9
ஆருஷ் உல்லாசமான மனநிலையில் தன் வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான். பின்னால் அமர்ந்திருந்த ஹர்ஷியும் அவனுக்கு குறையாத மனநிலையில் இருந்தாள்.
“ஹர்ஷி…”
“ம்ம்…”
“நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்… எல்லாமே கிடைச்ச மாதிரி ஒரு ஃபீல். கூடிய சீக்கிரம் உங்க வீட்ல வந்து பொண்ணு கேக்கனும் ” என தன் போக்கில் கூறிக்கொண்டே சென்றான்.
வீட்டில் பெண் கேட்க வேண்டும் என்றதும்தான் ஹர்ஷிக்கு உரைத்தது..தன் தாய் தந்தையை பற்றி. அவர்கள் நிச்சயம் ஒப்புக் கொள்ள மாட்டார்களே…. கடவுளே இத்தனை நாள் இதை எப்படி எண்ணாமல் போனேன்… என இவளது எண்ணங்கள் படையெடுக்க
“ஹர்ஷி…ஹர்ஷி..”என பல முறை அழைத்தவன் “என்னாச்சு ஹர்ஷி” என பின்னால் திரும்ப,
திடீரென குறுக்கே வந்த லாரி ஒன்று ஆருஷின் வண்டியை அடித்து தூக்க இருவரும் தூக்கியெறியப் பட்டனர். இமைக்கும் நொடிக்கு குறைவான நேரத்தில் நடந்த இவ்விபத்தில் “ஆருஷ்” என ஹர்ஷி கத்தியதுதான் இறுதியாக அவன் கேட்ட ஹர்ஷியின் குரல். “ஹ………ர்……..ஷி…” எனக் கூறியவாறே மயக்கத்தைத் தழுவினான்.
அதன் பிறகு மருத்துவமணையில்தான் கண்விழித்தான். ஆனால் அதற்குள் அனைத்தும் முடிந்திருந்தது.
ஆருஷ் கண்விழித்ததும் முதலில் தேடியது ஹர்ஷியைதான். அவளுக்கு என்னவானதோ என நினைத்து பதறி அங்கிருந்த டாக்டர்களைக் கேட்க, அவனுடன் வந்தப் பெண் இறந்துவிட்டதாகவும், அவளது உடலை அவளது பெற்றோர் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தனர்.
“நோ!” இடியென இறங்கிய தகவலை கிரகிக்க முடியாமல் வாய் விட்டு அழவும் முடியாமல் அவன் தவித்த தவிப்பு மருத்துவர்களையே கலங்க வைத்தது.
“ஹர்ஷி..ஹர்ஷி..ஹர்ஷி” என இடைவிடாது முனகியவனை மருத்துவர்களாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
உடனே ஹர்ஷியைக் காண வேண்டும். அவளுக்கு ஒன்றுமில்லை, என நினைக்க நினைக்க பைத்தியம் போல புலம்ப ஆரம்பித்தான்.
ஆருஷிற்கு தலையில் பலத்த அடி. இவன் கண்விழிப்பதற்கே ஒரு மாதம் ஆனது. இப்போது விடாமல் புலம்பிக் கொண்டிருக்கவே அவனது உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று மருந்து மூலம் உறங்கச் செய்தனர்.
மீண்டும் கண்விழிக்கையில் அருகில் கவலையுடன் அமர்ந்திருக்கும் சபரிநாதனைத்தான் கண்டான். மீண்டும் ஹர்ஷியின் நினைவுகள் சென்று விட்டாளா? என் கனவை கனவாகவே எடுத்துச் காற்றோடு கலந்து விட்டாளா! ஏன் ஹர்ஷி… என்னால முடியலயே!என விடாது புலம்பிக் கொண்டிருந்தான் மனதோடுதான்.
