Kannan Rathai – Epilog

அத்தியாயம் – 31

காலையில் வழக்கம்போல பொழுது விடிந்திட கீழ்வானம் சிவப்பதைக் கண்டு ஜன்னலின் ஓரமாக நின்று வெளியே வேடிக்கைப் பார்த்தவளின் கைகள் தானாக அவளின் அடிவயிற்றை வருடியது. இந்த ஒன்பது மாதத்தில் உருண்டு திரண்ட வயிறுடன் நின்றிருந்தாள்.

முதல் மூன்று மாதம் சென்னை வாசம். அதற்கு மேல் சென்னை வேண்டாம் என்று தன் வேலையை ரிசைன் பண்ணிவிட்டு மனைவியை அழைத்துக்கொண்டு மீண்டும் தன் சொந்த ஊருக்கே வந்துவிட்டான் கிருஷ்ணா.

அவனின் இந்த முடிவால் எல்லாமே மாறிப்போனது என்றே சொல்லலாம். முதல் மாற்றம் மதுமதியின் பெற்றோரிடம்..

மகள் இல்லாத இடத்தில் தங்களாலும் இருக்க முடியாது என்று சொல்லிவிட்டு அவர்களும்  ஒரு பாரம்பரிய வீட்டை விலைக்கு வாங்கி திருமங்கலத்தில் குடியேறினர்.

இன்னொரு பக்கம் விஷ்ணு – பிரீத்தி இருவரும் அரசாங்கத்தில் வேலை கிடைக்க அவர்களும் மதுரை வந்து சேர்ந்தனர். மற்றொரு புறம் ராகவின் தாய்க்கு ஏற்றபட்ட உடல்நல குறைவால் அவர் திடீரென்று மரணமடைய போதும் சென்னை வாசம் என்று அந்த வாழ்க்கைக்கு ஒரு முற்றுபுள்ளி வைத்துவிட்டு மனைவியை அழைத்துக்கொண்டு அவனும் அங்கேயே வந்துவிட்டான்.

ருத்ராவின் பெற்றோரும் மகள் தங்களுக்கு அருகில் இருக்கிறாள் என்ற சந்தோஷத்தில் இருந்தனர். அனைத்தும் சரியாக நடந்த நேரத்தில் கிருஷ்ணாவின் நடவடிக்கையில் நாளுக்கு நாள் மாற்றத்தை உணர்ந்தனர் அவனின் பெற்றோர்.

மது கருவுற்ற நாளில் இருந்து தன் கையில் வைத்து தாங்கினான் அவளின் கணவன். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவனின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறிப்போனது.

தன் சொந்த வீட்டிற்கு வந்தபிறகு மதுவை அவன் ஒரு  வழி செய்துவிட்டான் என்று சொல்லலாம். அவள் நிம்மதியாக உட்கார கூட விடாத அளவிற்கு அவளுக்கு வேலை கொடுத்தான்.

தன்னுடைய அவ்வளவு பெரிய வீட்டில் வேண்டுமென்றே பேப்பர்களை போட்டு குப்பையாக்கிவிட்டு, “மது இங்கே வந்து இதையெல்லாம் கூட்டி அல்லு” என்று அவளை கூட்ட சொல்வான்.

அதை கவனித்த சங்கீதாவிற்கு கொலைவெறியே வரும். “கிருஷ்ணா மனசில் என்னாதான் நினைச்சிட்டு இருக்காரு. மதுவிற்கு இது ஏழாவது மாதம். அவளை எதுக்கு இப்படி உட்கார விடாமல் வேலை வாங்குகிறாரு உங்க தம்பி” என்று  தன் கொழுந்தனை திட்ட முடியாத காரணத்தால் கணவனின் மீது பாய்வாள்.

மாதவன் எதுவும் சொல்லாமல் அமைதியாக அங்கிருந்து நகர மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க கூட்டும் மனைவியை கவனிக்காமல் சமையலறைக்கு செல்பவனின் மீது தாமரைக்கு வெறுப்புதான் வந்தது.

அண்ணியின் கஷ்டத்தை பார்க்க சகிக்காமல் தாரிகா உதவிக்கு வந்தால், “தாரிகா உங்க அண்ணி கூட்டி விடுவா. நீ உன்னோட வேலையைக் கவனி” என்று மிரட்டி அனுப்பி விடுவான்.

