Kattangal 3
Kattangal 3
கட்டங்கள் – 3
திங்கள் காலை மணி 7:30
சூரிய பகவான் அவர் வேலையை சரியாக செய்து கொண்டிருந்தார்.
” அக்கா அக்கா.. ப்ளீஸ் அக்கா… என்னை பஸ் ஸ்டாப்ல ட்ரோப் பண்ணு அக்கா… ” , என்று சுடிதாரின் துப்பட்டாவை சரி செய்தவாறே நித்யாவை அழைத்துக் கொண்டிருந்தாள் காயத்ரி.
“நான் என் சமையல் வேலையை அப்பவே முடிச்சிட்டேன்.. சீக்கிரம் கிளம்பி பஸ் ஸ்டாப்புக்கு நடந்து போகாம.. அக்கா நொக்கான்னு அவளை கூப்பிடற.. அடுத்த மாசம் இந்நேரம் அவ கல்யாணம் முடிஞ்சி அவ வீட்டுக்கு போயிருப்பா.. ” , என்று பத்மா அடுப்பை சுத்தம் செய்த படியே கூற, நித்யாவின் முகம் இருண்டது.
“அவன் பேசிய வார்த்தைகள்… என்ன திமிர்.. என்ன கர்வம்… என்னை பேச விடவில்லை.. பேச்சு சுதந்திரம் அவனுக்கு மட்டும் சொந்தம் என்பது போல்…. இதற்கு அவன் ஒரு நாள் என்னிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்..” , என்ற எண்ணம் தோன்ற,. ” இந்த திருமணம் நின்றால், எல்லா விதத்திலும் நன்மை. ஆனால் இதை அம்மா எப்படி ஏற்றுக் கொள்வாங்கனு தெரியல…” , என்று தாயை பற்றி சிந்தித்துக் கொண்டே, “அடுத்த மாசம் கதையை அப்புறம் பார்ப்போம்.. இப்ப காலேஜ் கிளம்பு… ” , என்று தன் ஸ்குட்டி சாவியை விரல்களில் சுழட்டியபடியே கூறினாள் நித்யா.
காயத்ரி அவசரமாக தன் பையை தோளில் மாட்டிக்கொண்டு கிளம்ப, இருவரும் படியிறங்கி வண்டியை நோக்கி ஓடினர்.
“Excuse me ” , என்ற குரல் கேட்டு இருவரும் திரும்பினர். நித்யாவின் முகத்தில் எரிச்சல் அப்பட்டமாக தெரிந்தது.
“இந்த ரோஜா பூ… உங்க தலையில் இருந்து விழுந்திருச்சுனு நினைக்கிறேன்… ” , என்று ஒரு ரோஜாவை நித்யாவிடம் நீட்டினான் ஒரு இளைஞன்.
நித்யாவின் முகம் கோபத்தில் சிவந்தது. பற்களை கடித்துக் கொண்டு அவனை முறைத்துப் பார்த்தாள். “அக்கா , கல்யாணம் நெருங்குது .. எந்த பிரச்சனையும் வேண்டாம்… அம்மாக்கு தெரிஞ்சா இன்னும் சிக்கல் ஆகிரும்.. பொறுமையா போயிருவோம்..” , என்று பெரிய மனுஷியை போல் நித்யாவின் காதில் கிசுகிசுத்தாள் காயத்ரி.
எதுவும் பதில் கூறாமல் நித்யா வண்டி அருகே சென்று அந்த இளைஞன் மீதிருந்த கோபத்தில் ஸ்குட்டியை வேகமாக kick start செய்தாள்.
“அக்கா … நோ டென்ஷன்.. கூல்…. அழகா இருந்தா நாலு பேரு ரோஜா பூ குடுக்க தான் செய்வாங்க…. ” , என்று கூறி கொண்டே நித்யாவின் ஸ்குட்டியில் ஏறினாள் காயத்ரி.
” இந்த அஷோக்கிற்கு இது முதல் தடவை இல்லை காயத்ரி … நாலாவது தடவை…. “, என்று நித்யா வார்த்தைகளை கடித்து துப்ப.., ” நாலாவது தடவை ” , என்ற வார்த்தையில் சற்று அதிர்ந்தவளாக, “அக்கா இவனுக்கு எத்தனை கட்டம் ? ” , என்று காயத்ரி தீவிரமாக வினவ, ” இரண்டு ..” , என்று நித்யா கூற, ” you mean this is his last chance ? ” , என்று காயத்ரி ஸ்டைலாக வினவ , “எஸ் ” , என்று சுருக்கமாக பதில் கூற ,
” அக்கா !! என்ன பண்ண போற..? ” , என்று பயத்துடன் காயத்ரி கேட்டாள். நித்யா முகத்தில் தோன்றிய குறும்பு புன்னகை கண்ணாடி வழியாக கயாத்ரிக்கு தெரிந்தது . அதை பார்த்த காயத்ரி, “இன்னக்கி என்ன பண்ண போறாளோ..? நம்மள வேற கூட்டு சேர்த்துப்பாளே… “, என்று தன் மனதிற்குள் நொந்து கொண்டாள்.
