VNE52(2)

VNE52(2)

அதில் அத்தனை காதல், தாபம், நேசம், ஆசை!

அத்தனையும் பார்வையில் தேக்கி வைத்து, அவளை பார்த்தவனை நினைத்து உண்மையில் பயந்து தான் போனாள்.

அவனது காதல் அவளை நிஜமாக பயமுறுத்தியது. மனதை படபடக்க செய்தது.

மொத்தத்தில் தீக்குள் விரலை விட்ட கதையாகி போனது அவளது நிலை! தீயை தழுவவும் முடியாமல், விட்ட விரலை எடுக்கவும் முடியாமல்…

மெல்ல அறைக்குள் நுழைந்தவளை வரவேற்றது அவனது குரல்!

“வெல்கம் மிசஸ் ஷ்யாமள பிரசாத்…”

நிமிர்ந்து பார்த்தாள்.

அவளையே பார்த்தபடி சோபாவில் அமர்ந்தபடி கால் மேல் காலிட்டுக் கொண்டு, கைகளை கட்டியபடி அவளையே பார்த்திருந்தான், எப்போதும் போல பெர்முடாஸ், ஸ்லீவ்லெஸ் டிஷர்ட்டில் சின்ன சில்மிஷ சிரிப்போடு! அவளுக்கு ஏனோ தலகுப்பாவில் முதல் நாள் அவள் கண்ட ஷ்யாம் நினைவுக்கு வந்தான். அப்போதும் இது போல அமர்த்தலான குரலில் ‘வெல்கம் மிர்ச்சி’ என்று கூறியவனை நினைத்துப் பார்த்தாள்.

அப்போது நினைத்திருப்பாளா? அவனையே பைத்தியம் போல காதலித்து, அவனை முழுவதுமாக ஏற்றுக் கொண்டு, எதை எதையோ கண்டு, வேதனையுற்றாலும் தவறுகளை மறக்கவும் முடியாமல், அவனை தவிர்க்கவும் முடியாமல் திருமணமும் செய்து கொள்ளப் போகிறோம் என்பதை உணர்ந்திருப்பாளா என்ன?

ஆயிரத்தில் ஒரு பங்காக கூட நம்பியிருக்க மாட்டாள்.

ஷ்யாம், இப்போது அவளது கணவன்!

ஆனால் அவளுக்கு மட்டும் உரிமையானவனா? தெரியவில்லை… இப்போது தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை. வலித்தது…

எந்த உணர்வையும் காட்டாமல் அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, கண்ணை சிமிட்டிப் புன்னகைத்தான்.

திக்கென்று இருந்தது. ஆயிற்று… எந்த தருணத்தை நினைத்து, எந்த தருணத்தை எதிர்கொள்ள விரும்பாமல் இருந்தாளோ அந்த தருணம் ஆர்ப்பாட்டமான அமைதியோடு!

சோம்பலாக அவளை தழுவியது அவனது பார்வை. உச்சி முதல் பாதம் வரை… உரிமையாக மேய்ந்த அந்த பார்வையிலிருந்த தேவையை அவளால் உணர முடியாமலில்லை. பொருளுணர்ந்தவள் தலை கவிழ்ந்தாள்.

பேச முடியவில்லை…. நிமிர்ந்து பார்க்கவும் முடியவில்லை… அது வெட்கமும் அல்ல… கூச்சமும் அல்ல… புது மணப்பெண்ணின் எதிர்பார்ப்பும் அல்ல…. ஒருவிதமான இறுக்கம்… அந்த தருணத்தை விரும்பாத இறுக்கம்…

மெளனமாக கையிலிருந்த பாலை அவனிடம் கொடுக்க, பாதியை குடித்தவன்,

“மீதிய நீ குடிக்கணும்ன்னு ஏதாவது ரிச்சுவல் இருக்கா?” என்று கேட்டவனின் முகத்தில் அத்தனை கள்ளத்தனம். சிரிப்பும் கூட! அவன் அந்த தருணத்தை மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருந்தான். அத்தனை பிரச்சனைகளுக்கு பின்னான திருமணம். காதல் நிறைவேறிய நிறைவு அவனது முகத்தில் வெளிப்படையாக தெரிந்தது.

