kurumbuPaarvaiyile-28

குறும்பு பார்வையிலே – 28

கார்த்திக்கைப் பார்த்த நொடி கீதாவின் முகம் பூவென மலர்ந்தாலும், சற்றென வாடியது.

அவனிடமிருந்து சரேலென்று விலகிக் கொண்டாள்.

“கீழ விழுற ஒவ்வொரு தடவையும் பிடிக்க மாட்டேன்னு சொல்லிட்டு இப்ப மட்டும் ஏன் பிடிக்கறீங்க?” சற்று கோபமாகவே உதட்டைச் சுழித்தாள் கீதா.

கீதாவின் வெடுக்கென்ற சொல்லில் கார்த்திக்கின் முகம் வாடியது.

‘எத்தனை வருடங்களுக்கு முன் கூறிய வார்த்தைகள்? இன்னும் இவள் மனதில் உள்ளதா? இவள் மனமும் என் மனம் போல்…’ மேலே சிந்திக்க முடியாமல் தடுமாறினான் கார்த்திக்.

இருந்தாலும் கீதாவின்  பேச்சு அவள் மனதைப் படம் பிடித்துக் காட்டியது.

“என்ன பதிலை காணும்?” பட்டென்று கேட்டாள் கீதா.

கார்த்திக்கின் முகத்தில் புன்முறுவல். “அத்தை…” என்று அழைத்துக் கொண்டு கிருஷ் தன் கண்களைச் சுற்றிக் கட்டி இருந்த துணியைக் கழட்ட, ‘கிருஷ் வருவதற்குள் தான் நினைத்ததைக் கேட்டுவிடவேண்டும்.’ என்ற எண்ணத்தோடு, “இத்தனை வருஷத்தில் உங்களுக்கு என் ஞாபகம் வரவே இல்லையா?” என்று ஆழமான குரலில் கேட்டாள் கீதா.

தடுமாற்றம், முகச் சுருக்கம் என அனைத்தும் மறந்து கார்த்திக்கின் முகத்தில் புன்முறுவல்.

கண்களைத் திறந்த கிருஷ், “அங்கிள்…” என்று கார்த்திக்கைக் கட்டிக்கொண்டான்.

“கிருஷ்… நீ அத்தை கூடத் தானே விளையாடிட்டு இருந்த? அங்கிள் வந்ததும் என்னை மறந்துட்டு போற பார்த்தியா? எல்லாருக்கும் மறதி ஜாஸ்த்தி.” ஜாடை பேசினாள் கீதா.

கீதாவின் ஜாடை பேச்சுக்கு பதில் சொல்லுவது போல், “உன் நினைவுகளோடு தான் இருந்திருக்கேன்னு, உன்னை நெருக்கத்தில் பார்த்த நொடி… உன்னைத் தொட்ட நொடி தானே எனக்கு புரியுது. இதுல மறதி எங்க இருக்கு?” என்று கார்த்திக் அவள் கண்களைப் பார்த்துக் கேட்டான்.

 

“பேச்சல்லாம் நல்லா தான் இருக்கு.” என்று கீதா கழுத்தை நொடிக்க, “வேற எது சரி இல்லை?” என்று கார்த்திக் கேட்க, “உங்க வேகம் தான்.” என்று அசராமல் கூறினாள் கீதா.

முன்பு சந்தித்த பொழுது,  எதையும் வெளிப்படையாகக் கூறாமல், இன்று உரிமையோடு கோபித்துக் கொள்ளும் கீதாவைப் பார்த்தால், அவனுக்குச் சற்று ஆச்சரியம் தான். ஆனாலும், கார்த்திக்கிற்கு இந்த பேச்சு பிடித்திருந்தது. ஒரே எண்ணம் என்ற பெருமிதம் வேறு!

அவனுக்கென்று எத்தனை பெண்களைப் பார்த்தாலும், யாரையும் பிடிக்காமல் போனதிற்கு காரணம் கீதா தான் என்று அவன் மனம் உறுதியாக நம்பியது. அந்த நம்பிக்கை  கீதாவின் அருகாமையில் மேலும் மேலும் ஊர்ஜிதமானது.

