Kathiruntha kathaladi 8

8

ஆருஷ் பரபரப்பாக வகுப்பறையில் அமர்ந்திருந்தான். இன்று ஆருஷின் பிறந்தநாள். தாய் தந்தை இறப்புக்குப் பின் பிறந்தநாள் கொண்டாடுவதை விட்டுவிட்டான். அதனால் இவனுக்கு பிறந்தநாள் என்று வகுப்பறையில் ஒருவருக்கும் தெரியாது.

இதுவரை வாழ்த்தும் எவரும் கூறியதில்லை. இவனும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் இன்றோ மனம் ஹர்ஷியின் வாழ்த்தை மிகவும் எதிர்பார்த்தது. அவளை நினைக்கும் போதே முகம் காட்டும் மாயாஜாலங்கள் இவனுக்கு தெரியாது என்றாலும் மற்றவர்களுக்கு தெரியுமே!

தினமும் போனில் பேசி, பார்க்கும் போதெல்லாம் உரசிக் கொண்டும், கட்டிக் கொண்டும் உலகை மறந்து இணையோடு லயித்து விடும் காதலர்களைக் கண்டவர்கள் ஆருஷின் காதலைக் கண்டு ஆச்சர்யம்தான் அடைந்தனர்.

“டேய் நண்பா நீங்க நிஜமாவே லவ் பண்றீங்களா?” எனக் கேட்கும் நண்பர்களை கண்டு கோபம் வருவதில்லை, காதலில் கண்ணியம் காக்கும் தன்னவளை எண்ணி பெருமிதம்தான் அவனுக்கு.

“ஏன்டா அப்படிக் கேக்கற” என புன்னகையோடு வினவ,

“ஒரு மீட்டிங், சேட்டிங், டேட்டிங் இல்லாம ஒரு காதலா? ஆனாலும் உன் முகத்துல ஒரு தேஜஸ் தெரியுதே அப்ப்ப்பா…. அவ்ளோ அழகா இருக்கடா” என நண்பர்கள் சிலாகிக்க,

இதைக் கேட்டு மேலும் இதழ் விரியச் சிரித்தவன்”ஹர்ஷி என்னோட காதலி இல்ல…”

“பின்ன” வியப்புடன் நண்பர்கள்

“அவ என்னோட அம்மாடா…!”

இதைச் சொல்லும் போது அவனின் முகத்தில் அத்தனை கனிவு, மரியாதை, பாசம். தாயையே மரியாதையாக நடத்த தவறும் சில இளவட்டங்கள் இருக்கையில், காதலியை அன்னையாக நினைக்கும் ஆருஷை நினைத்து பிரம்மிப்பாக இருந்தது.

ஆருஷின் தோளில் தட்டிக் கொடுத்தவர்கள், “ஷி ஈஸ் லக்கி..வெரி லக்கி” என ஒருவன் கூற,

“லக்கி நான்தான்! ” என்று ஒரு புன்னகை புரிய அவர்கள் சிரித்துக் கொண்டே சென்று விட்டனர்.

ஆருஷின் எண்ணங்கள் முன்னோக்கி சென்றது. அன்று அவளிடம் தன் நிலையை எடுத்துக் கூறி விட்டு அவளது பதிலுக்காக காத்திருக்க,

அவனது நேசத்தை அவன் வாய் வழியாகவே கேட்ட பின்பு ஹர்ஷியின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். இல்லை என நினைத்த ஒன்று கைசேர்ந்த கொண்டாட்டம். இதைக் கேட்கத்தானே காத்திருந்தாள். அதே சந்தோஷத்தோடு,

“நீங்க உங்க அம்மாவை மிஸ் பண்றீங்களா” என சம்மந்தமில்லாமல் கேட்டாள்.

