெண்கள் இருவரும் பதப்படுத்தும் ஆலைக்கு சென்றனர்.

“முன்னாடி மிளகாய் மட்டும் பதப்படுத்தி வச்சிட்டு இருந்தோம். இப்போ வெஜிடபிள்ஸ் அண்ட் புரூட்ஸ்க்கும் ஆரம்பிச்சு ரெண்டு மாசம் ஆகுது” என்று விளக்கம் சொல்ல தொடங்கினாள் பொம்மி.

“புராசஸிங் ரூம்க்கு(பதப்படுத்தும் அறை) போவோமா மஹதி?”

“இல்ல… கொஞ்சம் கோல்ட் இருக்கு, இங்கே இருந்தே சுத்தி பார்த்துட்டு நான் கிளம்புறேன் பொம்மி” சுவாரசியம் இல்லாமல் பேசினாள்.

அவள் மனதை சற்று மாற்ற எண்ணியே, “கொஞ்சநேரம் வெளியே போயிட்டு வருவோமா?” என்று கேட்டவள் மஹதியை தனது புல்லட்டில் அழைத்துக் கொண்டு, ஊர் சுற்றிக் காண்பித்தாள்.

“சாரி உங்களுக்கு ரொம்ப தொல்லை குடுத்திட்டேனா? டாடிதான் என்னை கம்பெல் பண்ணி இங்கே அனுப்பி வச்சார். ஹாஸ்பிடல் கான்டீன்ல இப்படி செய்ய ஐடியா இருக்கும் போல… நீ இந்த புராசஸ் சொல்லு பொம்மி! அப்படியே டாடிகிட்ட எகக்ஸ்பிளைன் பண்ண வசதியா இருக்கும்” என்று கேட்க, பொம்மியும் சொல்ல ஆரம்பித்தாள்.

அங்கே ரிஷபனின் வீட்டில் கடுகாக மகனை தாளித்துக் கொண்டிருந்தாள் அசலாட்சி.

“அப்டியென்ன வீம்பு சின்னா? வீட்டு நினைப்பையும் மறக்குற அளவுக்கா, வைத்தியத்துக்கு ஆள் நிக்கிறாங்க?”

“ம்மா ப்ளீஸ்… வொர்க் டென்ஷன்ல வரல, இப்போ வந்துட்டேனே விடும்மா”

“உன் தங்கச்சிகளை அனுப்பலன்னா இன்னைக்கும் வந்திருக்க மாட்ட அப்படிதானே?”

“எதுக்கு இவ்ளோ அவசரமா கூட்டிட்டு வந்திருக்கீங்க?”

“உனக்கு கல்யாணம் பண்ணிவைக்க முடிவெடுத்து பொண்ணும் பார்த்தாச்சு… இன்னைக்கு சாயந்திரம் நிச்சயதார்த்தம் ரெடியாகிக்கோ” அலுங்காமல் ஒரு குண்டைத் தூக்கிப்போட,

“என்னது? என் சம்மதம் வேணாமா? எக்ஜிபிஷன் போகலாம், ரெடியாகிட்டுவான்னு சொல்றமாதிரி ஈஸியா சொல்றீங்க”

“பேச நேரமில்ல பாபு, கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வா! அப்போதான் சரியா இருக்கும்”

“முடியாதும்மா! நான் டிஎம்இ மூணு வருஷம் படிக்கணும், பொம்மிக்கு முடிஞ்சதும் பண்ணிக்கிறேன்ம்மா”

“இப்போ இப்டி சொல்லிட்டு, அப்புறம் அஜுக்கு முடியட்டும்னு சொல்வியா பாபு!” – அசலா.

“அட, இதுவும் நல்லா இருக்குமா! அப்படியும்கூட செய்யலாம்”

“பெரிய இடத்து பொண்ணுரா! அழகா பட்டுகுட்டியாட்டம் இருப்பா! உன்னை நம்பி குடுக்கிறேன்னு சொல்லும்போது விடச் சொல்றியா?”

