KarisalKattuPenne18

கரிசல் காட்டுப் பெண்ணே 18

 

‘பெரியவீடு’ என்ற பழமை பதத்தில் இந்த புதிய வீடும் இயல்பாய் பொருந்திக் கொண்டது.

சுற்று வட்டார கிராமங்களில் இதுபோன்ற நேர்த்தியான பிரம்மாண்ட வீடு எதுவும் இல்லாததால், பெரிய வீட்டின் மவுசு அங்கெங்கிலும் பரவி வியப்புகளை விதைத்து இருந்தது.

அதற்கேற்றவாறே பெரிய வீட்டின் புதுமணை புகுவிழாவை விமர்ச்சியாக ஏற்பாடு செய்திருந்தான் ஸ்ரீராம். வாசலில் வாழைமரங்கள், அலங்கார வளைவுகள், சீரியல் விளக்குகள் என பெரிய வீடு இன்னும் அற்புதமாய் ஜொலித்தது.

உற்றார், உறவினர், நண்பர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்க, ஜெயராம், தேவிகா, கோதாவரி, குலோத்துங்கன், ராமகிருஷ்ணன் என அனைவரும் வந்திருந்தனர். அதோடு ஸ்ரீராம், கீர்த்திவாஷினியின் நண்பர்கள் படை வேறு இரவே வந்து சேர்ந்திருந்தது.

“பெருசா மிஷினரீஸ் இல்லாம ஆட்களை மட்டும் வச்சு சூப்பரா முடிச்சு இருக்கரா, கிரேட் வொர்க்” என்று தருண் தோளணைத்து பாராட்ட,

“ஹேய் உன் வீட்ட நீயே கட்டினதுக்கு எல்லாம் உன்ன பாராட்ட முடியாது ரா… நம்ம டார்கெட் என்ன? அப்பார்ட்மெண்ட்ஸ், பெரிய மால்ஸ், ஸ்கூல்ஸ், காலேஜ்ஸ், ஹாஸ்பிடல்ஸ் இப்படி இன்னும் நிறைய நம்ம கம்பெனி பேர் சொல்ற மாதிரி பில்டிங்க்ஸ் எழுந்து நிக்கணும்… அந்த டார்கெட் ரீச் பண்ணனும். இப்பவரை‌ நாம ஸ்டார்டிங் பாயிண்ட்ல தான் நிக்கிறோம்… லெட்ஸ் கோ கைய்ஸ் நம்ம டார்கெட் நீண்டு இருக்கு” என்று ஷிவானி பேச்சில் உத்வேகம் கூட்டி கைத்தூக்க, மற்ற நண்பர்களும் அவள் கையில் அடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

இனி ஸ்ரீராமோடு அவன் நண்பர்களின் முயற்சிகளும் கைக்கோர்த்து தங்களின் தொழிலில் உயரத்தை எட்டி பிடிக்கும். போட்டிகள் நிறைந்த கட்டுமான தொழிலில் போராடி முன்னுக்கு வருவது கடினம் தான் என்றாலும் முடியாதது அல்லவே. திறமையான முயற்சிகள் உயர்ந்த குறிக்கோளை நோக்கி வழிநடத்திச் செல்லும் என்ற தளறாத நம்பிக்கை அந்த இளம்தலைமுறையினரிடம்.

விடியற்காலை பிரம்ம முகூர்த்ததில் பசுவோடு கன்றும் புது வீட்டிற்குள் பிரவேசிக்க கோபூஜை நடந்தது. பரமேஸ்வரன், கௌதமி தம்பதியாய் மணையில் அமர்ந்து யாகம் துவங்கி மந்திரங்கள் ஓத பெரிய வீட்டின் புதுமணை பூஜை தொடங்கியது.

அனைவரின் முகத்திலும் மனதிலும் மகிழ்ச்சியும் சந்தோசமும் நிறைந்திருக்க, புது அடுப்பில் பசும்பால் பொங்கி வழிய, குடும்பத்தினரின் சந்தோசத்தையும் பொங்கி வழியச் செய்வதாய்.

