கட்டங்கள் – 5
இரவு மணி 12:11
“அக்கா !! யார் இது புதுசா இருக்கு…? ” , என்று வண்டிக்கு பின் மறைந்து நின்ற காயத்ரி நித்யாவின் காதில் கிசுகிசுக்க, “உஷ்..” என்று நித்யா அவள் உதடுகள் மீது கை வைத்து செய்கை காட்டினாள்.
“இந்த அபார்ட்மெண்ட்ல இப்படி ஒரு ஹண்ட்சம் நான் பார்த்ததே இல்லையே..” , என்று நித்யாவின் தோள்களில் கை போட்ட படியே காயத்ரி வினவ, “இந்த நேரத்தில் இந்த ஆராய்ச்சி முக்கியமா?”, என்று நித்யா அவளை முறைத்தாள்.
இந்த முறைப்பெல்லாம் ஒரு பொருட்டா , என்று காயத்ரி அடுத்த சந்தேகத்தை கேட்டாள்.., ” அக்கா.., அத்தான் கூட இந்த மாதிரி தான் ஹண்டசம்மா இருப்பாரோ ..? ” என்று காயத்ரி வினவ , “என்கிட்டே ஒரு நல்ல போட்டோ கூட காட்டவில்லை.. நீ வேற ஏன் கடுப்பேத்தற..? ” , என்று நித்யா முணுமுணுக்க, அந்த காலடி ஓசை அவர்களை கடந்து சென்றது.
இவர்களை கடந்து சென்றது யாரென்று அந்த சகோதரிகளுக்கு அடையாளம் தெரியவில்லை.
ஆனால், கடந்து சென்ற முகிலனை நமக்கு அடையாளம் தெரிகிறதே.!!!
வாட்ச்மன் நாற்காலியில் சாய்ந்தபடியே உறங்க , முகிலன் அவரை கடந்து அபார்ட்மெண்ட் வெளியில் நின்று கொண்டிருந்த காரை கிளப்பிக் கொண்டு சென்றான்.
” அக்கா இந்த வாட்ச்மன் சுத்த வேஸ்ட்.., இவரை நிறுத்தினா நம்ம maintanence செலவாது குறையும்.. “, என்று காயத்ரி புலம்ப… ” அப்படிலாம் சொல்லாத.., நமக்கு இவர் தான் பாதுகாப்பே..” , என்று நித்யா அழகாக புன்னகைத்தாள்.
“எனக்கே நீ நினைக்கிறது பாதி புரியாது… அத்தான் உண்மையிலே பாவம்..”, என்று காயத்ரி மதுசூதனனுக்காக பரிதாபப்பட, ” அவனா பாவம்…? “, என்று கடுப்பாக நித்யா யோசித்தாள்.
நித்யாவின் சிந்தனையை கார் கிளம்பும் சத்தம் கலைத்தது.
இவர்களை கடந்து சென்ற மனிதன் கிளம்பியதை உறுதி செய்து கொண்டு தங்கள் வேலையை ஆரம்பித்தனர். சகோதரிகள் இருவரும் மீதி இருந்த ஸ்டிக்கரை அசோக் பைக்கில் ஒட்டி விட்டு , தங்கள் வீட்டிற்கு சென்று உறங்கினர்.
காலை 6 மணி :
நித்யா அவள் அறையில் யோகா செய்து கொண்டிருந்தாள். எத்தனை மணிக்கு ஆரம்பித்தாள் என்று தெரியவில்லை. சூரிய கதிர்கள் ஜன்னல் வழியாக அறைக்குள் நுழைய , கண்களை திறந்த காயத்ரி , “அக்கா… நீ எப்படி எப்பயுமே இவ்வளவு தைரியமா இருக்க…? ” , என்று மெத்தையில் படுத்து கொண்டே வினவினாள்.
அவளை பார்த்து கண்ணடித்து விட்டு தன் சூர்ய நமஸ்காரத்தை தொடர்ந்தாள். “நீ எப்படியும் பேச மாட்ட…. முடிச்சிட்டு வா அப்புறம் பேசலாம் .. ” , என்று கூறி தன் கண்களை மூடிக் கொண்டாள் காயத்ரி.