ஆகாஷ், கார்த்திக்கைப் பார்த்துவிட்டு அவனை வரவேற்கும் விதமாக வர, “வேகம் தானே? இனி பார்ப்ப… உன் அண்ணன் மாதிரி வருஷக்கணக்கெல்லாம் நாங்க காத்திருக்க மாட்டோம். பேசி அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் தான். உனக்கு ஓகே தானே?” என்று புருவம் உயர்த்தினான் கார்த்திக்.

‘இவன் இவ்வளவு பேசுவானா?’ என்று கீதா வாயடைத்து நின்றாள்.

“என்ன பதிலைக் காணும்?  நான் எனக்கு வேற பெண்ணை பார்க்கட்டுமா?” என்று கார்த்திக் வினவ, “நீங்க இத்தனை வருஷம் எந்த பொண்ணையும் ஓகே பண்ணலைன்னு எனக்கு தெரியும்? இந்த மிரட்டல் பேச்செல்லாம் என் கிட்ட வேண்டாம்?” என்று கீதா அவனைப் போலி கோபத்துடன் மிரட்ட முயன்றாலும், அவள் முகம் பூ என மலர்ந்தது.

ஆகாஷ் கார்த்திக்கை நெருங்கி , “கார்த்திக்… வா…” என்று அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

பாட்டி, தாத்தா, சங்கரன் அனைவரும் கார்த்திக்கை இன்முகமாக வரவேற்றனர். சுமதி, வரவேற்கும் விதமாகத் தலை அசைத்துக்கொண்டார்.

‘இவன் ஏன் இந்நேரம் வந்திருக்கிறான்?’ என்ற எண்ணத்தோடு உள்ளே சென்றுவிட்டார்.

 

சாப்பிட அழைத்தும் மறுத்துவிட்டான் கார்த்திக். “கிருஷ், ஸ்ருதியை பார்த்திட்டு போகலாமுன்னு…” என்று கார்த்திக் பேச ஆரம்பிக்க, “நீங்க எப்பனாலும் நம்ம வீட்டுக்கு வரலாம்.” பாசத்தோடு கூறினார் பாட்டி.

அனைவரும் பேசிவிட்டு அவர்கள் வேலையை கவனிக்க சென்றுவிட, ஆகாஷ், ஸ்ருதி, கார்த்திக் மட்டுமே அங்கு இருந்தனர். கீதா, கிருஷ் மீண்டும் விளையாட ஆரம்பித்தனர்.

விளையாடிக் கொண்டிருந்தாலும், கீதாவின் கண்கள் கார்த்திக்கை வட்டமடித்து கொண்டிருந்தது.

அவர்கள் பேசுவதை கீதாவால் கேட்க முடியவில்லை.    கீதாவின் செய்கையை அவர்கள் அறையின் ஜன்னல் வழியாக நான்கு கண்கள் பார்த்துக் கொண்டிருந்தது.

ஆகாஷ், கார்த்திக், ஸ்ருதி பேச இடம் கொடுத்து, கிருஷை நோக்கிச் சென்றான்.

“நல்லாருக்கியா ஸ்ருதி?” அக்கறையோடு வெளிவந்தது கார்த்திக்கின் குரல்.

“நீயும் நானும் பார்த்து ஒரு வருஷம் இருக்குமா?” நக்கலாகக் கேட்டாள் ஸ்ருதி. சிரித்துக் கொண்டான் கார்த்திக்.

“பெரிய மனுஷன் மாதிரி நலம் விசாரிக்க வேண்டியது… ம்ம்?” என்று கார்த்திக்கை நக்கல் அடித்துவிட்டு, மறுநாள் அலுவலைப் பற்றி தீவிரமாகப் பேசினாள் ஸ்ருதி. கார்த்திக்கும் அலுவலக விஷயத்தைப் பேசிவிட்டுக் கிளம்பினான்.