கட்டற்று திரிந்தவனை கூட்டுக்குள் அடைத்து, பிரதிபலன் பாராத நட்பும் காதலும் தந்தவள்… இப்போது வாழ்வின் சரிபாதியாக… அர்த்தநாரியின் மறுபாதியாக, உரிமையான மனைவியாக முன்னே நின்று கொண்டிருந்தவளை கண்களால் கொய்தான். அவனது முகம் விகசித்தது… இனி அவள் அவனது உரிமை… முழுக்க முழுக்க அவனுக்கு மட்டுமே உரித்தான பொக்கிஷம்… அந்த பொக்கிஷத்தை களவாட வேண்டும் என்ற வேட்கையிருந்தாலும், அவளது மனதை மனதில் கொண்டு சற்று நிதானித்தான். அவனது நிதானம் அவளுக்காக மட்டுமல்ல… அவனுக்காகவும் கூடத்தான்!

அந்த புகைப்படங்கள்… வீடியோ… உள்ளுக்குள் ரொம்பவுமே அவமானமாக இருந்தது. எதனை கொண்டும் அந்த உணர்வை அவனால் தவிர்க்க முடியவில்லை. யார் அறியக் கூடாதோ அவளே பார்த்ததை தவிர வேறென்ன தண்டனையை தான் அனுபவித்து விட முடியும்? அவளை அணுக மிகவும் தயக்கமாக இருந்ததுதான் உண்மை… ஆனால் அதையெல்லாம் அவளிடம் அவன் காட்டிக் கொள்ளவே இல்லை. காட்டிக் கொள்ளவும் மாட்டான்.

“எனக்கு தெரியல…” என்று அவள் தப்பிக்கும் மார்கத்தை தேட,

“உனக்கு வேணும்னா குடுக்கறேன்…” சில்மிஷமாக கூறியவனுக்கு பதில் தராமல் நகர, அவளது கையை பிடித்து தன்னருகே அமர்த்தியவன், அவளையே காதலோடு பார்த்தபடி,

“வோர்ட் இஸ் எ வோர்ட் மஹா. நான் தான் சொல்லிட்டேன்ல… நீ எப்ப கம்பர்டபலா ஃபீல் பன்றியோ அப்ப மத்ததையெல்லாம் பார்த்துக்கலாம் ஹனி…” என்றவன், “ஆனா இப்ப பேச கூடவா கஷ்டமா இருக்கு?” என்று கேட்க, அவள் இல்லையென தலையசைத்தாள்.

“அப்புறம் ஏன் இவ்வளவு டென்ஷனா, மூடியா இருக்க? ஃப்ரீயா பேசு மஹா…” என கூற,

“ம்ம்ம்…” என்று நெளிந்தாள். அவனது அண்மை அவளை நெளிய செய்திருந்தது.

அவளிடம் தன் கையிலிருந்த பாலைக் கொடுத்தவன், “உனக்கு வேணும்னா குடி… இல்லன்னா வேண்டாம்…” என்று அவளது முகத்தை பார்க்க, சற்று தயங்கியவள், வாங்கிக் குடித்தாள்.

பெரும்பாலும் பால் குடிக்கவே மாட்டாள். பைரவி ரொம்பவும் கெஞ்சித்தான் குடிக்க வைப்பது வழக்கம். முக்கியமாக அந்த பால் வாடையே அவளுக்கு ஆகாது… குமட்டிக் கொண்டு வந்துவிடும். அதனால் அவளை பாலை குடிக்க வைக்க பைரவி கையாண்ட முறைகள் அத்தனையும் வரலாற்று சிறப்பு வாய்ந்தவை.