நித்யா எந்தவித சலனமுமின்றி யோகாவை தொடர்ந்தாள். சில நிமிட தியானத்தில் ஆழ்ந்தாள். அவள் முகத்தில் ஒரு தேஜஸ்.. இவள் தான் நாம் நேற்று இரவு பார்த்த குறும்பு கார பெண் என்றால், யாரும் நம்ப மாட்டார்கள்.
சிரித்த முகமாக சமயலறைக்குள் சென்றாள் நித்யா. அவள் பாடி கொண்டே அனைவருக்கும் காபியை கலந்தாள்.
புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
அவள் இனிய குரல் வீடெங்கும் ஒலிக்க…, காபியின் மணம் வீடெங்கும் பரவியது..
” அட.. காபி போட்டுட்டியா.. நான் இப்ப தான் வரேன்.. ” , என்று பத்மாவதி நெற்றில் குங்கமத்தை இட்டுக் கொண்டே கிட்சேனுக்குள் நுழைந்தார்.
“என்ன அவசரம்.. மெதுவா வாங்க.. இன்னக்கி நான் காலை டிபன் பண்றேன்….. ” , என்று நித்யா கூற.., ” என்ன ஸ்பெஷல் அக்கா ? ” , என்று காயத்ரி படுக்கையில் படுத்துக் கொண்டே வினவினாள்.
“Wheat Burittos – Mexican food in Indian style” , என்று கிட்சேனுள் இருந்த படி நித்யா பதிலளித்தாள்.
” அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… நான் இட்லி வைக்கிறேன்.. ” , என்று பத்மா எதிர்ப்பு தெரிவிக்க, ” அம்மா.., நான் நேத்தே “black beans” ஊற வச்சிட்டேன்.. தேவையானதை எல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன்… ” , என்று நித்யா வேலையை தொடங்கினாள்.
“ஏண்டி.. காலைலயே என் வேலையை கெடுக்கிற.?” , என்று பத்மா புலம்ப.., ” அம்மா இட்லி போர்… நீ burittos பண்ணு அக்கா.. “, என்று காயத்ரி ஆதரவு தெரிவித்தாள். Youtube ல நான் நேத்து தான் ரெசிபி பார்த்தேன் … கண்டிப்பா பண்ணுவேன் ” , என்று நித்யா சமையல் வேலையில் இறங்கினாள்.
கதவு தட்டும் ஓசை கேட்டது…
“காயத்ரி யாருனு பாரு… ” , என்று பத்மா வெங்காயத்தை நறுக்கி கொண்டே குரல் கொடுக்க, ஹாலில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு செய்திதாளை படித்துக் கொண்டிருந்த ரங்கநாதன் தலை உயர்த்தி பார்த்து விட்டு தலையை மீண்டும் செய்தித்தாளில் புதைத்து கொண்டார்.
காயத்ரி கதவை திறக்க, ஒரு மழலையர் பட்டாளம் அங்கு நின்று கொண்டிருந்தது. “என்ன பசங்களா ஸ்கூலுக்கு கிளம்பாம இங்க என்ன பண்றீங்க?” , என்று சுவரில் சாய்ந்தபடியே காயத்ரி வினவினாள்.
“நித்தி அக்கா.. நித்தி அக்கா…” என்று அந்த மழலையர் கூட்டம் உள்ளே நுழைய, “இதுங்க நம்மள என்னைக்கி மதிச்சிருக்குங்க? ” , என்று கதவை பிடித்துக் கொண்டு யோசனையில் ஆழ்ந்தாள் காயத்ரி.
அந்த மழலையர் பட்டாளம் நித்யாவை கிட்சேனில் பார்த்த உடன், கிட்சேனுள் நுழைந்த படி.., “நித்தி அக்கா.. யாரோ அந்த அசோக் அண்ணா வண்டியில மிக்கி ஸ்டிக்கர்ஸ் ஒட்டிருக்காங்க.. அதுக்கு நாங்க தான் ஒட்டினோமுன்னு சொல்லி எங்களை கூப்பிட்டு எல்லாரும் கேள்வி கேக்கறாங்க… நாங்க இல்லைனு சொன்னா நம்ப மாட்டேங்கிறாங்க.. நீ வந்து என்னனு கேளு அக்கா. ” , என்று ஸ்கிர்ட் போட்ட சிறுமி கோபமாக கூற, “ஆமாம் அக்கா.. எங்க அம்மா அப்பாவும் எங்களை கேள்வி கேக்கறாங்க நீ கூட வா…”, என்று அவள் கையை பிடித்து இழுத்தான் டிரௌசர் போட்ட சிறுவன்.