விடியற்காலையில் உற்றார், உறவினர், கிராமத்து மக்கள் வந்து சிறப்பிக்க, காலையின் விருந்தோடு விழா முடிந்திருந்தது. நெருங்கிய சொந்தங்கள் மட்டும் பெரிய வீட்டின் கூடத்தில் அமர்ந்து அளாவிக் கொண்டு இருந்தனர்.

“கல்யாண வேலை எல்லாம் எந்தளவில இருக்குக்கா?” கௌதமி விசாரிக்க,

“அதையேன் கேக்குற, தினமும் நான் தான் கத்திட்டு கிடக்குறேன். கல்யாணம் நெருங்கி வந்துடுச்சு இதை செய்யிங்க, அதை செய்யிங்கன்னு, வீட்டு ஆம்பளங்க கண்டுகிட்டா தான” கோதாவரி நொந்தபடி சொன்னார்.

“கல்யாண வேலையெல்லாம் ஜரூரா தான் நடக்குதுமா… மண்டபம், சமையல், ஐயர், பூ அலங்காரம், போட்டோகிராபர் எல்லாருக்கும் சொல்லியாச்சு, கல்யாண பத்திரிக்கைக்கு சொன்னா மட்டும் போதும் இன்னும் ஒருவாரத்தில கைக்கு வந்திடும் அப்புறம் எல்லாரையும் அழைக்கிற வேலையே சரியா போயிடும்” குலோத்துங்கன் விளக்கமாக பேச,

“ஆமா, கல்யாணத்துக்கு பட்டெடுக்கல, எல்லாருக்கும் துணிமணி எடுக்கணுமே, அதை எல்லாம் எப்போ எடுக்க?” கோதாவரி நொடிந்து கொள்ளவும்,
“இன்னுமா கல்யாணத்துக்கு துணி எடுக்காம இருக்கீங்க” பங்காளி ஒருவர் கேட்டு வைத்தார்.

“அப்பாவுக்கு லீவ் இருந்தா, புள்ளக்கு லீவ் கிடைக்காது, புள்ளைக்கு லீவ் கிடைச்சா அப்பா பிஸி, இதுல எங்க காஞ்சிபுரம் போறது” கோதாவரி மறுபடி நொந்து கொள்ள,

“மரகதம் பொண்ணு வீட்டுல துணிமணி எல்லாம் எடுத்தாச்சா?” கௌதமியின் கேள்வி இவரிடம்.

“இன்னும் இல்ல அண்ணி, நாங்களும் இன்னிக்கு போலாம் நாளைக்கு போலாம்னு தள்ளி போயிட்டு இருக்கு” மரகதம் பதிலும் தயக்கமாக வர,

“சரிதான், இன்னைக்கு எல்லாரும் ஒண்ணா இருக்கோம், நல்ல முகூர்த்த நாள் வேற, இப்பவே காஞ்சிபுரம் கிளம்புனா பட்டெடுத்துட்டு சாயந்திரத்துக்குள்ள திரும்பிடலாம் என்ன சொல்றீங்க?” பரமேஸ்வரன் சொல்ல எல்லோருக்கும் அதுவே சரியான யோசனையாக தோன்றியது.

அடுத்த அரை மணியில் எடுக்க வேண்டிய துணிமணிகளுக்கான பட்டியலை தயார் செய்து கொண்டு இரண்டு கார்களில் கிளம்பினார்கள்.
ராமகிருஷ்ணன் காரோட்ட உடன் குலோத்துங்கன், அவரின் தங்கை செல்வி, கணவர், மகள், கோதாவரி என்று ஒரு காரிலும்,

ஸ்ரீராம் காரோட்ட, பரமேஸ்வரன், கௌதமி, சங்கரன், மரகதம், சீதா, சக்திவேல், நெருங்கிய உறவு பெண்கள் இருவரென மற்றொரு காரிலும் கிளம்பினர்.

ஜெயராம், தேவிகா பெரியவீட்டை கவனித்து கொள்ள வேண்டி இருந்துவிட, கீர்த்திவாஷினியோடு மற்ற நண்பர்களும் நன்றாக உறங்கி எழுந்து பின் கிராமத்தை சுற்றி பார்க்க போவதாக சொல்லி கழன்று கொண்டனர்.