ஆருஷ் வெளியில் வெறித்த பார்வை மட்டுமே. சபரிநாதன் மட்டும் இல்லையென்றால் முழுப் பைத்தியமாகியிருப்பான். அவனை தன் வீட்டிற்கு அழைக்க அவன் மறுத்து விடவே… கெஸ்ட் ஹவுஸில் தங்க வைத்து பார்த்துக் கொண்டதெல்லாம் அவர்தான்.
இடையில் கல்லுரியில் ஹர்ஷியைப் பற்றி விசாரிக்க விசாரிக்க, ஒரு தகவலும் இல்லை. ஹர்ஷியின் வீட்டு முகவரியைப் பெற்று, அங்கும் சென்று விசாரித்துப் பார்த்தான். அவள் இறந்த பின் துக்கம் தாளாமல் அவளது பெற்றோர் வெளிநாட்டுக்கு சென்று விட்டதாக ஒருவர் கூற வந்து விட்டான்.
நாம் மிகவும் விரும்பிய ஒன்றை அல்லது ஒருவரை இழந்த பின் வாழ்க்கை அஸ்தமனமாகியது போல் தோன்றும். சில காலத்திற்குள் இழப்பிலிருந்து மீண்டு வந்து இயல்பான வாழ்க்கையைக் கூட வாழலாம். அதன் பொருள் அந்த பிடித்த ஒன்றை மறந்து வாழ்கிறார்கள் என்று இல்லை. அதன் இழப்பை ஏற்றுக் கொண்டு அதன் பாதிப்பை மறைத்து வாழ்கிறார்கள். ஆருஷும் அவளை மறக்கவில்லை. அவள் இல்லாத நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டான்.
சபரிநாதன்தான் மெல்ல மெல்ல அவனைத் தேற்றினார். “நீங்க பெரிய ஆளா வரனும் ஆருஷ்… உங்கப்பாவும், அம்மாவும் அப்பதான் சந்தோஷப் படுவாங்க… ” என அவனின் கனவுகளைத் தன் கனவாக கூறிய ஹர்ஷிக்காகவே தன்னை மாற்றிக் கொள்ள முடிவெடுத்தான்.
சபரிநாதன் நிறைய தன்னம்பிக்கை ஊட்டும் கருத்தரங்கிற்கு அழைத்துச் சென்றார். தன் கூடவே வைத்து பிஸினஸ் பற்றிய நெளிவு சுளிவுகளை கற்றுக் கொடுத்தார். இன்று ஜே எம் டி யாக நல்ல பதவியில், சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில் இருக்கிறானென்றால் அது அவரால்தான்.
அவர் ஹர்ஷியைப் பற்றி இதுவரை அவனிடம் கேட்டதில்லை. சிறந்த மனிதர். என்மேல் அப்படி என்ன பாசம் அவருக்கு என இன்று வரை ஆருஷிற்கு புரியவே இல்லை.
தீப்தி இவரது மகள் என இவர்களது கெஸ்ட் ஹவுஸிற்கு வந்த பிறகுதான் தெரியும். உப செய்தியாக அவன் மீதான அவளது காதலும். அப்போதும் அவளைக் கண்டுக் கொள்ளாமல் தன் ஹர்ஷி யின் நினைவுகளுடன் வாழத் தொடங்கினான்.
அதன் பிறகு இவனுக்காக காத்திருந்த தீப்தியும் ஒரு கட்டத்தில் அவள் காதலை வைத்து முட்டுக்கட்டை போட, இவன் மறுக்க அப்போது கூட அவருடைய மகளுக்காக இதுவரை இவனை சபரிநாதன் ஒரு கேள்வி கூட கேட்டு வைத்ததில்லை.
தீப்தியின் பிடிவாதத்தால் அவரது உடல்நிலை பாதிக்கப்படவே தன்னால்தானோ! என மருகியவனை தீப்தியே காப்பாற்றியும் விட்டாள்.
