mm1

மகிழம்பூ மனம்

மனம்-1

பூட்டிய இருவேறு அறைகளுக்குள், மனங்களைப் பூட்டிய மணமான இருவர்.

ஆளுக்கொரு திசையில் இருந்த அறைகளுக்குள் இருவரும் நித்திரையை குத்தகைக்கு எடுத்திருந்தனர்.

அடுக்களையை ஒட்டியிருந்த அறைக்குள், தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள் பெண்.

புதுமஞ்சளின் பொலிவு மாறாது, பளிச்சென்று, கழுத்தில் தெரியும் புதிய தாலிச்சரடு, அதனால் வந்திருந்த வசீகரிக்கும் அவளின் தோற்றம் சொல்லியது…! சமீபத்தில் மணமானவளென்று…!

பூமித்தாய்.. நேரடியாகத் தனது மடியில் துயில் கொண்டிருந்தவளை… பூப்பல்லக்கில் தனது கரங்களால் தாங்கியது போல இருமாந்திருந்தாள்.

இரவின் மீது ஆதிக்கம் செலுத்திய அழகுடன்… உறக்கத்திலும், வசியத்துடன் இருந்தாள்.

பத்து நிமிடங்கள் அருகில் இருந்தால், பண்பையும் பாசத்தையும் காட்டி, இன்பத்தையும் மகிழ்ச்சியையும் வாரி இறைக்கும், நேசமலை, பாச வள்ளல், அவள்!

பழகுபவர்களின் இதயங்களை அவளறியாமல் மயங்கச் செய்யும் தேனிசை செந்தேன் குரலாள்.

இளங்கலையில் ஆங்கிலம் பயின்று, சென்னைப் பல்கலைக் கழகத்தில் தங்க மெடல் வாங்கிய அகம்பாவம் அல்லாத தாரகை.

காதலையும், காமத்தையும் இயல்பாக, விகற்பமில்லாது இலகுவாக எடுத்துக் கொள்ளும்… மேலைநாட்டு நாகரிகத்தையும், நளினத்தையும், அவர்களின் மொழியோடு, விரசமின்றிப் பயின்றவள்!

ரோமியோ சூலியட்டையும், ஷேக்ஸ்பியரையும் தனது ஆர்வத்தாலும், நடிப்பாலும், படிப்பாலும், மதிப்பெண்களால் அலங்கரித்தவள்!

இருபத்தியோரு வயது நிரம்பிய, ஆயிரம், அழகிய கிளியோபாட்ராக்களின் அழகை ஒருங்கே கொண்ட பிரபஞ்சத்தின் அரிய வார்ப்பு!!!

இலகுவாக எதையும் எதிர்கொள்ளும் திறனைக் கொடுத்த உயர்நிலைக் கல்வி, அவளைத் தயங்க விடாது முன்னேறச் செய்திருந்தது.

பிறந்தது கிராமமாயினும், கற்ற உயர்நிலைக் கல்வி தந்த உத்வேகம், ஊக்கம், தயக்கமின்றி யாருடனும் தேவையின் நிமித்தமாக, இலகுவாக உரையாடக் கற்றுத் தந்திருந்தது.

எதற்காகவும் பிறரை அண்டித் தனது தேவைகளை நிறைவேற்ற இயலாதவளாக இல்லாமல், தனது தேவைகளுக்காக தன்முனைப்பின்றி, தானாகச் சென்று பேசிவிடும் காரியவாதியவள்.

நான்கு வார்த்தைகள் தானாகச் சென்று, கணவனுடன் தனது தேவைகளுக்காக பேசினாலும், ஒரு வார்த்தை தன்னிடம் பதில் பேசத் தயங்கும் மனிதன், அவளுக்கு வரனாக வாய்த்து, திருமணமும் செய்து கொண்டிருக்கிறாள்.

திருமணமாகி வந்த நாள் முதலாய்… அவளுக்குப் புரியாத புதிராய் அவளது கணவன் இருக்கிறான். தான் விபரமறிந்த நாள் முதலாய் நேரில் கண்ட, பழகிய ஆண் மகன்களில் பெரிதும் வித்தியாசப்பட்டு, அவளின் சிந்தை முழுமையிலும் தர்க்கமாகத் தெரிகிறான்.

