KarisalKattuPenne13
KarisalKattuPenne13
கரிசல் காட்டுப் பெண்ணே 13
ராமகிருஷ்ணன் அந்த எக்ஸ்ரே ரிப்போர்ட்டை கவனமாக ஆராய்ந்து கொண்டிருந்தான். அது சீதாவின் அடிப்பட்ட வயிற்றுபகுதியின் எக்ஸ்ரே ரிப்போர்ட்.
விசயம் கேள்விப்பட்டு கோதாவரி, குலோத்துங்கன், ராமகிருஷ்ணன் மூவரும் சற்று முன்பு தான் வந்திருந்தனர்.
உள்ளே வந்ததும் சீதாவை அணைத்துக் கொண்ட கோதவரியின் மனம் ஆறாமல் அடித்துக் கொண்டது. எப்போதுமே அவருக்கு சீதாவின் மீது தனி பிரியம். அந்த அன்பினால் தான், தன் மருமகளாக தன்னுடனேயே அவளை வைத்துக்கொள்ள விரும்பினார். இப்போது வலியில் சோர்ந்து கிடந்தவளைப் பார்த்து கலங்கி போனார் அவர்.
“பொண்ணுனா பேயும் இறங்குமாமே, அந்த பாவிக மனமெறங்கலையோ? எங்க வாழை இளங்குறுத்த… வாச கொடி முல்லைய… அடிச்சு போட வந்தவைகளா, நீங்க நாசமா போக, உம்ம குலம் அழிஞ்சு இல்லாம போக, செத்தும் சிவலோகம் சேராம நரகம் சேர்ந்தழிஞ்சு போக…” அவர் தாளாமல் புலம்பி கலங்கினார்.
உணர்ச்சி மிகும் வேளைகளில் தங்களின் மன அழுத்தங்களை இவ்வாறு புலம்பி பாடி ஆற்றிக் கொள்வது கிராமப்புற பெண்களிடம் பரவலாக காணப்படும் வழக்கம்.
குலோத்துங்கன், “மருமகளே, இப்ப வலி எல்லாம் எப்படி இருக்குமா?” வாஞ்சையாகவே விசாரிக்க, “வலி குறைஞ்சிருக்கு மாமா” சீதாவும் மரிதையாகவே பதில் தந்தாள்.
“சண்ட நடக்குதுனா ஓடி ஒளியாம, எவங்கிட்டயோ அடி வாங்கிட்டு வந்திருக்க, கொஞ்சம் முன் யோசனை பண்ணி அங்கிருந்து தப்பிச்சு ஓடி வந்திருக்க வேண்டியது தான” ராமகிருஷ்ணன் தன் குணம் மாறாமல் சீதாவை கடிந்து கொள்ள, அதனை பொறுக்காமல் ஸ்ரீராம் குறுக்கே பேசினான்.
“நீ சீதாவ கோழைன்னு நினைச்சுட்டியா கிருஷ்ணா, அந்த முரடனுங்கள பார்த்து சீதா முகத்துல சின்னதா கூட பயம் தெரியல, எவ்வளவு திடமா அவங்கள எதிர்த்து பேசினா தெரியுமா, அந்த முத்தையாவ தள்ளிவிட்டு மண்டைய உடைச்சதே இவதான். அந்த கோவத்துல தான் அந்த ராஸ்கல் அடிச்சிட்டான்” என்று கடைசி வாக்கியத்தைக் குரல் இறங்க சொன்னவன் மேலும், “சீதா, இத்தனை துணிச்சலா, தைரியமா நடந்துப்பான்னு நான் சுத்தமா எதிர்பார்க்கல” என்று அங்கே நடந்ததை சொல்லி தன் தோழியை பெருமையாக பார்த்தான்.
அங்கிருந்த அனைவரின் முகமும் அதே பெருமையை அவளிடம் பிரதிபலிக்க, “என் மருமக வீர தமிழச்சி ஆச்சே, நிரூபிச்சிட்டால்ல” குலோத்துங்கன் வாய்விட்டே பாராட்டினார்.
ஆனாலும் ராமகிருஷ்ணன் முகம் தெளியவில்லை. “பொறுக்கி பயலுங்க சண்டைக்கு வந்திருக்காங்கன்னு தெரிஞ்சும், அவனுங்களை எதிர்த்து திமிரா பேசி, அடியும் வாங்கிட்டு வந்து படுத்திருக்கா உங்க மருமக, ஒருத்தன் மண்டைய உடைச்சதுல பெருமை வேற” இதற்குமே சிடுசிடுத்தவனைப் பார்த்து ஸ்ரீராமிற்கு தலையில் அடித்து கொள்ள தான் தோன்றியது.
