KarisalKaattuPenne4
KarisalKaattuPenne4
கரிசல் காட்டுப் பெண்ணே 4
‘கொக்கர கொக்கர கோ’ என்ற சேவல் கூவலிலும் கீச்கீச்சென்ற புள்ளினங்களின் ஆர்பரிப்பிலும் ஸ்ரீராம் உறக்கம் கலைந்து தன் அலைப்பேசியில் மணி பார்க்க, விடியற்காலை ஐந்து முப்பது என காட்டியது. எழுந்து முகம் கழுவி, வாசல் கதவை திறந்து வெளியே வந்து நின்றான். அந்த கிராமத்தின் விடியற்காலை பொழுது அவனுக்கு இதமான புத்துணர்வைத் தருவதாய்.
தங்கள் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலமிட்டு கொண்டிருந்த பெண்கள், இணைக் காளை மாடுகளை கழுத்து மணிகள் கலகலக்க மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும் ஆண்கள், பரபரப்பு, ஆர்பாட்டம் இல்லாத எளிமையான வாழ்க்கைமுறை கொண்ட மக்கள் என அவனுக்கு புதுமையாய், ரம்மியமாய் காட்சியளித்தது அந்த இளங்காலை பொழுது.
தன் வீட்டின் எதிர் வரிசையில் இரண்டு வீடுகள் தள்ளி இருந்த தேநீர் கடையில், சில பெருசுகள் அமர்ந்து கதைப்பேசியபடி, காலை தேநீரின் சுவையை ருசித்துக் கொண்டிருப்பதைக் கவனித்தவன், மெல்லிய புன்னகையுடன் அங்கே சென்றான்.
தேநீர் கடைக்காரரிடம், “அண்ணா, ஒரு டீ” என்று சொல்ல, “ஊருக்கு புதுசுங்களா தம்பி? என்ன வேலையா வந்து இருக்கீங்க?” என்று தேநீர் கலந்தபடியே விசாரித்தார் அவர்.
ஸ்ரீராம் விரிந்த சிரிப்போடு தேநீரை வாங்கிக்கொண்டு, “நான் இந்த ஊருக்கு பழசு தான்… வையாபுரியண்ணே” என்றவனை அவர் திகைத்துப் பார்த்தார்.
“அட, என் பேரெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்க, யாருப்பா நீ?” அவர் அவனை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் கேட்க,
ஸ்ரீராமிற்கும் வியப்பு தான். எதிர் வரிசையில் தேநீர் கடையைப் பார்த்தவுடன் ‘வையாபுரி அண்ணா’ என்ற பெயரை எந்த முயற்சியுமின்றி அவன் மூளை ஒப்புவித்தது அவனுக்கே ஆச்சரியமாக தான் இருந்தது.
இந்த ஊரை விட்டு போகும் போது அவனுக்கு ஒன்பது அல்லது பத்து வயது தான் இருந்திருக்கும். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் தன் ஊரின் ஒவ்வொரு விசயமும் தன் நினைவேடுகளில் அழியாமல் இருப்பதை எண்ணி அவன் தனக்குள் பிரமித்துக் கொண்டான்.
“என்னண்ணே, அடையாளம் தெரியலயா? நான் ஸ்ரீராம்” என்று சொல்ல, “அட, பரமேஸ்வரன் அண்ணே பையனா நீ! என்னப்பா பனமர கணக்கா வளர்ந்து நிக்கற! உன்ன சின்ன பிள்ளையில பார்த்தது” என்று வையாபுரி வாஞ்சையோடு பேசினார்.
அங்கிருந்த அனைவரும் அவனிடம் நலம் விசாரித்து பேச்சை வளர்க்க, அவர்களுக்கு விளக்கம் சொல்லியபடியே இன்றைய காலை அட்டகாசமாய் விடிந்தது.
ஸ்ரீராம் குளித்து தயாராகவும் சக்திவேல் வந்து அவனை அழைக்கவும் சரியாய் இருந்தது.
அவர்கள் வீட்டுக்குள் நுழையும் போது, தோளில் மாட்டிய பையோடு அவள் எதிர்ப்பட்டாள்.
எளிமையான சுடிதாரில் கல்லூரி கிளம்பும் இளம் பெண்ணாய் அவளைப் பார்த்து சினேக புன்னகை தந்தான் ஸ்ரீராம். அவள் எதையும் கண்டு கொள்ளாமல் அவசரமாக ஒதுங்கி நடந்து சென்று விட்டாள்.
