Kattangal 4

Kattangal 4

கட்டங்கள் – 4
மதுசூதனன், முகிலன், நித்யா  என அனைவருக்கும் அலுவலக வேலை  முடிந்து விட்ட அழகான மாலை பொழுது…

         பெண்களின் மாலை பொழுதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் நாம் நித்யாவின் வீட்டுக்கு செல்லுவோம்.       

                       ஹாலில்  தொலைக்காட்சி அதன் வேலையை செய்து கொண்டிருந்தாலும் நித்யாவின் கவனம் அதில் இல்லை.

” பாக்றீங்களோ இல்லையோ இந்த டீ.வி. எப்பயுமே ஓடிக்கிட்டே தான்  இருக்கு…. ” , என்று தன் கண்ணாடியை  தோளில்   இருந்த தன்  துண்டால் துடைத்த படி நித்யாவின் அருகில்  சோபாவில் அமர்ந்தார்  நித்யாவின் தந்தை ரங்கநாதன் . 

     நித்யாவின் கால் அருகே  அவள்  காபி குடித்த கோப்பை இருக்க, “நித்யா, காபி குடிச்ச கப்பை  கூட , கழுவ போடாம…என்ன சிந்தனை ?” , என்று கேட்டுக் கொண்டே ரங்கநாதன் அருகே சோபாவில்  வந்தமர்ந்தார் பத்மா.

      நித்யா  அமைதியாக அவரை பார்த்தாள். அவளுக்கு பதில் பேச நேரம் கொடுக்காமல் , “நைட் என்ன டின்னர்?” , என்று கையிலிருந்த ரிமோட்டால் சேனலை மாற்றிக் கொண்டே ரங்கநாதன் வினவ,  ” யாருக்கு எந்த பிரச்சனை இருந்தாலும்  கவலை இல்லை.. உங்க அப்பாவுக்கு இது தான் முதல் கவலை.. ” , என்று பத்மா  கழுத்தை நொடிக்க,  நித்யா முகத்தில் புன்னகை பூத்தது.

“கிட்சேன்ல இருந்து வர கடலை பருப்பு , மிளகு வாசனையும் , அப்படியே வர பூண்டு வாசனையும்  இன்னக்கி அரிசி உப்புமா பூண்டு துவையல்னு சொல்லுது அப்பா..” , என்று தன் அறையில் படித்துக் கொண்டிருந்த காயத்ரி கூற, ” படிக்காம  நாங்க  என்ன பேசுறோம்.., என்ன சாப்பாடு..  இதெல்லாம் நல்லா கவனி..” , என்று பத்மா  குரல் கொடுக்க , “தன் தலையில் தானே குட்டிக்  கொண்டு… காயத்ரி உனக்கு அறிவே இல்லை.. இப்படியா வாய் குடுத்து மாட்டிக்கிறது? “, என்று காயத்ரி தனக்கு  தானே கூறிக் கொண்டாள். 

“நித்யா  எதுவும் பிரச்னையா…? ” , என்று மீண்டும் பத்மா  வினவ, ” ஒன்னும் இல்லை அம்மா…  காயத்ரி என்ன செய்றான்னு பாக்கறேன்..  ” , என்று அங்கிருந்து தாயின் கேள்விகளுக்கு பயந்து தங்களுக்கான அறைக்கு சென்று விட்டாள் நித்யா.            

 காயத்ரி ஒரு மேஜை அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து “JAVA program ” எழுதி கொண்டிருந்தாள்.

   மேஜையில் பல புத்தகங்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. நித்யாவின் லேப்டாப் அங்கு தான் இருந்தது. அது அவர்களுது ஸ்டடி ரூம் போலும். சுத்தமாக இருந்தது. புத்தகங்கள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.  ஆங்காங்கே  கிளாஸ் பெயின்டிங்.., பென்சில் ஆர்ட்.., போன்ற பல  கை வேலைப்பாடுகள் சுவரில் காட்சி அளித்தன. 

