megathootham7

                                           மேகதூதம் 7

 

 

ரிஷி கோவம், ஏமாற்றம், வெறுப்பு என பலவித உணர்வுகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தான். தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த கார் ஒன்றே இலக்கு என்பது போல அதனைப் பின்தொடர்ந்தான்.

“உன்ன பாக்காம இருந்தா கூட எப்படியோ போன்னு விட்டிருப்பேன் டி . என் பொறுமையே சோதிக்கவே என் கண்ணுல பட்டுட்ட.. இனி என்னால எப்படி சும்மா இருக்க முடியும்?” ஸ்டீரிங்கை பிடித்திருந்த கை இறுகிக் கொண்டே போனது.

ஒரு நீண்ட தெருவில் அந்தக் கார் செல்வதைக் கண்டான். அது ஒரு டெட் எண்டான ஏரியா. இதற்குள் தானும் சென்றால், தன்னை சுலபமாக அடையாளம் கண்டு கொண்டுவிட முடியும் என்று அந்தத் தெருவின் ஆரம்பத்தில் இருந்த ஒரு வீட்டின் வாயிலில் வண்டியை நிறுத்திக் கொண்டான்.

ராஜின் கார் அந்தத் தெரு வளையும் இடத்தில் காரைப் பார்க் செய்துவிட்டு இறங்கினான்.

கையில் அவன் கொடுத்த பைகளுடன், தன் லேப்டாப் பையையும் தோளில் மாட்டியபடி அஞ்சலி இறங்கினாள்.

“நீங்க கெளம்புங்க ராஜ். நான் பாத்துகறேன்.” புன்னைகையுடன் கூறினாள்.

அவள் பேசியது எதுவும் கேட்காவிட்டாலும் அவளது முக பாவனைகளை கவனித்துக் கொண்டு தான் இருந்தான் ரிஷி.

ராஜும் , “சாவி இருக்குல உங்ககிட்ட?” என்றான்.

“ம்ம்ம்.. இருக்கு. இந்த நீங்க வாங்கலாம் வேணாம். அஞ்சலின்னே சொல்லலாம்.” சிரித்தபடி கூற,

“ஓகே அஞ்சலி. ரெஸ்ட் எடுங்க” என்றுவிட்டு மீண்டும் தன் காரில் ஏறி அங்கிருந்து கிளம்பினான்.

அவன் செல்வதையும், அஞ்சலி வீட்டிற்குள் போவதையும் பார்த்துக் கொண்டிருந்தவன், சிறிது நேரம் தன் காருக்குள்ளேயே அமர்ந்திருந்தான்.

‘என்ன இருந்தாலும் இப்போது அவள் அடுத்தவன் மனைவி. அவளிடம் அநாகரீகமாக சென்று பேசுவது தவறு’ என மனம் கூறவே செய்தது.

‘இருந்தா என்ன! அவளை இனிமே நீ சேரவும் முடியாது. ஆனா உன்னை ஏமாத்தினதுக்கு நாலு வார்த்தை கேட்க வேண்டாமா!’ என்றும் கேட்டது.

அவளிடம் செல்லலாமா வேண்டாமா என்று யோசிக்கும் போதே அவன் கார் நிறுத்தி இருந்த வீட்டின் சொந்தக்காரன் வெளியே வந்து,

“கொஞ்சம் காரை எடுங்க, நான் என்னோட கார வெளில எடுக்கணும்” என ஆங்கிலத்தில் மொழிந்து விட்டுப் போனான்.

ஆகவே காரை எடுத்து, ரிவர்சில் செல்லாமல் அவளது வீட்டினை நோக்கியே சென்றான்.

‘சரி வாசல் வரை சென்று தான் பார்ப்போமே’ என்ற எண்ணமாகவும் இருக்கலாம்.

ஆனால் அவள் வீட்டை நெருங்கியதும் காரை நிறுத்திவிட்டான்.

மனம் துடித்தது.

‘இத்தனை நாள் எங்கிருக்கிறாள் என்று கூட தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போது! இதோ..பத்தடி தூரத்தில் அவள் வீட்டின் கதவு. இறங்கிச் செல்வதா வேண்டாமா என்ற குழப்பம்!

அவளுக்கு ஒருவேளை திருமணம் ஆகாமல் இருந்திருந்தால், இப்போது யோசிக்காமல் சென்றிருப்பான். நிலமை வேறாக இருக்கையில் தயக்கமும் அவனைத் தழுவியது.

“போலாமா வேணாமா ..போலாமா வேணாமா” வாய்க்குள்ளேயே முனகியவன், வண்டியை நிறுத்திவிட்டு காரை விட்டு இறங்கினான்.