பெரியவர்கள் அறைக்குள் சென்றுவிட, “எல்லார் கிட்டயும் சொல்லிடு…” என்று கூறிவிட்டுச் சென்றவன், கதவு வரைக்கும் நடந்துவிட்டு ஸ்ருதியை திரும்பிப் பார்த்தான்.

“ஆகாஷ் உன்னை ரொம்ப சந்தோஷமா வச்சிருக்கார்…” என்று தோழியைக் கேலி பேசினான் கார்த்திக்.

“ஆமா… ஒரு நாளில் நீ கண்ட?” என்று ஸ்ருதி கேள்வி எழுப்ப, ஆமோதிப்பாகத் தலை அசைத்து, “ஒரே நாளில், அதை உன் பேச்சும், நடவடிக்கையும் சொல்லுது. பழைய ஸ்ருதி மீண்டு வந்துட்டான்னு…” என்று கூறிவிட்டு மடமடவென்று வெளியே சென்றான் கார்த்திக்.

‘ஆகாஷின் அருகாமையை நான் ரசிக்குறேன்னு, என் முகத்தில் அவ்வளவு அப்பட்டமாவா தெரியுது?’ என்று ஸ்ருதி தன் கண்களைச் சுருக்கி யோசித்தாள்.

கார்த்திக் வெளியே வர, ஆகாஷ் அவன் அருகே சென்றான்.   கார்த்திக்கின் கண்கள், கிருஷை நிம்மதியோடு தழுவியது.

“தேங்க்ஸ்… ஆகாஷ்!” என்று கார்த்திக் கூற, ஆகாஷ் அவனைக் கேள்வியாகப் பார்த்தான்.

“ஸ்ருதி, சந்தோஷமா இருக்கா.” கார்த்திக் கூற, “அப்படியா சொல்ற? ரொம்ப கோபமா இருக்கா. அது மட்டும் தான் எனக்கு தெரியுது.” கண்சிமிட்டினான் ஆகாஷ்.

கார்த்திக் பெருங்குரலில் சிரித்தான். “அதுக்கு நிறைய வாய்ப்பிருக்கு. அதையும் தாண்டி சந்தோஷமா இருக்கா. ஸ்ருதி இத்தனை வருஷம் சிரித்தாலும், அவ கண்களில் சோகம் இழையோடும்.  ஸ்ருதி கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயமே அவ நிமிர்வு தான். ஆனால், அந்த நிமிர்விலும் ஒரு தவிப்பு இருக்கும். இன்னைக்கு தான் நான் பழைய ஸ்ருதியை பார்க்குறேன்.” கார்த்திக் உணர்ச்சிப் பூர்வமாகக் கூறினான்.

“தெரியலை கார்த்திக். நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நான் அதுக்கு உனக்கு நன்றி சொல்லணும்.” ஆகாஷ் உணர்ந்து கூறினான்.

கார்த்திக் மறுப்பாகத் தலை அசைக்க, அதை ஒதுக்கிவிட்டு,     “கார்த்திக்…” என்று ஆகாஷ் பேச ஆரம்பித்தான்.

“நாளைக்கி நான் கீதாவை சம்பந்தம் பேச, அம்மா, அப்பாவோட வரேன். அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணத்தை வச்சிப்போம்.” என்று கார்த்திக் கூற, அவன் வேகத்தை கண்டு ஆகாஷ் பிரமிப்பாகப் பார்த்தான்.

“என்னால உங்களை மாதிரி இருக்க முடியாது.” என்று அர்த்தம் பொதிந்து கூறினான் கார்த்திக்.  ஆகாஷ் புன்னகைத்துக் கொண்டான்.

கார்த்திக் கிளம்பிச் செல்ல, ஆகாஷ் வீட்டிற்குள் சென்றான்.

ஸ்ருதி அவர்கள் அறையிலிருந்த சோபாவில் அமர்ந்து, பிரிக்கப்படாமல் இருந்த கிப்ட் பாக்ஸை பார்த்தாள்.