“இதோ வரேன் டா..” , என்று கூறிக்கொண்டே அடுப்பை அணைத்து விட்டு அவள் கைகளை கழுவினாள்.
“ஏய்… இப்படி பாதியில சமயலை விட்டுட்டு போற.. இந்த சாப்பாடெல்லாம் எனக்கு பண்ண தெரியாது… நான் எனக்கு தெரிஞ்சதை பண்ணிருந்தா இந்நேரம் வேலையை முடிச்சிருப்பேன்… விதவிதமா சமைக்க தெரிஞ்சா போதாது… அதை முழுசா முடிக்க தெரியணும்… ” , என்று தேங்காய துருவிக் கொண்டே அங்கலாய்க்க, “அம்மா பத்து நிமிசத்துல வந்திருவேன் புலம்பாதீங்க….”, என்று நித்யா தன் தாயிடம் கூறிவிட்டு வாசலை நோக்கி நடந்தாள்.
“பசங்களா உண்மையா நீங்க ஒட்டவில்லை தானே?” , என்று நித்யா கறாராக வினவ, “அக்கா…. நாங்க செய்யலை… பிங்கி ப்ரோமிஸ்…” , என்று கண்களை கசக்கி கொண்டு கூறினாள் இரட்டை சடை போட்ட சிறுமி. “சரி சரி அழாத நான் பாத்துக்கிறேன்… “, என்று நித்யா அவளை தோளோடு அணைத்து கூற, இரு கண்களை விரித்து நித்யாவை முறைத்து பார்த்தாள் காயத்ரி.
திடீரென்று, ஞானோதயம் பெற்றவளாக “அக்கா கேமரா மேல போட்ட என் hand kercheif ” , என்று காயத்ரி நித்யாவின் காதில் கிசுகிசுக்க… “எல்லாம் எடுக்க வேண்டிய நேரத்துல, சரியாய் எடுத்தாச்சு.. காலைலயே எடுத்துட்டேன்…. நீ வாயை மூடிக்கிட்டு இருந்தா போதும் ” , என்று முகத்தில் புன்னகையோடு வார்த்தைகளை கடித்து துப்பிவிட்டு சென்றாள் நித்யா.
“இந்த வாண்டுங்க கூட்டர ஏழரைக்கு இவ தான் பஞ்சாயத்து… ” , என்று பத்மா புலம்ப , காயத்ரி வாயை மூடி சிரித்தாள். அங்கே, என்ன நடக்கும் என்ற ஆவல் காயத்ரிக்கு மேலோங்க நித்யாவை பின் தொடர்ந்தாள்.
எங்கும் மிக்கி ஸ்டிக்கரோடு நடு நாயகமாக காட்சி அளித்தது அந்த பைக். அசோக் ஒவ்வொரு மிக்கி ஸ்டிக்கரையும் பாவமாக பார்த்து கொண்டிருந்தான்.
“வாம்மா நித்யா… இந்த வாண்டுகள் யாரோ தான் இந்த வேலையை பார்த்திருக்கணும்.. நீயே கேட்டு சொல்லு ” , என்றார் அசோக்கின் தாய் கோபமாக.
“அக்கா நாங்க இதை செய்யலை”, என்று கடுங்கோபமாக கூறியது அந்த மழலையர் பட்டாளம்.
அசோக்கின் பார்வை நித்யா மீது விழுந்தது. “ஒரு வேளை இவள் செய்திருப்பாளோ? ” , என்று அவன் சிந்தனை ஓட, “அசோக் அண்ணா பைக் நீங்க எப்ப பார்த்தீங்க? “, என்று நித்யா குழந்தைகளிடம் கேட்டாள். அவர்களிடம் தனியாக எதோ பேசிவிட்டு, “ஆண்ட்டி.., அவங்க இதை செய்யலை… “என்று அசோக்கின் தாயிடம் கூறினாள். “குழந்தைகளிடம் பள்ளிக்கு கிளம்ப வேண்டும்”, வீட்டுக்கு செல்லுங்கள் என்று செய்கை செய்தாள்.