அப்படிப்பட்டவள் ஷ்யாம் கொடுத்ததை மறுக்க முடியாமல் குடித்தாள். ஆனால் முழுவதுமாக குடிக்க முடியவில்லை. அவள் குடிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தவன், குடித்த டம்ப்ளரை அவள் வைக்க முயல, அதை தடுத்தவன், வாங்கிப் பருகினான், ஒரு சொட்டு விடாமல், அவளை பார்த்தபடியே!

அந்த பார்வை அவளை சிலிர்க்க செய்தது. சிவக்க செய்தது. வெறும் பார்வையால் மனதின் அடியாழம் வரை ஊடுருவ முடியுமா? செய்து கொண்டிருக்கிறானே…

புருவத்தை உயர்த்தி என்னவென கேட்டவாறு டம்ப்ளரை கொடுக்க, மெல்லிய நடுக்கத்தோடு கண்களை இவள் தாழ்த்தியபடி வாங்கி, அருகிலிருந்த சைடு டேபிளில் வைத்தாள்.

“மஹா வேங்கடலக்ஷ்மியான்னே எனக்கு சந்தேகமா இருக்கே…” சிரித்துக் கொண்டே கேட்ட ஷ்யாமை முறைத்தாள்.

“நான் ஸ்டாப்பா எஃப்எம் ரேடியோ மாதிரி பேசிட்டு இருந்த என்னோட செல்லக்குட்டியை காணோமே… நீ எதுவும் பார்த்தியா?” என்று மீண்டும் அவளிடம் வம்பு வளர்த்தவனை முறைத்து விட்டு எழுந்தாள்.

“என்ன?” என்றவனிடம், “ட்ரெஸ் சேஞ்ச் பண்ணனும்…” என்க,

“இதே அழகா இருக்கே மஹா…” என்றவனது பார்வை, அவளை அங்குலம் அங்குலமாக தடவியது.

“இல்ல… சாரி கட்டிட்டு எனக்கு தூங்கி பழக்கமில்ல…” என்று கூற, அவளை குறும்பாக பார்த்தவன்,

“வாவ்… அப்படியா?” என்று சில்மிஷ பார்வை பார்க்க, பல்லைக் கடித்தவள்,

“ஹலோ… நைட்டி போட்டுக்கனும்ன்னு சொன்னேன்…” கடுப்பாக கூற,

“ச்சே… அப்படியா? நான் கூட என்னன்னெமோ நினைச்சுட்டேனே…” கண்ணடித்து குறும்பாக கூற,

“நினைப்ப… நினைப்ப…” என்றபடி எழுந்தவளை, கையை பிடித்து இழுத்தவன் மேல் விழுந்தாள் மஹா.

“கொஞ்ச நேரம் இந்த சாரில இரேன்டி… சும்மா கும்முன்னு இருக்க…” ஜாதி மல்லியை ஆழ்ந்து முகர்ந்தவன், போதையாக காதில் கிசுகிசுக்க, அவனது கைக்குள் அவள் நெளிந்தாள். காதோரம் உரசிய அவனது மூச்சு காற்று வேறு அவளை இன்னும் குறுகுறுக்க செய்ய, “இப்படியெல்லாம் பிஹேவ் பண்ண மாட்டேன்னு எனக்கு நீ ப்ராமிஸ் பண்ணிருக்க ஷ்யாம்…” முயன்று அவனிடமிருந்து விடுவித்துக் கொள்ள முயல, அவனது கை இறுக்கமாக வெற்றிடையை சுற்றி வளைத்து இருந்தது. அவனது உயரத்திற்கு அவள் சிறு கோழிக் குஞ்சாக அவனுள் அடங்கியிருந்தாள்.

“ஹோய்… நான் இதுக்கெல்லாம் ப்ராமிஸ் பண்ணலை… அதுக்கு தான்…” என்றவன் குறும்பாக ‘அதுக்கு’ என்று அழுத்தம் கொடுக்க, கடுப்பானவள், “ஃபிராடு…” என்றவள் வலுகட்டாயமாக அவனது கைகளை பிரித்து விட முயல, “சான்ஸே இல்ல… முடிஞ்சா போ…” என்றவனின் கைகளை அவளால் விலக்கவே முடியவில்லை.

