KarisalkattuPenne3
KarisalkattuPenne3
கரிசல் காட்டுப் பெண்ணே 3
தன்னுடைய கிராமத்திற்கு வந்த முதல் நாளே ஸ்ரீராமின் மனம் நிறைந்து போனது.
மரகதம் அத்தை, சங்கரன் மாமா இருவரையும் பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சியும், முன்பு போலவே தன்னை இன்னும் சிறுவனாகவே நினைத்து அவர்கள் அன்பு காட்டுவதும் அவனுக்குள் இனம்புரியாத நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இத்தனைக்கும் அவர்களுக்கும் இவனுக்கும் இரத்த உறவு கூட இல்லை. ஒரே ஊரினர் என்ற குடும்ப நட்பு மட்டுமே.
தன் பொறியாளர் பட்டத்தை, ‘கட்டடம் கட்டற படிப்பா?’ என சங்கரன் மாமா கேட்டதை நினைத்து அவன் தனக்கு தானே சிரித்துக் கொண்டான்.
அவர்கள் குடும்பத்தில் புதுமுகமாய் அறிமுகமான சக்திவேல் இயல்பாய் தன்னிடம் ஒட்டிக் கொண்டதும், தான் சொன்னதும் சிறிதும் தயங்காமல் பெயர்ச் சொல்லி அழைத்ததும் நினைவு வர, அச்சிறுவன் மீது ஒரே நாளில் இவனுக்கு பற்றுதல் உண்டாகி இருந்தது.
ஆனால் அவள்?!
இந்த ஊருக்குள் வந்தவுடன் தான் முதலில் சந்திக்க நேர்ந்தவள்! சின்ன கவனக்குறைவால் ஏற்பட்ட தவறுக்கு உடனே முகம் கடுத்து இவனை கடிந்தவள்! மாலையில் வெண்பட்டு உடுத்தி, கையில் வீணையேந்தி அமுத கானம் இசைத்தவள்! யார் அவள்?
இப்போதும் அவளின் இனிமையான குரல் அவன் செவிகளில் தேனிசை வார்ப்பதைப் போன்ற மாய உணர்வு ஏற்பட்டது அவனுக்கு.
எப்பொழுதும் படுக்கையில் விழுந்தவுடன் உறக்கம் வருமளவும் தன் அலைப்பேசியை நோண்டிக் கொண்டிருப்பது அவன் பழக்கம். ஆனால், இன்று வழக்கத்திற்கு மாறாக இன்று நடந்த அனைத்தையும் அசைப்போட்டப்படி கட்டிலில் படுத்துக் கிடந்தான் ஸ்ரீராம்.
‘சக்திவேலை தன் மகனென்று அறிமுகம் செய்த சங்கரன் மாமா, ஏன் தன் மகளை அப்படி அறிமுகம் செய்யவில்லை?’ என்று யோசனை ஓடியது.
‘ஒருவேளை எனக்கு அவளை முன்பே தெரியும் என்று நினைத்து இருப்பாரோ?’
உண்மையில் இவனுக்கு அவளை முன்பே தெரியும் தான். சிறு வயதில் அவளுடன் தானும் அண்ணனும் விளையாடியது அரைகுறையாய் அவன் நினைவில் பதிந்திருந்தது. ஆனால் அவள் பெயர்?
ஒரு பெண்ணை பற்றி தான் அனாவசியமாக ஆராய்வது புரிய, தன் தலையை லேசாய் தட்டிக் கொண்டான்.
ஒருவேளை அவள் பெயரை அவன் முழுவதும் மறந்துவிட்டிருந்தால் இவன் இத்தனை யோசித்திருக்க மாட்டான். அவளின் பெயர் அவன் தொண்டைக்குழியில் சிக்கிக்கொண்டு நின்றது. அவனுக்கு தெரிந்த பெயர் தான். ஆனால், அது வார்த்தைகளில் வெளிவர அவன் முயன்று யோசிக்கவேண்டியதாக இருந்தது.
ஸ்ரீராம் ஒன்றும் பெண்களைப் பற்றி இத்தனை அதிகம் சிந்திப்பவன் கிடையாது. பெண்களை எதிர்பாலினமாய் எண்ணி அவர்களை மாறுபட பார்ப்பவனும் இல்லை.
