MagizhampooManam14
MagizhampooManam14
மகிழம்பூ மனம்
மனம்-14
நாள் முழுவதும் காத்திருந்தவனுக்கு, காத்திருப்புக்கான பதில் கடைசி வரை கிடைக்காமல் போகவே, மனம் அலைப்புறத் துவங்கியிருந்தது.
ஒவ்வொரு முறையும், யாழினி தன்னைக் கடக்கும்போது, அவளை நோக்கி ஆகர்ஷிக்கும் உணர்வை அடக்கவே, அன்று மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருந்தான் யுகேந்திரன்.
பகல் முழுவதும் மகள் தன்னிடம் வந்து, அன்பாகவும், பிறகு மிரட்டலாகவும், பிறகு கெஞ்சலாகவும், ‘தாயின் மாற்றத்திற்கான காரணம்’ கேட்க, அவனுக்கே புரியாத விடயம்.
என்னவென்று சொல்வான்!
புதிய மஞ்சள் சரட்டில், மஞ்சள் கிழங்கைக் கட்டி அணிந்திருந்தவளுக்கோ, வீட்டில் நடப்பது எதுவும் தெரியவில்லை!
ஒருவழியாக பிள்ளைகள் உறங்கியபின்பு, தைரியத்தை வரவழைத்துப் பேச முயற்சித்தவனுக்கு, வாயிலிருந்து முதலில் காத்துதான் வந்தது.
ஆனாலும், விடாமல் அழைத்திருந்தான். நீண்ட நாளுக்குப் பிறகான கணவனின், ‘யாயு’ என்ற அழைப்பைக் கேட்டு, ‘ஜீவமுக்தி அடைந்த ஆன்மா கொண்ட பரவசத்தை பெற்றவள் போல’ கணவன் முன்வந்து நின்றாள்.
அடுக்களையில் இருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு, “என்ன வேணும் அபி அப்பா?”, என்ற கேள்வியோடு, காதின் இருபுறத்தில் இருந்து கழுத்து வழியாக வழிந்த வியர்வையை, தனது சேலை முந்தனையில் துடைத்தவாறே கணவனின் முன்வந்து நின்றாள்.
கழுத்தின் புறம் சென்ற மனைவியின் கை செய்த வேலையை கவனித்தபடி இருந்தவனுக்கு, பளிச்செனத் தெரிந்த மஞ்சள் சரட்டின்மீது பார்வை பதிந்து மீண்டது.
‘இது… என்ன புதுசா தெரியுது!’ என சிந்தித்த மனம், ‘தன்னவளிடம் மாற்றம் இதனால் தானோ?’ என ஒருமனம் கேள்வியெழுப்பியிருக்க, ‘அதனால்தான்!’ என இன்னொரு மனம் வாதிட்டு வென்றது.
நாள் முழுவதும் என்னவெனத் தெரியாமல் தவித்த தவிப்பிற்குரிய முடிவை அறிந்ததில் மகிழ்ச்சி ஒருபுறம் வந்தாலும், வருத்தம் மறுபுறம் வந்திருந்தது.
‘இது எப்ப நடந்தது! ஒரு வார்த்தை எங்கிட்ட சொல்லணும்னு தோணலையா இவளுக்கு!’, என்ற சினத்தோடு கூடிய வினா எழுந்திருக்க
“கோவிலுக்கு போனதையெல்லாம் ஏன் எங்கிட்ட சொல்லலை?”, என வார்த்தைகளில் கனத்தை தவிர்க்க முயன்றும் இயலாததால், கடினமாகவே ஆரம்பித்திருந்தான்.
“அத்தைதான கூட்டிட்டுப் போனாங்க! அவங்களே உங்ககிட்ட சொல்லியிருப்பாங்கன்னு நினைச்சேன்!”, என்று விட்டேற்றியான பதிலை குனிந்தபடியே கூறியிருந்தாள் யாழினி.
“ஏன், நீ சொல்லியிருக்க வேண்டியதுதான? எவ்வளவோ விசயத்தைப் பத்தி எங்கிட்ட வந்து சொல்றவளுக்கு, இதை மட்டும் வந்து சொல்லத் தோணலையாக்கும்?”, என மீண்டும் தனது பழைய நிலையில் நின்றவனை
ஏறிட்டு பார்த்தபடியே அமைதியாக நின்றவளிடம்
“உங்கிட்டத்தான பேசிட்டு இருக்கேன். வாயைத் திறந்து பேசு. வரவர உனக்கு நான் தேவையில்லாதவனா போயிட்டேனா!”, தன் நிராகரித்தலை வாகாக மறந்தவன், தன்னவளின் நிராகரித்தலை உணர்ந்து, வலியோடு கேட்டிருந்தான்.
“ஆமா, அப்டியே எப்பவும்போல பேசிட்டீங்க!
நல்லா கேக்க வந்துட்டாரு நியாயம்!
எதாவது தேவைன்னா, நான் எப்பவும்போல வந்து பேசிட்டுதான் இருக்கேன்!
முகத்தைத் தூக்கி உச்சந்தலையில வச்சிட்டு திரிஞ்சது நானில்லை!
எதுக்கெடுத்தாலும் என்னையவே எதுக்கு குறை சொல்றீங்க?
மாமா உங்களையும் வச்சிட்டுதானே அன்னிக்கு சொன்னாங்க!
அடுத்துபோயி, என்ன செய்ய? எப்ப செய்யனு? ஏன் நீங்க மாமாகிட்ட எதுவும் கேக்கலை?”, என நொடிநேரம் தாமதித்தவள்
“ஏன்னா, உங்களுக்கு அதுபத்தி எந்த அக்கறையும் இல்லை. வீடு பாக்கச் சொன்னதுக்கே, பாக்கலையாம்!
இப்ப வந்து நீ தப்பு! அப்டி பண்ணிட்டே! இப்டி செய்துட்டேனு! எம்மேல அடுக்கடுக்கா வந்து பழியப் போடுங்க!