ஆரம்பத்தில், புதுமணத் தம்பதியரின் இல்வாழ்க்கை பற்றிய இயல்பினை முழுமையாக அறியாதவள். ஆதலால், கணவனின் நடவடிக்கையை, தங்களுக்கு இடையிலான இடைவெளியினைப் பெரிதாகக் கருதவில்லை.

பிறரின் குற்றம் கண்டு, குரூர திருப்தி காணும் பழக்கமில்லாதவள். ஆகையால், கணவனின் நடவடிக்கையில் குற்றம் காணத் தவறியிருந்தாள். எதையும் நேர்மறையாக எண்ணுபவளாகையால் தன் போக்கில் தனது பணிகளில் மனம் செலுத்தியிருந்தாள்.

புரிதல் தம்பதியரிடையே தந்தியடிக்க, தனக்காகவும், குடும்பத் தேவைகளுக்காகவும் வேண்டி, தானாகவே வலியச் சென்று கணவனிடம் தன்முனைப்பைத் தவறவிட்டவளாக தடையின்றிப் பேசினாள்.

அதில் அவளுக்கு கடுகளவும் மனவருத்தம் இல்லை. அவன் பேசினால் பேசட்டும். இல்லையென்றால் போகட்டும் என்றிருந்தாள்.

நாணம் வதனத்தில் ஏற, நாதன் துணை வேண்டியிருக்க, அவள் கணவன் தன் மனையாளை ஏறிட்டுக் காணவே காலம் தாழ்த்தியிருக்க… அவளின் நாணம் நாணி வெளிவரத் தயங்கி, அவளின் பெண்மையோடு ஒழிந்து கொண்டிருந்தது.

தனது குடும்பச் சூழல் காரணமாகவும், தன்னுடன் பிறந்த அடுத்தடுத்த சகோதரிகளின் எதிர்காலம் கருதியும், தன்சார்ந்த முடிவுகளை தன்னிச்சையாக எடுத்தோம், கவிழ்த்தோம் என்ற நிலையில் எடுக்க முடியாத, குடும்பப் பின்னனியில் பிறந்து வளர்ந்தவள்.

ஏட்டுக் கல்வியை விட, தினசரிக்கு திக்கு தெரிந்து நடக்க… ஏதுவான வாழ்க்கைக் கல்வியின் தத்துவம் புரிந்தவள்.

பள்ளிப் பருவத்திலேயே சொல்யுத்தம் பழகிய சுந்தரி. அவள்… யாழினி!!!
*****
காலையில் எழுந்து தேனீர் தயாரித்துவிட்டு, அடுத்தடுத்து பணிகளில் தன்னை மும்முரமாக ஈடுபடுத்தியிருந்தாள், யாழினி.

கணவன் எழுந்து பல்துலக்கி வந்ததை அறிந்தபின், அவனிருப்பிடம் தேடி வந்து தேனீரைக் கொடுத்தாள்.

பேப்பருக்குள் தனது முகத்தை மறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவனுக்கு முன்பு இருந்த டேபிளில், டீ டம்ளரை சற்று சத்தம் வரும்படி வைத்துவிட்டு பெரும்பாலும் நகர்ந்து விடுவாள்.

சில நேரங்களில் “இந்தாங்க டீ”, என்று கூறிவிட்டு வைப்பாள்.

“உங்களத்தான்….”, எனக் கூறி சற்றி நிறுத்தியவள், கணவனின் கவனிப்பிற்குள் வந்த அவனது முகபாவத்தை உணர்ந்தவளாக, “இன்னிக்கு கொஞ்சம் சாமானெல்லாம் வாங்கணும், நீங்க வரும்போது வாங்கிட்டு வந்திரீங்களா? இல்லை நானே போயி வாங்கிக்கவா?”, யாழினி.

மனைவியின் பேச்சைக் கேட்டு தனது அறைக்குள் சென்று, முந்தைய நாள் போட்டுக் கழட்டியிருந்த சட்டையுடன் ஹாலுக்கு வந்தவன், மனைவியின் கண்ணில்படும் இடத்தில் நான்கு ஐநூறு ரூபாய்களை வைத்தான். நோட்டுகள் பறக்காமல் இருக்க தொலைக்காட்சியின் மேல் இருந்த ரிமோட்டை எடுத்து அதன்மேல் வைத்துவிட்டு அங்கிருந்து சென்றிருந்தான்.