“தெரியாம தான் கேக்குறேன், சீதாவை குறை சொல்லாம உன்னால இருக்கவே முடியாதா கிருஷ்ணா?” ஸ்ரீராம் சலிப்பாக கேட்க,
“அவ ஒழுங்கா நடந்துகிட்டா நான் ஏன் டா அவளை குத்தம் சொல்ல போறேன்… நீ எதுக்கு அவளுக்கு சப்போட்க்கு வர, என்னைவிட என்னடா உரிமை உனக்கு?” ராமகிருஷ்ணன் சண்டைக்கு நின்றான்.
அங்கிருந்த அனைவருக்கும் தன் பிள்ளைகளின் சிறு பிராயங்கள் நினைவில் வந்து போயின.
சிறுவர்கள் விளையாட்டில் குட்டி பெண் சீதாவுடன் விளையாட நான், நீ என்று சண்டை இட்டு கொள்வார்கள். அனைவருக்கும் சிறியவளாக ஒற்றை பெண் குழந்தையான சீதா மீது எல்லோருக்குமே பாசம் அதிகம்.
ஜெய்ராம் அனைவருக்கும் பெரியவன், ராமகிருஷ்ணன் எப்போதும் திட்டிக் கொண்டே இருப்பவன் என்பதால் குட்டி சீதா அதிகமாக ஸ்ரீராமோடு தான் விளையாட வருவாள், அடுத்த சில நிமிடங்களில் இருவரும் அடித்துக் கொண்டு மண்ணில் விழுந்து புரண்டு சண்டை இருந்தெல்லாம் வேறு விசயம்.
கண்ணாமூச்சியோ, நொண்டிபட்டையோ, ஓடி பிடித்து விளையாடுவதோ தன்னை விட்டு மற்ற பிள்ளைகளோடு சீதா விளையாடுவதைப் பார்த்தால் ராமகிருஷ்ணனுக்கு அத்தனை கோபம் வரும். பாதி ஆட்டத்திலேயே சீதாவை கைபிடித்து இழுத்து வந்து விடுவான்.
‘இன்னும் விளாட்டு முடில கிஷ்ணா’ சீதா கெஞ்ச, ‘பல்லை உடைப்பேன் என்னை பேர் சொல்லி கூப்பிட்டனா, ஒழுங்கா மாமானு கூப்டு’ அவன் சத்தமிட,
‘கிஷ்ணா மாமா, நான் விளாறேன்’ குழந்தையவள் கெஞ்ச, ‘விளையாடுன வரைக்கும் போதும் வா’ அவன் கண்டிக்க இவள் கண்களில் நீர் கட்டிக் கொண்டு உதடுகள் அழுகையில் பிதுங்கும்.
அவள் அழுவதை பொறுக்காமல், ‘பாப்பு அழறா பாரு கிருஷ்ணா, அவள விளாட விடு’ ஸ்ரீராம் கேட்க, ‘அவள பாத்துக்க எனக்கு தெரியும், நீ எதுக்கு அவளுக்கு வக்காளத்துக்கு வர? அவ மேல எனக்கில்லாத உரிமையா உனக்கு?’ ராமகிருஷ்ணன் பேச, அவர்கள் வாய் சண்டை, கை சண்டை வரும் போகும் பெரியவர்கள் வந்து சமாதானம் செய்யும் வரை.
சிறுவயதில் இருந்தே சீதாவின் மீது உரிமை கொண்டாடுவதும் அவளை தன் ஆளுகைக்கு கீழ் அடக்கி வைப்பதும் ராமகிருஷ்ணன் பழக்கமாகி இருந்தது.
வளர்ந்த பிறகும் அவன் அதனை மாற்றி கொள்ள முயலவே இல்லை.
அவன் சீதாவின் மீதான உரிமை பற்றி பேச்செடுக்க, ஸ்ரீராம் பதிலின்றி மௌனித்து விட்டான். ‘ஆமா, சீதா மேல கிருஷ்ணாவுக்கு இல்லாத உரிமையா எனக்கு?’ தனக்குள் எழுந்த கேள்வியில் அமைதியானான்.