“உன் அக்காவுக்கு ரொம்ப அவசரம் போல சக்தி” ஸ்ரீராம் கேட்க, “பின்ன, எட்டு மணி பஸ் பிடிச்சா தான் அக்காவால நேரத்துக்கு காலேஜ் போய் சேரமுடியும், அதான்” என்று சக்திவேல் பதில் சொன்னான்.
‘இந்த கிராமத்தில இன்னும் நேரத்துக்கு ஒரு பஸ் தான் போல’ என்று எண்ணிக் கொண்டான்.
ஸ்ரீராமிற்காக காத்திருந்த சங்கரனுடன், சக்திவேலும் அமர, மூவருக்கும் சுடசுட இட்லியும் புதினா சட்டினியும் பரிமாறினார் மரகதம். சாப்பிட்டு முடித்ததும் சக்திவேல் தன் புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு பள்ளிக்கு மிதிவண்டியில் விரைய, சங்கரன், ஸ்ரீராமிடம் அடுத்து செய்ய வேண்டியதைப் பற்றி விசாரிக்கலானார்.
“முதல்ல பெரிய வீட்டை இடிச்சு நிறவணும் மாமா”
“சரி பா, நம்ம பழனி பயல வர சொல்றேன், அவன் ஜேசிபில இடிச்சு நிறவிடுவான்”
“அதுக்கு முன்னாடி பெரிய வீட்டுல இருக்க பொருட்களை எல்லாம் எடுத்து எங்கையாவது பாதுக்காப்பா வைக்கணும்”
“அதுக்கென்ன தம்பி, நம்ம வீட்டு தானிய அறை சும்மா தான் கிடக்கு. எல்லா பொருளையும் இங்கனையே வச்சுடலாம். நான் நெல்லு, கேவுறு மூட்டையெல்லாம் ஓரங்கட்டி கூட்டி வைக்கிறேன். தாராளமா தான் இருக்கும்” மரகதம் சொல்ல மற்ற இரு ஆண்களும் சம்மதமாய் தலையசைத்தனர்.
அடுத்த ஒரு மணிநேரத்தில், ஆறு கூலி ஆட்களை சங்கரன் அழைத்து வந்தார். ஸ்ரீராமும் சங்கரனும் சொல்ல, பெரிய வீட்டின் உபயோகமான பொருட்கள் ஒவ்வொன்றாக சங்கரன் வீட்டின் பின் பக்கம் தானியங்களை சேகரிப்பதற்காக விசாலமாக கட்டப்பட்டிருந்த அறையில் அடுக்கப்பட்டன.
தன் வீட்டு வேலை தாமதமின்றி தொடங்கப்பட்டதில் ஸ்ரீராமிற்கு ஏக சந்தோசம்!
அன்று மாலைக்குள் பெரிய வீடு பாதியளவு வெறுமையாகிப் போயிருந்தது. மீதமுள்ளவற்றை நாளை எடுத்து வைப்பதாக சொல்லி இன்றைய கூலியை வாங்கிக் கொண்டு சென்றார்கள் அவர்கள்.
மனதிற்குள் அடுத்தென்ன என்ற யோசனையில் இருந்தவன், நேராக எதிரிலிருந்த தேநீர் கடைக்கு தான் சென்றான்.
வையாபுரி கலந்து தந்த தேநீரை ருசித்தபடி, “எனக்கு இந்த தெருவுல தங்க ஒரு ரூம் வேணும்ண்ணா, கிடைக்குமா?” ஸ்ரீராம் கேட்க, வையாபுரி விழித்தார்.
“உனக்கு எதுக்கு தம்பி தனியா ரூமூ?”
“அடுத்த வாரம் வீட்டை இடிக்க பேசி இருக்கேன், வீட்டு வேலை முடியறவரைக்கும் இங்கேயே பக்கத்துல தங்க இடம் கிடைச்சா நல்லா இருக்கும். எவ்வளவு வாடகைன்னாலும் பரவால்லண்ணா” ஸ்ரீராம் விளக்கவும் வையாபுரியின் கண்கள் பளிச்சிட்டன.