இன்னும் விட்டுப்போனது எதனா இருந்தா அதையும் எம்மேலயே பழி போடனும்னாலும் போடுங்க!”, என்று கணவனின் செயலை வெறுத்து, நியாயம் பேசியவளின் வார்த்தையில் இருந்த உண்மை உரைக்க,
‘அடடா… பிள்ளையார் பிடிக்கப் போயி, குரங்கா வந்த கதையாவுல, இப்ப போயிருச்சு!’, என்று தன்னையே நொந்து அமர்ந்திருந்தான்.
“அன்னிக்கு தாலிய ஒரு காரணமா வச்சித்தான அப்டி பேசினீங்க!”,
‘என்ன பேசினேன் அப்படி?’ என யோசனையோடு, மனைவியைப் பார்த்தவனை
“ஆஸ்பத்திரியில உங்க அண்ணன் அட்மிட்டாகியிருந்தப்ப, நீதான் அவரைப் பாத்துக்கனும்னு எங்கிட்ட சொல்லலை?
ஏன் அன்னிக்கு எங்கிட்ட அப்டிச் சொன்னீங்கங்கர காரணத்தை முதல்ல எனக்கு சொல்லுங்க?”, என்று ஒரு நொடி நிறுத்தியவள்,
கணவன் எதுவும் பேசாமல் இருக்க,
“சொல்ல முடியலைல!
என் நிம்மதிய குலைக்கிற தாலியை எனக்கு தேவையில்லைனு கழட்டிப் போட்டுட்டேன்.
அதை உங்ககிட்ட எதுக்குச் சொல்லனும்?”, என்று எதிர்கேள்வி கேட்டவள்,
‘அந்தத் தாலிக்கும், உனக்கும் என்ன சம்பந்தம்?’, என்ற கேள்வியை மறைத்து வந்த மனைவியின் பேச்சைக் கேட்டவனுக்கு, ‘ஐயோடா’ என்றிருந்தது.
தனது அன்றைய பார்வையை அவள் அறிந்து கொண்டதை, அவளின் வார்த்தைகள் மூலம் கவனித்ததை அறிந்தவனுக்கு, ‘விவரத்திட்ட வாயக்குடுத்து விவகாரத்தை இழுத்து வச்சிட்டேன்போலயே’, என தன்னையே வெறுத்திருந்தான்.
அதற்குமேலும் விடாமல் தொடர்ந்தவளையே அமைதியாகப் பார்த்திருந்தான்.
“இதுநாள் வரை என்னை உங்க வயிஃபா பாக்கலை, பழகலை, நினைக்கலை, வாழலை! ச்சைய்ய்…! என்ன வாழ்க்கையோ இது!”, என்று கணவனின் செயலால் தன்னை நொந்து சலித்தவள்,
“அதைவிடுங்க…! உங்க பிள்ளைங்களோட அம்மான்னுகூட யோசிக்காம, என்ன எல்லாம் அன்னிக்கு பேசிட்டீங்க!
காசுக்கு வரவளுகள மாதிரிதான, அப்ப என்னை இதுவரை நினைச்சிட்டு இருந்திருக்கீங்க?”, என்று தன் மனதில் உள்ளதை கொட்டத் துவங்கிய மனைவி, சொல்ல வந்ததை முடிக்கும்முன்
“ஏய்… அத்தோட நிறுத்துடீ! இதுக்குமேல ஒரு வார்த்தை பேசினாலும், கன்னம் பழுத்திரும்!”, என்று மனைவியின் ‘காசுக்கு வர…’ என்ற வார்த்தையைக் கேட்டு சிகரமளவு சினம் கொண்டான். தன்னை நோக்கி கையை ஓங்கி அறைய வந்தவனைப் பார்த்தவளுக்கு, ருத்ரமூர்த்தி கோபத்தோடு நிற்பதாகத் தோன்ற, வெலவெலத்து போயிருந்தாள். அதற்குமேல் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள்.
மனைவியின் வார்த்தைகளைக் கேட்டவனுக்கு, அவனையறியாமல் கை ஓங்கியிருந்தான். ஆனாலும், தன்னைக் கட்டுப்படுத்தியிருந்தவன், “போயிரு… இதுக்கு மேலே எதாவது ஒரு வார்த்தை தேவையில்லாம பேசின, என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது”, என்று அதனைத் தொடர்ந்து கத்தியிருந்தான் யுகேந்திரன்.
தன்னைச் சமாளித்து ஒருவழியாக படுக்கையில் சென்று படுத்திருந்தாள் யாழினி.
படுத்தவளுக்கு, அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அதற்குமேல் தனது அழுகைச் சத்தத்தை கட்டுப்படுத்த முடியாதவள், பாயோடு தலையணையை எடுத்துவந்து, ஹாலில் விரித்துப் படுத்து, விசித்தபடியே, எப்போது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை.
‘அவதான் எல்லாம் பேசினா, அடிக்க ஓங்கின எங்கை அவமேலகூட படல! அப்புறம் எதுக்கு இவ்வளவு அழுகை!’, என்று நினைத்தவாறே மனைவியைப் பார்த்திருந்தான்.
இதற்கெல்லாம் தனது அன்றைய செயலும், பேச்சும் காரணம் என்பதை யூகித்து வெட்கினான். தன்மீதே வெறுப்பு வந்திருந்தது.
உடன் தலைவலியும் விண், விண் என்று தெரிக்க, இரவு முழுவதும் உறங்காமல் அப்படியே சோபாவின் அமர்ந்த நிலையிலேயே கண்களை மூடியிருந்தான் யுகி.
////////
அன்றைய நாளைத் துவங்க, ஐந்து மணிக்கு வழமைபோல எழுந்தவள், சோஃபாவில் உறங்குபவனை, அறையின் உள்ளே படுக்கையில் சென்று படுக்க அறிவுறுத்திவிட்டு, தனது பணிகளில் ஈடுபட்டிருந்தாள்.
எதையும் யோசிக்காமல், விடியல் முதல் வழமையான பணிகளை கவனிக்கத் துவங்கியிருந்தாள் யாழினி.
தாமதமாக எழுந்து யுகேந்திரனைப் பார்த்திராத, தியா, தந்தையின் தலையில் கைவைத்துப் பார்த்தாள்.
“அம்மா! அப்பா ஏன் இன்னும் எழுந்துக்கலை! வாங்க வந்து முதல்ல அப்பாக்கு என்னனு பாருங்க!”, என அழைத்தவள் தாயை சரியாக கவனிக்கவில்லை.