தலையை கோதிவிட்டுக் கொண்டு சட்டையை சரி செய்து கொண்டு வீட்டின் வாசலில் வந்து நின்றுவிட்டான்.

ஒரு வித பதட்டம். இருந்தாலும் சற்று திடமாகவே கதவைத் தட்டினான்.

வாங்கி வந்த ஸ்நாக்ஸ் எல்லாம் கிட்சன் கௌன்டரில் வைத்துவிட்டு உடை மாற்றிக் கொண்டிருந்தாள் அஞ்சலி.கதவு தட்டும் சத்தம் கேட்டு ‘யாராக இருக்கும்’ என அவசரமாக ஒரு டிஷர்டும் லூஸ் பேண்டும் அணிந்து கொண்டு வருவதற்குள் மீண்டும் கதவைத் தட்டினான் ரிஷி.

“வரேன்..” என குரல் கொடுத்தபடி வந்தாள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளது குரலை மீண்டும் கேட்கிறான். நரம்புகளை சுண்டி இழுத்தது.

மெல்ல கதவைத் திறந்தாள்.  ‘அவன் தான்! அவனே தான்!!’

கதவைக் கூட முழுதாகத் திறக்கவில்லை. கண்களில் கண்ணீர் கோடுகள் வழியத் துவங்கியது அஞ்சலிக்கு.

கண்ணீரால் காட்சி மங்கி அவன் அவளது பார்வையில் இருந்து மறையும் சமயம் அதைத் துடைத்தாள்.

“சந்தோஷமா இருக்க போலிருக்கு?” அவனது முதல் கேள்வி.

அவன் என்ன கூற வருகிறான் என்று தெரிந்துகொள்ளாமல் அவளும் , “இப்போ தான் என் சந்தோஷமே எனக்குக் கிடச்ச மாதிரி இருக்கு.” அவனைத் தொட கை நீட்ட,

அவனோ அவளது பதிலை உதாசீனம் செய்து வீட்டினுள் நுழைந்தான்.

அவனது வீட்டைப் போலவே இதுவும் மூன்று அறை உள்ள வீடு என்பதைப் பார்த்ததும் புரிந்து கொண்டான்.

அவனது பார்வை அவளுக்கு ஏதோ முரானாக உள்ளது என்பதை உணர்த்தியது.

அவன் அலட்ச்சியமாக அங்கிருந்த குஷன் நாற்காலியில் அமர்ந்து அவளைப் பார்க்க,

“எப்படி இருக்கீங்க ரிஷி? உங்கள பார்க்காம நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா? எங்க இருந்தீங்க இத்தனை நாளா? என்னைப் பத்தி நீங்க யோசிக்கவே இல்லையா?” கண்களில் நீர் கோர்த்து நின்று அவனிடம் கேட்க,

“ஆமா நீ கஷ்டப் படரத தான் நான் பாத்தேனே! இந்தப் பேச்சுல ஒன்னும் கொறச்சல் இல்ல. உன்னைப் பத்தி நான் ஏன் நினைக்கணும்?” ஏளனப் புன்னைகை சிந்தினான்.

“என்னைப் பத்தி நீங்க நெனச்சு கூட பார்க்கலையா?” கோடாக கண்ணீர் வழிந்தது.

“ஒரு நாளைக்கு ஒரு பொண்ணோட இருக்கறேன். உன்னைப் பத்தி எப்படி நினைப்பு வரும்? தினம் தினம் மன்மதனா இருக்கேன். ” வேண்டுமென்றே அவளைக் கூறுபோட்டான்.

“ரிஷி!!” அவளால் ரிஷியை எந்தப் பெண்ணுடனும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

இத்தனை நாள் அவனைக் காணாமல் இருந்தபோது கூட , அவன் என்ன செய்கிறானோ என்று யோசித்திருக்கிறாளே தவிர அவனை ஒரு போதும் பெண்மோகம் கொண்டவனாக கனவிலும் நினைத்ததில்லை.

அவன் இப்போது கூறியது அவளைத் தீ குளிக்க வைத்தது.

“எஸ் நான் ரிஷி தான். ஆனா நாலு வருஷத்துக்கு முன்னாடி நீ பாத்த ரிஷி இல்லை. ஐ அம் டோட்டலி நியு.” எழுந்து நின்று கைகை அகல விரித்துக் காட்டினான்.

ரிஷியை ஏற இறங்கப் பார்த்தாள்.

முன்பு இருந்த ரிஷியிடம் எப்போதும் ஒரு சாந்தம் இருக்கும். ஆனால் இப்போது முற்றிலும் வேறுபட்டவனாகத் தெரிந்தான்.

உடலை முன்பை விட இப்போது இன்னும் மெருகேற்றி இருந்தான். கைகளில் நரம்புப் புடைத்து அவனது வெறித்தனமான வொர்க்அவுட்டை வெளிப்படுத்தியது.