“அப்ப, நம்ம வீட்டு மாடியில தங்கிக்க தம்பி” என்றார் உடனே. இதை ஸ்ரீராம் முன்பே எதிர்பாத்தான் தான் எனவே, “உங்களுக்கு தொந்தரவு எதுவும் இல்லையேண்ணா?” சுற்றி வளைத்து தன் சம்மதத்தைத் தெரிவித்தான்.
கடையோடு ஒட்டி கட்டப்பட்டிருந்த வையாபுரி வீட்டு மாடியிலிருந்து பெரிய வீட்டை நன்றாக பார்க்க முடியும். அந்த வீட்டை இவன் அமைக்கப்போகும் விதத்தில் தான் இவன் எதிர்காலமும் அமைந்திருக்கிறது. அதோடு இவன் முதல் முதலாய் தன்னந்தனியாக கையிலெடுத்திருக்கும் வேலை இது.
இதில் எந்த விதத்திலும் குறைகள் நேராமல் பார்த்து கொள்வது அவன் கடமை. அதற்கு எப்போதும் அவன் பார்வையிலேயே அந்த வீடு இருக்க வேண்டும் என்று தான் வையாபுரியின் வீட்டை வாடகைக்கு கேட்டான்.
“எனக்கு என்னப்பா தொந்தரவு? கட்டிகிட்டவ போன பிறவு, ஒத்தக்கட்டையா இந்த டீ கடையே கதின்னு என் பொழப்பு ஓடிட்டு கிடக்கு…” என்று வையாபுரி கவலையாக சொல்லி செல்ல,
ஸ்ரீராம் மேலும் அவரிடம் பேச்சை வளர்க்க விரும்பாமல், “சங்கரன் மாமா கிட்ட ஒருவார்த்தை சொல்லிட்டு, நாளைக்கே அட்வான்ஸ் கொடுத்துறேன் அண்ணா” என்று விடைபெற்று நடந்தான்.
சங்கரன், மரகதம் முகங்கள் சட்டென வாடிப் போயின.
“நாங்க இருக்கும் போது நீ வாடகைக்கு வீடு எடுத்து தங்கினா என்ன அர்த்தம் ஸ்ரீராமா?” சங்கரன் உரிமை கோபம் காட்ட,
“அதானே, நீயும் எங்க பிள்ளை தான். அப்படி உன்ன தனியா எல்லாம் தங்கவிட முடியாது. நம்ம வீட்டுலயே தங்கிக்கோ ஸ்ரீராம், உனக்கு என்னென்ன வேணுமோ நாங்க பார்த்து செய்றோம்” ஒருவேளை அவன் வசதி குறைவென்று நினைக்கிறானோ என்னவோ என்று நினைத்து கொண்டு மரகதம் பேசினார்.
“எனக்கு பிரைவசி வேணும் அத்த, அதோட என் கண் பார்வையிலேயே வீடு இருந்தா நல்லதுன்னு தோணுது, உங்களை அவாய்ட் பண்ணனும்னு இல்ல மாமா, எப்பவும் போல பக்கத்து தெருவுல தானே இருக்க போறேன்… நீங்க கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர போறேன்” ஸ்ரீராம் இருவரிடமும் சமாதானமாக பேச, அவர்கள் மேலும் அவனை வற்புறுத்த வழியின்றி அரைமனதாய் சம்மதித்தனர்.
மறுநாள் காலையிலேயே கூலி ஆட்கள் வந்து பொருட்களை இடம்மாற்ற, மாலைக்குள் பெரிய வீடு முழுமையாக வெறுமையாகி போனது. அந்த வீட்டைப்போல இவன் மனமும் வெறுமையாவதை ஏனோ அவனால் தவிர்க்க முடியவில்லை.
மாலை மயங்கும் நேரம்,
தயங்கி தயங்கி பெரிய வீட்டிற்குள் நுழைந்தாள் அந்த தாவணிப்பெண். சக்திவேலும் உடன் வந்தான்.
அந்த பெரிய வீடு முழுமையாக வெறிச்சோடி காட்சி தந்தது.
“ஸ்ரீராம்… ஸ்ரீராம்” சக்திவேல் அழைத்தப்படியே உள்ளே தேட, பதில் ஏதும் கிடைக்கவில்லை.
“எங்கடா, அவரை காணோம் போல இருக்கே?” அவள் சிறுகுரலாய் வினவ,
“இங்க தான் இருப்பாரு, வாக்கா” என்று சக்திவேல் தமக்கையோடு அறைக்குள் முன்னேறினான்.