சும்மா நாளில் கூட கிணற்று நீரில் குளிக்காதவன், “மது வா வந்து கிணற்றில் தண்ணீர் இறைத்து ஊற்று, நான் குளிக்கணும்” என்று அவளை போட்டு வேலை வாங்குவான். அவளும் தன்னால் முடிந்தவரை கணவனின் தேவைகளை பூர்த்தி செய்வாள்.

மாலை வெகுதூரம் நடக்கவேண்டுமென்று அவளை இழுத்துக்கொண்டு அந்த ஊரை இரண்டு ரவுண்டு அடிப்பான். அவளுக்கு டீ, காபி எதுவும் கொடுக்காமல் பக்கத்தில் இருந்து கழுகு பார்வை பார்ப்பான். மதுவும் அவனுக்கு பயந்து எதையும் சாப்பிடாமல் இருப்பாள்.

இவனின் சேட்டைகளை நேரில் கண்ட மதுவின் பெற்றோருக்கு கிருஷ்ணாவின் மீது கோபம் வந்தபோதும், “கிருஷ்ணா காரணம் இல்லாமல் எதுவும் செய்யமாட்டான்” என்ற நம்பிக்கையில் அமைதியாக இருந்தனர்.

அவனிடம் மட்டும் அவளின் எந்த பிடிவாதமும் செல்லுபடி ஆகாது. செல்லம் கொஞ்சி காரியத்தை சாதிக்கும் கணவனின் பாசத்தில் முழுவதுமாக மூழ்கி திளைத்தாள் மதுமதி.

அவள் ஹாலிற்கு வர திடீரென்று அவளுக்கு பிரசவ வலி வந்ததும் விஷ்ணு மதுவை மருத்துவமனையில் சேர்க்க அணைத்து ஏற்பாடுகளையும் செய்ய கிருஷ்ணா மட்டும் மதுவின் கைகளைபிடித்துகொண்டு, “மது வலி ரொம்ப அதிகமாக இருக்கா” என்று கேட்டான்.

அவளோ முகம் சுருங்காமல் இல்லையென தலையசைக்க, “அவளுக்கு இன்னும் பிரசவ வலி வரல. எல்லோரும் அமைதியா இருங்க” என்று அனைவரையும் அடக்கிவிட்டு, “நீ வா நம்ம பின்னாடி தோட்டத்துக்கு வாங்கிங் போலாம்” என்று அவளை அழைத்து செல்ல பெரியவர்கள் அனைவரும் அவனை கொலைகாரன் அளவிற்கு லுக் விட்டனர்.

தாமரையோ ஒரு படி மேலே சென்று, “டேய் ஏண்டா இப்படி பண்ற பாவம்டா மது. நிறைமாத கர்ப்பிணி அவளை நீ இந்த பாடு படுத்தற. மகனே அவளுக்கு ஏதாவது ஆச்சு அப்புறம் இருக்கு உனக்கு” என்றார் கோபத்துடன் அவனை முறைத்தபடி.

அவனின் இந்த செயலில் கோபமடைந்த ராகவ், “டேய் கிருஷ்ணா அவளுக்கு வலி வந்ததா கூட சொல்ல விடாமல் பண்ற மாதிரி இருக்கு உன்னோட வேலை. நீ முதலில் மதுவை விடு நாங்க அவளை ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போறோம்” என்றான்.

தன் மனைவியுடன் வாசல்வரை சென்ற கிருஷ்ணாவோ, “என் மனைவிக்கு என்ன பண்ணனும் என்று எனக்கு தெரியும். நீங்க எல்லோரும் உங்க வேலையைப் பாருங்க அது போதும்” என்று முகத்தில் அடித்தாற்போல சொல்லிவிட்டு அவளை அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்றான்.

அவளோ நடக்க முடியாமல் மெல்ல மெல்ல நடக்க, “மது நான் இருக்கேன். நீ எதுக்கும் கவலைபடாமல் இருக்கணும்” என்று ஏதேதோ பேசியபடியே அவளோடு தோட்டத்திற்குள் நடை பயின்றான்.