அக்கா, தங்கையின் உரையாடல் சர்வ நிச்சயமாக நமக்கு புரியவில்லை.. அவர்களுடன் பயணித்தால் நமக்கு புரியும் என்று நினைக்கிறேன்.
அவர்கள் பேருந்து நிறுத்தத்திற்கு செல்லவும், கல்லூரி பேருந்து வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது.
” அக்கா.. பை… ” , என்று கூறிவிட்டு கல்லூரி பேருந்துக்குள் இருக்கும் தன் தோழிகள் கூட்டத்தோடு ஐக்கியமானாள் காயத்ரி.
நித்யாவின் ஸ்குட்டியை வேகமாக ஒரு கார் கடந்து சென்றது. காரில் இருக்கும் நபரை பார்க்கும் வாய்ப்பு நித்யாவிற்கு கிடையாது. ஏனென்றால், கார் அத்தனை வேகமாக அவளை கடந்து சென்றது. காரில் இருந்த நபரும் நித்யாவை பார்க்கவில்லை. காரணம் எந்த பெண்ணை பற்றி யோசிக்கும் எண்ணமும் அவனுக்கு இல்லை.
” ஹலோ… ” , என்ற குரல் கார் எங்கும் ஒலித்தது. “மது… நீங்க என் பெண்ணை கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லிருக்கீங்க…. ஆனால் இன்னும் இருபது நாள்ல கல்யாணம்ன்னு உங்க அம்மாவும் அப்பாவும் ஊரெல்லாம் கல்யாண அழைப்பிதழ் குடுத்திட்டு இருக்காங்க.. ” , என்று சற்று தோரணையாக கேட்டது அந்த பெரியவரின் குரல்.
“சார்.. நீங்க பதட்டப் பட வேண்டாம்.. எனக்கு கல்யாணத்துக்கு நிச்சயம் பண்ணிருக்க பொண்ணு கல்யாண மண்டபத்துக்கு வர மாட்டா… நீங்க உங்க பொண்ணை என் கல்யாணத்துக்கு கூட்டிட்டு வாங்க… என்னை மீறி எதுவும் நடக்காது…. மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. ” , என்று மதுசூதனன் ஸ்டெயரிங்கை திருப்பியபடியே கூற, “நம்ம டீல் ஞாபகம் இருக்கு தானே …?” , என்று அவர் கேட்ட தொனியில் மிரட்டல் இருந்ததோ என்று மதுசூதனனுக்கு தோன்ற, ” உங்க பொண்ணு பேர் கூட எனக்கு சரியா தெரியாது… அவங்கள எதோ ஒரு பார்ட்டில பார்த்ததோடு சரி.. எனக்கு கல்யாணம் முக்கியம் இல்லை… கல்யாண பேச்சு உங்களோடது… பிசினெஸ் டீல் தான் எனக்கு முக்கியம்… நான் சொன்ன சொல் மாற மாட்டேன்… நான் நினைச்சா அது சரியா நடக்கும்.. ” , என்று ஆக்சிலேட்டரை அழுத்தியபடியே அழுத்தமாக கூற…, ” ஆமாம்… ஆமாம்….உங்களை பற்றி தெரியாதா…? ” , என்ற அவர் குரலில் குழைவு தெரிந்தது. “இந்த டீல் பக்காவா முடியட்டும்.. அப்புறம் இவரை கவனித்து கொள்ளலாம்…. ” , என்று நினைத்துக் கொண்டு ” நாம அப்புறம் பேசலாம் ” , என்று கூறி மொபைல் பேச்சை முடித்தான் மதுசூதனன்.
மதுசூதனின் அலுவலகம்.
அனைவரும் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்க, மதுசூதனன் தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். அவன் விரல்கள் கார் சாவியை தன்னிச்சையாக சுழட்டி கொண்டிருந்தது. “ப்ரோ.. என்ன ஆஃபீசிலே கூட கல்யாண கனவா ? ” , என்று முகிலன் நக்கலாக வினவ மதுசூதனன் எந்த பதிலும் கூறவில்லை.
பல முறை அழைத்தும் பதில் இல்லாமல் போக, மதுசூதனன் சுழட்டிக் கொண்டிருந்த சாவியை தன் கைகளால் தடுத்து நிறுத்தினான் முகிலன்.
முகிலனை நிமிர்ந்து பார்த்த மதுசூதனன் கண்களை உயர்த்தி, “என்ன ?” , என்று வினவினான்.
“ஏதாவது பிரச்சனையா..? ” , என்று முகிலன் கேட்க, ” உனக்கு தெரியாதா..? ” , என்று கண்களை சுருக்கி கேட்டான் மதுசூதனன்..
” உண்மையா தெரியல… ” , என்று முகிலன் கூற, அவனை முறைத்துப் பார்த்தான் மதுசூதனன்.