 

‘எனக்காக ஆகாஷ் அப்படி என்ன வாங்கிருப்பான்?’ அவள் சிந்திக்க, அருகே அவள் கொடுத்த கிப்ட் பாக்ஸும் இருந்தது.

‘ஆகாஷ் இதை பிரிச்சே பார்க்கலியே! நான் சொன்ன வார்த்தைக்காக பிரிக்கலையா? இல்லை தேவை இல்லைன்னு பிரிக்கலையா?’ அவள் சிந்தனை கிப்ட் பாக்சில் ஆரம்பித்து, ஆகாஷிடம் சென்றது.

கீழே பேச்சு சத்தம் கேட்டது. ‘யாரும் தூங்கலை போல ‘ என்ற எண்ணத்தோடு ஸ்ருதி தன் கவனத்தை அவர்கள் பக்கம் திருப்பினாள்.

“அவன் ஏன் இந்நேரம் இங்க வரணும்?” சுமதி அங்கலாய்க்க, “சுமதி…” என்று ஆவுடை பாட்டி, தன் மருமகளை அதட்டுமுன், “அம்மா… கார்த்திக்கு மரியாதை கொடுங்க. கார்த்திக் நம்ம வீட்டுக்கு வரபோற மாப்பிள்ளை.” விஷயத்தை ஒரே வரியில் அசட்டையாக முடித்தான் ஆகாஷ்.

‘எல்லா விசயத்தையும் இவன் இப்படி சர்வ சாதாரணமா தான் சொல்லுவானா?’ ஸ்ருதி சிந்திக்க, அவன் சிந்தனையைக் கலைத்தது சுமதியின் குரல்.

“தகுதி இல்லாம, உனக்கு பொண்ணு பார்த்தது போதாதா?” சுமதி இடைமறிக்க, ‘அப்படி என்ன பெரிய தகுதி இவங்க வீட்டுக்கு மட்டும்?’ என்று ஸ்ருதி அவர்கள் அறையில் சற்று கடுப்பாக அமர்ந்திருந்தாள்.

தன் தாயின் பேச்சை ஒதுக்கிவிட்டு, “கீதாவுக்கு கார்த்திக்கை பிடிச்சிருக்கு. கார்த்திக் நல்ல பையன். என்னை விட…” அழுத்தமாகக் கூறினான் ஆகாஷ்.

சுமதி மறுப்பு தெரிவிக்கும் முன், “பணத்தை விட, குடும்பமும், குணமும் முக்கியம். கார்த்திக் வீட்டில் கீதாவை கேட்டு வரட்டும். கீதாவுக்கு வயசு ஆகுது. சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சிருவோம். ” என்று ஷண்முக சுந்தரம் கூற , தன் கணவனின் கூற்றுக்கு ஆமோதிப்பாகத் தலை அசைத்தார் ஆவுடை பாட்டி.

“தேங்க்ஸ் தாத்தா!” என்று தாத்தவின் கழுத்தை கட்டிக்கொண்டாள் கீதா.

அனைவரும் பேச்சு முடிந்தது என்பது போல அவர்கள் அறைக்குச் செல்ல, கிருஷை, கீதா அவள் அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டாள்.

 

“இத்தனை வருஷமானாலும், இவங்க ஆட்சி தான். என் வார்த்தைக்கு மதிப்பு கிடையாதா?” என்று சுமதி சங்கரனிடம் புலம்ப, “உன் வார்த்தையால், நம்ம குழந்தைங்க சந்தோஷமா இருப்பாங்கன்னா நிச்சயமா மதிப்பு இருக்கும்.” என்று தன் மனைவியிடம் பேச்சை முடித்துவிட்டார் சங்கரன்.

ஆகாஷ் அவன் அறைக்குள் நுழைய ஸ்ருதி எதுவும் பேசவில்லை. “நாளைக்கு என் கூட நம்ம கம்பெனிக்கு கிளம்பிரு ஸ்ருதி.” என்று ஆகாஷ் கூற, “நான் எங்க கம்பனிக்கு போகணும். நிறைய வேலை இருக்கு.” என்று ஸ்ருதி பதில் கூற ஆகாஷ் முகத்தில் கேலி புன்னகை அரும்பியது.

