Ennai Ko(Ve)llum Vennilavei – 22

~22~

மதி சென்ற கால் டாக்சி அத்தெரு முனையைக் கடக்கவும் ஆதிக்கு அழைப்பதற்காக ரேகா வீட்டிற்குள் ஓட, வீட்டின் தொலைப்பேசி அடித்து ஓய்ந்து மீண்டும் ஒலியெழுப்பத் துவங்கியிருந்தது..

விரைந்து சென்றவள் அழைப்பை ஏற்றுக் காதுக்கு கொடுக்க, ஆதியின் குரல் ரேகாவின் செவிகளைத் தீண்டியதும் தான் அவளுக்குப் போன தைரியம் திரும்பி வந்தது..

ரேகாவிற்கு மனதினுள் பயம் கவ்வத் துவங்கியிருந்தது..எங்கே மதி வீட்டை விட்டுச் சென்றதற்கு ஆதிக்கும் ராஜும் தன்னைத் தவறாக நினைத்து விடுவார்களோ என்ற சஞ்சலமும்..மதியின் பெற்றோர்கள் தனது அத்தை மாமா என அனைவரிடமும் என்ன சொல்வது என்ற யோசனையும் அவளை அலைக்கழிக்கத் தொடங்கிய வேளையில் ஆதிக்கின் அழைப்பு கொஞ்சமாய் நிம்மதியை கொடுக்கத் தவறவில்லை..

“ரேகா லைன்ல இருக்கியா..?” கோபத்தில் இருக்கிறான் என்பது அவனது உச்சரிப்பில் இருந்தே தெரிய

“சொல்லுங்க அத்தான்..” குரலில் நடுக்கத்தில் இருந்தே அவளது பயத்தை உணர்ந்தவன்

“மதி கிளம்பிட்டாளா மா..” என்றான் சாதாரணம் போலும்

“ஆமா..நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காம கிளம்பிட்டாங்க” அழுகையில் குரல் தழுதழுக்க அவள் பேசியதும், அலைபேசியை ராஜின் கையில் திணித்தவன், விருட்டென்று வேணி அமந்திருந்த இடத்திற்கு சென்றுவிட்டான்..

ராஜிற்கு என்ன ஏதுவெனத் தெரியாவிட்டாலும் ஏதோ பிரச்சனை என்ற வரையில் புரிந்து தான் இருந்தது..இதில் ஆதிக் ரேகாவிடம் பேசிவிட்டு தன்னிடம் போனை கொடுத்து சென்றுவிட, பேசியைக் காதுக்கு கொடுத்தவன் அவளின் அழுகையொலிக்கு பின்பு தான் ஆதிக் போனை கொடுத்துச் சென்ற காரணம் புரிந்தது.

“தனா…” ராஜின் குரலைக் கேட்டதும்

“இல்ல ராஜ்..மதி நான் சொல்ல சொல்ல கேட்காம போயிட்டா..” எதற்காக இதை தன்னிடம் சொல்கிறாள் எனப் புரியாமல் விழித்தவன்

“சரி விடு…நீ போய் ரெஸ்ட் எடு..ஆதி அண்ணா அண்ணிய பார்க்க தான் போறாங்க…நாங்க இன்னும் அரை மணி நேரத்துல வந்திடுவோம்..”

“சரி..” மெல்லமாய் உரைத்தவளுக்கு இப்போது அடிவயிறு பயங்கரமாய் கலக்கியது..

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனைவரும் வந்ததும், வேணி கீழிருந்த படியே ரேகாவை அழைக்க, அறையில் இருந்து வெளி வந்தவளுக்கு இவர்களை எப்படிச் சமாளிக்க போகிறோம் என்ற கலக்கம் கொஞ்சமும் குறையாமல் இருந்தது..

தயங்கித் தயங்கி அவள் வருவதைக் கண்ட ராஜ், “என்ன ஆச்சு இவளுக்கு..?” என எண்ணிக் கொண்டிருக்கும் போதே..