இன்றைய அவளின் கேள்விக்கான, அவளது கணவனின் அதிகபட்ச பதில் கூறும் முறை இதுவே.

திருமணம் முடிந்து வந்தது முதலே கணவன் இவ்வாறு நடந்து கொள்வதால், முதலில் வித்தியாசமாகப்பட்ட விடயங்கள், தற்போது மனதை உறுத்தினாலும், தனது குடும்ப சூழல் கருதி அமைதியாகவே இருந்தாள் யாழினி.
குளிக்கச் சென்றவனுக்கு, உள்ளமெங்கும் வருத்தம் வியாபித்து இருந்தது. அழகியல்ல தனது மனைவி. பேரழகி. ஆனாலும், மனம் அவளை நாட மறுக்கிறது.

முயன்று தோற்றுப் போகிறான். கடந்த ஒரு மாதமாக மனதோடும், உறவுகளோடும் இயல்பாக இருக்க, முயன்றும் தோற்றுப்போன மனநிலையுடன் குளிக்கக் கிளம்பினான்.

ஒவ்வொரு குளியலின்போது, மன அழுக்கு தீர எண்ணியவன்போல பழைய எண்ணங்களை களைய முயன்று தோற்கிறான்.

மனைவியின் மேல் மரியாதை உண்டான அளவு, மோகம் உண்டாகாமல், தான் தயங்கி நிற்பது, அவளால்தான் என்று மனம் உறுதியாக நம்புகிறது.

தன் மனைவிக்கு நிகரான அழகில்லாதவளின்மேல், தனக்கு உண்டான மோகமும், தாபமும் மனைவியின் மீது உண்டாகாதது, அவனை குழப்பத்தில் கொண்டு வந்து தள்ளியிருந்தது.

மனக்குழப்பம் தீர, அலுவலகம் செல்வதாக பெயர் செய்து, வழமைபோல கிளம்பத் தயாராகிறான்.

குளித்துவிட்டு, உடைமாற்றி வந்தவனுக்கு காலை உணவை எடுத்து, டைனிக் டேபிளில் வைத்துவிட்டு அடுத்த வேலையை கவனிக்கச் சென்றாள் யாழினி.

யாழினியை சாதாரணமாக ஏறிட்டுப் பார்க்கவும், மனம் கூசுவதால் அவளின் முகம் பார்த்துப் பேசத் தயக்கம் வந்து பசைபோல ஒட்டிக்கொள்கிறது.

அவள் நின்று பரிமாறினால் நான்கு இட்லி சாப்பிடும் இடத்தில், இரண்டு இட்லிகளை மட்டுமே மிகவும் தாமதமாகச் சாப்பிட்டு எழும் கணவனைக் கண்டு, தானாகவே அவனின் செயல் புரிந்து நகர்ந்து செல்லத் துவங்கியிருந்தாள்.

யாழினி அருகில் வந்து நின்றால், அவனால் இயல்பாக இருக்க இயலவில்லை. எல்லாம் குற்றவுணர்வுதான் காரணம். தனது பூசைக்குரிய மலரை பயன்படுத்த, ஒவ்வாத மனதை, ஒதுக்க தைரியம் வராதவன்.

முதன் முதலில் கணவனின் இத்தகைய செயலைக் கண்டவள், ‘அடக் கடவுளே, எனக்கு பயந்துகிட்டு ஒழுங்கா கூட சாப்பிடாம போயிட்டாரா? இந்த மனுசன்! நானென்ன காட்டுல தெரியிற சிங்கமா, இல்லை புலியா? என்னையப் பாத்து ஏன் பயப்படணும் இல்லைனா சங்கோஜப்படனும்?’, என்று எண்ணியபடியே கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்தாள்.

கண்ணாடி பொய்யுரைக்கவில்லை. ஆனாலும் தன்னை எண்ணி தன்மீதே கழிவிரக்கம் யாழினிக்கு உண்டானது.

தனக்கே தன்மீது ஆசை வரும் அளவிற்கு அழகாக இருப்பதாகத் தோன்றியது. இருப்பினும் கணவனின் செயல் எதனால் இப்படி? என்று யோசித்து ஒரு முடிவுக்கு வர இயலாமல் தவித்தாள்.