அனைத்தும் சரியாகி சுபமாக சென்ற வேளையில்தான் மீண்டும் ஹர்ஷியை சந்தித்தது. பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தவனை காக்கைகளில் ஒலியும் , வெய்யோனின் ஒளியும் தட்டி எழுப்பியது.
இரவு முழுவதும் உறங்காமல் பழைய நினைவுகளை அசைப் போட்டுக் கொண்டிருந்தவன், இனி தான் என்ன செய்ய வேண்டும் என முடிவெடுத்தான்.
ஆதி….ஆதி எப்படி இதில் வந்தான். ஆதிக்கு என்னுடைய ஹர்ஷியைப் பற்றி தெரியுமே…. இருந்தும் ஏன் என்னிடம் கூறவில்லை. அதிலும் அவனுடைய ஃபியான்ஸே என்ற அறிவிப்பு வேறு ஆருஷை கொதிக்க வைத்தது. யாருக்கு யார் மாப்பிள்ளை…என் ஹர்ஷிடா அவ… அவள யாருக்கும் நான் விட்டுத்தர மாட்டேன். ஆருஷ் என்னும் நல்ல மனிதன் தன் வாழ்க்கையை அடைவதற்காக எந்த செயலையும் செய்யத் தயாரான தருணமது.
ஆருஷ் ஒன்றை மறந்தான். அது ஹர்ஷி அவனைத் தெரிந்த மாதிரியே காட்டிக் கொள்ள வில்லை என்பதை!
அப்போது அவனது அலைபேசி அதிர்ந்தது. அதில் ஒளிர்ந்த எண்ணைக் கண்டவன் யோசனையுடன் அதை ஏற்றுக் காதில் பொருத்தினான். எதிர்ப்புறம் கூறியதை கவனமுடன் கேட்டவன், “டைம் நான் சொல்றேன்” எனக் கூறி துண்டித்துவிட்டு தூக்கி எறிந்தான். அது பெட்டின் மேல் அடக்கமாய் அடங்கியது. கோபம்… கோபம் அவ்வளவு கோபம். யார் மேல் இறக்கி வைக்க என புரியாமல் திண்டாடினான்.
கண்கள் இரண்டும் கோவைப்பழம் போல சிவந்திருக்க, முகத்தை அழுந்தத் துடைத்தவன் ஒரு முடிவுடன் குளியலறையை நோக்கிச் சென்றான்.
இங்கு ஹர்ஷியோ முதல் நாள் கண்ட கனவின் தாக்கத்தில் பிரம்மை பிடித்தது போல இருந்தாள். தர்ஷியும் ஆருஷை எப்படிச் சந்திப்பது என்பது பற்றி நினைத்துக் கொண்டிருந்ததால் இவளைக் கவனிக்கவில்லை.
முன்பும் கனவின் தாக்கம் இருந்ததுதான் ஆனால் அரூபமாக…. தன்னுடன் பேசிய, நடனமாடிய உருவம் நேற்று சந்தித்த மூன்றாம் மனிதனை அடையாளம் காட்டவே உறைந்துப் போனாள்.
இன்னும் இரண்டு நாளில் நிச்சயத்தை ஒருவனுடன் வைத்துக்கொண்டு வேறு ஒருவனுடன் கனவில் கை சேர்வதா!…. கனவாய் இருந்தாலும் அதில் அவன் கண்ணில் கண்ட நேசம், அது பொய்யில்லையே? என் எண்ணங்களில் ஏன் அவன் வந்தான் என மீண்டும் நொந்துக் கொண்டாள்.
நேற்று அவன் பார்வையை எண்ணிப் பார்த்தவளுக்கு இப்போதும் தேகம் சிலிர்த்தது. பயம் வந்தது அவளுக்கு. அவன் ஏன் என்னை இந்தளவு பாதிக்கிறான் எனப் புரியாமல் திண்டாடினாள். எது எப்படியோ இனி அவனைப் பார்க்கக் கூடாது என உறுதியாக எண்ணிய பின்பே மனம் சமநிலை அடைந்தது.