ராமகிருஷ்ணனும் அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல், சீதாவின் எக்ஸ்ரே ரிப்போர்ட்டை கேட்டு வாங்கி ஆராய தொடங்கி இருந்தான். “பெருசா ஒண்ணும் அடிபடல, மேலோட்டமா தான் அடிப்பட்டு இருக்கு, கவலைபட ஒண்ணும் இல்ல” என்று பொதுவாக சொன்னவன், “இனியாவது யாரு வம்புக்கும் போகாம ஒழுங்கா இருக்க பாரு” சீதாவை எச்சரித்து விட்டு தான் அமர்ந்தான்.
“இவளை ஏன் டா மிரட்டுற? நாங்க சொல்லும் போதே உங்க கல்யாணம் முடிஞ்சு இருந்ததுனா எவனாவது நம்ம வீட்டு பொண்ணை தப்பா பார்த்து வம்புக்கு வந்து இருப்பானா?” கோதாவரி கோபமாகவே கேட்டு விட்டார்.
ஒரு டிகிரியாவது படித்தபிறகு தான் கல்யாணம் என்று பிடிவாதம் பிடித்தவன் இவன் தானே. மென்பொருள் துறையில் நல்ல வேலை, கைநிறைய சம்பளம், சென்னையில் சொந்த வீடு என அனைத்தும் இருந்தும் உப்பு பெறாத காரணம் சொல்லி மூன்று வருடம் திருமணத்தை தள்ளி வைத்த மகனை என்னதான் செய்து தொலைப்பது என்றிருந்தது அங்கிருந்த அனைவருக்கும்.
“இப்ப என்ன மா? என் வொய்ஃப் என் அளவுக்கு இல்லன்னாலும் ஏதோ ஓரளவாவது படிச்சவளா இருக்கணும்னு நினைச்சேன் அது தப்பா?” ராமகிருஷ்ணனும் பதில் பேச,
“கண்ணாலத்துக்கு அப்புறம் எவ்ளோ வேணா படிக்கட்டும்னு நான் தான் தலைபாடா அடிச்சுக்கிட்டேனே” மரகதமும் ஆதங்கமாக கேட்டு விட்டார்.
“நீங்க ரெண்டு பேரும் முதல்ல ஒரு விசயத்தை ஞாபகம் வச்சிட்டு பேசுங்க, என் தகுதிக்கு முன்ன இவளால பக்கத்துல கூட நிக்க முடியாது. என் மாமா பொண்ணு, சொந்தம் விட்டு போக கூடாதுன்னு தான் இவள கட்டிக்க ஒத்துக்கிட்டேன்” அவன் அதிகாரமாக சொல்ல அங்கிருந்த அனைத்து முகங்களும் அதிர்ச்சியில் வெளிரி போனது.
“என்ன பேச்சு இது ராமகிருஷ்ணா? சீதா நம்ம பொண்ணு டா, அவகிட்ட போய் தகுதி, தராதரமெல்லாம் பார்ப்பியா நீ?” குலோத்துங்கன் மகனை அதட்டி அடக்கினார்.
“இப்ப என்ன, மிஞ்சி மிஞ்சி போனா இன்னும் மூணு மாசத்துல அவ படிப்பு முடிய போகுது, அதுக்கப்புறம் நீங்க முடிவு பண்ண தேதியில தாலி கட்றேன் போதுமா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
சீதாவின் பார்வை அங்கிருந்த அனைவரின் பார்வையும் தொட்டு மீண்டது. என்ன இருந்தாலும் அவனின் திமிர் பேச்சு இவளின் சுயத்தை உரசி பார்த்தது. உரு தெரியா ஒரு ஊமைவலி அவள் நெஞ்சை அழுத்த தான் செய்தது.
“நீ விசனபடாத டா, அவன் தான் சரியான முசுடுனு தெரியும் இல்ல, விடு” என்று கோதாவரி சமாதானம் சொல்ல, சின்னவள் அமைதியாக அவரின் மடியில் தலை சாய்த்து கொண்டாள்.
ராமகிருஷ்ணன் பின்னோடு ஓடிவந்த ஸ்ரீராம், “என்ன நினைச்சுட்டு இருக்க கிருஷ்ணா? என்ன பேசுறோம்னு சென்ஸ் இல்ல? சீதா எதுல டா தகுதி குறைஞ்சு போயிட்டா உனக்கு?” சுருசுருவென கோபம் ஏற கேட்டான்.