கண்களில் மருந்துக்கும் காதல் இல்லை. திமிர்! அது மட்டுமே எஞ்சி இருந்தது.

இல்லையென்றால் தன்னிடமே வந்து ஒரு நாளைக்கு ஒருத்தியுடன் இருப்பதாகக் கூறுவானா!

அன்று அவளிடம் எத்தனை காதல் வசனங்கள்! அவர்களுக்குள் நடந்த அரங்கேற்றத்தை என்றென்றும் அவளால் மறக்க முடியாது. அது மனத்திரையில் இப்போதும் வந்தது.

“என் இதயத்தில் உன்னை தவிர யாருக்கும் இடமில்லை. இந்த இடத்தை யாரும் தொடக் கூட நான் விடமாட்டேன்.” அவளது கையை அவனது இதயத்தில் வைத்துக் கூறினான்.

ரிஷியின் இதயத்தில் இருந்த அவளது கை மெல்ல அவனது கழுத்தை வளைத்துக் கொண்டு, அவள் முகத்தை அவனது வெற்று மார்பில் பதித்தாள். மெல்லிதாக அங்கே இதழ் வைத்து அந்த இதயத்திடம் பேசினாள்.

“ இது என்னோட இடம். இங்க யாரும் வரக் கூடாது. எத்தனை நாள் ஆனாலும் நான் தான் ஓனர்.” முத்திரையைப் பதித்தாள்.

“நானும் இதே போல உன் இதயத்திடம் பேசனும் கொஞ்சம் நகரு” என அவளை தன்னிடமிருந்து விலக்க,

அவளோ கூச்சத்தில் போர்வையால் தன் உடலை மூடிக் கொண்டாள்.

“முடியாது. எல்லாம் நானே சொல்லிகறேன்.” சிணுங்கினாள்.

“உன்னால எப்படி சொல்ல முடியும்.”அவளிடம் குறும்பாகக் கேட்டு அவள் மீதிருந்த போர்வையை விலக்க முற்பட்டான்.

அந்த மெத்தையில் இருவருக்கும் காதல் போர் நடந்து, இறுதியில் ரிஷியின் எண்ணம் ஈடேறியது. அவள் இதயத்திடம் அவனும் பேசிய பிறகே அஞ்சலியை விடுவித்தான்.

“போடா நீ ரொம்ப மோசம்.” முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.இப்படி அன்பு பெருக்கெடுக்கும் போது மட்டும் அவனை டா போட்டு அழைப்பாள்.

குழந்தையாய் காட்சி தந்த காதலியை அருகே வந்து கட்டி அணைத்து சமாதானம் செய்தான்.

அதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்த அஞ்சலிக்கு, துக்கம் தொண்டையை அடைத்து அது விசும்பலாக வெளியே வந்தது.

அவள் மனதில் என்ன காட்சி ஓடியிருக்கும் என்பதை நன்றாகவே அறிவான் ரிஷி.

‘பின்னே! எனக்கு மட்டும் உன்னை வேறு ஒருத்தனோடு பார்க்கும் போது குளு குளுன்னு இருக்குமா. வலிக்கட்டும். எனக்கும் அதே வலி தான். உன்னை என் கண்ணுக்கு முன்னாடி உன் புருஷன்ங்கற உரிமையோட ஒருத்தன பார்க்கறப்ப எறியுது டி.’

மேலும் அவளை வதைக்க முடிவு செய்து,

“அன்னைக்கு முதல் முதல்லா உன்கூட .. உன்னைக் கெஞ்சினேன். கொஞ்சம் பிகு பண்ணி அப்புறம்  நீயும் சம்மதிச்ச. இப்போ நான் யார்கிட்டயும் கெஞ்சல. எல்லா பொண்ணுங்களும் என்னைத் தேடி வராங்க. லிட்டரல்லி ஓபன்னா கேட்கறாங்க. அது முடிஞ்சதும் பை சொல்லிட்டு போயிடறாங்க.

உன்னை மாதிரி லவ்ன்னு சொல்லி அலையவிட்டு அப்பறம் கழுத்தருக்கல.” கத்தியாய் அவளைக் கிழித்தான்.

“போதும் ரிஷி. அன்னைக்கு நீங்க …” அவள் ஆரம்பிக்க,

அவளை முடிக்கவிடாமல் தடுத்தான்.

“ அன்னைக்கு நான் தப்பு பண்ணிட்டேன். நீ ..” ஏதோ சொல்ல வந்தவன், உள்ளே இருந்த கோபம் வெளிப்பட்டு விடக் கூடாது என்று வாயை மூடிக் கொண்டான்.