அங்கு வந்த அசோக்கின் தந்தை.., “இன்றும் கேமரா ஒர்க் ஆகலை… “, என்று கடுப்பாக கூறினார்.
“அங்கிள் நம்ம அபார்ட்மெண்ட்ல இதை யார் பண்ணிருக்க போறாங்க… நேத்து நைட் வெளியில் எங்கயாவது யாரவது இப்படி பண்ணிருக்கலாம்ல.., “, என்று நித்யா மெதுவாக கூறினாள்.
“இல்லை அப்பா.., நேத்து நைட் நான் வரும் பொழுது இப்படி இல்லை.. வாட்ச்மன் கிட்ட கேளுங்க.” , என்று அசோக் அடித்து கூறினான். “ஐயா… நான் பைக் பார்க்கலிங்க… ஆனால் தம்பி நேத்து ராத்திரி வரும் பொழுது நிதானமா இல்லை…” , என்று தலையை தடவிக் கொண்டே தயக்கமாக கூறினார்.
“குடிச்சிட்டு எதையாவது பண்ண வேண்டியது.. அப்புறம் சின்ன குழந்தைங்கள கூப்பிட்டு பஞ்சாயத்தை கூட்ட வேண்டியது..” , என்று புலம்பிக் கொண்டே , அங்கிருந்த கூட்டம் கலைந்து சென்றது. தலையில் அடித்து கொண்டு வீட்டுக்கு சென்றனர் அசோக்கின் தாயும் தந்தையும்…
“வாட்ச்மன் கலக்கறாரே…. ” , என்று நினைத்துக் கொண்டே கல்லூரிக்கு செல்ல நேரமாகிவிட்டது என்று வீட்டை நோக்கி ஓடினாள் காயத்ரி.
பத்மா சமயலறையில் வேலை செய்து கொண்டிருக்க, காயத்ரி குளியறைக்குள் நுழைந்தாள்.
” நினைத்ததை நடத்தியே —
முடிப்பவள் நான் ! நான் ! நான் !
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவள் நான் ! நான் !” , என்ற பாடலை முணுமுணுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள் நித்யா.
செய்திதாளிலிருந்து தலையை தூக்கி நித்யாவை பார்த்த ரங்கநாதன்.., ” ஒரு நாள் விளையாட்டு வினை ஆகிரும்….” , என்று கூறிக்கொண்டே செய்தித்தாளை மடித்து சோபாவில் போட்டுவிட்டு தன் வேலையை செய்ய தொடங்கினார்.
“அப்பா.., நீங்க படிக்கிற பேப்பர்ல இந்த அப்பார்ட்மெண்ட் நியூஸ் கூட வருமா…? ” , என்று நித்யா அப்பாவியாக கேட்க, நித்யாவை பார்த்து புன்முறுவல் பூத்தார் ரங்கநாதன்.
“அம்மாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியுமா..? ” , என்று புன்னகையோடு ரங்கநாதன் வினவ, “இதோ.. இப்ப டிபன் பண்ண போறேன்….”, என்று தந்தையிடம் கண்ணடித்து கூறிவிட்டு சமயலறைக்குள் நுழைந்தாள்.
“அப்பாவுக்கு எப்படி தெரியும்..? வீட்டுக்குள்ள இருந்தாலும் எல்லா விஷயத்தையும் எப்படி கண்டுபிடிக்கறாங்க ” ,என்ற நித்யாவின் சிந்தனையை “நேரமாச்சு நித்யா…” , என்ற பத்மாவின் பரபரப்பான குரல் கலைத்தது.