“ஹலோ கூல் பாஸ், எல்லாத்துக்கும் நான் தான் காரணம்ற மாதிரி அம்மாவும் அத்தையும் பேசுறாங்க, அதான் கோபத்தில ஏதோ சொல்லிட்டு வந்துட்டேன்” ராமகிருஷ்ணன் பதில் அசட்டையாக வந்தது.
“அதுக்காக இப்படியா பேசுவ, எல்லாரோட முகமும் வாடி போச்சு தெரியுமா?” ஸ்ரீராம் மனத்தாங்கலாய் கேட்க,
“போகட்டும், அப்ப தான் மறுபடி எங்கிட்ட பேசும்போது யோசிச்சு நிதானமா பேசுவாங்க” ராமகிருஷ்ணன் பதில் அழுத்தமாக வந்தது.
# # #
“ஊர்க்குருவி வேடங்கொண்டு – நீ
உயர பறந்தாயானால் – நான்
செம்பருந்து வேடங்கொண்டு
செந்தூக்காத் தூக்கிடுவேன்.
செம்பருந்து வேடங்கொண்டு – நீ
செந்தூக்காத் தூக்க வந்தால் – நான்
பூமியைக் கீறிக்கொண்டு
புல்லாய் முளைச்சிடுவேன்”
ஆணும் பெண்ணுமாய் போட்டி பாட்டு படிக்க, அங்கிருந்தவர்கள் ரசிப்பும் சிரிப்புமாகவே வேலை செய்து கொண்டிருந்தனர்.
இதனை ஆரம்பித்தது ஸ்ரீராம் தான். கட்டிட வேலைகளை மும்முரமாய் செய்து கொண்டிருந்தவர்களிடம், “கிராமத்துல எல்லாம் பாட்டு பாடிக்கிட்டே அலுப்பு தெரியாம வேலை செய்வாங்களாம், உங்கள்ல யாருக்கும் பாட்டு பாட வராதா?” என்று சந்தேகமாக கேட்க,
“பாருப்பா இன்ஜினியருக்கு நம்ம வாய்ப்பாட்ட கேக்க ஆச வந்துருச்சாம்” ஒருவன் பின்னோடு கூற, மற்றவர்கள் சிரித்தனர்.
“நம்ம மூர்த்தி மேஸ்திரி வெங்கல குரல்ல எட்டூருக்கு எட்டு கட்டி பாடுவாரு” என்றான் மாரி.
“வாசந்தி அக்கா கூட நல்லா தான் பாடுவாங்க இன்ஜினியரே” என்று சித்தாள் பெண்ணொருத்தி சொல்ல,
“ஏலே மூர்த்தி, இன்ஜினியர் தம்பி ஆசையா கேக்குது இல்ல, புருசனும் பொஞ்சாதியும் சேர்ந்து ஒத்த பாட்டு படிங்கல்லே” ரஜினி மேஸ்திரி குரல் கொடுக்க மூர்த்தியும், வாசந்தியும் படித்த பாட்டு தான் அது.
“அடியே செவ்வந்தி புள்ள, ஒரு ஏலேலோ பாட்டு எடுத்து விடுடீ” வேறொருத்தி குரல் கொடுக்க, செவ்வந்தி வெட்கத்தில் நெளிந்தாள்.
அந்த கிராமத்து பெண்ணின் வெட்கத்தையும் சிரித்தபடி ரசித்திருந்தான் ஸ்ரீராம்.
கட்டிட வேலை தொடங்கியதில் இருந்து இவர்களின் கலாட்டாக்களையும் கதையளப்புகளையும் கவனித்துக் கொண்டு தானே வருகிறான்.
“ஐய வெட்கப்பட்டது போதும் புள்ள பாடு” முன்னவள் அவளை உந்த,
“நான் மட்டும் எப்படி யக்கா பாடுறது கூட கலந்து பாடுனா தானே நல்லா இருக்கும்” செவ்வந்தி சிறுகுரலாக மிளற்றினாள்.
“அட, நாங்க பின்பாட்டுல சேர்ந்துக்கிறோம் பாடு கழுத” என்க, இவளும் தயங்கியபடி பாட்டெடுத்தாள். இவள் முதலிரண்டு வரி படிக்க, மற்ற பெண்கள் இரண்டாம் வரியை இணைந்து பாடினர்.