“சாப்பிட்டியா மா..?” வாஞ்சையாய் கேட்கும் வேணியின் அருகில் அமர்ந்திருந்தாள் ரேகா

“சாப்பிட்டேன் அத்தை..”தரையை வெறித்துப் பதிலளிக்க

“மதி சாப்பிட்டாளா..?” என்றார் அடுத்த கேள்வியாய்

எப்படி ஆரம்பித்து என்ன சொல்வது எனச் சில நொடிகள் அவள் தயங்கும் போதே, ஆதிக் கூடத்திற்குள் நுழைந்திருக்க, “நல்லா சாப்பிட்டு தான் கிளம்புனான்னு சொல்லு ரேக்ஸ்..” அவனது முகத்தில் இருந்த ரௌத்திரம் வார்த்தையில் இல்லை..

அவனது பதிலில் எச்சிலை கூட்டி விழுங்கிய ரேகா திருதிருவென விழிக்க, “நல்ல படியா ப்ளைட் ஏறிட்டாளா டா..?” வேணி அதிக்கிடம் கேட்க, புரியாத பார்வை பார்த்து நின்றாள் ரேகா

“ம்..” என ஒற்றைச் சொல்லில் பதிலளித்தவன்

“நான் ஆபிஸ் போகனும் எனக்கு முக்கியமான வேலையிருக்கு..நாளைக்கு மார்னிங் ராஜ் நீ வரும் போது எனக்கு ஒரு செட் ட்ரெஸ் கொண்டு வா..” அனைவருக்கும் பொதுவாய் உரைத்தவன், டக் இன் செய்திருந்த சர்ட்டை வெளி எடுத்துவிட

தமையனின் மனம் அறிந்த ராஜும், “சரி அண்ணா..” என்றுரைக்க அவனது அண்ணா என்ற விளிப்பில் ஆதிக்கின் இதழில் விரக்தியாய் ஒரு சிரிப்பு தோன்றி மறைந்தது..

அவனது சிரிப்பு எதனால் என ரேகாவிற்கு புரியாமல் இல்லை…ஆனாலும் இங்கு நடக்கும் எதுவும் புரியவில்லை என்பதால் வாயை மூடிக் கொண்டாள்..

வேணிக்கு காலையில் இருந்து ராஜ் ஆதிக்கை அண்ணா என்று அழைப்பது வியப்பைத் தர, இந்த மாற்றத்தை யாரிடம் கேட்கலாம் என நினைத்துக் கொண்டிருந்தவர் இப்போது ரேகாவை தனியே அழைத்து விவரம் கேட்டவருக்கு, நேற்று நடந்ததை மளமளவென ஒப்பிக்க, வேணியின் மனதில் மதியின் இடம் பல மடங்கு உயர்ந்த போதும் ஒரு வகையில் மனம் குறுகுறுக்கத் தான் செய்தது.

அனைவரிடமும் தலையசைத்து ஆதிக் வெளியேற, அவனின் பின்னோடு சென்ற செழியன், “மாப்பிள்ளை ஒரு நிமிஷம்,,” என்றார் தவறிழைத்துவிட்ட குரலில்

அவளது தவறுக்கு இவரை குற்றம் சுமத்த மனதில்லாத ஆதிக், “சொல்லுங்க மாமா..”என்றான் தயவான குரலில்

“மன்னிச்சிருங்க…” அவர் பேச ஆரம்பிக்கும் போது கை நீட்டித் தடுத்தவன்

“மாமா…மதியை பத்தி ஏதாவது பேசனும்னா தயவு செஞ்சு நீங்க வீட்டுக்குள்ள போயிடுங்க..எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க எதுவாயிருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்… அம்மா அப்பாகிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்..” அவரது பதிலை எதிர்பார்க்காதவன் விருட்டென்று வண்டியைக் கிளப்பி சென்றுவிட, மதியின் கிறுக்குத் தனத்தை நினைத்து வருந்திய செழியனும் குழலியும் புண்பட்ட மனதை மறைத்து அனைவரிடமும் விடைபெற்று வீட்டிற்குக் கிளம்பினர்..