கீழே நடந்த பேச்சுவார்த்தை ஸ்ருதியின் காதிலும் விழுந்திருக்கும் என்று கணித்துவிட்டான் ஆகாஷ்.

“சரி, பராவலை. எங்க போனாலும்,  என் கூட கிளம்பிரு. சேர்ந்து கிளம்புறோம்.” என்று கண்சிமிட்டினான் ஆகாஷ்.

அவன் கண்சிமிட்டலில், கடுப்பாகி, “ஏன்? என்னை உங்க அம்மாகிட்ட விட்டுட்டு போக பயமா இருக்கா?” கேட்டுக் கொண்டே அவனை முறைத்தாள்.

“ஹே! ஸ்ருதி பாதி சரியா கண்டுபிடிச்சிட்ட. பயம் தான். ஆனால், பயம் உன்னை நினைச்சி இல்லை. எங்க அம்மாவை நினைச்சி தான். உன்கிட்ட எங்க அம்மாவை தனியா விட்டுட்டு போனா, நான் இல்லாத நேரத்தில் எங்க அம்மாவை, நீ லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டனா? எங்க  அம்மா பாவம் இல்லையா?” என்று புருவத்தை உயர்த்தினான் ஆகாஷ்.

ஸ்ருதி அவனை மேலும் கீழும் பார்க்க, “நான் முந்திக்கிட்டு பேசுறதெல்லாம், உனக்காகன்னு நினைச்சியா? ச்… ச்ச… அப்படி எல்லாம் இல்லவே இல்லை. என் மேல் காமிக்க  முடியாத கோபத்தில், எங்க அம்மாவை நீ எதுவும் சொல்லிற கூடாதுன்னு தான். நூறு சதவீதம், எங்க அம்மா மேல உள்ள அக்கறை மட்டும் தான்.” என்று திட்டவட்டமாக அறிவித்தான் ஆகாஷ்.

ஸ்ருதியின் முகத்தில் புன்னகை அரும்ப எத்தனிக்க, அதை மறைத்துக்கொண்டு தலையணையை அவன் மேல் வீசினாள் ஸ்ருதி.

‘இவள் என் ஸ்ருதி. ஆனால், அன்று?’ என்ற எண்ணத்தோடு, அவள் வீசிய தலையணையை ஆகாஷ் லாவகமாகப் பிடிக்க, “ஹே… மீ டூ இன் தி கேம்.” என்று கூறிக்கொண்டே உள்ளே கிருஷ் நுழைய, “என்னை காப்பாத்த  சரியான நேரத்தில் வந்த. பிடி.” என்று தலையணை  கிருஷை நோக்கி ஆகாஷ்  எறிய, மெத்தையில் தந்தைக்கும், மகனுக்கும் விளையாட்டு தொடர்ந்தது.

தந்தையோடு விளையாடிவிட்டு, “அம்மா… பெட் டைம் ஸ்டோரி.” என்று கிருஷ் கேட்க, “நான் சொல்றேண்டா கதை.” என்று மகனை தன்னோடு படுக்க வைத்தான் ஆகாஷ்.

“இது முயலாமை கதை.” என்று ஆகாஷ் கூற, “முயல்… ஆமை… டர்ட்டில் அண்ட் ராபிட்… ஐ நொவ்.” என்று கிருஷ் சிணுங்கினான்.

“இது கொஞ்சம் வேற மாதிரி கதை கிருஷ்.” என்று ஆகாஷ் கூற, “தே ஹவ் எ  ரேஸ்.” என்று கிருஷ் ஆரம்பிக்க, “அது வரைக்கும் சரி தான் டா… ஆனால், முயல் ஆமைக்கு போட்டிக்காக ஸ்கேட்டிங் ஷூ வாங்கி கொடுத்து, பயிற்சி செய்ய ஒருவாரம் நேரமும் கொடுத்துச்சாம்.” என்று ஆகாஷ் நிறுத்தினான்.