விரைவில் எழாத தந்தைக்காக தாயை துணைக்கு அழைத்து பார்க்கச் சொன்னாள்.
“தூங்கத்தான செய்யறாரு, தூங்கட்டும். விட்டுட்டு ஸ்கூலுக்கு கிளம்பற வழியப் பாரு!”, என்று விட்டேற்றியாக கூறிவிட
தாயின் போனை எடுத்து, அம்பிகாவை அழைத்திருந்தாள் தியா.
“பாட்டீ…!”,
எடுத்தவுடன் பேத்தியின் குரலைக் கேட்டவர் இலகுவாக, “ஏன்டி, காலையிலேயே போனை போட்ருக்க! அங்க எல்லாம் நல்லா இருக்கீங்களா? நேத்து லீவுதான ஒரு எட்டு, இந்தப் பாட்டிய வந்து பாக்கனும்னு தோணலைல்ல உனக்கு!”, என்று கேட்டவரை இடைமறித்தாள் தியா.
“ஐயோ பாட்டீ! நான் சொல்ல வர்றதை நல்லா கேட்டுக்கங்க, எனக்கு ஸ்கூலுக்கு நேரமாகுது!
அப்பாக்கு என்னாச்சுன்னு தெரியலை!
இன்னும் எழவே இல்லை!
யாழும்மாகிட்ட சொன்னா அவங்க கண்டுக்கல!
எனக்கு ஸ்கூல் இருக்கு! இல்லைனா நானே பாத்துப்பேன்!
உங்க மகனை, நான் ஈவினிங் வரவரை பத்திரமா வந்து பாத்துக்கங்க!
ஈவினிங்குமேல நான் வந்து பாத்துப்பேன்!”, என்று பெரிய மனுசியாக மூச்சுவிடாமல் பேசிய பேத்தியின் பேச்சைக் கேட்டு சிரித்தவர், “சரிடீ கிழவி, உங்க அம்மாகிட்ட போனைக் குடு!”, என்று கூற
தாயிடம் கொடுத்துவிட்டு, அதன்பின்தான் தனது தாயைக் கவனித்தாள்.
முந்தைய இரவில் அழுதது, முகம் அதைத்தது(வீங்கியது) போல இருந்தது.
அதே நேரம் போனில், “தலைவலியாம் அத்தை, அதான் இன்னும் படுத்திருக்காங்க!”, என்று தனக்குத் தெரிந்த ஏதோ ஒன்றைக் கூறி சமாளித்தவளை “சரி பாத்துக்கம்மா!”, என்றுவிட்டு வைத்திருந்தார் அம்பிகா.
தாயின் முகத்தில் வந்த மாற்றம் எதனால் என்பதை அறிந்து கொள்ளும் நோக்கில், “என்னம்மா, ஏன் உங்க முகம் ஒரு மாதிரியா இருக்கு?”, என்று தாயை நோக்கி கேள்வி எழுப்பியிருந்தாள் பெண்.
‘தாங்க முடியாத தலைவலியினால் அப்படியிருக்கு!’, என நம்ப வைத்து மகளை பள்ளிக்கு அனுப்புவற்குள் ஒருவழியாகியிருந்தாள், யாழினி.
பிள்ளைகள் இருவரையும் பள்ளிக்கு அனுப்பியவள், உறங்குபவனிடம் எதுவும் சொல்லிக் கொள்ளாமல், கோவிலுக்கு கிளம்பியிருந்தாள்.
பத்து மணிக்கு எழுந்தவன், மனைவியை வீட்டில் காணாமல், தங்களது முந்தைய நாளின் பேச்சினை எண்ணிப் பயந்தவன், என்ன செய்ய என யோசித்தபடியே, வேலைக்குச் செல்லும் நோக்கத்தை கைவிட்டு காத்திருக்கத் துவங்கினான்.
//////////////
வழிபாட்டை முடித்துக் கொண்டு, பிரகாரத்தில் வந்து அமர்ந்தாள் யாழினி.
மனம் லேசாக உணர்ந்தாள். ஆனாலும், கணவனை நினைத்து மனம் கலங்கினாள். ‘எப்டியெப்டியோ உயர்வா நினைச்சிருந்தவரை, அவர் அப்டியில்லை, இப்டித்தான்னு கடவுள் உண்மையை காமிச்சு’ தன்னை சோதிப்பதாக வருந்தினாள்.
சில உண்மைகள் தெரியாதவரை கூட சந்தோசம்தான் போல!
பிரகாரத்தைச் சுற்றிவந்து கொண்டிருந்த பெண்ணைப் பார்த்தவளுக்கு, மிகவும் பரிட்சயமாகத் தெரிந்தது.
ஆனால் யாரென்று தெரியவில்லை.
சுரிதாரில் மிகவும் எளிமையாக வந்திருந்தவளுடன், நெருக்கமாக பழகிய உணர்வு தோன்ற, நினைவடுக்கில் தேடத் துவங்கினாள்.
உடன் படித்தவளா? ஊரில் தெரிந்தவர்களா? என யோசித்தபடியே, அங்கிருந்து கிளம்பியிருந்தாள்.
////////////////
பணிக்குக் கிளம்பி, வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்தவனுக்கு, டைனிங்கில் வேண்டியதை எடுத்து வந்து வைத்தவள், எதுவும் நடவாததுபோல, அங்கிருந்து அகன்றிருந்தாள்.
நேற்றைய நாளின் தாக்கம் எதையும் காட்டாமல், அமைதியாகச் சென்றவளைப் பார்க்கும்போது, மிகவும் குற்றவுணர்வாக இருந்தது.
பிள்ளைகள் இல்லாத தைரியத்தில், களமிறங்க முடிவு செய்தான்.
கணவனின் அமைதியில் சற்றுநேரம் பார்த்திருந்தவள், அடுத்த பணிகளில் தன்னை ஈடுபடுத்தியிருந்தாள்.
“யாயு”, என்று வந்து அழைத்தவனை, நிமிர்ந்து நோக்கினாள் பெண்.
நேருக்கு நேராக ‘என்ன வேணும் இப்போ உங்களுக்கு?’, என்று கண்களாலேயே கணவனை நோக்கி கேள்வியை வீச,
“எதுக்கு அப்டி பேசின?”