அவளது அவசரம் இங்கு அனைவருக்கும் அவஸ்தையை கொடுத்தது தான் மிச்சமாய் இருந்தது.

காரில் அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தவனுக்கு எதிலோ தோற்ற உணர்வு தான்…மொத்தமாய் தனது மனதை ஒரு நாளில் மாற்றிச் சென்றிருந்தாள் மதி என்பதை அவன் ஒத்துக் கொள்ள தயாராய் இல்லை..

விமானத்தில் கண்களை மூடிச் சாய்ந்து அமர்ந்திருந்தவளின் மனம் காதலால் நிரம்பியிருந்தது..

நேற்று ஆதிக்கிடம் தனக்குக் காதல் என்றாள் பிடிக்காது எனச் சொல்லிய சீண்டிய பின் தான் தனது காதலைத் தனது எதிர்பார்ப்பை உணர்ந்திருந்தாள் மதியழகி

இன்னும் பத்து நாட்கள் விடுப்பு மீதமிருக்கத் தனது மனமும் மூளையும் சொன்னதை ஏற்க முடியாமல் தான் இந்த ஓட்டம்..

காதல் பிடிக்காது எனச் சொன்னவள் ஒரே நாளில் காதல் கொண்டாள் என அவனிடம் சொன்னாள் என்ன நினைப்பான்..

தான் ஒருவனை நினைப்பதா..? என்ற எண்ணமே அவளை அவனிடம் இருந்து தூர ஓட வைத்தது..

இதுவும் ஒருவகையான ஈகோ தான்..ஆனால் அவளுக்குப் புரியாத ஒன்று எட்டி நின்றால் தான் காதல் திக்குமுக்காட வைக்கும் என்பது..

இருவரின் மனமும் சில மணி நேரத்திற்கு முன் நடந்தவற்றை அசை போட விழைய, அதை முயன்று தடுத்த ஆதிக்கின் வேகம் காற்றை கிழித்து பீச் சாலையில் விரைந்தது..

ரேகாவிடம் கேட்டுவிட்டு விமான நிலையத்தை நோக்கி வண்டியைச் செலுத்திய ஆதிக்கின் மனதில் தனது பேச்சை அவள் கேட்கவில்லை என்ற கோபம் தான் இருந்ததே தவிர அவளை இங்கிருந்து அனுப்பும் எண்ணம் சிறிதும் இல்லை..

விமான நிலையத்தினுள் தனது பேக்கை எடுத்துக் கொண்டு சென்றவள் வாயிலை அடைந்து ஏஜென்ட்டிடம் டிக்கெட்டை வாங்கிக் கொண்டவள், கைப்பையில் பாஸ்போர்ட்டை தேட, அது வைத்த இடம் காலியாக இருந்தது..
மறுபடியும் தேடிப் பார்க்க மேக்கப் சாதனங்கள் அனைத்தும் கைகளில் தட்டுப்பட்டாலும் பாஸ்போர்ட் மட்டும் கையில் தட்டுப் படவேயில்லை..

ஓரமாய் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தவள் கைப்பை முழுவதும் கீழே தட்டித் தேடினாலும் வேண்டியது மட்டும் கிடைக்கவேயில்லை..

உடை அடுக்கி வைத்திருந்த பேக்கை திறந்தவள் அதிலும் தேடி முடிக்க விடையென்னவோ பூஜ்யம் தான்..

பதட்டம்..ஏமாற்றம்…எரிச்சல் என அனைத்தும் போட்டி போட அலைபேசியை எடுத்தவள் தனது அழைப்பை ஆதிக்கு விடுத்தவளின் முகம் கோபத்தில் கடுகடுவென இருந்தது..