“மழையை நம்பி – ஏலேலோ
மண்ணிருக்க – ஐலசா
மண்ணிருக்க – ஐலசா
மண்ணை நம்பி – ஏலேலோ
மரம் இருக்க – ஐலசா
மரம் இருக்க – ஐலசா
மரத்தை நம்பி – ஏலேலோ
கிளை இருக்க – ஐலசா
கிளை இருக்க – ஐலசா
கிளையை நம்பி – ஏலேலோ
இலை இருக்க – ஐலசா
இலை இருக்க – ஐலசா
இலையை நம்பி – ஏலேலோ
பூவிருக்க – ஐலசா
பூவிருக்க – ஐலசா
பூவை நம்பி – ஏலேலோ
பிஞ்சிருக்க – ஐலசா
பிஞ்சிருக்க – ஐலசா
பிஞ்சை நம்பி – ஏலேலோ
காய் இருக்க – ஐலசா
காய் இருக்க – ஐலசா
காயை நம்பி – ஏலேலோ
பழம் இருக்க – ஐலசா
பழம் இருக்க – ஐலசா
பழத்தை நம்பி – ஏலேலோ
கிளி இருக்க – ஐலசா
கிளி இருக்க – ஐலசா
உன்னை நம்பி – ஏலேலோ
நான் இருக்க – ஐலசா
நான் இருக்க – ஐலசா
பாட்டை முடித்து நிறுத்த, “ஏங்கம்மணிகளா அதுக்குள்ள நிறுத்திபுட்டீங்க, அடுத்த பாட்டு படிங்க” ரஜினி மேஸ்திரி குரல் கொடுக்க,
“அடுத்தது எதை பத்தி பாட? நீயே சொல்லு மேஸ்திரி” சித்தாள் பெண்ணொருத்தி வாயடிக்க,
“ஆங், நம்ம கரிச காட்டுப் பொண்ணு சீதாவையும் பெரிய வூட்டு புள்ள ஸ்ரீராமையும் வச்சு ஒரு காதல் பாட்டு படி புள்ள, கேட்க சுகமா இருக்குமில்ல” மாரி வேடிக்கை பேச்சில் வாயைவிட, அங்கிருந்த எல்லாருமே கொல்லென்று சிரித்து வைத்தனர்.
அவன் சொன்னதை புரிந்து கொள்ள ஸ்ரீராமிற்கு இரண்டு நிமிடங்கள் பிடித்தன. ஏதோ பாரம் ஏறி இதயத்தின் பாதையை அடைத்தது போலானது அந்த விநாடி.
“அறிவில்ல மாரி உனக்கு? சீதா கூட என்னை சேர்த்து… ச்சே வேடிக்கை பேச்சுக்கும் வரைமுறை இல்ல” ஸ்ரீராம் முகம் இருண்டு போக, குரலை உயர்த்தி கடிந்து பேச,
“கோவபடாதீக இன்ஜினியரே, துணியில கட்டி நெருப்ப மறைக்க முடியுமா என்ன? நீங்க ரெண்டு பேரும் பழகறது தான் இந்த ஊருக்கே தெரியுமே” அவன் அடங்காமலேயே பேசினான்.
“ஸ்டாப் இட் நான்சன்ஸ், யாரு இப்படி எல்லாம் கதைக்கட்டி விட்டது?” ஸ்ரீராம் முற்றிலுமாக பொறுமை இழந்து கத்தி விட்டான்.
அங்கே சில நொடிகள் அமைதி நிலவியது, அனைத்து கண்களும் இவன் முகத்தில் தான் பதிந்து நின்றன.
தலையை விரல்களால் அழுத்த கோதிக் கொண்டவன், “நல்லா கேட்டுக்கோங்க எல்லாரும், நானும் சீதாவும் எந்த தப்பான எண்ணத்திலையும் பழகல… நாங்க ஜஸ்ட் ஃப்ரண்ஸ் தான்… நீங்களா எதையாவது கற்பனை பண்ணி பேசி, ஒரு அப்பாவி பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துடாதீங்க, சொல்லிட்டேன்” அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை அவனால் வேகமாக வெளியேறி விட்டான்.
எத்தனை முயன்றும் மனம் அமைதியடையாமல் அடித்துக் கொண்டிருந்தது. ‘ஏன் இப்படி இவங்க எங்களை தவறா புரிஞ்சுட்டு இருக்காங்க?’ விளங்கவில்லை அவனுக்கு. இந்த வதந்தி பேச்சை வளரவிடாமல் ஆரம்பத்திலேயே எப்படியாவது தடுத்தே ஆக வேண்டும் என்று எண்ணம் ஓட, எப்படி என்பது தான் அவனுக்கு தெரியவில்லை.