“என்ன பேசினேன்? நடக்காததையா பேசினேன்?”, ஒன்றும் தெரியாதவள் போல கேட்டாள்.
“இனி அப்டியெல்லாம் பேசாத! உன்னை நீயே எதுக்கு அசிங்கப்படுத்திக்கிற?”, என்றவனை
“ம்… நீங்க அசிங்கப்படுத்தலாம்! அதை நாங்க ஏத்துக்கனும்! ஆனா அதையே நாங்க சொன்னா தப்பு. எந்த ஊரு நியாயம் இது?”, என்றவளின் பேச்சைக் கேட்டவனுக்கு
“இப்ப என்னாச்சுன்னு, முகத்தை தூக்கி வச்சிட்டு பேசுற?”, எதுவுமே நடவாததுபோல பேசினான் யுகி
“இனியும் என்னாகனும்?”, சீற்றத்தோடே சீறினாள் பெண்
“புரியலை!”, பெண்ணின் சீறலை முற்றிலும் எதிர்பாராதவன், பம்மியிருந்தான்.
“ஏன் புரியலை! அதான் தெளிவா அன்னிக்கு பேசுனீங்களே!”, பழையதை நினைவுபடுத்தினாள் பெண்.
“அது தெரியாம பேசினது!”, என முகத்தை காட்டாமல், மறுபுறம் திரும்பியவாறு இலகுவாகக் கூறி ஜகா வாங்கியிருந்தான்.
“இன்னும் நீங்க பால்குடி மறக்காத புள்ளைன்னு நினைப்பா! தெரியாம செஞ்சாறாம்!”, என்று நக்கல் குரலில் பேசியவளை
“இப்ப என்னதான் சொல்ல வரே?”, சமாதானத்திற்கு வழி கோலினான்.
“சொல்ல, எனக்கு என்ன அருகதை இருக்கு?”, என தனது நிலையை உணர்ந்து, குரல் தழுதழுக்க கூறினாள்.
மனைவியின் குரலில் கண்டிருந்த அழுகையை உணர்ந்தவனுக்கு, தனது தவறுகளை எண்ணி தன்மீதே கோபம் எழ, “எதுக்கு தேவையில்லாத பேச்சு இப்ப?”, என நயந்து பேசினான்.
“எது தேவையில்லாதது?”, எகிறினாள் பெண்.
“இந்த நேரத்தில, இதைப்பத்தி பேசறதுதான்!”, நயத்தோடு நயந்திருந்தான் யுகேந்திரன்.
“சரி, நீங்களே சொல்லுங்க, நான் கேட்கலாமா? வேணாமான்னு யோசிச்சு சொல்றேன்”, நக்கல் குரலில் சீண்டியவளை சீற்றத்தோடு
“ஏய் என்னடீ ரொம்பத்தான் பேசுற? சரி போகட்டும்னு விட்டா, ரொம்பத்தான் எகிர்ற!”, தணிந்தவன், திகுதிகுவென எரியத் துவங்கியிருந்தான்.
“அவ்ளோதானா! இல்லை இன்னும் எதுனா இருக்கா?”, உலகத்தின் நக்கலையெல்லாம் ஒன்று திரட்டி வினாவாக்கி, வீசியிருந்தாள்.
“திமிர்டீ, எல்லாரும் உன்னை தலையில தூக்கி வச்சு கொண்டாடற திமிரு!”, தன்னவளைக் கண்டுகொண்டதாக மார்தட்டிக் கொண்டான்.
“அதுக்கு இப்ப என்ன?”, அது அப்டித்தான் என ஒத்துக் கொண்டது பெண்.
“எல்லாம் என் தலையெழுத்து! அதான் எதையுமே பேச வாயத் துறக்கலை!
இத்தனை நாளா பேசாம இருந்தவன், பேசறானேங்கற சந்தோசம்கூட இல்லாம இருக்கிறவகிட்ட, எனக்கு இனி என்ன பேச்சு!”, என்றவன், அங்கிருந்து செல்ல எத்தனிக்க
“எங்க போறீங்க?”, என அவனை வார்த்தையாலேயே நிறுத்தியிருந்தாள்.
“வந்து உக்காருங்க!
எல்லாக் கணக்கையும் பேசி, இன்னிக்கே செட்டில் பண்ணிக்கலாம்!”, என்று அதட்டலாகவே கூறினாள்.
“ஓஹ், அந்தளவுக்கு ஆகிருச்சா உனக்கு?”, என்று திரும்பி நின்று கேட்டவன், தன்னவளின் முன் வந்தான்.
“எந்தக் கணக்கை செட்டில் பண்ணப் போற, இப்ப?”, என்றபடியே எதிரில் வந்து நின்றான்.
“நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லவே இல்லை நீங்க. முதல்ல அதுக்கு பதில் சொல்லிட்டு, அப்புறமா இடத்தைக் காலி பண்ணுங்க!”, லேசில் விடும் எண்ணமில்லைபோல் அவளுக்கு.
“ரொம்பப் பண்ணாதடீ, நாந்தான் தெரியாம பேசிட்டேன்னு சொன்னேன்ல!”, சலிப்பாகக் கூறினான்.
“நாவடக்கம் பத்தி படிக்காதவங்க சொல்றதை, படிச்ச நீங்க சொன்னா நல்லாவா இருக்கு?”, அதையும் தூக்கலான நக்கலோடு கேட்டாள்.
“வேற உண்மையத்தான சொல்ல முடியும்!”, யுகி சோர்ந்திருந்தான்.
“எவ்வளவு பெரிய வார்த்தைய அன்னிக்குப் பேசிட்டு, தெரியாம பண்ணேன்னு சொல்றீங்க! அப்ப எம்மனசு என்ன பாடுபட்டிருக்கும்னு ஒரு நிமிசமாவது யோசிச்சுப் பாத்தீங்களா?”, என்று அடுத்தடுத்து உள்ளத்து உளைச்சல்களை எடுத்து, கணவனின் முன் வீசியெறிய துவங்கினாள்.
“உம்மனசு மட்டுந்தான் கஷ்டத்துல இருந்துச்சா, நானும் ஒன்னும் நல்லா இல்லையே!”, சால்ஜாப்பு பேசினான்.