“ரொம்ப மிஸ் பண்றேன்”

இப்போது அவனது கையை தன் கைகளோடு சேர்த்துப் பிடித்தவள், “இனி உங்க அம்மாவ மிஸ் பண்ண வேண்டாம், நான் இருக்கறவரை. உங்கள எதுக்கும் டிஸ்பர்ப் பண்ண மாட்டேன். உங்களுக்கு சப்போர்டிவா இருப்பேன். நீங்க நிம்மதியா படிங்க, லைஃப்ப லீட் பண்ணுங்க, நான் குறுக்க வர மாட்டேன். நீங்க ஓடி களைச்சு சோர்ந்து போறப்ப நிழலா உங்க பக்கத்துல இருப்பேன். எவ்ளோ அச்சீவ் பண்ணனுமோ அவ்ளோ அச்சீவ் பண்ணிட்டு வாங்க. அதுவரை உங்களுக்காக காத்திருப்பேன். இட்ஸ் அ ப்ராமிஸ்” என்றவளை ஆச்சர்யமாக பார்த்தான் ஆருஷ்.

காதலை இவ்வளவு அழகாக கூற முடியுமா? தாயாய் இருப்பேன் எனக் கூறிய நிமிடத்தில் இருந்து அவனுள் முழுமையாக கலந்தாள் ஹர்ஷி. அதை நினைத்துப் பார்த்தவன் இப்போதே அவளைக் காண வேண்டுமே! என ஆவல் கொண்டான்.

தாய்க்குப் பின் தாரம் என்பார்கள். ஆனால் காதலியே தாயாய் மாறும்போது அதைவிட என்ன வேண்டும் ஒரு ஆணுக்கு. ஆருஷ் எந்த இடத்திலிருந்து அவளை நேசிக்கத் தொடங்கினான் என்று தெரியாது. ஆனால் அந்த நொடியில் இருந்து அவளை சுவாசிக்கத் தொடங்கினான்.

இன்று வரை அதே மைதானத்தில் அதே இடத்தில் அதே பார்வையோடு அவள். இவன்தான் நெருங்கவும் முடியாமல், விலகவும் முடியாமல் தவிப்பான்.

அன்று மாலை விளையாடிக் கொண்டிருந்தவன் அவள் வந்த சில நிமிடங்களில் நேரடியாக அவளிடம் வந்து அவளருகில் அமர்ந்தான். ஆச்சர்யமாக அவனைப் பார்த்தவள் புன்னகைத்தாள்.

“ஹாய்..” என்றவன் “இன்னைக்கு எனக்கு பிறந்தநாள்…” என அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே கூறினான்.

முகம் மலர, “ஹேய் ..ஹேப்பி பர்த்டே ” என கைக்குலுக்கியவளை கண்டு சோர்வாக முகத்தைத் திருப்பிக் கொண்டான். அவனது முகத்திருப்பலில் பதறியவள்,

“என்னாச்சு” எனக் கேட்க

“இல்ல அன்னைக்கு அம்மான்னு சொன்ன”

“அதுக்கும் இப்படி உர்ருன்னு இருக்கறதுக்கும் என்ன சம்மந்தம்” என கையை ஆட்டிக் கேட்க,

“எங்கம்மா இப்படி சொல்ல மாட்டாங்க” எனச் சிறு பிள்ளையாய் சுணக்கம் காட்டினான்.

“எப்படி” அவளுக்கு புரியவில்லை,

“ஹேப்பி பர்த்டே, இப்படி” என அவள் கையைப் பிடித்துக் குலுக்கிக் காட்டினான்

நிஜமாகவே தன் அன்னையைப் போல் என்னை நினைக்கிறானா என எண்ணி மகிழ்ந்தவள் , “ஓ… எப்படி சொல்வாங்க அத்தை”

அவளின் அத்தையென்ற உரிமையான அழைப்பில் மகிழ்ந்தவன், “காலைலயே கோவிலுக்கு போய்ட்டு வந்து விபூதி வச்சிவிட்டு சந்தோஷமா இருடா ஆருஷ் கண்ணான்னு வாழ்த்தி… இங்க கிஸ் பண்ணுவாங்க” என நெற்றியைக் காட்டினான்.

அவனது பதிலில் திகைத்தவள் ஆவென வாயைப் பிளக்க, “என்ன” என்றான் சற்று அதட்டலாக.

“இல்ல..ஒன்னுமில்ல” என்றவள் சுற்றிப் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.’ எப்படிக் கேக்கறான் பாரு …பர்த்டே விஷ் வித் கிஸ்ஸா!’ என எண்ணியவள் அமைதியாய் இருந்தாள்.