‘ஒரு வேளை நான் அவரப் பாத்திட்டே பக்கத்துல நின்னதால சாப்பிடக் கூச்சமா? எங்கிட்ட என்னத்துக்கு இவருக்கு கூச்சம்? ஒன்னுமே புரியலயே எனக்கு. அவரப் பாத்து நாங்கூச்சப்பட்டா அது நார்மல். இது என்னனு தெரியலயே!’, என்று அன்று முழுவதும் தனக்குள் புலம்பித் தீர்த்திருந்தாள் பெண்.

மதிய ஆகாரத்தை அதற்கான பாத்திரங்களில் வைத்து, லன்ச் பேக்கை ஹாலில் கொண்டு வந்து வைத்தவள், “நான் சாயந்திரம் போலத்தான் கடைக்குப் போயி சாமானெல்லாம் வாங்கணும், நீங்க ஒரு சாவி கைல வச்சிருக்கீங்க தானே? இல்லைனா போகும்போது மறக்காம எடுத்திட்டுப் போயிருங்க”, என்று கேட்டபடியே கணவனைக் கவனித்தாள்.

யாழினி நேரில் நின்று கேட்பதற்கு, வேறு எங்காவது பார்த்துக் கொண்டு ஆம், இல்லை அல்லது தலையசைப்பு என்ற அதிகபட்ச அளவு பேச்சு மட்டுமே இதுவரை அவனிடமிருந்து.

‘இதுக்கு நான் என்னனு எடுத்துக்கணும்னு தெரியலயே, ஆண்டவா… ஆட்டுரல்ல மாவாட்டற மாதிரி தலைய சுத்துனா நான் என்னானு எடுத்துக்கணும்?’, என்று மனதிற்குள் கேட்டபடியே அங்கிருந்து சென்றிருந்தாள்.

காலை உணவை உண்டு கொண்டிருந்தவன், குனிந்த தலை நிமிராமலே ஒருவாராக தலையை ஆட்டி ஆமோதித்திருந்தான்.

‘நல்லா சமைக்கிறா. நல்ல பொண்ணா இருக்கிறா. ஆனாலும் இவக்கிட்ட மனசு போகமாட்டுதே? இன்னிக்கு சாயந்திரத்துக்குள்ள இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்’, என்ற நினைப்போடு உண்டு முடித்திருந்தான்.

‘என்னயா மனுசன் இவன்!

ஒருவேளை பாதி நேரம் ஊமையோ இல்ல மௌனச் சாமியாரா? மத்தவங்ககிட்ட எல்லாம் கமுக்கமா பேசத்தான செய்றாப்புல. நம்மகிட்ட மட்டும் ஏன் இந்தத் தயக்கம்?

இந்தக் காலத்துலயும் பொண்டாட்டி முகம் பாத்து பேச யோசிக்கற மாதிரி இப்டி ஒரு அடக்க ஒடுக்கமானவனா? இல்லை இவன் ஒரு தனிப்பிறவியா?

ஒரு நாள் ரெண்டு நாள் ஏதோ தயக்கம்னு நினைக்கலாம். கல்யாணமாகியே மாசம் ஒன்னாகப் போகுது.

வேறு எதாவது உடம்புல பிரச்சனையோ? அதான் ஆஃப் ஆகித் திரியறாப்புலயோ?

கடவுளே! இப்டியே இருந்தா என் வாழ்க்கை என்னத்துக்கு ஆகறது?

மலர்ந்தும் மலராத பாதி மலர்போல என் வாழ்க்கை பாதியோட முடிஞ்சிரும் போலயே!

அடுத்த தடவை அம்மா வரும்போது… அவங்க காதுல இந்த விசயத்தை சாதூர்யமா போட்டு வைக்கனும். இவரு நார்மலா மாறினா சரி. இல்லைனா இதுவே பின்னாடி எதாவது பிரச்சனையின்னு வந்தா… பெரியவங்களுக்கும் மனவருத்தம்தான். அவங்களே கூடிப்பேசி இதுக்கு ஒரு நல்ல முடிவா எடுத்துக்கட்டும்’, என்று மனதில் பலதையும் நினைத்தவளாக சமையலறைக்குள் சென்று தன்னுடைய விட்டுப்போன பணிகளைக் கவனிக்கத் துவங்கியிருந்தாள், யாழினி.