இந்த மக்களின் கணிப்போ, பேச்சோ எந்தவகையிலும் இவனுக்கு பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை தான். ஆனால், சீதாவின் வாழ்வையும் அவள் குடும்பத்தின் நிம்மதியையும் மொத்தமாக சீரழித்துவிடும் என்பதை நினைக்க இவன் உள்ளம் நடுங்கிப் போனது.
அன்று ராமகிருஷ்ணன் பேசி சென்றது வேறு அவர்கள் மனதில் முதலிலேயே பாரத்தை ஏற்றி இருந்தது. இதில் எங்களை பற்றிய தவறான பேச்சு அவர்கள் வரை போனால்! மேலும் அவனால் யோசிக்க கூட முடியவில்லை. உண்மையிலேயே பயம் பரவியது அவனுக்குள்.
‘நீ வீட்ட ஒழுங்கா கட்டலன்னாலும் பரவால்ல, சங்கரன் வீட்டுல யார் மனசையும் தெரியாம கூட கஷ்டபடுத்திடாத, புரிஞ்சதா?’ பரமேஸ்வரன் சொல்லி சென்றது நினைவில் ஒலித்தது.
‘அச்சோ சின்னா விளையாடாத, இது டவுன் இல்ல கிராமம், இங்க யாராவது நம்ம பார்த்து தப்பா நினைக்க போறாங்க’ அன்று சீதாவின் பதற்றமாக பேசியது நினைவு வர, தான் விளையாட்டாக பழகியது தான் தவறாகி போனதா? என்று நினைத்து குழம்பி தவித்தான்.
இப்படியொரு பேச்சு வரும் என்று தெரிந்து இருந்தால் சீதாவின் பக்கம் கூட திரும்பி இருக்க மாட்டேனே என்று மனம் ஒருபுறம் வெதும்பியது.
இதே குழப்பத்தில் அவன் இரவு உணவுக்கு செல்லாது இருக்க, சக்திவேல் உடன் சீதா அவனுக்கான உணவோடு அவனறைக்கு வந்திருந்தாள். வயிற்றில் அடிப்பட்ட வலி குறைந்து சில நாட்களாக தான் அவள் தெளிந்து இருந்தாள்.
முதல்முறை ஸ்ரீராம் அவளைப் பார்த்து பதற்றமானான். “நீ எதுக்கு இங்க வந்த? முதல்ல கிளம்பு?” அவளை கிட்ட தட்ட துறத்தினான்.
“என்ன நேரமாச்சு தெரியுமா? ஏன் நீ சாப்பிட வரல, உனக்காக ஏறா தொக்கும் கருவாட்டு குழம்பும் அம்மா கொடுத்துவிட்டு இருக்காக, வா சாப்பிடு சின்னா” என்று அவன் பேச்சை கண்டுகொள்ளாது இவள் பாத்திரங்கள் எடுத்துவைக்க,
“ஒருவேளை சாப்பிடலனா எனக்கு ஒண்ணும் ஆகிடாது, நீ முதல்ல வீட்டுக்கு போ, சக்தி, அக்காவ கூட்டிட்டு கிளம்பு” என்று அவனையும் அவசரபடுத்தினான்.
வந்ததும் அவன் கைப்பேசியை எடுத்து இயக்க ஆரம்பித்திருந்த சக்திவேல் அவர்கள் பேச்சை காதில் வாங்குவதாக இல்லை.
“ஏன் சின்னா எங்கள விரட்டுற?” என்று முகம் சுருங்கியவள், அவன் நெற்றியில் கைவைத்து, “காய்ச்சல் ஏதும் அடிக்குதா உனக்கு, முகமெல்லாம் வாடி தெரியுற” என்னவளின் வாஞ்சையில் இவன் கண்கள் கலங்கி தான் போனது.
‘தங்களை பற்றிய தவறான வதந்தி மட்டும் இவளுக்கு தெரிந்தால் என்ன பாடு படுவாளோ?’ நினைக்கவே கனத்தது.
தன் நெற்றியில் இருந்து அவள் கையை விலக்கியவன், “எனக்கு எதுவும் இல்ல பாப்பு… நான் சாப்பிட்டுக்குவேன் நீ போ” நைந்த குரலாக சொல்ல,
“சரி மிச்சம் வைக்காம சாப்பிடணும்” என்று சொல்லி விட்டு தம்பியை இழுத்து கொண்டு சீதா கிளம்பினாள்.
*************
வருவாள்…