காலையில் இருந்து அவளது வாழ்த்திற்காக காத்திருந்தவன், இப்பொழுது அதை வாய்விட்டுக் கேட்டும் அவள் அமைதியாக அமர்ந்திருப்பதைப் பார்த்துக் கோபம் மூள வெடுக்கென எழுந்தான்.

அவன் எழுந்ததும் சட்டென ஹர்ஷி அவன் கையைப் பிடித்துக் கொண்டாள். அப்போதும் கோபம் தனியாதவனாய் திரும்பாமல் அப்படியே நின்றிருக்க “கோவிலுக்கு போக வேண்டாமா!” எனவும் இதழ் விரிந்தது அவனுக்கு. அவன் கையில் இறுக்கம் தளர்ந்ததைக் கவனித்தவள் இன்னும் திரும்பாமலே நிற்பவனைப் பார்த்து “ப்ளீஸ்” எனக் கெஞ்ச “போலாம்..போலாம்” என ஒப்புக் கொண்டான்.

இருவரும் கோவிலுக்கு வந்தனர். முதன்முறையாக இருவரும் வெளியில் அவனுடைய ஸ்ப்லெண்டரில்.

அமைதியாகச் சாமி கும்பிட்டுவிட்டுப் பிரகாரத்தைச் சுற்றி வந்தனர். இவளுக்கு சற்று முன்னே சென்றவனை “ஆருஷ் ” என அழைக்கவும்,

நின்றவன் என்னவெனப் புருவம் உயர்த்தினான். கிட்ட வா என கண்சிமிட்டி அவனை அருகில் அழைத்து அவனைக்குனியச் சொல்லி நெற்றியில் விபூதி இட்டவள் அப்படியே பின்னோடு தனது கரத்தைக் கொண்டு சென்று அவனது முகத்தை அருகிலிழுத்து நெற்றியில் அழுந்த முதல் முத்தத்தைப் பதித்தாள்.

“ஹேப்பி பர்த்டே ஆருஷ் கண்ணா” என்றவள் அவன் முகத்தைக் காண இயலாது ஓடிவிட்டாள். சற்று தூரம் ஓடியவள் “நான் இப்படியே வீட்டுக்கு போறேன்… நாளைக்கு மீட் பண்ணலாம்” என கூறி ஓடியே விட்டாள்.

ஆருஷ் அதீத மகிழ்ச்சியில் உள்ளம் பேருவகைக் கொள்ள அது கண்ணீராய் காட்சியானது. கண்கள் தண்ணீரில் தழும்ப ஓடும் அவளையே புன்னகையோடு பார்த்திருந்தான்.

மழை வருதே மழை வருதே விழி மேகம் மோதும் பொழுது…

சுகம் தருதே…சுகம் தருதே உன் சுவாசம் தீண்டும் பொழுது …

எதையெதையோ நினைக்கிறதே மனது…

எனக் குத்தாட்டம் போடச் சொன்ன மனதை சூழ்நிலைக் கருதி அடக்கியவாறே துள்ளலோடு சென்றான்.

இறுதி வருடத்தின் இறுதி நாட்கள். நான்காம் வருட மாணவர்களுக்கான பிரியாவிடை கொண்டாட்டங்கள், ஜுனியர் மாணவர்களின் ஆட்டம் பாட்டம் என ஒத்திகை படுஜோராக நடந்துக் கொண்டிருந்தது.

ஆருஷ் சக மாணவர்களுடன் ஆடிட்டோரியம் பக்கம் வந்தான். ஹர்ஷியும் ப்ராக்டீஸ் க்ருப்பில் ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவளும் இன்னும் சில மாணவிகளும் உடன் இருந்தனர்.

ஹர்ஷியைக் கண்டவன் அப்படியே நின்றுவிட, உடன் வந்தவர்கள் சிறு தலையசைப்புடன் கடந்து விட்டனர்.

“ஹர்ஷி லஞ்ச் முடிஞ்சு மீட் பண்ணலாம்பா” என ஹர்ஷியுடன் இருந்தவர்களும் சென்று விட்டனர். ஹர்ஷி தனியாக இருப்பதை கண்டு ஆருஷ் உள்ளே சென்றான்.