அவனுடைய தோழியர் வட்டம், தோழர்கள் வட்டத்தை விட பெரியது. பெண்களுடன் வெகு இயல்பாய் நட்பு பாராட்டும் குணம் தான் அவனுடையது.
‘ஹாய், ஹலோ’ என்று கைக்குலுக்கி ஒரு சின்ன ஹக்குடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் தோழியர் கூட்டம் தான் அவனுடையது. அவன் இதுவரை வாழ்ந்த, வளர்ந்த சூழ்நிலையும் அதுதான்.
எனினும் இந்த பட்டிக்காட்டு சூழ்நிலையில் அவனால் அப்படி எதிர்பார்க்க முடியாது என்பதை அவன் நன்றாகவே உணர்ந்து இருந்தான். அது தன் பால்ய வயது சிநேகிதியாய் இருந்தாலும் கூட.
இப்போது அவன் மனம் தன் கல்லூரி நாட்களை நோக்கி ஓடியது. சிறகில்லா பறவைகளாய், கனவுகள் விரித்து, சுமையேறா இதயங்களுடன் நண்பர்கள், தோழியரென கவலையென்ற சொல்லை துரத்திவிட்டு கொண்டாட்டமாய், உற்சாகமாய் கழித்த நாட்கள் அவை.
சட்டென அவன் மனதில் பாரம் அழுத்த, துன்ப மூச்செறிந்தான்.
இங்கு வந்த காரணத்தால் அவன் இழந்துவிட்ட ஒவ்வொன்றையும் அவன் மனம் ஏக்கமுடன் அசைப்போட்டது.
அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, அவனது அறை, நண்பர்கள், தோழியர், விளையாட்டு திடல், கஃபே, பார்ட்டி, பப், தன் மனம் போன போக்கில் எந்த கட்டுபாடுமின்றி அவன் ரசித்து அனுபவித்த வாழ்க்கையை வேறுவழியின்றி விட்டுவிட்டு இங்கு வந்து சேர்ந்திருக்கிறான்.
ஒருவேளை அப்பா தன்மீது முழு நம்பிக்கை வைத்திருந்தால், தனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்பதை எண்ணி சிறிது வருத்தமும் கொண்டான்.
.
.
.
“அப்பா, எனக்கொரு சான்ஸ் கொடுத்தாதானே நான் ஜெயிப்பேன்னு உங்களுக்கு நிரூபிச்சு காட்ட முடியும்” ஸ்ரீராமின் வார்த்தைகள் இப்போது வேகம் பிடித்திருந்தன.
எவ்வளவு நேரம் தான் அவரிடம் பொறுமையாக எடுத்து சொல்லிக் கொண்டிருப்பது? தன் நண்பர்களுடன் சேர்ந்து அவன் தொடங்க போகும் கட்டுமான தொழிலுக்காக அவனுக்கு பணம் தேவை. அதை அவர் தானே தந்தாக வேண்டும்.
ஆனால், பரமேஸ்வரன் நிதானம் இழக்காமல் பேசினார்.
“இந்த விசயம் தான் எனக்கு உறுத்தலா இருக்கு ஸ்ரீராம், உனக்கான வாய்ப்பை நான் ஏற்படுத்தி கொடுக்கணும்னு நினைக்கிறியே தவிர, அந்த வாய்ப்பை நீதான் ஏற்படுத்திக்கணும்கிற தன்னம்பிக்கை உன்கிட்ட இல்ல பார்த்தியா?” என்று வருத்தமாக சொன்னார்.
“வெறுங்கைய வச்சுக்கிட்டு எந்த பிஸ்னஸும் ஸ்டார்ட் பண்ண முடியாது ப்பா, அண்ணா கேட்டதும் மறுவார்த்தை பேசாம அவனுக்கு பணம் கொடுத்தீங்க இல்ல, நானும் உங்க பிள்ளை தானே ப்பா” ஸ்ரீராம் ஆதங்கமாகவே கேட்டு விட்டான்.