சும்மாவா… அத்தனை அட்வென்சர்களையும் அனாயசமாக செய்பவன், பிட்னஸ்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உடம்பை வெகு ஃபிட்டாக வைத்திருப்பவன் என்பதை தான் அவள் அறிவாளே!

அவனிடம் போட்டி போட்டு எங்கனம் வெற்றி பெறுவது?

“விடு ஷ்யாம்…” என்றவளை இன்னும் கொஞ்சம் இறுக்கி, “கொஞ்ச நேரம் இருந்தா நானே விட்டுடுவேன்… ரொம்ப பண்ண, ப்ராமிசாவது ஒன்னாவதுன்னு சுவாமிஜி பரவச நிலைக்கு போய்டுவேன்… ஜாக்கிரதை…” என்று சிரித்துக் கொண்டே அவளை மிரட்ட,

“எங்கேயோ போ… என்னை விடு…” என்று அவனிடமிருந்து எப்படியாவது விலக வேண்டும் என்று முயல,

“சரி போ… உன்னை அப்புறமா கவனிச்சுக்கறேன்…” என்றவனுக்கு அவளை விடவும் மனமில்லை. ஜாதி மல்லியின் மணம் வேறு அவனை சுண்டி இழுத்தது.

“போன்னு சொல்லிட்டும் பிடிச்சு வெச்சுருந்தா எப்படி போக?” உதட்டை சுளித்தபடி மஹா கேட்க, அவள் சூடியிருந்த பூவை இன்னுமே ஆழ்ந்து முகர்ந்தான். அவனது உணர்வுகளை தட்டி எழுப்பிக் கொண்டிருந்தது பூவா, பூவையா என்று சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் வைக்குமளவு ஆழ்ந்து அமிழ்ந்து போயிருந்தான்.

“இதென்னடி பூ? இப்படி ஒரு ப்ராக்ரன்ஸ்? செமயா இருக்கே…” என்று கேட்க,

“ஜாதி மல்லி…”

“தினம் வெச்சுக்க… செமயா மூடை கிளப்புது…” மயக்கமாக கூற,

“கிளப்பும் கிளப்பும்… மண்டைல ரெண்டு போட்டா நல்லாவே கிளப்பும்…” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அவளது பின்கழுத்தில் அவனது முகத்தை தேய்க்க, மஹாவுக்கு திக்கென்று இருந்தது.

“ஏய்… என்ன இப்படியெல்லாம் பண்ற?” என்றவள் அவனிடமிருந்து விடுபட வெகுவாக முயல,

“அப்படி செய்ய மாட்டேன்னு மட்டும் தானடி சொன்னேன்… இப்படி கூட செய்யக் கூடாதுன்னா எப்படி?” ஹஸ்கியான குரலில் கூறியவனின் வார்த்தைகளில் அவளுக்குள்ளே குளிர் பரவியது.

“எப்படியெல்லாம் செய்ய மாட்டன்னு ஒரு லிஸ்ட் போட்டுக் கொடுத்துடு… ஃபிராடு போர் டுவென்டி…” என்றவள், அவன் அசந்த நேரமாக தன்னை விடுவித்துக் கொண்டு எழுந்தாள்.

குறும்பாக அவளைப் பார்த்து சிரித்தான்.