ஸ்ருதி ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். செவிகள் என்னவோ இவர்கள் உரையாடலைத் தான் கேட்டுக்கொண்டிருந்தது.

“இன்டரெஸ்டிங்….” என்று கிருஷ் கூற, “ஆனால், அந்த ஆமை, ஸ்கேட்டிங் ஷூ தான் கிடைச்சிருச்சே… அப்புறம் எதுக்கு முயற்சின்னு பேசாமல் இருந்திருச்சாம்.” என்று ஆகாஷ், தன் மகன் மேல் கைகளைப் போட்டுக்கொண்டு, ஸ்ருதியை அளவிட்டுக் கொண்டிருந்தான்.

“ஓ… ரேஸ் என்ன ஆச்சு?” என்று கிருஷ் ஆர்வமாக வினவ, “ஸ்கேட்டிங் ஷூ போட்டு ஓட தெரியாம ஓடி, அந்த ஆமை உருண்டு கீழே விழுந்து அதோட ஓடு உடஞ்சிப் போச்சாம்.” என்று ஆகாஷ் சோகமாகக் கூற, “ஸோ செட்.” என்று கூறியபடி, கொட்டாவி ஒன்றை வெளியிட்டான் கிருஷ்.

கிருஷின் கண்கள் தூக்கத்தில் சுழன்றது. “ஆமையா பிறந்தது தப்பில்லை. முயலாமையாக இருந்தது தான் தப்புன்னு அந்த முயல் அடி பட்டுக் கிடந்த ஆமையைப் பார்த்து சொல்லுச்சாம்.” என்று ஆகாஷ் கூற, “வெரி நைஸ் அப்பா. உங்களுக்கு எப்படி இந்த கதை தெரியும்?” என்று கேட்டுக்கொண்டே, தூங்கிவிட்டான் கிருஷ்.

“ஒரு புக்ல படிச்சேன்டா…” என்று கூறிக்கொண்டு, “இந்த மாதிரி யாரையுமே புரிஞ்சிக்க கூடாதுன்னு முயலமையோட இருக்கிறவங்களை என்ன டா பண்றது?” என்று ஆகாஷ் கேட்க, “…” கிருஷ் தூங்கி இருந்தான்.

 

“எதையும் நேரடியா சொல்ல வேண்டியது தானே?  கிருஷ் தூங்கிட்டான். மகன் மூலமா மறைமுக செய்தியா? அதுவும் எங்கயோ படித்த கதையை வைத்து?” நச்சென்று கேட்டாள் ஸ்ருதி.

“கதையை எங்க படிச்சா என்ன? சிலருக்கு பொருத்தமா இருக்கில்ல?” என்று கேட்டுக்கொண்டே அவள் அருகில் வந்தான் ஆகாஷ்.

“நல்லா இல்லை. பிடிக்கவும் இல்லை.” என்று ஸ்ருதி அசட்டையாக கூற, “பிடிக்கலைன்னா கிளம்பி போ. போனவ தானே நீ!” என்று ஆகாஷ் அதே இடத்தில நின்றான்.

ஸ்ருதி அவனை பார்க்க, “என்ன பாக்குற? எப்ப கிளம்புற? இப்பவா? நாளைக்கா? டிக்கெட் போடட்டுமா?” ஆகாஷ் கேலி பேச, அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்திருந்தாள் ஸ்ருதி.

“இப்படி போ… போன்னு சொல்ல தான் கூட்டிட்டு வந்தீங்களா?” என்று ஸ்ருதி கோபமாகக் கேட்டாள். ஆகாஷ் எதுவும் பேசவில்லை.