தர்ஷி ஆருஷை சந்திப்பதற்காக “ருக்மணி” வந்திருந்தாள். அவள் விசாரிக்க கூறியிருந்த நிறுவனத்தில் இருந்து ஆருஷைப் பற்றிய தகவல்கள் அவளுக்கு கிடைத்திருந்தது. அவள் வந்த போது மணி ஒன்று. ஹர்ஷியிடம் ஏதோ காரணம் கூறி தனியாக வந்திருந்தாள். ருக்மணி அலுவலகம் வந்தவள் ஆருஷை சந்திக்க வேண்டும் என கேட்க, ரிசப்ஷனிஸ்ட் உடனே அனுமதித்தாள்.
ஆருஷ் ஜே. எம். டி. எனப் பெயரிடப்பட்ட அறையில் நுழைய அனுமதி வேண்டி கதவைத் தட்ட “எஸ் கம் இன்” என்ற அழைப்புக் கேட்டதும் உள்ளே சென்றாள்.
ஆருஷ் தர்ஷியைக் கண்டு வியந்தவன் “ப்ளீஸ்” என இறுக்கையைக் காட்டினான். படபடப்பு இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அமர்ந்தாள்.
“சோ… என்ன சாப்பிடறீங்க, மிஸ் தர்ஷிகா … ரைட்” என கூர்பார்வையுடன் கேட்க
“எஸ் .. எனக்கு எதுவும் வேண்டாம் . உங்ககிட்ட …”
“ஹர்ஷியைப் பத்தி பேச வந்திருக்கீங்க”
“உங்களுக்கு எப்படி?”
“நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல என்ன சம்மந்தம்..என்னோட ஹர்ஷியைத் தவிர”
“என்னோட ஹர்ஷி” என அவளைத் தன்னுடன் நிலைநிறுத்திக் கொண்டான். அவனது பதிலில் புன்னகைத்தவள்
“ஆமா..உங்களோட ஹர்ஷிதான் அவ…அவள உங்ககிட்டயே சேர்க்கனும் அதுக்குதான் நான் இப்ப வந்திருக்கேன்.”
கண்களை மூடி ஆழ்ந்து சுவாசித்தவன், “ஏன் என்கிட்ட இருந்து பிரிக்கனும்..இப்ப ஏன் என்கிட்ட சேர்க்கனும்” அத்தனை வலி அவனிடத்தில்
“பிரிஞ்சது விதின்னுதான் சொல்லுவேன், ஆனா சேர்த்து வைக்கறதுக்கு காரணம் ஹர்ஷி!” தெளிவாகக் கூறினாள்.
“ஏன் இந்த நாடகம்..எதுக்காக??? எனக்கு தெரிஞ்சாகனும்.. என்னை நினைச்சாங்க ஆருஷ் ஒரு மடையன் அப்படியே விட்டுடுவான்னா… இதுல சம்பந்தப்பட்டவங்க எல்லாரையும் தட்டித் தூக்கிடுவேன்” என உரத்தக் குரலில் கர்ஜித்தவன்,
“என்னாச்சு அவளுக்கு? அவளுக்கு என்னை அடையாளம் கூட தெரியல, உனக்குத் தெரியாது அவ என்னை பார்க்கையில அவ கண்ணுல அவ்ளோ பாசம் தெரியும்…ஆனா நேத்து ஏதோ தெரியாதவன பாக்கற மாதிரி பாக்கறா… கொஞ்சம் கொஞ்சமா செத்துட்டு இருக்கேன் தெரியுமா!”என நைந்த குரலில் கூறி முடித்தான்.
“இது எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான்…உங்கள காப்பாத்ததான் இந்த நிலமை ஹர்ஷிக்கு… அவ தவிச்ச தவிப்பு, துடிச்ச துடிப்பு கூட இருந்து பார்த்தவ நான்.. உங்களுக்காக அவ தன்னோட சுயத்த தொலைச்சு….” எனப் பதிலுக்கு அவளும் எகிற ஹர்ஷியின் அன்றைய நிலையை நினைத்து கண்கள் கலங்கியது.