” ப்ரோ… முறைச்சா என்ன அர்த்தம்…?” , என்று முகிலன் ஸ்டைலாக வினவ பதில் ஏதும் சொல்லாமல் தன் நாற்காலியில் ஒரு முறை சுற்றிவிட்டு எழுந்து எ. சி. அறையின் கண்ணாடி ஜன்னல் அருகே சென்றான். அமைதியாக எ. சி. அறையின் கண்ணாடி ஜன்னல் வழியாக சாலையை பார்த்தான் மதுசூதனன்..
” ஓ… கல்யாண விஷயமா ?” , என்று முகிலன் ஆனந்தமாக வினவ, “இதுல சந்தோஷப்படறதுக்கு ஒன்னும் இல்லை… ” , என்று மதுசூதனன் காட்டமாக கூறினான்.
” நம்ம வீட்டு ஆளுங்க பண்ணதிலேயே இது தான் உருப்படியான வேலைனு நான் சொல்லுவேன்… ” , என்று முகிலன் நாற்காலியில் சாய்ந்து கொண்டே கூற, “அவங்கள அம்மா.., அப்பான்னு சொன்னா நீ குறைஞ்சி போய்டுவியா..?”, என்று மேஜை அருகே வந்து மதுசூதனன் கோபமாக கேட்டான்.
“எனக்கு அப்படி கூப்பிடனுமுன்னு தோணலை… எனக்காக அவங்க என்ன பண்ணிருக்காங்க .. ” , என்று முகிலன் கோபமாக கேட்க.. ” நீ படிச்ச படிப்பு.. இன்னக்கி நீ வாழற வசதியான வாழ்க்கை … உனக்குன்னு ஒரு பிசினெஸ் … எல்லாம் உனக்காக பண்ணது… எதுமே இல்லாம இன்னக்கி ரோடு ரோடா வேலை தேடி அலைஞ்சிருந்தா உனக்கு இதோட அருமை புரிஞ்சிருக்கும் ..”, என்று அழுத்தமாகவும் பொறுமையாகவும் கூறினான் மதுசூதனன்.
தோளை குலுக்கி கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான் முகிலன். அவன் மனம் பாசத்திற்காக ஏங்கியதை யார் சரி செய்ய முடியும்… இன்று வரை அவனால் தாயிடமும் தந்தையிடமும் நெருங்க முடியவில்லை. இதை மதுசூதனனும் புரிந்து கொள்ள மாட்டான் என்பது முகிலனுக்கு தெரியும். அதனால் பணம் என்று எண்ணாமல், உறவுகளை மதிக்கும் பாசம் நிறைந்த சூழ்நிலையில் வளர்ந்த பெண் இந்த வீட்டிற்கு வர வேண்டும் என்பது முகிலனின் எண்ணம் . இதை மதுசூதனனிடம் பேசி புரிய வைக்க முடியாது என்றறிந்து அமைதியாக இருந்தான் முகிலன்.
முகிலனின் அமைதி அவன் மன வாட்டத்தை கூற, தம்பியை சமாதானம் செய்யும் விதமாக.., ” சரி சொல்லு நீ என்ன பேச வந்த? ” , என்று தன்மையாக வினவினான்.
” அண்ணி வேலை பாக்கிற இடத்துல நமக்கு ஆள் இருக்காங்க… நான் அண்ணியை பற்றி விசாரிச்சேன்… ரொம்ப நல்லவங்கனு தான் சொல்றாங்க… கல்யாணத்தை பத்தி நீ என்ன முடிவு பண்ணிருக்க ?” , என்று நேரடியாக கேட்டான் முகிலன்.
“அடுத்தவன் கல்யாணம்னா எல்லாருக்கும் அக்கறை வந்திரும்”, என்று மனதிற்குள் எண்ணியவனாக , ” நிச்சயமா கல்யாணம் பண்ணிப்பேன்…. போதுமா? “, என்று மதுசூதனன் எங்கோ பார்த்தபடி கூற , “சரி ” , என்று முகிலன் தலை அசைத்தாலும்.., தன்னை தவிர்க்கும் தமையனின் கண்கள் கூறும் செய்தி அவனை எச்சரித்தது…
” உனக்கு நான் தம்பி… நீ நம்மை பெற்றவர்களை ஏமாற்ற முடியும்… ஆனால் என்னை….. !!! இளையது என்றும் காளை ப்ரோ… உன் திட்டத்தை உடைத்து.. உனக்கு நல்ல மனைவியும்.., எனக்கு நல்ல அண்ணியும் வர வைப்பேன் ” , என்று மனதிற்குள் சூளுரைத்துக் கொண்டான் முகிலன்.
முகிலனின் சிந்தனையை மதுசூதனன் அறிவானா?
பணமோடு பணம் சேர வேண்டுமா..? இல்லை இங்கு நல்ல மனம் சேர வேண்டுமா..?
கட்டங்கள் நீளும்….