“உங்களுக்கு கிருஷ் இருக்கான். நான் எதுக்கு? நான் வரலைன்னு தானே சொல்லி தொலைச்சேன். நீங்க தானே கூட்டிட்டு வந்தீங்க? இத்தனை வருஷம், நான் இல்லாம சந்தோஷமா தானே இருந்தீங்க? இப்ப மட்டும் நான் எதுக்கு?” கோபமாக ஆரம்பித்த அவள் குரல் உடைந்து ஒலித்தது.

“ஸ்ருதி நான் உன்னை போக சொல்லுவேனா? எனக்கு என் டாலி வேணும்.” அவள் குரல் மாறுதலில் அவன் சமாதானம் பேசினான்.

“டாலி… நீங்க என்னை அப்படி சொல்ல வேண்டாம்.” ஸ்ருதி அவள் முகத்தை திருப்ப, “அதை நீ சொல்லாத. நான் சொல்லுவேன். டாலி… டாலி… டாலி… டாலி…” அவன் பல முறை கூற, “இத்தனை வருஷம் உங்களுக்கு இந்த டாலி நினைப்பு வரலை தானே?” அவன் மார்பில் குத்தினாள் ஸ்ருதி.

“வராமல் போகுமா டாலி?” அவன் கேட்க, “போயிருச்சே!” அவள் அவன் மார்பில் சாய்ந்து விம்மினாள்.

“டாலி… அழாத.” அவள் தலை கோதினான். “உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் டாலி. உன்னை அழவைக்க நான் நினைக்க மாட்டேன் ஸ்ருதி. அழாத… ப்ளீஸ்” அவன் கெஞ்சினான்.

பலவருட கண்ணீரை. அதற்கு காரணமானவனிடம் மட்டுமே அழுதாள் அவள்.  ‘ஸ்ருதி இத்தனை வருடம் அழவே இல்லை. ஆனால், அவள் வலி அதிகம்.’ ஸ்ருதியின் தாயார் ஆகாஷிடம் தனியாக கூறியது அவனுக்கு நினைவு வர, அவன் உள்ளம் உடைந்தது.

“டாலி…” அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

அந்த அணைப்பில், அனைத்தையும் சொல்ல அவன் துடித்தான். அனைத்தையும் உள்வாங்கிக்கொள்ள அவளும் துடித்தாள். ஆனால்?

“அழாத டாலி… பார்க்க ரொம்ப கேவலமா இருக்க.” சட்டென்று விலகிக்கொண்டாள் ஸ்ருதி. கண்ணீரோடு அவள் முகத்தில் புன்னகை.

இருக்கும் நிலையைப் பயன்படுத்தி சமாதானம் பேச அவனும் தயாராக இல்லை. விட்டுக்கொடுக்க அவளும் தயாராக இல்லை.

ஆகாஷின் முகத்தில் குறும்பு புன்னகை. ஸ்ருதி அவளே தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். அவன் அவள் தலை முடியை ஒதுக்கினான். “இப்பவும் சுமாரா தான் இருக்க.” அவளை பார்த்தபடி அவன் கேலி பேசினான்.

இப்பொழுது விளையாட்டாகவே அவன் சட்டையைப் மீண்டும் கொத்தாகப் பிடித்திருந்தாள் ஸ்ருதி.

“ஏன் ஸ்ருதி அன்னைக்கு இந்த மாதிரி என் சட்டையை பிடித்து கேள்வி கேட்காமல், என்னை விட்டுட்டு போன?” என்று சட்டையைப் பிடித்திருந்த  அவள் கைகளை நெஞ்சோடு அழுத்திக்கொண்டு அவளைக் குற்றம் சாட்டும் குரலில் கேட்டான் ஆகாஷ்.

ஸ்ருதியின் முகத்தில் ஒரு ஏளன புன்னகை.  அவள் கூறிய பதிலில், அவன் புருவங்கள் முடிச்சிட்டது.

இருவரும் அவர்கள் தவற்றை ஒத்துக்கொள்ளாமல், ஆடும் கண்ணாம் பூச்சி ஆட்டத்தில் காதல் இவர்களைச் சற்று கடுப்பாகவே முறைத்துப் பார்த்தது.

குறும்புகள் தொடரும்…