மாலையில் அனைத்து வீட்டு வேலைகளையும் முடித்து வெளியே சென்றாள்.

வீட்டிற்குத் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு, சிட்டி பஸ்ஸில் ஏறி வீடு திரும்புவதற்கு ஏழரை மணிக்கும் மேலாகியிருந்தது.

அதுவரையில் கணவன் வீட்டிற்கு வராதது மனதை உறுத்த நேரம் பார்த்தாள்.

இன்னும் ஒரு மணித் தியாலம் அவன் வருவதற்கு இருக்க, இரவு உணவிற்காக அடுக்களைக்குள் நுழைந்து நிதானமாக தனது பணிகளை கவனிக்கத் துவங்கினாள்.

வயதிற்குரிய எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள் இருந்தாலும், பொறுமையோடு தனது கணவனின் மனமாற்றத்திற்கான நாளை எண்ணி, எதிர்பார்ப்போடு காத்திருக்கிறாள்.

அணுக்கம் இல்லாது, பூனை நடையில் வீட்டிற்குள் வந்தவன் அறைக்குள் நுழைந்து கொண்டு வெளிவர அரைமணித் தியாலம் எடுத்துக் கொண்டிருந்தான்.

‘தனியா அப்டி ரூமுக்குள்ள என்னதான் செய்வாரோ’, என எண்ணியபடியே அறையிலிருந்து தன்னவன் வெளிவரக் காத்திருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பொறுமை போயிருக்க அறைக் கதவைத் தட்டி, “சாப்பாடு எடுத்து வச்சிட்டேன். எப்போ வந்து சாப்பிடறீங்களோ வந்து சாப்பிடுங்க”, என்று குரல் கொடுத்தவள், அடுக்களைக்குள் நுழைந்து கொண்டாள்.

வழமைபோல டைனிங் டேபிளில் யாழினி எடுத்து வைத்ததை உண்டவன், ‘அருமையான சாப்பாடு… முடிஞ்ச வரையிலும் அவளுக்கு இதுல இருந்து சீக்கிரமா விடுதலை கொடுத்திரனும்’, என்ற எண்ணத்தோடு, கைகழுவி எழுந்தவன், சற்று நேரம் தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருந்தான்.

யாழினி அவள் பணிகளை முடித்துக் கொண்டு வரும்வரை ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தபடியே தொலைக்காட்சியில் மனம் பதித்திருந்தான்.

வந்த இந்த ஒரு மாதத்தில் தன்னை நேருக்கு நேராகவோ, இல்லை யாரும் பார்க்காத நேரங்களிலோ பார்க்க எண்ணாத தன் கணவனை, ஆராய்ச்சிப் பார்வை பார்த்தபடியே அவளிருக்கும் அறைக்குள் சென்று முடங்கியிருந்தாள்.
========
மனைவி என்ன செய்கிறாள் என்பதை பார்க்க எண்ணாதவன், உறக்கம் வரும் சமயம் அவனது அறைக்குள் சென்றிருந்தான்.

ராஜகுமாரனுக்குரிய அத்துணை அம்சங்களும் பொருந்தியவன். உறக்கத்திலும்… சிந்தனை முகத்துடன் இறுக்கமாக, படுக்கையில் பதவிசாகத் துயில் கொள்ளும் ஐந்தே முக்கால் அடி ஆணழகன்.

யாழினியின் மணவாளன்!!!

பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணியில் இருந்தவன், பெற்றோரின் வற்புறுத்தலால்… ஓராண்டிற்கு முன்பாக மாற்றல் வாங்கி சென்னை வந்திருந்தான். அவன் தேவேந்திரன்.

யாழினியை கண் கொண்டும் ஏறெடுத்துப் பாராமல், எதையும் பொருட்படுத்தாமல், தானுண்டு தன் அலுவலக வேலையுண்டு என இருக்கும் கர்ம தீரன்.

யாழினியின் பொன் கழுத்தில், தாலிகட்டி… அதன்பின் தன் கடமை, பொறுப்பு ஏற்க மறந்து, துறந்த, வித்தியாசமானவன்.