கிருஷ்ணாவின் கரம்பிடித்து அவனோடு நடந்த மதுவிற்கு மட்டுமே தெரியும் அவனின்  ஆழ்மனதில் இருக்கும் பயம். அவளை அத்தனை வேலை வாங்கும் கிருஷ்ணாவை அவர்கள் கொலைகாரன் மாதிரி பார்க்க மது மட்டும்  அவனின் காதலை உணர்ந்தாள்.

பகல் முழுவதும் அவளை அத்தனை வேலை வாங்கும் கிருஷ்ணா இரவு முழுவதும் அவளின்  கால்களை பிடித்துவிட்டுகொண்டு வயிற்று பிள்ளையோடு பேசிக்கொண்டே விழித்து இருப்பான். அவளால் பட்டென்று திரும்பி படுக்காமல் முடியாமல் அவனை முறைக்கும் தருணத்தில் சிரித்தபடி நகர்ந்துவிடுவான்.

அவள் படுக்கையில் தூங்கிய நாட்களைவிட அவனின் தோளில் தூங்கிய நாட்கள் அதிகமானது. கணவன் எந்த வேலை சொன்னாலும் அவள் அமைதியாக செய்பவளுக்கு பசியெடுக்கும் முன்னே கையில் தட்டுடன் அவளிடம் வந்து நிற்பான்.

கிணற்றில் நீர் இறைத்து ஊற்றிவிட்டு அவள் வந்தால் குளித்துவிட்டு வந்து அவளின் கைகளை இதமாக பிடித்துவிட்டு காப்பு காய்க்காமல் இருக்க ஆயில்மென்ட் போட்டு விடுவான். பிள்ளை பிறக்கும் வரை அவளுக்கு வயிற்றில் அறிப்பெடுக்கும் போது தன்னையும் அறியாமல் அவள் சொரிந்து புண்ணாக்கி கொள்வாள் என்ற பயத்தில் தினமும் அவள் கண்விழிக்கும் முன்னே கை நகங்களை  வெட்டிவிடுவான்.

காலையில் அவள் துயில் கலைந்ததும் அவள் பார்க்கும் முதல் முகமும் அவனே. அவள் இரவு துயில் கொள்ள செல்லும் பொழுது அவள் பார்க்கும் கடைசி முகமும் அவனே.

ஒவ்வொரு நாளும் அவன்  செய்யும் சேட்டைகளை கண்டு வீடே அதிர மது மட்டும் அமைதியாக வலம் வந்தாள். கிருஷ்ணாவின் பாசமும், அவனின் அக்கறையும் புரிந்து அவன் சொல்லும் அனைத்தையும் மறுப்பு சொல்லாமல்  செய்தாள் மது.

அவளுக்கு நன்றாக வலிபிடித்ததும் அவளை அப்படியே கைகளில் தூக்கிக்கொண்டு, “இன்னும் பத்து நிமிஷம் வலியைப் பொறுத்துக்க மது நம்ம ஹாஸ்பிட்டல் போலாம்” என்றவன் ராகவை அழைத்து காரை எடுக்க சொல்ல மொத்த குடும்பமும் மருத்துவமனைக்கு சென்றது.

எல்லோரும் பதட்டத்துடன் நின்றிருக்க இவன் மட்டும் பிரசவ அறைக்குள் நுழைய அங்கிருந்த நர்ஸ், “சார் நீங்க இங்கே வரக்கூடாது. நீங்க வெளியே இருங்க”என்றார். அவர் பேசுவது எங்கே அவனின் காதில் விழுந்தது.

அந்த அறையில் வலிதாங்க முடியாமல், “கிருஷ்ணா வலிக்குது” துடித்த மனைவியின் குரல் அவனைக் கட்டி இழுக்க, “நான் அவளோடுதான் இருப்பேன்” என்று நர்சிடம் அவன் சண்டைக்கு நின்றான்.

இவனின் அலம்பலைப் பார்த்த தாமரை, “டேய் நீ நினைக்கற மாதிரி பிரசவவலி சாதாரண வலி இல்ல. நீ வெளியே வா..” என்று அவனை பிடித்து இழுத்து வந்து சேரில் அமர வைத்தனர்.

கிருஷ்ணாவை தவிர மற்ற எல்லோரும் பதட்டத்துடன் காத்திருந்தனர். அடுத்த பத்து நிமிடத்தில் சுக பிரசவத்தில் அவளுக்கு ஆண் குழந்தை பிறக்க நர்ஸ் கொண்டுவந்து கிருஷ்ணாவின் கையில் கொடுத்தாள்.