“ஜெய் விசயத்துல நான் செஞ்ச அதே தப்பை மறுபடியும் உன் விசயத்தில் செய்ய விரும்பல, மறுவார்த்தை கேக்காம பணத்தை அள்ளி கொடுத்ததால தான் அவனுக்கு பணத்தோட அருமையும் உழைப்போட பெருமையும் தெரியல, இப்ப நஷ்டத்துல வந்து நிக்கிறான்” என்று அவர் கவலையோடு பேசி கொண்டிருக்கும் போதே, ஜெயராம் வேகமாக அறைக்குள் வந்தான்.
“அப்பா, வியாபாரத்தில லாப, நஷ்டமெல்லாம் சகஜம். ரெண்டு வருசமா நல்லாதான போயிட்டு இருந்தது, இப்ப எதிர்பாராம ஏற்பட்ட நஷ்டத்துக்கு நீங்க என்னை குறை சொல்வீங்களா? அதுவும் இவன் முன்னாடி” என்று தம்பியை கைக்காட்டி படபடத்தான் ஜெயராம்.
“உன்ன குறை சொல்லணும்னு எனக்கு எண்ணமில்ல ஜெய், உன் தம்பியும் உன்னமாதிரி ஏமாந்து வந்து நிக்க கூடாதுன்னு அவனை எச்சரிக்க நினைச்சேன் அவ்வளவு தான்” பரமேஸ்வரனின் பதில் திடமாக வந்தது.
“இந்த நஷ்டத்தால நான் இன்னும் ஒடஞ்சு போகல ப்பா, நான் கேட்ட தொகையை நீங்க கொடுத்தா போதும், முன்னைவிட ரெண்டு மடங்கு லாபத்தோட என்னால தொழிலை தூக்கி நிறுத்த முடியும்” ஜெயராம் உறுதியாக பேச,
“இதை தான் தப்புன்னு சொல்றேன். உன் கவனக்குறைவால உன் தொழில்ல ஏற்பட்ட நஷ்டத்தை நீதான் ஈடு கட்டணும். இப்படி மறுபடியும் மறுபடியும் என்கிட்ட வந்து கையேந்தி நிக்க கூடாது” அவர் சற்று காரமாகவே சொன்னார்.
“உங்ககிட்ட கையேந்தி நிக்கணும்னு எந்த அவசியமும் எனக்கு இல்ல ப்பா, உங்களால பணம் தர முடியலன்னா, கிராமத்தில சும்மா கிடக்கிற நம்ம வீட்டை வித்து எங்க பங்கை பிரிச்சு கொடுங்க” என்று ஜெயராம் ஆத்திரத்தில் முடிவாக கேட்க, ஸ்ரீராமிற்கும் அது சரியான தீர்வு என்று தான் தோன்றியது. இவனுக்கும் தொழில் தொடங்க கணிசமான தொகை கிடைக்கும்.
“ஜெய் சொல்றதும் சரிதான ப்பா, அந்த வீடு சும்மா தான கிடக்கு, அதை நாம வித்தா…” என்று அண்ணனுக்கு ஆமோதிப்பாக பேசியவன் தந்தையின் முகம் மாறுவதைக் கவனித்து தயங்கி நிறுத்தினான்.
“ரொம்ப நல்லாயிருக்கு, உங்க ரெண்டு பேரையும் பிள்ளையா பெத்ததுக்கு இப்ப தான் ரொம்ப சந்தோசப்படுறேன்! உங்களுக்கு எல்லாத்தையும் விட பணம் பெருசா போச்சில்ல. நல்லவேளை, நான் சொந்த கிராமத்திலயே முடங்கி கிடக்காம தொழில் செய்யணும்னு இங்க வந்து ஓரளவு வசதியாவும் வாழ்ந்திட்டு இருக்கேன். அப்படி இல்லனா, கையாலாகாத அப்பன்னு என்னையும் தூக்கி எறிஞ்சிருப்பீங்க இல்ல.”
பரமேஸ்வரனின் பொறுமை கடந்து போக, ஆதங்கமாக பேசிக்கொண்டு போனார்.
“உங்களை சொல்லி குத்தமில்ல, இப்ப காலம் போற போக்கு அப்படி. பணத்துக்கு முன்னாடி பெத்தவங்களே ரெண்டாம் பட்சமாகிப் போகும் போது, பூர்வீக வீடு என்ன பெருசு? சீக்கிரம் அந்த வீட்டை விற்க ஏற்பாடு பண்ணி தொலைக்கிறேன்” என்று வெறுப்புடன் சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டார்.