“உங்க அண்ணா மட்டும் திரும்பி வரலைன்னா, இன்னேரம் உங்களுக்கு, கோவில் கட்டி, கும்பாபிஷேகமே பண்ணியிருப்பேன்!”, ஆச்சர்யமாக பார்த்திருந்தவனை சட்டை செய்யாமல் மேற்கொண்டு பேசினாள்.
“அப்படி ஒரு பக்தி!
யுகா, யுகான்னு என் யுகமே நீங்கதான்னு மயக்கத்தில இருந்த என்னைய, தெளிய வச்ச புண்ணியவான்தான் உங்க அண்ணன்!
வந்தாரு மனுசன், துரை முகத்துல போட்டுத் திரிஞ்ச திரையை கிழிச்சு, தூர விட்டெரிஞ்சுட்டாரு!
பத்து வருசம் எங்கூட வாழ்ந்து, குடும்பம் நடத்தி, ஒன்னுக்கு இரண்டு புள்ளையும் பெத்துட்டு, அண்ணனுக்கு நீங்க தார வாத்துக் குடுத்தா, நாங்க மறுக்காம அங்கயும் போயி பணிவிடை செய்யனும். எந்த ஊரு நியாயம் இது?
துரை சொன்னதக் கேட்டு, அங்கபோனா, அந்த ஊமைக்கோட்டான், இங்க எதுக்கு வந்தேன்னு விரட்டுது?”, என்று பேசியவளை இடைமறித்தவன்
“மரியாதை… மரியாதை… இல்லைனா மரியாதை கெட்டுரும்!”, என்று கோபமாகப் பேசியவனை
“உங்களுக்கு மட்டும் மானம், மரியாதை மானாவாரியா இருக்கும், எங்களுக்கெல்லாம் இருக்காதா? சொல்லுங்க?”, என்று பதிலுக்கு சீறியிருந்தது பெண்.
“உங்களுக்கெல்லாம் என்னைய பாத்தா எப்டி தெரியுது? இல்லை எனக்குத் தெரியாமத்தான் கேக்கறேன்? ஏமாளி மாதிரியா?
ஒரு முடியாத மனுசன்னு மட்டுந்தான் போயி அன்னிக்கு சாப்பாடு குடுத்தனே தவிர, நீங்க சொன்னதுக்காக நிச்சயமா இல்லை.
தொம்பிகிட்ட சாப்பாட குடுத்துவிடு, குடுத்துவிடுன்னு அந்தாளு பண்ற அட்டகாசம் ஒருபக்கம்!
வீட்ல உக்காந்துகிட்டு, ‘நீ தான அவனைப் பாக்கனும், வேற யாரு பாப்பானு கூட வாழ்ந்தவளை விரட்டிவிட்டுட்டு’, நான் போகமாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்ற தொம்பி இன்னொரு பக்கம்.
ரெண்டு பேரும் சேந்து ஃபுட் பால் கணக்கா ஆளுக்கொரு திசையில எட்டி உதைச்சு விளையாட நானா கிடைச்சேன்?
ரெண்டு பேரும் சேர்ந்து என்னை கிறுக்காட்றதுக்கா, எங்க பேரண்ட்ஸ் உங்க வீட்ல என்னைய கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க!
இவ்வளவு நாளு நீங்க எங்கிட்ட நடந்துட்டது எல்லாம் வேசம்!
எதுவுமே உண்மை இல்லைனு கடவுள் எனக்கு அழகா புரிய வச்சிட்டாரு!
இனி எனக்கு யாரும் தேவையில்லை!
நான் என் புள்ளைகளுக்காக இந்த வீட்ல கடைசிவரை ஒரு வேலைக்காரியா இருந்திட்டு போயிடறேன்!
அண்ணங்காரரை பாக்குமுன்ன, ரோமியோ கணக்கா சுத்தின உங்களைப் பாத்து, நான் பிரமிச்சது உண்மை! சந்தோசத்தோட உச்சத்துக்கே போனேன்!
ஆனால், எல்லாம் பொய்யின்னு அப்புறம்தான் தெரிஞ்சுகிட்டேன்!
என்னிக்கு, நாம வாழ்ந்த வாழ்க்கை மேல உங்களுக்கு குழப்பம், சந்தேகம், சங்கடம், வந்துச்சோ, இனியும் நாம நம்ம வாழ்க்கைய தொடர்றதுல எந்த அர்த்தமும் இருக்கிறதா எனக்குத் தெரியல!
உங்க பிள்ளைகளுக்கு நல்ல அம்மாவா, நான் ஒரு மூலையில இருந்துட்டுப் போறேன்!
இன்னொரு முறை, என்னால, இந்த வார்த்தைகளைக் கேக்கற திராணியில்ல. அதனால என்னை விட்ருங்க!
இதுவரை என் மனசையும், உடம்பையும் உங்க ஒருத்தருக்காக மட்டுமே கொடுத்தேன்! அது என் மனசாட்சிக்கு மட்டும் தெரியும். வேற யாருக்கும் விளக்கம் கொடுக்கனும்கிற அவசியம் எனக்கில்லை!
கடைசிவரை அந்த நினைப்புகளோடயே என்னால வாழமுடியும்!
அரைவேக்காடுககூட அழகா குடும்பம் நடத்துதுக!
படிச்சுட்டோம்கிற நினைப்புல படிச்சவங்கதான் இப்ப நிறைய தப்பு பண்றாங்க!
அவங்களுக்குத்தான், குடும்ப வாழ்க்கைய எப்படி சீரா கொண்டு போறதுன்னு தெரியல?
புக்குல இருக்கிறதை படிச்சு சொல்றதுக்கு மட்டுந்தான் வாத்திகள்லாம் லாயக்குபோல!”, என்று தனக்குள் பேசியவளை இடைப்புகுந்து பேசியவன்
“தேவையில்லாம எதுக்கு வாத்திகள்னு இழுக்கற? உனக்கு எம்மேல கோவம்னா, எங்கிட்ட மட்டும் கேளு, அதவிட்டுட்டு இப்டி பேசுறது ரொம்பத் தப்பு”, என்று அந்த வேளையிலும் கண்டித்தவனைக் கண்டவளுக்கு, கோபம் வருவதற்கு மாறாக சிரிப்பு வந்தது. அதை மறைத்தவள்,
‘இனிமேல் உன்னிடம் பேச எனக்கொன்றுமில்லை’ என்று தனது செயல் மூலம் காட்டிவிட்டு, அங்கிருந்து அகன்றிருந்தாள் பெண்.