அவளை முறைத்துவிட்டு குழந்தையை வாங்கி மெல்ல அந்த பிஞ்சு மலரை மெல்ல வருடியவனின் உடல் சிலிர்ந்தது.  மதுவின் பெற்றோரும், அவனின் பெற்றோரும் குழந்தையை தங்களின் கையில் வாங்கிக் கொண்டனர்.

ராகவ், விஷ்ணு இருவரும் அவனுக்கு வாழ்த்துக்கள் கூற அவனோ அமைதியாக அமர்ந்திருந்தான். அவன் இன்னும் குழந்தையின் முகத்தைக் கூட சரியாக பார்க்கவில்லை. அவனின் மனம் முழுவதும் மதுவின் மீதே இருந்தது.

சற்று நேரத்தில் அங்கே வந்த பிரீத்தி எல்லோரும் சொன்னதைக்கேட்டு ரொம்பவே கடுப்பாகிவிட்டாள்.

“ஏன் கிருஷ்ணா இப்படி பண்ற. அவளோட உயிருக்கு ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்ணிருப்ப” என்றாள் அவனை முறைத்தபடி.

“அவளோடு சேர்த்து நானும் செத்து போயிருப்பேன் போதுமா? நகரு நான் மதுவைப் பார்க்க போகணும்” சலனமே இல்லாமல் சொல்லிவிட்டு எழுந்தவனை தடுத்த ருத்ரா, “இந்த பிடிவாதம் நல்லது இல்ல கிருஷ்ணா” என்றாள் அவனை வெறுப்புடன் பார்த்தபடி.

அந்த அளவிற்கு அவனின் மீது கண்டும் கோபத்தில் இருந்தது இரண்டு குடும்பமும்!

அப்போது நர்ஸ் வந்து அவள் கண்விழித்து விட்டதாக சொல்ல, “நான் மதுவைப் பார்த்துவிட்டு வரேன்” என்று பொதுவாக கூறிவிட்டு அறைக்குள் சென்றவனின் பார்வை மதுவின் மீதே நிலைத்தது. முகம் முழுவதும் களைப்பில் இருக்க கண்ணில் மட்டும் ஒருவிதமான ஆர்வத்துடன் அவனைப் பார்த்தாள்.

அவளின் அருகே சென்று அவளின் கைகளைபிடித்துகொண்டு, “மது சாரிடா” கதறிய கணவனின் செயலிற்கான காரணம் புரியாமல் அவள் திகைத்து விழித்தாள்.

“என்னை எல்லோரும் கொலைகாரனைப் பார்க்கிற மாதிரி பார்க்கறாங்க மது” என்று குழந்தை போல கூறியவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது அவளுக்கு.

“இதுக்கு எல்லாம் என் கிருஷ்ணா அழுக மாட்டான்” என்றாள் களைப்புடன் அவனைப் பார்த்தபடி.

அவளின் நெற்றியில் இதழ் பதித்த கிருஷ்ணா, “கடைசி நிமிடம் வரை உன்னை வேலை வாங்கினேன் எதுக்கு தெரியுமா மது. அப்போது தான் சுக பிரசவம் ஆகும்னு அப்படி செய்தேன். அதுக்குள் உன் உயிருக்கு ஆபத்து வந்திருந்தா என்ன பண்றதுன்னு எல்லோரும் என்னை திட்றாங்க மது” என்றவன் அதன் பிறகு பேசியதைக் கேட்டு திகைப்பின் உச்சிக்கு சென்றாள் மது..

“ஒரு பெண்ணை தாயாக ஆக்குவது மட்டும் ஒரு கணவனோட கடமை இல்லடி. அவளுக்கு கடைசி வரை வலியும் வேதனையும் வரக்கூடாது என்று நினைப்பவன்தான் உண்மையான கணவன். உனக்கு பிரசவவலி வந்தா ஆப்ரேசன் பண்ண சொல்ல நினைத்தேன்..” என்றவன் தொடர்ந்து,

“அப்போது தான் டாக்டர் என்னிடம் சொன்னாங்க. அந்த நேரத்தில் முதுகுத்தண்டு பகுதியில் போடும் ஊசி ஆயுள் முழுக்க வலிக்குமாம். அதைவிட கொடிய வலி உலகத்தில் இல்லை என்று சொன்னாங்க” என்றவன் கண்கள் அவனையும் மீறி கலங்கியது.