அறையை அப்போதுதான் சுற்றிலும் பார்த்தாள். வெகு ஆடம்பரமாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. ஹைதராபாத் நாவப்களின் தாக்கம் தெரிந்தது. கட்டிலும் கூட அத்தனை ரசனையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. கட்டிலின் நான்கு புறமும் அழகாக தூண்கள் வேய்ந்து, கால்களும் கூட அத்தனை அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. சுற்றிலும் மெல்லிய வலை. அதை காட்டிலும் சோம்பலான மஞ்சள் விளக்கு அறைக்குள் பரவியிருந்த சூழ்நிலை அத்தனை ரொமான்டிக்காக இருந்தது. அந்த வெளிச்சத்தை ஒளிர்ந்து கொண்டிருந்த லஸ்தர் விளக்குகளும், வாசனை மெழுகுவர்த்திகளை கட்டிலின் இருபுறமும் சுமந்து கொண்டிருந்த குமிழ்களும், தேக்கு மர சாமான்களுமாக அத்தனையும் ஆண்டிக் என்று கூறிக்கொண்டிருந்தது. வீடு முழுக்கவே இப்படித்தான் இருப்பதை அப்போதுதான் நினைத்துப் பார்த்தாள்.

“முப்பது வருஷத்துக்கு முன்ன, இங்க செட்டிலாகும் போது, நவாப் வாரிசு ஒருத்தர் கிட்ட இருந்து நானா வாங்கினார். அந்த வாரிசு மர சாமான்லருந்து அத்தனையும் சேர்த்து கொடுத்துட்டு அப்ராட் போய்ட்டாராம்… ஆனா அத்தனையும் பழமை மாறாம அழகு குறையாம பராமரிக்கறது அம்மா தான்…” அவளது பார்வைக்கு விளக்கம் கொடுத்தான்.

அத்தனை பெரிய அறையின் ஒரு பக்கத்தில் ஆளுயர கண்ணாடி, அத்தனை அலங்காரமாக, இருபுறமும் தந்தத்தை சுமந்து கொண்டு வீற்றிருக்க, அவளது கண்கள் ஆச்சரியத்தை சுமந்தது.

“எங்க வீட்ல இவ்வளவு ரசனையால்லாம் அலங்காரம் பண்ணிக்க மாட்டாங்க…” என்றவளின் கண்களில் அத்தனை ரசனையிருந்தது. மெலிதாக புன்னகைத்தான்.

“இத்தனை நாள்ல நானே இவ்வளவு ரசிச்சு பார்த்ததில்லடி…” சிரித்தான்.

“எப்படி இவ்வளவு அழகான வீட்டை விட்டுட்டு இருக்க?” என்று ரசனை மாறாமல் அவள் கேட்க,

“அப்படீன்னா இங்கயே வந்துடலாமா குல்ஃபி?” என்று புன்னகையோடு கேட்க,

“வாவ்… நிஜமாவா?” என்று ஆச்சரியமாக கேட்டவள், “ஐயோ படிப்பை முடிக்கணுமே…” என்று உண்மையாகவே கவலைப்பட்டாள்.

“அப்படீன்னா படிப்பை முடிச்சவுடனே இங்க வந்துடலாமா?” என்று அவன் கேட்க,

“ம்ம்ம்… கண்டிப்பா…” என்றாள், கண்ணாடியின் முன் அமர்ந்தபடி நகைகளை கழட்டி வைத்தபடி!

உறங்கும் போது அவள் எந்த நகையும் அணிய மாட்டாள். வெகுவாக உறுத்தும். அத்தனையும் கழட்டி வைத்து விடுவாள். இப்போதும் தாலியை மட்டும் விட்டுவிட்டு அத்தனையும் கழட்ட, கழுத்தை ஒட்டிக் கொண்டிருந்த நெக்லஸ் மட்டும் முரண்டு செய்தது. ஹூக்கை கழட்ட முடியாமல் சோர்ந்தவள்,

“ஷ்யாம்…” என்று அழைக்க, நிமிர்ந்து பார்த்தவன், “என்னடி…” என்று கேட்டான்.

“கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்… இதை கழட்ட முடியல…” நெக்லஸை காட்டி கூறியவளை ஒரு மார்கமாக பார்த்தவன், அருகில் வந்து,

“அது மட்டும் தானா குல்ஃபி?” என்று சில்மிஷமாக கேட்க, அவளது முகம் கோபத்தில் சிவந்தது.