தன்பக்க நியாயத்தை கேட்க எண்ணாத மனைவியை முறைத்து நின்றவன் அத்தோடு கிளம்பியிருந்தான்.
காலை ஆகாரத்தை உண்ணாதவன், கிளம்பிச் சென்றதைக்கூட நினைவில் கொண்டுவர இயலாமல், ‘கொக்கிற்கு ஒன்றே மதி’ என்பதுபோல பொழுதை கடந்து போன கசப்பான நினைவுகளுடன் கழித்தாள்.
அன்று முழுவதும் மனைவி தன்னிடம் பேசியதும், தான் நடந்து கொண்டிருந்ததையும் நினைத்துப் பார்த்து, தன்னையே வெறுத்து, மாலையில் வீடு திரும்பியிருந்தான் யுகேந்திரன்.
////////////
தன்னை இதுநாள் வரை தவிர்த்தவனை, தானே தவிர்க்கத் துவங்கியிருந்தாள் யாழினி.
நாட்கள் அதன்போக்கில் நகர்ந்தது.
வீடு வழமைபோல இயங்கியது.
யாழினிக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. பிள்ளைகள் முன் ஒரு மாதிரியும், அவர்கள் இல்லாதபோது வேறுமாதிரியும் போகும் தங்களது வாழ்வை எண்ணி சலிப்பு வந்திருந்தது.
ஆனாலும், கணவனது செயலை நியாயப்படுத்த முடியாமல், தள்ளியிருந்தாள்.
கணவனின் பார்வைகள் தன்னைத் தொடருவதை உணர்ந்தாலும், அதில் அவளுக்கு மகிழ்ச்சி இல்லை.
இதே நிலை நீடித்தால் என நினைத்தவளுக்கு, மலைப்பாகவே உணர்ந்தாள்.
……………………..
‘மயிலே மயிலே இறகு போடு’ என்றால், ‘மயில் இறகு போடாது’ என்பதை உறுதியாக அறிந்தவன், இறுதியாக சரணாகதி தத்துவத்தை உறுதி செய்து, ஒரு முடிவுக்கு வந்திருந்தான் யுகேந்திரன்.
‘அதுதான் அந்தப் புள்ளை ஹார்ட்டயே பயங்கரமா ஹர்ட் பண்ணிட்டோம்ல’
பலமுனை முயற்சிகளும் தோல்வியடைந்திருக்க முடிவாக இந்த முயற்சியை முன்மொழிந்தது, யுகேந்திரனின் அறிவு.
இது எளிது.
பேசத் துவங்கினாலே காத தூரம் கடந்தவளை, தன்னைக் காண வைக்கவே முடியாமல் தடுமாறியிருந்தான்.
அதனால், முகம் நோக்காமல் நொடியில் பெண்ணின் நாடியை உரிய வழியில் தன்னை நோக்கித் திசைதிருப்பி, தன்னை நாடச் செய்யும் குறுக்கு வழியிது!
வலையில் விழ வைக்கும் எண்ணம் எதுவும் இல்லாதபோதும், பெரிய அளவு தான் பஞ்சர் ஆகாமல் தப்பித்துக் கொள்ளலாம் என்கிற முன்னோசனைதான்.
துயில் அவளை தூரிகை கொண்டு அரவணைத்திட, அன்றைய நாளின் உழைப்பிற்கான ஊதியத்தை(உறக்கத்தை) அனுபவிக்கத் துவங்கியிருந்தாள்.
உறக்கம் விழியின் இமைகளைப் பூட்டுப் போட ஆயத்தமாகியிருந்த வேளையில், கதவைத் தட்ட எண்ணிய மாரனை எதிர்பாராமல், படுக்கையில் உறக்கத்தின் மடியில் இருக்க,
தன்முனைப்பை மூட்டையைக் கட்டி, கடலுக்கடியில் வீசிவிட்டு, தன்னை மீட்டு, ஒரு வழியாக, நெருங்க எண்ணி, தன்னவளை பின்னோடு அணைக்க
நீண்ட நாள் ஏக்கத்தின் நனவை, கனவாக்கிக் களிக்கிறோம், என பெண்ணின் மேல்மனம் வாதிட முதலில் எதிர்க்காமல், அதில் குளிர்காய்ந்தபடியே மறுக்காமல் விட்டுவிட்டாள்.
இதமாகவே உணர்ந்தாள். மனம் ஆகாயத்தில் பறக்க சந்தோசக் குமிழி ஊற்றெடுத்திருந்தது.
பெண்ணவளின் மறுப்பை எதிர்பார்த்திருந்தவனுக்கு, எந்த எதிர்ப்பும் இல்லாததால், தயக்கமின்றி, காது மடலைத் தீண்டும் நெருக்கத்தில் உதடு உரசி, “யாயு”, என்று அழைத்து மென்மையாக முத்தமிட்டிருந்தான்.
அதேநேரம், மஞ்சள் தேய்த்திருந்த, தாலிச் சரட்டின் மீதிருந்த, வந்த வாசம், அவனது நாசியைத் தீண்ட, இதுவரை இல்லாத, புதிய அனுபவமாக உணர்ந்தான்.
பத்து ஆண்டுகளில் உண்டான நெருக்கத்தில், இதுபோல வாசனையை உணர்ந்திராத புத்தி அதை யோசித்தது. அதை அறிந்து கொள்ள மனம் யாசித்தது.
அனுமானித்தது.
அத்தோடு கழுத்து வளைவில் தன் சூடான இதழ் பதித்திருந்தான், அந்தக் கள்வன்.
கணவனின் ‘யாயு’ என்ற அழைப்பில் உள்ளம் உருகி, துவண்டு, உறக்கத்தோடு உறவாடியாவள், சூடான இதழின் ஸ்பரிசத்தை உணர்ந்து, இது தன் மாரனின் வேலை என்ற முடிவில், உறக்கத்தோடு உறவாடியிருந்த தன்மானத்தைத் தட்டி எழுப்பியிருந்தாள்.