குணம் குறைந்தவன்! குடும்ப வாழ்க்கைக்குரிய ஞானம் கற்க மறந்தவன்!

யாழினியின் மனம் ஆளத் தவறியவன்!

வீட்டில் அனைவருக்கும் தேவா. நண்பர்கள் சிலருக்கு வேந்தா.

இருவருக்கும் பெற்றோர்கள் பார்த்து முறையாக திருமணம் செய்து வைத்து… இன்னும் ஒரு வாரத்தில் ஒரு மாதம் நிறைவுறப் போகிறது.

நாட்கள்… ராக்கெட் வேகத்தில் சென்றிருக்க, பருவத் தேவைக்காகக்கூட மனதால் மனையாளை நெருங்க… மனம் இல்லாத… மனம் நொறுங்கிய மனத்தான்…!

தன்மனை நோக்கத் தவறியவன்!

பிறவித் தயக்கத்தால், மனம் குழப்பத்தால்… சீரிய சிந்தனை குறைவுற்றிருந்தது!

உருவத்தில் இருக்கும் கம்பீரம் செயலில் இல்லாதவன். தனது தேவைகளை நிவர்த்தி செய்யவும், பெற்றோரை மறுத்தோ, எதிர்த்தோ பேசும் துணிச்சல் இருபத்து எட்டு வயது வரை இல்லாதவன்.

தயக்கம், தாழ்வு மனப்பான்மை இரண்டின் தயாளன்!

தனக்கென்று ஒரு வட்டம் வரைந்து அதற்குள் மட்டுமே பிரயாணிப்பவன். அதிகமாக எப்பொழுதும் பேசாததால் அவனின் இயல்பு என எதையும் குடும்பத்தார் கண்டுகொள்ளவில்லை.

அதையே தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, தன்னை நம்பி வந்தவளையும் ஏறிட்டும் பார்க்காமல் இருப்பதோடு, தனது பொறுப்புகளை மனம் ஏற்க நினைத்தாலும், மனம் முரண்டியதால் தட்டிக் கழித்து வாழ்பவன்.

தான், தனது என்ற ஒரு வட்டத்தை விட்டு வெளியே வரத் திராணியில்லாதவன்.

திருமணம் பேசியது முதல், திருமணத்தை நிறுத்த எண்ணி மேற்கொண்ட அவனின் அத்துணை முயற்சிகளும், அவனின் இயல்பான தயக்கத்தால் எல்லா விசயங்களிலும் தோல்வியைத் தழுவி, மனமுடைந்தவன்.

திருமணத்திற்குப் பிறகு இனி என்ன செய்யலாம் என்று யோசித்து, யோசித்து தனது வேலை நேரம் போக, மற்ற நேரங்களை வீணாக்கி, இன்று அலுவலுக்கு விடுப்பு எடுத்து ஒரு முடிவை எடுத்து அதனைச் செயல்படுத்த எண்ணியிருப்பவன்.

அலுவலகத்திலும் யாருடனும் கலகலப்பாக பழகும் குணம் இல்லாதவன். அவசியத்திற்காக வேண்டி அவசியமான பொழுதுகளில் என்ன? ஏன்? என யாரேனும் கேள்வி எழுப்பினால் இயன்ற பதிலைக் கூற முயல்பவன்.

கொடுத்த பணிகளை திறம்படச் செய்வதால், இன்று வரை எந்த ரிமார்க்கும் இல்லாத திறமையான புராஜெக்ட் மேனேஜர்.

தனது அலுவலகத்தில் இருந்து, அதன் ஹைதராபாத் கிளைக்கு மாற்றல் வேண்டி விண்ணப்பிக்க எண்ணிய தீர்க்கமான முடிவோடு, பெற்றோர், உடன் பிறந்தார் மற்றும் சமீப காலத்தில் அவனது இல்வாழ்க்கையில் நுழைந்திருந்த மனைவி யாருக்கும் தெரியாமல், கமுக்கமாகக் காத்திருப்பவன்.

தேவாவின் காத்திருப்பிற்கான காரணத்தை, அவனின் மனரகசியத்தை அறியக் காத்திருங்கள் அடுத்த அத்தியாயம் வரை….
//////