“ஸ்ரீராம், வீட்டில இருக்கியா? இல்லையா?” என்று சக்திவேல் மறுபடி சத்தமிட,
“ஏன் சக்தி, இப்படி கத்துற, இங்க தான இருக்கேன்” என்று ஸ்ரீராமின் குரல் மட்டும் வர, அவனைக் காணவில்லை.
“எங்க இருக்க? முன்னாடி வா” சக்தி வெறுமையாக கிடந்த அந்த பறந்த அறைக்குள் சுற்றும் முற்றும் தேட, இவளின் பார்வையிலும் தேடல் இருந்தது.
“உன் முன்னாடி தானே இருக்கேன்” என்றவனின் பதிலில் இருவரின் முகங்களும் வெளுத்தன.
“என்ன சொல்ற, எங்க இருக்க நீ?” இப்போது சக்திவேலின் குரல் பிசிரடிக்க,
சற்று பயந்து பெரியவள் சின்னவனின் கைபிடித்துக் கொண்டாள்.
“பூட்டி இருக்க வீட்டுல பேய் வந்து சேரும்னு பாண்டி அடிக்கடி சொல்லுவான், அப்படி ஏதாவது இருக்குமா க்கா!” சக்திவேல் தன் பங்கிற்கு பீதியைக் கிளப்பினான்.
“என்னது பேயா?” அவள் கலக்கத்தில் எச்சிலை விழுங்கிக் கொள்ள, ஸ்ரீராமின் சிரிப்பு சத்தம் அங்கே நான்கு பக்க சுவர்களிலும் எதிரொலித்தது.
சக்தி மிரண்டு வாசலை நோக்கி ஓட தயாராக, பெரியவள் சத்தம் வரும் திசையை ஊன்றி கவனித்து நின்றாள். “நாளைக்கு பேசிக்கலாம், வா க்கா” இவன் இழுக்க, “மேல அட்டத்துல இருந்து சத்தம் வருது பாருடா” என்றாள் அவள் முகம் சுருக்கி.
அவன் சிரிப்பை நிறுத்திவிட, “ஸ்ரீராம் ஒழுங்கா கீழ வந்துடு எங்களை பயமுறுத்தி பார்க்கறியா” சக்தி கோபமாய் கத்த, அட்டத்திலிருத்து விரிந்த சிரிப்புடன் ஸ்ரீராம் எட்டி பார்த்தான்.
“நானா உங்களை பயப்பட சொன்னேன்?” என்று கிண்டலாக கேட்டபடி மேலிருந்து கீழே குதித்து நிமிர, இருவரும் அவனை ஒன்றே போல முறைத்து நின்றிருந்தனர்.
“நான் பிளான் பண்ணி எதுவும் பண்ணல?” என்று அவர்கள் முன் சமாதானமாக தன் இருகைகளைத் தூக்கிக் காட்டினான்.
“ம்ம் பொழைச்சு போ” என்று சக்திவேல் வீராப்பு பேச, “சரிடா, பெரிய மனுசா” என்று புன்னகைத்தவன், “என்ன விசயம், ரெண்டு பேரும் என்னை தேடி வந்திருக்கீங்க?” பொதுவாய் வினவினான்.
“அக்கா தான் உன்கிட்ட ஏதோ கேக்கணும்னு சொல்லுச்சு” சக்தி இவளை கைக்காட்ட, ஸ்ரீராம் பார்வை இவளிடம் திரும்பியது என்ன என்பது போல்.
“அது… இந்த வீட்டை இடிக்கும் போது பின்னாடி தோட்டத்துக்கு எதுவும் ஆகாம பார்த்துக்கங்க… ப்ளீஸ்” என்றவளை யோசனையாக பார்த்தான் இவன்.
“எங்க வீட்டு தோட்டத்து மேல எவ்வளவு அக்கறை உனக்கு?” வியப்பது போல கேட்க, “தோட்டம் உங்களோடது தான். ஆனா அங்க இருக்க, செடி, கொடி, மரமெல்லாம் அக்கா பார்த்து பார்த்து வளர்த்தது” சக்தி முன் வந்து நியாயம் பேச, ஸ்ரீராமின் புருவங்கள் மெச்சுதலாக உயர்ந்தன அவளை பார்த்து.