“டேய்…”

“இல்லடி… வேற ஏதாவது செயின், வளையல், தோடு இப்படி எதாவது கழட்ட முடியலைன்னா ஹெல்ப் பண்ணலாமேன்னு கேட்டேன்…” என்று குறும்பாக சிரித்தவனை பார்த்து வாயை மூடி சைகை காட்ட,

“ஓகே ஓகே…” என்றவன் நெருங்கி நின்று நெக்லஸை கழட்ட முயல, அவளது சங்குக் கழுத்தும் அதை தொட்டு உறவாடிக் கொண்டிருந்த அவன் அணிவித்த தாலியும் வெண்மையான முதுகும் ஈர்க்க, அவளை இன்னமும் ஒட்டி நின்றவன், அவளது தோளில் முகத்தை பதித்தபடி இருவரையும் கண்ணாடியில் பார்த்தான், அவளது தாடையை நிமிர்த்தியபடி.

கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தை பார்த்தாள் மஹா. அவனது கண்களில் அத்தனை காதல்… அந்த கண்களில் மூழ்கினாள் அவள்!

ஒரு நிமிடம் உலகமே மறந்து போனது… அவனும் அவளுமாக மட்டுமே அவளது உலகத்தில்!

கழுத்திலிருந்து பயணித்த அவனது கைகள் அவளது இடையை சுற்றி வளைக்க, எதிர்க்க தோன்றாமல் மயங்கி அப்படியே அவனது நெஞ்சில் சாய்ந்தாள்.

தோளில் முகத்தை வைத்திருந்தவன், அவளது கழுத்தில் முத்தமிட, மொத்தமாக மயக்கத்தில் ஆழ்ந்தாள்! கண்கள் தாமாக மூடியது!

அவளது மயக்கமும் கிறக்கமும் அவனுக்குள்ளும் மின்சாரத்தை பாய்ச்சியது. அவனையும் அறியாமல் அவனது உதடுகள் கழுத்தை தாண்டி பயணிக்க ஆரம்பிக்க, கைகள் அதன் போக்கில் அத்துமீற, இருவருக்குமே உலகம் மறந்தது.

மஹா அதே மயக்கத்தோடு கண்களை திறந்து பார்க்க, கண்ணாடியில் ஷ்யாமின் பிம்பம், அவளை முத்தமிட்டுக் கொண்டிருக்க, அவனது கண்களில் அவள் கண்ட கிறக்கமும், அவனது மயக்கமும் சட்டென அவளுக்கு வேறு ஒன்றை நினைவுப்படுத்த, மின்சாரம் தாக்கியதை போல அதிர்ந்தாள் அவள்!

இது போலத்தானே அவளையும் முத்தமிட்டான்…

விஜி அனுப்பிய வீடியோவை அவள் முழுவதும் பார்க்கவில்லை. ஆனால் பார்த்த ஒரு சில காட்சிகளிலேயே அவனது ஈடுபாட்டில் தான் அதிர்ந்து போயிருந்தாள்.

அதே மயக்கம்… அதே கிறக்கம் அவனில்… இப்போதும்!

காதலுக்கும் காமத்துக்குமான வித்தியாசத்தை அவன் பட்டியலிடலாம். அவன் அனைத்தையும் அறிந்தவன், ருசி பார்த்தவன். தெளிந்தவன். தெளிவானவன். ஆனால் அதை பற்றிய அடிப்படையே அறியாமல், காதலின் அறிமுகம் மட்டுமே கிடைத்திருக்கும் மகாவை போன்ற ஒரு பெண்ணுக்கு அனைத்துமே ஒன்றாக தெரிவதில் ஆச்சரியமென்ன இருக்கப் போகிறது?

வெகு ஆழமாக கைகளில் நெகிழ்ந்து இருந்தவளின் உடல் திடீரென விறைக்கவும் கண்களை திறந்து அவளது முகத்தை பார்த்தான்.

கலக்கமாக இருந்த அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

சட்டென அவளை விட்டு  விலகியவனுக்கு அத்தனை உணர்வுகளும் வடிந்தன!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!