குனிந்து தன் பேக்கை எடுத்துக் கொண்டிருந்தவள்… யாரோ வரும் சத்தம் கேட்டு தன் தோழிகளுள் ஒருத்தியென நினைத்து, “நீங்க போங்கப்பா நான் வரேன்” எனக் கூறினாள்.

“நான் போகவா” என என்ற சத்தத்தில் வந்திருப்பது யாரென அறிந்தவளின் முகத்தில் மத்தாப்பூவாய் ஒளி விசியது. “ஆருஷ்” என உதடுகள் சத்தமில்லாமல் உச்சரிக்க அவனைத் திரும்பி பார்த்தாள்.

சுடிதார் அணிந்திருந்தவள் ஆடுவதற்கு ஏதுவாக குறுக்குவாட்டில் விட்டுக் கட்டியிருந்தாள். தலை முதல் கால் வரை அவளை தழுவிய அவன் பார்வையில் மனதுக்குள் ஏதோ குறுகுறுக்க “இங்….க என்ன பண்றீங்க”

“சும்மா…. என்ன டேன்ஸ் ப்ராக்டீஸா”

“ம்” என முணுமுணுத்தாள்.

“ஹர்ஷி ஐ வான்ன டேன்ஸ் வித் யு” எனக் கையை நீட்ட

“இப்பயா!” எனச் சுற்றி முற்றி பார்த்தாள்.

“யாருமே இல்ல” அவளது பார்வைக்கு பதிலளித்தான். இன்னும் கை நீட்டியபடியே இருக்க ஆர்வமும், தயக்கமுமாய் அவன் கை மீது கை வைத்தாள். தன் கைக்குள் அடங்கிய அவள் கையை இறுகப்பிடித்துக் கொண்டான்.

அவளது போனை வாங்கிப் பாடலைத் தேர்வு செய்து மியூசிக் சிஸ்டத்துடன் இனைத்து ஆடத் தயாரானான்.

உன்னாலே கண்கள் தள்ளாடி உறங்காமல் ஏங்கும் என் ஆவி…

நீராவியாய் என்னை நீ மோதினாய் உன் பார்வையில் ஈரம் உண்டாக்கினாய்…

நீ தொடத்தொட நானும் பூவாய் மலர்ந்தேன்… நான் என் பெண்மையின் வாசம் உணர்ந்தேன்…

நீ அருகில் வரவர ஆவல் அறிந்தேன் …. நான் என் ஆண்மையின் காவல் துறந்தேன்…

முன்ஜென்மம் எல்லாம் பொய்யென்று நினைத்தேன் உன் கண்ணைப் பார்த்தேன் மெய்தானடா…

உருவங்கள் எல்லாம் உடல் விட்டுப் போகும் உள்ளத்தின் காதல் சாகாதடா…

பாடலின் வரிகளை இருவரும் உணர்ந்து உயிர்த்து ஆடினர். கண்கள் ஒன்றையொன்று விட்டு விலக மறுக்க, அவன் கடினமும், இவள் நளினமும் பாடலை மேலும் அழகாக்கியது.

இறுதியாண்டு தேர்வுகள் நடந்து முடிந்திருந்தன. ஆருஷ் ஏற்கனவே கேம்பஸில் தேர்வாகியிருந்தான். சபரிநாதன்தான் தன் நிறுவனத்திற்காக அவனைத் தேர்வு செய்தார்.

அவர்தான் தன்னை படிக்க வைத்தவர் என அறிந்த ஆருஷ் மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தான்.

நாட்கள் கடந்தது. ஆருஷ் வேலையில் சேர்ந்து விட்டான். இவனது கடின உழைப்பையும் ஆர்வத்தையும் பார்த்த சபரிநாதனுக்கு ஆருஷ் மேல் ஒருவித பாசம் உருவானது. ஹர்ஷியை எப்போதாவது கல்லூரிக்குச் சென்று பார்ப்பதோடு சரி.

அவனது உழைப்புக்கு பரிசாக பதவி உயர்வும் ஊதிய உயர்வும் அளித்தார் சபரிநாதன். அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொள்ள ஹர்ஷியை சந்தித்தவன் அவளைக் கோவிலுக்கு அழைத்து வந்திருந்தான்.