நித்யா அவள் லேப்டாப் அருகே இருந்த அவள் டைரியை எடுத்து, ஏதோ வரைய ஆரம்பித்தாள்.

      நம்மை போல்  காயத்ரியும் ஆர்வமாக அவள் டைரியை பார்க்க,  அதில் ஒரு சில கட்டங்கள் இருந்தது.

   
   

 

           “அக்கா !! இன்னக்கி யார் மேல கோபம்?  கோபம் வந்த கட்டம் போட ஆரம்பிச்சிருவ…”  , என்று காயத்ரி கையிலிருந்த பென்சிலை கடித்துக் கொண்டே   வினவ, ” பென்சிலை வாயில வைக்காத , நீ என்ன சின்ன குழந்தையா ? இது கூட தெரியாதா?” , என்று நித்யா கடிந்து கூற, “ஒகே ஸிஸ் … பென்சிலை வாயில வைக்கல…” , என்று பென்சிலை மேஜை மீது வைக்க , “ஸிஸ்ன்னு சொல்லாத… எனக்கு இந்த ஸிஸ் , ப்ரோல்லாம் பிடிக்காது…” , என்று நித்யா மீண்டும் கோபமாக கூற, “அக்கா …. ஏன் இவ்வளவு டென்ஷன்… ? கூல்… “, என்று காயத்ரி சமாதானம் செய்ய., “டென்ஷன்ல்லாம் ஒன்னும் இல்லை… ” , என்று நித்யாவின் உதடுகள் கூற, “இந்த மதுசூதனன் கால் பண்ணதுக்கே இவ்வளவு குழப்பம்.., அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா என் வாழ்க்கையே  அவ்வளவு  தான் … இதை அம்மா கிட்ட எப்படி சொல்றது..? நான் சொன்னாலும் நம்புவாங்கனு தோணலை… அம்மா கிட்ட சொல்றத விட, நேரா அவன் கிட்டயே பேசிட்டா என்ன?” , என்ற எண்ணம் அவள் மனதில் தோன்ற , “அதை எப்படி நிறைவேற்றுவது ?” ,  என்று மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தாள்.

       டைரியில் இருந்த கட்டங்களை சுட்டி காட்டி , “அக்கா இந்த கட்டம் அஷோக்கிற்கா? ” , என்று வினவி நித்யாவின் சிந்தையை கலைத்தாள்  காயத்ரி.

     அவளை ஆமோதிப்பது போல்.., மேலும் கீழும் தலை அசைத்தாள் நித்யா.

“காலைலே ரெண்டு கட்டம்ன்னு சொன்ன…? இதுல நாலு இருக்கு …”, என்று கட்டங்களை பார்த்துக் கொண்டே காயத்ரி கேட்க , “2^2 (2 square) என்ன? ” , என்று நித்யா  வினவ, “4  ன்னு சின்ன குழந்தை கூட சொல்லும்..” என்று காயத்ரி கடுப்பாக கூற, ” நான் ரெண்டுன்னு சொன்ன நாலு.. மூணுனு சொன்ன ஒன்பது.. நாலுன்னு சொன்ன பதினாறு.. எல்லாமே square நம்ம பவர் அப்படி ” , என்று நித்யா  பாட்ஷா ஸ்டைலில் கூற, ” நீ எப்படியோ சொல்லு.. நான் இனிமேல் உன்கிட்ட கேட்க மாட்டேன் ” என்று நித்யாவை பார்த்து கை கூப்பி கூறினாள் காயத்ரி.. 

“அந்த பயம்… ” என்று நித்யா கண்ணடித்து கூற, நித்யாவின் மனநிலை மாறி இருப்பது நமக்கு தெரிகிறது.

     இருந்தாலும் கட்டங்களை பற்றிய  விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் பேச்சை தொடர்ந்தாள் காயத்ரி. படிக்கும் பொழுது இப்படி மற்ற கதை பேசுவதும் சுவாரசியம்  தானே…!!!