சிலமணி நேரங்கள் பயணத்தில் வழக்கமாக குடும்ப விசேஷங்களுக்கு பட்டு எடுக்கும் காஞ்சிபுரத்தின் பெரிய கடையை முற்றுகையிட்டு இருந்தனர். மணமக்களுக்கும் உறவினர்களுக்கும் தேவையான பட்டுகளையும் ஆடைகளையும் அடுக்கி வாங்கி முடித்து வெளிவர, மாலை நெருங்கி இருந்தது.

“பொழுது இன்னும் இருக்குல்ல, காஞ்சிபுரம் வரைக்கும் வந்து காமாட்சி அம்மனை தரிசிக்காம போனா என்ன புண்ணியம்? ஓரெட்டு கோயிலுக்கு போயி கும்பிட்டு கிளம்பலாம்” என்று கோதாவரி சொல்ல, மறுப்பின்றி அனைவரும் கோயிலுக்கு சென்றனர்.

அன்றைக்கு விசேச நாள் என்பதால் கோயிலில் முழுக்க கூட்டம் நிரம்பி வழிந்திருந்தது. கட்டண தரிசனம் கிடைக்கவே காத்திருப்பு நேரம் இழுக்க, ஆண்களின் பொறுமை எல்லாம் எல்லையைத் தொட்டிருந்தது.

அம்மனின் நிறைவான தரிசனம் முடித்து வெளிவரவும் நேரம் கடந்திருக்க, ஊர் திரும்ப அவசரமென ஆண்கள், பெண்களை விரட்டி, மிரட்டி காரில் இழுத்துக் கொண்டு விரைந்து இருந்தனர்.

நம் மக்களின் திருமண பட்டெடுக்கும் பயணங்கள் எப்போதும் ஆத்திர அவசரமாகவே முடிவு பெறும் விந்தை மட்டும் மாறுவதில்லை போலும்!

காரில் அமர்ந்த சிறிது நேரத்தில் பெண்கள் அனைவரும் களைப்பில் கண் அயர்ந்து விட, பாதி தூரம் கடந்திருந்தது. இரவு உணவிற்காக ஓட்டலில் இறங்கிய போது தான் சக்திவேல் சுற்றும் முற்றும் கவனித்துக் கத்தினான்.

“அத்த, அக்கா எங்க?” என்று.

“சீதா உங்க கார்ல தானே வந்தா!” என்றதும் அங்கே பதற்றம் சூழ்ந்தது.

“கோயில்ல நீங்க தான அண்ணி சீதாவ உங்ககூட அழைச்சிட்டீங்க?” மரகதம் பதறி கேட்க,

“ஆமா, தரிசனம் முடியுறவரைக்கும் எங்கூட தான் இருந்தா, அப்புறம் நான் பாக்கலையே, உங்ககூட கார்ல வாரான்னு நினச்சுக்கிட்டேன்” சொல்லும் போதே கோதாவரியின் முகம் வெளிரி போனது.

“நீங்க உங்க கார்ல ஏத்திகிட்டீங்கனு நாங்க நினைச்சுட்டோம் க்கா” கௌதமியும் பதற்றமாக சொல்ல,

“என்ன ஒருத்தர்மேல ஒருத்தர் சொல்லிட்டு இருக்கீக, கூட வந்த புள்ளைய கவனமா கூட்டிட்டு வர தெரியாதா உங்களுக்கு?” குலோத்துங்கன் மொத்தமாக பெண்களை கடிந்துக் கொண்டார்.

“எங்க பொறுமையா பாக்க விட்டீங்க, அவசரம்னு கத்தி கூச்சல் போட்டு கோயில்ல இருந்து எங்களை விரட்டிட்டில்ல வந்தீக” கோதாவரியும் மொத்தமாக ஆண்களை குற்றம் சாட்டினார்.

“சீதா என்ன சின்ன குழந்தையா தொலைஞ்சு போக? ஆளுங்களோட ஆளா சேர்ந்து வரணும்னு தெரியாது அவளுக்கு?” ராமகிருஷ்ணனும் தன் பங்கிற்கு கோபமானான்.