ஏற்கனவே கம்பீரமான தோற்றம் அவனுடையது. இதில் சுய சம்பாத்யம் பதவி உயர்வு தந்த மகிழ்ச்சி தனி தேஜஸயே கொடுத்தது. ஹர்ஷிதான் அவன் மேல் இருந்து கண் எடுக்க முடியாமல் திணறிப் போனாள்.

ஹர்ஷி கண்ணை மூடி வெகுநேரம் வேண்டிக் கொண்டிருந்தாள். தரிசனம் முடிந்து அர்ச்சகர் பிரசாதம் கொடுத்துவிட்டுச் செல்ல… சற்று தள்ளி வந்தவுடன், ஆருஷ் “என்ன வேண்டிக்கிட்ட அவ்வளோ நேரமா” என தன் சந்தேகத்தைக் கேட்க

உடனே வெட்கப்பட்ட பெண்மை இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்தது. இவனுக்கு முகத்தைக் காட்டாமல் “ஒ…ஒன்னுமில்லையே… சும்மா”

இவளின் பரிமாணங்கள் சுவாரசியமாக இருக்க “ஹேய் வெய்ட்.. என்னைப் பாரு” என அவள் முகத்தை நிமிர்த்த இரு கைகளுக்குள் மலர்ந்த பூவாக அவள் முகம். மொட்டவிழும் முகத்தில் கண்கள் மட்டும் நிலம் பார்த்தது.

சன்னிதானத்தின் நடுவில் இவர்கள். மதிய நேரமாதலால் ஒருவரும் இல்லை. இவர்கள் இதுபோல வெளியில் வருவதெல்லாம் அபூர்வம்தான்.

அப்படியே வந்தாலும் தொட்டு, உரசி மற்றவர்களின் கவனத்தை கவரும் வகையில் நடந்துகொண்டதில்லை. அதில் இருவருமே எப்பொதும் கவனம்தான்.

தள்ளியே நிற்பவள் இப்போது, தான் இவ்வளவு நெருக்கத்தில் நின்றும் தள்ளி நிற்காமல் இருக்கிறாள் என்றால் என்னவாக இருக்கும் என்ற யோசனையோடே “ஏய் ஹர்ஷி” கிசுகிசுப்பாக அழைக்க

“ம்”

“என்னைப் பாரு”

மெதுவாக கண்மலர்ந்தாள் பாவை. எதற்காக இவ்வளவு வெட்கம் என நினைத்தாலும் மெல்லிய சிரிப்புடன் “என்னடா” என்றான் கனிவாய்

“ஒன்னுமில்லையே”

“இல்ல என்னவோ! என்னன்னு சொல்லு, சாமிகிட்ட என்ன வேண்டின” விடாமல் இவன் கேட்டு வைக்க

தன் கையை கன்னத்தில் இருந்த அவன் கை மேல் வைத்து அழுத்தியவாறு “எனக்கு…”

“உனக்கு”

” அழகா, பொசுபொசுன்னு, அப்படியே உங்கள மாதிரி நிறைய குழந்தைங்க வேணும்னு வேண்டிக்கிட்டேன்” முகத்தில் அவ்வளவு மலர்ச்சி, மகிழ்ச்சி.

ஒரு இன்ப படபடப்பு அவனுள் ஆனால் அதை அவளுக்கு காட்டாதவாறு, “ஓஹோ…அதான் முகம் அவ்ளோ டாலடிக்குதா… ஆமா என்னோட பட்டுக்கு குழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்குமா” என சிலிர்த்து சிரித்தவாறே வினவ

“ம்..ரொம்ப…. அதுவும் நம்மோட குழந்தை என் வயித்துல சுமந்து நான் பெறப்போற குழந்தை… ” கூறிக்கொண்டே வந்தவள் அவனின் இமைக்காத பார்வையில் வெட்கமுற்று பட்டென்று அவன் கைகளை விலக்கிவிட்டு ஓட, இவனின் சிரிப்பு சத்தம் விடாமல் ஒலித்தது.

அதே மகிழ்ச்சியோடு இருவரும் கோவிலை விட்டுப் புறப்பட்டனர். கூடவே விதியும் தன் கொடூரப் பார்வையால் அவர்களைப் பார்த்தது.