“அக்கா.. எதுக்கு இப்படி கட்டம் போடுற…? நான் கேட்டா   என்னை  சின்ன பொண்ணுன்னு  சொல்ற.. காலேஜ் முடிச்சிட்டா  எனக்கும்  உன்னை மாதிரி கல்யாணம்  பண்ணிருவாங்க…. எத்தனை  வருஷம் தான் என்னை  சின்ன பொண்ணுன்னு சொல்லுவ? கோபம் வந்தா ஏன் கட்டம் போடுறன்னு சொல்ல  முடியுமா ? முடியாதா? ” , என்று  புத்தகத்தில் உள்ள காகிதத்தை தன் கைகளால் திருப்பிக் கொண்டே காயத்ரி  அழுத்தமாக வினவ, “சொல்ல முடியாது..” , என்று தன் தலையை  இடது பக்கமாகவும் வலது பக்கமாகவும் அசைத்தாள் நித்யா.

            “அக்கா … ப்ளீஸ் அக்கா.. அடுத்த மாசம் உனக்கு கல்யாணம்…, அப்புறம் எனக்கு இதெல்லாம் யார் சொல்லுவா..? ” , என்று தன்மையாக காயத்ரி கேட்க, “அதிகாரம் பண்ணா  நம்ம கிட்ட எதுவும் நடக்காது… இந்த மரியாதை எப்பவுமே இருக்கனும்… ” , என்று தன் தங்கையை செல்லமாக மிரட்டிவிட்டு, தோரணையாக மேஜை மீது ஏறி அமர்ந்தாள் நித்யா.

 

         மேஜை மீது ஏறி சம்மணமிட்டு அமர்ந்த நித்யாவை ஆர்வமாக பார்த்தாள், காயத்ரி.

             “கட்டங்களுக்கும் நம்ம வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் சொல்லு? “,  என்று நித்யா  வினவ, ” தெரியாது ” , என்று தன் உதடுகளை பிதுக்கி, பாவமாக தலை அசைத்தாள் காயத்ரி.

 ” சொல்றேன் கேளு….” , என்று கூறிய நித்யா அடுத்த கேள்வியை கேட்டாள்.

” நம்ம மாடி வீட்டு சௌந்தர்யா அக்காவுக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆகலை…?” , என்று நித்யா வினவ, ” ஜாதகம் சரி இல்லைன்னு அம்மா சொன்னாங்க … ” , என்று காயத்ரி உடனடியாக பதில் கூற, “அசோக்கிற்கு வேலை இல்லாம ஊர் சுத்திகிட்டு இருக்கிறதுக்கு அவங்க அப்பா என்ன சொன்னங்க ?” ,  என்று நித்யா அடுத்த  கேள்வியை தொடுக்க , ” அசோக்கிற்கு சனி பயிற்சி.., அடுத்த வருஷம் வேலை கிடைச்சிருமுன்னு அவங்க அப்பா நம்ம அப்பா கிட்ட பேசிட்டு இருந்தாங்களே…..” , என்று காயத்ரி ஆர்வமாக கூற, ” கரெக்ட்… ஒரு சாரார்  வாழ்க்கை கட்டங்களுக்குள்  அமைந்திருக்குனு நம்பறாங்க… ஆனால் நான் என்ன நம்புறேன் தெரியுமா…?  ஒவ்வொரு மனிதனுக்கும்  ஒவ்வொரு சூழ்நிலை.., சூழ்நிலைனு மனிதன் சிக்கி கொண்டிருக்கும் அந்த கட்டங்களை அவன் எப்படி கையாளுகிறான் ? அவன் எப்படி அந்த கட்டத்தை மனித  நேயத்தோடு  கடந்து வருகிறானோ…,  அப்படி தான் அவன் வாழ்க்கை அமையும்.” , என்று நித்யா  நீளமாக கூற, “அடேங்கப்பா … கட்டத்துல , இவ்வளவு விஷயம் இருக்கா?” , என்று வாயை பிளந்தாள் காயத்ரி.  “ஆம் ” , என்று தன் தலையை மேலும் கீழும் நித்யா தலை அசைக்க , “இதுக்கும் நீ வரைஞ்சிருக்கிற கட்டத்திற்கும் என்ன சம்பந்தம்..?” , என்று காயத்திரி வினவினாள்.    