அதில் திகைத்தவன் “வாட் ரப்பிஷ்…என்னால என்ன??..என்னதான் நடந்துச்சு அன்னைக்கு” என தலையைப் பிடித்துக் கொண்டு அமர, தர்ஷி கூறத் தொடங்கினாள்.
ஆருஷ் ஹர்ஷிக்கு விபத்து நடந்த அன்று. ஆருஷிற்கு தலையில் பலத்த அடி. ஹர்ஷி அங்கிருந்த மணல் மேட்டில் விழுந்ததால் சில சிராய்ப்புகளுடன் தப்பினாள். ஆனாலும் மயங்கியிருக்க அங்கிருந்த மக்கள் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமணை அனுப்பினர்.
ஹர்ஷியின் ஐடி கார்டில் இருந்து அவள் தந்தைக்கு தகவல் தெரிவிக்க அவள் தந்தை, அன்னை, தர்ஷி மூவரும் விரைந்து வந்தனர்.
இவர்கள் வந்து சிறிது நேரத்தில் ஹர்ஷி கண்விழித்தாள் . விழித்ததும் ஆருஷை நினைத்துப் பதறியவள் அவனைப் பார்க்க வேண்டும் என கூறி கதற, அவள் பெற்றோருக்கு ஆருஷ் யார் எனத் தெரியவில்லை.
“யார் ஆருஷ்” எனக் கேட்க,
“நா…ன் அவர விரும்பறேன்… ” திக்கித் திணறிக் கூறி முடித்தாள்.
மூவருக்குமே அதிர்ச்சிதான் என்றாலும், தர்ஷிக்கோ அமைதியான, பயந்த சுபாவமான அக்கா ஒருவனைக் காதலிக்கிறாளா! என்பதுதான். அவளைப் பொறுத்தவரை ஹர்ஷி என்பவள் பெற்றோரின் சொல்படி கேட்கும் அம்மாஞ்சி. ஆனால் தர்ஷி எதிர்த்து பேசி வாங்கிக் கட்டிக் கொள்வாள்.
“என்ன உளர்ர யாரு அவன்…அவன் ஸ்டேட்டஸ் என்ன” என தந்தை எகிற
“ஆமா ஸ்டேட்ல இருந்தாதான் இவங்களுக்கு ஸ்டேட்டஸ் ச்சே” அந்த நிலையிலும் தந்தைக்கு ரிவீட் அடித்தாள் தர்ஷி.
“அப்பா ப்ளீஸ் எனக்கு அவரப் பாக்கனும்..” எனக் கூறி கதறியவள் மின்னலெனப் பாய்ந்து வெளியேறினாள்.
ஆருஷைப் பற்றி விசாரிக்க…அவன் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறினர். ஆப்ரேஷன் செய்ய வேண்டும். இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து.
பதினெட்டு மணி நேரத்திற்குள் பணம் கட்டுங்க இல்லைனா காப்பாத்தறது கஷ்டம் ” என மருத்துவர் கைவிரிக்க, திகைத்த ஹர்ஷி அங்கேயே மடிந்து முகத்தை மூடித் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.
தர்ஷி தமக்கையை ஆறுதலாக அணைத்துக் கொள்ள, “அவர் ரொம்ப நல்லவர் தர்ஷ், எனக்கு அவர் வேணும், ஐயோ! பணத்துக்கு எங்க போவேன்” என தர்ஷியை அணைத்துக் கொண்டு கதறினாள்.
“அப்ப ஒன்னும் இல்லாத வெறும் பையணா அவன்” என அந்த நேரத்திலும் அந்தஸ்தை வைத்துப் பேசிய பெற்றோரை வெறுப்புடன் பார்த்தாள் தர்ஷி.