“அப்ப அந்த பொண்ணுகூட பத்துநாள் டூர் போயிட்டு வாங்க! கல்யாணம் பண்ணிக்க சொல்லாதீங்க”

“அப்படி என்னரா பிடிவாதம்? தாத்தா, நாணா எல்லாரும் சேர்ந்து முடிவெடுத்தாச்சு, இன்னும் பதினைஞ்சு நாள்ல உனக்கு கல்யாணம். மறுப்பு சொல்றத விட்டுட்டு நிச்சயத்துக்கு ரெடியாகு” இப்பொழுது கண்டிப்புடன் அசலாட்சி பேச,

“சாரிமா… என்னால முடியாது, எனக்கு கல்யாணமே வேண்டாம்”

“எது சொன்னாலும் மறுத்து பேசுறதா முடிவே பண்ணிட்டியா சின்னா?” ரிஷபன் குரலை உயர்த்தி பேசிக் கொண்டே வர, உடன் பொம்மி மற்றும் மஹதியும் வந்தனர்.

“என்ன சொன்னாலும் அவன் முடிவுலயே நிக்கிறான் பாவா! என்னனு கேட்டு சொல்லுங்க?” என்று கணவனிடம் பொறுப்பை ஒப்படைத்து, வந்தவளை வரவேற்றாள் அசலாட்சி.

“எங்க ஊர் பிடிச்சிருக்காம்மா… கொஞ்சநேரம் பொம்மி ரூம்ல ரெஸ்ட் எடு” என்றவள் அவளை அழைத்துக்கொண்டு செல் என பொம்மிக்கு உத்தரவிட்டாள்.

ஏதோ நிலைமை சரியில்லை போல் தோன்றவே, மஹதிக்கு உள்ளே செல்லவும் தடுமாற்றம் வந்து அங்கேயே நின்றாள். பத்ரியும் அவளை பார்த்தபடியே இருந்தாலும் அவனது மறுப்பை சொல்லிக்கொண்டே இருக்க, மஹதிக்கும் அங்கே நடப்பது தெளிவாக புரிந்து போனது.

“மன்னிச்சிருங்க நாணா! நான் இப்படியே இருந்திர்றேனே! ப்ளீஸ்…” தன் பிடிவாதத்தில் நிலையாய் நிற்க,

“உனக்காகனு பேசி முடிச்சாச்சு பாபு! இப்போ வேணாம்னு சொன்னா, நாணாதான் பதில் சொல்லணும்” – அசலா

“என்னோட பிடிவாதம்தான் எல்லாத்துக்கும் காரணம்னு அவங்ககிட்ட விளக்கம் சொல்றேன், நாணாக்கு எந்த சங்கடமும் இல்லம்மா”

‘சரியான அழுத்தக்காரன், ஆசைய மனசுல பூட்டி வச்சுட்டு ஆஸ்கார் அவார்டு வாங்கப்போறான் போல’ உரிமையாக, மனதோடு திட்டி முடித்தாள் மஹதி.

நடக்கும் ஆட்டத்தின் தன்மை யாதென்று அவளுக்கும் தெரியாது. அதனால் மௌனமாய் கவனிக்க, அசலாட்சியின் அருகில் அமர்ந்து விட்டாள் மஹதி.

“ஒஹ்… அந்த அளவுக்கு பெரிய மனுஷன் ஆகிட்டியா சின்னா?” ரிஷபன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் தலைகுனிந்தான் பத்ரி.

“பொண்ண ஒருதடவ பார்த்தா இப்படி பேசமாட்டரா பாபு!” அசலாட்சி மீண்டும் தன்முயற்சியில் இறங்க,

“அவசியமில்லம்மா… யார்கிட்ட பேசணும் சொல்லுங்க! நான் பேசுறேன்”

“என்ன சின்னையா? உன்ன நம்பி முடிவெடுத்தவங்கள இப்படி கெஞ்ச வைக்கிறியே?” பொம்மி கேட்க,

“அது… எம் மனசுக்கு பிடிக்கலயே பொம்மி, எனக்கு பிடிக்காதத பிடிக்க வச்சு பழக்கமில்ல” என்று அர்த்தப்பார்வையுடன் மஹதியை பார்க்க, அவள் கண்களில் சிரிப்போடு ஈரத்தின் சாயல்.

தன்னைக் கொள்ளையடித்தவன், தனக்காகவே குற்றவாளியாக நிற்க, தனக்கு இதுவே போதும் என்றே மனதை சமாதானப்படுத்திக் கொண்டாள் மஹதி.