” யாராவது தப்பு பண்ணினா , அவங்க சூழ்நிலைனு  சும்மா விட்டுவிடுவேன்…. ஆனால் திரும்ப திரும்ப தப்பு பண்ணினா சும்மா  விட முடியுமா…?  எல்லாருக்கும் என் மனசை பொறுத்து excuse குடுப்பேன்.. ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒரு excuse இந்த அசோக்கிற்கு 4 excuse குடுத்தேன். ஒழுங்கா இருக்கிறதுக்கு ஒரு chanceனு சொல்லலாம்.. ஒவ்வொரு கட்டமா color shade பண்ணுவேன்.. கட்டம் முழுக்க கலர் மாறிடுச்சுனா  அவ்வளவு தான்… ” , என்று நித்யா கூற, “அன்னக்கி shade பண்ண கலர் அழிச்ச  மாதிரி இருந்திச்சு ?” , என்று சிந்தித்தவாறே  தன் தலையில் தட்டி கொண்டே  காயத்ரி வினவ,  ” எல்லா கட்டமும் முதல்ல வெள்ளையா இருக்கும்.. தப்பு பண்ண பண்ண கலர் மாறும்.. ஒரு வேளை  அப்படி நல்லது பண்ணினா திரும்ப வெள்ளையா மாத்திருவேன்… “, என்று நித்யா  பதில் கூற, “அப்படி அசோக் என்ன நல்லது பண்ணான்?  நீ வெள்ளையா மாத்துற அளவுக்கு ? ” , என்று காயத்திரி கண்களை சுருக்கி  கொண்டு எதிர் கேள்வி கேட்க, ” ஒரு நாள் ரோட்ல வண்டி ஸ்டார்ட் ஆகலை.., ஸ்டார்ட் பண்ணி கொடுத்தான்..  ஆனால் இப்ப எல்லா கட்டமும் கலர் மாறிடுச்சு… So we are teaching him a lesson”, என்று கடுமையாக  நித்யா  கூற, ” மேஜை  மேல ஏறி  உக்காந்து  என்ன பேச்சு…..? சாப்பிட வாங்க ” , என்று பத்மா கையில் தட்டோடு அவர்களை  அழைத்தாள்.  “வரோம் அம்மா..” , என்று காயத்ரி பதில் கூற, “என் கட்டங்கள் logic எப்படி இருக்கு ?” , என்று நித்யா ஸ்டைலாக மேஜையிலிருந்து இறங்கிய படி வினவினாள். “பயங்கர மொக்கை.., நீ பெரிய மஹான்.. எல்லாருக்கும் மன்னிப்பும்  தண்டனையும் கொடுப்பதற்கு… இதுக்கு நான்  ” Java ” ஒழுங்கா  படிச்சிருக்கலாம்.. , என்று காயத்ரி  தனக்குள் முணுமுணுத்தக் கொண்டு நித்யாவின் கையில் அகப்படாமல் ஹாலுக்கு சென்று  அரிசி உப்புமாவை ருசிக்க ஆரம்பித்தாள் காயத்ரி

 

அரிசி உப்புமாவின் ருசியில் அனைவரும் தங்களை மறந்து இரவு உணவை முடித்து விட்டு படுக்க சென்றனர்.

    அனைவரும் உறங்க , தூங்காமல்  ஜன்னல் வழியாக வானத்தை பார்த்தாள் நித்யா.., வானம் கருமையாக காட்சி அளித்தது.  மெலிதாக காட்சி அளித்த நிலா. அந்த அழகு அவள் மனதை கவர்ந்தது.  நித்யாவின் மனம் நிலாவின் அழகில் இன்று மயங்கவில்லை . மணியை பார்த்தாள் நித்யா.