“வீட்டை இடிச்சு தள்ளும் போது, கல்லு, சுவரு எதுவும் தோட்டத்துக்கு பக்கம் விழாத மாதிரி பார்த்து இடிக்க சொல்லுங்க… ஒத்த செடி பட்டுபோனா கூட கஷ்டமா இருக்கும்” என்று கேட்டவளின் முகத்தில் இருந்த பரிதவிப்பின் சாயலை பார்த்து நின்றான் ஸ்ரீராம்.
மனிதனுக்கு மனிதனே இரக்கம் காட்டாத நிலையில், செடி, கொடிகளுக்காக தவித்து நிற்கும் அந்த கிராமத்துப் பெண்ணின் வெகுளித்தனமான அன்பை யோசித்து நின்றவனுக்கு வேறொன்றும் தோன்ற, “முதல்ல நீ உன் பேரை சொல்லு, அப்புறம் நீ சொன்னதை நான் யோசிக்கிறேன்” என்று கேட்டவனை இவள் வித்தியாசமாக பார்த்து வைத்தாள்.
சற்று தயக்கத்தோடு, “நான்… சீதா” என்றாள்.
“இல்லையே… உன் பேரு ஏதோ நீளமா வருமே” ஸ்ரீராம் காற்றில் கோடிட்டு காட்ட, இவள் சற்று அலுப்போடு, “சீதாமஹாலட்சுமி” என்றாள் வேகமாய் அழுத்தமாய்.
“ஓகே, மிஸ். சீதாமஹாலட்சுமி, உன்னோட செடி, கொடி, மரத்துக்கெல்லாம் ஒண்ணும் ஆகாம நான் பார்த்துக்கிறேன் போதுமா” என்றான் விரிந்த புன்னகையோடு.
“நான் அப்பாகிட்ட கூட சொல்லி இருக்கேன், இடிக்கும் போது நீங்களும் கொஞ்சம் கவனமா பார்த்துக்கங்க” என்றாள் மறுபடியும்.
“சரி சீதா, நான் பார்த்துக்கிறேன்… ஆனா, சுவரோரமா இருக்க அந்த கொடி எல்லாம் பிடுங்கி தான் போடணும். வேற வழி இல்ல” அவன் சொல்ல, இவள் முகம் மொத்தமாய் வாடி போனது.
“நான் கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க… பெரிய வீட்டை ஏன் இடிக்கணும்? இந்த தெருவோட அடையாளமே இந்த வீடு தான். இதை பெரிய வீட்டு தெருன்னு தான் சொல்லுவாங்க… பழைய வீடு தான், சேதாரம் ஆகி இருக்கிற இடங்களை மட்டும் புதுபிச்சு கட்டினா போதாதா, மொத்தமா இடிச்சு தள்ளணுமா?” சீதா கவலையாகவே கேட்டாள்.
பெரிய வீடு இல்லாமல் போவதை நினைக்கும் போதே அவள் மனது கனத்தது. எனவே அவனிடம் கேட்டும் விட்டாள்.
ஆழ மூச்செடுத்தவன், “நீ சொல்றது புரியுது, ஆனா, என் அப்பாவோட தாத்தா காலத்தில கட்டின வீடு இது, சுவரெல்லாம் ஸ்ட்ராங்கா தான் இருக்கு, பட், ஸீலிங் ரொம்ப டேமேஜ் ஆகி இருக்கு. ஸீலிங் மட்டும் ரிப்பேர் பண்ணி சரி செய்யறதைவிட, புது வீடு கட்டறது நல்ல ஆப்சன்… நான் வந்த உடனே வீட்டை ஃபுல்லா செக் பண்ணிட்டு தான் இந்த முடிவுக்கு வந்தேன்” ஸ்ரீராம் பொறுமையாக அவளிடம் விளக்கம் தர, சீதா புரிந்தவளாய் தலையசைத்துக் கொண்டாள்.
“சரி, தோட்டத்துப் பக்கம் கல்லெதுவும் விழாம, எந்த மரத்தையும் வெட்டாம பார்த்துகங்க” என்று தவிப்பாக கேட்க, அவனும் சரியென்று தலையசைத்தான்.
மேலும் பேச வேறேதும் இருக்கவில்லை. அழிய போகும் அந்த வீட்டை கனமான பார்வை பார்த்தப்படி, அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.