நிதானப்படுத்தி, நிஜத்தை உணர சில வினாடிகள் எடுத்துக் கொண்டாள்.
அணைத்திருந்த, வலிமையான கரங்களை, இலகுவாக அவன் எதிர்பாரா வேளையில், தன் பலம் கொண்டு விலக்கியவள், சடாரென்று படுக்கையில் இருந்து, எழுந்து, அறையை விட்டு, ஹாலுக்கு சென்றிருந்தாள்.
விடிவிளக்கின் வெளிச்சத்தில், ஓவியமாக அமர்ந்திருந்தவளை ரசிக்கும் நிலையில் தற்போது யுகேந்திரன் இல்லை.
அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
மறுப்பை எதிர்பாரா வேளை, பெண் தன்னை உதாசீனப்படுத்தி, ஒதுக்கியதை, ஏற்றுக்கொள்ள இயலாத ஆண்மனம், கோபத்தின் உச்சிக்கு சென்றிருந்தது.
அளவற்ற கோபம் நெஞ்சில் தகிக்க, சீற்றத்தோடு, அவளை நோக்கியபடியே, அவளின்பின் எழுந்து வந்து, அமர்ந்திருந்தவளின் முன்வந்து நின்றவனை, நிமிர்ந்து பார்க்காமல், தலை குனிந்து அமர்ந்திருந்தாள் யாழினி.
படபடப்பு, யாழினியை இயங்க விடாமல், தடைசெய்ய முயற்சிக்க, ஆழ்ந்த மூச்சுக்களை மெதுவாக இழுத்து விட்டாள்.
சற்றுநேரத்தில் நடப்பிற்கு வந்தவள், கணவனை எதிர்பார்த்தே நிமிர,
நின்றவனின் கோபத்தை சட்டை செய்யாதவள்,
“இப்ப என்ன?”, என்று கடினமாகக் கேட்டவள், அத்தோடு விடாமல், “அதுதான் என் முடிவை நான் சொல்லிட்டேன்ல!”, என கத்தரித்துப் பேசினாள்.
“அப்ப என் முடிவைப் பத்தி உனக்கு அக்கறை இல்லை, அப்படித்தான!”, இரங்கியே பேசினான்.
“ஏன் அக்கறை இல்லாம? அதான் இவ்வளவு நேரமா எல்லாம் செய்தேனே?”
‘பயபுள்ளைக்கு கொழுப்பை பாரேன். வீட்டு வேலை செய்திட்டு, எனக்காக எல்லாம் செஞ்சமாதிரி கப்ஸா விடறதை!’
“என்ன செஞ்ச? என்னையத்தான் அன்னிக்கு காலையில நிக்கவச்சி கேள்வியா கேட்ட? என் நியாயத்தை எங்க கேட்ட?”
‘நாங்களும் இனி கேப்போமுல்ல!’
அலுத்துக்கொண்டவள், “ம்… சரி சொல்லுங்க!”, பெரிய மனது பண்ணுவது போல பேசியிருந்தாள்.
“நானும் சாதாரண மனுசன்தான யாயு!
எனக்கு எங்க அண்ணன் வரவரை எதுவுமே தோணலை. நான் என் வாழ்க்கைய உங்கூட சந்தோசமாதான் அதுவரை வாழ்ந்தேன்.
ஆனா, அவன் வந்தப்புறம், ஒரே வீட்டில மூனு பேரும் இருக்கறதே எனக்கு நரகமா தோண ஆரம்பிச்சிருச்சு!
எங்க தேவா, நீ, நான் மூனு பேரும் எப்டினு நூறு பர்செண்ட் எனக்குத் தெரிஞ்சிருந்தாலும், நிறைய குழப்பம் அப்பப்போ வந்து போச்சு!
சந்தேகம்லாம் வரலை!
ஏதோ என் பொருள் என் கைய விட்டு போற உணர்வு!
இரண்டு நாள் குழப்பத்துல இருந்த உன்னை, நான் எப்டி எடுத்துக்கனும்னு அப்ப எனக்குத் தெளிவில்ல!
ஏன்னா எனக்கும் ரொம்பக் குழப்பம்!
எங்கம்மா, அப்பாவைத் தவிர, நாம மூனு பேரும் தர்மசங்கடமான ஒரு நிலையில இருக்கிறதா தோணுனதால, வீட்டுக்கு வரதையே அவாய்ட் பண்ணேன்.
வழக்கத்துக்கு மாறா, எங்க பிளாக்கே கதின்னு கிடந்தேன்!
மூனு நாலு நாளுக்குப்பின்ன, நீ நார்மலாகிட்ட!
எப்டினா, குழந்தைகளைப் பாத்துக்கற, அதோட, எங்க தேவாவை நம்ம கல்யாணத்துக்கு முன்ன எப்டி கவனிப்பியோ அப்டி சமைச்சு, அவனுக்கு புடிக்கறமாதிரியே எல்லாம் வருது!”, கணவனின் பேச்சைக் கேட்டு முறைத்தவளை
அமைதி என கையால் சமாதானம் செய்தபடியே,
“எங்க அம்மா சொல்லித்தான், நீ செய்யறேன்னு தெரிஞ்சாலும், என் அறிவுக்கு புரியறது, மனசுக்கு புரியலடீ!
ரொம்ப குழப்பம்!
அவன் விழுந்தவுடன்ன ஆம்புலன்ஸ்கு சொல்லி நீதான் எல்லாம் பண்ற!
எனக்கு இன்னும் குழப்பம் கூடுது!
சகமனுஷியா செய்தேன்னு அறிவுக்கு புரிஞ்சாலும், மனசு அதைக் கேக்கவே இல்லை!
அப்போ என் மனசுக்குள்ள இருந்த குழப்பத்துலதான், நான் உங்கிட்ட அப்டி பேசிட்டேன்.
ரியலி சாரி யாயு!
எனக்கு இங்க வந்தபின்ன தெளிவா யோசிக்க முடிஞ்சது.
எல்லாம் தெரிஞ்சிருந்தாலும், நமக்குன்னு வரும்போது தடுமாறி, தடமாறிறோம்!