 

மணி 11:45

            இயற்கையை ரசிக்க இது  நேரம் இல்லை என்று எண்ணி  வேகமாக எழுந்து தன் தலையணை அடியில்  வைத்திருந்த பொருட்களை எடுத்து நைட் டிரஸ் பாக்கெட்க்குள் ஒளித்து வைத்தாள்.  நித்யா தன் தங்கையை எழுப்ப , காயத்ரி தூக்கத்தில் கண்ணை கசக்கி கொண்டு “என்ன?” என்று சிணுங்கினாள்.

     வெளியே வரும் படி செய்கை செய்த நித்யா  மெதுவாக திருட்டு பூனை போல் மெதுவாக நடக்க , அவளை திட்டி கொண்டே அவளை பின் தொடர்ந்தாள் காயத்ரி.

         மெதுவாக வீட்டை திறந்து வெளியே வந்த நித்யா, மாடிப்படியில் உள்ள  கைப்பிடியில் ஏறி , அவர்கள்  அபார்ட்மெண்டில் உள்ள காமெராவை தன் முகம் தெரியாத வண்ணம்  கைகுட்டையையால் மறைத்தாள்.

“இதுவே உனக்கு வேலையா போச்சு…. நம்ம  அபார்ட்மெண்ட் கேமரா ஒழுங்கா வேலை செய்யாததால் நீ தப்பிக்கற.. ” , என்று காயத்ரி படி மீது நின்று கொண்டு  அங்கலாய்க்க, “உஷ்.. ” , என்று தன் ஆள் காட்டி விரலை வாய் மீது வைத்து அமைதியாக இருக்கும் படி செய்கை காட்டினாள் நித்யா…

” என் தூக்கத்தை கெடுத்துட்டு இது வேற…? ” , என்று நித்யாவை மனதிற்குள் திட்டினாள் காயத்ரி .

 

     நித்யா  மெல்ல நடந்து அசோக்கின் பைக் அருகே செல்ல, “எங்க போற..  என்ன செய்ய போறோம் ?” , என்று காயத்ரி கேட்க , நித்யா  பாக்கெட்டில் உள்ள ரோஜா பூக்களோடு நின்று கொண்டிருந்த மிக்கி ஸ்டிக்கரை காட்டினாள். சுமார் 50 ஸ்டிக்கர் நித்யாவின் கையில் இருக்க, மிக்கி ஸ்டிக்கர்ஸை பார்த்த அதிர்ச்சியில் காயத்ரிக்கு தூக்கம் முற்றும் கலைந்தது.

 

” காயு …  மிக்கி ஸ்டிக்கர்ஸ்  நீயும் நானும் அஷோக் பைக்கில ஒட்டனும்…”, என்று நித்யா கூற, “வேலை ஆகணும்னா  காயுன்னு செல்லமா கூப்பிட வேண்டியது.. “, என்று முனங்கி கொண்டே பைக்கில் ஒட்ட ஆரம்பித்தாள் காயத்ரி.  இருவரும் அசோக்கின் பைக்கில் ஆங்காங்கே மிக்கி ஸ்டிக்கர்ஸ் ஒட்ட அவர்கள் அருகே ஒரு காலடி ஓசை கேட்டது. ” அக்கா யாராவது  பார்த்துட்டா செத்தோம்.. ” , என்று காயத்திரி கூற,  “டென்ஷன் ஆகாத..  அமைதியா இங்க வந்து ஒளிஞ்சிக்கோ… ” , என்று நித்யா  கூற, இருவரும் சுவரோடு பதுங்கினர்.

இரவு 12:10

       தன்னை வெல்ல யாரும் இல்லை என்ற நம்பிக்கையில் மதுசூதனன் அவன் அறையில்  நிம்மதியாக  உறங்க , தங்களை யாரும் பார்த்து விட கூடாது என்று சுவரோரமாக பதுங்கி நின்று கொண்டிருந்தனர் நித்யாவும் காயத்ரியும்.

 

      இவர்களின்  விடியல்  எப்படி இருக்கும்??????

                                 கட்டங்கள் நீளும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!