“இருட்டிடுச்சு, தெரியாத ஊர்ல சீதா தனியா தவிச்சு போயிருப்பா, நாம சீக்கிரம் கிளம்பலாம் கோயில்ல தான் இருப்பா” ஸ்ரீராமும் பதற்றமாக சொல்ல,

“நேரம் தாண்டிடுச்சு ஸ்ரீ, கோயில் நடை சாத்தி இருப்பாங்க! சீதா கார்ல இருக்காளான்னு ஒருமுறை அங்கேயே பார்த்து இருக்கணும்” கௌதமி பரிதவித்து பேச, மரகதம், கோதாவரி கலங்கி விட்டனர்.

“ஏன் இவ்வளவு கவலப்படறீங்க, சீதா படிச்ச பொண்ணு தான, நம்மூருக்கு பஸ் பிடிச்சு வர தெரியாதா அவளுக்கு” ராமகிருஷ்ணன் கேட்க,

“அக்கா கிட்ட காசு எதுவும் இருக்காது” என்றான் சக்திவேல்.

“சக்தி, சீதாகிட்ட மொபைல் இருக்கும் இல்ல?” ஸ்ரீராம் கேட்க, சின்னவன் இல்லையென்று தலையாட்டினான்.

தலையை அழுத்தி கோதிக் கொண்டவன், “ஒரு எமர்ஜென்ஸிக்கு கூட, சீதாகிட்ட ஒரு ஃபோனோ, அட்லீஸ்ட் நூறு ரூபா பணமோ கொடுத்து வைக்க மாட்டீங்களா மாமா?” ஸ்ரீராமின் ஆதங்கமான கேள்வி சங்கரனை மோதி நிற்க,

அவர் முகம் கசங்கியது “இப்படி எல்லாம் நடக்கும்னு எனக்கு தெரியாது ராமா? இல்ல…” தெரியாத ஊரில், இருட்டு வேளையில் நிர்க்கதியாக நிற்கும் மகளின் நிலை அவரின் நெஞ்சை அழுத்தியது.

“சரி சரி, இன்னும் லேட் பண்ண வேணாம், நானும் மாமாவும் திரும்பி போய் சீதாவ அழைச்சிட்டு வந்திடுறோம், நீங்க சாப்பிட்டு ஊருக்கு கிளம்புற வழிய பாருங்க” என்று முகம் இறுக சொல்லிவிட்டு ராமகிருஷ்ணன் முடிவாக சொல்ல, சங்கரன் உடன் வர அவன் கார் சாலையில் பறந்தது.

“அய்யோ கடவுளே, நல்ல நாள் அதுவுமா இப்படியா முடியணும்” கோதாவரி புலம்ப, “கிருஷ்ணா கோபமா கிளம்புதே, சீதாவ திட்டிகிட்டி விட போகுது” மரகதமும் பதறினார்.

பெண்ணுக்கு சிறிதும் பாதுகாப்பில்லாத நாட்டில் இரவு வேளையில் சீதாவின் பாதுகாப்பற்ற நிலை ஸ்ரீராமின் உள்ளத்தையும் கலவரப்படுத்தியது.

அருகிலிருந்த கடைக்காரரிடம் ஏதோ வேகமாக விசாரித்து வந்தவன், “அப்பா, நீங்கெல்லாம் சாப்பிட்டு ஆட்டோ பிடிச்சு பஸ்டேன்ட் போய் அங்கிருந்து ஊருக்கு கிளம்புங்க, நான் சீதாவ தேடி போறேன்” என்றான்.

“அதான் கிருஷ்ணா போயிருக்கான் இல்ல அவன் கூட்டிட்டு வந்துடுவான், நீங்க ஏன் வீணுக்கு கிளம்புறீக?” ராமகிருஷ்ணனின் அத்தை செல்வி இழுக்க,

“இல்ல, ஸ்ரீராம் போகட்டும், இவ்ளோ நேரமாயிடுச்சு, சீதா எங்க இருக்காள்னு கூட நமக்கு தெரியல” மரகதம் கலங்கி சொல்ல,

“ஒருத்தர்க்கு ரெண்டு பேரா தேடுறது நல்லதுதான், வயசு புள்ள வேற, நாங்க இங்க பாத்துக்கறோம், நீ கிளம்பு ஸ்ரீராம்” குலோத்துங்கனும் சொன்னார்.

“சீதாக்கு எதுவும் ஆகாது அத்த, நீங்க கவலைபடாம தைரியமா இருங்க” என்று சொல்லி விட்டு இவனும் காரில் விரைந்தான்.