அந்தப் பக்கம் ஆதிக்கின் குரல் கேட்டதும், “நான் மதியலகி பேசுறேன்..என்ன நினைச்சுட்டு இருக்க நீ..?”
ஏகபோகத்தில் அவள் பேசத் துவங்கவுமே அவளை நெருங்கியிருந்தவன், அவளின் அருகே சென்று காதில் இருந்து போனை எடுத்து

“சத்தியமா உன்னை இல்ல மதியழகி…” கோபமும் நக்கலும் கலந்து ஒலித்த ஆதிக்கின் குரலில் நிமிர்ந்து பார்த்தவளுக்கு அவனது பதில் ஏமாற்றத்தைத் தர..

அந்த ஏமாற்றத்தைத் தாங்க வலுயில்லாதவளின் மனம் கோபத்தின் பின்னே செல்ல, “ரொம்ப நல்லது ஆதிக்..என்னோட பாஸ்போர்ட் கொடு…”

“எங்க போற மதி..?” தீர்க்கமான பார்வையில் அவன் வினவ

அதே தீர்க்கமான பார்வையுடன் அவனை ஏறிட்டவள், “உனக்கு எதுக்கு..? அது தான் நீ என்னை தேடலையே அப்புறம் என்ன..?” அவளது கேள்வியில் புருவத்தைச் சுருக்கி விரித்தவன்..

“ஏன் நான் உன்னைத் தேடலைனு கவலையா..?” குறும்பு கூத்தாட அவன் வினவ, தன்னைக் கண்டு கொண்டானே என்பதில் சிவந்த முகத்தை மறைத்தவள்

“எனக்கு உன்கிட்ட விளையாட டைம் இல்ல…என் பாஸ்போர்ட்டை கொடு..”என்றாள் வாட்சை பார்த்துக் கொண்டே

“உன் பாஸ்போர்ட்டை என்கிட்ட கேட்டா எப்படி மதியழகி..?” அவனது முழுநீள விளிப்பில் முகத்தைச் சுருக்கியவள்

“ஹேய் மேன் எனக்கு டைம் ஆகிட்டு இருக்கு..கம் ஆன்..” அவன் முன்னே கை நீட்டி அவள் கேட்டதும்
போன கோபம் அவனுக்கு மீண்டது, “மதி வா வீட்டுக்குப் போகலாம்..” என் பேச்சை தட்டாதே என்ற எச்சரிக்கையுடன் கூடிய அவனது அழைப்பைப் புறம் தள்ளியவள்

“நான் எதுக்கு உன் கூட வரணும் ஆதிக் வர்மா…நீ யாரு நான் எதுக்கு உன் கூட வரணும் சொல்லு..” அடிக்குரலில் சீறியவளை ஊன்றிக் கவனித்தவன்..

“உன்னால வர முடியாதா மதியழகி..?”அவனது கேள்விக்கு பதிலளிக்காமல் முகத்தைத் திருப்பி கொள்ள

“ஊப்ஸ்..” வேகமும் கோபமும் ஒன்றாய் சேர பெரூமூச்சை விட்டவன்..

கோட்டின் உள்ளே கையைவிட்டு பாஸ்போர்டை வெளியே எடுத்தவன் அவளது கைகளில் திணித்து, “மதி…இப்போ எதுக்காக இங்கயிருந்து போக முடிவெடுத்த அதை மட்டும் சொல்லிட்டு போ..” இறுகிய குரலில் அவன் கேட்க

“பிடிக்காத ஒட்டாத இடத்துல இருக்க முடியாது..” அசட்டையான அவளது பதிலில் கோபம் கிளர்ந்தெழ

“அப்போ என்னை பிடிக்கல அப்படி தான டி..” அவனது வார்த்தையில் கொஞ்சம் வருத்தமிருந்ததோ..?