“மணி ஏழரை….. ” , என்று பத்மா தாளித்துக் கொண்டே அழுத்தமாக கூற, “இந்த அசோக் பிரச்சனைல நம்ம ஏழரைய மறந்துட்டோமே…. ” என்று எண்ணியவளாக , “அம்மா ஒரு கால் பேசிட்டு வரேன்… எட்டு மணிக்கெல்லாம் டிபன் ரெடி ஆகிரும்.. டென்ஷன் ஆக வேண்டாம்… “, என்று கூறிவிட்டு மொபைலை நோண்டி கொண்டே வெளியே வந்தாள்.
யாருக்கும் தெரியாமல் மொபைலில் save செய்து வைத்திருந்த மதுசூதனின் மொபைலுக்கு அழைத்தாள்.
ஐபோன் ரிங் டோன் மதுசூதனின் அறை எங்கும் ஒலித்தது.. மதுசூதனன் அங்கு இல்லை.. சற்று உள்ளே சென்றால், அங்கும் ஒரு அறை.. அது மதுசூதனின் அலுவலக அறை போலும்…. பைல், லேப்டாப் என அனைத்தும் அங்கு தான் இருந்தது. அந்த அறையை ஒட்டி பால்கனி அங்கு மூங்கில் ஊஞ்சல்… மதுசூதனின் அறை முழுவதும் சுத்தமாக இருந்தது. ஒழுக்கத்தை எதிர் பார்ப்பவன் போலும்…
அவன் குளியலறையில் தண்ணீர் விழும் சத்தம் கேட்கிறது. மதுசூதனன் குளித்து கொண்டிருக்கிறான் போலும்.
முகிலன் ஷார்ட்ஸ்.., அணிந்து கொண்டு மதுசூதனின் அறைக்குள் நுழைவது நமக்கு தெரிகிறது… அவன் ஐபோனை முறைத்து பார்த்து கொண்டிருந்தான்.. ஐபோன் தன் அலறல் சத்தத்தை நிறுத்திக் கொண்டது.
“whatsapp notification” வர, மொபைலை கூர்ந்து பார்த்தான்..
“Hi.. Nithya here.. I am sorry.. I am unable to do anything from myside..Will be there in marriage hall as per parents plan.. “
“இவன் அண்ணியிடம் என்ன பேசியிருப்பான் ? ” , என்று கேள்வி முகிலன் மனதில் தோன்றியது. “என்றோ தெரிந்து கொண்ட பாஸ்வர்ட் இன்று வேலை செய்கிறது…” , என்று எண்ணி புன்னகைத்து கொண்டு , ” Okay.. No issues.. I ll take care…” , என்று மெசேஜ் செய்தான்.
நித்யாவின் chat history, call history delete செய்தான் முகிலன். தனக்கு தேவையான இன்னும் சில விஷயங்களை தெரிந்து கொண்டு மதுசூதனன் குளியலறையின் கதவை திறக்கும் சத்தம் கேட்க அவசரமாக மொபைலை டேபிளில் வைத்துவிட்டு, தன் அறைக்குள் சென்ற முகிலன் படுக்கையில் உருண்டபடி “கடவுள் நம்ம பக்கம் டா.. ” , என்று மார்தட்டிக் கொண்டான்.
குளித்து முடித்து வந்த மதுசூதனன் தலையை வெள்ளை நிற துண்டால் துவட்டிய படியே தன் ஐபோனை நோண்டினான்..
“மொபைல் சத்தம் கேட்ட மாதிரி இருந்துச்சே.. “Missed call” எதுவும் இல்லையே..” , என்று சிந்தனையில் ஆழ்ந்தான் மதுசூதனன்.
சில நிமிட யோசனைக்கு பின், “முகிலன்.. முகிலன்… ” , என்று சத்தமாக அழைத்தான் மதுசூதனன்.
“எஸ் ப்ரோ… ” , என்று தன் அறையில் இருந்து சத்தம் கொடுத்தான்.
“ஏன்டா கூப்பிட்டா வர முடியாதா..? என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” , என்று முகிலன் அறையை நோக்கி மதுசூதனன் செல்ல, முகிலனின் அறை அழகாக இருந்தது. ரசனையோடு காட்சி அளித்தது. அதை ரசிப்பதற்கு மதுசூதனனுக்கு நேரம் இல்லை.
முகிலன் அன்று என்ன ஷர்ட் போடலாம் என்று பார்த்து கொண்டிருந்தான்.