அப்டித்தான் நான் அன்னிக்குப் பேசிட்டேன்!
நான் பேசினதை நியாயப்படுத்தலை!
உனக்கு எம்மேல கோபம்னா, என்னை உன் கோபம் தீர வரை நல்லா அடிச்சுக்கோடீ!
ஆனா, தத்துபித்துனு இனி எங்கிட்ட உளராத!
நீ அப்டி பேசினது தப்புதான். அதான் உணர்ச்சிவசப்பட்டு கைநீட்டி என்னை கன்ட்ரோல் பண்ணேன்.
சாரி யாயு, ரியலி சாரிடீ”, என்றவன்.
“பழசையெல்லாம் மறந்துட்டு, புதுசா வாழ ஆரம்பிக்கலாம் யாயு”, என்றான்.
மனைவியிடம் எதையும் எதிர்பாராதவன், மனைவி எதிர்பாராத தருணத்தில் சோபாவில் அமர்ந்திருந்தவளின் மடிமீது வந்து தலைவைத்துப் படுத்துவிட்டான்.
‘டேய்… என்னாதீது! இதுக்கு பேரு என்னவாம்’ என வாய் வரை வந்த வார்த்தையை விழுங்கியவள், படுத்து சற்று நேரத்தில், சூடான உணர்வை தொடைப்பகுதி உணர்ந்தது.
அதுவரை குறையாத கம்பீரத்தோடு பேசி நின்றவனா, தற்போது கண்ணீரில் தன் குறைகளைக் கழுவுகிறான்.
பதறியவள், யுகேந்திரனின் கண்ணீரைக் கண்டு, தனது பிடிவாதத்தை சற்றே தளர்த்தியிருந்தாள்.
“எதுக்குங்க, சின்னப்புள்ளை மாதிரி, எழுந்து போயி ரூம்ல படுங்க!”, என்று செல்ல அதட்டல் இடவே
“இனி நீ நார்மல்மோடுக்கு வந்திருவியா?”, யாழினியின் இடுப்பைக் கட்டிக் கொண்டு கேட்டவனுக்கு
“எப்பவும் அதே மோடுலதான் நாங்க இருப்போம்”, என்று யாழினி பதில் கூறினாள்.
“நாங்கன்னா?”
“ம்… யாழினிதான்”
“அப்போ யாயு?”
“சரி யாயு தான்”
“நான் ஒன்னு சொன்னா கோவப்படக்கூடாது”
“பீடிகை எதுக்கு, சும்மா சொல்லுங்க”
“இப்பலாம் உன்னைப் பாத்தா, பத்திரகாளி மாதிரியே ஃபீல் ஆகுதுடீ. சாந்தமா இதுவரை உன்னைப் பாத்துட்டு, சொர்ணாக்கா கணக்க அன்னிக்கு பேசினியே, அம்மாடி…”, என்றவனின் காதைத் திருகியவள்
“சந்தடி சாக்குல என்னை சொர்ணாக்கானு சொல்லியாச்சு”, என்று கேட்க, வலி பொறுக்காதவன், “ஏய், விடுடீ வலிக்குது”, என்று கத்தினான்.
“நாளைக்கு நீங்க வேலைக்கு போகணும், புள்ளைங்கள ஸ்கூலுக்கு அனுப்பனும்”, என்று நினைவுறுத்தவே
“நாம இங்கேயே படுத்துக்கலாம் யாயு” என்ற கணவனின் கெஞ்சலில், அதற்குமேல் மறுப்பேதும் கூறாமல், மனைவி எடுத்து வந்து தரையில் விரித்த பாயில் படுக்கச் சென்றவன், நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதியான உறக்கத்தைத் தழுவியிருந்தான்.
பெண்ணவள் சற்று மீண்டாலும், மிச்சமிருந்ததை தூக்கியெறியும் வழிதேடி, வந்த உறக்கம் வாசலோடு போயிருக்க கொட்டக் கொட்ட விழித்திருந்தாள்.
தேவாவுடனான, தனது இயல்பான பேச்சைக்கூட, இலகுவாக எடுத்துக் கொள்ள இயலாத, மென்மையான மனம் படைத்தவனை உணர்ந்து கொண்டாள்.
எல்லாம் கடந்துபோகும் என்ற நினைப்போடு, விழி மூடியிருந்தாள்.
/////////////
விடியல் விசித்திரமானது.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு காட்சிகள்.
நிகழ்வுகள் மாறிமாறி, மனிதனை பல உணர்வுகளுக்கு ஆட்படுத்தி, வாழும் வழி முறையை சொல்லித் தருகிறது.
நெறியோடு வாழ்ந்தவன், குறையில்லா வாழ்வு பெறுகிறான்.
பிள்ளைகளை அனுப்பிவிட்டு கோவிலுக்கு கிளம்ப வேண்டும் என்று கூறியவளை, “நானே உன்னை போறவழியிலே இறக்கிவிட்டுட்டு போறேன்”, என்று பணிக்குக் கிளம்பாமல் தாமதித்தவனை தடுக்காமல்,
“நான் கிளம்ப லேட்டானதால, பிளாக்குக்கு போக லேட்டாகிருச்சுன்னு எம்மேல பழி போடலைன்னா வயிட் பண்ணுங்க” என்றுவிட்டு கிளம்பினாள் பெண்.
இன்னும் இருவரிடையே பழைய நெருக்கம் மீளாததால், யுகி தனது நலநாள்திட்டத்தை (சூழல் சரியாகும் வரை கடைபிடிக்கும் திட்டம்) கையிலெடுத்துக் கொண்டிருக்கிறான்.
மனைவி கிளம்பும்வரை குட்டிபோட்ட பூனையாக நேரத்தைக் கடத்தியிருந்தான்.
அதே வேளை தபால் ஒன்று வரவே, அதை வாங்கிப் பிரித்தவன் முகம் மாறியிருந்தது.
“யாயு”, என்ற கணவனின் கத்தலில் என்னவோ, ஏதோ என்று ஓடி வந்திருந்தாள் யாழினி.
——————————
தபாலில் வந்தது என்ன?
யுகேந்திரனின் கத்தலுக்கான காரணம் என்ன?
அடுத்த அத்தியாயத்தில்…