அவனை பிடிக்கவில்லையா? அவனை தன்னைமீறி பிடிக்கப் போய் தானே இந்த ஓட்டம் ஓடுகிறாள்…

“நீ தேவையில்லாம பேசுற ஆதி…நீ விரும்பாம ஒரு பந்தத்துல இருக்க வேண்டிய அவசியமென்ன..? இப்போ நீ என்னைப்பிடிச்சதால கூப்பிடுறீயா…?” அவளின் கேள்விக்கு அவனால் பதிலளிக்க முடியவில்லை என்று சொல்வதை அவனுக்குத் தெரியவில்லை..

பார்த்து ஒரு வாரமே ஆகியிருந்தவள்..நேற்று தான் திருமணமே முடிந்திருந்தது…இருபத்தி நாலு மணி நேரத்தில் அவளுடன் இருந்த தருணத்தை வைத்துச் சொல்ல வேண்டும் என்றால் அவனுக்குப் பிடித்திருந்தது தான் ஆனால் இவளது கேள்விக்கு பதிலளிக்க இந்த பிடித்தம் போதாதே!

தனது மனதில் இருந்தவற்றை அவளிடம் மறையாமல் அவன் சொல்ல, ‘தனக்கு மட்டும் ஏன் இவனை ஒரு நாளில் பிடித்து போனது’ தன்மேல் தனக்கிருந்த கோபம் வலுப்பெற

“ஆதிக்..ஸ்டாப் இட்…இதுக்கு மேல பேச ஒண்ணுமில்ல…” விடுவிடுவென முன்னே நடந்தவளின் அவசரம் ஆதிக்கை திகைக்க வைத்தது தான் உண்மை

எல்லாவற்றிலும் அவசரம் அவசரம் என்றால் எப்படி…ஒருவித எரிச்சல் கோபத்தை விளைவிக்க, “சரிதான் போடி..” என மனம் நினைத்த அடுத்த நொடி தாயின் உடல்நிலை அச்சுறுத்த

ஓடிய பொறுமையை இழுத்துப் பிடித்தவன், “மதி, எதுவாயிருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்..இப்போ வா..” அவளது கைபிடித்து அழைத்தவனை முறைத்தவள்..

“ஆதிக்..ப்ளீஸ் லெட் மீ கோ..உனக்கு என்னைப் பிடிக்கல இந்த கல்யாணத்தைப் பிடிக்கல அப்புறம் எதுக்கு இந்த வாழ்க்கை..”

“இந்தக் கல்யாணத்தை நான் மதிக்கிறேன் மதி..”

கலாச்சாரத்தைப் பற்றி தெரிந்தால் அல்லது காதலின் நுனி வேரை அறிந்திருந்தால் அவன் மதிக்கிறேன் என்ற சொன்ன வார்த்தையின் மறை பொருளும் அவளுக்குப் புரிந்திருக்கும்..

“மதிக்கிறேன் மிதிக்கிறேன்னு இரிட்டேட் பண்ணாத ஆதிக்..” ஆத்திரத்தில் கத்தியவளை சுற்றி நின்றோர் ஒருநிமிடம் நின்று கவனித்து கடந்து செல்ல, அதில் அவனது தன்மானம் அடிவாங்கியதை அவள் உணர்ந்திருக்க வாய்பில்லை..

“யுவர் விஷ்…நான் கிளம்புறேன்..இப்போ நீ இங்க இருந்து அதாவது என்னைவிட்டு போகனும்னு முடிவெடுத்துட்டு இனி எப்பவும் என்னைத் தேடி வரக் கூடாது இதுக்கு சம்மதம்னா இங்கிருந்து போ..” அடிக்குரலில் அவன் சீற

மதியின் ஈகோ அவளை அடக்கியதில் அவன் முன்னாலே பாஸ்போர்ட் டிக்கெட் உடைமைகள் என அனைத்தையும் கையில் எடுத்தவள் திரும்பியும் பாராமல் உள்ளே சென்றுவிட்டாள்..