“என் ரூமுக்கு வந்தியா…? ” , என்று மதுசூதனன் தீவிரமாக வினவ, “இல்லை..”, என்று மறுப்பாக திரும்பி பார்க்காமலே தலை அசைத்தான் முகிலன்.
” என்னை திரும்பி பார்த்து கூட, பதில் சொல்ல முடியாதா? அப்படி என்ன தான் தேடுற?” , என்று முகிலன் அறை வாசலிலே நின்று கொண்டே மதுசூதனன் கடுப்பாக கேட்டான்.
தன் செயல் வெளி வந்து விடுவோமா…, என்ற பயம் முகிலனுக்கு.
“உன்னை மாதிரி தினமும் வெள்ளை சட்டை போட முடியுமா..? நாங்கெல்லாம் அப்படி இல்லை… ப்ரோ… கலர் கலரா சட்டை போடுவோம்.. உன் மேரேஜ் டிரஸ் நான் செலக்ட் பண்றேன்… ” , என்று பேச்சை மாற்றும் விதமாக முகிலன் ஆர்வமாக கேட்டான். “சரி.. ” , என்று ஆமோதிப்பது போல் தலை அசைத்து கொண்டே, “பெண் தான் நீ நினைப்பது போல் இல்லை.. ட்ரெஸ்ஸாவது உன் இஷ்டம் போல் இருக்கட்டும்… ” , என்று மனதுக்குள் நினைத்து கொண்டான் மதுசூதனன்.
“இன்னக்கி மீட்டிங் 9:30” , என்று மதுசூதனன் மொபைலை பார்த்த படி கூற, “நான் என்னைக்காவது லேட் பண்ணிருக்கேனா..? I will be on time” , என்று மியூசிக் ஸிஸ்டெத்தை ஆன் செய்தபடி முகிலன் கூறினான்.
“எப்பயுமே வெளிய தான் சாப்பிடணுமா ?” , என்று சம்பந்தமில்லாமல் மதுசூதனன் வினவினான். ஆழமாக மூச்சு எடுத்து, தன்னை தானே சுதாரித்துக் கொண்டு ஆன் செய்த மியூசிக் சிஸ்டத்தை ஆப் செய்தான் முகிலன். “என்ன உங்க அம்மா கேட்க சொன்னாங்களா? ” , என்று கையை கட்டி கொண்டு ட்ரெஸ்ஸிங் டேபிளில் சாய்ந்த படி மதுசூதனனை நேரடியாக பார்த்து கொண்டே கேட்டான் முகிலன்.
“எனக்கு அம்மான்னா உனக்கு யாரு?”, என்று மதுசூதனன் அழுத்தமாக கேட்க.., உதட்டை பிதுக்கி கொண்டு அமைதியாக நின்றான் முகிலன்.
“இன்னக்கி வீட்ல சாப்பிடு… அம்மா ரொம்ப வருத்தப்படறாங்க …. ” , என்று மதுசூதனன் மெதுவாக ஆனால் அழுத்தமாக கூற, “நீங்க சாப்பிடற கார்ன் பிளக்ஸ், ஓட்ஸ் இதெல்லாம் எனக்கு பிடிக்கலை… ” , என்று கூறிவிட்டு முகிலன் நீல நிற துண்டை எடுத்து தோள் மீது போட்டுக்கொண்டு குளியலறையை நோக்கி நடந்தான் .
“உனக்கு என்ன வேணு முன்னு சொன்னா பேச்சியம்மா செய்ய போறாங்க… வீட்ல சாப்பிடுடா.. ” , என்று முகிலனின் தோள் மீது கை போட்டு மதுசூதனன் சமாதானம் செய்ய , ” வீட்ல எதுக்கு சாப்பிடணுமுன்னு தெரியுமா..? வீட்டு சாப்பாட்டுல ருசி அதிகமா இருக்கும்ங்கிறதுக்காக மட்டும் இல்லை.. சமைக்கிறவங்களோட அன்பு அதுல இருக்கும்.. அதை பரிமாறும் பொழுது மகளோ மகனோ நல்ல சாப்பிடறாங்களான்னு அக்கறை இருக்கும்…”, என்று முகிலன் ஆழமாக கூறினான்.