‘நீயும் தைரியமா இரு பாப்பு, உன்ன தேடி நாங்க வந்திட்டு இருக்கோம்’ மானசீகமாக அவளுக்கும் தைரியம் சொன்னது இவன் மனது.

அதே நேரத்தில், ‘தைரியத்தை விட கூடாது… இன்னும் கொஞ்ச நேரம்… தப்பிச்சு போயிடலாம்’ என்று திரும்ப திரும்ப தனக்குள் சொல்லி சிதறும் தன் தைரித்தை சேகரித்து கொள்ள முயன்றிருந்தாள் சீதாமஹாலட்சுமி.

ஒர் இருட்டு சந்தின் சிறு கோயில் மண்டபத்தின் மறைவில் உடலை குறுக்கி உட்கார்ந்து இருந்தாள் அவள்.

கோயிலில் தரிசனம் முடித்து தூண்களில் இருந்த சிற்ப வேலைப்பாடுகளைக் கவனித்தபடி நடந்து வந்திருந்தவள் சற்று தாமதமாக தான் தன்னை சுற்றி உறவினர் யாரும் இல்லாததை கவனித்தாள். உடனே கோயில் முழுவதும் அவர்களை தேடி அலைந்து கடைசியாக கார் நிறுத்துமிடம் வந்து பார்க்க, அவர்களின் இரண்டு கார்களும் மாயமாகி இருந்தன. அக்கணமே பேதை மனம் தோய்ந்து போனது. யாருமே தன் இருப்பை கவனிக்கவில்லையா என்று.

‘நான் கூட இல்லாததை யாருமே பார்க்கலையா?’ மனமும் உடலும் சோர்ந்து விட, அங்கிருந்த படியில் அமர்ந்துவிட்டாள். திடுமென நிர்க்கதியாக்கப்பட்ட தன் நிலை அவளின் இதய துடிப்பைக் கூட்டிக் கொண்டு இருந்தது.

இனி என்ன செய்ய என்ற யோசனையில் இருந்தவள், கைப்பேசியில் பேசிபடி வந்த ஒரு பெண்ணிடம் சென்று, “என்கூட வந்தவங்களை தொலைச்சிட்டேன். ஒரேயொரு கால் பண்ணனும் ப்ளிஸ்” என்று கேட்க, அவர் சற்று தயக்கத்துடன் கைப்பேசியைக் கொடுத்தார்.

அவசரமாக தன் தந்தையின் எண்ணுக்கு தொடர்பு கொள்ள, ‘தொடர்பு எல்லைக்கு வெளியே’ என்று குரல் கேட்டது. அடுத்து தன் அத்தையின் எண்ணுக்கு முயல, முழுவதுமாக அடித்து ஓய்ந்தது இரண்டு முறையும், கடைசியாக ராமகிருஷ்ணன் எண்ணுக்கு முயல, ‘சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்’ என்று வர, சீதா ஓய்ந்து தான் போனாள்.

அந்த பெண்மணியின் பார்வையில் பொறுமை முழுவதுமாக வற்றி கொண்டிருக்க, அவரிடம் கைப்பேசியைத் திரும்பிக் கொடுத்தவள், “ஒரு சின்ன உதவி, பக்கத்துல மகளீர் போலிஸ் ஸ்டேஷன் எங்க இருக்குன்னு சொல்றீங்களா?” என்று கேட்க,

“எனக்கு தெரியாது, வேற யார்கிட்டயாவது கேளுங்க” என்று சொல்லிவிட்டு அவர் நகர்ந்து கொண்டார்.

மெல்ல இருள் சூழவும் அங்கிருந்த சூழ்நிலையும் முற்றிலுமாக மாறிக்கொண்டிருந்தது.

இன்னும் சிலரிடம் மகளீர் காவல் நிலையத்திற்கு வழியை விசாரிக்க, ஒரு ஆட்டோ அவளிடம் வந்து நின்றது.

“பஸ் ஸ்டாண்ட் தானே பாப்பா போகணும், நான் விடுறேன் வாங்க” என்று அழைக்க, “இல்ல நான்… போலீஸ் ஸ்டேஷன் போவணும்” என்றாள்.