அவள் கண்களில் இருந்து மறையும் வரை கவனித்தவன், அங்கிருந்தே தெரிந்தவர் ஒருவருக்கு அழைத்து சில மணி நேரம் பேசியவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு அவள் சென்றுவிட்டாள் என்பதை உறுதி செய்து அங்கிருந்து தனது வண்டியைக் கிளப்பினான்..

நடந்தவற்றை அசைபோட்ட இருவருமே சிறிது நேரத்தில் தங்களது வேலையிலும் தூக்கத்திலும் ஆழ்ந்துவிட, தூக்கத்தைத் துளைத்து மெளனமாய் கண்ணீர் சிந்திய வேணியின் மனம் முழுவதும் துயரம் தான்..

மருத்துவமனையில் இருந்து கிளம்பும் நேரத்தில் வேணியிடம் வந்த ஆதிக், “அம்மா மதிக்கு ஏதோ வேலை இருக்காம்..சோ அவசரமா கலீபோர்னியா கிளம்புறா..நான் போய் பார்த்துட்டு வரேன்..” என்றவன் வெளியே கிளம்பிவிட, அவனுடனே வந்த செழியன்

“என்ன மாப்பிள்ளை சொல்றீங்க..? இன்னும் அவளுக்கு லீவ் முடியலையே” அவளது பெற்றோரிடம் மறைக்க ஒன்றுமில்லை என்றாலும் என்ன ஆனது எனத் தெரியாமல் அவனும் தான் என்ன சொல்லிவிட முடியும்

“தெரியல மாமா…எனக்கு இப்போ தான் பேசுனா…பை’னு மட்டும் தான் சொன்னா…பார்போம்..” என்றவனிடம் நானும் வரேன் என்ற செழியனைத் தடுத்தவன்

“மதி என்னோட வைஃப் எந்த ப்ராப்ளம் நாளும் நானே பார்த்துக்கிறேன்..அவள என் அம்மா அப்பா ஏன் அவளோட அம்மா அப்பாவாவே இருந்தாலும் திட்டி மிரட்டி பேச அனுமதிக்க முடியாது..” என்றவனின் புத்தி கூர்மையை இந்நேரத்திலும் செழியனால் மெச்சாமல் இருக்க முடியவில்லை..

அவனது கார் வெளிவாசலைக் கடந்ததும் குழலியை தனியாய் அழைத்த செழியன் மாப்பிள்ளையிடம் பேசியதை சொல்ல, “தன்னால் தான் இவ்வளவும்” என்ற குற்றவுணர்ச்சியில் வாயடைத்து நின்றுவிட்டார் குழலி
அங்கு நடக்கும் விடயங்களில் இருந்தே எதுவோ சரியில்லை என்பதைப் புரிந்து கொண்ட வேணிக்கும் தர்மருக்கும் யாரைக் கேட்பது எனத் தெரியவில்லை..

தன்னைவிடுத்து தளர்ந்து போயிருந்த தர்மரின் கரம் பற்றிய வேணி, “எல்லாம் சரியா போகும்..இன்னும் கொஞ்ச நாளுல மதி வந்துட போகுறா அப்புறமென்ன..?” இந்த வார்த்தைகளை உதிர்த்த வேணிக்கே அவள் வருவாளா என்ற நம்பிக்கை ஆட்டம் கண்டு கொண்டிருந்தது என்றால்..

அவரது வார்த்தைகளைக் கேட்ட தர்மருக்கும் அதே நிலை தான் ஆனாலும் மனைவியின் நம்பிக்கையைப் பொய்யாக்க விரும்பாதவர், “ஆமா வேணி..சரி போகலாமா ரேகா தனியா இருப்பா..வா..” என்றவரின் கரம் கோர்த்து நடந்த வேணி

“அனைத்தும் சரியாகிவிட வேண்டும்..” எனக் கடவுளுக்கு வைத்த வேண்டுதல் அவரின் செவிகளை அடையும் முன்னே காற்றோடு கலந்திருந்தது..

மதி ஆதியாய் தகிப்பாள்…