மெல்லிய புன்னகையோடு , “அம்மாவை வயசான காலத்துல இதையெல்லாம் செய்ய சொல்ல முடியுமா..? ” , என்று நக்கலாக மதுசூதனன் வினவ, “செய்ய வேண்டிய காலத்துலயே செய்யலை.. இப்ப என்னவாக போகுது …. எனக்கு முருகன் இட்லி கடை…. சரவண பவன் … சங்கீதா…. இப்படியே பழகி போயிருச்சு.. “, என்று கூற , “Don’t be an emotional idiot ” , என்று மதுசூதனன் கோபமாக கத்தினான்.
“ஆமாம் … நான் ஒரு “emotional idiot” தான்.. நீ , உங்க அம்மா.. அப்பா…. எல்லாரும் புத்திசாலி…. போ…உன் கம்பனியை பாரு… I will be in office by 9:25… என்னால கம்பனில ஒரு நஷ்டம் வராது… என்கிட்டே கம்பனி விஷயம் மட்டும் பேசு… வேற எதுவும் பேச வேண்டாம்… ” , என்று கூறும் பொழுது முகிலனின் கண் கலங்க.., அதை மதுசூதனனுக்கு தெரியா வண்ணம் முகத்தை திருப்பிக் கொண்டு குளிக்க சென்றான்.
“இவனை எப்படி மாற்றுவது…? ” ,என்று மதுசூதனன் சிந்திக்க , மதுசூதனின் மொபைலில் இருந்து தெரிந்து கொண்ட செய்தியை பற்றி யோசிக்க ஆரம்பித்தான் முகிலன்.
“மதுசூதனன் சதாசிவத்திடம் அதிகமாக பேசுவது போல் தெரிகிறதே என்னவாக இருக்கும்.. கண்டுபிடிக்க வேண்டும்.. ” , என்று சிந்திக்க தொடங்கினான் முகிலன்.
நாட்கள் மெல்ல நகர்ந்தது.
மதுசூதனின் திருமணம் அவர்கள் குடும்பத்து செல்வ செழிப்பை பறைசாற்றி விட வேண்டும் என்பதில் குறியாக புஷ்பாவும் , கோவிந்தனும் செயல் பட்டனர்.
திருமணம் இனிதே நிறை வேற வேண்டும் என்ற பதட்டத்தோடும், ஆசையோடும் பத்மாவும், ரங்கநாதனும் திருமண வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.
“இந்த திருமணம் நடக்குமா…? நடக்காதா ? நடக்கவில்லை என்றால் , அம்மா அப்பா வருந்துவார்கள். நடந்தால் என் நிலை என்ன ஆகும் ? அன்று பேசும் சந்தர்ப்பத்தை கூட குடுக்க வில்லை.. இவனோடு எப்படி காலம் தள்ளுவது..” , என்ற குழப்பத்தோடு நித்யா நாட்களை நகர்த்தினாள்.
“தன் திட்டப்படி இந்த திருமணம் நடந்து விட வேண்டும் ” , என்ற தவிப்போடு முகிலனின் நாட்கள் நகர, அனைத்தும் தன் திட்டப்படி நடந்து விடும் என்ற நம்பிக்கையில் மதுசூதனின் நாட்கள் நகர்ந்தது.
பெண் அழைப்பிற்கு சில்க் காட்டன் சுடிதார்… முகூர்த்தத்திற்கு சிவப்பு கற்கள் பதித்த தங்க நிற சேலை.. முகூர்த்தம் முடிந்த பின், பிங்க் நிற தாவணி.., திருமண வரவேற்பிற்கு காக்ரா சோலி… மறுநாள் லோங் ஸ்கிர்ட்…. என திட்டத்தோடு ஆர்வமாக காயத்ரி எதிர்ப்பார்த்த அந்நாளும் வந்தது..
Mr . Govindan & Mr Ranganathan Family invites
Madhusoothanan
Weds
Nithya
என்ற வரவேற்பு பலகையோடு பற்பல சுவாரசியங்கள் நிறைந்த திருமணம் உங்கள் வருகைக்காக காத்திருக்கிறது.
கட்டங்கள் நீளும்….