“அதுதான் மது உன்னை எல்லோரிடமும் தனித்து இருக்க வைத்தேன். எந்த நேரமும் உனக்கு ஏதாவது வேலை கொடுத்தேன், வீட்டைக் குனிந்து கூட்டுவது, தினந்தோறும் கிணற்றில் தண்ணீர் இறைத்து ஊற்ற சொல்லுவது எல்லாமே செய்தேன். கடைசியாக நல்லா வலி பிடிக்கும் வரை உன்னோட கைகோர்த்து நடந்த எனக்கு மட்டும் தான் தெரியும். மரண வலி எப்படி இருக்குமென்று..” என்றவனை தடுக்க நினைக்கவில்லை அவள்.

கிட்டத்தட்ட இந்த பத்து மாதமும் அவன் அனுபவித்த வலி அவனுக்கு மட்டும் தான் தெரியும்.

“ஒரு வேலை உனக்கு.. உனக்கு ஏதாவது ஆகிருச்சுன்ன நான் என்ன பண்ண போறேன்னு யோசிச்சு யோசிச்சு பைத்தியம் பிடிச்சுது மது..” அவளின் கரம்பிடித்துகொண்டு கண்ணீர் விட மது அவனின் தலையை ஆறுதலாக கோதிவிட்டாள்.

அவன் அப்போதும் அழுதவண்ணம் இருக்க, “கிருஷ்ணா” என்றாள் மெல்லிய குரலில்..

அவன் பட்டென்று நிமிர்ந்து பார்க்க, “என்னை கிஸ் பண்ணு” என்றாள் அவனின் விழிகளைப் பார்த்தபடி அழுத்தமாக.

அவன் புரியாமல் பார்க்க, ‘பிளீஸ்’ என்றது அவளின் உதடுகள் ஓசையின்றி.

அடுத்த நிமிடமே அவளின் இதழோடு இதழ் பதித்தவனின் பயத்தை குறைத்தது அந்த முத்தம். ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே பரிமாறபடும் முத்தம் அணைத்தும் காமத்தைச் சேர்ந்தது அல்ல. ஒவ்வொரு இதழ் முத்தத்திற்கும் ஆயிரம் புரிதல் இருக்கும்.

இந்த இதழ் முத்தம் அவனின் மனதிற்கு இதமளிக்க அவளிடம் இதழைப் பிரித்து நிமிர்ந்த கிருஷ்ணாவின் முகத்தில் ஒரு தெளிவு வந்திருப்பதைக் கவனித்தாள் மது.

“பெண் குழந்தைகளா? இல்லை ஆண் குழந்தையா?” என்றாள் கண்களில் ஆர்வத்தை தேக்கியபடி.

“ஆண் குழந்தை மது.. உனக்கு சப்போர்ட் பண்ண  ஆள் வந்துட்டாங்க..” என்றான் கிருஷ்ணா அவளின் மீது பார்வை பதித்தபடி.

“ஐயையோ இரட்டை குழந்தை இல்லையா? இப்படி என்னை ஏமாற்றி விட்டாயே கிருஷ்ணா” என்றாள் குறும்புடன் கண்சிமிட்டி.

மெல்ல அவளின் காதருகே குனிந்து, “அடுத்த முறை முயற்சிக்கலாம்” என்று அவன் கிசுகிசுக்க அவளின் முகம் வெக்கத்தில் சிவக்க, “அப்போ அடுத்து உங்க டர்ன்” என்றாள் மது.

அவளை காதலோடு பார்த்தவன், “என்னை புரிஞ்சிக்கிட்ட மனைவிதான்” என்றவன் அவளின் கன்னம் வருடியபடி அவளின் அருகில் இருந்தான். அதற்குள் மொத்த குடும்பமும் உள்ளே வந்தது.

இவனின் மனதில் இவ்வளவு வலி இருக்குமென்று அங்கிருந்த யாருக்கும் தெரியாது. எதிர்பாராத விதமாக ராகவ் அறைக்குள் நுழைய அங்கே கிருஷ்ணாவின் நிலையைக் கண்டு அவனுக்கும் கண்கள் கலங்கிப் போனது. அவன் சென்று எல்லோரிடமும்  உண்மையைச் சொன்னான்.