அறையில் நின்றிருந்த சகோதரர்களிடையே சங்கடமான அமைதி நிலவியது.
சிறிதுநேர திகைப்பிற்கு பின், ஜெயராம் ஆசுவாச மூச்சுடன் வெளியேற, ஸ்ரீராம் தலையைப் பிடித்தபடி அருகிருந்த குஷன் பந்தின் மீது தொப்பென அமர்ந்து விட்டான்.
எவ்வளவு தான் முயன்றும் அப்பா தன்னை பணத்திற்காக அலைபவன் என்று குத்திக்காட்டி பேசியதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.
எப்படியும் அவர் அரை மனதோடு பணம் தருவதில் இவனுக்கு சிறிதும் உடன்பாடில்லை.
இந்த பிரச்சனை பற்றி யோசித்து யோசித்து அவனுக்கு இறுதியாக தொன்றியது இந்த யோசனை தான்.
தன் தொழில் திறமையைத் தந்தையிடம் நிரூபிக்க இதைவிட வேறு வழியில்லை என்ற முடிவோடு அவரிடம் பேசினான்.
ஸ்ரீராம் சொல்வது சாத்தியமா என்று தான் பரமேஸ்வரன் முதலில் யோசித்தார்.
பூர்வீக வீட்டை விற்பதற்கு பதிலாக அதனை புதுப்பித்துக் கட்டலாம் என்ற மகனின் முடிவு அவருக்கு சரியெனப்பட்டது. அந்த வீட்டிற்கும் அவருக்குமான பந்தம் வேருக்கும் கிளைக்குமான உறவல்லவா!
அதோடு அதில் தன் திறமையையும் நிரூபித்து காட்டுவதாக மகன் உறுதிகூற, அவருக்கு ஓரளவு மனசாந்தியையும் அளித்தது.
அவரிடம் பணத்திற்கு அத்தனை குறைவில்லை என்றாலும், தன் பிள்ளைகள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று விரும்பினார்.
விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக கொண்ட தன் கிராமத்திலிருந்து வெளியேறி, நிலபுலன்களை விற்று, தனக்கான தொழிலை ஆரம்பித்து, அதன் லாப, நஷ்டங்களை கடந்து அதில் நிலைத்தும் நிற்கிறார்.
அத்தகைய தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் துணிச்சலையும் ஜெயராமிடம் எதிர்பார்த்து அவர் ஏமாந்து தான் போனார். தொழிலில் ஆர்வம் இருக்கும் அளவுக்கு திறமை போதவில்லை பெரியவனுக்கு. சிறு சறுக்கலையும் பெரிதாக்கி விட்டு இவர்முன் அடிக்கடி வந்து நிற்க, இம்முறை அவனே முயன்று மேலே வந்து கற்றுக் கொள்ளட்டும் என்று அழுத்தமாக தன் மறுப்பை சொல்லிவிட்டிருந்தார்.
அதானாலேயே சின்னவன் விசயத்தில் அவனது தனித்தன்மையை நிரூபிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கிராமத்து வீட்டை சீர்ப்படுத்தித் தங்களின் இறுதி காலத்தை அங்கே கழிக்க வேண்டும் என்ற எண்ணம் இவருக்கும் இருந்ததால், ஸ்ரீராம் முடிவுக்கு சம்மதத்துடன் அனுமதியும் அளித்தார்.
.
.
.
ஸ்ரீராம் படுக்கையிலிருந்து எழுந்து சன்னலருகே வந்து நின்றான். இரவின் குளுமையான தென்றல் அவன் முகத்தை வருடி இதம் தருவதாய்.
அவன் கண் முன்னால் காட்சியான வீட்டு தோட்டத்தின் இயற்கை பேரழகு அவன் மனதை லேசாக்குவதாய்.
தான் அமைக்கவிருக்கும் புது வீடு பார்ப்பவரை எல்லாம் வியக்க வைப்பதாய் இருக்க வேண்டும்! தன் அப்பாவை மலைக்கச் செய்வதாக இருக்க வேண்டுமென்று மனதில் உரமேற்றிக் கொண்டான்.
# # #
வருவாள்…