“ நீயும் இப்போ இந்த லைஃப் ல ஹேப்பியா தான இருக்க.. கனடா வாழ்க்கை. ம்ம் குட்..” அவளுக்கு திருமணம் ஆனதை நினைத்து அவன் சொல்ல,

அவளோ இப்போது இருக்கும் ஆன்சைட்வேலையை சொல்கிறான் என நினைத்துக் கொண்டாள்.

இதற்கு மேல் அவனுக்கு தான் இத்தனை நாள் அவனுக்காக வாழ்ந்த தவ வாழ்வை சொல்லி என்ன தான் புண்ணியம் என்று , தன் தரப்பு வாதத்தை முன் வைக்காமல் மௌனம் காத்தாள். உண்மையில் அவளால் எதையும் பேச முடியவில்லை. ஓ வென்று கத்தி அழ வேண்டும் போல இருந்தது.

ரிஷியைக் கண்ட மகிழ்ச்சி அவளுக்கு பத்து நிமிடம் கூட நீடிக்கவில்லை. அவளது நான்கு வருட வாழ்வையும் நாலே வார்த்தையில் பொடிப் பொடியாக்கி விட்டான்.

ஆனால் அவன் கண் முன் இருப்பதைப் பார்த்து அவள் உள்ளம் துள்ளி குதித்துக் கொண்டு தான் இருந்தது.

ரிஷியும் அப்படியே உணர்ந்தான். தன் இதயத்தில் இன்றும் இருப்பவளை அவனால் அடியோடு ஒதுக்கி வைக்க முடியவில்லை. கண்களால் அவளைப் பருகாமல் இருக்க முடியவில்லை. இருப்பினும் அவள் அடுத்தவன் மனைவி என்ற எண்ணம் ஓட அது கொதிப்பாக மாறியது.

அவளின் மௌனத்தைக் கலைக்க,

“என்ன பேச மாடங்கற?”

“ஆங்… ம்ம் ஆமா நான் ஹேப்பியா இருக்கேன்!”

“உன்னை ரெஸ்டாரென்ட் ல பார்த்தேன். அதான் ஒரு ஹாய் சொல்லிட்டுப் போலான்னு வந்தேன். அப்படியே என்னை வேண்டான்னு சொன்ன உன்கிட்ட நான் இப்போ எவ்ளோ ஹேப்பியா இருக்கேன்னு சொல்லணும்ல. அதுவும் ஒரு காரணம்.” சொல்லிக்கொண்டே அவளை நெருங்கி வந்தான். அவளது கைகளைப் பற்றிக் அழுத்தினான்.

ரிஷியின் வார்த்தைகள் அவளது புருவத்தை சுருக்க வைத்தது. இதில் ஏதோ சிக்கல் இருப்பதாகத் தோன்றியது.

அவன் பிடித்ததில் கை சற்று வலித்தாலும் அதை மறந்து அவனிடம், “வெய்ட்.. நான் உங்கள வேண்டாம்னு சொன்னேனா? எப்போ?” சீரியஸ் ஆனாள்.

“போதும். திரும்ப அதைப் பத்தி பேசி என்னை மிருகமாக்காத.” சிங்கமாய் உறுமினான்.

அவனது கண்களில் கோபத்தை மீறிய வலியை அவள் கண்டுகொண்டாள்.

“ரிஷி. நான் பேசறத கொஞ்சம் கேளுங்க. ப்ளீஸ்..” அவனிடம் கெஞ்சலாகக் கேட்க,

“எந்த விளக்கமும் இனிமே நமக்குள்ள புது உறவை கொண்டு வரப் போறதில்ல. புரியுதா?” கோபமாகக் கத்தினான்.

அஞ்சலி என்ன செய்வதென்று புரியாமல் தவித்தாள். தன் மீது இப்படி ஒரு பழி வரக் காரணம் என்ன? நான் என்ன செய்தேன் எனக் குழம்பினாள்.

அந்த நேரம் அவனுக்கு ஒரு பெண் போன் செய்தாள். இது தான் சாக்கு என்று அஞ்சலியை வெறுப்பேற்ற அப்பெண்ணிடம் குழைந்தான்.

“ஹே டியர்! ஈவிநிங் உன்னை பப் ல மீட் பண்றேன்.”

“…”

“ஹே.. வி வில் ஹேங் அவுட். மை பிளேஸ்..சி யூ..” போனை வைத்தான்.

‘இவ்வளவு மோசமானவனாக மாறிவிட்டானா’ அஞ்சலியின் உள்ளம் துடித்தது.

அவளின் அந்த துடிப்பை ரசித்தவன்,

“பை” என ஒற்றை வார்த்தையில் விடை பெற்றான்.

அவன் செல்வதை வேதனையோடு பார்த்திருந்தாள் அஞ்சலி.