‘சீதா மஹாலட்சுமி! ப்ச் எப்படி மறந்தேன் இந்த பேரை?’ என்ற கேள்வியில் தோள் குலுக்கிக் கொண்டு ஸ்ரீராம் திரும்ப, சக்திவேல் அவனிடம் முனைப்பான பார்வை பதித்தபடி நின்றிருந்தான்.
“என்னடா?” ஸ்ரீராம் கேட்க,
“நீ நல்லவன்னு நினைச்சு அக்கா பேச வந்தா, நீ ஏதோ வேணும்னே பேச்சு வளர்க்கிற மாதிரி தெரியுது” அந்த பதினான்கு வயது பொடியன் ஸ்ரீராமை சந்தேகமாக பார்த்து வைத்தான்.
“டேய் நல்லவனே! சீதாவும் நானும் சின்ன வயசு ஃப்ரண்ஸ் டா, அதான் சகஜமா பேசினேன்” ஸ்ரீராம் காரணம் சொல்ல,
“ஓ அப்படின்னா சரிதான்” என்று இறங்கி வந்தவன், “நீ டவுன்ல வளர்ந்தவன், இது கிராமம், பொட்ட புள்ளகிட்ட வெட்டி பேச்சு வளர்த்தா, வாய்லயே அருவா வெட்டு விழும்… பார்த்து சூதானமா நடந்துக்க” என்று சட்டை காலரை சிலுப்பி விட்டு போன சிறுவனை கண்கள் விரிய பார்த்து நின்றான் பெரியவன்.
“டேய், நானும் இந்த கிராமத்துல பொறந்தவன் தான்டா” நொந்தபடி ஸ்ரீராம் சொல்ல, “மறக்காம இருந்தா சரிதான்” போகிற போக்கில் பதிலை வீசிவிட்டு போனான் சக்திவேல்.
இந்த கிராமத்து மக்களின் எழுதப்படாத கட்டுக்கோப்புகள் அவனும் அறிந்தது தானே.
கிராமத்து குடும்பங்களில் தங்கள் வீட்டுப் பெண்களை பொக்கிஷமாய் பாதுகாக்கும் மனப்பாங்கு அங்கு ஒவ்வொருவரிடமும் ஊறிக் கிடக்கிறது.
செல்வநிலையை விட, குடும்ப மானம் என்பதே அங்கே மிகப்பெரிய சொத்தாகப் பார்க்கப்படுகிறது. அந்த மானம் என்ற காப்பு பெரும்பாலும் ஆண்களைவிட பெண்களைத்தான் பிணைத்திருக்கும். எனவே தன் வீட்டு பெண்ணை சின்னதாக சீண்டினால் கூட, கூன் விழுந்த கிழவன் முதல் பல் முளைத்த சிறுவன் வரை, மொத்தி எடுத்து விட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள். சக்திவேலின் எச்சரிக்கையும் அதைத்தான் உரைத்தது.
காவல் காக்கிறேன் என்ற பெயரில் பெண்களின் தன்னம்பிக்கை, தைரியத்தை குலைக்காமல், பெண் முன்னேற்றத்தை தடுக்காமல் இருந்தால் சரிதான் என்று எண்ணமிட்டப்படியே, ஸ்ரீராம் வையாபுரி வீட்டை நோக்கி நடந்தான்.
காலையிலேயே அவர் வீட்டின் மாடி அறையை வாடகை பேசி முன் பணமும் கொடுத்திருந்தனர் ஸ்ரீராமும் சங்கரனும்.
வையாபுரியின் வீட்டு மாடியின் முன்முனையில் ஒரு சிறு அறையும், பின் முனையில் குளியலைறையும் கழிவறையும் அமைந்திருந்தது. நடுவில் பெரும் பகுதி காலியாகவே இருந்தது.
அறையிலும் குளியலறையிலும் தனக்கு தேவையான பொருட்களையும் வசதிகளையும் ஸ்ரீராம் அடுத்தடுத்த நாட்களில் தானே செய்து கொண்டான். ஸ்ரீராம் எங்கே தங்கினாலும் அவனுக்கான உணவு தங்கள் வீட்டில் தான் என்று திட்டவட்டமாக சொல்லி இருந்தார் மரகதம். அவனாலும் தட்ட முடியவில்லை. ஒத்துக் கொண்டிருந்தான்.
# # #
வருவாள்…