“அது தூரமாச்சே மா, இருநூறு கொடுங்க நான் கூட்டிட்டு போறேன்” பேரம் பேச, “இல்ல பரவால்ல” இவள் விலகி நடக்க, “பத்து ரூவா குறைக்கிறேன் வா மா” ஆட்டோக்காரன் மீண்டும் அழைக்கவும் இவள் நிற்காமல் வந்துவிட்டாள்.

அங்கே கொஞ்சம் கொஞ்சமாக ஆள்நடமாட்டம் குறைய தொடங்க, தனியே ஒதுங்கி நின்றிருந்த அவளின் மீது மோதிய பார்வைகளிலும் மாற்றங்கள் தென்பட்டன.

மேலும் அங்கேயே நிற்க இயலாமல் வழியில் விசாரித்தபடி, மகளீர் காவல் நிலையம் நோக்கி நடந்தவளை யாரோ தொடர்வது போல தோன்ற, திரும்பி கவனித்தவளுக்கு அய்யோ என்றிருந்தது.

சற்று தூரமாக இரண்டு ஆண்கள் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்களை பார்க்க எந்த வகையிலும் நம்பிக்கைக்கு உரியவர்களாக தெரியவில்லை. நடையின் வேகத்தை கூட்டியவள், யாரும் உதவிக்கு இல்லாத பயத்தில் வேகமெடுத்து ஓட தொடங்கினாள்.

அவர்களும் விடாமல் துறத்திவர, இந்த சிறு கோயிலின் பின்புறம் வந்து மறைந்துக் கொண்டாள். வெகுநேரமாக இங்கே தான் மறைந்து இருக்கிறாள். இங்கிருந்து தப்பித்து எந்தபக்கம் செல்வது என்று கூட புரியாமல் அவள் மனம் வெதும்பியது.

“இந்த பக்கமா தான் ஓடி வந்தா, சீக்கிரம் கண்டுபிடி டா” ஒருவனின் குரல் இவளருகில் கேட்க, தன் உடலை இன்னும் இருளுக்குள் புதைத்துக் கொண்டு மறைந்துக் கொண்டாள். பயத்திலும் பதட்டத்திலும் அவள் பூவுடல் மொத்தமாக வியர்த்துப் போயிருந்தது.

# # #

ஒருமணிநேரத்தில் கோயிலை அடைந்திருந்த ராமகிருஷ்ணனும் சங்கரனும் அங்கே சுற்றிலும் தேடி களைத்தனர். மாலையில் கடையும் கூட்டமுமாக இருந்த இடம் இப்போது வெறிச்சோடி இருள் படர்ந்து கிடந்தது.

அங்கிருந்த சிலரிடம் சீதாவை பற்றி விசாரிக்க, யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. “அய்யோ சீதாம்மா, எங்க போயிட்ட?” சங்கரன் கலங்கி தலையில் அடித்து கொண்டு புலம்ப, ராமகிருஷ்ணனுக்குள்ளும் பதற்றம் பரவியது. அவள் எங்கே போய் தொலைந்தாளோ என்று.

ஸ்ரீராம் அங்கே வந்து சேர்ந்திட, “இங்க ஃபுல்லா தேடிட்டோம் சீதா‌ இல்ல ஸ்ரீ… பஸ் ஸ்டாண்ட்ல தேடிட்டு கிடைக்கலன்னா போலீஸ்ல சொல்லிடலாம், அதான் பெட்டர்” ராமகிருஷ்ணன் யோசனை தர,

“சரி கிருஷ்ணா, எதுக்கும் நான் இன்னொரு முறை இங்க சுத்தியும் தேடி பார்க்கிறேன்” என்று ஸ்ரீராம் சொல்லவும் ஆமோதித்து தலையசைத்து விட்டு அவர்கள் சென்றனர்.

ஸ்ரீராம் கோயில் தெருக்கள் சுற்றிலும் தேட, ராமகிருஷ்ணன் ஒருபுறம், சங்கரன் மறுபுறம் முக்கிய சாலைகள், பேருந்து நிறுத்தத்தங்களில் அலைந்து தேட, சீதா அந்த இருளின் மறைவிடத்தில் பயத்தோடு ஒடுங்கி இருந்தாள்.

***********

வருவாள்…