அவர்களின் பார்வையைக்  கண்டு கிருஷ்ணா முகத்தை திருப்ப விஷ்ணு, “சாரிடா உன்னோட  மனநிலை தெரியாமல் பேசிட்டேன்” என்று மன்னிப்பு கேட்டான்.

அவன் எல்லோரையும் கேள்வியாக நோக்கிட, “நான்  கொஞ்சநேரத்திற்கு முன்னால் இங்கே வந்தேன் கிருஷ்ணா” என்று தொடங்கிய ராகவ் அவன் பேசிய அனைத்தையும்  அவர்களிடம் சொன்னதை ஒப்புகொள்ள,

“பிறக்கும் பொழுதே வலி தெரியாமல் பிறந்துவிட்டால் நாளைக்கு இந்த உலகத்தில் வரும்  பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வார்கள்” என்ற கிருஷ்ணாவின் பார்வை முழுவதும் பாட்டி தாத்தாவின் கைகளில் இருந்த தளிர்களின் மீதே இருந்தது.

“என் மகன் எதற்கும் பயப்படாமல் தாங்கள் செல்ல வேண்டிய வழியில் சரியாக செல்வார்கள்” என்று மெல்லிய கரத்தை வருடினான்.

அதுவரை அவனின் மீதிருந்த கோபம் மறைய ராம்குமார் மட்டும், “பிள்ளை பாசம் என்று சொல்லி ஆபரேசன் செய்வது, நல்ல  நாள் பார்த்து குழந்தையை பெற்று எடுப்பது என்று நம்ம செய்கின்ற காரியம் எல்லாம் நாளைய தலைமுறையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற  உண்மை அறியாமல் இருக்கோம்..” என்றார்.

மற்றவர்களுக்கு அவரின் பேச்சில் இருக்கும் உண்மை புரிய விஷ்ணுவின் பார்வை பிரீத்தியின் மீது படித்தது. அப்பொழுது பிரீத்தி மயங்கி சரிய அவளை கைகளில் தாங்கினான் விஷ்ணு.

எல்லோரும் பதட்டப்பட அவளை செக் பண்ணிய டாக்டர், “கன்சீவாக இருக்காங்க” என்று நல்ல தகவல் சொல்லிவிட்டு செல்ல அங்கே சந்தோஷம் இரட்டிப்பானது.

மறுபுறம் ராகவ் தன் மனைவி ருத்ராவை கைக்குள்கொண்டு வந்து, “என்ன மேடம் நாளையில் இருந்து வேலையை ஸ்டார்ட் பண்ணலாமா” என்றான் அவளின் வயிற்றின் மீது பார்வை பதித்தபடி.

“எனக்கு நீ வேலை சொல்லாதே சரியா. நான் குடத்தை தூக்கினால் நீ என்னை தூக்கிக்கோ” என்றவள் சிரிக்காமல் சொல்ல அவள் சொன்னதைக் கேட்டு இரண்டு குடும்பமும் வாய்விட்டு சிரித்தது.

அப்பொழுது அண்ணியைக் காண வந்த தாரிகா, “அண்ணா நம்ம ஜானு மூன்று முட்டை போட்டது இல்ல. அது மூன்றும் குஞ்சு பொறித்துவிட்டது” என்றதும் எல்லோரும் முகத்திலும் சந்தோஷம் பரவியது.

“ஒரு ஜானுவை சமாளிக்க முடியாது. இதில் மூன்று ஜூனியரா” என்றான் கிருஷ்ணா சிரிப்புடன்.

“மூன்று இல்ல ஐந்து” என்றாள் மது குறும்புடன்

“எப்படி” என்றவன் புரியாமல் கேட்க, “நானும் என் பையனும் இணைந்தால் என்ன ஆகுன்னு தெரியும் இல்ல” என்றவள் மிரட்ட, “கிருஷ்ணா நீ க்ளோஸ்” என்றவன் தலையில் கைவைக்க மற்ற அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்

தன் கரங்களில் மகனை ஏந்தியபடி மனைவியைக் காதலோடு பார்க்க அவளும் அவனின் பார்வையை சளைக்காமல் எதிர் கொண்டாள். இனி அவர்களின் வாழ்வில் என்றும் வசந்தமே!